Wednesday, November 18, 2009

ஓடும் நதி-6


ஒரு ஹைகு

வாண வேடிக்கைகள் முடிந்து
பார்வையாளர்கள் கலைந்து சென்று விட்டனர்
ஆகா! இருள் எவ்வளவு விசாலமாக இருக்கிறது
-ஷிகி
வாண வேடிக்கையை ரசிக்கிறது ஜனம்.வெறும் இருளை வியக்கிறது ஒரு மனம்.

பிரம்மாண்டமான அருவியும் அழகு. தாமரை இலை மேல், ஒட்டாமல், ஒவ்வொரு காற்றுக்கும் உருண்டு கொண்டிருக்கிற நீர் முத்தும் அழகு.ஆண்டுக் கணக்காய் எழுதப் படுகிற காவியமும் அழகு. ஒரு நொடியில் வந்துவிடுகிற ஹைகு வும் அழகு. அந்த ஒரு நொடிக்கு வர பல காத்திருத்தல்களை வாழ வேண்டியதுமிருக்கும். இயற்கையின் அபூர்வக் கணம் ஒன்று அதை நொடியில் வரிகளாய்ப் பதிவு செய்யவும் வாய்ப்புத் தரும்.

நண்பரென்று தோளில் கைபோட்டுக் கொள்ள முடியாது. நண்பர் போல அன்பாகவேதான் பழகுவார்.வாழ்க்கையில் மூத்த போராளி என்று சொல்லலாம்.அந்தப் பெரிய குளத்தின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.குளத்தைப் பற்றி நான் தான் சொன்னேன். அறையை விட்டு எங்காவது சென்று அந்த மாலைப் பொழுதைக் களித்து வரலாம் என்று திடீரென்று தோன்றி குளக்கரைக்கு வந்திருந்தோம். அவர் ஒரு அரசு அதிகாரி. எங்களுக்குச் சற்றுத் தள்ளி அவருக்கான அரசு ஜீப். ஜீப் டிரைவர், நேரமாகுமா, சற்று தள்ளிச் சென்று புகை பிடிக்கலாமா என்று யோசிப்பது போல் தெரிந்தது. நண்பர், நீங்கள் காலார நடந்து விட்டு வாருங்கள் என்று சொன்னதும் கிளம்பிவிட்டார்.
பேச்சு, தாரா சங்கர் பானர்ஜியின் ‘கவி’ நாவல் பற்றி ஆரம்பித்து, வங்காள நாவல்கள், வங்காளப் படம், என்று நீண்டது. ‘நீலகண்ட பறவையைத் தேடி.’நாவலைப்.பற்றி பிரமாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னிடம் இருப்பதாகவும் அதை அவசியம் படிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.புதையல் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு.
திடீரென்று, தான் குவளை மலரையே பார்த்ததில்லை, அது பற்றி இலக்கியத்தில் தான் படித்து வியந்திருக்கிறேன், என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதோ, நடூக்குளத்தில் ஒரு பச்சைத் தீவாய் மிதந்து கொண்டிருக்கிறதே அவை தான் குவளைச் செடிகள் என்றேன்.அதனருகே, ஒரு எருமை கழுத்தளவு நீரில் அதைத் தின்று கொண்டிருந்தது. நீண்ட கால இலக்கியச் சித்திரம் ஒன்று இப்படி சிதைந்து போவதை நம்ப முடியவில்லை போலிருந்தது அவர் முகம். நிஜமாகவா என்று சத்தமாய்ச் சிரித்த படி கேட்டார். ஜீப் டிரைவரும் சிரித்த படி பக்கத்தில் வந்தார். சிரிக்கிறவர்களைக் கண்டால் எல்லாருக்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டு விடும்.
அவரிடம் நண்பர் சொன்னார் அதுதான் குவளை மலராம் என்று. ‘இதை நீர்க் குவளைம்பாங்க’ என்றார் அவர். கரையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன் குளத்தில் இறங்கி மாட்டை கரைக்குப் பத்தி விட்டு விட்டு. ஒருகை குவளைச் செடியையும் கொண்டு வந்தான். அழகான லாவண்டர் நிறத்தில் பூத்திருந்தது. நானுமே அப்போதுதான் அருகாமையில் வைத்துப் பார்த்தேன்,இதழ் நடுவில் ஒரு அழகிய கண்ணை. மறுபடியும் ஆச்சரியம் எங்கள் கண்களில் விரிந்தது. எங்கள் வியப்பைக் கண்டு வியப்படைந்த சிறுவனுக்கு நண்பர் காசு கொடுத்தார். அவன் வாங்க மறுத்து விட்டு அவசரமாய் மாட்டின் அருகே சென்றான். அதன் முதுகில் ஒரு பெரிய அட்டை ஒட்டிக் கொண்டிருந்தது.அதை தார்க் குச்சியால் தள்ள முயற்சித்தான். நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது. டிரைவர் ஒரு தீக்குச்சியைக் கிழித்து அட்டை மேல் வைத்தார், பட்டென்று கிழே விழுந்தது. மாட்டிலிருந்து ரத்தம் கொட்டியது.அதை குவளைச் செடியாலும் பூவாலும் துடைத்தான்.
நண்பர் விடை பெற்றார். நான் அவரது அறைக்கு வந்து `நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலை வாங்கிச் செல்கிறேனே என்று உடன் சென்றேன். அறையில் மறுபடி பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கடந்து விட்டது. இனிமேல் டவுண் பஸ்கள் இருக்காது. நானும் டிரைவரும் பேசிக் கொண்டே நடந்தோம்.இந்தக் கதையை நான் படிச்சிருக்கேன், ஐயா ஒரு முறை ஜீப்பில் வைத்துவிட்டுப் போகும் போது., என்றார். இதில் வருவது போல என் அண்ணனும் ஒரு மனநிலை சரியில்லாதவன்.எங்களோடு தான் இருக்கிறான். எங்கள் குழந்தை என்றால் அவனுக்கு உயிர். என் மனைவி அவன் அருகே மகன் போனால் தடுக்க முயற்சிப்பாள். பத்திரப் படுத்தி வைத்திருக்கிற பழைய உணவுப் பொருள் எதையாவது குழந்தைக்கு ஊட்டி விட்டு விடுவான்,என்று அங்கே போகாதே என்பாள். இதைக்கேட்டதும் அண்ணன் வெறி கூடி விடும். பாஷையே இல்லாமல் உளறிக் கத்துவான். அண்ணன் மனைவியும் எங்களுடன் தான் இருக்கிறாள்.அவள தன் கணவனை கிட்டத்தட்ட அடிக்கிற மாதிரிப் போனால்தான் அவன் பயந்து அமைதியாவான்.
இரவானால் அவன் மனைவி அழ ஆரம்பித்து விடுவாள்..நீங்க சின்ன வயசுக்காரராக இருக்கிறீர்கள், உங்களிடம் சொல்லக் கூடாது, நாங்கள் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்தே தூங்க மாட்டோம்.,தூங்கி வருஷக் கணக்காச்சு என்றார். ராத்திரி ஆனாலே எனக்கு வீட்டுக்கு சீக்கிரம் போகிற பதட்டம் வந்து விடும். ஆனா நம்ம உத்தியோகத்தில் இது முடிகிற காரியமா தம்பி. ஐயாகிட்ட இதையெல்லாம் சொல்லீராதீங்க என்று கேட்டுக் கொண்டார். இன்று வரை சொல்லவில்லை, இந்தக் கதையை.

6 comments:

குப்பன்.யாஹூ said...

அருமை எந்த குளக்கரை

நைனார் குளமா, டவுன் தச்சன்னல்லூர் போகும் இடம், ராயல் திரை அரங்கம் பின்புறம்.

kalapria said...

சரியாகச் சொல்லி விட்டீர்கள். தச்சநல்லூர் போகும் நைனார் குளம் கரை தான்

உயிரோடை said...

//பிரம்மாண்டமான அருவியும் அழகு. தாமரை இலை மேல், ஒட்டாமல், ஒவ்வொரு காற்றுக்கும் உருண்டு கொண்டிருக்கிற நீர் முத்தும் அழகு.//

அழ‌கு

kalapria said...

நன்றி. அதென்ன தீபாவளி மலர் அட்டைப் படம் மாதிரி ஒரு படம்....

ராகவன் said...

அன்பு கலாப்ரியா அவர்களுக்கு,

"அந்த ஒரு நொடிக்கு வர பல காத்திருத்தல்களை வாழ வேண்டியதுமிருக்கும்." எத்தனை வாஸ்தவமான வார்த்தைகள். அந்த நொடி எதற்காக என்பது தான் ஆளுக்காள் வித்யாசப்படுமே ஒழிய காத்திருத்தல்கள் எல்லார்க்கும் பொது.

டிரைவரின் கதை, ’நீலகண்டப்பறவையைத் தேடி’ நாவலை மிஞ்சி நிற்கிறது. ஒருவேளை இவரின் வாழ்க்கைதான் நீலகண்டப்பறவையோ?

அன்புடன்
ராகவன்

anujanya said...

எவ்வளவு அருமையாக, எளிமையாக எழுதுகிறீர்கள். ஆனால் உங்களுடன் கூடவே இருந்து பார்த்த உணர்வு வருகிறது. குறிப்பாக அந்தச் சிறுவன் மாட்டின் இரத்தத்தை குவளைப் பூ மற்றும் குவளைச் செடியால் துடைத்தது.

அனுஜன்யா