Tuesday, November 3, 2009

ஓடும் நதி-4


தபால்காரர் நந்த கோபால், காலைநேர விநியோகக் கடிதங்களை எடுத்துக் கொண்டு, எங்கள் தெருவுக்குள் வரும் போது அநேகமாய் உச்சி வெயிலாய் இருக்கும். வண்ணதாசன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்.அவரது அன்பகம் வீட்டுக்கு எப்படியும் ஒரு கடிதமாவது இருக்கும். அவருக்கு தவறாமல் பெங்களூரிலிருந்து அன்பழகன் தினமும் எழுதி விடுவார்.இல்லையென்றால் சோவியத் நாடு பதிப்பகத்திலிருந்து புத்தகம், அல்லது செய்திமடல் கட்டாயம் இருக்கும்.
எனக்கு ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களிருந்து எம்.ஜி.ஆர் மன்றக் கடிதங்கள் சில இருக்கும். கவிதைகள் பிரசுரமாக ஆரம்பித்த காலங்களில், ‘மாறா அன்புடன்’ பாலகுமாரனோ, சுப்ரமணிய ராஜுவோ, நா.விச்வநாதனோ தவறாமல் எழுதியிருப்பார்கள். மாலை நாலு மணி வாக்கில் இரண்டாவது விநியோகத்துக்கு ஒரு காத்திருத்தல், என அப்போது ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் போதும். எங்கள் வீடு தெருவின் மேற்குக் கடைசியில் இருந்தது. கிழக்கிலிருந்து நந்த கோபால் நெருங்க நெருங்க உள்ளம் கிடந்து அடித்துக் கொள்ளும். இவ்வளவுக்கும் அவர் எந்தக் காதல் கடிதங்களையும் கொண்டு வந்தது கிடையாது.இது தவிர விரைவு அஞ்சல் என்று ஒன்று உண்டு. அதிகமாக பத்துப் பைசா தபால்த் தலை ஒட்டி ‘எக்ஸ்ப்ரெஸ் டெலிவெரி’ என்று எழுதி விட்டால்ப் போதும்.ஒரு நாளின் பகலில் எப்போது வேண்டுமானாலும் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
என் நினைவுக்குட்பட்டு எனக்கு வந்த ஒரே ஒரு எக்ஸ்ப்ரெஸ் கடிதம் மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்தது, ”தினசரிகளில் நீ தவறுதலாக புள்ளியல்த் தேர்வில் தோல்வி என்று பிரசுரமானது தப்பு, நீ வெற்றி பெற்று விட்டாய், உனக்கு அடுத்த எண்ணுடையவரே தோல்வி”.அன்று திருநெல்வேலியில் தேரோட்டம்.தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டு வந்த உற்சாகத்தோடு இதுவும் சேர்ந்து கொண்டது.ஆனால் கொஞ்ச நேரத்தில், பாஸாகிப் ஃபெயிலான சீனிவாசகம் அவனுக்கு வந்த அதன் நகலோடு, பாவமாக என்னைத் தேடி வந்த போது, எல்லாரும் நீ ஃபெயிலாகவே ஆகியிருக்கலாம் என்றார்கள்.அவன் மிக மிக நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி யாகப் பணியாற்றி சமீபத்தில் இறந்து போனான்.

இப்போதென்றால், கைப்பேசியோ மின்னஞ்சலோ, முகப்(பு)புத்தகமோ, ட்விட்டரோ எப்போது வேண்டுமானாலும் நீளமாகவோ, குறுகலாகவோ அஞ்சல் வரலாம், கணினியைத் திறந்தால் போதும். கைப்பேசியைத் தான், நாம் படிக்கும் அறையோ, பாட்டாசலோ, சமையலறையோ, கக்கூஸோ பிரிவதேயில்லையே.
நாம் சில கடிதங்களை எதிர் பார்த்துக் காத்திருப்போம்., அலுவலகத்திலிருந்து வரும் போதே கடிதம் ஏதாவது வந்ததா என்று கேட்டபடியே வருவோம். ஆமா என்று நீட்டுவார்கள். ரீடர்ஸ் டைஜெஸ்டிலிருந்து குப்பையாக ஏதாவது புத்தக விளம்பரம் வந்திருக்கும்.’ச்சை’ என்றிருக்கும். ஆமா உங்களுக்கு தினம் ஏதாவது காசோலையா வரும் என்று கேலி செய்வாள் மனைவி. 28 வருடத்திற்கு முன், ஒரு நாள், கவிஞர் மீரா என்னுடைய முதல்க் கவிதைத் தொகுதிக்கு அது விற்ற கணக்கும், ராயல்ட்டியாக 165/- ரூபாய்க்கு ஒரு வரைவோலையும் அனுப்பியிருந்தார். நான் பெற்ற முதலும் கடைசியுமான ராயல்டி அதுதான். மகிழ்ச்சியாக இருந்தது.
சுஜாதாவுக்கு என் ‘’உலகெல்லாம் சூரியன்’’ என்ற தொகுப்பிற்கு முன்னுரை எழுத முடியுமா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தேன், அதிலுள்ள தயக்கத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ, ‘’என்ன கலாப்ரியா, கரும்பு தின்ன ராயல்ட்டியா’’ என்று ஒரு வரி கார்டில் எழுதிப் போட்டுவிட்டு, மூன்றே நாளில் அற்புதமான முன்னுரை ஒன்றை கணினியில் அச்சாக்கி அனுப்பியிருந்தார். தமிழில் கணினியில் எழுதுவதை அவர் துவக்கி வைத்திருந்த நேரம அது.
என் மனைவி சரஸ்வதி, குழந்தை பாரதியைப் பிரசவித்திருந்த சமயம். ஒரு நண்பர், ஒரு கார்டு எழுதியிருந்தார்.”கலாப்ரியா, உங்கள் பெயர், உங்கள் துணைவி பெயர், உங்கள் புதிய மகவின் பெயர் மூன்றிலும் கலைமகள் இருக்கிறாள், மூவருக்கும் லட்சுமி கடாட்சம் பொங்கட்டும்” என்று. அவர் ரசிகமணி டி.கே.சியின் பெயரர், திரு.தீப.நடராஜன்.
கதாசிரியர் வண்ணதாசனுக்கு நீண்ட காத்திருப்புக்குப் பின் நல்ல வேலை கிடைத்தது. அதையொட்டி அவரின் மூத்த சகோதரர் கணபதி (எங்களுக்கெல்லாம் அவர் தான் குரு) ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்போது நா.பார்த்தசாரதி அவரது தீபம் இதழில், ‘தேவதைகளும் சொற்களும்’ என்று ஒரு பிரபலமான சிறு கதை எழுதியிருந்தார்.கணபதி அண்ணனின் இன்லேண்ட் கடிதத்தில் நான்கே வரி எழுதியிருந்தது.
‘’தேவதைகளும் சொற்களும் எப்போதாவதுதான் கிடைக்கிறார்கள். சமயத்தில் தேவதைகள் கூட தென் பட்டு விடுகிறார்கள்.....ஆனால் வார்த்தைகள்.... அவைதான் கிடைப்பதில்லை..வாழ்த்துக்கள் கல்யாணி...,” என்று
(வலைப் பதிவுகளில், நீலப்பற்களில், ட்விட்டரில் சணடையிட்டுக் கொள்கிறவர்கள் இதை வாசிக்கக் கடவார்களாக)

6 comments:

குப்பன்.யாஹூ said...

அற்புதமான பதிவு, அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

குப்பன்.யாஹூ said...

அரிய தகவல்கள்

kalapria said...

அரியவற்றை அறியவும் பகிரவும் தானே எழுதுகிறோம்...தட்டச்சுகிறோம்
உங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி

இனியாள் said...

Neengal solli irupathu nijam thaan kalapria, intha kaalathil pala prabalamana ilayikka pathirikkaigalai en pondra kaththukutti vaasargal padikamal povatharku kaaraname athil niraiya sandaigal thaan irukindrana, avai purivathum illai. Kadithangal patri neengal eluthi irupathu nalla unarvai tharuhirathu naan kooda enakku apdi oru kaditham varum endru ethirparthu kathirukiren.

Unknown said...

நல்ல பதிவு ஐயா.

அஞ்சல் அட்டை என்ற என் கவிதை ஒன்றை
உங்கள் பார்வைக்கு இங்கு வைக்கிறேன்.

அஞ்சல் அட்டை
* செல்வராஜ் ஜெகதீசன்

நாளேடு தொடர்கதைக்கு
அனுப்பிய ஒன்று.

நேயர் விருப்பத்திற்கு
(வானொலியில் பெயர்!)
அனுப்பிய அத்தனை
ஆசைகள்.

நேர்முகத்தேர்வுத் தகவல்கள்
நிறையவே கொண்டு வந்தவை.

திரைப்படக் கலைஞர்களிடம்
புகைப்படம் கேட்டு
எழுதியவை.

படித்ததும் கிழிக்கப்பட்ட
உத்திரகிரியைப் பத்திரிக்கைகள்.

இப்படி
எதையெதையோ
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது
அலுவலகக் கடித அலமாரியில்
அமைதியாய் வீற்றிருந்த - அந்த
மஞ்சள் நிற அஞ்சல் அட்டை.

0

kalapria said...

அன்புள்ள செல்வராஜ் ஜெகதீசன்,
உங்கள் கவிதை...நன்றாக வந்திருக்கிறது...அனுபவங்களும் ரசனைகளும் தான் நம்மை ஒன்று சேர்க்கின்றன...நன்றி