Sunday, December 14, 2008

காட்டுக்கேது தோட்டக்காரன்....



வேலைக்குத் தேர்வான செய்தி ஒரு வழியாகத் தெரிந்தது. ஆனால் ஒரு மாதமாகியும் ஆர்டர் கைக்கு வரவில்லை.அறுபது பேரை தேர்ந்தெடுத்ததில், முப்பது பேருக்கு முதலில் போட்டுவிட்டார்கள்.அதில் என் பெயர் வரவில்லை.மனம் வெறுத்துப் போயிற்று.இதில் வேடிக்கை என்னவென்றால் என்னைப் பார்த்து தேர்வெழுதியவர்களும்,நான் சொல்லித் தந்து தேர்வுக்குப் படித்தவர்களும், முதல் முப்பது பேரில், ஆணை கிடைத்தவர்களில், அடங்கி இருந்தார்கள். அதில் இப்போது ஒருவர் ஏ. ஜி. எம் ஆக இருக்கிறார்.அம்மா சொல்வது போல் ஆறு முழுக்கத் தண்ணி(தண்ணீர்) போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணிதான்.அம்மாவுக்கு நாய்ப் பழமொழிகளில் அப்படியொரு பிடித்தம். அதனால்த் தானோ என்னவோ என் கவிதைகளிலும் நாய் அடிக்கடி வருவதாகப் படுகிறது.சிவசு கூடச் சொல்லுவார்,. ஆர்.பி.பாஸ்கரனுக்குப் பூனை, உங்களுக்கு நாய். அவர் வரைந்து தள்ளுவார், நீங்கள் எழுதித் தள்ளுகிறீர்கள் என்று.
அப்போது ராஜ மார்த்தாண்டன் திருவனந்தபுரத்தில் ஆய்வு மாணவராக இருந்தார்.அவருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு, கையில் இருந்த இருபது ரூபாய் சொச்சக் காசை வைத்து துணிந்து திருவனந்தபுரத்துக்கு பஸ் ஏறிவிட்டேன்.அது கூட இரண்டு நாள் முந்தி சீட்டாட்டத்தில் ஜெயித்தது.சிவராத்திரி ஸ்பெஷல் ஆட்டம்.நாலணா நாக் அவுட்.மூன்று ஆட்டத்திலும் கார்டு அப்படிப் பிடித்தது.இதெ போல் சுவாமி மலையில் சுப்ரமணிய ராஜு கல்யாணத்திற்குப் போயிருந்த போதும் அப்படி கார்டுகள், அள்ள அள்ள அற்புதமாய் வந்தது, ஒரு வேளை அதே நேரம் வீட்டில் செத்துப் போயிருந்த அப்பா வானில் இருந்து அருள் மழை பொழிந்தாரோ என்னவோ. கடைசி ஆட்டத்திற்கு, பசஙளெல்லாம் போடா நான் வரலைப்பா சின்னத் தாயோளிக்கி கார்டு என்னமா அப்புது இன்னிக்கி,”ஆட்டககாரனுக்கு ரம்மியும், ஜோக்கரும் அண்ணாச்சி, அண்ணாச்சின்னுல்லா கதவைத் தட்டுது.’’நான் வரலைப்பா என்று ஒதுங்கி தூங்கப் போய்விட்டார்கள்.ஷண்முகநாதன் மட்டும்,. எண்ட்ரி டபுள், கம்பல்ஸரி கேம், ஸ்கூட்டெல்லாம் கிடையாது, ஐந்து ரூபாய், வாறியா என்றான்.அவன் ரொம்ப துணிச்சலானவன். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவன். அருமையாக கேரம் விளையாடுவான்.மேலப்பாளையம் க்ளப், பெருமாள் புரம் பி.ஆர் சி க்ளப், ஸ்பிக் டீம் எல்லாவற்றுடனும் மோதி ஜெயித்திருக்கிறான்.பேட்மிண்டனும் நன்றாக விளையாடுவான்.நன்றாக ஸுவாலஜி ரெகார்டுகளுக்குப் படம் போடுவான்.என்னைப் போலவே எல்லாக் கெட்ட பழக்கங்கங்களுக்கும் குட்டிக் குட்டியாய் அறிமுகமானவன்.`வசந்த மாளிகை’ சினிமாவில் வருகிற வசனமொன்றை அடிக்கடி சொல்லிக் கொள்வோம்.``சின்ன எஜமானர் கெட்டுப் போயிட்டாரே தவிர கெட்டவரில்லை’’ என்று எங்கள் சின்னச் சின்ன தவறுகளுக்குச் சமாதானமாய்.
எங்களுடன் ராஜாமணியும் சேர்ந்து கொண்டான்.,சீட்டு விளையாட. கார்டும், மூன்றவது ஆட்டத்திற்கும் நன்றாகவே பிடித்தது.ராஜாமணி இரண்டு ஆட்டத்திலேயே செமத்தியாக பாய்ண்ட் கொடுத்துவிட்டு, முழித்துக் கொண்டிருந்தான்.மூன்றாவது ஆட்டத்தில் அவன் உருகிப் போட்ட முதல் கார்டு ஆட்டின் ஏழு, ஜப்பான் ஆகச் சேர்ந்து டிக் ஆகி விட்டது. எனக்கு ஏழு ஆட்டின் எப்பவுமே ராசி, சீக்கிரம் அதைக் கழித்து விட மட்டேன்..அவன் சீட்டுகளைத் தூர எறிந்து விட்டு, புகைத்து எறிந்திருந்த சிகரெட் துண்டுகளில் இருப்பதிலேயே நீளமான ஒன்றைத் தேடி எடுத்து, பத்த வைத்து எங்களை வேடிக்கை பார்க்க வந்தான்.சண்முகம் நன்றாக விளையாடுபவன்.எனக்கும் சுமாரான கார்டாகவே தோன்றியது.ஆட்டம் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தால் அவனுக்கும் கார்டு நல்லதாக இல்லை என்று தோன்றியது.. இரண்டு பேருமே கைக்கார்டையெல்லாம் கலைத்து முழுதாக செட்டுகளை மாற்றி மாற்றிப் பார்த்தாயிற்று....ஆட்டம் முடிகிற பாடாயில்லை.இரண்டு பேரும் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க தூங்கிக் கொண்டிருந்த சிலர் விழித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.இரண்டு பேருக்கும் கையில் இருக்கும் சீட்டுகளைப் பார்த்தால்,இரண்டு இரண்டு பாய்ண்ட், எண்ட்ரி டபுள் என்பதால் நான்கு பாய்ண்ட், தான் இருந்தது. தூக்கக் கலக்கம் வேறு.கண்ணெல்லாம் எரிச்சல். சிகரெட், பீடி என்று குடித்து, தாகமும் பசியும்.பதினைந்து ரூபாய்க் காசுக்கு இவ்வளவு போராட்டமா என்று தோன்றியது.இரண்டு பேரும் எங்கேயோ தவறு செய்திருக்கிறோம் என்று பட்டது. ஆட்டம் எப்பவொ முடிந்திருக்கும். இருவரும் சரியாகக் கவனிக்கவில்லை என்று எல்லோருமே அபிப்ராயப் பட்டனர்.நான் தைரியமாக இரண்டு, ரெண்டு இஸ்பேடில் ஒன்றைக் கழித்தேன்.சண்முகம் அதை எடுத்துக் கொண்டு என்ன நினைத்தானோ திடீரென்று டைமண்ட் ரெண்டைக் கழித்தான். நான் சுதாரிப்பதற்குள் பார்த்துக் கொண்டிருந்த பல கைகள் படக்கென்று அதை எடுத்து என் கார்டுகளிடையே சொருகி `டிக்’ என்று கோரஸாக ஒலித்தனர்.சரியான ஃபிஸ்ஷிங், என்று பாராட்டு மழை வேறு.விளையாட்டைத் தொடர எனக்கு விருப்பமில்லை,முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ளுவோம் என்றேன்.சண்முகம் இன்னும் ஒரு ஆட்டம், நீ கலைத்துப் போடு, நான் கலைத்தால் எனக்கு ராசியே கிடையாது. என்றான்.கலைத்துப் போட்டேன். அவன் சீட்டை ஒவொன்றாக எடுக்க மாட்டான், மொத்தமாக பதிமூனு சீட்டுகளையும் எடுத்தே விரித்துப் பார்ப்பான்.அப்படி எடுப்பதும் ஒரு வகையில் அவனுக்கு ராசி.அன்று ஆர்வக் கோளாறோ என்னவோ, சீட்டை ஒவ்வொன்றாக போடப் போட எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான்.நான் கலைத்துப் போட்டுவிட்டு, என் சீட்டுகளை கையில் எடுத்தேன்.ஒரே படமாக, கிங்க், குயின், ஜாக்கி, என்று ஒரே படமாக இருந்தது.சரி பாய்ண்ட் அள்ளீட்டுப் போப்போகுது,என்று அவன் முகத்தைப் பார்த்தேன். எப்பவுமே அவன் முகத்தில் இருந்து ஒன்றையுமே கண்டு பிடிக்க முடியாது. சிலருக்கு நல்ல கார்டாக, ரம்மியும், ஏகப்பட்ட ஜோக்கருமாக வந்து எதை எங்கே சேர்ப்பது என்று திண்டாடுவார்கள். நமக்குத் தெரிந்து விடும்,``புள்ள முழிக்கிற முழி பேளறதுக்குத்தாண்டோய்’’
என்று.சத்தம் போடாமல் ஸ்கூட் விட்டு கார்டைக் கவிழ்த்தி வைத்து விடுவார்கள் பலரும். ஆனால் சண்முகம் முகத்தில் அதெல்லாம் வழக்கமாக கண்டு பிடிக்க முடியாது.இந்த முறை அவன் சற்று வேறு மாதிரியான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.சரி நாம் காலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் கார்டுகளை ஷோ என்று விரித்துக் கீழே வைத்தான்.நானும் கார்டைக் கீழே போடப் போனவன் ஏதோ உள்ளுணர்வு உந்த அவன் கார்டை, டிக் சரியா என்று பார்த்தேன.இரண்டு ஆட்டின் ஏழுகளும் ஒரு கிளாவர் ஏழும் பல்லிளித்தது வ்ராங் டிக் என்றேன்.அவன் கவிழ்த்தி வைத்த ஒற்றைக் கார்டை திருப்பிப் பார்த்தான். டைமண்ட் ஏழு. ராங் டிக் என்று ஒத்துக் கொண்டான்.எல்லாருக்கும் ஆச்சரியம் அவனா அப்படிச் செய்தது என்று. சரி விடிஞ்சுடுச்சு வா எல்லாருக்கும் பேட்டை ரோடு ஐயர் கடையில் காபி வங்கித்தா என்று சிலர் கிளம்ப, அவன் தான், சேச்சே ஜெயிச்சவன் உடனே செலவழிச்சாலோ கடன் கொடுத்தாலோ அடுத்தாப்ல கார்டு பிடிக்காது என்று தடுத்து விட்டான்.அப்போதுதான் எனக்கு திருவனந்தபுரம் போகலாம் என்ற யோசனை வலுப்பட்டது.
அதற்கு முன்னால் (கசடதபற)மஹாகணபதியுடன் ஒரு தரம் திருவனந்தபுரம் போயிருந்தேன்.அப்போதும் கையில் கல்யாணி அண்ணன் தந்து விட்டிருந்த ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. திருவனந்தபுரம் போய் இறங்கியதும் மஹாகணபதியிடம் விடாப்பிடியாகக் கேட்டு இன்னொரு ஐந்து ருபாய் வாங்கி வைத்துக் கொண்டேன்.அப்படி கேட்டு வாங்கியதன் வெட்கம் வெகு நாட்கள் வரை பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.இன்றும் கூட்.அப்போது மாதவன் அண்ணாச்சி கடை, செல்வி ஸ்டோர்ஸில் போய் அண்ணாச்சியிடம் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.அவருக்கு பூர்விகம் திருநெல்வேலிதான்.சுந்தரத் தோழர் தெருவில் அவருக்கு வேண்டியவர்கள் இன்னும் இருந்தார்கள்.அவர் தான் கடை ஆளை துணைக்கு அனுப்பி நகுலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.அன்றைக்கு ஏதோ பந்த். மத்தியானத்திற்கு மேல்த் தான் பஸ்கள் ஓட ஆரம்பித்தன.அப்போது நகுலனின் அப்பா, அம்மா எல்லோரும் இருந்தார்கள், அம்மா உடல் நலமின்றி படுக்கையில் இருந்தார். முன் வீட்டில் அவரது தம்பி குடும்பம் இருந்தது. அவருடனான முதல் சந்திப்பு அது.நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.சாயந்தரம் வாக்கில் அவரது அம்மாவை பரிசோதிக்க வந்த ஒரு டாக்டருடன் அவரது காரில் என்னை மாதவன் அண்ணாச்சி கடைக்கு அனுப்பி வைத்தார்.அண்ணாச்சி வீட்டிலிருந்து கொண்டு வந்த வேட்டியை உடுத்திக் கொண்டு பத்மனாப சாமி கோயிலுக்குப் போனேன்.கோயிலில் மின் விளக்கே இல்லாமல் பெரிய பெரிய தீபங்கள், திரி விள்ககுகளுடன் கோயில் அழகாக இருந்தது. அப்படியொருவெளிச்சத்தில் ஒரு கோயிலை நான் தமிழ் நாட்டில் பார்த்ததே இல்லை.கோயிலில் கூட்டமே இல்லை,கிட்டத்தட்ட நானும் அனந்தபத்மனாபனும் மட்டும் தான் என்று சொல்லி விடுகிற தனிமை.ரொம்ப நேரம் மூன்று வாசல் வழியாகவும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். காலடியைப் பார்த்து விட்டு மறுபடி முதல் வாயிலுக்கு வந்த போது அவன் என்னவோ புரண்டு படுப்பது போன்றிருந்தது.சற்று பயத்துடன் வெளியே வந்து விட்டேன். விஷ்ணுபுரம் படிக்கும் போது, இந்த பயம் மறுபடி வந்தது. (ஜெய மோகனுடன் திருவட்டார் கோயிலுக்கு இதே மாதிரி ஒரு சந்தியா காலத்தில் போன போதும் சற்று பயமாயும் எல்லாமே ஏற்கெனெவே ஒரு முறை நடந்து இம்மி பிசகாமல் மறுமுறை நடப்பது போலவும் இருந்தது).
இரண்டாம் முறை போகிறபோது அப்பா இல்லை. இறந்து போயிருந்தார்.நான் ஸ்ரீ பத்மனாபம் கவிதையை எழுதியிருந்தேன்.
அந்தக் கவிதையையும் கோயிலையும் நினைத்தவாறேதான் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன்.ஆனால் இந்த முறை மனதை வேறு ஆசைகள் ஆக்கிரமித்திருந்தன.அப்பா போன பிறகு வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தது. அப்பாவை நான்தான் கொன்று விட்டது போல் குற்ற உணர்ச்சி ஒரு நாளைக்கு ஒரு தரமாவது தோன்றாமலிருக்காது.படிக்கிற காலத்தில்,அதுவும் இவளின் மறு பிரவேசத்திற்குப் பின் நான் ரொம்ப சுத்தமானவனாகவே இருந்தேன்.அப்பாவின் விருப்பங்களுக்கு எதிராக நான் எம்.எஸ். ஸி படித்து அதில் தேர்ச்சியுறாமல் போனது எனக்கு நேர்ந்த பெரிய விபத்து. இதிலிருந்து என் சரிவுகள் தொட்ங்கியது.மதுரையில் என் தனிமை பலவித பழக்கங்களுக்கு காரணமாய் ஆகி விட்டது.அதற்கு ஊரைக் குறை சொல்லமுடியாது.

இரண்டாம் முறையும் .மாதவன் அண்ணாச்சி கடைக்குப் போய் மார்த்தாண்டனுக்காகக் காத்திருந்தேன்.அவர் வருவதற்கு மாலை ஆகி விட்டது,அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினோம்.அவர் என் கடிதத்தைக் கையிலேயே வைத்திருந்தார்.அதில் எழுதியிருந்த வரிகளைக் காட்டி சிரித்தபடியே வாங்க மலையாள பூமியின் அழகை, முதலில்``பருகி’’விடலாம் என்று அழைத்துப் போனார்.விரக்தியின் விளிம்பில் இருந்த நான் தாகம் தீர அருந்தத் தொடங்கினேன்.அவருக்கு இன்னும் அந்த மாத ஸ்டைஃபண்ட் வரவில்லை. யாரிடமோ கடன் வாங்கி வந்திருந்தார்.இரண்டு நாள் பொறுத்திருங்கள்...பணம் வரட்டும் என்றார்.
நீண்ட நாளைக்குப் பிறகு, துலாபாரம் படத்திற்குப் பிறகு சாரதாவும் ஷீலாவும் இணைந்து நடிக்கிற பால்க்கடல் படம் மறுநாள் ரிலீஸாகிறது.பெரிய பெரிய சாரதா போஸ்டர்களை சாலையெங்கும் பார்த்ததே போதும் என்ற மாதிரி இருந்தது..இந்த முறை கோயிலுக்கு மட்டும் போகக் கூடாது என்று தோன்றியது.மறுநாள் என்னை அறையில் இருக்க வைத்துவிட்டு அவர் யுனிவர்ஸிட்டிக்குப் போய் விட்டார்.நான் அறையிலிருந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தேன் எஸ்.வி.ஆரின் எக்ஸிஸ்டென்ஷியலிசம்-ஒரு அறிமுகம் அப்போதுதான் வந்திருந்தது. அதைப் படித்துக் கொண்டிருந்தேன்.புதுமைப் பித்தன் கதைத் தொகுப்பு ஒன்று கிடந்தது. அதையும் படித்தேன்.
மாலையில் அவர் வந்து வெளியே போனோம். நான் வாய் திறந்து கேட்கவுமில்லை. அவர் எங்கே கூட்டிப் போகிறார் என்று சொல்லவும் இல்லை.கால் போன போக்கில் நடப்பதாகவே எனக்குப் பட்டது.உள்ளூர அதற்காகவும் இருக்குமோ என்றும் தோன்றியது.தஞ்சை ப்ரகாஷ் உனக்கு எப்போதாவது பெண்ணுடன் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா என்று ஒரு முறை கேட்ட போது, அது வரை இல்லை என்றேன்.அதன் பின் உனக்கு காதல் பற்றிய கண்ணோட்டம் மாறி விடக்கூடும் என்று சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது.இதை வெளிப்படையாக கடிதத்தில் எழுதி விட்டோமோ என்று சற்று மனது உழம்பியது.அந்தத் தெருவுக்கு ஏற்கெனெவே வந்திருக்கிறோமோ என்று நினக்கத்தொடங்கும் போது அவர் ஒரு வீட்டிற்குள் விறுவிறுவென்று போனார்.குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்று ரெக்கார்ட் பிளேயர் பாடிக் கொண்டிருந்தது.நானும் அதே விரைவுடன் பின் தொடர்ந்தேன்.
சாந்தாவின் இடுப்பில் ஒரு நீளமான தழும்பு. முண்டும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.நல்ல சந்தன சோப்பின் மணம், சாயங்காலந்தான் குளித்திருக்க வேண்டும்.ஒரு கட்டில். .ஒரு ஸ்டூலில் ஃபேன். நிற்பதற்கே இடம் இல்லாத சிறிய அறை.கட்டிலில் சாவகாசமாகச் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கூடிப்போனால் இருபது வயதிருக்கும்.என் துயரங்களுக்கும் 26 வயது முடிஞ்சு போச்சு என்று கோகயம் பத்திரிக்கையில் அப்போதுதான் கவிதை எழுதியிருந்தேன்.
சைக்கிள் பழகும் போது கீழே விழுந்து அந்தத் தழும்பு ஏற்பட்டதாகச் சொன்னாள்.நெய்யாற்றிங்கரை ஊர்.அண்ணன் மனைவி சொல்லி, அண்ணன்தான் இந்த வீட்டில் கொண்டு வந்து விட்டான்.மாதா மாதம் இங்கே வந்து சேச்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு போவான். அந்த வாழ்க்கை குறித்து அவளுக்கு பெரிய ஆவலாதிகள் ஏதுமில்லை.அந்நேரத்திலும் அவள் பரபரப்பு ஏதுமில்லாமல் இருந்தாள்.என் பரபரப்பை அடங்க வைத்துக் கொண்டிருந்தாள், சாவகாசமான பேச்சின் மூலம். இரவு முழுக்க ஒரு ஆளுடன் மட்டும் என்பதால் வந்த நிம்மதியோ என்று தோன்றியது.
.பால்க் கடல் பற்றிப் பேச்சு வந்தது. `பார்த்தோ’ என்று ஆசையாய்க் கேட்டாள். இல்லை என்றேன்.அவளுக்கு சாரதாவெல்லாம் பிடிக்காது. அவள் அடுத்த தலை முறை. ஷீலாம்மை பிடிக்கும் ஸ்ரீவித்யா பிடிக்கும் என்றாள். செம்மீன் பாட்டை முனுமுனுத்தாள். நான், நதி படம் பர்த்திருக்கிறாயா என்று கேட்டேன். தனக்கு ரொம்ப பிடித்த படம் என்றாள். ``பஞ்சதந்ரம் கதையிலே , பஞ்சவர்ணக் குழலிலே மாணிக்யப் பைங்கிளி மானம் பறக்குந்ந வானம்பாடியெ ஸ்நேகிச்சு-ஒரு வானம்பாடியெ ஸ்நேகிச்சு’’.என்று அழகான குரலில் படினாள். பகீரென்றது குரலைக் கேட்டதும். ``நித்ய விசுத்தமாம் கன்ய மரியமெ, நின்னாமம் வாழ்த்தப் பெறெட்டே....’’ என்று ஜேசுதாஸைப் பாடினாள்.அதைவிட அந்த நஸீர் பாடுகிற முதல்ப்பாடல் நல்லாயியிருக்குமே என்றதும் உற்சாகம் கொப்பளிக்க, ``காயாம் பூ கண்ணில் விடரும், கமலதளம் கவிளில் விடரும்... என்று என் கன்னத்தைக் கிள்ளினாள். கவிளில் என்றால் கன்னமோ என்று கேட்டதும், ஓம், நிங்கள் மலையாளம் அறியுமோ என்றாள்.நான் படுத்திருந்த அவள் வயிற்றில், தினமும் எழுதிப் பார்க்கிற இரண்டெழுத்தை மலையாளத்தில், விரலால் எழுதினேன். அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் எழுதியபின் `ச’- வை மட்டும் கண்டு பிடித்தாள். சரி விடு சாரே, என்று மறுபடி ஜேசு தாஸை பாடத்தொடங்கினாள்...ஓரிடத்து ஜனனம், ஓரிடத்து மரணம்,,,,, என்று. நான் ஓமனத்திஙகளினு ஓணம் பிறக்கும் போழ் தாமரக் கும்பிளில் பனி நீரு..பாட்டை எடுத்துக் கொடுத்தேன். அவள் கட கடவென்று சிரித்தாள்...தமிழ்ல்ல மொழி மாற்றஞ் செஞ்சதையாக்கும் சார் பாடறது...என்று.அப்படியெங்கில் இதுதானாக்கும் நல்ல பாட்டு என்று ’’ தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..’’ என்று மலையாளத்தில் பாடினாள்.`அவள் ஒரு தொடர் கதை’ அப்பத்தான் மலையாளத்தில் டப் செய்து வந்திருந்தது.. அது நல்ல படமென்றாள்.அவள் அந்த வீட்டிலுள்ள தோழி மாரோட அந்தப் படத்தை இரண்டு நாள் முன்புதான் பார்த்ததாகச் சொல்லிக் கொண்டிருந்த போது கதவை பட பட வென்று யாரோ தட்டினார்கள். .போலீஸ் ரைடு வருவதாக அவளிடம் சொன்னார்கள்.என்னை உடனே கிளம்பும் படி, நாங்கள் உள்ளே வரும் போது முன் கூடத்தில் உட்கார்ந்திருந்த(பெங்களூர்
ரமணி அம்மாள்),சேச்சி சொன்னாள்.நான் இது ஏமாற்று என்று கத்தினேன்..திரிச்சு நாளை வரூ என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.வேணெங்கில் எங்கெயும் லாட்ஜுக்கு போகலாமா என்று கேட்டாள்.
வேண்டாம் பணத்தை திரும்பக் கொடுங்கள். என்றேன்.அவளிடம் தந்திருந்த ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினாள். நான் மறுத்து விட்டுக் கிளம்பினேன்.ஒருவன் பின்னாலேயே வந்து இந்தா பாதிப் பணம் என்று கொடுத்தான்.நூறு ரூபாய். வழி கேட்டு, வழி கேட்டு அறைக்கு வந்தபோது மார்த்தாண்டன் என்ன ஆச்சு என்று விசாரித்தார்.பணத்தை அவரிடம் கொடுத்தேன்.
சரி வாருங்கள் என்று அருகேயே இருந்த நல்ல பார் ஒன்றுக்குள் கூட்டிப் போனார்.நீண்ட நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தோம்.நினைவு தப்பி மிதப்பு ஆரம்பித்தது. மார்த்தாண்டன் எனக்கு வேற இடம் தெரியாதே என்றே சொல்லிக் கொண்டிருந்தார் சாந்தாவின் சந்தன சோப் மணமும், இடுப்புத் தழும்பும், மதுக் கூடத்தின் ஆல்கஹால் சூழலை மீறி நினைவில் வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக படுக்கையில் `சயனித்த கோலத்தில்’ பாடிக் கொண்டிருந்த அவளின் குரல்த் தொடர்ச்சி...
``காட்டுக்கேது தோட்டக்காரன், இதுதான் என் கட்சி....’என்று என்னை,என் சுதந்திரத்தை கிண்டல் செய்வது போலிருந்தது.பிரகாஷின் வார்த்தைகள் பொய்த்துக் கொண்டிருந்தது.குடித்தால், வழக்கமாக வருகிற முகம் மூளை முழுக்க விரியத்தொடங்கியது.

Sunday, December 7, 2008

ஆயிரம் வாசல் இதயம்.....


அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்..அப்பா இறந்து போய், பெரிய வீட்டை விற்று விட்டு எதிரே இருந்த மங்களா வீட்டிற்கு குடி பெயந்திருந்தோம்.மங்களா வீடு என்பது பொதுவாக பெரிய, பண்னையார் வீடுகளில் ப்ண்ணையாரின் அலுவலகம் மாதிரி.பண்ணையின் கணக்கு வழக்குகளைப் பார்ர்க்கிறவர்கள் பகலில் அங்கே இருப்பார்கள்.பண்ணையாரைப் பார்க்க வருகிறவர்கள் அங்கேதான் பார்க்க வேண்டும்.பொதுவாக அந்த வீடு.. ஒரு வித குளுமையுடன் இருக்கும். சேரகுளம் பெரிய பண்ணையார் சண்முகவேலாயுதம் பிள்ளை வீட்டில், மங்களா, தெருவை ஒட்டி இருக்கும்.அதன் வழு வழு வென்ற சிமெண்ட் தரையும் நாயக்கர் மஹால் மாதிரி பெரிய தூண்களுடனான தார்சாலும் (தாழ்வாரம் !) எந்த வேனல்க் காலத்திலும் வெயிலே தோணாத மாதிரி குளுமையாய் இருக்கும்.அப்பாவும் சேரகுளம் சின்னப் பண்ணையார் தான்.ஆனால் பேர்தான் பண்ணையார்.மற்றபடி நான் பார்க்க எல்லாமே வெறும் பெருங்காய டப்பா வாழ்க்கைதான்.சேரகுளம் ஊரின் அருள் தரும் நித்யகல்யாணி உடனுறை அருள்மிகு சோமசுந்தரர் திருக் கோயிலில் ஏதோ ஒரு நித்திய கட்டளைக்கு பணம் வாங்க ஒரு ஒல்லியான ஐயர் வந்து ஐந்தோ பத்தோ வாங்கிப் போவார்.மற்றபடிபண்ணைக்கும் அவருக்கும் எனக்குத் தெரிந்து எந்த சம்பந்தமும் கிடையாது, யாரும் வருவதுமில்லை.எங்கள் மங்களா வீடு அப்படி யொன்றும் குளிர்ச்சியாகவோ பிரம்மாண்டமாகவோ இருக்காது.அதில் சிறிய குடும்பமாக யாராவது வாடகைக்கு இருப்பார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய், குளத்து ஐயர் இருந்தார்.அவர் பையன் சங்கரன் என் கிளாஸ் மேட்.அவர் வங்கியொன்றில் வேலை பார்த்தார்.ஐயர் அவனை என்னுடன் அதிகம் சேர விடமாட்டார்.அவர்களுமே, நாங்கள் இரண்டு மாதம் வெளியூர் போயிருந்த போது வீட்டைக் காலி செய்து பெரிய பண்ணையாருக்குச் சொந்தமான, யாருக்குமே வாடகைக்குத் தராத ஒரு வீட்டிற்கு மாற்றிக் குடி போய்விட்டார்கள்.அதற்கு ஏதோ ரகசியமான காரணமொன்றிருப்பது போல் அப்பாவிடம் அவரது சினேகிதர் ஒருவர் நாங்கள் ஊர் போய்த் திரும்பி வந்ததும் குசு குசுத்துக் கொண்டிருந்தார் நாந்தான் பெரியவர்கள் பேசும் போது அருகில் போவதேயில்லையே.(!)நான் சங்கரனைத் தேடி அவன் புதிய வீட்டிற்கு, அது வடக்கு வாசல் காம்பவுண்டில் இருந்தது,போன போது மாமி, வாடா அம்பி என்று கதவைத் திறக்க வந்தவளை, ஐயர் சத்தம் போட்டு தடுத்து விட்டார். அவன் படிச்சுட்டு இருக்கான், போ, சாயந்தரமா விளையாட வருவான் என்றார்.சற்று அம்மந்தழும்பு விழுந்த (அம்மை வார்த்த) முகமென்றாலும் மாமி களையான முகத்துடனும் அப்படி ஒரு நிறத்துடனும் இருப்பாள்.கொஞ்ச காலத்தில் அவர் மதுரைக்கு மாறுதலாகிப் போய்விட்டார் நாங்கள் மதுரையில் சித்திரைத் திருவிழா பார்க்கப் போன போது, மிட்லண்ட் ஹோட்டலுக்கு எதிரேயுள்ள, அப்போது அது மிக பிரபலமான பெரிய ஹோட்டல்,பூக்காரச் சந்தில் குடிய்ருந்தார்கள்.

சந்திரா டாக்கீஸ் அருகே அப்பாவின் நண்பரும் உறவினருமான ராஜு அண்ணாச்சி வீட்டில் நாங்கள் தங்கி இருந்தோம். அவர் ஆள், மைனர் மாதிரி இருப்பார்.அவரது மனைவி இறந்து இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தார்.அவரது மூத்த மனைவியின் பிள்ளைகளை அந்த அம்மா கொடுமைப் படுத்துவதைப் பார்க்க சகிக்காமல் நானெல்லாம் பயத்தில் இருந்தேன்.திருவிழா முடிந்து ஊர் திரும்புகிறதுக்கு முந்தினநாள். அதில் ஒரு பையனை அப்பா, ஊருக்கு எங்களுடன் வந்து விடுகிறாயா என்று கேட்டார்..அவன் அழுததைப் பார்த்து எனக்கு அழுகை வந்து விட்டது.அப்பாவிடம் சங்கரன் வீட்டிற்குப் போய் விடலாமா என்று கேட்ட நினைவு.
கொஞ்ச நேரத்தில் சங்கரன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம்.இரண்டு மூன்று பூக்காரச் சந்துகள் இருந்தது.நாங்கள் வந்ததை ஐயர் விரும்பவில்லை மாதிரி தெரிந்தது.எங்கள் கூட ராசு அண்ணாச்சியும் வந்திருந்தார்... அது வேறு சுத்தமாக ஐயருக்குப் பிடிக்கவில்லை.மாமி ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற பிரியத்துடன் உபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாள்.அப்போதெல்லாம் நான் தான் வகுப்பில் முதலாவது வருவேன். சங்கரன் சுமாராகப் படிப்பான். அதனால் மாமி என்னிடம் சற்று அன்பாகவே இருந்த மாதிரி நினைவு.மாமி சற்று தளர்ந்திருந்த மாதிரி இருந்தாள்.எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த போது சங்கரன் தவிர இன்னொரு பெண் குழந்தை இருந்தது.இப்போது மூன்றாவதாக காந்திமதி என்றொரு குழந்தை பிறந்திருந்தது.அது அச்சசல் ஐயரைப் போலவே இடுங்கிய கணகளுடன் இருந்தது.ஐயரை நாங்கள் `காக்கா கண்’ என்று கேலி செய்வோம்.எப்போதும் ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டேதான் பேசுவார்.
ஆள் நல்லா குண்டாக கொஞ்சம் குள்ளமாக இருப்பார்.சாயந்தரம் வேலை விட்டு வந்தால் பேண்ட். சட்டையெல்லாம் மாற்றி விட்டு வேஷ்டி, சட்டை காஸ்ட்யூமிற்கு மாறி விடுவார்.ஒரு பாத ரஸம் பூசிய பள பள கண்ணாடி அணிந்து கொண்டு வெளியே கிளம்பி விடுவார்.அப்பா, அப்பாவின் நண்பர்கள் உட்கார்ந்து பேசுகிற தெருக் கச்சேரியிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டார்.பொதுவாக அவர்களுடன் வெளியேயும் போக மாட்டார்.அவர் எப்போதாவது அப்படி அவர்களுடன் போனார் என்றால் பொருட்காட்சி அல்லது ஏதாவது குஸ்தி மாதிரி தான் இருக்கும்.ஒரு முறை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடை பெற்றுக் கொண்டிருந்த குஸ்திக்கு அப்பாவுடன் வந்தார்.
இந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அப்பாவுக்குத்தான் டிக்கெட் கிடைக்கும்..பொருட் காட்சியில் நடை பெறும் நாடகங்களுக்கு அப்பா சீஸன் டிக்கெட் வாங்கி இருப்பார்.தலையில் கட்டி விடுவார் சேர்மன் பா.ரா.(இவர் தான் மணிக்கொடி பத்திரிக்கையின் கடைசிக்க்கால ஆசிரியர்).எல்லா நாடகங்களுக்கும் அப்பா போக மாட்டார். எம் ஆர். ராதா . எம் ஜி ஆர் நாடகங்களுக்குப் போக மாட்டார்.ஒருசமயம் மட்டும் எனது நடுவுள்ள அண்ணன் மீனாட்சி சுந்தரத்துடன் எம் ஜி ஆரின் அட்வகேட் அமரன் நாடகம் போனேன். இன்பக்கனவு நாடக டிக்கெட்டைக் கேட்கும் படி அண்ணன் என்னை தூண்டி விட்டான். அந்த டிக்கெட்டை தரவில்லை. அதற்கு முந்தின நாள் நாடகமான அட்வகேட் அமரன் டிக்கெட்டை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தார்.நாடகத்தை சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை. முன்னால் இருக்கிறவர்கள் மறைத்தார்கள்.எழுந்து நின்றால் பின்னால் இருப்பவர்கள் உடகாரு என்று சத்தம் போட்டார்கள்.இன்பக் கனவு நாடகம் தான் பிரமாதமாக இருக்கும் என்று வாசமுத்து சொல்லுவான்.எனக்கு நாடகம் பார்ப்பது கூட முக்கியமில்லை. எம் ஜி ஆரை பார்க்க வேண்டும்.எல்லாவற்றிலும் முக்கியம் நாடக டிக்கெட், பாதி கிழித்தது வேண்டும்.அதை மறுநாள் வாசமுத்துவிடம் காண்பித்து பீற்றிக் கொள்ள வேண்டும். நாடகத்தில் எம் ஜி ஆர் இறந்து போவார் என்று நினைவு..இரண்டு மூன்று வருடம் கழித்து அண்ணா (கதை) வசனம் எழுதி வெளிவந்த `நல்லவன் வாழ்வான்’ படம் இந்தக் கதைதான்.ஆனால் அதில் எம் ஜி ஆர் சாக மாட்டார்.படப் பெயரிலேயே அது வந்து விடுகிறதே.நாங்கள் போன அன்று தாராசிங்கும் ரந்தாவா பயில்வானும் குஸ்திபோட்டர்கள்.தாராசிங் தான் ஜெயித்தார்.மறு நாள் கிங்காக் கிற்கும் தாரா வுக்கும் `காட்டா குஸ்தி, போட்டா போட்டி’ என்று அறிவித்தார்கள்.அன்று குஸ்தி முடிந்து திரும்பிவரும்போது ஐயர் அப்பாவிடம் பண்ணையாரே நாளைக்கு டிக்கெட் கிடைச்சா பாரும் வே, என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்ப, நானும் வருவேன் என்ற போது, .போடா நீங்கள்ளாம் பார்த்தாக்க பயப்படுவேள் என்று என்னிடம் சொன்னார்.
. ஐயரின் இரண்டாவது குழந்தை யார் ஜாடையிலோ இருந்தது பிடிபடவேயில்லை.எங்கள் வீட்டின் மற்ற பெண்களும் இது பற்றி ரகஸ்யமாகப் பேசிக் கொள்வார்கள்.தீர்க்கமான கண், மூக்கு, ஒல்லியான உடல் வாகு.இப்போது அந்தப் பெண் நன்றாக வளர்ந்திருந்தாள்.இங்கே இருக்கும் போது கைக்குழந்தையை விடச் சற்றுப் பெரியவள்.அவளும் இன்னும் மெலிவாக அவ்வப்போது இருமியபடி இருந்தாள்.நாங்கள் போனதுமே மாமி அவசர அவசரமாக ஃபில்ட்டரில் டிக்காக்‌ஷன் தயாரிக்கிற வாசனை பிரமாதமாக வந்தது.
ஊரில் நான் பள்ளிக் கூடம் போகாத நாட்களில் பார்த்திருக்கிறேன். காலை பதினோரு மணி வாக்கில் அப்பா எதிர் வீட்டு (மங்களா வீட்டு)த் திண்ணையில் அமர்ந்து மாமி போட்டுத் தருகிற ஃபில்ட்டர் காஃபியை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.அல்லது மாமி வார்த்துத் தருகிற தோசையை அடுப்படியில் அமர்ந்து சாப்பிடுவார்.அப்போது நான் அப்பாவுடன் இருந்தால் அக்காவோ அம்மாவோ என்னை எதற்கோ வேலையாய்க் கூப்பிடுகிறமாதிரி கூப்பிட்டு விடுவார்கள்.மாமி வீட்டில் சமையல் எல்லாமே குமுட்டி அடுப்பில்தான்.இரண்டு மூன்று சைசில் அடுப்பு இருக்கும்.மாமி குமுட்டி அடுப்பை அவ்வளவு சீக்கிரம், சுலபமாய்ப் பற்ற வைப்பதே எங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பொறாமையாய் இருக்கும். அதெப்படி மாமி நாங்க கரியைப் போட்டு வீசு வீசுன்னு வீசினாலும் சரி, குழலை வச்சு ஊதினாலும் சரி, பத்த வைக்கவே நேரம் சரியாயிருக்கு.. நீங்க அதுக்குள்ள சமையலையே முடிச்சுருதீங்க.. என்று கேட்டால் அதெல்லாம் இல்லடீ கொழந்தே நாங்க இதிலேயே பழகிட்டோம் என்பாள். மாமி சதுர்த்திக்கு
மோதகம் செய்தால்., மாவு தகடு போல, அவ்வளவு மெல்லிசாக இருக்கும்.பூரணமும் ஏலக்காய் மணத்தோடு ருசியாய் இருக்கும். பாகு சரியான பதத்தில் இருக்கும்.முருகியும் போயிருக்காது, பச்சைச் சர்க்கரை (வெல்லம்) வாசனையும் இருக்காது.ஆனால் மாமிக்கு கூட்டாஞ்சோறு மட்டும் வரவே வராது.கொடுத்தாலும் கொடுத்தவர் நிற்கிற போது ருசி பார்த்துப் புகழ்வதோடு சரி. முழுதும் சாப்பிட மாட்டாள்.அதை அப்படியே வேலைக்காரியிடம் ரகசியமாகக் கொடுத்து விட்டு விடுவாள்.இது தெரிய வந்த போது அம்மா அப்பாவிடம், நீங்க அங்க போய் வெக்கமில்லாம் வட்டச் சம்மணம் போட்டு தின்னுட்டு வாங்க,என்று சத்தம் போட்டாள்.அதற்குச் சில மாதங்கள் கழித்துத் தான் வீடு மாற்றிப் போனதும் நிகழ்ந்தது.அம்மா அப்பாவிடம் அதிர்ந்து கூடப் பேச மாட்டாள்.இதைக் கூட சற்று மெதுவாய்த்தான் சொன்னாள்.அவளுக்கு எப்பவுமே``நாசியால போற சீவனை ஏன் கோடாலியால வெட்டணும்’’ ங்கிற சொலவடை. தான் வாழ்க்கையே.அவள் எவ்வளவோ சொத்துக்களை அப்பாவிடம் கொடுத்து, எல்லாவற்றையும் எல்லாரும் தின்றே தீர்த்த நிலையிலும் சத்தமின்றி சகித்துக் கொண்டவள்.பிற்காலத்தில் என் ஏச்சு பேச்சுகளையும்.
இன்றும் மாமி தோசை வார்க்கட்டா பண்ணையாரே என்று கேட்டாள்...எனக்கும் மெல்லிசு தோசை, கரி அடுப்பில் வார்த்த தோசை, சாப்பிட ஆசையாய் இருந்தது. சரி மாமி என்றேன் நான். என்னுடன் வந்திருந்த என் சின்ன அக்கா, என்னை விட ரெண்டு வயசு தான் மூத்தவள், அவளுக்கு .என்ன தெரிந்திருந்ததோ, சும்மா இருலே என்று சத்தமில்லாமல் அடக்கினாள்.ஐயரின் நிலை கொள்ளாமையும்,அக்காவின் கண்டிப்பும் ஏதேது திரும்பவும் ராசு அண்ணாச்சி வீட்டுக்கே போகனுன்னு ஆயிருமோ என்று தோன்றியது.அப்படித்தான் ஆனது. காபியைக் குடித்துவிட்டு, சங்கரன் வாங்கி வந்திருந்த காரா பூந்தியை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். வழியில் அப்பாவும் ராசு அண்ணாச்சியும் ஏதோ பேசிக் கொண்டு வந்தார்கள்.அநேகமாய் மாமியின் உடல் நிலை பற்றித்தான் என்று நினைக்கிறேன்.அப்பா அதிகம் பேசவில்லை.ராசு அண்ணாச்சி தான் பேசிய படி வந்தார்.ஐயரின் தவிப்பை கிண்டல் செய்கிற மாதிரி சிரித்துப் பேசிக் கொண்டு வந்தார்.
எப்படியோ அந்த இரவை அவர் வீட்டிலேயே கழித்து விட்டு.அதி காலையில் கிளம்பி ஒரு ரிக்‌ஷாவில் ஏறி ரயிலுக்கு வந்தோம்.கூடவே ராசு அண்ணாச்சியின் மூத்த பையன் வந்தான்.அவன் கையில் அப்பா ஐந்து ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்தார்.அவன் அவசர அவசரமாக மறுத்தான். வழியில் திறந்திருந்த ஒரு ஓட்டலுக்கு முன் நிறுத்தி, ரிக்‌ஷாக் காரரை ஒரு காபி சாப்பிடச் சொல்லிவிட்டு நாங்கள் உள்ளே போனோம்.ரயிலில் சாப்பிட அப்பா பார்சல் வாங்கினார்.கல்லா அருகில் நின்றவாறே ஆர்டர் கொடுத்தார். அதிகமாய் இரண்டு பார்சல் வாங்கி இரண்டையும்,கைலாசத்திடம்,(ராசு அண்ணாச்சி பையன்) கொடுத்தார்.அவன் அதை அவசரமாக வாங்கி அங்கேயே தரையில் உட்கார்ந்து பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.ஓட்டல் காரர், தம்பி அந்த டேபிள்ல்ல உக்காந்து சாப்பிடப்பா என்று பதட்டமாகச் சொன்னார்.அவன் கொஞ்சம் சாப்பிட்டதை, சுருட்டி எடுத்து பக்கத்தில் கிடந்த டேபிளில் வைத்து மறுபடி சாப்பிட ஆரம்பித்தான். ஓட்டல்காரர் பெல் அடித்து சப்ளையரை கூப்ப்பிட்டு சாம்பார் விடச் சொன்னார். கையும் வாயும் பொறுக்காத சூடான சாம்பாரைச் சேர்த்து இட்லியை அவன் சாப்பிட்ட விதம் என்னவோ போலிருந்தது. இப்போது அக்காவின் முறை, அவள் அழுது கொண்டிருந்தாள்.சாப்பிட்டுவிட்டு, கை கழுவ முயற்சிக்காமல் கைலாசம் இன்னொரு பார்சலையும் அப்பாவையும் பார்த்தான்.அப்பா சாப்பிடப்பா, என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து நீயும் அவன் கூட சாப்பிடுதியா என்று கேட்டார்.எனக்கு சாம்பார் ஆசையில் சரியென்றேன். அக்கா சும்மாருல, எதையாவது தின்னுட்டு எருவிக்கிட்டுக் கிடக்காத என்றாள். ரிக்‌ஷாக் காரனும் ரயிலுக்கு நேரமாயிரும் என்றான்.ஏத்தத்துல மிதிக்க கஷ்டம் சாமின்னான்,. அப்பா இன்னொரு செட் இட்லிக்கு காசு கொடுத்துவிட்டு., கைலாசத்திடம் நல்லாப் படி என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ரயிலடியில் பழனியும் அவன் அப்பாவும் நின்று கொண்டிருந்தர்கள்..அவர்களும் சித்திரைத் திருவிழாவுக்கு வந்தவர்கள்தான். உண்மையில், பழனி மதுரை போகிறான் என்று தெரிந்து, அப்பாவிடம் அடம் பிடித்தே நானும் வந்திருந்தேன்.அவன் அவனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தான்..அப்பா தலையைப் பார்த்ததும், அவன் அப்பா யோவ் நேத்து குளத்து ஐயர் வீட்டுக்கு வந்தேராம, அடுத்த வீடுதான எம் மருமக வீடு. என்று சொல்லி விட்டு அப்பாவைத் தனியே அழைத்துப் போனார் நாங்கள் ரயிலில் ஏறி உட்கார்ந்து திருவிழா பற்றி, பெரும்பாலும் தாங்க முடியாத கூட்டம் பற்றிப் பேசத்தொடங்கினோம். ரயில் புறப்படும் சமயம் அப்பாவும் அப்பாவும் ஏறிக்கொண்டார்கள். அப்பா முகம் கல்லுப் போல் இருந்தது.அமீனாப் பிள்ளை முகத்தில் ஒரு கேலி இருந்தது.
அப்பா இறக்கும் முன்னேயே பெரிய வீட்டை விலை பேசி விற்று விட்டார். பாதித் தொகையை கடனுக்கு செல்லடித்துக் கொடுத்தது போக மிஞ்சியது மங்களா வீடும் அதற்குப் பின்னால் சில குச்சு வீடுகளும் தான்..ஆனால் மங்களா வீட்டில் குடியேறும் முன்பே, அப்பா பெரிய வீட்டிலேயே இறந்து போனார்.நாங்கள் சிறிய வீட்டிற்குக் குடியேறினோம். மாமி குடியிருந்த வீடு. அந்த அடுப்படியில் அம்மா ஈர விறகுடன் தினமும் போராடத் தொடங்கியிருந்தாள்.பெரிய வீட்டின் மாடியில் மாட்டியிருந்த பெரிய, பெரிய ஃப்ரேம் போட்ட படங்கள் எல்லாம் வீட்டை அடைத்துக் கொண்டிருந்தன. ரவி வர்மா படங்கள்., கண்ணன் ராச லீலா படங்கள்.இதில் கண்ணன் பல உருவங்கள் எடுத்து. பல் கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.ஜெர்மனியில் பிரிண்ட் போட்ட படம். யாரோ வட இந்திய ஒவியனின் கை வண்ணம். ரொம்ப நாளாகப் பெயர் நினைவிருந்தது. அப்பாத் தாத்தா, அப்பாச்சியின் லைஃப் சைஸ் படங்கள் எஸ். எம். பண்டிட் வரைந்த சரஸ்வதி படம்(பண்டிட்டே வரைந்த ஒரிஜினல் டிராயிங் கோயில்பட்டியில் தம்பி மாரீஸிடம் இருக்கிறது.) என்று ஏகப்பட்ட படங்கள்.எல்லாம் இந்தச் சிறிய வீட்டில் மாட்ட இடமில்லாமல் பட்டாசலில் அடைத்துக் கிடந்தது.ஒரெயொரு சின்ன,-சசிகலா ஜாடையில் இருக்கிற- சாரதா (நடிகை சாரதா) படத்தை மாடியில் என் மேஜை அருகே மாட்டி வைத்திருந்ததை இந்த வீட்டிலும் மாட்டி வைத்திருந்தேன்.அதுவும் கூட அட்டையில் ஒட்டி கண்ணாடித்தாள் சுற்றியது.
கொஞ்ச நாள் ஆக ஆக படங்களின் எண்ணீக்கை குறையத்தொடங்கியது.படங்கள் கூட ஒன்றிரண்டு இருந்தது. .ஃப்ரேம், கண்ணாடிகள்.எல்லாம் காணாமல் போகத்தொடங்கியது.. இது பெரிய அண்ணனின் வேலையாய்த்தான் இருக்கும் என்று அவனை சத்தம் போடத் துவங்கிய போது அழுகையுடன் அம்மா வந்து நான் தான் கடையில் போடச் சொன்னேன். அரிசி வாங்கக் கூட காசில்லை.. என்றாள்.நான் தினமும் 3.ரூபாய்30பைசா ஈ.டி(டெலிபோன் டிபார்ட்மெண்டில்-எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் கூலி வேலை) வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நேரம். அது என் சிகரெட்டுக்கே காணாது. பல நல்ல படங்கள் போய் விட்டன.
அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்.வேலைக்கு போய் வந்த ஒரு சாயந்தரம்,காலையில் நீ போனப்பறம் குளத்து ஐயர் மகன் வந்திருந்தான்.அவன் அம்மா கேன்சர் வந்து செத்துப் போய் விட்டாளாம்.தங்கை காந்திமதிக்கு கல்யாணம் வைத்திருக்கிறதாம்.அவன் அய்யரின் வங்கியிலேயே வேலை கிடைத்து, மதுரைக்கு பக்கத்தில் வேலை பார்க்கிறானாம்.அதைச் சொல்லுகையில் அம்மா அழுதாள்.சரி எதுக்கு வந்தானாம் என்று கேட்டேன். அவனுடைய அம்மா படம் ஒன்று கூட இல்லையாம்.இங்கே இருக்கிறதா, அக்காவுடன், அம்மாவுடன் பொருட் காட்சியில் எடுத்த போட்டோ ஏதாவது இருக்கா என்று கேட்டானாம்.அப்படி ஒரு பொருட்காட்சியில் எடுத்த போட்டோககள் பல இருந்தன. லைட் ஹவுஸ் ஸ்டுடியோ காதர் பாய் அப்பாவுக்கு சினேகம். அவர் பொருட்காட்சியில் எப்படியும் ஸ்டால் போடுவார்.சும்மா எட்டிப்பார்க்கிற சாக்கில் நிறய படம் எடுத்து விடுவோம். அப்படி யொரு பொருட்காட்சியில் மாமி, அக்கா, எல்லாம் எடுத்த படம் உண்டுதான்.அப்பா கூட ஐயரின் சாதாரணக் கண்ணாடியை மாட்டி ஒரு போட்டோ எடுத்தார் அன்று. நான் தூக்கக் கலக்கத்தில் இருந்தேன் அதுதான் அப்பாவின் ஒரே படமாக வீட்டில் இருக்கிறது.கண்ணாடி யெல்லாம் கழற்றி விற்ற பிறகு ராம பாணப் பூச்சி அரித்ததால் அங்கங்கே சற்று வெள்ளை விழுந்த அப்பாத்தாத்தா படம் ஒன்றிருந்தது.படம் இருந்தா கொடுத்திர வேண்டியதுதானே என்றேன்.செல்லம்மா,அப்பாவுடனும் ஐயர் கூடவும் எடுத்த படம் ஒன்னு தான் அப்பா பெட்டியில இருக்கு என்றாள். அப்பா தன் காலத்திலேயே தன் அழகான பீரோ, இரும்பு பெட்டி எல்லாம் விற்ற பிறகு. தன் `ஆஸ்திகளை’ ஒரு சின்ன டிரங்குப் பெட்டியில் வைத்திருந்தார்.அதில் தான் அந்த போட்டோவும் இருந்தது.அப்பா ஐயர், நடுவில் மாமி.அது வரை நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை.அம்மா அழுகைக்கிடையே சொன்னாள்.இதக் கொடுக்க வேண்டாம்ப்பா. உனக்கு வேணுமா என்றேன். வேண்டாம் என்றாள். கிழிச்சுரட்டா என்றேன். சரிஎன்றாள்.படம், அது ஒட்டியிருந்த மவுண்ட் எல்லாவற்றையும் கிழித்து அம்மாவிடம் கொடுத்தேன்.அம்மா அடுப்படிக்கு நகர்ந்தாள். .கிழித்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.வாசலில் நிழலாடியது.கல்யாணியண்ணன், நம்பி, லயனலுடன், வந்து கொண்டிருந்தார். வர வேண்டாமே என்றிருந்தது.