கோடை விடுமுறைக்கு தென்காசியிலிருந்து வந்த அண்ணன் ஒருவன் அந்த ஜோசியத்தை சொல்லித் தந்தான்.கோடை விடுமுறை என்றில்லை, காலாண்டுத் தேர்வு,அரையாண்டுத் தேர்வு என்று எந்த விடுமுறையாய் இருந்தாலும் அவர்கள் மூன்று சகோதரர்களும் அவர்களது அக்கா வீட்டிற்கு வந்து விடுவார்கள்.இரண்டாமவனும்,கடைக்குட்டியும் எங்கள் வீட்டிற்கு தினமும் வருவார்கள். முதலாமவன் எப்போதாவது வருவான். சாப்பிடச் சொன்னால் மாட்டான். கொடி அடுப்பில் எப்போதும் கொதித்தபடி இருக்கிற கருப்பட்டி காபியை மட்டும் குடிப்பான். அது, பன்னிரெண்டு மணி வரை தான் இருக்கும். அப்புறமென்றால் பெரிய அடுப்பில் பாதி வெந்த பருப்புக் குண்டான், கொடி அடுப்பில் ஏறி விடும். கடைக்குட்டி அண்ணன் இங்கே சாப்பிடவே விரும்புவான்.
தோட்டத்தில் சில வாழை மரங்களுண்டு. ஒரு வாழை இலையில் மூன்று விரற்கடை அளவுக்குக் கிழித்துக் கொள்வான்.இப்போது அது அரையடி நீளத் தாள் போல இருக்கும். அதன் ஒரு முனையை அவன் பிடித்துக் கொள்வான்.மற்றதை இன்னொருவன். அவன் பக்கத்து ஓரத்தில், அவன் இலையை நீள வாக்கில் கிழிப்பான்.மற்ற முனையை மற்றவர் நீளவாக்கில் கிழிக்க வேண்டும். இரண்டும் சந்தித்து, இலை சரியாக இரணடு துண்டாக வந்தால், மற்றவன் அந்த வருடம் தேர்வில் பாஸ் பண்ணி விடுவான்.இலையின் நரம்பு வாக்கு, பெரும்பாலும் சரியான இரண்டு துண்டாகக் கிழியாது. பிசிறாகக் கிழியும். உடனேயே. நீ ஃபெயில் என்பான் அந்த அண்ணன்.மற்றவன் முகம் சுருங்க ஆரம்பித்தால்,சரி இன்னொரு தரம் என்று அதே மாதிரி இன்னொரு இலைத் துண்டு கிழியும்.
காலையில் ஆரம்பித்த இந்த ஜோஸ்யம் அநேகமாகப் பலருக்கும் ஃபெயில் ரிசல்ட்டாகவே கொடுத்தது. மதியம் வரும் போது தோட்டம் பூராவும் வாழை இலைக் கிழிசலகள். மரத்தில் பெரிய பெரிய காம்புகள் மட்டுமே இருந்தன.குருத்து விட்டிருந்த வாழையைக் கூட விடவில்லை. விளையாட்டாய், தொட்டில் பழக்கமாய் ஆரம்பித்த இந்த மூட நம்பிக்கை இன்னும் தொடரத்தான் செய்கிறது.
கிரிக்கெட் மேட்ச் ஆரம்பித்து விட்டால் போதும். பெரிய பெண், பட்டாசல்க் கதவில் சாய்ந்து உட்கார்ந்து கொள்வாள்.அங்கே இங்கே நகர மாட்டாள்.”அப்பா, இப்போ நம்ம பேட்டிங்கா, வால்யூம் என்ன வச்சுருக்கே, கூட்டினால் ஐந்து வருதா” என்பாள், சின்னவள்.எதிரணி பேட்டிங்க் என்றால் வால்யூம் எட்டில் இருக்கும். இடையே, ”ஏய் கொஞ்சம் தண்ணீர் கொண்டாயேன்” என்றால், இரண்டு பேருமே, ”இரு, இந்த ஓவர் முடியட்டும்”, என்பார்கள்.முடிந்ததும், ”போ இப்ப போய் குடிச்சுட்டு ஓடிவா, அங்கயே நின்னுறாத, கங்குலி 90 போட்டுட்டான், அவுட் ஆகித் தொலைச்சிராம,” என்பாள் பெரியவள். பக்கத்து வீட்டு மாமா, ஒருவர் எல்லா விளையாட்டிலும் ரொம்பப் பிரியமும், விவரமும் உள்ளவர். அவர் கொஞ்ச நேரம் வந்து மேட்ச் பார்த்து விட்டு, அன்றைய தினசரியோ புத்தகமோ எடுத்துக் கொண்டு போவார்.அவர் நடைச் சத்தம் தெருவில் கேட்டாலே, ஐயய்யோ லெக் அம்பயர் வாராங்களே, எவனாவது ரன் அவுட் ஆகித் தொலைச்சுருவானே, என்று கீழ் ஸ்தாயியில் அரற்றுவாள். சமயத்தில் அப்படியும் நடக்கும். இத்தனைக்கும் எழுத்தாளர் சுஜாதா, வீட்டுக்கு வந்திருந்த போது அவரிடம் டக் வொர்த் லூயி சிஸ்டம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். அவரே,”இங்கே பாரு சுஜி, இந்தப் பொண்ணூ என்னமா ‘டி.எல். மெத்தெட்’ பற்றிச் சொல்லறா” என்று அவர் மனைவியிடம் வியந்தார்.
அறிவு வேறு, நம்பிக்கை வேறு, பக்தி வேறு,ஆசை வேறு. நான் சபரி மலைக்கு வழக்கமாகப் போகும் போதெல்லாம், பம்பை நெருங்க நெருங்க மனதில் ஒரு அமைதி வரும். அநேகமாய் மாலை மயங்கி, பனி, காட்டின் பசுமையைச் சுமந்து வரும் நேரம். அதுவும் ஒரு காரணமாய் இருக்கும். உடன் வருபவர்களிடமும் ஒரு அசாதாரண அமைதி நிலவும்.நினைவுகள் ஆழத்திற்குப் போகும். ஒரு ஆசை முகம் மெதுவாய் விரியும். பார்த்து எத்தனை வருடமாயிற்று. இதே போல் ஒரு பனிக்காலத்தில் தானே நினைவுகளை ஆளத் தொடங்கினாள்.வருகிற வருடமாவது, பார்க்கவாவது முடியுமா என்று தவறாமல் தோன்றும்.சரி எதிரே வருகிற பஸ், அவள் பெயரோ அல்லது அவள் சம்பந்தப் பட்ட பெயரோ தாங்கி வந்தால் நினைப்பது நடக்கும்,இந்த வருடம் அவளைப் பார்க்கலாம், என்று பஸ்களை பார்க்கத் தொடங்குவேன். முதன் முதலில் கேரள அரசு பஸ் வரும்.
‘ச்சேய்’ என்றிருக்கும். சரி இன்னும் மூன்று, இல்லை ஐந்து பஸ்களைப் பார்ப்போம். நிகழ்தகவுக்கு ஒரு சந்தர்ப்பம் தர வேண்டாமா என்று பலவீன மனசு சொல்லும். வேறு பெயர்களுடன் ஆறேழு வண்டிகள் போனாலும், ஆசை போகாது. அது அபூர்வமான பேரில்லையா,அப்படி பஸ்ஸோ லாரியோ இந்த ரூட்டில் வர வாய்ப்பு ரொம்பக் கம்மியாயிற்றே. சரி, ஏதாவது நம்ம குடும்பத்தில் உள்ளவர்கள் பெயருடன் ஒரு பஸ், ஏன் ஒரு வேன், வந்தாலும் சரி என்று விதியைத் தளர்த்திப் பார்த்தாலும், ம்ஹூம், வராது. ‘நம்ம விதிதான் தெரிஞ்சதே,நாம ரயிலில் ஏறினால் அது எஞ்ஜினில் ஏறி நமக்கு முன்னால ஸ்டேஷன்ல இறங்கி நிற்குமே’ என்று அந்த மூட நம்பிக்கை அவநம்பிக்கையாகப் போகும். ஒரு வருடம் மட்டும் பத்தாவதோ, பதினோராவதோ ஒரு பஸ் ”பிரியா டிரான்ஸ் போர்ட்” என்ற பெயருடன் வந்தது. இன்னொரு முறை இந்த மாதிரியெல்லாம் யோசிக்கவே இல்லாத வருடம், “T.K.S” என்று என் பெயர் எழுதிய ஒரு லாரி வந்தது.
இந்த லாரிப் பெயர் விளையாட்டு, பின்னாலும், எப்போதும் தொடர்ந்தது. எதிரே, வழக்கமான ”மூகாம்பிகை” கேஸ் லாரி அல்லது ”கோமதி” பூ லாரி வந்தால், இன்று ஆஃபீஸில் யாருடனும் சண்டை வராது என்றெல்லாம் தோன்றும். ஒரு நாளும், ஒன்று மட்டும் தோன்றவே இல்லை; “கோகிலா” லாரி ஏறி, கூடப் பிறந்த அண்ணன் முகம் நசுங்கி அங்கேயே செத்துப் போவான் என்று.
Tuesday, February 2, 2010
ஓடும் நதி-17
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//அறிவு வேறு, நம்பிக்கை வேறு, பக்தி வேறு,ஆசை வேறு.//
மிகச்சரியான விசயம். நீங்கள் சொன்னது போன்ற (மூட)நம்பிக்கைகள் அனைவரிடமும் உண்டு என்றே நினைக்கிறேன்.
இதை போன்ற நம்பிக்கைகளில் அபூர்வமானதொரு திருப்தி ஏற்படும்.
Post a Comment