Sunday, November 30, 2008

அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது....

பத்துப் பதினைந்து வீடுகள் சேர்ந்தாற் போல் இருக்கும். காம்பவுண்ட், வளவு, வளசல் என்று சொல்லுவார்கள்.வளைவு என்பது வளவாக ஆகியிருக்கும்.. ஏழு வீட்டு வளவு, வடக்கு வாசல்க் காம்பவுண்ட், என்று தெருவில் நிறைய உண்டு.தெற்குப் புதுத்தெரு, அரசடிப்பாலத் தெருக்களில் பத்துக்குடி, எட்டுக்குடி என்று உண்டு.நகரத்தின் இதயம் இதுதான். சினிமாக் கொட்டகையிலும், தேரோட்டத்துக்கும், ரேஷன் கடைக்கும், ஓட்டுச் சாவடியிலும் சேரும் கூட்டம் இங்கிருந்துதான் புறப்படுகிறது.நாள் பூராவும் தென்காசிப் பிள்ளை பலசரக்குக் கடையிலோ துணிக்கடையிலோ கால் கடுக்க நின்றபடி கேட்போருக்கெல்லாம்
பொட்டலம் மடித்துக் கொடுத்தோ, துணி அளந்து கிழித்துக் கொடுத்தோ,அத்து அசந்து ராத்திரி பத்து மணி வாக்கில் வளவு சேர்ந்து, தங்கள் குச்சு வீட்டின் கதவை தட்டோ தட்டு என்று தட்டியோ அல்லது, காசு பண்டம்,.பொருள்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் குழந்தை, மனைவியிடம் வெறுங்கையுடன் வந்து கையாலாகாத் தனத்தின் எரிச்சலைக் காட்டுகிற குமாஸ்தாக்கள் அப்போதெல்லாம் டாஸ்மாக் போய் வருவதில்லை.அதிகம் போனால் கல்லூர்ப் பிள்ளை கிளப்புக் கடை மாதிரி ஏதாவதொன்றில் நாலைந்து இட்லி, ஒரு காராவடை(அதுவும் நேரமானால் கிடைக்காது, மூக்க பிள்ளை கடையென்றால் ஒரு சுக்கு வெண்ணி அடிஷனல்.)அவசரமாகப் பிய்த்து வாயில்போட்டுவிட்டு செகண்ட் ஷோ சினிமா போறது மட்டும்தான்.


மாடியில் தெருவை ஒட்டிய அறை. அதுதான் நான் படிக்கும் அறை. அங்கிருந்து தெருவை நன்றாகப் பார்க்கலாம்.நடுப் பகலில்
நங்கையார் தெருவின் அடி பைப்பில் குளித்துக்கொண்டிருப்பாள்.தெருப் பம்பை ஒட்டி நீளமான திண்ணை உண்டு.ராத்திரி ஒன்பது மணி வரை அப்பா,மற்றும் அப்பாவின் நண்பர்கள், தங்கள் ஈஸிச் சேர் சகிதமாய் வந்து, ஏற்கெனெவே, சாயந்தரமே தண்ணீர் தெளித்து வைத்த மண் தரையில் ஈஸிச் சேரில், அல்லது வழு வ்ழுப்பான சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்த படி பேசிக் கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் பழனியின் அப்பாதான் அதிகம் பேசிக் கொண்டிருப்பார்கள்.அவர் கோர்ட் அமீனாவாக இருப்பவர்.கோர்ட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் எதையாவது, அல்லது ஜப்திக்குப் போன இடத்தில் நடந்த சம்பவம் எதையாவது பேசிக் கொண்டிருப்பார்.அவர்கள் கிளம்பும் வரை நாங்கள் யாரும் அருகே கூடப் போவதில்லை.அது பாடம் படிக்கிற நேரம் என்பதால் மட்டுமல்ல.அமீனாப் பிள்ளை டேய் படிக்கிற பிள்ளைங்களுக்கு இங்க என்ன வேலை என்று விரட்டி விடுவார். எனக்கு வேறு அனுபவங்களும் உண்டு.

சில கோடை விடுமுறைக்கு ராஜவல்லிபுரம் போய் தங்கி இருப்பது உண்டு.அம்மா ஊர் அதுதான்.வீடும் நல்ல பெரிய வீடு. அம்மாத் தாத்தாவுக்கு நில புலன்கள் எல்லாம் அந்த ஊரில்தான்.அங்கே எல்லார் வீட்டுக்கு வெளியேயும் திண்ணை உண்டு.இந்த திண்ணைகளுக்கு அப்படி ஒரு வழு வழுப்பு எங்கிருந்துதான் வருமோ,.உட்கார்ந்து உட்கார்ந்து தேய்த்ததனால் ஏற்பட்டதோ, இல்லை கொத்தனார் கைவண்ணமோ என்று அதிசயித்தது உண்டு.அப்பாவும் ஆவுடையப்ப மாமாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வேறு யாரும் இல்லை. காலையில் என்றால் கீழ் வரிசை வீடுகளின் திண்ணையில் பேசிக் கொண்டிருப்பார்கள். காலையில் தினமணி கிடக்கும்.தினமணி ஞாயிறு அன்று, தினமணி சுடர் என்று வரும் .அதில் சினிமா, ராசி பலன்,ஒரு சிறுகதை,. சிறுவர்களுக்கான ஒரு தொடர் கதை எல்லாம் வரும்.அதன் அமைப்பே குறுக்கு வசத்தில் இருக்கும்.நாலு பக்கத்தில் சினிமா இரண்டு பக்கங்களில் அகல வசத்தில் வரும். அதைப் பார்க்கப் போவேன்.அன்று அப்படிப் போனதுதான். வெயில் சற்று ஏறி ஒன்பது மணி வாக்கில் எல்லாரும் கலைந்திருப்பார்கள். உழவுக்காரர்களும் பண்ணையாட்களும் வந்து நில புலன்கள் பற்றிய சமாச்சாரங்களைத் தெரிவித்து ``தெக்க வந்த குண்டுல(குண்டு நிலத்துல) கொஞ்சம் சீனி ஒரம் போட்டா தேவலை, மாட்டு கழுத்துப் புண்ணுக்கு கொஞ்சம் தென்ன மரக் குடி எண்ணெய் போடனும்.’’.என்று எதையாவது அவரவர் பயிர் வைக்கும் நிலங்களின் சுவான்தார்களிடம் சொல்லி, ஆக வேண்டியதைப் பார்த்துப் போவார்கள்.அதெல்லாம் முடிந்திருக்கும் போல.அப்பா பொதுவாக என்னை அதிகம் சத்தம் போடுவதோ அடிப்பதோ கிடையாது.சாயந்தரம் நண்பர்களுடன் சும்மா தெரு வீதி வலம் போகிற போது கூட, நானும் உடன் வருகிறேன் என்றால் சரி என்று சொல்லி விடுவார்கள்.அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று நினைவில்லை,திடீரென்று மாமா, ஏதோ விடுகதை போடுகிற தொனியில், ``ஏல பழைய குருடி கதவைத் திறடி, பண்டைய குருடி.......’’என்று சொல்லி நிறுத்தினார். நானும் `பண்டைய குருடி..’.என்று சொல்லி பதிலை எதிர்பார்த்து நிறுத்தினேன்.உனக்குத் தெரியாதா, உங்க அப்பாட்ட கேளு என்றார்.நான் சிரித்த மானிக்கே அப்பாவின் முகத்தைப் பர்த்தேன்
அது சட்டென்று இருண்டது.ஏனென்று சுதாரிப்பதற்குள் முதுகில் பலமான அடி, ``போல அந்தப்பக்கம், இன்னம பெரியவங்க பேசற பக்கம் வந்தே இருக்கு’’, என்றார்.அழுத படியே ஓடி வந்தவன் தான்.அதிலிருந்து பெரிசுகள் பேசற பக்கம் போறதே இல்லை.மாமா சொன்ன விடுகதைக்கும் விடை தெரியவில்லை.

அப்போதெல்லாம் தெருவுக்கு ஆத்தண்ணி (ஆற்றுத் தண்ணீர்) பைப்பு வரவில்லை. ஒரு ரெட்டை மாட்டு வண்டியில் மூன்று பெரிய கிடாரத்தை கார் டயர் மேல் வைத்து ஆற்றிலிருந்து தண்ணீர் பிடித்து வீடுகளுக்கு சப்ளை செய்வார் ஒரு அய்யர்.ஒரு குடம், ஒரு அணா.(ஆறு நயா பைசா) வசதியுள்ள வீடுகளில் தினமும் குடிப்பதற்கு ஒரு குடமோ இரண்டு குடமோ வாங்கிக் கொள்ளுவார்கள். `கல்யாணம் கார்த்திகை’ என்றால் ஒரு வண்டி ஸ்பெஷலாகச் சொல்லி வாங்குவார்கள்.வீடுகளிலேயே கிடாரங்கள் இருக்கும். கிடாரம் என்றால், மிகப் பெரிய குடம் மாதிரி. ஒரு எட்டு வயதுப் பையன் நின்ற மானிக்கே ஒளிந்து கொள்ளலாம். அய்யருக்கு ஒரு கை சூம்பிப் போயிருக்கும்.அதை வைத்துக் கொண்டு இந்த மனுஷன் எப்படி ஆற்றில் இறங்கி குடம் குடமாய் தண்ணீரெடுத்து நிரப்பி அம்புட்டுத் தூரம் வண்டியை ஓட்டி வந்து தெருத் தெருவாக சப்ளை செய்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். எப்போதும் வெற்றிலை போட்ட வண்ணமாய் இருப்பார்.வெற்றிலை எச்சியுடன் கெட்ட வார்த்தை சரளமாக ஒழுகிக் கொண்டேயிருக்கும்.
கல்யாண வீட்டுக்கு சப்ளை என்றால் கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னமேயே ஆரம்பித்து விடுவார்.எல்லா தவசுப் பிள்ளைகளும் அவருக்குத் தெரியும். `` யார்ல அவன் சமையல்.எந்தப் பழுவம்ல சமையல், பேராச்சியா, பழனியா..’’ என்று கேட்டுக்கொண்டே ஆக்குப்பிறை(ஆக்கும் பிறை ?) வரை வருவார்,ஏல பழனி, பழுவா, மைனர் பிள்ளை வீட்ல செஞ்ச மாதிரி ரசத்தில உப்பு அள்ளிப் போட்றாதல. ரசமாக்கொண்டு செரியாப் போச்சு.சாதத்தை உருட்டிப் போட்டு. பச்சை அப்பளத்தப் போட்டு செரி பண்ணிட்டெ, அது யார்ல குலாமா,(கூப்பிடறதுதான் குலாம்,பேர் எதோ இந்துப் பெயர்தான்.) காய் நறுக்கறது, கூட யாரு, இந்தக் குறத்தியா,இவளை விட மாட்டானெ பழனி , நல்ல தூப்புக்காரியே கிடையாது பாரு என்று சளம்பித் தள்ளி விடுவார்.’
இதற்குள் நூறு கெட்ட வார்த்தை வேறு வந்திருக்கும்.``வேய் அய்யரே என்ன துவையல் ஒரு சட்டி தள்ளிட்டேரா,உமக்குன்னு கொடுக்காம் பாரு மிக்கேல் ஆசான் வைத்தியர், அரிஷ்டமும்,அபினும்..
உக்காந்து சாப்பிட்டுட்டுப் போம் வே சளம்பாம” என்று சமையல் பண்ணுகிற தவசுப் பிள்ளை சொல்லுவார்.அதற்குள் அய்யர் இலையைப் போட்டு உக்காந்திருப்பார்.``ஏவ்ட்டி இவளே சாதத்தைப் போடுறீ,என்ன வச்சிருக்கப் போறான் மூர்த்தம் நாளக் கழிச்சில்லியோ சாம்பாரும் வாழக்காயும்தான் இருக்கும், அதான,ரைட்டுத்தான,பழைய குருடி கதவைத் திறடீ, பண்டையக் குருடி........திறடீன்ன கதை தான்’’ என்று ரகசியம் அவிழ்ப்பார். அவிழ்த்தார், ரெண்டு மூனு வருஷம் கழிச்சு.பாவம், அவர் சாப்பிடும் போது பார்க்கிறவனுக்கு அழுகை வந்து விடும். இடது கைதான் விளங்கும். சாப்பாடெல்லாம் சிந்தாது சிதறாது. ஆனால் தண்ணீர் குடிக்கத்தான் திண்டாடுவார்.எச்சிக் கையால் செம்போ, தம்ளரோ எடுத்துக் குடிக்க வேண்டாமென்று சூம்பிப் போன வலது கையிலெடுத்து இடது முழங்கையால் தாங்கிக் குடிக்க முயல்வார் மேலெல்லாம் வழிந்து இலையெல்லாம் ஓடும்.சோறு கறியெல்லாம் தண்ணீராகி விடும். ஏம் வே தின்னப்பறம் தண்ணிய குடிச்சா என்ன என்று தவசுப் பிள்ளை கரிசனமாகச் சத்தம் போடுவார். இலை எடுக்கும் பெண்ணோ,`சாமீ நான் வேண்ணா தண்ணி தரட்டா’ என்றால் நீ வேற தாடி பொண்ணே’ என்று சிரிப்பு வேதாளம் மறுபடி முருங்க மரமேறும்.ரெண்டு மூனு கல்யாணத்தில நான் பார்த்திருக்கிறேன்.
ஆத்தண்ணி வந்த பின்னும் தெருவின் அடி பைப்பிற்கு மவுசு குறையவில்லை.பகல் நேரத்தில் நங்கையாருக்கு மட்டும் என்றில்லை, வேறு பலருக்கும் பல விதத்தில் பிரயோஜனமாய் இருக்கும்.ஆறுமுகம் பிள்ளை சமையல் பாத்திரக் கடையில் வேல பார்க்கும் தங்கைய்யா கல்யாணம் விசேஷம் முடிந்து பண்ட பாத்திரங்களையெல்லாம் பொறுக்கி எடுத்து வந்து. மிச்ச சாப்பட்டையெல்லாம் வழித்து எடுத்து தனியே வைத்து விட்டு, அண்டா, டவராசெட். கஞ்சிக்கூடை, தூக்கு வாளி, நாலு குழிசட்டி
கரண்டி, கண் அகப்பை, அன்ன வெட்டி, குத்துப் போணி என்று சகலத்தையும் கழுவுவான். பருப்பு வாசனையும் கொத்தமல்லி வாசனையும் சீரகவாசனையும் தெருப் பூரா அடிக்கும்.அதை வைத்தே சொல்லி விடலாம் சமையல் யாரென்று.
அன்று பிற்பகல், படித்துக் கொண்டிருந்தேன்.மத்யானம் விவித பாரதியில் புது இந்திப் பாட்டாகப் போடுவான்.கிஷோர் குமார் உச்சத்தில் இருந்த நேரம்.`கைடு’ படப் பாடல் முழங்கிக் கொண்டிருந்தது..ஏற்கெனெவே ஜப் ஜப் பூல் கிலேவிலிருந்து -`பர் தேசியோன் சினா அங்கியான் மிலானா’(பாட்டின் சரியான வரிகள் எல்லாம் தெரியாது) என்று கல்யாண்ஜி ஆனந்த்ஜி.. மெல்லிசைத்து முடிந்திருந்தது.தெருப் பம்பில் சண்டை போடுகிற சத்தம் கேட்டது.அடி பைப்பில் சண்டையே வராது. அதுவும் தங்கைய்யா சண்டையே போட மாட்டான்.பெண்குரலும் சற்று புதிதாய் இருந்தது.ரேடியோவைக் குறைத்து விட்டு எட்டிப் பார்த்தேன்.ஏழு வளவுக்கு புதிதாக வந்திருந்த கிருஷ்ணமக்கா தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.அவள் மாப்பிள்ளை துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.அவர் தம்பி என் கிளாஸ்மேட்.அவன் கூட சொல்லியிருந்தான்,எங்க அண்ணான் உங்க தெருவுக்கு வீடு மாத்தி வந்திருக்கான் என்று.கீழே இறங்கிப் போய் தங்கைய்யாவிடம் என்ன என்று கேட்டேன்.. அதற்குள் அவன் அமந்து(அமைதியாகிப்) போயிருந்தான்.அந்த அக்காவிடம் நான் குமாருக்கு ஃப்ரெண்ட், நீங்க தான் அவனோட் மதினியா என்று கேட்டதும், தங்கைய்யா, அய்யா உங்களுக்கு வேண்டியவங்களா, கழுவிக் கொட்டிகிட்டு இருக்கும் போது தெரியாம மேல பட்டுட்டு. கவனிக்கலை,என்றான்.அந்த அக்காவும் தணிந்து போயிருந்தார்கள்.ஒரு குடம் தண்ணியை தங்கைய்யாவே அடித்துத் தர அதை இடுப்பில் வைத்த படியே தம்பி, வீட்டுக்கு வாங்களேன் என்று கூப்பிட்டார்கள்.தவிர்க்க முடியாதபடி இருந்தது,.அக்காவின் மூக்கும் முழியும் முன்கை மென் மயிரும்..சரி என்று கூடப் போனேன். அண்ணாச்சி இருக்காங்களா வீட்ல என்று வீடு வந்ததும் கேட்டேன்.. அந்தா தூங்குதாகள்ளா, ராத்திரி செகண்ட் ஷோ பார்த்துட்டு வந்து.இப்படி மத்தியானம் வரை தூங்கற ஆள் உண்டா நீங்களே சொல்லுங்க தம்பி என்று சொல்லி முடிக்கும் முன்னேயே அவர் எழுந்து கொண்டார். தம்பி வாங்க என்றபடியே. கடையில் பார்த்திருக்கிறேன் அவரை.தம்பி வீடு மேக்க தான இருக்கு, என்று பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் காபி வந்தது.சுமாரான காபித் தூள் என்பது நீட்டும் போதே தெரிந்தது.காபி போடவே சற்று அடுப்புடன் போராடியிருப்பாள் போலிருந்தது. நன்றாகவே வேர்த்திருந்தது உடலெங்கும்.அடுப்படி, பெட் ரூம் எல்லாமே ஒரு கட்டுக்குள்தான் பன்னிரெண்டுக்குப் பன்னிரெண்டு சதுரம் தான் வீடு.. சேலை முந்தானையால் முகம், உடல், முன்கை எல்லாம் துடைக்கும் போது அடி வயிற்றில் இறங்கும் மயிரொழுங்கு, பொருநராற்றுப் படையின் விறலியை, யாழ் வருணனையை நினைவுறுத்தியது.கொஞ்சம் கிளர்ச்சியுடன் வெளியே வந்தேன்.

வரவேற்க, தெருவில் நண்பர்கள் கேலியான முகத்துடன் தயாராய் இருந்தார்கள்.போங்கடா இது வேற. அவங்க கொழுந்தன் எனக்கு நல்ல ஃப்ரெண்டுடா என்றேன்.அதையெல்லாம் கேட்க யாரும் தயாராயில்லை.அப்புறமாக வெவ்வேறு சமயங்களில், .நண்பர்கள் கூட ரொம்ப நடிக்காதல, என்றோ நல்ல சான்ஸ்டா என்றோ சொல்லுவார்கள். அவள் தெருவில் இருக்கும் வரை நான் மரியாதையாகவே நடந்து கொண்டேன்.தெருவை விட்டு வீடு மாற்றி இன்னொரு தெருவின் பத்துக் குடிக்கு, குடி போய் விட்டதாக கோயிலில் ஒரு தரம் பார்க்கும் போது சொன்னாள்.அப்போது ஆள் ரொம்ப மினு மினுப்பாக இருந்தாள் சேலையெல்லாம் பணக்காரத் தனமாக இருந்தது.நானும் இடைப் பட்ட காலத்தில் கொஞ்ச நாட்கள் வெளியூரிலிருந்தேன்..கோயில் போய் விட்டு தெருவிற்கு வந்து, நீளத்திண்ணையில் அமர்ந்து பெரிசுகளெல்லாம் போன பின் பேசிக்கொண்டிருந்த போது விஷயம் ஒவொன்றாகத் தெரியவந்தது. ஏல நம்ம தெரு மாதிரி மத்த தெருல்லாம் இருக்குமா.அங்க போய் அண்ணாச்சி துணிக்கடை மேனேஜராயிட்டாரு, உங்க மதினி முதலாளியாயிட்டா. அப்போ முதலாளி?என்றேன். மதினியோட ஐக்கியமாயிட்டாரு.என்று சொல்லிச் சிரித்தார்கள்.’அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைதது இப்போது புரியுதம்மா...”என்று யாரோ பாடுவது மாதிரி இருந்தது.


.

No comments: