Monday, January 26, 2009

நாலு பேருக்கு.....


அழைப்புக் காரச் செட்டியார் நல்ல உயரம். கரு கருவென்றிருப்பார்.வழுக்கைத் தலை.அரைப் படிக் கடலையை ராத்திரியே ஊறப் போட்டிருப்பார்.காலையில் ஆற்றுக்குப் போய் ஒரு குளியல். மத்தியானத்துக்கு ஒரு சோற்றை மட்டும் வடித்து வைத்து, . அப்புறம் கடலையை வெந்து, தாளித்து சுண்டலாக்கி விற்கக் கிளம்பி விடுவார். இது கல்யாணம், கார்த்திகை நடை பெறாத சூனிய மாதங்களில்த்தான் இப்படி. மற்ற காலங்களில் விசேஷ வீடுகளுக்கு, ஊர் அழைப்பதற்குப் போய் விடுவார்.அவரோடு வீட்டுப் பெண்களும், போவார்கள். பெண்கள், பெணகளை அழைப்பார்கள்.இவர் ஆண்களை அழைப்பார்.``சம்பந்த மூர்த்தி கோயில்த் தெரு, அச்சுக்கூடத்துப் பிள்ளை வீடு, சீமான் பிள்ளை மகளுக்கும், தென்காசி பாப்பா காபித்தூள்க் கம்பெனிக் காரவுக மகனுக்கும் ஆனி மாசம், இன்ன தேதி இத்தன மணிக்கி,பொண்ணு வீட்டில வச்சுக் கல்யாணம்., முந்தின நாள் ராத்திரி மாப்பிள்ளை அழைப்புச் சாப்பாட்டுக்கும், மறுநாள் காலைச் சாப்பாட்டிற்கும், முகூர்த்ததிற்கும், மத்தியானச் சாப்பட்டிற்கும் அழைச்சிருக்கு.’’ என்று கடகட வென்று சொல்லி அழைத்து, ஒரு பத்திரிக்கையை அந்த வீட்டின் ஆண்கள் கையில் கொடுப்பார். கட்டாயம் ஆண்கள் கையில்தான் கொடுக்க வேண்டும், வீட்டில் பெரிய ஆண்கள் இல்லையென்றால், சின்னப் பையன்களிடமாவது கொடுக்க வேண்டும். யாருமே இல்லையென்றால் மட்டுமே பெண்களிடம் கொடுப்பார். அவர் சொல்லி முடிக்க காத்திருந்தது போல,பெண்கள் ஆரம்பிப்பார்கள், ஆனால் இது அவ்வளவு கச்சிதமான ஒப்பித்தலாக இருக்காது.
யார் யார் வீட்டுக்கு, எதெற்கெல்லாம் அழைப்ப்பு என்பது அவருக்கு அத்துப் படி. யார், யாருக்கு முதல்ச் சுற்று உறவினர்,யாரைக் காலைச் சாப்பாட்டிற்கும் அழைக்க வேண்டும், யாரை முகூர்த்த்தம் மற்றும் மதியச் சப்பாட்டுக்கு மட்டும் அழைக்க வேண்டும் என்றெல்லாம், .வீட்டுக்காரகளுக்கு மறந்தால் கூட அவருக்கு மறக்காது. அதற்காகவே அவர் சொன்ன பிறகு, பெண்கள் துவங்குவார்கள்.யாராவது கிழவி, வேய்,``செட்டியரே காலச் சாப்பாடுக்கு அழைப்பு உண்டா’’ என்று குறிப்பாகக் கேட்பார்கள்.அதுல ஒரு குசும்பு கூட இருக்கும். செட்டியார் இதுக்கெல்லாம் அசராத ஆள், ம்ஹூம் கிடையாது என்று சொல்லிவிட்டு, வாயில் ஏதோ மிட்டாய் போட்டிருந்து, அது நன்றாக ஊறி இனிப்பான எச்சிலாய்ச் சேர்ந்திருத்தாற் போல,வெறும் வாயை உறிஞ்சி எச்சில் விழுங்கிக் கொள்ளுவார்.பெண்களோ, ``அதுக்கென்ன ஆச்சி, உங்க வீடு தான,எப்ப வேணுன்னாலும் வாங்க’’ என்று அசடு வழிவார்கள்.
பெரிய அக்கா கல்யாணத்திற்கு அழைக்க, வீர ராகவ புரம் என்கிற ஜங்‌ஷன்., ஸ்ரீ புரம், கொக்கிர குளம்., வண்ணார் பேட்டை என்று டவுணிலிருந்து தள்ளி இருக்கும் சில வீடுகளுக்கு அழைக்க, பெரிய வரிசையார் (சீர் வரிசை கொண்டு வருவதானால், அண்ணன் மனைவியை வரிசையார் என்று அழைக்கிறார்களோ) இன்னும் சில உறவுக் காரப் பெண்களுடனும், அழைப்புக்காரச் செட்டியாருடனும் ராமையா பிள்ளை வில்லு வண்டியில் நானும் வரேன் என்று கிளம்பினேன். அப்பா தடுத்தார்,அவ்வளவு தூரம் ஒன்னால அலைய முடியாதுல, என்று. நான் அதெல்லாம் போயிருவேன். என்று கிளம்பி விட்டேன்.எட்டு ஒம்பது வயதிருக்கும்.
ஜங்ஷன் போகிற பாதை, குளுமையா இருந்தது.ரெண்டு பக்கமும் மருத மரம்.பார்வதி டாக்கீஸ் அப்ப கிடையாது.ரத்னா டாக்கீஸ் அதே லைட் ஊதாக் கலர் பெயிண்டில். வீரக் கனலோ, வஞ்சிக் கோட்டை வாலிபனோ, ஜெமினி கணேசன் நடிச்ச ஒரு சரித்திரப் படம் போஸ்ட், ஒட்டியிருந்த நினைவு.ஒன்றிரண்டு, ஈயக் கலர் அடித்த டி எம் பிஎஸ் பஸ்களும், புதிதாக ஓடுகிற ஸ்ரீ பால சரஸ்வதி பஸ்ஸும் தவிர வேறு போக்கு வரத்தே இல்லை. ராமையா பிள்ளையிடம் கெஞ்சிக் கூத்தாடி அவர் அமருகிற கோஸ் பெட்டியில் நான் உட்கார்ந்து கொண்டேன். . பால சரஸ்வதி பஸ்ஸில் கடிகாரம் பொருத்தியிருந்தது, அப்போதைய ஆடம்பரச் செய்தி டி.எம்.பி.எஸ் பஸ்ஸுக்கு, ஒரு ஒல்லியான ஐயங்கார், டைம் கீப்பர். ஒற்றை நாமத்துடன் சந்திப் பிள்ளையார் முக்கு ஸ்டாப்பில் இருப்பார்.நேர சுத்தமாக ஓடும் டவுண் பஸ்கள், அப்போதெல்லாம்.திருநெல்வேலி மோட்டார் பஸ் சர்வீஸ் (டி.எம்.பி.எஸ்) தொழிலாளர்களால் நடத்தப் பட்டு வந்தது.அதே போல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால், கூட்டுறவு அடிப்படையில் நடத்ததப் பட்ட எக்ஸ் சர்வீஸ் மென் பஸ் செங்கோட்டைக்கு உண்டு. அது வேகமாகப் போகும்.அதில் போவதென்றால் எங்களுக்கு குஷி.முதலில் ஸ்ரீபுரம் போனோம்
.ஸ்ரீ புரம் தான் அப்போதைய தனவந்தர்களின் காலனி.பெரிய பெரிய வீடுகள், வீட்டைச் சுற்றி மரங்களும், தோட்டமும்.நம்ம சொந்தக் காரங்க இவ்வளவு பெரிய வீடுகளில், இருக்கிறார்களா என்று தோன்றியது.பழனியிடம் போய்ச் சொல்ல வேண்டும்.அவந்தான் அடிக்கடி நீ, ஸ்ரீ புரம் போயிருக்கியாலே அங்க பன்னீர்ப் பூ மரம்ல்லாம் இருக்கும்.வாசனை மூக்கைத் துளைக்கும்.என்றெல்லாம் ஆசை காட்டியிருந்தான்.அந்த ஸ்ரீபுரத்தைப் பார்த்த சந்தோஷத்தில், ``வீராவரம்’’ புறப்பட்டோம். ஆனால் கொஞ்ச தூரம் போனதும், பின்னாலேயே நடந்து வந்த அழைப்புக் காரச் செட்டியார், வண்டியில் உடகாருவதற்காக, நான் வண்டிக்குள் உட்கார நேர்ந்தது.அவரைத்தாண்டி வேடிக்கை பார்க்க முடியவில்லை.வயிறு வேறு பசிக்க ஆரம்பித்து விட்டது.கொக்கிர குளத்தில் நான் வண்டியிலேயெ படுத்து விட்டேன். மாட்டை அவிழ்த்துப் போட்ட வணடி.சாய்வாக நின்றது.படுத்தே கிடக்கவும் முடியவில்லை.வண்டியின் பின் பக்கமாக நகர்ந்தால், ராமைய்யா பிள்ளை சத்தம் போடுவார், ``வண்டி குடை சாஞ்சிரும், முன்னாலயே உக்காருல’’, பேசாம வீட்லயே கிடக்க வேண்டியதுதானலே.. பசியோடு வீடு திரும்பும் போது காய்ச்சல் வரும் போலிருந்தது.சாப்பிட்டதும் சரியாய்ப் போய் விட்டது. காணாததற்கு, ஆயிரக்கணக்கில் லட்டு செய்து, மச்சு வீட்டின் நடு ஹாலில்,வெள்ளைத் துணி விரித்து ஆற வைத்திருந்தார்கள்.சின்ன அக்கா, கிட்டு கூப்பிட்டுப் போய் காண்பித்தாள். எடுக்கப் போன போது அடிக்க வந்தாள். அப்பா எடுத்த்துக்கடா என்றதும், இரண்டை எடுத்து இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் கடித்து விட்டு, அக்காவைப் பார்த்து பழிப்புக் காட்டினேன். அவள் எனக்குலெ என்று கேட்டபோது, கிட்டு. லட்டு, குட்டு என்று சொல்லிய படி ஓடினேன்
அழைப்புக்கு போவதைத் தவிரவும், செட்டியார் செய்கிற வேலை இன்னொன்று உண்டு. ஒரு வீட்டில் யாராவது வயதானவர் இறந்து போனால், அவரது மகளோ, பேத்தியோ, சாவு நடந்த எட்டாம் நாள், உறவினர் வீடுகளுக்கு கொண்டைக் கடலை அல்லது பச்சைக் கடலை போடுகிற வழக்கமுண்டு.மகள் என்றால் கொண்டைக் கடலை.பேத்தியென்றால், பச்சைக் கடலை.மூடை மூடையாக வாங்குவார்கள். அரைக்கால் படியோ கால்ப் படியோ எல்லா உறவினர் வீடுகளுக்கும் கொண்டு போய்ப் போட வேண்டும். அதைச் செய்கிற வேலையயும் அவரே சரியாகச் செய்வார்.ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணமாகி மகனும் அங்கேயே வசித்து வந்தால் இரண்டு பங்கு போட வேண்டும். அதை பாத்திரத்தில் வாங்கக் கூடாது. தரையில், செட்டியாரே அளந்து தட்டி விடுவார்.ஒரு ஆவலாதி வராது.
ஆற்றில், ஒவ்வொருவருக்கும் பிடித்தமான படித்துறை உண்டு. அங்கே குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட சகாக்களுடன் பேசிய படியே குளிக்கிற சுகமே தனி. நாங்கள் முன்னடித் துறையில் குளிப்போம். இளவட்டங்கள் குளிக்கிற இடம் பொது வாகவே அங்கு தான். அங்கே இழுப்பு, அதிகமிருக்கும். அதை எதிர்த்துக் குளிப்பது ஒரு சுகம்.கொஞ்சம் வயசானவர்கள், என்றால் கோயில்ப் படித்துறை. .கருப்பன் துறையில் தான் மயானம். அங்கிருந்து சற்றே கிழக்காக வ்ந்தால் அமாவாசைச் சாமியார் சமாதியான நந்த வனம்.அதற்குப் பின்னால் ஒரு படித்துறை. அதில் ஏதாவது துஷ்டிக்குப் போய் வந்தால் மட்டுமே நாங்கள் குளிக்கிற வழக்கம்.அந்தப் படித்துறைக்கு பெண்களே வருவதில்லை. ஏனென்றால் மயானக் கரைக்குப் பெண்கள் வர அனுமதியில்லை.அந்தப் படித்துறை, பேணுவார் இல்லாமல், சற்று படிகள் உடைந்தும், சாய்ந்தும் இருக்கும்.ஆறு ஏதாவது ஒரு வெள்ளத்தில் சட்டென்று திசை மாறி, படித்துறையை விட்டு தள்ளியே ஓடும்.இது கொஞ்ச நாளுக்குத்தான்.அந்த நேரங்களில் படித்துறை தனியே துருத்தலாக மணல் வெளியில் அனாதையாக காத்திருக்கும். நந்தவனத்துறை இடத்தில் ஆறு சற்று அகலமாக இருக்கும்.அதனால் படித்துறையை விட்டுத் தள்ளி ஒடினாலும், குளிப்பதற்கு வாகாக மணல் விரிப்பு நன்றாக இருக்கும். பாறைகளும் அவ்வளவாக இருக்காது.நீந்திக் கொண்டே எதிர்க் கரைக்குப் போனால் நல்ல புல் வெளியாக இருக்கும்.கனமான அடர்த்தியான புல். அது மேலப்பாளையம் கரை.அநேகமாக முஸ்லிம் பெண்கள் குளிக்கிற கரை. அவர்கள் துவைப்பதற்காகவே ஆற்றுக்கு வருகிற மாதிரி, அகலப் பாத்திரங்களில் துணியும் பாயும் நிறையவே எடுத்து வருவார்கள். பாய் முடைவ்து மேலப்பாளையத்தில் நிறைய உண்டு. அதனால் எல்லாப் பெண்களின் அழுக்கு மூட்டையிலும் கண்டிப்பாக ஒரு பாயாவது இருக்கும்.ஈரத்துணிகளைப் பிழிந்து ஏனத்தில் அடுக்கி அதன் மேல் ஈரஞ்சொட்டுகிற பாயை வைத்துக் கரையேறிப் போகும்போது, ஆற்றில் குளித்துக் கொண்டே வெண்மையான கால்களைப் பார்ப்பது ஒரு அநுபவம்.பெரும்பாலும் லுங்கி அணிந்த கால்களில் கொலுசு இருக்காது, அப்படியே இருந்தாலும் அதில் சலங்கைகள் இருக்காது..
அமாவாசைச் சாமியார் படித்துறைக்கு அவ்வப்போது போவதுண்டு. அங்கே குளிக்கும் போது மன நிலை வேறு மாதிரியாக இருக்கும். யாரையாவது எரியூட்டி விட்டு வந்து குளிப்பதால் சற்று நேரம் ஒரு மௌனம் எல்லாரிடத்தும் நிலவும் பெரும்பாலும் அது நடு மத்தியான நேரமாகத்தான் இருக்கும்.வெயிலில் குளிப்பது சுகமாயிருக்கும். மயானத்தில் சிதை எறியூட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது பக்கத்து தகர ஷெட்டில் அமர்ந்திருப்போம்.அந்த சிமெண்டுத் தரையை அவ்வளவு வழ வழப்பாகப் பூசிய கொத்தனார் யாரோ என்று நினைத்துக் கொள்ளுவேன். காற்றும் சுகமாய் வரும். கல்த்தூண்களின் மேல் தகரம் வேய்ந்திருக்கும். சுற்றுச் சுவர் எதுவும் கிடையாது.தளத்தின் ஒரம் சற்றே சாய்வான மேடாயிருக்கும், தலையணை மாதிரி.படுத்துக் கொண்டால், தூக்கம் கண்ணைச் சுழற்றும். மனம் தானாகவே ``நம் வாழ்வில்க் காணா சமரசம் உலாவும் இடமே,’’ என்று பாடும்.பள்ளிக் கோட்டை ரத்தினம் பிள்ளை அத்தான் தான் இந்தப் பாட்டை யார் வீட்டு துட்டியின் போதோ,சொல்லிக் காண்பித்தது.அத்தான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். பத்து வார்த்தைக் கொரு தரம் என்னவே நான் சொல்றதூ என்று கேட்டு சத்தமாய் ஒரு சிரிப்பு சிரிப்பார்.எனக்கு வேலை கிடைத்ததற்கு அவருக்கும் கணிசமான பங்கு உண்டு.
யாருமில்லாத போது தனியாக வந்து ஒரு நாள் இங்கே தூங்க வேண்டும் என்று நினைப்பேன்.ராமுவின் அப்பா, ஆறுமுகம் பிள்ளை, ஒரு காலத்தில் பெரிய தவசுப் பிள்ளை.மகாத்மா காந்தி எங்கள் தெருவில் சாவடிப் பிள்ளை வீட்டிற்கு வந்து விருந்தினராகத் தங்கி இருந்த போது, அவர்தான் சமையல்.காந்திக்காகவே முதன் முதலாகத் திருநெல் வேலிக்கு தக்காளிப் பழத்தை ஆறுமுகம் பிள்ளை வாங்கி வரச் செய்தார் என்று அம்மா அடிக்கடிச் சொல்லுவாள்.எங்கள் காலத்தில் ராமுவின் அப்பா சமையலை மேற்பார்ப்பதில்லை.ஆனால் விரும்பிக் கேட்டால், ஆக்குப் பிறைக்கு வந்து ருசி பார்த்துச் சொல்லுவார்கள். வாசனையை வைத்தே சொல்லி விடுவார். ``ஏல , ஏல, ரசத்தில ஒரு கை உப்பு போடுலே, ஏய் பேராச்சி, அவியலை அடிப் புடிக்க விடாதலெ, இன்னும் கொஞ்சம் நயம் தேங்காயெண்ணய விட்டு சட்டாப்பையாலெ கிண்டி விடு, என்று மள மள வென்று உத்தரவு பறக்கும்.ஒரு மூக்கு வாளியக் கொண்டாலெ. என்று கட்டளையிட்டு வாங்கி. பச்சைக் கற்பூரம். குங்குமப் பூ போட்டு, ஒரு பக்காத் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைக்கச் சொல்லுவார் பச்சைக் கற்பூரம் நல்லா கரஞ்சிருக்கா என்று பத்து தடவையாவது கேட்பார்.அது போட்டாலே கரஞ்சிரும்,சமயத்தில் ஒரு துணுக்கு கரையாது. அது பல்லில் ஒட்டிக் கொண்டால் சூடனைச் சவைச்ச மாதிரி இருக்கும் என்று அவரே சமாதானம் சொல்லிக் கொள்ளுவார்.அதை பாயாசத்தில் சேர்த்த பின் தான் பாயாசத்திற்கே ஒரு ருசி வரும். அவரிடம் தொழில் படிக்காத தவசுப் பிள்ளைகளே திருநெல்வேலியில் இருக்க முடியாது.நான் தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டுப் பிழைத்துக் கொண்டதைக் கேள்விப்பட்டு, வெளியில் போவதையே குறைத்துக் கொண்டு விட்ட அவர், வீட்டுக்கு வந்தார்.``எங்க அவனை’’, என்று கேட்டபடியே மாடிக்கு ஏறி வந்தார், ``ஏய், பைத்தியாரா இப்ப என்ன வந்துட்டு நமக்கு,என்ன வந்துட்டூங்கேன், வீடு இல்லையா வாசல் இல்லையா, இல்ல போனாத்தான் வராதா,இன்னம இந்த நெனப்பே கூடாது, ஆமா’’கீழே இறங்கி விட்டார்.கீழே சற்று நேரம் அம்மாவிடம் பேசுவது கேட்டது. நான் ஆடிப் போயிருந்தேன்.ராமுவுக்கு அப்போதுதான் கல்யாணம் நிச்சயித்திருந்தார்கள்.இரண்டு நாள் கழித்து நிச்சயதார்த்தம், ``ஞாவகமா அவனைக் கூட்டியா’’ என்று ராமுவின் தம்பியை அனுப்பி வைத்திருந்தார்.``வயிறு புண் பட்டிருக்கும்., பரவால்லை சும்மா எல்லாத்தையும் சாப்பிடு, சாப்பாடுதான் மருந்து, எல்லாம் உரைப்பில்லாம பக்குவமா இருக்கு’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
மாலை ஆகி விட்டது,.அவரைத் தகனம் செய்ய. இருட்டிக் கொண்டு வந்தது.அப்போது மயானக் காவலுக்கு சரியான ஆளில்லை என்று பேச்சிருந்தது.ராமு.,``யாராவது இங்கே இருந்துட்டு வாங்கப்பா நாய் நரி இழுத்துப் போட்றாமெ’’ என்று அரற்றிக் கொண்டிருந்தான்.சரி இருக்கோம் நீ போ என்று கனகு சொன்னான்.யாரோ மூன்று பேர் தங்க முடிவெடுத்தோம். ராமு கடையில் வேலை பார்க்கும் தங்கையா`` நாங்க பாத்துகிடுதோம்.’’நீங்க போங்க’’ என்றான். கொஞ்ச நேரம் இருந்தோம்.எட்டு மணி இருக்கும்.எங்கிருந்தோ சாராயம் வாங்கி வந்தான்.``ஐயா இதை வேண்ணா சாப்பிடுங்க,’’ என்றான்.இதற்குள் ராமு உப்புமா கொடுத்து விட்டிருந்தான்.இரண்டுமே சாப்பிடும் படி இல்லை.ஊன் உருகும் வாசனை, பால் பொங்கி அடுப்பில் விழுவது மாதிரி வந்தது. தீ மத மதவென எரிந்து கொண்டிருந்தது.வெட்டியான் கம்பால் குத்துவதா,இல்லை எலும்பு வெடிக்கிற சத்தமா தெரியவில்லை.``அங்கெ என்ன இருக்கு, எல்லாம் பஸ்ப்பமாயிட்டு, ஐய்யா, இதுக்காக நீங்க இருக்கணுமா’’, என்று கொஞ்சம் பனங்கிழங்கு, சுட்டதை எடுத்துக் கொண்டு வெட்டியான் எங்களைப் நோக்கி வந்தான்.சாராயமும் , உப்புமாவும் அவனை இழுத்து வந்திருக்கும்.கிழங்கின் சூடு கை பொறுக்க முடியாமல் இருந்தது.`ஐயா இது தனியா வெந்தது’, என்று சொன்னான்.ஆனால் வேறு எங்கேயும் தீ தென் படவில்லை.எதையும் சாப்பிடவில்லை. கிளம்பி விட்டோம்.முன்னடித் துறையில் லேசான வெளிச்சத்தில் ஒரு முனிசிப்பல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.படியில் நின்றவாறே
குளித்தோம்.வெளியே குளிராக இருந்தது. த்ண்ணீர் வெது வெதுப்பாக இருந்தது..ஒரு தன் நிதானத்துடன் ஆற்றின் மத்திக்கே நீந்திப் போய்க் குளித்தோம்.குளிர் தெரியவில்லை.
மத்தியானம் மூன்று நாலு மணிக்கு ஆற்றில் குளித்தால், அது வேறு மாதிரி இருக்கும். தண்ணீரின் மேல்ப் பகுதி வெது வெதுப்பாகவும் உள்ளே முங்கினால் சற்றுக் குளிராகவும் இருக்கும்.பொதுவாக இப்படிக் குளிக்கக் கூடாது. என்பார்கள்.காய்ச்சல் வரும்.ஆனால் கல்லூரித் தேர்வுக்கு விடுமுறை விட்டிருக்கும், ஸ்டடி லீவில், எனக்கு இந்த நேரமே வாய்க்கும்.இந்த நேரத்தில்தான் எல்லா வண்ணான், வண்ணாத்தியும் உலரப் போட்ட துணிகளை அள்ளிக் கட்டி கரையில் வைத்து விட்டு,குளித்துக் கரையேறுவார்கள்.துணி மூட்டையை தலையில் வைத்த படியேதான், குறுக்குத் துறை முருகன் கோயிலில் சாமி கும்பிடுவார்கள்.அன்று கோயில் படித் துறையில் குளித்தேன்.அழைப்புக்காரச் செட்டியார் குளிக்கிற இடம்.
மாலைச் சூரியன் முகத்தில் தகித்து, ஆற்றுக் குளியல் முடித்த உடம்பில் வியர்வை வழிய வந்து கொண்டிருந்தேன்.நாலு
பேர் மட்டும் ஒரு உடலைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.பாடையை விட கால் நீளமாய் வெளியே துருத்திக் கொண்டிருந்தது.முன்னாலும் பின்னாலும் யாருமே இல்லை.

சந்திப் பிள்ளையார் முக்கிற்கு வந்த போது,போத்தி ஓட்டலில் இருந்து வெளியே வந்த பள்ளிக் கோட்டை அத்தான் சிரித்துக் கொண்டே கேட்டார்,``வே மாப்பிள, என்ன, அழைப்புக்காரச் செட்டியார அனுப்பீட்டு வாறேரா.’’கேட்டு விட்டு தன் வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.



No comments: