Sunday, November 9, 2008

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கின ஒளியினைப்போலே.........
_________________________________________________________________________
தினமும் ஆற்றில் குளித்தால் தான் குளித்த மாதிரி இருக்கும்.ஏதாவது காரணத்தால் திடீரென்று இது நாலைந்து நாள் தடைப்பட நேர்ந்தால் அவ்வளவுதான்.அப்புறம் போகவே தோணாது.திடீரென்று ராத்திரி சபை கூடி சடவாரிக் கொண்டிருக்கையில் `ஏ நாளையிலிருந்து ஆத்துக்குப் போவோமாடெ’ என்று யாருக்காவது யோசனை உதிச்சுரும் மறுநாள் காலையில் திருப்பாவை பாடி எழுப்புகிற மாதிரி பெரிய கோபால் அல்லது கணபதி காலையில் எழுப்புவான்.தெருவின் மேல்க் கோடியில் இருக்கிற என் வீட்டில் தெருவில் நின்றவாறே சத்தம் கொடுத்துவிட்டு வேறு சேக்காளிகளை கூப்பிடப் போய்விடுவான். கால் மணி நேரத்தில் எல்லோரும் தெரு முனையில் இருக்கும் சொள்ள மாடன் கோவில் முன்பாக, அதற்கு சற்று தெற்கு வடக்காக நின்று கொண்டிருப்போம்.சுடலை மாடன் சன்னதிக்கு இரண்டு புறமும் நீளமான மேல ரதவீதி.காலை நேரமாதலால் கடைகள் எல்லாம் அடைத்திருக்கும். கீழ்ப் புறத்தின் உயரமான, நீளமான கடைப் படிகளில் வெவ்வெறு விதமான மனுஷர்கள்.தவசுப் பிள்ளைகள், பாடை தூக்குகிற உழக்குஅண்ணன், (ஆள் குள்ளமாக உழக்குப் போல் இருப்பான் அதனால் உழக்கண்ணன்) போன்றவர்கள்.வெள்ளை அடிக்கிறவர்கள், எங்களுக்கு மூத்த அண்ணாச்சிமார் அரசியலில் தீவிர ஈடுபாடு உடையவர்கள் உக்கிரமாக செய்திகளை வைத்து விவதங்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள்...நாங்கள் கூடுகிற ஆறரை மணி சுமாருக்கு சரியாக சாவடி வீட்டு காடினாவில் (வண்டிகள் நிறுத்திய இடம்) குடியிருக்கிற பட்டு நூல்க் காரி(சௌராஷ்ட்ர வகுப்புக்காரப் பெண் நெல் அவித்துக் கொடுப்பது, அரப்பு வெந்து காயப் போட்டு திரித்து விற்பது போன்ற காரியங்களில் ஜீவனம் நடத்துகிற வாவரசி(வாழ்வரசி). அரசன் போன இடம் தான் முப்பது வருஷமாகத் தெரியாது.) சொள்ள மாடன் கோயில் உண்டியலை அதற்கு முன்னால் உள்ள லேம்ப் போஸ்டில் கட்ட வருவாள்.முந்தின நாள் இரவில் முதல் ஆட்டம் சினிமா முடிந்து வீடு திரும்புகிறவர்களில் யாராவது ஒன்றிரண்டு பேர் காசு போடலாம் என்ற எதிர்பர்ப்பில் கோயில் நடையிலேயே ராவு பத்து பத்தரை வரை உட்கார்ந்திருந்து. உண்டியலை அவிழ்த்துக் கொண்டு போய் வீட்டுல் பத்திரமாக வைத்திருப்பாள்.அவள் வரவும் ஐம்பது அறுபது வயசு பெரிய்ய அண்னாச்சிமார், அப்பாமார்., பலசரக்குக் கடை. காசுக் கடையில் வேலை பார்க்கிறவர்கள் தங்கள் வழக்கமான பார்லிமெண்டைக் கலைத்து விட்டு `சவம் எங்க நாடு உருப்படபோது’ பாணியில் ஏதாவது திருவாய் மலர்ந்தபடியே நகரத் தொடங்குவார்கள். அதில் யாராவது ஒருத்தர் பெரும்பாலும் பச்சைக்கிளி(இவன் தான் எனக்கு சைக்கிள் சொல்லித் தந்தவன்) மணியோட அப்பா சேதுச் செட்டியாராத்தான் இருக்கும் ஐந்து பைசாவோ பத்து பைசாவோ உண்டியலில் போணி பண்ணிவிட்டுப் போவார்.அவர் நகண்டதும் பசங்க கேலி ஆரம்பிச்சுரும். ஏல என்ன, நேத்து யார்ல கனவுல வந்தா இந்தியா இலங்கை அமெரிக்கான்னு உலக மேப்பே இருக்கு லுங்கியில. என்னல இவ்வளவு கரை.ஆத்தை நாற அடிக்கதுக்குன்னே வாங்கல..என்று யாராவது யாரையாவது வம்புக்கு இழுக்கறது நிதசரி (தினசரி) வாடிக்கை.
கோயிலுக்கு கொஞ்சம் வடக்க தள்ளி ஒம்பதாம் நம்பர் பஸ் நிக்கிற இடம்.அது என்னவோ எழுதப் படாத சட்டம் மாதிரி அந்த பஸ் மட்டும் அங்கேயே நிற்கும்.அந்த பஸ் ராஜவல்லிபுரம் போற பஸ். (வல்லிக்கண்ணன் அண்ணாச்சியின் ஊர்).அது மேற்கு ஓரம் என்பதால் காலை வெயில் அந்தப் பக்கம் லேசாக விழும்.ஒரு நாள் வெயில் பாதி, நிழல் பாதி தன் சிவந்த மேனியில் விழ மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கிய ஒளியினைப் போல ..ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் .நல்ல அளவான உயரம். நறுவிசாய்க் கட்டிய சேலை.உயரத்திற்கேற்ற மாதிரி நீளமான கைகளில் ஒன்றிரண்டு புத்தகம், டிஃபன் பாக்ஸ் ஆகியவற்றை மார்போடு அணைத்தபடி கோயில்ச் சிலை மாதிரி சற்றே கழுத்தைச் சாய்த்து நின்றாள். முதல்த் தரம் பார்த்த போதே எல்லாருக்கும் மூச்சு நின்று போனது. அந்த இளங்காலை நேரத்திற்கே ஒரு அர்த்தம் வந்தது போலிருந்தது மறு நாளும் அவளைப் பார்த்த போது.ஒரு நாலைந்து விடலை வயசுப் பசங்க தன்னையே பார்க்கிற குறு குறுப்போ கடு கடுப்போ இல்லாத,. சிரிப்பை அப்போதுதான் விழுங்கின மாதிரியான முகம்.ஆற்று வழி நெடுக அவளைப் பற்றிய பேச்சுத்தான். ஒருத்தன் வைஜயந்தி மாலா என்றான். ஒருத்தன் ப்ரவின் சுல்தானா என்றான். போங்கடா மும்தாஜ் தாண்டா. உதட்டைப் பாத்தியாடா (அந்தக் கால இந்தி நடிகை, ராம் அவுர் ஷ்யாம், கிலோனா, பூந்த் ஜோ பன் கயே மோத்தி,சச்சா ஜூத்தா. ஜிக்ரி தோஸ்த் என்று இந்திசினிமாவை மும்மு கலக்கிக் கொண்டிருந்த நேரம் அது.)என்றான் கணபதி.வீடு வந்ததும் முதல் வேலையாக ஆம்ரபாலி வைஜயந்தி படம் போட்ட ஈகிள் ஃப்ளாஸ்கை நான் எடுத்து வந்து காட்டியதும் ஆமடெ அப்படித்தான் தோனுது ஆனா பொட்டு இல்லையே என்ற அதிருப்தியும் இருந்தது.எல்லாருமே போங்கடா இவங்க இவங்க தான்,.என்று தீர்மானம் போட்டோம் நாங்கள் அவளை எங்களைப் பார்க்கிலும் சற்று வயது கூடிய பெண்ணாகவே முடிவு கட்டியிருந்தோம். அது சரியென்று காந்திராஜன் செய்தி திரட்டிக் கொண்டு, அவசர அவசரமாக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த பொறுப்போடு ஒரு நாள் இரவு அரட்டைக் கச்சேரியின் நடுவில் வந்து சொன்னான்.எவம்ல அது வைஜயந்தின்னவன், அவங்க பேர் கதிஜா, சங்கர் நகர் ஸ்கூலில் டீச்சரா இருக்காங்க, வீடு பாப்புலர் டாக்கீஸ் பக்கம், ஆனா ரோட்டிலேருந்து பார்த்தா வீடு தெரியலை, ஒரு முடுக்குக்குள்ள இருக்கு என்றான்.
இதிலெல்லாம் அவன் கில்லாடி.அவன் அப்பா கிறித்தவப் பாதிரியார். செல்லமா பொந்துக் கண்ணன் என்று கூப்பிடுவோம்.கண்கள் சற்று குழி விழுந்திருக்கும்.ரொம்ப ரொம்ப நல்லபையன் சூது வாதே தெரியாதவன்.என்ன கேலி பண்ணினாலும் கோவமே வராது..ரொம்ப அதிகமும் பேச மாட்டன். பேசினாலும் உளறல் திலகம்தான்.எங்க வீட்டுப் பிள்ளை நாகேஷ்தான் .ஒரே ஸ்பூனரிசம்.. ஒருசமயம், .அதேகண்கள் படம் போய்விட்டு வந்தான், அவன் போகும் போது படம் ஆரம்பித்துவிட்டது, எந்தக் கட்டத்துக்க்கில (ஸீன்) போனே என்று கேட்டதும் `அவ தோக்குல தூங்குவால்ல’ அந்தக் கட்டத்துக்கு போனேன். என்றான்.ஏல தோக்குலயா, தோப்புலயா என்னல சொல்லுத என்று கேட்டால் அதாம்ல ஜி.சகுந்தலா பார்ப்பால்லா, அப்பத்தான். ஏ மூதேவி உணர்ச்சி வசப்படாம சொல்லுலெ என்றதும் சற்று நேரம் ஊமையாகி விட்டான்.கொஞ்ச நேரம் கழித்து மெதுவா ஆரம்பிச்சான், அதாம்ல அவன் கயத்தில தொங்குவாம்ல அப்ப என்றான். எடு வாரியல, மூதேவி, தூக்கில தொங்குறதை தோக்குல தூங்க வச்சிட்டயேல என்றதும் சிரிப்பு வெடி ஒன்று பரவியது.இப்படித்தான் எதையாவது உளறுவான் கொடிய மடிச்சு வேட்டில போடு என்பான்.சலாவே சளாமி ,என்பான்(சவாலே சமாளி) . ஆனால் பொம்பளப் பிள்ளைங்க பேருன்னா உளறல் இருக்காது. ஏல அந்தா போறால்லா அவ பேரு என்னன்னா , மாலா என்பான், ஜீவா என்பான். ஏல, எப்ப கேட்டாலும் கரெக்டா ரெண்டெழுத்துப் பேராவே சொல்லுதியே, அவ அப்பன் வச்ச பேரா இல்ல நீ வச்ச பேரால என்றால் சிரிப்பான்.அநேகமாக சரியாய்த்தான் சொல்லுவான்.கிறிஸ்துமஸ் தோறும் அவன் வீட்டில் பிரியாணி சாப்பாடு. மெர்ரி கிறிஸ்மஸா கறி கிறிஸ்மசா என்று தோன்றுகிற அளவுக்கு செழிக்க செழிக்க திம்போம். அவங்க அம்மாவே இதுகள்ளாம் என்ன வெள்ளாளப் புள்ளைகளா என்னது. ஒரு ஆடு அறுத்தாலும் காணாது போல இருக்கெ, நான் வேலைக்காரங்களுக்கெல்லாம் என்னத்த கொடுக்க, சட்டி தான் இருக்கு என்று விளையாட்டாய்ச் சலித்துக் கொள்ளுவார்கள். ஆறு ஏழு வருஷ பழக்கத்தில் அவங்க பேசியதே இந்த வார்த்தைகளாத்தான் இருக்கும்.அவளவு அமைதியான சுபாவம் .ஒரு சமயம் எங்க ராஜனுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடேன் அவன் அதால தான் பாஸே பண்ணமாட்டேங்கான். என்று சொன்னர்கள். அவன் கடைசி வரை பாஸ் பண்ணவே இல்லை.இப்போ எங்க என்ன `உறளி’ க்கொண்டிருக்கிறானோ இல்லை உருப்படியாய் இருக்கிறானோ. நிச்சயம் நல்லாத்தான் இருப்பான். ரொம்ப நல்ல பையன்.

பாப்புலர் டாக்கிஸ் பக்கம்தான, நாளைக்கே ரூட்டைப் பிடிச்சுருவோம். என்று முடிவாகியது. காலையில், ஆறாவது ஒண்ணாவது., முத வேலையா பாப்புலர் டாக்கீஸ் போகிற வழியிலிருக்கும் சிவா தெருவில் துப்பு வெட்டப் புறப்பட்டேன். தெரு முக்கில் சங்கரின் எண்ணைக் கடை.அவன் எண்ணைச் செட்டியார்.ஆள் நன்றாயிருப்பான்.சுருண்ட முடி கூரான நாசி .என்னைப் போல் நெற்றியில் குங்குமம் தீற்றியிருப்பான்.எனக்கு அந்தப் பழக்கம் 70 களில் தான் வந்தது.கடைக்கு வருகிற பெண்களிடம் அவனுக்கு ஏக மரியாதை. அற்புதமான கிண்டலுக்குச் சொந்தக்காரன்.அதற்காகவே, அவனுக்காகவே மற்ற பலசரக்கு சாமான்களை மற்ற கடையில் வாங்கினாலும் ஐம்பதோ நூறு மில்லியோ, எண்ணை வாங்க மட்டுமே(!) அவன் கடைக்கு வரும் பெண்கள் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும்.எங்கள் தெருப் பெண்ணே குழந்தையை பக்கத்துப் பள்ளியில் விட்டு விட்டு அவனிடம் சடவாரிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தது ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நினத்துக் கொண்டிருக்கும் போதே லாலா மணி வந்தவன், . அவனுக்கு அந்தத் தெருதான், சொன்னான் சரி சரி விடு. தர்ம காரியம் நடக்கட்டும், தள்ளி வா என்று.எனக்கு ஆச்சரியம் தாங்க வில்லை, அந்தப் பெரிய இடத்துப் பெண்ணோ அதற்கப்புறம் என்னைப் பார்க்கும் போது கொஞ்சங்கூட கலைந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.பெரிய செட்டியார், பையனை விட இந்த விஷயத்தில் கில்லாடி என்று கேள்வி. அது கிடக்கட்டும், சங்கர் கடை முன்னால் பொதுவாய்ப் பசங்களைக் கூடி நிற்க விடமாட்டான்.லாலா மணி நிற்பான்.ஆனால் அவன் ஆள் வந்தால் நகர்ந்து விடுவான். நானும் நிற்பேன், என்னை சற்று அனுமதிப்பான். காரணம், செட்டியார் தலை முழுக்க தும்பைப் பூ. அவ்வளவுக்கும் சாயம் அடிக்கும் போது நான் பார்த்து விட்டேன்.
அவன் அப்பத்தான் கடை திறந்திருந்தான். வே, என்னவே காலையிலேயே இந்தப் பக்கம் என்றான். அன்றைய தினத் தந்தியில், அப்போதெல்லாம் மதுரைப் பதிப்புதான் திருநெல் வேலிக்கும், படகோட்டி நவராத்திரி, முரடன் முத்து, படங்களின் நூறாவது நாள் விளம்பரம் வந்திருந்தது.மதுரை சென்ட்ரலில் எங்க வீட்டுப் பிள்ளை போடு போடென்று போட்டுக் கொண்டிருந்தது. நான்கு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வசூலைத்தாண்டி ஒடிக் கொண்டிருந்தது .நாடோடி மன்னனுக்குப் பிறகு இதுதான் இந்த சாதனையை செய்திருக்கிறது.அது மிகப் பெரிய தங்கம் தியேட்டரில் வந்தது. இது சென்ட்ரல். இரவும் பகலும் படமும் அப்பொழுதுதான் வந்து நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது.கடைசிப் பக்கம் பூராவும் அநேகமாக இரண்டு பத்தி ஆறு செ.மீ சினிமா விளம்பரங்களாகவே இருக்கும் அதில் படத்தில் வருகிற வசனம் , பாடல்வரிகள்., கை தட்டல் வாங்கும் காட்சிகள்(’”காதல் என்றால் தேன் கூடு/அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு”-ராஜ சேகர், என்று இரவும் பகலும் படத்திற்கு தினமும் பாடலின் இரண்டு வரிகளை எடுத்துப் போடுவார்கள்.)யார் அந்த திகில் அழகி விளம்பரத்தில் “கூட விலையானாலும் கொடுத்து வாங்குவோர் –திருச்சி சோலை பிலிம்ஸ்-வெளியீடு”)அதிகப் பக்கங்களுடன் வரும் மதுரைப் பதிப்பின் இந்த மாதிரி சுவாரஸ்யங்களுக்காகவே தந்திபடிக்க சங்கரன் கடைப் பக்கம் காலையில் தவறாமல் வருவான் லாலா மணி.எல்லாருக்குமே இந்த மாதிரி விளம்பரங்கள் பிடிக்கத்தான் செய்யும். கொஞ்ச நாளில் திருநெல்வேலிப் பதிப்பு வரத்தொடங்கிய போது மணிதான் ரொம்ப வருத்தப்பட்டான்.
கொஞ்ச நேரம் இந்த சினிமா சமாச்சாரங்களைப் பேசி விட்டு நைசாக கதிஜா பற்றி விசாரித்த போது ஒரு அம்மா வந்தாங்க அம்மான்னும் சொல்ல முடியாது. முப்பது முப்பத்தி ஐந்து வயது அத்தை.அந்தச் சிரிப்பும் சாயலும் யாரையோ நினைவு படுத்தியது.
ஏதோ சில்லரை கேட்டார்கள் சின்னச் செட்டியார், சில்லரை சேரவில்லைஎன்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ காசாய் தந்து அப்புறம் கொடுங்க மாமி என்றான்.சரி என்று சிரிப்பிலேயே சொல்லி அவங்க நகர்ந்தது.ம் புதிரை விடுவித்தான்.இவங்க பொண்ணுதான் நீ ரூட் போடறதும் என்று.ரூட்டெல்லாம் போடலை, .ஒரு மரியாதை நிறைந்த பார்வைதான் அவங்க மேல என்கிற மாதிரி அசடு வழியப் பேசின நினைவு..சங்கரனுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை வரவில்லை, விளக்கினாலும் புரியாது. ஏன்னா அவன் ரூட் அப்படி.அதற்கு காரணம் இருந்தது.சரிவே அவங்க அம்மா யாரு தெரியுமா, சாமிசன்னதியில நம்ம மேடை வீட்டு முதலியார் வச்சுருக்காரே ஒரு டீச்சரை அவதான் என்றதும் யாரு ரங்கமணியா என்று சொன்னதும், அவளேதான் .அவ அக்காதான் இது.. அக்காவா என்று வாய் பிளந்து நிற்கையிலேயே சொன்னான். உம்ம மாதிரித்தான் நானும் ஆச்சரியப் பட்ட காலம் உண்டு.சரிப்பா ஆனா அந்தப் பெண் பேரு கதிஜான்னுல்லா சொன்னாங்க என்றதும், ஆமாவே அப்பா முஸ்லிம்தான். இதுவும் செட் அப் கேஸ்தான்.கேட்கக் கேட்க ஆச்சரியமாவும் இருந்தது. ச்சேய், இதுக்குப் போயா இவ்வளவு `பிரியாலம்’ காட்டினோம் என்றுமிருந்தது.தகவலகளை ராத்திரி, சபையில் பகிர்ந்து கொண்டோம்.அதுனால என்னல இப்ப என்பதுதான் எல்லாரின் முடிவாயிருந்தது. நல்லதுதானே எனபது சிலரின் அபிப்ராயமாயிருந்ததுஆனாலும் எனக்கும் பெரிய கோபாலுக்கும் மனசு கேட்கலை. இவ்வளவு அழகான, அம்சமான பொண்ணோட பிண்ணனியில் இப்படி ஒரு சோகமா என்று நாங்களாகவே அதற்கு ஒரு சோக பாவம் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினோம்
கொஞ்ச நாள், காலையில் அந்தப் பக்கம் லேசாகத் திரும்பி இன்னும் மரியாதை கலந்த பார்வை பார்ப்பதோட சரி. அந்தப் பெண்ணின் முகத்திலோ, ஆனால், அதே புஞ்சிரிப்பு, கனிவான முதிர்ச்சி.. வழக்கம் போல் முழுப் பரீட்சை(அன்யுவல் எக்ஸாம்) வந்து., ஆத்துக்கு போற பழக்கம் தற்காலிகமா நின்னுட்டு.அவங்களையும் பாக்கலை.பரீட்சையெல்லாம் முடிஞ்சு லீவு ஆரம்பித்ததும். மறுபடி ஆத்துக்குப் போற வழக்கம் ஆரம்பிச்சுது..ரத வீதிக்கு வந்த மறு நிமிடமே பார்வை அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் திரும்பியது..இல்லை அவளைக் காணவில்லை எல்லார் முகத்திலும் அதே கேள்வி”எங்கலெ காணும்?” பதில் யாருக்கும் தெரியவில்லை.அவள் நிற்கும் இடத்தில் கோடை வெயில் உக்கிரமாய் அடித்த மாதிரி இருந்தது.
குமார் அண்ணாச்சி,சங்கர் பாலிடெக்னிக்கில் வேலை பார்ப்பவர்., எப்போதும் டிரெயினில் தான் போவார். எப்போதாவது ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் போவார்.அவருக்கு செல்லப் பெயர் இஞ்சிக் குமார். தினமும் ஜிஞ்சர் பரீஸ் சாப்பிடுகிற ஒரு சிலரில் அவரும் ஒருத்தர். மது விலக்கு அமலில் இருந்த நேரம். அது.ரொம்ப ஜாலியாகப் பேசுவார்.அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, அவரும் எங்கள் தெருவில் இருந்து இன்னொரு தெருவிற்குப் போன ரோஜா விற்கும் (பேருக்கு ஏத்த மாதிரி ரோஜாதான்) இணை பிரியாத அன்பு என்று. அது நிறைவேறாமல்த்தான் அவர் தேவதாஸ் ஆனார் என்று. குமார் அண்ணாச்சி பஸ்ஸிலிருந்தவாறே கேட்டார், ஏலே கள்ளப் பயலுகளா டீச்சரைக் காணுமேன்னு தேடுதீங்களா, என்று. எங்கள் முகத்தில், அகப்பட்டுக் கொண்ட சிரிப்பு.. யாரோ சொன்னோம், ஆமா ஆண்ணாச்சி. டீச்சரா அவங்க ? என்று தெரியாத மாதிரி நான் கேட்டேன். பொடியனைப் பாருலே, நீ எங்கேல்லாம் விசாரிச்சேங்கறது எனக்குத் தெரியும்டே..என்று கேலியாய்ச் சிரித்தார்.சரி, செட்டியார் சொல்லிருப்பாரு என்று நினைத்துக் கொண்டேன்.. கள்ளி, ஆள் இல்லை தெரியுமாப்பா என்று பொதுவாகச் சொன்னார்.அவர் எல்லாப் பெண்களையும் அநேகமா, கள்ளி என்று அடை மொழி சேர்த்துதான் சொல்லுவார். `கள்ளி ராஜம்மா’ எங்கடே போய்ட்டு வாரா, ஏ அது யாருடே `கள்ளி சரோஜினி’ கூட என்று தான் பேசுவார். .அவரே தொடர்ந்து சொன்னார். கள்ளி, டீச்சர் தீ வச்சுக்கிட்டு செத்துப் போச்சு.அம்மாவோட தகராறு..அதற்குள் பஸ் நகர்ந்து விட்டது.
அந்த ஒரு பஸ்தான் அங்கே நிற்கும். அதுவும் போன பின்பு அந்த இடம் சுத்தமாய் வெறுமையாய் இருந்தது.நாங்கள் ஆற்றுக்குப் போகாமலேயே தெருவுக்குள் வந்தோம்.ரொம்ப நேரம் பேசாமலேயே நின்று கொண்டிருந்தோம்.அப்படியே கலைந்து வீட்டுக்குப் போய்விட்டோம்.
அப்பாவிடம் நீ இந்த வீட்டுக்கு இனிமேல் வர வேண்டாம் என்று சண்டை போட்டிருக்கிறாள்.வேலை கிடைத்த திமிரா என்று
அவர் கழுத்தைப் பிடித்து தள்ளினாராம். அம்மியில் மோதி ஆள் காலி. ஆனா தானாவே தீ வச்சுக்கிட்டு செத்துப் போனது மாதிரி கதை பண்ணிட்டாங்க.இது எண்ணெய்க் கடை சங்கரன் சொன்ன சங்கதி.எது உண்மையோயோ தெரியாது. தீயில் கருக வேண்டிய அழகா அது என்று அங்கலாய்த்து மாளவில்லை எங்களுக்கு. காலைச் சூரிய ஒளியினை எதிர்ச் சாரி கட்டிடம் பாதி மறைக்க
நிழல் பாதி வெளிச்சம் பாதி விழுங்கும் அழகைப் பார்த்த அன்றே எனக்குள் பி.பி ஸ்ரீனிவாஸ் பாடினார்.,பாசம் படத்தின் நாங்கள் ரசிக்கிற பாடலை.இப்போதும் ஜானகியின் அற்புதமான குரலுடன் இழைந்து வரும் அந்தப் பாடலைக் கேட்கிற போது தவறாமல் நினைவில் வந்து போகிறாள்.

”திங்கள் முகத்தில் ஒளியேந்தி
செவ்வாய் இதழில் நகையேந்தி
இளமை என்னும் படை கொண்டு
என்னை வென்றாய் நீ இன்று.”
(மகா கவி கண்ணதாசன்)

No comments:

Visitors