சாலையோரம் பழைய டயர்களை, ஒரு சிறிய கோபுரம் போல அடுக்கி வைத்திருந்தால்...மரக்கிளையில் குட்டி டயர் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால்....அருகிலேயே ஒரு வல்கனைசிங் ஒர்க்ஷாப் இருக்கிறது என்று மூளை தானகவே தெரிந்து கொண்டு விடுகிறது.(இருட்டாய் இருந்தால் கூட `பச்சை-TASMAC-போர்டை’- கண்டுபிடித்து கால்கள் தள்ளாட்டமில்லால் சென்று தள்ளாடித் திரும்புகிறது) மூளையின் இடது புறமே இதையெல்லாம் நிர்ணயம் செய்கிறது என்கிறார்கள்.சாலையின் இடது புறமாகச் செல்கிறோமோ இல்லையோ, மூளையின் இடது புறமாகச் செல்ல வேண்டும் போலிருக்கிறது.
நான் வழக்கமாக என் வாகனத்தின் சக்கரங்களுக்கு காற்றழுத்தம் சரி பார்க்கச் செல்லும் கடையில் ஒரு பையன். பேச்சு வராது. ஆனால் பேசிக் கொண்டே இருப்பான். சைகை புரியாவிட்டால் அருகில் நிற்கும் ஏதாவது காரின் பின்புறத்தில் படிந்திருக்கும் தூசி அழுக்கில் எழுதிக் காண்பிப்பான்.ஒருநாள் என் பெயரைக் கேட்டான். நானும் எழுதினேன்.எழுதும் போது கை அழுக்காகும் என்று தடுத்தான்.பரவாயில்லை என்று சைகையில் காட்டி விட்டு எழுதினேன். விருவிருவென்று மூக்குத்தியணிந்த ஒரு பெண் முகம் வரைந்து, ஏதோ சைகித்தான். புரியவில்லை. நான் என் புனைப் பெயரை எழுதியிருந்தேன். நீங்கள் என்ன பெண்ணா என்று கேட்டிருக்கிறான்.அவனே புரிய வைத்துவிட்டான்.நீங்கள் புத்தகம் எழுதுகிறவரா என்று கேட்டான்.கையைப் பிடித்து அழைத்துப் போய் அருகே இருந்த குப்பைகளைக் காண்பித்தான்.அது அறுவடைக் காலம்.அழகாக அங்கங்கே நெற்பயிர் முளைத்திருந்தது.
``தவறி விழுந்த நெல் மணிகள்
குப்பையென்று பார்த்தா முளைக்கும்.....’’.என்று நான் எழுதி யது நினைவுக்கு வந்தது..அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அதை அவன் வாசித்திருக்கவே நியாயமில்லை. அவன் எதற்காக அதைக் காண்பிக்கிறான் என்று தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், புரிந்து கொள்ள முடிந்தது.
எனக்கு, தூத்துக்குடியில் பிரம்மசாரி வாழ்க்கை வாழ்ந்த போது ஆத்துர்ப் பிள்ளை கடையில் சாப்பிட்ட காலம் நினைவு வந்தது.புதிதாக ஒரு சிறுவனைச் சேர்த்திருந்தார். சாப்பாடு, இடம், வாரத்திற்கு கால்க் கட்டி லைஃப்பாய் சோப், மற்றும் சன்லைட் சோப். இது தான் கூலி.இரண்டு நாள் அமைதியாக இருந்தான். அப்புறம் வாடிக்கையாளர்களிடம் கலகலவென்று பழக ஆரம்பித்து விட்டான்.அவனிடம் முதலாளி கடுகடுவென்றுதான் இருப்பார்.அவனோ கண்ணாலும் முகத்தாலுமே பேசி விடுவான்.”நேற்று செகண்ட் ஷோ வா, மேற்படி சரக்கு உண்டுமா இல்லேன்னா சினிமா மட்டும்தானா“ என்றெல்லாம் பேசி விடுவான். பால்ச்சட்டி தேய்த்துக் கழுவதுதான் கடினமான வேலை. இவன் அந்த வேலை செய்யும் போது பேசினால் மட்டும் பிள்ளவாள் ஒன்றும் சொல்ல மாட்டார்.அப்போது கண்ணால் பேசினதையெல்லாம் வாயால் சொல்லி நாம் புரிந்ததை உணர்த்தி விடுவான்.சாப்பிட்டு விட்டு ஒருநாள் இலையை எடுக்காமல் கை கழுவ வந்து விட்டேன். முதலாளி சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தார்,பையன் வெடுக்கென்று சிரித்துக் கொண்டே சொன்னான்,” எண்ணேன், மணிப்பர்ஸ மறந்துட்டுப் போறிங்களே” என்று. ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் சிரித்து விட்டனர், ஆத்தூர்ப் பிள்ளை உட்பட.
கடையநல்லூரின் ஒரு கடையில் இதே போல் ஒரு பையன்.இன்னும் என்னவோ வாங்க வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தால், ”சார் மணிபர்ஸா” என்பான். சிரித்துக் கொண்டே, ”ஆமாடா” என்றால். ஒரு தாளில் பொதிந்து கொடுப்பான். நிரோத்.
வங்கியில் அன்று நல்ல கூட்டம்.கொஞ்சம் அறிமுகமான பெண் வாடிக்கையாளர், நகைக் கடனுக்காக தன் பத்து வயது மகனுடன் வந்திருந்தார்.பையன் பொறுமையின்றி எதையோ கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான்.வாயிலுக்கு எதிர்த்த இருக்கை எனக்கு.என்ன கேட்கிறான் என்றேன் அவரிடம்.அவள் சிரித்துக் கொண்டே, ”போ போய் விளையாடித் தொலை” என்றாள்.அவன் உற்சாகமாக வாயிலில் விரித்திருந்த பெரிய கயிற்று மிதி பாய் அருகே சென்று அதை லேசாக உதறினான். மென்மையான தூசி வழுவழுத்த தரையில் படிந்தது. ஆட்காட்டி விரலால் அதை அங்குமிங்கும் ஒன்று கூட்டினான். ஒரு சில நொடியில் ஒரு அழகான மான் வந்திருந்தது, துள்ளியோடும் புள்ளி மான்.அந்தப் பெண் சிரித்தாள். ”இப்படித்தான் சார், கோலப் பொடி, இந்த மாதிரிப் பொடீத் தூசியைக் கண்டா விட மாட்டான்,இடியாப்பத்துக்கு மாவு சலிச்சா ஓடீ வந்துருவான், சல்லடையச் சுத்திப் படியும் மாவைக் கண்டா கொண்டாட்டமா இருக்கும்; இங்க பெரிய ‘டோர் மேட்’டா கிடக்கா புள்ளைக்கி சந்தோஷம் பிடி படலை” என்றாள். நான் உற்சாகப் படுத்தி நிறையப் பேசினேன். இரண்டு பேருக்குமே மகிழ்ச்சி.
பத்துப் பதினைந்து வருடம் ஆகியிருக்கும். விகடன் பத்திரிக்கையில் வந்திருந்த என் பேட்டியையும் படத்தையும் பார்த்து விட்டு, ”என்னை நினைவிருக்கிறதா, இன்னும் அதே கிளையில் தான் இருக்கிறீர்களா” என்று நலம் விசாரித்து, பத்திரிக்கையில் வந்திருந்த என் புகைப் படத்தை அப்படியே பென்சிலால் வாஷ் டிராயிங் மாதிரி வரைந்து அனுப்பி இருந்தான் வெளிநாட்டிலிருந்து.
படமும் கடிதமும் எங்கோ பத்திரமாக ஒளிந்திருக்கிறது.

2 comments:
ந்ல்ல பதிவு கலாப்ரியா. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
உங்கள் பதிவுகள் படிக்கும் போது உங்கள் நினைவுகள் மட்டும் அல்ல, வாசிப்போரின் நினைவுகளும் பறவை போல பறக்க ஆரம்பித்து விடுகிறது
.
தொடரட்டும் இந்த நல்ல பணி,
நன்றிகளுடன்
Post a Comment