செய்தி
தொல்லியல்ச் சித்திரங்களின்றிப்
புதிதாய்ச் சொல்ல
எதுவுமிருக்கிறதா
இவ்வேளை உனக்கு.
தொடுவானில்
வெள்ளைமேகங்கள் தீட்டிய
’’வீடு திரும்பும்
ஆட்டு மந்தையொன்றை”
மறக்க முடிகிறதா...
ஆயிரம் பிறை பார்த்தாலும்
சந்திர மதியின் ‘காணாத்தாலி’
அரிச்சந்திர கதை கேட்கிற
எல்லோர் கண்ணுக்கும்
தெரியத்தானே செய்கிறது.
”மேலாடை வீழ்ந்த தெடுவென்றான்
அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே...”
நழுவிய படிமங்களை
எடுக்கும் முன் காலமும்
எங்கோ இழுத்து வந்து விடுகிறது
என்றாலும் எழுதிச் செல்கிறது
வாழ்க்கையை அர்ப்பணிப்பது
சேவை
சாவை அர்ப்பணிப்பது
செய்தி
-கலாப்ரியா
(காரைக்கால் ‘அம்மையாருக்கு’)
3 comments:
அன்பு கலாப்ரியா அவர்களுக்கு,
நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு பதிவும் கவிதைகளாய்... மனதுக்கு சந்தோஷமாய் இருக்கிறது... திருவிழாவில் தொலைந்த குழந்தை கிடைத்துவிட்டது மாதிரி...
தொல்லியல் சித்திரங்களின்றி எதுவும் இல்லை புதிதாய்ச் சொல்ல... காணாத்தாலி எல்லோருக்கும் தெரியத்தானே செய்கிறது... நிஜமான வார்த்தைகள்... புதிதாய் சொல்ல எதுவுமில்லை இவ்வுலகில்... நீ அமிழ்கிற ஆறு ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது போல. சாவை அர்ப்பணிப்பது செய்தி... அழகான கவிதை... உங்களிடமிருந்து இன்னும் கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்
ராகவன்
கலாப்ரியாவின் கவிதையும்,ஜீவாவின் ஓவியமும் அருமையிலும் அருமை:)
கவிதை நல்லா இருக்கு
Post a Comment