Sunday, April 5, 2009

ஏமாந்து போவே இன்னும் கேளு....



1964-ல் தனுஷ்கோடி புயல் வீசியதன் செய்திகள் பத்திரிக்கைகளை நிறைத்துக் கொண்டிருந்த நேரம். எம்.ஜி ஆர் தனுஷ் கோடி போய்ப் பார்த்து விட்டு, ஒரு லட்சம் நிதி அளித்துவிட்டு, திரும்புகிற வழியில் திருநெல்வேலிக்கும் வந்தார்.அப்போதுதான் திருநெல்வேலி நகராட்சியை தி.மு.க கைப்பற்றியிருந்தது.சென்னை, வேலூர் நகராட்சிக்குப் பிறகு நெல்லைதான் தி மு க வசம் வந்த நினைவு.மஜீத் என்பவர்தான் சேர்மன்.திருநெல்வேலியில் தி.மு.க வை வளர்த்ததில் எங்கள் தெருவுக்கு நிறைய பங்கு உண்டு.மஜீத் எங்கள் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி கூலக்கடை தெருவில் உள்ளவர்.

1957-58 களில்அவரது தங்கை காதர் பாத்திமா எனது நான்காம் வகுப்புத் தோழி. பள்ளியில் தினமும் காலையில் ப்ரேயர் உண்டு. அது கிறிஸ்துவப் பள்ளி என்றாலும் தினமும் கீதை.(வினோபாஜி எழுதிய கீதைப் பேருரை -தமிழ் மொழி பெயர்ப்பு, மலிவுப் பதிப்பு விலை ஒரு ரூபாய்) பைபிள், குரான், ஆகியவற்றிலிருந்து சார் சொல்லுகிற பகுதியை வாசிக்க வேண்டும்.பாத்திமா தன், சின்ன குரான் புத்தகத்தைக் கொண்டு வந்து வாசிப்பாள், அதை தினமும் வீட்டுக்கே கொண்டு போய் விடுவாள்.கீதையை திருமலைக் கொழுந்து வாசிப்பான். அவன் ஐந்தாம் வகுப்பு.இப்பொழுது மதுரையில் அவன் பெரிய டாக்டர்.ஐந்தாம் வகுப்புக்கு நான் வேறு பள்ளிக் கூடத்திற்குப் போய் விட்டேன்.அநேகமாக அப்போதுதான் ஏழரைச் சனி முதல் சுற்று ஆரம்பித்திருக்க வேண்டும்.
புதிய பள்ளிக் கூடத்தில்தான் எனது சர்வ சுதந்திர வாழ்க்கை ஆரம்பித்திருக்க வேண்டும்.என் வீட்டில் என் அண்ணன்மார்கள் யாரும் எஸ்ஸெல்ஸியை தாண்டியதில்லை.அதனால் என் படிப்பும் தரம் குறைய ஆரம்பித்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை.திருட்டு சினிமா, கெட்ட வார்த்தைகள் எல்லாம் அப்போதுதான் பழக்கமாகத் தொடங்கியது.ஐந்தாம் வகுப்புக்கு, என்னைப் போலவே, செய்யது யாகூப் புதிதாய்ச் சேர்ந்திருந்தான்.அவன், நான் அப்புறம் தவக்களை ராமகிருஷ்ணன், நசீர் முஹம்மது ஜாஃபர், எல்லோரும் ஒரு செட். யாகூபின் அப்பா போஸ்டாபீஸில் வேலை பார்த்தார். வேறு ஊரிலிருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்தவர்.அவர்கள் வீடு இருந்த தெரு, இரவு ராணிகளுக்குப் பேர் போன தெரு. விவரம் தெரியாமல் குடிவந்திருப்பார்களென்று பால் செல்லையா சார் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்தான் கிளாஸ் வாத்தியார்..தெருவின் தெற்குப் பகுதியில் நல்ல குடும்பங்கள் இருந்தன..அங்கே ஒரு பெருங்காய கம்பெனி கூட இருந்தது.வாசனை மூக்கைத் துளைக்கும்.அவன் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு சாவடி போல் பெரிய வீடு உண்டு அங்கேதான் ஒருவர் உட்கார்ந்து எந்நேரமும் கரும சிரத்தையாய் தகரத்தில் அச்சு எழுத்து வெட்டிக் கொண்டிருப்பார்``.கூட்டாம்புளி ஜோஸ்யர் மூக்குப் பொடி’’``அ.ப.அ.ப. மங்கள சுந்தரி வாசனைப் புகையிலை’’என்று விளம்பரங்களுக்கான ஸ்டென்சில் வெட்டிகொண்டிருப்பார். அவன் வீட்டின் முகப்பிலும், பக்கத்து வீட்டிலும்.சிகப்புக் காவியால் ஒரு அகல் விளக்குப் படம் போட்டு `குடும்ப வீடு’ என்று பெரிதாக எழுதியிருக்கும். அது ஏன் என்று பாபு சங்கர் தான் சொன்னான்.சரியான சண்டியன் அவன், எட்டாம் கிளாஸ் அண்ணன்களையே சண்டையில் பீட் அடித்து விடுவான்.அடுக்கு மொழியில் கெட்ட வார்த்தைகளைப் பேசுவான்.இவ்வளவிற்கும் அவன் அப்பா ஒரு அரசு உத்தியோகஸ்தர்.என்னிடம் பிரியமாய் இருப்பான். வீட்டுக்கணக்குகளை என்னையோ ராமகிருஷ்ணனையோ பார்த்துத்தான் எழுதுவான்.கெட்டிக்காரன் தான் ஆனால் விளையாட்டுப் புத்தி.நான் அவன் கட்சி. அழகப்பன்தான் கிளாஸ் லீடர்.அவன் உயரமாய் இருப்பான்.சிவாஜி ரசிகன்.அவனும் குண்டு ஜனார்த்தனனும் சிவாஜி கட்சி.ஜனா அவன் சித்தப்பா வீட்டில் இருந்தான்.நல்ல பயில்வான் போல இருப்பான்.இடது கன்னத்தில் ஒரு தழும்பு போல இருக்கும். பிறவியிலேயே உள்ளது என்பான்.சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்து விடுவான். கிரவுண்டில் யாருடனாவது விளையாடுவான். ஒருத்தரும் இல்லையென்றால் தனியாக ஓடிக் கொண்டிருப்பான்.மங்களூர் பக்கத்துப் போத்தி,அவன் சித்தப்பா சந்திப் பிள்ளையார் கோயிலை ஒட்டி சுக்கு வெண்ணீர் கடை போட்டிருப்பார்.சாயங்காலம் தான் திறப்பார். எட்டு, ஒன்பது மணி வரைக்கும் இருக்கும்.சுக்கு வெண்ணீர் தவிர கொஞ்சம் முறுக்கு, தட்டை என்று போட்டு விற்பார். ஸ்கூல் விட்டு வந்ததும் ஜனார்த்தனனுக்கு அந்தக் கடையில் எடுபிடி வேலைகள் பார்க்க வேண்டும்.கடை அடைக்கும் வரை டவரா கழுவ வேண்டும்.
யாகூப் வீட்டில் வாசல்க் கதவை அடைத்தே வைத்திருக்கும்.மத்தியானம் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வரும் போது, யாகூப் வீட்டிற்குப் போய் அவனைக் கூப்பிட்டுக் கொண்டு வருவேன்.அவன் வீட்டில் தந்திப் பேப்பர் வாங்குவார்கள்.அப்போதுதான் தந்தியில் `குமரிக் குகை’ சித்திரத் தொடர் முடிந்து கன்னித்தீவு ஆரம்பித்திருந்தது.அப்போதுதான் முதன் முதலாக மாலைப் பத்திரிக்கையான மாலை முரசு நெல்லையிலிருந்து வெளி வரத் தொடங்கி இருந்தது.நான் கன்னித்தீவு படிக்க தந்தியைத் தேடுவேன்.அவன் அப்பா அந்தப் பக்கத்தை மட்டும் மடித்துத் தருவார்.அவரும் மதியச் சாப்பாட்டை முடித்து விட்டு ஒருபெரிய ஈசிச் சேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.பட்டாணி சாய்பு. பட்டாணி மொழியில் யாகூபிடம், சீக்கிரம் போ ஸ்கூலுக்கு என்று சொல்வது மாதிரி இருக்கும்.ஏதோ சத்தம் போடுவது போலவே இருக்கும். ஆனால் அவன் எங்க அப்பா சத்தமே போடாது. உம்மாதான் மோசம் என்பான்.சாப்பாட்டை ஸ்கூலுக்கே கொண்டுபோனால் என்ன, ஏன் வீணா வெயிலில் அலைகிறாயென்று சத்தம் போடுகிறார் என்றான் ஒருநாள். எனக்கு அவன் அம்மாவைப் பார்க்கையில் அப்படித் தோன்றவே தோன்றாது.யாகூப் பொத்துப் பொத்தென்று குண்டாக இருப்பான்.அவன் அப்பா திடகாத்திரமாக இருப்பார்.மலைகள்ளனில் வருகிற ஸ்ரீராம் போலிருப்பார்.முகத்தில் அம்மைத் தழும்பாய் இருக்கும்.
மாலை முரசில், `இரவு ராணி கொலை வழக்கில் துப்புத்துலக்க போலீஸ் நாய் வருகிறது’ என்று செய்தி போட்டிருந்தார்கள்.கொலை நடந்தது யாகூப் வீட்டுத் தெருவில்தான்.அப்போது நெல்லையில் போலீஸ்துறையில் துப்பறியும் நாய்கள், யுவராஜும், சுசியும் சேர்க்கப் பட்டு பிரபலம் ஆகியிருந்தது..அவை வந்த வருடம், பொருட்காட்சியில் துப்பறியும் நாய் கண் காட்சி நடந்தது..பொருட்காட்சியின் மையப் பகுதியில் தகரத்தால் வேலி மாதிரி நீள் சதுரமாக ஒரு திறந்தவெளி அரங்கம். கூரையெல்லாம் கிடையாது.ஒன்பது மணிக்கு காட்சி ஆரம்பம்.யுவராஜ், சாம்பல் நிறம்.சுசி செவலை நிறம்.இரண்டும் அல்சேஷன் வகை.ஒனபது மணிக்குள் வருபவர்கள், அந்த அரங்குக்குள் அமர்ந்து கொள்ளலாம்.பார்வையாளர் யாரிடமிருந்தாவது ஒரு பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கை வாங்கி அதை நாயிடம் மோப்பம் பிடிக்கச் சொல்லுவார்கள்.அப்புறம் நாயை தூர அழைத்துச் சென்றுவிடுவார்கள். பர்ஸை ஒரு ஆளிடம் கொடுத்து அவனை கூட்டத்தில் ஒருவராக அமரச் செய்வார்கள். அதற்கு முன் அவன் பொருட்காட்சியின் முக்கியமான இடங்களுக்குப் போய் வருவான்.த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி ஸ்டால்,(அதில் ஒரு வட்ட நிலைக் கண்ணாடி முன்னால் பளீரென்ற தட்டில் ஒரு பீடி பண்டல் இருக்கும். அது அந்தரத்தில் கண்ணாடியைச் சுற்றி வரும். கண்ணாடியைத் தொட்டுமிருக்காது., கண்ணாடியில் அதன் பிம்பம் முழுவதும் தெரியும்படி சுற்றி வரும். இந்த அதிசயம் இன்றளவும் புதிராகத்தான் இருக்கிறது.)சுல்தானியா ஓட்டல்,ஓரியண்டல் லிட்டில் பாம் ஸ்டால், சைபால் களிம்பு ஸ்டால், என்று ஒரு சுற்று சுற்றி வந்து கூட்டத்தில் அமர்ந்து கொள்ளுவான்.அப்புறம் நாயை பயிற்சி போலீஸ் அழைத்து வருவார், அது அவன் சென்ற இடமெல்லாம் சென்று விட்டு கூட்டத்தில் நுழைந்து கரெக்டாக அவனைக் கவ்விப் பிடித்து விடும்.கூட்டம் ஆரவாரமாய்க் கைதட்டும்.

சுசி தான் இரவு ராணி கொலை வழக்கில் துப்புத் துலக்க வந்தது.சாயங்காலம்தான் நாய் வந்தது. நாங்கள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு கூடப் போகாமல் யாகூப் வீட்டு மாடிக்குப் போய் விட்டோம்.நாங்கள் போகும் போது அவன் அப்பா இல்லை.நானும் ராமகிருஷ்ணனும் மட்டும் போவதாக ஏற்பாடு.ஜனார்த்தனனும் சேர்ந்து கொண்டான்.நாங்கள் போகும் முன்பே அவன் அம்மா, இன்னும் சில பெண்கள், மொட்டை மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.நாங்களும் மாடிக்குப் போனதும் அவன் அம்மா என்னவோ சொன்னாள். ஜனாவை ஏன் அழைத்து வந்தாய் என்று கேட்ட மாதிரி இருந்தது.அதற்குள் தெருவில் பரபரப்பு உண்டாகி விட்டது. நாய் போலீஸ் சந்தேகப் பட்டவனையே கவ்விப் பிடித்தது.தெரு முழுக்க கூட்டமோ கூட்டம்.நான் கை பிடிச்சுவரின் அருகேநின்று பார்த்தேன். சரியாகத் தெரியவில்லை. சற்று எட்டிப் பார்க்க முயற்சித்தேன்.யாகூபின் அம்மா என்னை தன் முன் நிறுத்தி விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டாள்.மார்பும் கருமணிப் பாசியும் தலையில் அழுத்தியது.கீழே அவன் அப்பா வீட்டுக்கு எதிரே நின்று இங்கேயே பார்த்துக் கொண்டிருந்தார். கதவை அடைத்துவிட்டுத்தான் நாங்கள் மேலே போயிருந்தோம்.போலிஸெல்லாம் போய், கூட்டம் கலைந்ததும்தான் அவன் அம்மா, அப்பாவைப் பார்த்தாள்.அவசர அவசரமாக் கீழே இறங்கி கதவைத் திறந்தாள். திறந்ததுதான் தாமதம் ஒரு பலமான அறை, அவள் கன்னத்தில் விழுந்தது அவன் அப்பா என்னையே முறைத்துப் பார்த்தார்.ஜனா என்னை வெளியே வா என்று இழுத்துக் கொண்டு வந்தான்..
மறு நாளிலிருந்து யாகூப் என்னுடன் பேசவே இல்லை. தவக்களையுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்.நானும் கொஞ்ச நாளில் இதைக் கண்டு கொள்ளவே இல்லை.பாபு சங்கர் இரவு ராணி என்றால் என்ன என்று விளக்கினான். அப்போதுதான் எனக்கு எங்கள் வீட்டு மகாலட்சுமியில் வரும் `இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு...’ பாட்டுக்கு கொஞ்சம் அர்த்தம் புரிந்தது.எனக்கும் பத்து வயசு ஆகப் போகுதில்லா.
அன்று காலை நகராட்சியில் எம்.ஜி. ஆருக்கு வரவேற்பு.மாலையில் ரயில்வே பீடர் ரோட்டில் பொதுக்கூட்டம்.அன்றுதான் எங்க வீட்டுப் பிள்ளைக்கு ரிசர்வேஷன் டிக்கெட் கொடுக்கிறார்கள். அதையும் வங்கி விட்டு எம்.ஜி. ஆரைப் பார்க்க உட்கார்ந்திருந்தோம். என்னா சோமு, இந்தா சூடா சுக்குத் தண்ணி குடி என்று குரல் கேட்டது. ஜனா.கரி அடுப்பின் மேல் வைத்த பானையில் சுக்கு வெண்ணீர். ஒரு வாளியில் கிளாசை அலச தண்ணீர். வேண்டாம் என்றேன். துட்டு தர வேண்டாம்டே உங்க ஆளால நல்ல வியாபாரம் இன்னிக்கி. என்றான். சட்டென்று ஆமா யாகூப் வீட்டுக்குப் போனியா என்றான். யாகூபா ஐந்து வருஷமாயிற்றே அவனைப் பார்த்து என்றேன்.அது அவன் அப்பா இல்லடே பெரியப்பா, .அது கூட உண்மையோ என்னவோ, அவன் அப்பா செத்துப் போயிட்டாரு,என்றான்.அதற்குள் அவனை ஏய் சுக்கு வெண்ணீ என்று கூப்பிட்டார்கள்.இந்தா வாரேன் என்று கிளம்பினான்.கூட்டம் நெருக்கித் தள்ளியது. பின்னால், பின்னால் போய்க் கொண்டிருந்தோம்.

1 comment:

butterfly Surya said...

பள்ளி பருவ வாழ்க்கை என்றுமே அலாதியானது.

என்றும் பசுமை.

பதிவும் அருமை.

Visitors