ஒட்டி உலர்ந்த வயிறு.முகத்தில் ரெண்டு மூனு நாள்த் தாடி, முள் முள்ளாய்.தெருவில் சைக்கிள் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தேன், சைக்கிளை வாசலில் நிறுத்தி விட்டு பதினொன்னரை மணி வெயில் தந்த தாகம் வீட்டுக்கு விரட்ட தண்ணீர் குடிக்க வந்தவன்,நடையோடத்தில் அமர்ந்திருவரைப் பார்த்தேன். மூக்கு ராஜாஜி மூக்கு மாதிரி இருந்தது.கல்யாணி அண்ணன் வளவுக்கு எதிர் வீட்டில் இருந்த, காலேஜ் டெமான்ஸ்ட்ரேட்டர் வீட்டு ஜன்னல் கதவில் சாக்பீஸால் வரைந்து வைத்திருக்கும் கார்ட்டூன் கோடுகளில் இருக்கும் ராஜாஜியின் மூக்கு.அவரைச் சுற்றி சில புதிய எவர் சில்வர், பித்தளைப் பாத்திரங்கள் கிடந்தது.நான் அவரைக் கடந்த போது, பேர் வெட்டறதுக்கு கூப்பிட்டுருக்காங்க,என்று அவராகவே சொன்னார். முகத்தில் ஒரு பஞ்சம் தெரிந்தது. அவரது தலைக்கு நேர் மேலே சுவரில் நான் வரைந்து வைத்திருந்த ஒரு கலங்கரை விளக்கம் வாட்டர் கலர் படத்தைப் பார்த்து ’அடே, இது நீங்க வரைஞ்சதா...மேலப் பக்கம் பாத்தீங்களா, கோடு சீரா இல்லை, பாருங்க’ என்று கையில் வைதிருந்த ஒரு சிறிய சாக்குப் பையிலிருந்து ஒரு சாக் பீஸை எடுத்து ஒரு செங்குத்துக் கோடு போட்டு அதன் இரு புறமும் சாய்வாக இரண்டு கோடு போட்டார்.சாய்வுக் கோடுகள், இரண்டு புறமும், கச்சிதமான சாய்வாக இருந்தது.’பாத்தீங்களா, மேலேயிருந்து ஒரே மாதிரி ரெண்டு புறமும் இறங்குதா’ என்று ஆட்காட்டி விரல் இரண்டையும் மேலே இருந்து வெவேறு இடங்களில் வைத்து இரு புறமும் அளந்து காண்பித்தார். நான் என் படத்தைப் பார்த்தேன் தவறு புரிந்தது. இன்றைய விவரமான் கணிதமொழியில் சொல்வதென்றால், அதில் SYMMETRY சுத்தமாக இல்லை.
’தம்பி என்ன பேர் வெட்டணும் தரையில எழுதுங்க’ , என்று சாக் பீஸை நீட்டினார்.நான் அக்காவிடம் கேட்க உள்ளே போனேன்.அவர்கள் வேறு பாத்திரங்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.’ என்ன பேர் வேட்டணும் அவரு கேக்காரு என்று கேட்டேன். T.K.ன்னு வெட்டச் சொல்லு. நான் அதைச் சொல்வதற்காக வெளியே வந்தேன். அவர் ஒரு போணியில் எதையோ வெட்டிக் கொண்டிருந்தார்.நான் அருகில் சென்றதும் காண்பித்தார்,அழகான மயில். நீளமான தோகையுடன்.காண்பித்துக் கொண்டே வாயை மூடிய படியே புன்னகைத்தார் கூரிய மூக்கின் கீழ் ஒரு ஓற்றைக் கோடு போலிருந்தது வாய், கோட்டின் முடிவு இரண்டும் சற்றே மேல் நோக்கி, இப்போது அவர் சொன்ன சமச்சீர்மை புரிந்தது. நான் தரையில் பெயரை எழுதினேன். நான் படிக்கிற வசத்துல எழுதுங்க சரியா, என்றார். சொல்லிவிட்டு அந்தக் கோட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.இது என்ன இங்கிலீஸா என்று கேட்டார்.என்னடா இது தெரியாதா இவருக்கு என்று நினைத்த போது தம்பி கொஞ்சம் சோறு வடிச்ச கஞ்சித் தண்ணி இருந்தா வாங்கிக் கொடுங்க என்றார்.கொஞ்சம் இருமத் தொடங்கியிருந்தார்.இன்னும் சோறு வடித்திருக்கவில்லை. ஒரு நாளி அரிசி மண்பானையில் வேக, நேரம் ஆகும்.அதற்குள் அப்பா, மாடி கொலு பொம்மை பீரோலிலிருந்து சில வெள்ளிப் பாத்திரங்களை எடுத்து வந்தா(ர்).
அப்பாவிடம் மயிலைக் காண்பித்தேன். அந்தக் காலத்து பாத்திரம்,கனமா இருக்கு இல்லேன்னா இந்த வேலையெல்லாம் செய்ய வராது என்றார்.அதற்குள் அம்மா கஞ்சித் தண்ணியும், கொஞ்சம் கருப்பட்டியும் கொண்டு வந்தாள்.இந்தாரும் வேய் பேர் வெட்றவரு இந்த தண்ணீல உப்பு போடனுமா என்று கேட்டாள்..கருப்பட்டியைப் பார்த்ததும் வேண்டாம்மா என்று சொல்லிவிட்டு அதைக் குடித்து முடித்தார். ‘புகைச்சலுக்கு நல்லது கருப்பட்டி’ என்று சொல்லிக் கொண்டார்.அப்படியொன்றும் பாத்திரங்கள் சேரவில்லை. ஒரு எழுத்துக்கு அரையணா பேசியிருந்தார் போல. அரையணாவெல்லாம் போய் எவ்வள்வு நாளாச்சு. மொத்தத்தில் ரெண்டு ரூபாய் கூடத் தேறாது போலிருந்தது.இன்னும் வேறு ஏதாவது இருக்கா என்று அப்பா கேட்டார்.இல்லை என்றாள் அம்மா அதற்குள் அவர் எனக்கு வரைந்து காண்பித்திருந்த கலங்கரை விளக்கத்திற்கான கோடுகளை முழுமையான படமாக்கி இருந்தார்.அது உருளையான செங்கல்க் கட்டு போலிருந்தது. அதை முடித்துவிட்டு, என்னைப் பார்த்தார், தன் கோட்டுப் புன்னகையுடன்.அப்பா, `பார்த்தியா வித்தைக் காரனுக்கும் உனக்குமுள்ள வித்தியாசத்தை’ என்றார். உமக்கு வேற என்ன வேலை தெரியும், என்று அம்மா கேட்டாள்.கல்லு வேலையெல்லாம் செய்வேம்மா. எங்க குடும்பம் செலை செய்யற வேலைக்காரங்கம்மா. மீன் மார்க்க்கெட் பக்கத்தில வீடு.வீட்டுப் பேரை கல்லில வெட்டிக் குடுப்போம். எங்க அப்பா மணிமுத்தாறு டேமில் வேலை பார்த்தவரு. டேமில் திறப்பு விழா கல்லு எல்லாம் செஞ்சிருக்காரு.என்று பேசிக் கொண்டிருந்தார்.அப்பா, ’குமரன் இல்லம்’ என்று கல்லில் பொறிக்க எவ்வளவு ஆகும் என்று கேட்டார்.செஞ்சு கொண்டாரேன் பாருங்களேன். என்று ஏதோஒரு தொகை சொன்னார்.அப்பா சம்மதித்து இருபதோ முப்பதோ பணம் கொடுத்தார்.தன் சாக்குப் பைக்குள் அதை பத்திரப் படுத்திவிட்டு. கும்பிட்டார்.
முகத்தில் சற்று ஆசுவாசம் வந்திருந்தது. எங்க அப்பாதான், டேமில் வேலை பார்த்த தொழ்லாளிங்க, இஞ்ஜீனியருங்க,சிலரு வேலை பாக்கும் போதே அடிபட்டு, கிடிபட்டு செத்துருப்பாங்கள்ளா, அவங்க பேரையெல்லாம், ரெண்டாளு உயரத்துக்கு செதுக்க ஆரம்பிச்சு வேலை முடியறதுக்குள்ள இவரே செத்துட்டாரு, நாந்தான் அதை முடிச்சுக் குடுத்தேன்.என்று சொல்லும் போது கை பயங்கரமாக நடுங்கியது.ஏம் வே கை இப்படி நடுங்குது என்று அம்மா கேட்டாள்., `சோறு மட்டும் ஆகியிருக்கு மோரு விட்டு, நார்த்தங்காய் வச்சு சாப்பிடுவேரா’. வேண்டாந்தாயீ கேட்டதே போதும் என்றவர் சொன்னார், ஐய்யா அது ஏதோ ஒரு சாபம்ய்யா, நான் செலை கொத்துனா கண்ணு திறக்கப் போறப்ப இப்படி கை நடுக்கம் வந்து செலையில ஏதாவது மூக்கோ காதோ உடஞ்சு கொருவாய் விழுந்து ஆகாமப் போயிருதுய்யா.எங்க அப்பாவுக்கும் கடைசிக் காலத்துல இப்படி ஆச்சுன்னு எங்க மாமியா சொல்லுதா என்று சொன்னார்.அப்ப இந்த வில்லை செதுக்கும் போதும் உடையறதுண்டா என்று பக்கத்து வீட்டு சின்னத் தாத்தா கேட்டார். அதற்குள் வளவில் உள்ளவர்களும், தாத்தாவும் கதை கேட்க குழுமியிருந்தார்கள்.`இல்லங்கய்யா, இல்லங்கய்யா’ என்று அவசரமாக மறுத்தார்.சரி என்ன படிச்சிருக்கேரு என்று தாத்தா கேட்டார். தாத்தா ரொம்பக் கரெக்டான ஆள். குழந்தை குட்டி ஒன்னும் கிடையாது. ஆனாலும் மகா சிக்கனம்.மரத்தில, தெருவோரமா கிடக்கிற முருங்கைக் காயைக் கூட எண்ணி வச்சுருப்பாரும்பாங்க. அவர் பட்டப் பேரே எங்க மத்தியில் ’இஞ்சி மரப்பா’. காட்டமான ஆளு. ஐயா படிப்பெல்லாம் கிடையாது.நீங்க என்ன எழுதினாலும் அப்படியே செதுக்கிருவேன்.என் பையன் எட்டு படிக்கான், என்றார்.இன்னும் கேள்வி வரும் என்று நினைத்தோ என்னவோ, பத்து நாள்ல்ல இதைக் கொண்டாரேன் என்று நான் எழுதிக் கொடுத்த தாளை மடியில் வைத்துக் கொண்டார். படிச்சிருந்தா இப்படிப் பட்டினி போட்டுக் கொல்லுவாளா அம்மையும் மகளும் என்று சொல்லிக் கொண்டே தெருவுக்கு இறங்கிப் போனார்.
பத்து நாளாகியும் வரவில்லை.ஒரு சாயந்திரம் அப்பா கேட்டார், வாறியா அந்த ஆசாரியப் பாத்துட்டு வருவோம். சரி என்று கிளம்பினேன். குத்தால ரோடில் இருந்தது மீன் மார்க்கெட்.ஆசாரி பேரை யாருமே கேட்டு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் வீட்டைக் கண்டு பிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. மீன் மார்க்கெட்டை அடுத்து நாலைந்து வீடுகளும், சிற்பக் கூடம் போல் தென்னந்தட்டியால் சுமாராக வேயப்பட்ட ஒரு நிழலடியில் நீளமான கல்லும், நிலைப்படிகளும், ஒரு பிள்ளையார் சிலையும் கிடந்தது. எனக்கு அவற்றைப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஏதோ அபூர்வமான இடத்திற்கு வந்து விட்டது போலிருந்தது.வீடுகள் எல்லாம் வரிசையாய் இருந்தன. ஏதோ ஒரு வீட்டில் இருந்து ’கடவுள் தந்த இருமலர்கள்’ என்று பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது. சிலோன் ரேடியோ முடியப் போகிற நேரம் ஸ்டேஷன் தெளிவில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் முன் நின்று சத்தம் கொடுத்தேன். ஒருவன் வந்தான்.அப்பாவைப் பர்த்ததும் மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்து விட்ட படி என்ன வேணும் என்று கேட்டான். அப்பா ஒரு வழியாக விஷயத்தை விளக்க வேண்டி இருந்தது.ஒஹ்ஹொ எங்க சின்னைய்யா, அந்த முதல் வீடு, என்று சொல்லியபடியே அந்த வீட்டுக்குக்ள் சென்று அவரை அழைத்து வந்தான்.கூடவே இரண்டு பெண்களும் வந்தனர்.அவர்கள் வீட்டுக்குள்ளேயே நின்று கொண்டு எட்டிப் பார்த்த படி இருந்தனர்.`ஐயா வாங்க என்று இருமலுக்கு இடையே சொன்னான். கொஞ்சம் பெரிய செங்கல் போலிருந்த வில்லை ஒன்றை எடுத்து வந்தான், கல்த் தூசிக்குள்ளிருந்து. `குமரன அகம’ என்று அழகாக வடித்திருந்தது.எனக்குப் பகீர் என்றிருந்தது. ன விலும் ம விலும் புள்ளி வைக்கவில்லை.நாம் தான் தப்பாக எழுதிக் கொடுத்து விட்டோமோ என்றிருந்தது.அப்பா அதிர்ச்சி அடையவில்லை மாதிரி இருந்தது.நான் மெதுவாகச் சொன்னேன்.அதுக்கென்ன வச்சாப் போச்சு என்று அப்பா சொன்னதும் தான் ஆமா இது ஒன்னும் பயப்பட வேண்டிய விஷயம் இல்லையே என்று தோன்றியது. அப்பாவுக்கு அந்த வில்லை திருப்தியாக இருந்திருக்க வேண்டும் போலிருந்தது.அங்கே கிடந்த நிலைப்படிக் கல்லில் உட்கார்ந்தோம். இரண்டு காளி மார்க் கலர் வங்கி வந்தார் முதலில் பார்த்தவர்.பெயர் வில்லையின் பின் புறம் சமப் படுத்தப் படாமலிருந்தது. நான் அதைக் காண்பித்தேன். ’அப்பத்தான், சுவர்ல வச்சுக் கட்டும் போது நல்லாப் புடிச்சுக்கிடும்’, என்றார், அப்பா. அப்பாவுக்கு சில நுணுக்கங்கள் நன்றாகத் தெரியும்.ரெண்டு நாள்ல்ல பாலிஷ் போட்டுக் கொண்டாந்துருவாரு என்று அவன் மனைவி சொன்னாள்.சரி அதில ரெண்டு புள்ளி வச்சுரும் என்று அப்பா சொன்னதும், எவ்வளவு பேசிருக்காரு என்று அவள் கேட்டாள். என்ன உண்டுமோ அதான் என்று அப்பா சொன்னார். அதை குடுத்துட்டுப் போங்க என்றதும், கொண்டு வரும் போது குடுத்து விடுதோம், இப்ப பணமில்லை என்று சொல்லி விட்டு கிளம்பினார். பணமில்லையாம்லா என்று இளக்காரமாகச் சொல்லுவது வீட்டுக்குள்ளிருந்து கேட்டது.
ஒரு வாரம் போலிருக்கும் அவர் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்தார் ஒரு சாக்கில் சுற்றி.அவர் வரும் போது சின்னத் தாத்தாவும் இருந்தார்.அவருக்கே அதைப் பார்த்ததும் திருப்தியாய் இருந்தது.வேலை நல்லாருக்குவே என்று பாராட்டினார். ஆசாரி, கொஞ்சம் நல்ல வேஷ்டி உடுத்தி சட்டையைப் பைக்குள் வைத்திருந்தார்.சாக்குப் பையில்லை. சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார்.நல்ல வேளைய்யா என் மாமியார்ட்ட ரூவாயக் கொடுக்கலை, திருப்பதிக்கு போறேன்யா.தேவஸ்தானத்துல எங்க சொந்தக் காரங்க இருக்காங்க,அங்க போனா ஏதாச்சும் வேலை இருக்கும்யா என்று சொன்னார்.கொஞ்சம் சாவகாசமாப் பேசுகிற மாதிரி இருந்தார்.சின்னத் தாத்தா கேட்டார், வே சோமவார மண்டபத்துக்கு முன்னால இருக்கே அந்த அல்லி அர்ஜுனன் சிலை, அதுக்கு மூக்கு இல்லையே அதுவும் உம்ம மாதிரி ஆனதை, அப்புறமா இட்டுக் கட்டினதோ, மூக்கை கிள்ளிட்டான் அர்ஜுனன்னு, என்று இடக்காக கேட்டார். ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை, அந்த சிலைகள்லாம் எப்படிச் செய்யுவாங்க தெரியுமா, காலையில குளிச்சு முடிச்சு சாமி கும்பிட்டுட்டு, வேஷ்டிய வெயில்ல காயப் போட்டுட்டு செலை வடிக்க ஆரம்பிச்சாங்கன்னா அந்த வேட்டி நல்லா காயற ஒரு மணி நேரம், ஒண்ணரை மணி நேரம் வரைக்கும்தான் வேலை பாப்பாங்களாம்.அதுக்கு மேல் உடம்பை வருத்தினா நம்ம கதை ஆயிரும் போல இருக்கு,இப்படீன்னு சொல்லக் கேள்வி.எங்களுக்கெல்லாம் நல்ல கதி கிடையாதுன்னும் சொல்லுவாங்க, ஏன்னா மக்கள்ல்லாம் கும்பிடற சாமிய நாங்க மேல ஏறி உக்காந்து, மிதிச்சு, எல்லாம் வேலை பாக்குறமே அதனாலேன்னு எங்க அம்மாவும் சொல்லுதா மாமியாளும் சொல்லுதா. என் மாமியார்ட்ட இருந்து தப்பிச்சா போதும் சாமி.நான் வடக்க போறேன் சாமி, வடக்க போறேன் என்று சொல்லிக் கொண்டே தெருவுக்கு இறங்கினார். அப்பா, பேசியதை விட அதிகமாகவே கொடுத்தார். இது வடக்க போற வரைக்கும் போதும்ல்லா என்று கேட்டதுக்கு, ஏயப்பா இதை வச்சு காசி கயா கூடப் போலாம்வே என்றார் சின்னத் தாத்தா. அதைக் கேட்க அவர் இல்லை.அந்த வில்லையை வீட்டிற்கு வெளியே பதிக்க சுவர் வாகாகவும் இல்லை, அதை ராஜவல்லிபுரம் வீட்டில் பதிக்கலாம் என்று அப்பா அதை அங்கே கொடுத்து விட்டார், வயலை மேற்பார்ப்பவரிடம்.அது அங்கேயும் பதிக்கப் படவில்லை. அது எங்கே போயிற்றேன்று தெரியவில்லை. வீடே விலையாகி விட்ட பின் அது எங்கே போனால் என்ன.
பொதுப் புத்தி
பொதுப் புத்திக் காரனாய்
ஞாபக மறதியுடன்
போராடிக் கொண்டிருந்தேன்
பித்தளைப் பாத்திரத்தில்
பெயர் பொறிக்க வந்த
போது பழக்கம்
வீட்டின் பெயரை
கல் வில்லையில்
செதுக்கித் தந்து
காசு வாங்கிய கையோடு
வேற்றூர் சென்று விட்டவன்
பெயர் என்ன
அணை கட்டும் போது
இறந்த தொழிலாளிகளின்
அணைத்துப் பெயர்களையும்
பொறிக்க ஆரம்பித்த
அவன் தந்தையே காலமாக
முடித்துக் கொடுத்தவன் அவனாம்
பசு வலி கண்டு அரற்ற
வெளியேறும் பனிக் குடத்துள்
தெரியும் கன்றின் தலை போல
கல்லுக்குள் அசாதாரணச் சிலை
காணும் சிறப்புப் புத்திகாரன் தான்
துலங்கி வந்து கொண்டிருக்கும்
சிலைகள் ஏனோ கடைசியில்
கொருவாய் விழுந்து வீணாகிப் போகுமென
நொம்பலப் பட்டுச் சொல்லிக்
கொண்டிருந்தான்.
எந்தச் `சிற்பியின் நகரத்’தில்
எந்த மொழிக் காரர்களுக்காய்
என்ன வடித்துக் கொண்டிருக்கிறானோ
எழுதப் படிக்கத் தெரியாத அவன்.
(2008)
Sunday, March 1, 2009
கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment