முந்தின இரவில் பார்த்த சினிமா,கேட்டு ரசித்திருந்த திராவிட இயக்க அரசியல் கூட்டங்கள், குன்றக்குடி அடிகளார், கி.அ.பெ போன்றவர்களின் பட்டி மன்றங்கள், இலக்கியக் கூட்டம்; என்று காரசாரமான விவாதம் நடைபெறுகிற அந்தக் காலை பத்து மணி நேரக் கூடுதலில் சந்திப் பிள்ளையார் முக்கு களை கட்டி இருக்கும்.கழகத்தின் மூத்த உறுப்பினர்கள், இன்னோரன்ன அரசியல் அனுதாபிகள் என்று பலரும் ராமுப் பிள்ளை கடை முன் கூடிப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்களும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருப்போம். கடை, கிழக்கு வரிசையில் இருப்பதால் அந்நேரம் வெயில் அடிக்காது.காணாததற்கு அழகான வேனல்ப் பந்தல் போட்டிருப்பார்.கோடை பிறந்து விட்டால், முனிசிபாலிட்டியில் அப்படி வேனல் பந்தல் போட அனுமதி தந்து விடுவார்கள். தேரோட்டம் வரை அது இருக்கும். ராமுப் பிள்ளை, ”சரி யாராவது என்னமாவது ஒரு சர்பத், பழம் என்று வாங்குகிறார்களா, எல்லாம் வெட்டிக் கூட்டம்” என்று முனுமுனுத்துக் கொண்டிருப்பார்.
அவர் பலமாக முனு முனுக்க ஆரம்பித்தால் கிண்டலாக யாராவது, ”சரி, இந்த வாரம் பிள்ளைவாள், மணிமுத்தாறு வரலையா” என்பார்கள். “ஏய் வாரேன்ய்யா விட்டுட்டுப் போய்ராதிங்க, இல்லை வெயிலா இருக்கே ஒரு நன்னாரி சர்பத் சாப்பிட்டா குளிச்சியா இருக்குமே என்றேன்” என்று அவசரமாகச் சொல்லுவார். எங்களுக்கு அந்த ரகசியம் ரொம்ப நாள் புரியாமல் இருந்தது. சரி அது ஏதோ பெரியவங்க சமாச்சாரம் என்று மட்டும் தெரியும்.
ஒருவர் மட்டும், இந்தச் சோலிய விடுங்கப்பா என்பார். அவருக்குத் துணையாக ஒன்றிரண்டு பேர் அதை ஆமோதிக்கிற மாதிரி சிரிப்பார்கள.அவர் முகத்தில் எப்போதும் இரண்டு நாள் தாடி இருக்கும்.அது என்ன மாயமோ நான் பார்க்கிற போதெல்லாம் அப்படித்தான் இருக்கும். கூடவும் இருக்காது, குறையாகவும் இருக்காது.அநேகமாக வெற்றிலை போட்ட வண்ணம் இருப்பார்.எங்களிடம் நேற்றுக் கூட்டத்தில் கலைஞர் என்ன பேசினார்,அது எதன் தொடர்ச்சி,அது குறித்து அண்ணா ஏற்கெனவே பாராளுமன்றத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.நாங்கள் யாராவது,கருணாநிதி என்றோ, அண்ணாதுரை என்றோ சொல்லி விட்டால். ”தம்பி இங்க பாருங்க, துரைங்கிறதெல்லாம் வெள்ளைக்காரனைச் சொன்னது, அண்ணான்னு சொல்லுங்க, கலைஞர்னு சொல்லுங்க.நாவலர்ன்னு சொல்லுங்க என்பார், பண்டிட்நேருஜி, பாபு காந்திஜின்னு சொல்லலையா என்பார். அவர் சொல்லும் போதே ஆமா அதுதான் சரி என்று தோன்றும்.
அவர் சொல்லுகிற பல விஷயங்கள் சுவாரஸ்யமாயிருக்கும்.” ஆண் மயில், ஆடும் போது சிந்துகிற உயிரணுக்களை பெண் மயில் எடுத்து விழுங்குவதில் தான் அது கருவுறுகிறது” என்பார்.(அப்புறம் கொஞ்ச நாள் கழித்து அது தவறு என்று கேள்விப் பட்டதாக அவரே மன்னிப்பு கோரும் குரலில் சொன்னார்.) ”காட்டுல ஒரு வேர் இருக்கு. அதைத் தேய்த்தால் எப்பேர்ப் பட்ட இரும்பும், திராவகம் பட்ட மாதிரி உருகிருமாம்.இதை கன்னக்கோல் திருடர்கள் எல்லாம் வைத்திருப்பார்களாம்.,” என்பார். இது எப்படி கிடைக்கும்ன்னு கேட்கும் முன்பே சொல்லுவார், ”இந்த வேர் பற்றி கருடனுக்கு மட்டும் தான் தெரியுமாம், இந்த திருடங்க, கருடன் இல்லாத நேரமாப் பார்த்து, அதன் கூட்டில் இருக்கிற குஞ்சுகளின் காலை நல்ல இரும்புக் கம்பியை வைத்துக் கட்டி விட்டு இறங்கி விடுவார்களாம்.அதைப் பார்த்த கருடன் காடு மேடெல்லாம் திரிஞ்சு இந்த வேரை எடுத்துட்டு வந்து, கம்பியை, முறித்து குஞ்சைக் காப்பாற்றுமாம், அப்புறமா இவங்க அந்த வேரை எடுத்து வச்சுக்குவாங்களாம்” என்பார்.
இந்த மாதிரிச் சொல்லிவிட்டு மறுபடி அரசியலுக்கு வந்து விடுவார். ”அண்ணா முதன் முதலா பேசின பாராளுமன்றப் பேச்சைக் கேட்டு பூபேஷ் குப்தா, லோகியா போன்றவர்களெல்லாம் எப்படி ஆச்சரியப் பட்டார்கள் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்.அந்தப் பேச்சுக்குப் பின்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டமே (defence of India rule) போடப்பட்டது, என்பார். அவர் அபூர்வமாகத்தான் அங்கே தென்படுவார். அவர் வாகையடி முக்கிற்கு அருகாக தேநீர் விடுதி நடத்தி வந்தார்
.
1965 ஜனவரி 26.அண்ணா அன்றைய நாளை துக்க நாளாக அனுசரிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். வாகையடி முக்கில் ஒரு விளக்குக் கம்பத்தில், இது பற்றிய அறிவிப்பு எழுதிய தட்டி போர்டு ஒன்று கட்டி இருந்தார்கள்.அது எப்படி, எப்போது வந்தது என்று போலீஸ் துருவிக் கொண்டிருந்தது.நாங்கள் விஷயத்தைக் கேள்விப் பட்டு அதைப் பார்க்கப் போனோம். போலீசார் கூட்டம் போடாதே என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள்.திடீரென்று, அவரை தேநீர்க் கடையிலிருந்து அழைத்து வந்தார்கள்.அந்த தட்டி போர்டை அவிழ்க்கும் படிச் சொன்னார்கள். அவர் மறுத்தார். அதை அவர்களே அவிழ்த்து எறிந்தார்கள். அவர் அதை எடுத்தார், எடுத்துக் கொண்டு, தூக்கிப் பிடித்த படி நின்றார். கைது செய்வதாகச் சொல்லி, காவல் நிலையத்திற்கு நடத்திச் சென்றார்கள். இரண்டு ரத வீதிகள் வழியாக தலைக்கு மேல் தூக்கிப் பிடித்த படி, அப்படி ஒரு வீர நடை. எங்களைப் போல் மாணவர்களாக நிறையப் பேர் பின்னாலேயே போனோம். அவரை, ஸ்டேஷன் வரும் வரை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை. அவர் காவல் நிலைய நடையை மிதித்ததுதான் தாமதம், ஒரே மிதி, போர்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே ஸ்டேஷனுக்குள் சுருண்டு விழுந்தார், அந்தத் தோழர்.
பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஜிவ்வென்று ஏறியது..இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினோம். போலீஸ் விரட்டியது. மறு நாளே மகத்தான மாணவர் போராட்டம் வெடித்தது.
Tuesday, March 2, 2010
ஓடும் நதி-21
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த மாதிரி எத்தனை அண்ணாச்சிகள் அரசியல் மேல் காதலை வளர்த்து விட்டார்கள், இவர்களின் பேச்சை கேட்டிருந்தால் ஒரு வேளை எங்களுக்கெல்லாம் கூட அரசியல் மேல் ஒரு ஆர்வம் வந்திருக்கும். நல்ல பதிவு.
அருமை.
ஒரு பக்கம் நெல்லை ரத வீதிகள், தமிழ் உணர்வு, அண்ணா கண் முன்னே வந்தாலும்
இன்று பதவிக்காக ஹிந்தி, அன்னை சோனியா என்று திராவிடம் விழுந்து கிடக்கும் பொழுது, நெஞ்சு பொறுக்குதில்லையே.
ராமு பிள்ளை கடை என்பது சாந்தி பிள்ளையார் கோயில் பக்கம் இருந்த (இருக்கும்) உடுப்பி ஹோட்டல் அருகிலா இருந்தது. காந்தி சிலை பக்கமா
காமராஜர்,அண்ணா போன்றவர்கள் மேல் இருந்த மரியாதை இன்றைய தலைவர்கள் மேல் வரும்படி அவர்கள் நடந்து கொள்வதில்லை.அதனால் அரசியல் மேலும் மரியாதை இல்லை.
இளமுருகன்
நைஜீரியா
Post a Comment