சபரிமலைக்கு பெருவழிப்பாதை என்கிற காட்டு வழியில் சென்று வருவது ஒரு அனுபவம். பத்தடி அகலத்தில் கல்லும் முள்ளுமாய், குண்டும் குழியுமாய் காட்டுக்குள், பாதை வளைந்து நெளிந்து செல்லும்.எங்கள் குழுவில் நாங்கள் ஒரு நாலு பேர் ”அட்வான்ஸ் பார்ட்டி”. எல்லாக் குழுவிலும் இப்படிச் சிலர் இருப்பார்கள்.எரிமேலியிலிருந்து புறப்பட்டால், ‘அழுதை’யில் ஒரு ‘தாவளம்’ (தங்கல்) போடுவோம். சில குழுவினர் அதையும் தாண்டி ‘முக்குழி’க்குப் போய் விடுவார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு தாவளம் பழக்கம்.அட்வான்ஸ் பார்ட்டி காலையில் ஐந்து மணி வாக்கில் ஒரு காபியைப் போட்டுக் குடித்துவிட்டு, அரிவாள், மண்வெட்டி, கஞ்சி போட ஒரு பெரிய பாத்திரம் சகிதம் கிளம்பி விடுவோம்.அடுத்து தாவளம் போடுகிற இடத்தை அடைந்ததும், சென்ற ஆண்டு தங்கியிருந்த இடம் தென்படுகிறதா பார்ப்போம். காட்டின் காவலற்ற வளர்ச்சிப் போக்கில் அது செடி கொடிகளுக்குள் மறைந்தாலும் மறைந்திருக்கும், அல்லது பாதையே சற்று விலகிப் போயிருக்கும்.அதே இடம் கிடைத்தால், ஐம்பது பேர் தங்க ஏதுவாக அதையே சற்று சீர்திருத்தம் செய்து கொள்ளுவோம் அல்லது அதையொட்டியே வேறு இடம் பார்த்து சீர் திருத்துவோம்.கண்டிப்பாக ஆறு அருகே ஓடவேண்டும்.
முதல் வேலையாக கஞ்சி போட்டு வைத்துவிட்டு, கையில் கொண்டு வந்திருக்கிற குழுவுக்கான கொடியில் ஒன்றை நட்டு வைப்போம். குழுவின் மற்றவர்கள், கொடியை அடையாளம் கண்டு, ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். வந்ததும் அவர்கள் பார்வை கொதித்துக் கொண்டிருக்கும் கஞ்சியின் மீதுதான் செல்லும். தட்டில் இரண்டு அகப்பை கஞ்சியை விட்டு ஒரு ஊறுகாய்த் துண்டையும் போட்டுக் கொடுத்தால், அவர்கள் ‘லபக் லபக்’ என்று விழுங்குவதே சொல்லும் எவ்வளவு பசியோடு வந்திருக்கிறார்கள், என்று. அதற்கப்புறம் ‘அட்வான்ஸ் பார்ட்டி’க்கு ஓய்வு. அடுத்து வந்தவர்கள் கையில் கொடியை வைத்துக் கொண்டு அதற்கடுத்து வருகிறவர்களுக்காக பாதையோரம் காத்திருப்பார்கள்.கொடி என்பது பெரும்பாலும் காவிக்கலரிலோ, மஞ்சள்க் கலரிலோ இருக்கும். ஏதாவது பிரத்யேகமான படம், சிவலிங்கம், திரிசூலம், ஓம் எழுத்து, அல்லது ‘குருசாமி’ இனிஷியல், என்று தனித்தனி ‘குழூஉக் குறி’ இருக்கும்.
கொடிகள் என்பதன் நதி மூலம் என்ன வென்று தெரியவில்லை. இதை யார் முதலில் எதற்காக கண்டு பிடித்திருப்பார்கள். இதே போல் காட்டு வாழ்க்கையிலேயே கண்டு பிடித்திருப்பார்களா?அல்லது அது நாகரீகத்தின் அடையாளமா? சிலர் சீனாவில்த்தான் கொடி முதலில் தோன்றியதாகச் சொல்கிறார்கள்.சிலர் ரோமப் பேரரசைச் சொல்கிறார்கள்.அர்ஜுனன் தேரில் பறந்த கொடியில் ஹனுமான் இருப்பார். துரியோதனனை ‘அரவக்(பாம்புக்)கொடியோன்’ என்றே அழைக்கிறார்கள்.ராமரின் கொடி என்னவென்று தெரியவில்லை. ராவணனை ”வீணைக் கொடியுடைய வேந்தனா”கச் சித்தரித்திருக்கிறார்கள். அப்படியொரு இசைஞன் எப்படி அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டான் என்பது ஒரு ‘ஒரு மில்லியன் டாலர்க் கேள்வி’. தமிழ் மூவேந்தர்களின் மீன், வில், புலிக்கொடி- தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகக் கையாளப்பட்டது. கொடி என்பது ஆட்சியின் ஒரு அடையாளமாகவும். அதைக் காப்பாற்றுவது நாட்டுப் பற்றாகவும் கால காலமாக நம் ரத்தத்துடன் கலந்து விட்டது.
’மகாதேவி’ படத்தில் முதல் காட்சியில் எதிரியின் கோட்டையை வென்று புலிக் கொடியை ஏற்றி, “கொக்கு பறக்கும், குருவி பறக்கும், ஆனால் இதோ புலி பறக்கிறது தோழர்களே, புலி பறக்கிறது” என்று கண்ணதாசனின் வசனத்தை எம்.ஜி.ஆர் முழங்குவது அந்தக்காலத்தில் பிரபலம். தந்தை பெரியாருக்குப் பின் பெரும்பாலான கட்சியின் கொடிகளில், கறுப்பும் சிகப்பும் இல்லாமல் இருக்காது.
அப்போதெல்லாம் கொடிக்கயிறு நூலில் திரிக்கப் பட்டதாகவே இருக்கும்.வெயிலிலும் மழையிலும் காய்ந்து அது இற்றுப் போகும். அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து சில தி.மு.க தொண்டர்கள், அவ்வப்போது புதுக் கயிறு மாற்றி விடுவார்கள்.பழைய கயிற்றில் புதியதைக் கட்டி மெதுவாக வளையத்திற்குள் செலுத்தி, கூடியிருக்கும் தொண்டர் குழாமின் தனிச்சையான கை தட்டலுக்கிடையே புதிய கயிறும் கொடியும் கட்டி விடுவோம். ஒரு மாலையில் கொடிக்கம்பத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்த போது தற்செயலாக கயிறு இற்றுப் போயிருப்பதைக் கவனித்து உடனே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.புதிய கயிற்றையும் பழைய கயிற்றையும் இணைத்த முடிச்சு வளையத்தில் சிக்கிக் கொண்டு பழைய கயிறு அறுந்து விட்டது. அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒல்லியான தோழர் ஒன்றுமே பேசாமல், வேட்டியை மடித்துக்கட்டி, வாயில் கயிற்றைக் கவ்விக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொடிக்கம்பத்தில் ஏறி விட்டார். அது இரும்புக் கம்பம்.அப்படியும் இப்படியும் ஆடிற்று. ஆனால் அவர் பயப்படாமல் ஏறி வளையத்தில் புதுக்கயிற்றைத் தொடுத்து விட்டு சர்ரென்று கீழே இறங்கி விட்டார்.மாலை போடாத குறையாக அவரைக் கட்டித் தழுவிக்கொண்டார்கள் சிலர். தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிது..
அவர் அன்று இல்லையென்றால், அதற்கென்று உப்புத்தரிசில் ஒரு குரங்காட்டி உண்டு. அவரது குரங்கு இதற்கென்றே பழக்கப் பட்டது. அவரை வரவழைக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தோம்.அந்த வேடிக்கையையும் ஒரு முறை பார்த்தோம்.ஆனால் அப்போது எதிர்க்கட்சியின் கொடிக்கயிறு அறுந்து போன சமயம். குரங்கின் இடுப்பிலும் அது தப்பிவிடாமலிருக்க கயிறு ஒன்றைக் கட்டினார் குரங்காட்டி. கம்பத்திலேறி வளையத்திற்குள் கயிற்றை மாட்டிய குரங்கு, அதில் தொங்கியபடியே இறங்கிய காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.இறங்கியதும் அது குரங்காட்டியின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டதுதான் முத்தாய்ப்பும் முரணுமாய் இருந்தது.
இது நடந்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் கழித்து ஒரு சிறிய கவிதை தோன்றியது
”ஆகச் சிறந்த உயரங்களை
மறந்து போயிற்று
கூத்தாடியின் தோள்க் குரங்கு”
11 comments:
நல்ல பகிர்வு. காட்டு வழி பாதைகளில் நடப்பது என்பது படிக்கவே திரிலிங்காக இருக்கு. கவிதையும்(ஹைக்கூ என்றே சொல்ல வேண்டும்)
மலை ஏறும் போது ஏற்படும் அனுபவங்களின் குறிப்பு எப்போதுமே சுவாரஸ்யமானவை தான்.
ஆஹா!
நேற்று நான் போட்ட பின்னூட்டம் வரவில்லையே?! நீக்கிவிட்டீர்களா?
இளமுருகன்
நைஜீரியா
very nice, thanks for sharing
நான் யாருடைய பின்னூட்டங்களையும் நீக்குவதில்லை.(உண்மையில் அதை நீக்குவது எப்படி என்றே தெரியாது. இன்னொரு முறை அனுப்புங்கள்.
vanakkam annachi very nice
nellai thamilil kalakuringa annachi
சுஜாதா விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஐயா.
சுஜாதா உயிர்ம்மை விருது கிடைத்தமைக்கு மிகுந்த வாழ்த்துக்கள், சந்தோசங்கள்.
என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடரரட்டும் உங்களின் இந்த திருப்பணி.
இப்பொலுதும் சபரிமலை பாதயாத்திரை போவது உண்டா, போவதாயின் தங்கலுடன் சேர்ந்து பயணிக்க ஆவலக உள்ளது.
Post a Comment