Sunday, October 26, 2008

காலக் கணக்கு

பொருட் காட்சி-(6.07.1969)
காற்றிலாடும் விளக்குகள்
கண்ணடித்து மினுமினுக்க
ஊற்றிலாடும் நீரென மாந்தர்
உவகையால் கல கலக்க
தங்கமாம் கன்னியருடை
தரை தொட்டு சர சரக்க

எங்கும் யாரிடமும்
இன்ப மணம் நிறைந்திருக்க
தங்கில்லாக் கூச்சலிலும்
தமிழ் மணமே செழித்திருக்க
ஆயிரம் பாவையர்
அழகழகாய் அணி வகுக்க
பாயிரம் தொடரும் காவியமெனப்
பலரும் பின்னால் தொடர்ந்திருக்க

இரு விழியால் என்ன பயன்
இன்னும் பல விழி வேணும்-என
உருகுவார் பலருடன்
ஒன்றாய்த் திரிந்தேன் நானும்
பொருட் காட்சி யெனுமோர்
புதுமைப் பூங்காவிலே !
கருத்தில் கண்ணிலோர் மின்னல்
கலா உன் வடிவிலே....
..... ....... ...... ...... ...... ......
..... ..... ....... ....... .............
இன்னும் இருபது முப்பது வரிக்கு மேல் நீளுகிறது..நீலச் சிற்றுடை,. ஏலச்சிற்றிடை என்றெல்லாம்..பெரியகோயில்த் தேர்
வடம் போல....தேரோட்டத்தை ஒட்டித்தான் பொருட் காட்சியும் நடக்கும்...பொருட்கட்சியில் ஸ்டால் போட்டிருப்பவர்களே தேரோட்டத்தை நீட்டுவதற்காக தேருக்கு தடி போடுபவர்களிடம் ரகசியமாகப் பேசி பணம் கொடுத்துவிடுவார்கள் என்று பெரியவர்கள் சொல்லிக் கொள்ளுவார்கள். தடி போடுவது என்றால் தேரின், பின் சக்கரங்கள் இரண்டுக்கும் அடியில் சுமார் பன்னிரெண்டு அடி நீள கனமான செவ்வகத் தூண் போன்ற மரத்தடியை நெம்புகோல் போல் சொருகி அதற்கு மூன்று அல்லது நாலு அடி நீள.,அடிக்கட்டையை அண்டை கொடுத்து தடிக் கட்டையின் இரும்பு வளையங்களில் கோர்த்திருக்கும் கனமான கயிறுகளை கீழே இழுக்கும் போது தேர் சற்றே நகளும்.. தடிப் போட ஆரம்பித்ததுமே தேரின் பின்னால் அமர்ந்திருக்கும் முரசறைபவன் டம் டம வென்று முரசை அறைய, முன்னால் தேரிழுப்பவர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் நகரத் தொடங்கும்...தேர் நகண்டதும் தடிகள் டமாலென்று கீழே விழும். இதற்குள் தடி போடுபவ்ர்கள் லாவகமாக நகர்ந்து விடுவார்கள். இது ஆபத்தான வேலை... இதற்கென்று ஊரில் பழக்கமான ஆட்கள் இருப்பார்கள் அவர்கள் கிடைக்கவில்லையென்றால் ஸ்ரீ வில்லிப்புத்தூர், சுசீந்தரம் பக்கமிருந்து ஆட்கள் வர வேண்டும். அவர்களும் எளிதில் வந்து விட மாட்டர்களாம்..தடி போடுகிற இன்னார் வரவில்லை, இன்னாருக்கு உடலுக்கொணமில்லை( உடலுக்கு குணமில்லை) என்றால், தீர விசாரித்து விட்டுத்தான் வருவார்களாம். இதெல்லாம் தேருக்கு சருக்குப் போடுகிற மஞ்ச வேட்டிக் கோனாரின் பையன் மொக்க சாமி சொன்ன தகவ்ல்கள். மொக்க சாமி எம் ஜி ஆர் ரசிகன். எனக்கு நல்ல சினேகம்..அவன் ஊறுகாய் வியாபாரம் செய்பவன்..அவன் அண்ணனும் சருக்குப் போடுபவன்.சாமியின் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நெல்லையப்பர் கோயிலிலிருந்து மானியம், படித்தரம் சுதந்திரம் எல்லாம் உண்டு.தேருக்கு சருக்குப் போடுவதுதான் முக்கிய்மான காரியம். அதுதான் தேரை ஸ்டீயர் பண்ணுவது மாதிரி, ப்ரேக் போடுவது மாதிரி, வேகம் குறைக்க கியர் மாதிரி. அதற்காக குடும்பத்தோடு கோயிலில் கொடியேறின நாளிலிருந்து. குடும்பமே விரதமாய் இருக்க வேண்டும்..சாமி கெட்ட வார்த்தை கூட பேச மாட்டான்.சினிமா பார்க்க மாட்டான்..அவன் அண்ணனோ தன் மனைவியை ஊருக்கே அனுப்பி வைத்து விடுவான். அந்த அம்மா தேரோட்டமே (கல்யணத்துக்கு அப்புறம்) பார்த்ததில்லை..1966-சந்திரோதயம் வந்த வருஷம் என்று நினைவு..சாமிக்கு ஜெயலலிதாவிடமிருந்து புகைப்படம் இணைத்து வந்த கடிதத்தைப் பிரிக்கக்கூட அவன் அம்மா அனுமதிக்கவில்லை, கடிதம், என்னிடம் இருந்தது. திருவிழா ஆரம்பித்ததும் வந்த கடிதம்.. திருவிழா முடிந்து. கொடி இறங்கிய பின்னர்தான் வீடு தேடி வந்து வாங்கிக் கொண்டான்.. அது வரை தினமும் கை சைகையிலேயே பத்திரமா இருக்குல்லா என்கிற மாதிரி கேட்டுக் கொள்வான். அவன் காத்திருந்தது வீண் போகவில்லை. அது வரை யாருக்கும் வராத புதிய புகைப் படம் வந்திருந்தது..எங்களிடமிருந்தது எல்லாமே வெண்ணிற ஆடை சமயத்தில் எடுத்தது.
தேரின் முன் சக்கரங்களில் பக்கத்துக்கு ஒன்றாக சாமியின் அப்பாவும் அண்ணனும் நின்று கொள்வார்கள். ஒரு செங்கோண முக்கோண வடிவில்.,வாகான கைப்பிடி வைத்திருக்கும் கட்டை தான் சருக்குக் கட்டை..தேரின் முன் புறம் தொங்குகிற கனத்த வளையத்தில் ஒரு கையும் சருக்கில் ஒரு கையும் வைத்தபடி சருக்கை செலுத்த வேண்டிய நேரத்தில் சக்கரத்தினடியில் வாகாகச் செலுத்துவார்கள். சருக்கை எடுத்த நொடியிலேயே வளயத்தைப் பிடித்து தொங்கி விடுவர்கள்...தேர் நகரும் போது எப்படி நிற்க முடியும்.தேருக்கு அருகிலேயே தயார் நிலையில் ஒரு கட்டை வண்டியில் (சின்ன வண்டி) தேவையான சருக்குகள் இருக்கும். தேர் கூடவே அந்த வண்டியும் வரும்.இது போக தேரின் முன் சக்கரங்களுக்கு அடியில் பெரிய நீள் சதுரக் கட்டைகள் இரணடை இழுத்துக் கொண்டே வருவார்கள்.அதற்குப் பெயர் திருவடிக் கட்டை. சனங்கள் உற்சாக மிகுதியில் வேகமா இழுத்தாலோ, இறக்கத்தில் வேகமா வந்தாலோ, சறுக்குக் கட்டைக்கு கட்டுப்படலைன்னாலோ இந்தத் திருவ்டிக் கட்டை தான் காப்பாற்றும். இதையெல்லம் விட நுட்பமான் விஷயம் ஒன்னு உண்டு. தேருக்கு வெளிச் சக்கரம் போலவே, அவற்றையடுத்து நாலு உள்ச் சக்கரமிருக்கும். இவை தரையில் பாவாது. (தர்மர் ரதம் மாதிரி). வெளிச் சக்கரம் உடைந்துபோனால் இவை மொத்தத் தேரையும் தாங்கிக் கொள்ளற மாதிரி அமைப்பு இருக்கும்..

தேருக்கு முன்னால் தான் ஜனத்திரள் எல்லாம் தேருக்குப் பின்னால் ஒரு பெரிய வெறுமை இருக்கும். ரத வீதியே ரொம்ப அகலமான மாதிரி இருக்கும்.இங்கே ஒரு பெரிய வித்தியசமான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கும்.. நாரைக் கிணறு சரக்கு பன்னீர் மாதிரி கிடைக்கும்.மூனு சீட்டு மும்முரமா நடக்கும்.ஒரு மாதிரியான பெண்கள் அழைக்கும் கண்கள்,வலியச் சிரிக்கும் முக பாவத்துடன்....நடமாடுவார்கள். இதற்கான வாடிக்கையாளர்களை அவரவர்கள் கண்டுபிடித்து விடுவதுதான் இதில் ஆச்சர்யம்.நல்ல வேளை நான் யாராலும் கண்டுபிடிக்கப் படவில்லை.அதுக்கெல்லாம் ஒரு தாட்டியம் வேணும்ல என்பான் பிச்சுமணி.அவன் பார்க்காத வியாபாரமே கிடையாது. பெரும்பாலும் பால் வியாபாரம்தான் பார்ப்பான்.(தலைவர் படமென்றால் முதல் நாள் டிக்கெட் விற்பான். ஆனால் படம் போட மணியடித்ததும் உள்ளே வந்து விடுவான். நுழையும் போதே தனியான விசில்ச் சத்தம் கேட்கும். நாங்கள் சொல்லிக் கொள்வோம் `பிச்சுமணி வந்துட்டாம்ல படம் ஆரம்பிச்சுரும் இப்ப’) இப்படி திருவிழா, கொடைன்னா பால்க் கேனிலேயே சரக்கு விற்பான். உள் டிராயர் போட மாட்டான்..ஆனால் கனத்த கலர் பனியன் போட்டிருப்பான்.அதில் ஆத்திர அவசரத்துக்கு அருவாள் தொங்கும்.அது வெளியே தெரியாது.(ரொம்ப நாள் கழித்து.சேவியர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கிற்குப் போக ஜங்ஷன் பஸ்நிலையத்திலிருந்து..ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி போற பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன் பக்கத்தில் எலும்பும் தோலுமாய் ஒரு ஆள், நீளக்கை சட்டையை சுருட்டி அரைக்கை சட்டை அளவுக்கு மடித்த ஸ்டைலுடன்..சற்று விலகின வேஷ்டியுடன். இருந்தார்.கொஞ்ச நேரம் கழிச்சு `என்ன கோவாலு சௌக்கியமா இருக்கியா நாந்தான் பிச்சுமணி ஆளை அடையாளம் தெரியலல்ல’ என்றான்.இப்ப நீ வெளியூர்க் காரனாயிட்ட, இல்லேன்னா ஏம் பக்கத்தில உக்கார மாட்டே..என்றான். ஏன் என்று கேட்டேன். `பின்னால பார்க்கலியா போலீஸ்காரங்க, ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போறாங்க..சரி வெளிய வேடிக்கை பாரு ஏங்கிட்ட ரொம்ப பேசாத’ என்று அமைதியாகி விட்டான்.பஸ் சுலோச்சனா முதலியார் பாலத்தின் மேல் போய்க் கொண்டிருக்கிறது.அதே பாலம், கீழே அதே தாமிரவருணி....தூரத்தில் குறுக்குத்துறை, சி. என். கிராமம்,. சி. என் கிராமத்துப் பிச்சுமணி.... காலம் உறைந்து விட்ட மாதிரி இருந்தது எனக்கு. காலம் என்றொரு கருது கோளே கிடையாதே?நிழற் கடிகாரம். மணல்க் கடிகாரம். சுருள் வில்க் கடிகாரம், தனியங்கிக் கடிகாரம், குவார்ட்ஸ் கடிகாரம், அணுக் கடிகாரம்.என்று காலங்காலமாய் கால அலகின் துல்லியம் மட்டும் மாறிக் கொண்டே இருப்பதேன். விட்ஜென்ஸ்டினிடம் தான் கேட்க வேண்டும்....



காலக் கணக்கு

பக்தியென்றாலும்
`பிரமிப்பு
எளிமையை
நிராகரிக்குமென’
பண்டாரத்துக்கு
தெரியாதா என்ன?

இந்தத் தையோடு
திருப்பணிப் பண்டாரம்
நெல்லையப்பர் கோயிலுக்கு
தேர் தருமம் செய்து
390 வருடமாகிறது

ஒரு முறை
திருவடிக் கட்டையையும் தாண்டி
தேர் விரைந்த போது
மொக்கசாமியின் அப்பா
மஞ்சள் வேட்டிக் கோனார்
எங்கிருந்தோ வந்து
எப்படியோ சருக்குச் செலுத்தி
தேரை நிறுத்தி
வடம் சுற்றிக் கிடந்தவர்களையெல்லாம்
ஒற்றையாளாய்க்
காப்பாற்றி
(கடவுளை?)
மீட்டாரென்று கேள்வி
...... ..... ..... ...... ....
..... ..... ......... ............
....... ..... .... .... .....

ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும்
தேருக்கு முன்புறமே
தேர்-
கை விட்டு நகரும் பின்புற
ரத வீதியில்
சுவடுகள் தவிரச்
சூன்யமே சூழ்ந்திருக்கும்

அகல`மான’ வீதியின்
பின் புற வெறுமையில்
மூன்று சீட்டுக் காரர்களின்
மும்முரமான இயக்கம்
ஒரே மாதிரிச் சீட்டுகளை
ஒவ்வொன்றாய்-
எது முந்தி எது பிந்தியென
பேதைமை கொள்ளும்படி-
இறக்கிக் கொண்டு

அணுக் கடிகாரத்தின்
அசைவுகளுக்கேற்ப
அனைத்துக் கடிகாரங்களையும்
ஒரு நிமிடம்
நகர்த்தி வைத்தார்
கி.பி. 1994-ல்*
______________________
(சதங்கை- 1994)


No comments: