Saturday, April 11, 2009

கங்கையிலே ஓடம் இல்லையோ...






ரொம்ப நாளாக அப்பாவின் இரும்புப் பெட்டியிலிருந்து, என் கைக்கு வந்தது அந்த ராஜா தலை போட்ட ஒரு ரூபாய் நாணயம்.அப்பாவின் இரும்புப் பெட்டியை அவர் திறக்கும் போது, நான் மட்டும்தான் அருகில் இருப்பேன்.திண்டுக்கல் கோபாலகிருஷ்ணா கம்பெனி இரும்புப் பெட்டி. அந்த வகை இரும்புப் பெட்டிக் கென்றே ஒரு வகை பெயிண்ட் வர்ணம் உண்டு.பெட்டியைத் திறந்தால் தவறாமல் ஒரு லச்சுமி படம். அதற்கென்று பழகி வந்த வர்ணங்களில்,பழகி வந்த முகத்தோடு.அதன் கிரீடத்தில் தான், ஒரு மெழுகு வைத்து நாணயத்தை ஒட்டியிருக்கும். அந்த ஒவியங்கள் ஒரு தனீ ஸ்கூல் என்றே சொல்லலாம்.ரவி வர்மாவின் மோசமான பாதிப்பு என்று சொல்லலாம்.அதற்கு இரண்டு பூட்டுகள். ஒன்றின் சாவித்துவாரத்தை ஒரு கனத்த தகடு மூடியிருக்கும்.அந்த தகட்டை விலக்க ஒவ்வொரு இரும்புப் பெட்டியிலும், ஒரு ரகசியம் இருக்கும்.எங்காவது மறைவாய் ஒரு விசை இருக்கும்,அதை இழுத்தால்தான் சாவித்துவரத்தை மூடியிருக்கும் தகடு விலகும்.சில பெட்டிகளில் இரண்டாவது சாவித் துவாரம் இருக்கும் இடமே தெரியாது.கோபாலகிருஷ்ணா என்ற பெயர்த் தகட்டிற்கு கீழ் இருக்கும். அப்பா எங்கள் வீட்டு இரும்புப் பெட்டியின் விசையை எப்படி இயக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததிலிருந்து, எனக்கு ஒவ்வொரு இரும்புப் பெட்டியைப் பார்த்தாலும் ரகசிய விசை எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கிவிடுவேன்.
எங்கள் வீட்டுப் பெட்டியில் அப்படி ஒன்றும் பெரிய திரவியங்கள் கிடையாது.கொஞ்சம் வெள்ளிப் பாத்திரங்கள் இருக்கும்.பொருட்காட்சி சீஸன் டிக்கெட் இருக்கும். முக்கியமாக திருநெல்வேலி கூட்டுறவு அர்பன் பாங்கு கடன் பாஸ் புத்தகம். அதில் அப்பா பங்கு போட்டு வைத்திருக்கிறார்.அதன் பேரில் கடன் பெறலாம். தனது பெயருக்கு மட்டுமின்றி பின் வாசல் குச்சு வீட்டில் குடியிருக்கும் குண்டு ராவ் மகன் முத்துப் போத்தி பெயரிலும் அப்பாவே பங்குகள் எடுத்து அதிலும் கடன் வாங்கிக் கொள்வார்.அதையும் அப்பாவே கட்டி விடுவார். முத்துப் போத்திக்கு உடுப்பி பக்கம்.சந்திப் பிள்ளையார் முக்கு ஆஞ்சநேய விலாஸ் என்று பெயர் இருந்தாலும் அனைவரும் போத்தி ஓட்டல் என்றழைக்கிற காபி கிளப்பில் வேலை. தினமும் மாவரைப்பதும் சட்னி அரைப்பதும் வேலை. அந்த வேலையினாலோ என்னவோ, உடம்பு கர்லா சுத்துகிறவனின் உடல் மாதிரி இருக்கும்.ஆள் நல்ல உயரம்.அவர் வீட்டுக்குப் போகிற பின்வாசல் நிலை சற்று உயரம் கம்மி.அதில் அவர் முட்டிக் கொள்ளாத நாளே இருக்காது. ஒரு தரம் முட்டினால் அடுத்த முறை தலை தானாகவே தணிந்து கொள்ளும் என்பார்கள், ஆனால் அவர் விஷயமே வேறு.
ஒவ்வொரு முறை அவர் கடனுக்கு கையெழுத்து போடும் போதும். சொல்லுவார், பண்ணையாரே மாட்டி விட்ராதீயும்.பொழைக்க வந்தவன்,ஏதோ வீடு கொடுத்தேரு, இந்த வேலை பாக்கிறவன்னு யோசிக்காம, K.முத்துராவ்ன்னு எழுத மட்டும்தான் தமிழே தெரியும்,என்பார். பெரும்பாலான சமயங்களில் என்னையும் அருகில் வைத்துக் கொள்ளுவார் போத்தி. முத்துராவ் பாஸ் புக்கில், அவரிடமே ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்து வாங்கிய, உடுப்பி கிருஷ்ணன் கோயில், கிருஷ்ணர் படம் இருக்கும்.அப்போது உடுப்பி கோயிலுக்கு வெள்ளித் தேர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்காகஒரு ரூபாய் நன்கொடை விலையில்(1/16) ஒன்றுக்கு பதினாறு சைசில் நீலப்பிண்ணனியில், வெள்ளிக் கலரில் அச்சடித்த கிருஷ்ணர் படம், மற்றும் வெள்ளித்தேர் படம், போத்தி ஒட்டலில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.முத்துப் போத்தியும் அவர் மனைவியும் வருஷத்திற்கு ஒரு தரம் ஊர் போய் வருவார்கள்.அப்படிப் போய் வரும் போது அவரும் சில படங்கள் வாங்கி வந்து அதில் ஒன்றை அப்பாவிடம் விற்று நன்கொடை வாங்கி அனுப்பி இருந்தார். கடனை அது முடியும் முன்பே புதுப்பித்து விடுவார்.அப்படிப் புதுப்பிக்கும் சமயத்தில் போத்தி கையெழுத்துப் போடும் முன் விற்ற படம் அது. அந்தத் தடவை அந்த விண்ணப்பம், பாஸ் புஸ்தகங்களை நான் தான் பாங்கில் கொண்டு போய் கொடுத்து வந்தேன்.
பாங்க் நயினர் குளத்திற்கு திரும்புகிற ரோட்டின் முனையில்ஒரு மாடியில் இருந்தது.கீழே முத்துக் குமாரசாமியா பிள்ளை நாட்டு மருந்து கடை இருக்கும். எந்த நாட்டு மருந்து வேண்டுமானாலும் அங்கே கிடைக்கும். அந்தக் கடையில் எப்போதும் ஒரு கறுப்புக் கொடி கட்டி இருக்கும்.முனிசிபாலிட்டிக்கும் அவருக்கும் ஏதோ தாவா, அதற்காக அவர் தன்னந்தனியாய் போராடிக் கொண்டிருந்தார். அவ்வப்போது அது பற்றி பெரிய எழுத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டி இருப்பார்கள்.ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவின் நகல் ஒன்றை ஒட்டியிருந்தது, நான் மரவெட்டி எண்ணெய் வாங்கப் போகும் போது.உடலெல்லாம் சொறி சிரங்கு வந்து, கையில் கிளி வளர்க்கிறான் என்று தெருவும் ஸ்கூலும் கேலி செய்த காலம் அது.எத்தனையோ களிம்புகள், ஏகப்பட்ட சதை ஊசிகள், நரம்பு ஊசிகள் எல்லாம் போட்டும் கேட்கவே இல்லை. வகுப்பில் தனியே தரையில் உட்கார வேண்டும். அந்த வருஷம் தான் ஸ்கூல் டே நாடகத்திற்கு தேர்ந்தெடுத்திருந்தார், கணேச அய்யர். முதல் நாள் ஒத்திகையின் போதே திருஞானசம்பந்தத்திடமிருந்து எனக்கு தொற்றிக் கொண்டது சிரங்கு. போடா செரங்கு வத்திகளா என்று இரண்டு பேரையும் அய்யர் துரத்தி விட்டார்.
கிராமத்துப் பனந்தோப்பை, புதிதாய்க் குத்தகை எடுத்திருக்கிற நாராயண நாடார் தான் அப்பாவிடம் சொன்னார்,இன்ன கடையில மரவெட்டி எண்ணெயின்னு இருக்கு, அதை வாங்கியாந்து தினமும் தேய்த்து அரை மணி நேரம் ஊறவச்சு, நல்ல அரப்பு போட்டு குளிச்சா ஒரு வாரத்தில பட்டுப் போயிரும்., என்று. குத்தகைக்கு எடுத்த முதல்த் தடவையாக வருவதால், ஒரு சிப்பம் கருப்பட்டி,, இட்லி, தோசைக்கு விட்டுச் சாப்பிட கூழ்ப்பதினி எல்லாம் கொண்டு வந்திருந்தார்.கூழ்ப் பதினி என்பது, கருப்பட்டி காய்ச்சுகிற போது, கருப்பட்டி அச்சில் விடுவதற்கு சற்று முன்னர் எடுத்த பாகு.தேன் போல இருக்கும். இட்லி தோசைக்கு விட்டுக் கொள்வார்கள். சிலர் விருப்பமாய்ச் சாப்பிடுவார்கள்.எனக்கு அவ்வளவாய்ப் பிடிக்காது.நாடாரே சொன்னார், தென்ன மரக்குடி எண்ணெயின்னு இருக்கு அது வேற இது வேற, என்று. நான் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டையே காத்துக் கிடந்தேன்.தெருவிலும் ஒரு கேலிப் பொருள். சாயங்காலம் ஆகி விட்டால், சொறி தாங்க முடியாது. ராத்திரியானால், பழுத்திருக்கும் சிரங்கில் வலி விண் விண்ணென்று தெரிக்கும்.அந்த நேரத்தில் அப்பாதான் என் அருமையான சிநேகிதராய் இருந்தார்.சாயந்தரம் எங்கேயாவது வெளியே கூட்டிக் கொண்டு போவார்.அப்படி ஒரு சாயங்காலம் ஜங்ஷன் ரோட்டில் போய்க் கொண்டிருந்தோம்.
ஜங்ஷன் கண்ணம்மன் கோயில் தெருவில் யாரோ ஒரு டாக்டர் பாவா என்று, இதற்கு நன்றாக வைத்தியம் செய்வார் என்று கண்ணம்மன் கோயில் தெரு வேலம்மா அத்தை சொல்லியிருந்தாள்.(அவர் எதற்கு பிரபலம் என்று பின்னாளில் சொன்னார்கள்,`ஏல அவரு பொம்பளைச் சீக்குக்குல்லா ஃபேமஸ்’) அவரிடம் போய் ஒரு மாட்டு ஊசியொன்றைப் போட்டுவிட்டும் பிரயோஜனமில்லை.அவரிடம் போவோம் என்று சொல்லித்தான் போய்க் கொண்டிருந்தோம்.நான் வேண்டாம் வலி ரொம்ப இருக்கிறது என்று சொன்னதும், பக்கத்தில் பார்வதி டாக்கீஸில் நெஞ்சில் ஓர் ஆலயம் ஓடிக் கொண்டிருந்தது, வா நல்ல படமென்று சொன்னார்கள் போவோமா என்றார்.சரி என்றேன்.தியேட்டருக்குள் நுழைந்ததுமே ஆப்பரேடர் துரைப் பிள்ளை வாங்க அண்ணாச்சி என்று உள்ளே அழைத்துப் போனார்.ஆபீஸ் ரூமுக்கு அழைத்துப் போய் அங்கே கொஞ்ச நேரம் மேனேஜர் நெட்டலிங்கம் பிள்ளையுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு படத்திற்குப் போனோம். அடப்பாவமே இதே தியேட்டரில் இதே ஸ்ரீதரின் தேனிலவு படத்திற்கு பொம்பளை டிக்கெட்டில் எவ்வளவு கஷ்டப் பட்டு, போனோம் என்று நினைத்துக் கொண்டேன்.
கடைசியில் நாராயண நாடாரே என்னை கூப்பிட்டுக் கொண்டு போய் அந்தக் கடையையும் காண்பித்து, மரவெட்டி எண்ணெயும் வாங்கித் தந்தார்.எண்ணெயின் வாசனை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.ஏதோ டிம்பர் டிப்போவுக்குள் இருக்கிறது போல் குளுமையான வசனை வந்தது.அதன் விளைவோ இல்லை ஏற்கெனெவே சாப்பிட்டிருந்த இங்கிலீஷ் மருந்துகளின் விளைவோ ஒரு வழியாய் சிரங்கு என்னை குரங்காக்கி விட்டு ஒழிந்தது.
முத்துப் போத்திக்கு திருச்செந்தூர் கோயிலில் மடைப்பள்ளி வேலை கிடைத்திருந்தது.அப்பா மாடியில் இருந்தார். அப்பா எங்கேடா கோபாலா, மச்சில இருக்காரா, வாயேன் என்று என்னை அழைத்துக் கொண்டு மாடியேறினார்.நான் எல்லாக் குழறுபடிகளையும் பண்ணிவிட்டு,பண்ணிக் கொண்டு, வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன் அப்போது. இரும்புப் பெட்டியின் பிதுரார்ஜிதங்கள் எல்லாம் ஒரு சாதாரணத் தகரப் பெட்டிக்கு மாறியிருந்தது.இரும்புப் பெட்டியை, வீட்டின் பேரில் கடன் தந்திருந்த தச்ச நல்லூர் நாயுடு கேட்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.அதில் உண்மை இல்லை என்று எனக்கு தெரியும். அதைக் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். குடுக்கலப்பா குடுக்கல, அதை ராஜவல்லிபுரம் வீட்டுலதான் கொண்டு வைக்கப் போறேன் என்றார் எரிச்சலும் இரங்கலுமாக.அந்த வீட்டையே அக்காவிற்கு விற்று விட்டிருந்தார்.சரி என்னமாவது செய், என்று வெளியே போனேன். சிநேகிதன் ஒருத்தன் என்னை தேடிக் கொண்டிருந்தான், தயாராய் ஒரு மிலிடரி ரம்மை வைத்துக் கொண்டு.ரகசியமாய் சாப்பிட்டு விட்டு, தேன் சிந்துதே வானம் போனோம், படத்தில் ஒரு பாட்டைத் தவிர எந்தக் காட்சியும் மனசில் பதியவில்லை.கன்னாபின்னாவென்ற போதை.எப்படி போலீஸில் மாட்டாமல் வீடு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியாது.
காலையில்தான் அப்பாவைப் பார்த்தேன், காலையில்தான் முகத்தில் விழித்தேன் என்று சொல்லவேண்டும்.இரும்புப் பெட்டி இருந்த மேடை காலியாக இருந்தது.அதன் பின்னால் இருந்த சுவரில் வெள்ளையடித்து பல காலமாகி இருந்தது தெரிந்தது.அதை நானறிய, நகட்டியதே இல்லை.இரும்புப் பெட்டி ஒரு மர ஸ்டாண்டின் மேல் இருந்தது. அதில் ஒரு இழுவை டிராயர் உண்டு.அந்த டிராயரில், பத்தக் குரடு, சுத்தியல் போன்றவை கிடக்கும்.அந்த டிராயரும் பொருட்களும் மட்டும் இருந்தது.இரும்புப் பெட்டியை நகர்த்தும் முயற்சியில், ஒரு கழுந்து உலக்கை(சிறிய உலக்கை, பெரும்பாலும் மஞ்சள் போன்ற பொருட்கள் இடிக்கப் பயன் படும். பொதுவாக நுனியில் பூண் போட்டிருக்காது.) உடைந்திருக்கும் போலிருக்கிறது முற்றத்தில் கிடந்தது.அம்மாவிடம் அந்த ஒரு ரூபாய் என்று இழுத்தேன். இருக்கிறது, என்றாள்.
போத்தி, `பண்ணையாரே அந்த கடன் கணக்கை முடிச்சுருமே,நான் ஊரை விட்டுப் போறேன், இன்னம எங்க இந்தப் பக்கம் வர’, என்று இழுத்தார்.கோபாலன் பேர்ல லோனை மாத்த முடியாதா என்றார்.நான் அதெல்லாம் முடியாது என்று அவசரமாய் மறுத்தேன்.அப்பா நீ கீழே போ,பாண்டியண்ணனை வரச் சொல்லு என்றார்.நான் கீழே இறங்கி அண்ணனைத் தேடினேன்.வழக்கம் போல் பார்பர் ஷாப்பில் இருந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.அப்பா கூப்பிடுவதாகச் சொல்லி விட்டு அப்படியே பெட்டிக் கடைப் பக்கம் கிளம்பினேன்.
அவன் பெயருக்கு லோன் தர முடியாது என்று சொல்லி விட்டார்கள்.அப்பா அவர் குடியிருந்த குச்சு வீட்டை ஒத்திக்கு தருவதாக எழுதிக் கொடுத்தார்.போத்திக்கும் அவர் மனைவிக்கும் அதில் இஷ்டமில்லை.இரண்டாயிரம் ரூபாய்க் கடனுக்கு உம்ம நம்பாம இல்லவோய்,என்று அவர் மனைவி மீனாட்சி சொல்லி அந்த ஒத்திப் பத்திரத்தை திரும்பக் கொடுத்தாள்.அப்பா அமைதியாய் இருந்தார்.எம் பையனை பொழைக்க வச்சதே நீர்தான், உம்ம குடும்பத்தோட கூட எத்தனை சினிமா போயிருப்பேன். குஞ்சம்மாளுக்குப் போலவே எனக்கும் எத்தனை சேலை எடுத்திருப்பீர், இந்தாரும் பத்திரம், இந்தா, கோபாலனுக்கு ஒரு வேலை கிடச்சா தீர்ந்தது ஒம்ம கஷ்டம்,சொல்லிக் கொண்டே போத்தியை துளுவில் ஏதோ பேசி அழைத்துப் போனாள்.
78-லிருந்து ஆசை. கொல்லூர் போக வேண்டும் என்று.மூகாம்பிகை பார்க்க அவ்வளவு அழகாயிருப்பாள் என்று ஆர். பாலுவோ,மகாலிங்க மாமாவோ சொல்லுவார்கள்ம்ஹூம் நிறைவேறவே இல்லை.பதினைந்து வருடமாக சபரிக்குப் போகிறேன் இது வாய்க்கவில்லை.
தெரு வாசல் நடையில் அமர்ந்து, ஒரு சிகரெட்டைக் குடித்தபடி நானும் சேகரும் பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகள், மனைவி, எல்லாரும் தூங்கி விட்டார்கள்.வீட்டு லோன் சாங்ஷன் ஆகி இருந்தது.அதற்காக சென்னை போக வேண்டும் என லீவு போட்டிருந்தேன்.அதற்குள்ளாகவே சாங்க்‌ஷன் ஆகி வந்து விட்டது.சேகரிடம் யேய், நாளைக்கு மூகாம்பிகை போவோவோமா என்றேன்.சரி என்றான்.காலையில் ஆறு மணிக்கு ரெடியாயிரு, மூன்று நாள் பயணம் என்று சொன்னேன். ரெடி என்றான்.
காலையில் புறப்பட்டு, திருவனந்தபுரம் போய், மங்களூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் டிக்கெட் எடுத்தோம்.பாபு, தம்பானூர் பக்கத்துக் கிளையில் தான் இருந்தான். அவனைப் பார்த்தோம். அவன் டிக்கெட்டை உறுதி செய்து தந்தான்.மாலை ஆறு மணிக்கு ட்ரெயின். காலையில் மங்களூர். பஸ்காரன் கூவி அழைத்துக் கொண்டிருந்தான்.மூகாம்பிகா, கொல்லூர் என்று. ஒரு பெரிய ப்ரெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டோம்.வழியெல்லாம் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.சேகர் வாப்பாரிக் கொண்டு வந்தான், இவ்வளவு தண்ணிய வச்சுகிட்டு காவேரில விட மாட்டேங்கீங்களப்பா,, என்று.மங்களூர் கடலின் நீலத்தை மறைக்கும் அளவுக்கு செந்நிற வெள்ள நீர் கடலில் சங்கமித்துக் கொண்டிருந்தது.யேய் பாவி, தண்ணி வீணாப் போகுதப்பா, என்று புலம்பிக் கொண்டே வந்தான். சௌபர்னிகாவில் குளிக்கும் போதும் இதே கதைதான்.
நாலு மணிக்கு நடை திறந்து மூகாம்பிகையைப் பார்த்ததும் தான் ஆதங்கம் அடங்கிற்று. இவ கொடுப்பாப்பா உங்களுக்கு. என்றான்.
உடுப்பியில் இறங்கியதும், கோயிலுக்கு ஆட்டோவில் போய் விடுவோம் என்று முடிவெடுத்தோம்.நல்லவேளை, கோயிலுக்குப் போய் இறங்கியதுதான் தாமதம், மழை கொட்டத் தொடங்கியது.அங்கே போனதும்தான் நினைவுக்கு வந்தது. மீனட்சி அக்கா உடுப்பி கண்ணனைப் பற்றி சொன்னதெல்லாம். ஒரு ஜன்னல் வழியாக மட்டுமே கிருஷ்ணனை பார்க்க முடியும்.ஏதொ ஒரு நிறைவு.
பசி வயிற்றைக் கிள்ளியது. நேற்று மதியம் தம்பானூர் ஸ்டேஷனில் சாப்பிட்டது.யாரோ சொன்னார்கள்., அன்னதானம் நடைபெறும் சாப்பிடலாம் என்று,. அதை விசாரித்து அங்கே போன போது டோக்கனெல்லாம் முடிந்து விட்டது.என்றார்கள். அந்த அன்னதானம் நடைபெறும் ஹாலின் பெரிய கிரில் கேட்டை அடைத்து விட்டார்கள்.அதன் முன்னால் பசியோடு நின்று கொண்டிருந்தோம்.வெளியே எங்காவது ஓட்டல் இருக்குமா என்று அந்த கேட் அருகே நின்றிருந்த ஆளிடம் விசாரித்தோம்.அவனைப் பார்க்கையில் சற்று ஏழ்மையாகத் தோன்றியது.அவனும் சாப்பிடத்தான் நின்று கொண்டிருந்தான். எந்த ஊர் என்று கேட்டான். நான் தமிழ் நாடு, திருநெல்வேலிப் பக்கம் என்று காது கேட்காதவனிடம் சொல்வது போல் சொன்னேன்.குற்றாலம் தெரியுமா எனறான் பேச்சில் தமிழ் வாடை லேசாய் வீசியது. குற்றாலமேதான் என்றான் சேகர்.அப்படியா இந்தாருங்கள் என்று ஒரு டோக்கனைக் கொடுத்தான்.ஒன்று எப்படிப் போதும் என்றேன்.அவன் சற்று உள்ளே தள்ளி நின்ற ஒருவனை அழைத்து, ஏதோ கன்னடத்தில் சொன்னான்.அவன் எங்களிடம் தமிழ் ஆளுங்களா, எனறான். ஆமா என்றதும் சரி, அந்தக் கடைசி வரிசையில் இலை போடலை அங்க போய் படார்ன்னு உக்காருங்க என்று தமிழில் சொன்னான். சொன்ன படியே உட்கர்ந்தோம். இலை போட்டுக்க் கொண்டு வந்தர்கள்.பாக்கு மரத்தின் பட்டைதான் இலை.ஒரு டோக்கனைக் கொடுத்ததும் காச் மூச்சென்று கத்தினான் இலை போடுபவன்.எங்களுக்கு முந்தியிருந்த ஆள் என்னவோ சொன்னான். பேச்சை சட்டென்று நிறுத்தி விட்டு இலை போட்டான். அவன் யாரென்று பார்த்தேன்.

எங்களுக்கு டோக்கன் கொடுத்த ஆள்.இவன் எப்படி எங்களுக்கு முன்பே பந்தியில் அமர்ந்தான் என்று யோசித்தேன்.அதுவும் டோக்கனை நம்மிடம் கொடுத்து விட்டானே.அவனிடம் என்ன சொன்னாய் என்று கேட்டேன்.நாங்கள் இரண்டு பேரும் தும்கூரிலிருந்து வருகிறோம் சாப்பிட்டு மூனு நாளாச்சு என்று சொன்னதாகச் சொல்லி சிரித்தான்.தும்கூரா அது எங்க இருக்கு என்று சேகர் கேட்டான்.அதான் நான் பொறந்த ஊர் என்றான். அப்படீன்னா என்றேன்.நான் ஒரு பிச்சைக் காரங்க, ஒரு வாரமா இஙதான் சப்பாடு. நாளக்கி தர்மசாலா போயிருவேன் அங்க எத்தனை நாள் வேன்னாலும் சாப்பிடலாம்.இங்க மூனு நாளைக்கி மேல ஆச்சுன்னா விரட்டி விட்ருவாங்க.என்றான்.பசிக்கு சாப்பாடு பரவாயில்லாமல் இருந்தது...சாம்பாரில்தான் பூசணிக்காய் வாசனை தூக்கலாய் இருந்தது.அதற்கப்புறம் சேகர் எந்த ஓட்டலிலும் சாம்பாரே இரண்டு நாளைக்கு கேட்கவில்லை.
சாப்பிட்டு முடித்து கோயிலை விட்டு வெளியே வந்ததும்,சேகர் அந்த ஆளிடம் சிகரெட்டை நீட்டினான்.வாங்கிக் கொண்டு சத்திரத்திற்கு வழி காட்டினான்.வழி சொல்லி விட்டு தெப்பக் குளத்தின் இருண்ட பகுதிக்கு நடந்தான்.செல்லும் முன் பெயரைக் கேட்டேன்.குண்டுராவ் மகன் போஜன் என்றான்.முத்து ராவ் இல்லையா என்றேன். அப்படியும் கூப்பிடுவார்கள் என்றான்.சேகர் அது யார் சார் முத்து ராவ் என்றான். சிரித்துக் கொண்டேன்.தெப்பக் குளத்தில் நீர் பாசி பிடிக்காமல் புது நீராக தளும்பிக் கொண்டிருந்தது, கரையோர வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.லேசான தூரல் சின்னச் சின்ன நீர் வட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது.தும்கூர் போஜராவ் போனதிசையில் இப்போது இரண்டு தீக்கங்குகள் தெரிந்தது. சேகர் திருபவும் சொன்னான் அது எப்படி சார் இங்க மட்டும் தண்ணி இவ்வளவு செழிப்பா இருக்கு, அவனே பதிலையும் சொன்னான் கண்ணனிடம் தான் கேட்க வேண்டுமோ.பேசிக்கொண்டே சத்திரத்தில் நுழைந்தோம்.
சத்திரத்தில் நுழைந்ததும்,ரிசப்ஷன் ஹாலின் சுவரில், வாசலுக்கு எதிராக, நடு நாயகமாக, பெரிய்ய, கிருஷ்ணன் படம்.நீல நிறப் பிண்ணனியில் வெள்ளி நிறத்தில். குண்டு ராவ் மகன் முத்து ராவ் தந்தது போலவே.

Sunday, April 5, 2009

ஏமாந்து போவே இன்னும் கேளு....



1964-ல் தனுஷ்கோடி புயல் வீசியதன் செய்திகள் பத்திரிக்கைகளை நிறைத்துக் கொண்டிருந்த நேரம். எம்.ஜி ஆர் தனுஷ் கோடி போய்ப் பார்த்து விட்டு, ஒரு லட்சம் நிதி அளித்துவிட்டு, திரும்புகிற வழியில் திருநெல்வேலிக்கும் வந்தார்.அப்போதுதான் திருநெல்வேலி நகராட்சியை தி.மு.க கைப்பற்றியிருந்தது.சென்னை, வேலூர் நகராட்சிக்குப் பிறகு நெல்லைதான் தி மு க வசம் வந்த நினைவு.மஜீத் என்பவர்தான் சேர்மன்.திருநெல்வேலியில் தி.மு.க வை வளர்த்ததில் எங்கள் தெருவுக்கு நிறைய பங்கு உண்டு.மஜீத் எங்கள் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி கூலக்கடை தெருவில் உள்ளவர்.

1957-58 களில்அவரது தங்கை காதர் பாத்திமா எனது நான்காம் வகுப்புத் தோழி. பள்ளியில் தினமும் காலையில் ப்ரேயர் உண்டு. அது கிறிஸ்துவப் பள்ளி என்றாலும் தினமும் கீதை.(வினோபாஜி எழுதிய கீதைப் பேருரை -தமிழ் மொழி பெயர்ப்பு, மலிவுப் பதிப்பு விலை ஒரு ரூபாய்) பைபிள், குரான், ஆகியவற்றிலிருந்து சார் சொல்லுகிற பகுதியை வாசிக்க வேண்டும்.பாத்திமா தன், சின்ன குரான் புத்தகத்தைக் கொண்டு வந்து வாசிப்பாள், அதை தினமும் வீட்டுக்கே கொண்டு போய் விடுவாள்.கீதையை திருமலைக் கொழுந்து வாசிப்பான். அவன் ஐந்தாம் வகுப்பு.இப்பொழுது மதுரையில் அவன் பெரிய டாக்டர்.ஐந்தாம் வகுப்புக்கு நான் வேறு பள்ளிக் கூடத்திற்குப் போய் விட்டேன்.அநேகமாக அப்போதுதான் ஏழரைச் சனி முதல் சுற்று ஆரம்பித்திருக்க வேண்டும்.
புதிய பள்ளிக் கூடத்தில்தான் எனது சர்வ சுதந்திர வாழ்க்கை ஆரம்பித்திருக்க வேண்டும்.என் வீட்டில் என் அண்ணன்மார்கள் யாரும் எஸ்ஸெல்ஸியை தாண்டியதில்லை.அதனால் என் படிப்பும் தரம் குறைய ஆரம்பித்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை.திருட்டு சினிமா, கெட்ட வார்த்தைகள் எல்லாம் அப்போதுதான் பழக்கமாகத் தொடங்கியது.ஐந்தாம் வகுப்புக்கு, என்னைப் போலவே, செய்யது யாகூப் புதிதாய்ச் சேர்ந்திருந்தான்.அவன், நான் அப்புறம் தவக்களை ராமகிருஷ்ணன், நசீர் முஹம்மது ஜாஃபர், எல்லோரும் ஒரு செட். யாகூபின் அப்பா போஸ்டாபீஸில் வேலை பார்த்தார். வேறு ஊரிலிருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்தவர்.அவர்கள் வீடு இருந்த தெரு, இரவு ராணிகளுக்குப் பேர் போன தெரு. விவரம் தெரியாமல் குடிவந்திருப்பார்களென்று பால் செல்லையா சார் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்தான் கிளாஸ் வாத்தியார்..தெருவின் தெற்குப் பகுதியில் நல்ல குடும்பங்கள் இருந்தன..அங்கே ஒரு பெருங்காய கம்பெனி கூட இருந்தது.வாசனை மூக்கைத் துளைக்கும்.அவன் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு சாவடி போல் பெரிய வீடு உண்டு அங்கேதான் ஒருவர் உட்கார்ந்து எந்நேரமும் கரும சிரத்தையாய் தகரத்தில் அச்சு எழுத்து வெட்டிக் கொண்டிருப்பார்``.கூட்டாம்புளி ஜோஸ்யர் மூக்குப் பொடி’’``அ.ப.அ.ப. மங்கள சுந்தரி வாசனைப் புகையிலை’’என்று விளம்பரங்களுக்கான ஸ்டென்சில் வெட்டிகொண்டிருப்பார். அவன் வீட்டின் முகப்பிலும், பக்கத்து வீட்டிலும்.சிகப்புக் காவியால் ஒரு அகல் விளக்குப் படம் போட்டு `குடும்ப வீடு’ என்று பெரிதாக எழுதியிருக்கும். அது ஏன் என்று பாபு சங்கர் தான் சொன்னான்.சரியான சண்டியன் அவன், எட்டாம் கிளாஸ் அண்ணன்களையே சண்டையில் பீட் அடித்து விடுவான்.அடுக்கு மொழியில் கெட்ட வார்த்தைகளைப் பேசுவான்.இவ்வளவிற்கும் அவன் அப்பா ஒரு அரசு உத்தியோகஸ்தர்.என்னிடம் பிரியமாய் இருப்பான். வீட்டுக்கணக்குகளை என்னையோ ராமகிருஷ்ணனையோ பார்த்துத்தான் எழுதுவான்.கெட்டிக்காரன் தான் ஆனால் விளையாட்டுப் புத்தி.நான் அவன் கட்சி. அழகப்பன்தான் கிளாஸ் லீடர்.அவன் உயரமாய் இருப்பான்.சிவாஜி ரசிகன்.அவனும் குண்டு ஜனார்த்தனனும் சிவாஜி கட்சி.ஜனா அவன் சித்தப்பா வீட்டில் இருந்தான்.நல்ல பயில்வான் போல இருப்பான்.இடது கன்னத்தில் ஒரு தழும்பு போல இருக்கும். பிறவியிலேயே உள்ளது என்பான்.சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்து விடுவான். கிரவுண்டில் யாருடனாவது விளையாடுவான். ஒருத்தரும் இல்லையென்றால் தனியாக ஓடிக் கொண்டிருப்பான்.மங்களூர் பக்கத்துப் போத்தி,அவன் சித்தப்பா சந்திப் பிள்ளையார் கோயிலை ஒட்டி சுக்கு வெண்ணீர் கடை போட்டிருப்பார்.சாயங்காலம் தான் திறப்பார். எட்டு, ஒன்பது மணி வரைக்கும் இருக்கும்.சுக்கு வெண்ணீர் தவிர கொஞ்சம் முறுக்கு, தட்டை என்று போட்டு விற்பார். ஸ்கூல் விட்டு வந்ததும் ஜனார்த்தனனுக்கு அந்தக் கடையில் எடுபிடி வேலைகள் பார்க்க வேண்டும்.கடை அடைக்கும் வரை டவரா கழுவ வேண்டும்.
யாகூப் வீட்டில் வாசல்க் கதவை அடைத்தே வைத்திருக்கும்.மத்தியானம் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வரும் போது, யாகூப் வீட்டிற்குப் போய் அவனைக் கூப்பிட்டுக் கொண்டு வருவேன்.அவன் வீட்டில் தந்திப் பேப்பர் வாங்குவார்கள்.அப்போதுதான் தந்தியில் `குமரிக் குகை’ சித்திரத் தொடர் முடிந்து கன்னித்தீவு ஆரம்பித்திருந்தது.அப்போதுதான் முதன் முதலாக மாலைப் பத்திரிக்கையான மாலை முரசு நெல்லையிலிருந்து வெளி வரத் தொடங்கி இருந்தது.நான் கன்னித்தீவு படிக்க தந்தியைத் தேடுவேன்.அவன் அப்பா அந்தப் பக்கத்தை மட்டும் மடித்துத் தருவார்.அவரும் மதியச் சாப்பாட்டை முடித்து விட்டு ஒருபெரிய ஈசிச் சேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.பட்டாணி சாய்பு. பட்டாணி மொழியில் யாகூபிடம், சீக்கிரம் போ ஸ்கூலுக்கு என்று சொல்வது மாதிரி இருக்கும்.ஏதோ சத்தம் போடுவது போலவே இருக்கும். ஆனால் அவன் எங்க அப்பா சத்தமே போடாது. உம்மாதான் மோசம் என்பான்.சாப்பாட்டை ஸ்கூலுக்கே கொண்டுபோனால் என்ன, ஏன் வீணா வெயிலில் அலைகிறாயென்று சத்தம் போடுகிறார் என்றான் ஒருநாள். எனக்கு அவன் அம்மாவைப் பார்க்கையில் அப்படித் தோன்றவே தோன்றாது.யாகூப் பொத்துப் பொத்தென்று குண்டாக இருப்பான்.அவன் அப்பா திடகாத்திரமாக இருப்பார்.மலைகள்ளனில் வருகிற ஸ்ரீராம் போலிருப்பார்.முகத்தில் அம்மைத் தழும்பாய் இருக்கும்.
மாலை முரசில், `இரவு ராணி கொலை வழக்கில் துப்புத்துலக்க போலீஸ் நாய் வருகிறது’ என்று செய்தி போட்டிருந்தார்கள்.கொலை நடந்தது யாகூப் வீட்டுத் தெருவில்தான்.அப்போது நெல்லையில் போலீஸ்துறையில் துப்பறியும் நாய்கள், யுவராஜும், சுசியும் சேர்க்கப் பட்டு பிரபலம் ஆகியிருந்தது..அவை வந்த வருடம், பொருட்காட்சியில் துப்பறியும் நாய் கண் காட்சி நடந்தது..பொருட்காட்சியின் மையப் பகுதியில் தகரத்தால் வேலி மாதிரி நீள் சதுரமாக ஒரு திறந்தவெளி அரங்கம். கூரையெல்லாம் கிடையாது.ஒன்பது மணிக்கு காட்சி ஆரம்பம்.யுவராஜ், சாம்பல் நிறம்.சுசி செவலை நிறம்.இரண்டும் அல்சேஷன் வகை.ஒனபது மணிக்குள் வருபவர்கள், அந்த அரங்குக்குள் அமர்ந்து கொள்ளலாம்.பார்வையாளர் யாரிடமிருந்தாவது ஒரு பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கை வாங்கி அதை நாயிடம் மோப்பம் பிடிக்கச் சொல்லுவார்கள்.அப்புறம் நாயை தூர அழைத்துச் சென்றுவிடுவார்கள். பர்ஸை ஒரு ஆளிடம் கொடுத்து அவனை கூட்டத்தில் ஒருவராக அமரச் செய்வார்கள். அதற்கு முன் அவன் பொருட்காட்சியின் முக்கியமான இடங்களுக்குப் போய் வருவான்.த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி ஸ்டால்,(அதில் ஒரு வட்ட நிலைக் கண்ணாடி முன்னால் பளீரென்ற தட்டில் ஒரு பீடி பண்டல் இருக்கும். அது அந்தரத்தில் கண்ணாடியைச் சுற்றி வரும். கண்ணாடியைத் தொட்டுமிருக்காது., கண்ணாடியில் அதன் பிம்பம் முழுவதும் தெரியும்படி சுற்றி வரும். இந்த அதிசயம் இன்றளவும் புதிராகத்தான் இருக்கிறது.)சுல்தானியா ஓட்டல்,ஓரியண்டல் லிட்டில் பாம் ஸ்டால், சைபால் களிம்பு ஸ்டால், என்று ஒரு சுற்று சுற்றி வந்து கூட்டத்தில் அமர்ந்து கொள்ளுவான்.அப்புறம் நாயை பயிற்சி போலீஸ் அழைத்து வருவார், அது அவன் சென்ற இடமெல்லாம் சென்று விட்டு கூட்டத்தில் நுழைந்து கரெக்டாக அவனைக் கவ்விப் பிடித்து விடும்.கூட்டம் ஆரவாரமாய்க் கைதட்டும்.

சுசி தான் இரவு ராணி கொலை வழக்கில் துப்புத் துலக்க வந்தது.சாயங்காலம்தான் நாய் வந்தது. நாங்கள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு கூடப் போகாமல் யாகூப் வீட்டு மாடிக்குப் போய் விட்டோம்.நாங்கள் போகும் போது அவன் அப்பா இல்லை.நானும் ராமகிருஷ்ணனும் மட்டும் போவதாக ஏற்பாடு.ஜனார்த்தனனும் சேர்ந்து கொண்டான்.நாங்கள் போகும் முன்பே அவன் அம்மா, இன்னும் சில பெண்கள், மொட்டை மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.நாங்களும் மாடிக்குப் போனதும் அவன் அம்மா என்னவோ சொன்னாள். ஜனாவை ஏன் அழைத்து வந்தாய் என்று கேட்ட மாதிரி இருந்தது.அதற்குள் தெருவில் பரபரப்பு உண்டாகி விட்டது. நாய் போலீஸ் சந்தேகப் பட்டவனையே கவ்விப் பிடித்தது.தெரு முழுக்க கூட்டமோ கூட்டம்.நான் கை பிடிச்சுவரின் அருகேநின்று பார்த்தேன். சரியாகத் தெரியவில்லை. சற்று எட்டிப் பார்க்க முயற்சித்தேன்.யாகூபின் அம்மா என்னை தன் முன் நிறுத்தி விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டாள்.மார்பும் கருமணிப் பாசியும் தலையில் அழுத்தியது.கீழே அவன் அப்பா வீட்டுக்கு எதிரே நின்று இங்கேயே பார்த்துக் கொண்டிருந்தார். கதவை அடைத்துவிட்டுத்தான் நாங்கள் மேலே போயிருந்தோம்.போலிஸெல்லாம் போய், கூட்டம் கலைந்ததும்தான் அவன் அம்மா, அப்பாவைப் பார்த்தாள்.அவசர அவசரமாக் கீழே இறங்கி கதவைத் திறந்தாள். திறந்ததுதான் தாமதம் ஒரு பலமான அறை, அவள் கன்னத்தில் விழுந்தது அவன் அப்பா என்னையே முறைத்துப் பார்த்தார்.ஜனா என்னை வெளியே வா என்று இழுத்துக் கொண்டு வந்தான்..
மறு நாளிலிருந்து யாகூப் என்னுடன் பேசவே இல்லை. தவக்களையுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்.நானும் கொஞ்ச நாளில் இதைக் கண்டு கொள்ளவே இல்லை.பாபு சங்கர் இரவு ராணி என்றால் என்ன என்று விளக்கினான். அப்போதுதான் எனக்கு எங்கள் வீட்டு மகாலட்சுமியில் வரும் `இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு...’ பாட்டுக்கு கொஞ்சம் அர்த்தம் புரிந்தது.எனக்கும் பத்து வயசு ஆகப் போகுதில்லா.
அன்று காலை நகராட்சியில் எம்.ஜி. ஆருக்கு வரவேற்பு.மாலையில் ரயில்வே பீடர் ரோட்டில் பொதுக்கூட்டம்.அன்றுதான் எங்க வீட்டுப் பிள்ளைக்கு ரிசர்வேஷன் டிக்கெட் கொடுக்கிறார்கள். அதையும் வங்கி விட்டு எம்.ஜி. ஆரைப் பார்க்க உட்கார்ந்திருந்தோம். என்னா சோமு, இந்தா சூடா சுக்குத் தண்ணி குடி என்று குரல் கேட்டது. ஜனா.கரி அடுப்பின் மேல் வைத்த பானையில் சுக்கு வெண்ணீர். ஒரு வாளியில் கிளாசை அலச தண்ணீர். வேண்டாம் என்றேன். துட்டு தர வேண்டாம்டே உங்க ஆளால நல்ல வியாபாரம் இன்னிக்கி. என்றான். சட்டென்று ஆமா யாகூப் வீட்டுக்குப் போனியா என்றான். யாகூபா ஐந்து வருஷமாயிற்றே அவனைப் பார்த்து என்றேன்.அது அவன் அப்பா இல்லடே பெரியப்பா, .அது கூட உண்மையோ என்னவோ, அவன் அப்பா செத்துப் போயிட்டாரு,என்றான்.அதற்குள் அவனை ஏய் சுக்கு வெண்ணீ என்று கூப்பிட்டார்கள்.இந்தா வாரேன் என்று கிளம்பினான்.கூட்டம் நெருக்கித் தள்ளியது. பின்னால், பின்னால் போய்க் கொண்டிருந்தோம்.

Visitors