Wednesday, September 23, 2009
எமது அடுத்த தயாரிப்பு.....
மூக்கம்மாள், பெயருக்கேத்த மாதிரி, அழகான மூக்குத்தி அணிந்திருப்பாள். வீட்டில் பெண்கள் அது நல்ல விலையுள்ள மூக்குத்தியாகத் தான் இருக்கும் என்று பேசிக் கொள்ளுவார்கள்.வித விதமான சேலைகள் கட்டி வருவாள். அவளுக்கென்ன, வெளுக்கப் போடுகிற யார் சேலையையாவது உடுத்திக் கொள்ளவேண்டியதுதானெ என்றும் பேசிக் கொள்ளுவார்கள். யாரு வீட்டு உருப்படி, ஜவுளிக் கடை சங்கர பாண்டிய முதலியார் வீட்டு அழுக்கா, என்று கேட்பார்கள். சிரித்துக்கொள்ளுவாள். முன் கொசுவம் வைத்துச் சேலை கட்டி இருப்பாள். சட்டை அணியமட்டாள். ஆனால் பச்சை குத்திய இடது தோளை மட்டுமே பார்க்க முடியும். வேறு எதுவும் தெரியாது.
ஆறு மாததுக்கு அதாவது, ஒரு பூவுக்கு ஒரு தடவை அரைக் கோட்டை நெல் கூலி வாங்க மூக்கன், அவள் கணவன் வருவான்.அவ்வப்போது அழுக்கு எடுக்கவும் வருவான்.இதுக்கு மட்டும் வா, மூனு மாசத் துணி அந்தா அங்க மாடாக்குழியக் காத்துட்டு கிடக்கு,வண்ணாத்திய வரச் சொல்லு என்று பெண்களில் யாராவது சொல்லுவார்கள். மாத விடாய்த் துணிகளை, ஒரு பொட்டலமாக சேலையில் சுற்றி, கக்கூஸில் ஒரு மாடக்குழியில் வைத்திருக்கும்.அதை பெரும்பாலும் மூக்கம்மாவின் இரண்டாவது மகள் எடுத்துப் போவாள். மூத்த மகள் ஒருத்தி எடுக்கும் போது அதிலிருந்த தேள் கொட்டி விட்டது. அந்த வாடைக்கு சர்வ சாதரணமாகப் பூரான் இருக்கும்.தேள் அபூர்வமாக இருந்தது.பாவம் துடித்துப் போய் விட்டாள்.
அப்பா, போத்தி ஓட்டலில் சர்வராக வேலை பார்க்கும் சுப்ரமணியனைக் கூட்டி வரச் சொன்னார். அவன் நன்றாக ஹோமியோபதி வைத்தியம் பார்ப்பவன். ஆளும், கட்டு மஸ்தான உடலுடன் அழகாக இருப்பான்.அங்கே சர்வர்கள் யாரும் சட்டை அணியக் கூடாது. வேஷ்டியை மறைத்து ஒரு துண்டு, பூனூல், இதுதான் யூனிஃபார்ம். சுப்ரமணியன் எப்போதும் கட் அண்ட் ரைட்டாக இருப்பான். அன்றைய ஸ்பெஷலை ஒப்பிப்பான் எது வேண்டுமோ அதை வேகமாகக் கொண்டு வருவான். வளவள பேச்செல்லாம் வைத்துக் கொள்ளமாட்டான்.அவன் தேள்க் கடிக்கு ஓமியோபதி மருந்து தருவான் அவன் வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு மாத்திரைகள் கொடுத்தான். அடித்துப் போட்டிருந்த தேளைப் பார்த்து அய்யய்யோ நல்ல ராஜாத் தேளால்லாக் கொட்டியிருக்கு, என்று அரைமணி நேரம் இருந்து வெவ்வேறு மருந்தைக் கொடுத்தான்.அப்பாவிடம், பண்ணையாரே போத்தியிடம் சொல்லீருங்க நேரமானதுக்கு திட்டுவார், அப்புறம் யாருக்கு வைத்தியம்ன்னு சொல்லவேண்டாம், என்று கேட்டுக் கொண்டான்.அவன் சீக்கிரமே மிலிட்டரியில் வேலை கிடைத்துப் போய் விட்டான். இருந்திருந்தால் கடை முதலாளிக்கு உறவாகியிருப்பான்.
அம்மாசி பவுர்ணமி என்றால் சாப்பாடு வாங்கவும் மூக்கம்மாளின் இரண்டாவது மகள்தான் வருவாள்.அவள் அதிகம் பேசமாட்டாள்.மூத்தவள் நல்ல சிகப்பு. இரண்டாமவள் மூக்கம்மாவை உரித்து வைத்த மாதிரி இருப்பாள்.மூக்குத்தியணியாமலேயே மூக்குத்திக்குப் போட்ட துவாரம் பெரிதாக, மூக்குத்தி மாதிரியே இருக்கும்.மூக்கம்மாவிடம் இது பற்றி வீட்டுப் பெண்கள் கேலியாகச் சொல்லும் போது ஆமா ஆச்சி, பெரியவளுக்கு கல்யாணத்துக்கே எல்லாம் சரியாப் போச்சு, இவளுக்கு இன்னமதான் சேக்கணும் இல்லென்னா, ஏம் மூக்குத்திய போட்டு அனுப்ப வேண்டியதுதான். என்பாள் சலிப்புடன்.மூக்கம்மா வெள்ளை கொண்டுவந்தால் எப்படியும் ரெண்டு துணி மாறி இருக்கும். குறி உங்க வீட்டு இது மாதிரித் தானே இருக்கு என்பாள். ஒவ்வொரு வீட்டுக்கும் பிரத்யேக குறி இருக்கும்.வண்ணான் மை என்று அப்போது கடையில் கிடைக்கும். ஒரு அணா இருக்கும். பழைய ஊசி மருந்து பாட்டிலில் நிரப்பி வண்ணான் ஒருவன் பொதி சுமக்கிற படம், ஒரு பாவமான சிகப்புக் கலரில் அச்சடித்திருக்கும்.அதை வைத்து துணிகளில் குறி இடுவார்கள். வெளுத்ததும் நல்ல ரோஸ் கலரில் மாறிவிடும். அழியவே அழியாது.ஒரு சின்னக் கோடு. அதன் மேல் ஒரு புள்ளி, அல்லது இரண்டு மூன்று புள்ளிகள்.ஒரு பெருக்கல் குறி அதில் ஒரு புள்ளி, இரண்டு புள்ளிகள். Iஇப்படி ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாகப் பல குறியீடுகள். கடையில் கிடைக்கும் மை இல்லையென்றால் கடுக்காயை ஊற வைத்து, அதை நைத்து அதன் சாற்றைத் தொட்டு குறி போடுவார்கள். அது கறுப்பாக இருக்கும்.
பெரிய அண்ணன் மகன் பெரிய கந்தனுக்குச் சாளவாய்.எப்போதும் எச்சில் கடை வாயிலிருந்து லேசாக ஒழுகிக் கொண்டிருக்கும். சாளவாய் வடிக்கிற குழந்தைகள் பிற்காலத்தில் நன்றாகப் பேசும் என்பார்கள்.அவன் அப்படி ஒன்றும் பேசவும் இல்லை, படிக்கவும் இல்லை.காச நோய் வந்து பாவம் சின்ன வயதிலேயே செத்துப் போனான்.அவனுக்கு வண்ணாத்தி கையால் எட்டு வீட்டுச் சோறு ஊட்டி அவள் முந்தானையால் துடைத்தால் சாளவாய் ஒழுகுவது நின்று விடும் என்று யாரோ சொல்லக் கேட்டு பெரிய மதினி, ஒரு அம்மாவாசைக்கு சோறு வாங்க வந்த மூக்கம்மாவிடம் சோறூட்டச் சொன்னாள்.மூக்கம்மா, அப்ப உங்க வீட்டுச் சோற்றை அப்புறமாப் போடுங்க, அதில உங்க வீட்டுச் சோறு சேரக் கூடாது என்றபடி அவள் பாத்திரத்தில் கிடந்த பல வீட்டு உணவுகளை ஒரு கும்பாவைக் கேட்டு வாங்கி அதில் போட்டு பெரிய பெரிய கவளமாக ஊட்டினாள். பையனுக்கு ருசியாய் இருந்தது போல, அவுக் அவுக்கென்று தின்றான்.மூக்கம்மாவின் கடைசி மகள், பத்து வயது போல இருக்கும், வட்ட முகம், பாவாடை சட்டை போட்டிருந்தது.அவள் அம்மாவினருகே நின்று கந்தன் சாப்பிடுவதைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்தது.வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கும் போது அதன் முன்கையின் செம்பட்டை முடி மினுங்கியது.
மூக்கம்மா அதைச் சத்தம் போட்டாள்.சாப்பிடற புள்ளையக் கண் வைக்காத மூதேவி என்று.இன்னும் கொஞ்சம் சாப்பிடுதியா ராசா என்று கேட்டதற்கு கந்தன் சரியென்று தலையாட்டினான். அம்மா, போதும் போதும், ஒரு சாஸ்திரத்துக்கு சாப்பிடனும் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு மூக்கம்மா, ஓஞ்சேலைய வச்சு வாயயைத் தொடச்சு விடு, என்றாள். மூக்கம்மா அழகாக நறுவிசாகத் தொடைத்து விட்டாள்.ஆச்சி இந்த மாசம் எண்ணையே தரலையே, இருந்தா குடுங்க இன்னா இந்தா மூதேவி புள்ளைய பாருங்க, தலை எப்படி காடாச் செம்பட்டையா கெடக்கு, துறைக்கி வர்ற புள்ளைக்கி கூட இப்படி செம்பட்டை மயிரா இருக்காது என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டாள்.ஆற்றுத் துறையில் வெயிலில் நின்று துணி துவைக்கிறதைச் சொல்கிறாள் என்று புரிய நேரமாயிற்று.ஐயா கறில்லாம் சாப்பிடுவாக போலெ இருக்கு என்றாள், மூக்கம்மாள் திடீரென்று என்னைப் பார்த்து.
கொஞ்ச நாளைக்கு முன் புதிதாகத் திறந்திருந்த, ராசையா நாடாரின் ஆபிரகாம் ஓட்டலில் ரொட்டி சப்பிடப் போயிருந்தேன். அதற்கு முன்னலெல்லாம் வண்டிப் பேட்டை சாய்பு கடைதான்.அதுவும் பழனியும் நானும் போய் இரண்டு ரொட்டியை ஆளுக்கு ஒன்றாகத் தின்று விட்டு வருவோம். சால்னாவில் கறியெல்லாம் கிடையாது. அதைத் தின்று விட்டு வந்தே ரகசியமாய் புஜத்தை மடித்து பலம் கூடியிருக்கா என்று பார்த்துக் கொள்ளுவோம்.ஆபிரகாம் ஓட்டல் என்று கழுவேற்றி முடுக்குத் தெருவில் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று இஞ்சிக் குமார் அண்ணாச்சி சொன்னார். என்னப்பா வண்டிப்பேட்டை, ரொட்டியா அது, வரட்டு வரட்டுன்னு. இங்க போய் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கப்பா என்றார். அதிலிருந்து அங்கே போவோம்.இரண்டு ரொட்டியும் ஆட்டுக்கறி சால்னாவும் 90 பைசா தான்.சுக்கா வருவல் தனியாக ஐம்பது பைசா.அதெல்லாம் சாப்பிடமாட்டோம். அன்று அங்கே சாப்பிடும் போது மூக்கனின் மகன் வந்து என்னருகே உட்கார்ந்து ஆர்டர் பண்ணினான். இலையெல்லாம் போட்டு பரிமாறி சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் என்னைக் கவனித்தான். ஐயா வாங்க நீங்களா, என்ன வெறும் புரோட்டா தின்னுகிட்டு இருக்கீங்க, ஏய் இங்க ஒரு வருவல் குடு என்றான்.வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை.வருவல் பிரமாதமாக இருந்தது.அவனே பில்லை கொடுத்து விட்டான். அசடு வழிய வெளியே வந்தேன்.அவன் தனியே லாண்டரி வைத்திருக்கிறான்.அவன் தான்- சின்ன மூக்கன் அவன் பெயர்- சொல்லியிருக்க வேண்டும் மூக்கம்மாவிடம்.நான் வெளியே ஓடி வந்து விட்டேன்.எங்கே, சின்னமூக்கன் காசு கொடுத்ததையெல்லாம் சொல்லி விடுவாளோ என்று பயம்.
கொஞச காலத்தில் வயலெல்லாம் போர்ய் விட்டது, குந்தித் தின்னா குன்றும் காலியாயிரும் என்கிற கதைதான்.நெல்லுக்கு வெளுக்கும் வண்ணான் வரவே இல்லை.துணிகளில் அவன் போடுகிற குறி மறந்தே விட்டது. ‘’மதினிக்கு வந்த சீக்கு, பல ஔஷதங்கள் கொடுத்தும் குணத்துக்கு வராமல் இறந்து போனாள்’’.துஷ்டி வீட்டில் மாத்துக் கட்டவும், பாடையை எடுத்துப் போகையில் கொஞ்ச தூரத்துக்கு மாத்து (சேலை)விரிக்கவும் வண்ணான் வரணும்.ஏற்கெனவே சாவுச் செலவுக்கே சங்காச்சியிடம் தான் அப்பா பணம் வாங்கி வரச் சொல்லியிருந்தார்.இப்போது என்னை தனியாக அழைத்து மூக்கன் வீடு தெரியும்லா அங்க போய் தாக்கல் சொல்லீட்டு வந்திருதியா, சீக்கிரம் போ அவன் துறைக்குப் போயிராமெ என்றார்.
மூக்கன் வீடு செக்கடித் தெரு என்கிற புகழேந்தித் தெருவில் இருந்தது.அதன் முகப்பில் நாலைந்து வண்ணார்கள் குடும்பம் இருந்தது. தெருவின் மத்தியில், காலிமனையில் ஒரு பழைய செக்கு உண்டு.அது அடியில் சாய்ந்து விழப்போவது போல் நிற்கும். அதன் உலக்கை (ஆளு நல்லா செக்கொலக்கை மாதிரி இருக்கான் என்று கனமான ஆட்களைப் பார்த்துச் சொல்லுவார்கள்) அந்தக் காலி மனையினை ஒட்டி தெருவில் கிடக்கும். அதன் மேல் எப்போதும் ஒரு ஆள் சோகமாய் அமர்ந்திருப்பார், பல் குத்திய படி. பம்மென்ற பரட்டைத் தலை, பூனூல். அவர் தான் எண்ணெய்ச் செட்டியாரின் கடைசி வாரிசு என்றார்கள்.
அதற்கெதிரேதான் கோயில்ப்பிச்சை சார் வீடு. அங்கே பதினோராம் வகுப்புக்கு, கணக்கு டியூஷன் படித்தேன். கடைசி மூன்று மாதம். நன்றாக கோச்சிங் தருவார்.பெயிலாக வேண்டியவன் கணக்கில் 76 மார்க் வாங்கி இருந்தேன், எஸ் எஸ் எல் சியில். அவருக்கு , தோள் மார்பு கை காலெல்லாம் ஒரே முடியாயிருக்கும். பட்டப்பெயரே மயிர் மாணிக்கம்.அவர் பனியனைக் கழற்றினால் ஒரு கூடை முடி அள்ளலாம் என்பாள் அவளது இரண்டாவது இளம் மனைவி.ஜங்ஷனிலிருந்து வருகிற போஸ்கோ ராஜிடம் தினமும் கூடை பின்னுகிற வயர்,முகப் பவுடர் என்று எதாவது வாங்கி வரச் சொல்லுவாள்.அவனுக்கு டியூஷன் ஃபீஸ் கிடையாது. டீச்சர் உத்தரவு.அவர் வீட்டுக்கு டியூஷன் படிக்கப் போகும் போது சொல்லுவார்கள்,எண்ணெய்ச் செட்டியார்களின் கடைசி வாரிசு அந்த சுபாவமான ஆள் என்று.
நான் மூக்கன் வீட்டுக்கு போன போது ஆள் அரவமே தென்படவில்லை. அடுப்படிப் புகை மட்டும் வீடு முழுக்கப் பரவி இருந்தது. தார்சாலில் நின்று மூக்கம்மா, என்று இரண்டு சத்தம் கொடுத்ததும், அது யாரு என்று அவளின் சின்ன மகள் வந்தாள். பாவாடை தாவணி, நன்றாக அலங்கரித்த முகம். பளிச்சென்று இருந்தாள்.கையில் ஒரு பூனைக் குட்டி. என்னைப் பார்த்து அது ம்யாவ் என்றது. அவளுக்கு என்னை அடையாளம் தெரிந்து விட்டது. ஐயா உக்காருங்க, யாருமே இல்லையே, துறையில நிப்பாகளே இப்ப, ஒங்க வீட்ல துணியே எடுக்கலையே நாங்க, என்று அடுக்கினாள். முகம் பூராவும் சிரிப்பு.நான் விஷயத்தைச் சொன்னேன்.அப்படியா சமாச்சாரம், என்று சொன்னவள் பூனைக்குட்டியை அங்கு ஏகத்துக்கும் கிடந்த அழுக்கு மூட்டைகள் மேல் செல்லமாய் எறிந்து விட்டு, இருங்க என்று வெளியே போனாள்.பூனை ஒரு சின்ன அலறலுடன் விழுந்து புரண்டது.எழுந்து வந்து என் காலடியில் உரசிக் கொண்டு நின்றது.அடுப்படியிலிருந்து இன்னொரு பெரிய பூனை ம்யாவ் என்றது. எனக்கு பயமாய் இருந்தது.
கையில் ஒரு காபித் தூக்குடன் வந்தாள்.அண்ணந்தான் கடையில நின்னுச்சு,சொல்லிருக்கேன் இந்தா வந்துரும்.காபி குடுக்கச் சொல்லிச்சு. டீக்கடையில வங்கினது தான். இந்தாங்க என்று தூக்குடன் நீட்டினாள்.ஐயோ, எங்கம்மா சோறு ஊட்டுனாகளே அதோட அம்மாவா, ஏன் என்ன செஞ்சுது,எங்க அம்மா மாதிரியே மூக்குத்தி போட்டிருப்பாகளெ என்று வாய் ஓயாமல் பேசியது.அடிக்கடி மாராப்பை ஒரு விரலால் தளர்த்தி மறுபடி இறுக்கிக் கொண்டாள், ஒரு மேனரிஸம் மாதிரி. தூக்குச் சட்டியோடு காபி குடிக்க திண்டாட்டமாய் இருந்தது.அதற்குள் சின்ன மூக்கன் வந்துவிட்டான்.ஐயா வாங்க போவோம் என்றான்.நான் பாதிக் காபியை கீழே வைத்து விட்டு கிளம்பினேன். பூனை அதைப் பார்த்து ஓடி வந்தது.அவள் அதை காலால் தள்ளி விட்டாள் இதைப் பூராவும் குடிக்கலையே என்றாள்.இல்லை தேடுவாங்க என்று கிளம்பினேன்.சற்றுத் தள்ளி வந்து திரும்பிப் பார்த்தேன், அந்தப்பெண், அந்த சின்னத் தார்சாலிலேயே நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் சுவரில், இவ்வளவு நேரமும் மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருந்த தந்திப் பேப்பர் விளம்பரம்.நானிலம் போற்றும் நான்காவது வாரம், மோகன் புரொடக்ஷன்ஸ் ஆசை முகம். மூன்று எம்ஜியார்,நின்று கொண்டிருந்தார்கள்.முழுப்பக்க விளம்பரத்தில் பாதியில் எமது அடுத்த தயாரிப்பு,எம்ஜி.ஆர், சரோஜா தேவி நடிக்கும் இன்ப நிலா. சீநி சோமுவின் அழகான டிசைன், படம் ஏதுமில்லாமல் வெறும் லெட்டரிங் மட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
WOW EXCELLENT POST, KEEP GOING
Post a Comment