Tuesday, November 24, 2009

ஓடும்நதி-7


ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படம் வெளிவந்த சமயம் ஒரு வார இதழில் விமர்சனம் எழுதியிருந்தார்கள்,``கைக்குட்டைக்குப் போதாத நூலை வைத்துக் கொண்டு சேலை நெய்யப் பார்த்திருக்கிறார்கள்,’’ என்று. ஒரு சின்னப் பொறி பெரிய கதையாகி விடும். இல்லை, சின்னக் காட்சி பெரிய காரியத்தை உணர்த்தி விடும். டெல்லியில் என்று நினைவு, ஒரு சிறிய குறும்படம் 70 களின் கடைசியில் பார்த்தேன்.பிலிம்ஸ் டிவிஷன் படமாகக் கூட இருக்கலாம்.
டெல்லியின் காலை நேரப் பரபரப்பு. பஸ் நிறுத்தம் ஒன்றில், வழக்கம் போல் பஸ், ஸ்டாப்பில் நிற்காமல் தள்ளிச் சென்று நிற்கிறது. நடுத்தர வார்க்கம் ஓடிச் சென்று அடித்துப் பிடித்து ஏறுகிறது. டெல்லி நடை முறைப்படி, நடத்துனர் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு சீட்டுத் தருகிறார். கஷ்டப்பட்டு வாங்கிக் கொண்டு உள்ளே திணிந்து கொள்கிறான் ஒருவன். இன்னொருவன், இருவருமே ஒரே அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள், ஏன், டிக்கெட்டெல்லாம் எடுக்கிறாய்,யார் கேட்கப் போகிறார்கள், நானெல்லாம் டிக்கெட்டே எடுப்பதில்லை என்று சொல்லுகிறான்.
முதலாமவன் மாலையிலும் இதே போல் அடித்துப் பிடித்து பஸ்ஸுக்குள் ஏறுகிறான்.நண்பன் சொன்னது நினைவுக்கு வருகிறது, டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்கிறான். எதையோ ஜெயித்து விட்ட நடை பாவனையோடு, வீட்டை நெருங்குகிறான். தூரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து, இவனது குழந்தை இவனை நோக்கி ஓடி வருகிறது. அப்பா, நாங்கள் பஸ் விளையாட்டு விளையாடுகிறோம், நீ வைத்திருக்கும் டிக்கெட்டைக் கொடேன் என்று கேட்கிறது. முகம், தோற்றுப் போன முகம், தொங்கிப் போகிறது. நடை வாடி விடுகிறது. படம் முடிகிறது.?
இப்போதெல்லாம் சில விளம்பரங்களே அழகிய குறும்படம் போலிருக்கிறது. வோடாஃபோனின் ஜூஜு விளம்பரங்களை ரசித்திராதவர் யாராவது இருப்பார்களா. அதைத் தனியே பார்க்கிறவர்கள் மௌனமாகவும், குழந்தைகளோடு பார்க்கிறவர்கள் சத்தமாகவும், சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படி சிரிக்காமல் இருந்தால், அவனை ``இசைக்கு இளகாதவன் கொலையும் செய்வான்,’’என்கிற ஷேக்ஸ்பியரின் வரிகளில் சிறை வைக்க வேண்டும். அதே ஃபோன் விளம்பரத்தில் வருகிற `PUCK’ நாய்க்குட்டி, எங்க ஊர்ப் பாஷையில் ‘தோக்குட்டி’, செய்கிற மௌனக் கெட்டிக்காரத் தனங்கள் யாரைத்தான், சீரியல் அழுகையிலிருந்து மீட்டு சிரிப்பில் கட்டிப் போடாது.
ஹேவெல் மின் வயருக்கு ஒரு விளம்பரம் போடுகிறார்கள். பின்னணியில், கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஸ்கைஸ்க்ராப்பர் அரை இருளில் மூழ்கி இருக்க அதன் முன், இரவுச் சாப்பாட்டுக்கான சப்பாத்தியை, ஒரு இரும்பு வலையின் கீழ் தீ எறிய அதற்கு மேல், போட்டுக் கொண்டிருக்கிறாள், ஒரு இளம் தாய்.கை சூடு பொறுக்க முடியவில்லை.அவளது குட்டிப் பையன் கொஞ்சம் தள்ளிச் சென்று ஒரு துண்டு மின் வயரை எடுத்து, இடுக்கி போல் வளைத்து, தாய்க்கு உதவியாய்க் கொடுக்கிறான். தாய், ``சாலப் பரிந்து பால் நினைந்தூட்டும் தாய்’’, நன்றிப் பெருக்கும், பெருமிதமும் பொங்கும் முக பாவத்தோடு மகனுக்கு உணவை நீட்டுகிறாள்.
நொடிக் கணக்கில் மட்டுமே தொலைக் காட்சித் திரையில் ஓடுகிற விளம்பரம், வருடக் கணக்கில் நீளுகிற தொடர்களை விட எவ்வளவோ பிரமாதமாய் இருக்கிறது. (அதில் வருகிற அந்த இளந்தாயின் முகச்சாயல், எனக்கு தாயின் வாசனையை தவறாமல் எழுதுகிற ஒரு கவிஞரை உள்ளூர நினைவு படுத்தும்.)
தாய் என்றதும், அம்மா சொல்லுகிற சொலவடைகள் நினைவுக்கு வருகிறது. ``நாய்க்கு வேலையும் இல்லை உக்கார நேரமுமில்லை’’ என்று அடிக்கடி சலித்துக் கொள்ளுவாள்.ஒரு நாயின் முழு நாள் அசைவுகளையும் `டிஸ்கவரி சானல்‘ பாணியில், இடை விடாமல் கண்காணித்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் ஐந்தே ஐந்து வார்த்தைகள் எப்படி ஒரு, நேரத்தை வீணடிப்பவனின் வாழ்க்கையைச் சொல்லி விடுகிறது.
``மச்சு நெல்லும் கொறையக் கூடாது, மக்கமாரு மொகமும் வாடக்கூடாது’’அப்படீன்னா முடியுமா, ஏதாவது ஒண்ணு வேணும்ன்னா ஏதாவது இன்னொன்னைக் குடுத்துத் தான ஆகனும் என்பாள்.யாராவது என்னக்கா எப்படியிருக்கே என்று கேட்டால், யாரு கண்டா ``எண்ணெ(ய்) முந்துதோ, திரி முந்துதோ” எப்படியும் ஒரு முடிவு வந்து தானே ஆகனும் என்பாள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடின மாதிரி,
வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்-இதில்
வளர்ந்தது சமுதாயம் இங்கு
வந்ததன் பின்னே கேள்வியிலேயே
வாழ்வதுதான் நியாயம்... என்று கேள்விகள் சொல்லித்தந்து தலை முறை, தலைமுறையாய் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையினைக் `க்ளிக்’கும் குறும்படங்கள் தான் சொலவடைகளோ.

2 comments:

குப்பன்.யாஹூ said...

nice post sir, thanks for sharing

உயிரோடை said...

சார் சொல்லவே வேண்டிய‌தில்லை அருமையான‌ ப‌கிர்வு.

//இப்போதெல்லாம் சில விளம்பரங்களே அழகிய குறும்படம் போலிருக்கிறது. //

நீங்க‌ள் சொல்லிய‌ எல்லா விள‌ம்ப‌ர‌மும் அந்த‌ தோக்குட்டி என்ற‌ புது வார்த்தையும் அழ‌கு

குறிப்பிட்டிருக்கும் சொல்ல‌டைக‌ள் எல்லாம் என்னை பாட்டிமார்க‌ளிட‌ம் அழைத்து சென்ற‌து. அவ‌ர்கள் இற‌ந்த‌ பின் இதை போன்ற‌ ப‌ழ‌மொழிக‌ளும் ம‌றைந்து போல‌ சில‌ சொல்ல்ல‌டைக‌ள் க‌விதை போல‌வே இருக்கும்.