‘பூசைக்காரத் தாத்தா’ என்பது .பூசாரத் தாத்தா. என்று மருவி விட்டது. அவர் அநேகமாகப் பூசையில்தான் இருப்பார். அவர் புழங்குகிற துண்டு, வேட்டியெல்லாம் மஞ்சள்ப் பூத்துப் போய், ஒரு புழுங்கிய வாசனையுடன் இருக்கும். திருநீறின் வாசனையும்,மேலோங்கி நிற்கும். இப்போது போல் வாசனை விபூதிப் பாக்கெட்டெல்லாம் கிடையாது. வீட்டிலேயே, காயவைத்த சாண உருண்டைகளை, உமிக்குவியலுக்குள் போட்டு மூடி தீக்கங்குகளை வைத்து, உமியைக் கனல விட்டு விடுவார்கள்.இரண்டு மூன்று நாட்கள் கனிந்து, புகைந்து, தானே அணைந்த பின், உமிக்கரிக்குள்ளிருக்கும் திருநீற்று முட்டான்களை (சமச்சீரில்லாத உருண்டைகள்). மண் பானைகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அதை அவ்வப்போது நொறுக்கி மெல்லிசான துணியில் சலித்தெடுத்து ‘பட்டுப்போன்ற பால் வெண்ணீறாக்கி’ வைத்துக் கொள்ளுவார்கள்.
பூசாரத்தாத்தா எப்போதாவது வீட்டுக்கு வரும் போதே, வேட்டி, திருநீறு வாசனையை வைத்தே அம்மா சொல்லி விடுவாள், ”பூசாரத் தாத்தா வாராக” என்று. ‘ஆமா, வேட்டி வீச்சம் தெரியுதே” என்றால், ”போடா, அது ருத்ராட்ச வாசனைடா, அதிகப் பிரசங்கி” என்று கண்டிப்பாள். ’கங்கு’, ‘கணைச்சூடு’, ‘நகச்சூடு’ ‘முட்டான்’, ‘பிரசங்கி’ ‘வெதனம்’ (உடலில் எங்காவது வீக்கம் கண்டு வருகிற வலி).,.’வெதனக் காய்ச்சல்’ ‘நெறி கட்டுதல்’ ... என்பதெல்லாம் பெண்களின் பாஷை. “ஏம்ழா, முகம் ‘கனத்தாப்ல’ இருக்கு என்பார்கள்.”வளையல் கொஞ்சம் பெருசோ” என்றால் ”ஆமா, ‘ஒரு சொல்லு’ பெரிசு, அதனால பரவால்லை, வளர்ற புள்ளைதானே” என்பார்கள்.” ”விட்ட பாம்பு செத்துப்போற மாதிரி வெயில் அடிக்கி, இதுல போய் விளையாடுதீகளே”, என்று குழந்தைகளைச் சத்தம் போடுவார்கள். அநாவசியமாய் அலட்டிக் கொள்பவர்களைப் பார்த்தால் ”தோளுக்கு மேல தொன்னூறு தொடச்சுப் பாத்தா ஒண்ணுமில்லை”. என்பார்கள்.”மாதா ஊட்டாத சோத்தை, மாங்காய் ஊட்டும்” என்பார்கள். அழகான பாத்திரங்களையோ, விளக்குகளையோ பார்த்து விட்டால், நல்ல லெட்சணமா இருக்கே யார் செஞ்சது என்பார்கள். ”நமக்கு பொருள் தெரியும் ஆனா அதுக்கான வார்த்தை தெரியாது”, “பெண்கள் இதற்காக ‘தனீ’ வார்த்தையும், வழக்கும் வச்சுருப்பாங்க” என்பாராம் டி.கே.சி. எந்த மருந்துக்கும் கட்டுப்பாடாத, உடல் நலிந்து கொண்டே போகிற வியாதியொன்றை ‘கிராணி’ என்பார்கள். அது ஒரு வேளை எய்ட்ஸின் அந்தக்காலப் பேராகக் கூட இருக்கலாம்.
அம்மா சொல்லும் கதைகளை தாத்தா, சற்று விஸ்தாரமாகச் சொல்லுவார். இடையிடையே கேள்விகள் கேட்டு, நாம், என்ன பதில் சொன்னாலும், ”கரெக்டாச் சொல்லிட்டியே” என்பார்.அது ஒரு சந்தோஷத்தைத் தரும்.தாத்தாவுக்கு வயது எண்பதுக்கும் மேல். அதைப் பற்றிக் கேட்டால், ”இது என்னவே பேரப்பிள்ளை, அந்தக் காலத்தில் ஒருத்தருக்கும் சாவே கிடையாது. நூறு வயசு, இருநூறு வயசு வரைக்கும் இருப்பாங்களாம். அப்படி நிறைய சனம் பெருத்து விட்டதால், பூ(மிப்)பாரம் தாங்க மாட்டாமல் பூமா தேவி சிவபெருமானிடம் போய் முறையிட்டாளாம். சிவபெருமான், சொர்க்கத்திலிருந்து முரசறைபவனை பூமிக்கு அனுப்பினாரானம்.அவன் “பழம் உதிர, பழம் உதிர” என்று கூறியபடி முரசறைந்து சென்றானாம்.அவன் ஒவ்வொரு தெருவாகப் போகப் போக, அந்த தெருவில் உள்ள பழுத்த கிழங்கள் மட்டும் செத்துச் செத்து விழுந்தனராம். பாரம் கொஞ்சம் குறைஞ்சதாம்.”
இதே மாதிரி கொஞ்ச காலம் கழிந்ததும், மீண்டும் பாரம் கூடிப் போகவே மறுபடி பூமாதேவி சிவனிடம் முறையிட, அவரும் முரசறபவனை அனுப்பி வைத்தாராம். அவனைக் கண்டதுமே மக்களுக்கு பழைய சாவு நினைவுகள் வந்து, யோசிக்கத் தொடங்கினார்கள், இவன் முரசறைவதால்த் தானே இப்படி நம்ம தாத்தா பாட்டியெல்லாம் செத்துப் போறாங்க, என்று குழந்தைகளையெல்லாம் அழைத்து “ஏல அவன் முரசடிச்சுட்டுப் போனான்னா, உங்க தாத்தா பாட்டியெல்லாம் செத்துருவாங்கலே, அவனை விரட்டுங்கடா என்று தூண்டிவிட்டார்களாம். பிள்ளைகளும் அவன் பின்னாலேயே கூட்டமாகப் போய், கல்லையும், மண்ணையும் எறிந்து அவனை விரட்ட ஆரம்பித்தார்களாம்.இதனால் கோபமடைந்த அவன் “பழம் உதிர, காய் உதிர, பிஞ்சு உதிர, பூ உதிர.....” என்று முரசறைந்து போனானாம். அதிலிருந்துதான், எல்லா வயதினருக்கும் சாவு வந்ததாம்.” என்று அடிக்கடி ஒரு கதை சொல்லுவார்.தாத்தா தொன்னூறு வயசு வரை இருந்தார். சாகவே மறுத்தவர் போல் கிடையாய்க் கிடந்தார்.கட்டிலில் கிடந்தார், வெறும் பலகையில் கிடந்தார்,தரையில் போட்டார்கள். கடைசி இரண்டு மூன்று நாள் வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை, ஒரே நாத்தம், பால் பொங்கி அடுப்பில் வழிந்து கருகுகிற வாசனை, பிண வாசனை என்று எல்லோரும் சொன்னார்கள்.அவர் பிறந்த ஊர் மண்ணை ஆள் விட்டு எடுத்து வரச் சொல்லி, கரைத்து, வாயில் கொஞ்சமாக விட்டார்கள். எப்படியோ பழம், ‘ஒரு மாதிரி உதிர்ந்தது’.
2011-மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிவிட்டது. இந்தியாவில் முதல்க் கணக்கெடுப்பு 1881-ல் தொடங்கியது.2009-ஜூலை கணக்குப்படியே 117 கோடியை நெருங்கிவிட்டது. இது உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு.சைனாவின் மக்கள் தொகையான 132 கோடியை விரைவில் நாம் தாண்டி விடுவோம் என்கிறார்கள். 2009-ல் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 60 மருத்துவர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. ஏகப்பட்ட புள்ளிவிவரங்கள். எண்கள், எண்கள்...நம்மைச் சுற்றிலும் எண்கள்..
“எண்கள் கவிக்கும் இருளிலிருந்து
இந்தியாவைக் காப்பாற்றென்று
இளைஞனே உன்னிடம் கூறும்
எண்கள்”
1981-கணக்கெடுப்பின் போது எழுதிய ‘சென்ஸஸ்’ கவிதையின் வரிகள்.
7 comments:
அழகு தமிழ், நெல்லை தமிழ், வாசிக்க வாசிக்க நெஞ்சில் தேன் வெள்ளம் . நீங்கள் எழுத வந்து நாற்பது ஆண்டுகளா? கல்லூரியிலே தொடங்கியதா எழுத்து பயணம்? வாழ்த்துக்கள்!!
தமிழ் தான் எதனை அழகாகிறாள் உங்கள் கைவண்ணத்தில் .படித்து ரசித்து ,ரசித்து படித்து..... ..நன்றி ஐயா
nice post as always, thanks for sharing
பாட்டிக் கதை சொல்ல கேட்ட மாதிரி இருக்கு. நல்ல பகிர்வு. நன்றி
கணைச்சூடு,நெறிகட்டுதல்,நகச்சூடு,கனத்துப்போயிருக்கு, இன்றும் எங்கள் பக்கம் வழக்கிலிருக்கிறது.
வெதனம் அருமையான வார்த்தை
கிராணி-cachexia
நல்லவார்த்தைகளை இழந்து கச்சிதமற்றுப்போகிறதோ தமிழ்.
The coming generation would consider words like: 'fever', 'cough', 'pain', 'ache', etc as Tamil words. The real Tamil words would have no place in Tamil lexicon.
LONG LIVE TAMIL!
அழகானஅருமையான இனிமையான பதிவு
Post a Comment