அது கறுப்பு வெள்ளைப்படங்களின் காலம். கலர்ப் படங்கள் என்றால் அது ஆங்கிலப் படமாகத்தான் இருக்கும்.. ஆங்கிலப் படங்களுடன் சில நிமிடங்கள் ஓடுகிற கார்ட்டூன் படங்கள், லிட்டில் ராஸ்கல்ஸ்,வில்லேஜ் ஸ்கூல் மாஸ்டர், மாதிரி நகைச் சுவைப் படங்கள் போடுவார்கள். ஒரு டாம்-ஜெர்ரி கார்ட்டூன், வழக்கம் போல, ஜெர்ரி எலியை, ஒரு பூங்காவில் டாம் துரத்தி வருகிற காட்சி.வண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று வண்ணம் மறைந்து கறுப்பு வெள்ளையாகி விட்டது படம். ஏதோ எந்திரக் கோளாறு என்பது போல் தியேட்டரில் ஒரே கூச்சல். சட்டென்று ஜெர்ரி நின்று, திரும்பி சற்று பின் நோக்கி வந்து, குட்டியாய் ஒரு ‘அறிவிப்பிப் பலகை’ நட்டு வைத்திருப்பதைப் பார்க்கும். அதில் “TECHNI COLOR ENDS’ என்று எழுதியிருக்கும்.ஜெர்ரி மறுபடி வண்ணப் பகுதியில் ஓடும்.,சிரிப்பு பரவும்.
இசக்கி அண்ணாச்சி ஒரு அருமையான புகைப்படக் கலைஞர்.தொழில் முறை புகைப்படக்காரரும் கூட. மிகச் சிறந்த ஓவியர். 1980-82 வாக்கில் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போனேன்.சிந்து பூந்துறையில் அவரது தெருவடி வீடு -அதாவது வீட்டிலிருந்து கால் வைத்தால் தெருவில்த்தான் வைக்க வேண்டும் - பத்துப் பன்னிரெண்டு வயதிலிருந்து எனக்கும் புகைப்படக் கிறுக்கு உண்டு. பெட்டிக் கேமராவும், மூன்று ரூபாய்க்குள் அடங்கி விடுகிற 100 ASA ஃபிலிமுமாக அலைவேன்.
ஒரு சிறிய தார்சாலில் உட்கார்ந்து இசக்கி அண்ணாச்சி, ஒரு புகைப்பட நெகட்டிவ்விற்கு பிங்க் அடித்துக் கொண்டிருந்தார். அது படத்திலுள்ளவரின் முகத்தை பளீரென்று ஆக்க உதவும்.அதை பல போட்டோகிராபர்களும் கர்ம சிரத்தையாகச் செய்வதை அந்தக்காலத்தில் எல்லா ஸ்டுடியோவிலும் பார்த்திருக்கலாம். அப்போதெல்லாம் கலர் ஃபிலிம் பயன்பாடு மதுரையைக் கூட எட்டிப் பார்த்திருக்கவில்லை, கறுப்புவெள்ளைப் படத்திற்கு கையால் வர்ணம் பூசிய படங்களே உண்டு. அதுவும், சில குறிப்பிட்ட ஒரே மாதிரியான, ரோஸ், நீலம், மஞ்சள் போன்ற வர்ணங்கள்.
அண்ணாச்சியைச் சுற்றிலும் பல புகைப்படங்கள், பெரும்பாலும், வாழும் போது படம் ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இறந்து போனவர்களை நாற்காலியில் ‘உட்கார வைத்து’ எடுத்த படங்கள். சிலவற்றில் கொஞ்சம் வர்ணம் பூசப்பட்டிருந்தது.. அவரது இடதுகைப் பெருவிரலுக்கு மேல்ப் பாகத்தில், வர்ணம் முக்கிய ப்ரஷ்ஷை கூர்மையாக்கத் தோய்த்ததின் காய்ந்த வர்ணத் தீற்றல்கள், லைஃஃப் ,ரீடர்ஸ் டைஜெஸ்ட் போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வந்த பல புகைப்படங்கள்,மரம் போல இருக்கிற, பட்டுப்போன இலைகளற்ற துளசிச் செடி, என அவர் ‘பட்டறை’ ஒரு சிதறிய ஒழுங்குடன் இருந்தது.ஏதோ குப்பையிலிருந்து எடுத்த சிறிய பத்திரிக்கைத்தாள், ஒரு எனாமல் டிரேயில், தண்ணீரில் குப்புற மிதந்து கொண்டிருந்தது.அதை நிமிர்த்திக் காண்பித்தார், ஒரு அழகான ஹூப்போ (இஸ்ரேலின் தேசியப்) பறவை. ”இதை டீக்கடை பாய்லரில் ஒற்றியெடுத்து பத்திரப் படுத்த வேண்டும்” என்று அவர் சொன்னதுதான் அவருடனான முதல் உரையாடல்.கொஞ்சம் கொஞ்சமாகவே பேச ஆரம்பித்தார்.என் புகைப்பட ஈடுபாடு தெரிய ஆரம்பித்ததும் ஏகப்பட்ட, வேறு புகைப் படங்களை -அவரது பிடித்தமான சப்ஜெக்டான மரங்கள், பங்குனி உத்திரத் திருநாள் படங்கள்- எடுத்து வந்து காண்பித்துக் கொண்டிருந்தார்.
மருத நிலமான திருநெல்வேலியின் அந்தக்கால சாலைகளிலுள்ள மருத மரங்கள் தங்கள் அரவணைப்பு நிறைந்த ஆகிருதியுடன் பல படங்களில் மனதைக் கவர்ந்தது.”செப்பறைக் கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் ஒரு பிரம்மாண்டமான புளிய மரம் உண்டு தெரியுமா,” என்று கேட்டு நான் முடிக்கும் முன் “ஐய்யோ அதுவா, இந்தாங்க, பாருங்க,” என்று ஒரு பெரிய புகைப் படத்தை, தார்சாலை ஒட்டிய டார்க் ரூமிலிருந்து எடுத்து வந்து கண்பித்தார். ”மேல்ப் பாதி மரம், கீழ்ப் பாதிமரம் என இரண்டாகப் படம் பிடித்து, இரண்டு நெகட்டிவ்களையும் இணைத்து பிரிண்ட் போட்டது”, என்றார். அதே போல் இன்னும் ஒன்றிரண்டு படங்களைக் காண்பித்தார். எதிலும் எங்குமே ‘ஒட்டு’ தெரியவில்லை.இந்தக்காலம் போல் டெலி, ஜூம், வைட் ஆங்கிள் கேமராக்கள் இல்லாத காலம் அது.செத்துப் போனவர்களைப் படம் பிடித்து ஏதோ சம்பாதித்து,ஒரு கலைஞனின் பசியோடு அவர் எடுத்த, மற்ற அரிய படங்கள் விழுங்கிய, ஃபிலிம், ப்ரோவிராபேப்பர், ரசாயனங்கள், உழைப்பு ஆகியவற்றிற்கான காசைக் கணக்கிட்டால், அது இன்று அவரை சௌகரியமாக வாழ வைத்திருக்கும் என்று தோன்றுகிறது.
பொதுவாக நரிக்குறவப் பெண்கள் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அவர் வீட்டை பிச்சைக்காக, தற்செயலாக எட்டிப் பார்த்து, அவரது கலைக்கு காரண காரியங்களற்று சிநேகிதியாகிவிட்ட ஒரு இளம் நரிக்குறவப் பெண்ணின் இயல்பும் அழகும் நிறைந்த, கருப்பு வெள்ளைப் புகைப்படம், அவர் அபூர்வமாகவே நண்பர்களிடம் காண்பிக்கிற படம், ஒன்றைக் காண்பித்தார். பகீரென்றிருந்தது அந்த அழகும் கலையும்.இப்போது அந்தப் பெண் வயதானவளாகி இருப்பாள் என்றோ என்னவோ, சமீபத்தில் நடை பெற்ற அவரது ஓவியக் கண்காட்சியில் அதைக் காட்சிக்கு வைத்திருந்தார். கிருஷ்ணாபுரம் சிலையைப் போல அதைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. அவரது ஓவியங்கள் அற்புதமானவை. சாக் பீஸால் வரைந்த ஒரு ஓவியம், மரங்கள் வழியே காட்டுக்குள் மாலை வெயில் சாய்வாகச் சொரிவது போல் இருக்கும்.அந்த மாலைப் பொழுதின் மயக்கம் அன்று உண்டாக்கிய மனோநிலையை இன்னும் மறக்க முடியவில்லை.
பொதுவாக, கலையையாவது அபூர்வமாகக் கொண்டாடும் சமூகம் கலைஞனைக் காப்பாற்றுவதேயில்லை. அதிலும் சொந்தங்கள் இரண்டைப் பற்றியும் கவலையே படாது. தளர்ந்து போன அந்த 86 வயதுக் கலைஞனை சமீபத்தில் சந்தித்த போது ஏனோ நினைவில் தோன்றியது., எம்.எஃப். ஹுசேனின் ஒரு ஓவியம் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறதாம்.
9 comments:
அருமையான பகிர்வு.
அருமையான பகிர்வு.
அருமையான பகிர்வு.
உறங்கம் முன் கதை கேட்கும் சிறுமி போல் உணர்கிறேன் உங்கள் பதிவுகளை படிக்கும் போது...
//செத்துப் போனவர்களைப் படம் பிடித்து ஏதோ சம்பாதித்து,ஒரு கலைஞனின் பசியோடு அவர் எடுத்த//
கலை பித்து இதுதானோ?!
இளமுருகன்
நைஜீரியா.
அருமையான பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
plz thinamum ezhuthunga annachi
//ஒரு சிறிய தார்சாலில் //
காணாமல்போன வழக்குச்சொற்கள்..
mika arumai.. :)
Post a Comment