Thursday, June 14, 2012

நன்றி காட்சிப்பிழை திரை.ஜூன் 2012.




இன்றைய செய்தி நாளைய வரலாறு.
படத்திற்கு பெல் அடித்து விட்டார்கள். நண்பன் மணி வாட்சைப் பார்த்தான்.மூன்று மணிக்கு இன்னும் இரண்டு மூன்று நிமிடம் இருக்கிறது.இன்னும் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கப்படவில்லை.அநியாயக் கூட்டம்.முந்திய படமான ”நான் ஆணையிட்டால்...” எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான தோல்வியைக் கண்டது.அதனால் காவல்காரன் படத்திற்கு முன் பதிவு( ரிசர்வேஷன்) எதுவும் இல்லை. அதnannன் காரணமாக உயர்வகுப்பு டிக்கெட்டுக்கும் கூட்டம் அடிபிடியாய் இருந்தது.ஆனால் அசாதாரணக் கூட்டமென்றும் சொல்ல முடியாது.மணி இதை பேக்பெஞ்சு டிக்கெட்டில் பார்க்க வேண்டுமென்று தீரமானித்திருந்தான். அவனுடைய ’செண்டிமெண்ட்’டுக்கு அளவே கிடையாது. நல்ல படமாக இருக்கும், நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கிற படங்களின் முதல் நாள் முதல்க் காட்சிக்கு வரவே மாட்டான். இதை ரொம்பவும் எதிர் பார்க்கவில்லை என்பதனால் முதல்க் காட்சிக்கு வந்தான்.ஆனால் பேக் பெஞ்சுக்குத்தான் போக வேண்டும் என்று சொல்லி அதற்கான ஏற்பாட்டையும் அவனே பார்த்து விட்டான்.அதில் ஏதாவது ‘ராசிக் கணக்கு’ வைத்திருப்பான். ஏதோ ஒரு படத்திற்குப் போகும் போது, வாசலில் விற்ற ‘அவித்த வேர்க்கடலை’ நான்கு பொட்டலம் வாங்கி வந்திருந்தான். படம் ஓடவில்லை. அதனால் அவித்தthum வேர்க்கடலை என்றாலே அவன் அடிக்க வந்து விடுவான்.   பெல் அடித்ததும் வாட்சைப் பார்த்தவன் விடுவிடு என்று மேலே ஆப்பரேட்டர் ரூமிற்குப் போனான் போலிருக்கிறது. அவன் அந்தத் தியேட்டரில் எங்கு வேண்டுமானாலும் போவான்.எல்லோரும் நல்ல பழக்கம்.எல்லோருக்கும் நன்றாகச் செலவழிப்பான். திடீரென்று நியூஸ் ரீல் போட்டார்கள்.பொதுவாக முதல் நாள் முதல்க் காட்சிக்கு முன்னால் நியூஸ் ரீலெல்லாம் போடமாட்டார்கள். (வெள்ளிக்கிழமை தோறும் நியூஸ் ரீல் மாறும்...இன்று போட்ட பழைய நியூஸை ஏற்கெனவே பார்த்திருந்தோம். தியேட்டரில் அதனாலும் ஒரே கூச்சல்...). படத்தைப் போடு என்று, அது வேறு கூச்சல்.மணி பாதி இருட்டில் வந்தான்... இன்னக்கி வியாழக்கிழமைடா மூனு மணி வரைக்கும் ராகு காலம் இருக்கு...அதுதான் சொல்லிட்டு வந்தேன் என்றான். நியூஸ் இரண்டு நிமிடம் ஓடியதும் பாதியிலேயே நிறுத்தி விட்டு படம் போட்டார்கள். ”இப்ப என்ன நீ சொல்லிட்டதாலெ,பெட்டிக்குள்ள இருக்கிற ரீலில்,  க்ளை மாக்ஸ் மாறிரவா போகுது’ என்றேன்.”போடா மயிரு’ என்று சொல்லிவிட்டு. இடம் மாறி, தள்ளி உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நாளைக்குப் பிறகு, ‘திருடாதே’ படத்திற்குப் பின், இதற்கு டைரெக்‌ஷன் ப.நீலகண்டன். அநேகமா ஏழு வருடங்கள் கழித்து,அதனால் இது நல்லா இருக்கும் என்று மணி அதற்கு ஒரு கணக்குச் சொன்னான். நான் அதற்கும். ”ஏன் ‘திருடாதே’ படத்திற்குப் பின்னால், ’நல்லவன் வாழ்வான்’ வரவில்லையா, அது நீலகண்டனின் சொந்தப் படம், ‘கொடுத்துவைத்தவள்’ படத்திற்கும் வசனம், ‘ப.நீ’ தானே” என்றதற்கும் ஏற்கெனவே கோபித்திருந்தான்.அதற்குச் சமாதானமாக, ”எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி இதுவும் வியாழக்கிழமை ரிலீஸ் மணி,” என்றெல்லாம் சொல்லியும் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தான் தூக்கிவைத்த மூஞ்சியில் சிரிப்பே வரவில்லை.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு நல்ல பாக்சிங் சண்டை வந்தது. ’நாம்’ படத்திற்குப் பிறகு, அவர் படங்களில், பாக்சிங் சண்டையே வரவில்லை. எம்.ஜி.ஆரும் அதற்கெல்லாம் ஒரு கணக்கு வைத்திருப்பார். பத்து படங்களுக்கு இடையே சாதாரணமாக ‘சிலம்புச் சண்டை’ வராது. எதை எதை எப்போது ‘added attraction’  ஆக படத்தில் வைக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.அதே போல் ‘அடித்து முழக்கி சாப்பாடு சாப்பிடுகிற’ காட்சிகளையும் சரியான படத்தில்தான் வைப்பார்.மணி அப்படிக் காட்சிகளைப் பார்த்ததுமே சொல்லி விடுவான், “ஏலேய் படம் வெள்ளி விழா”என்று.அவன் சொல்லும் உதாரணம் எங்க வீட்டுப் பிள்ளை., மாட்டுக்கார வேலன்.இரண்டிலும் எம்.ஜி.ஆர் சரியான சாப்பாட்டு ராமனாக வருவார்.
பாக்சிங் சண்டையில் ஜெயித்து எம்.ஜி.ஆர், கோப்பை வாங்கியதும், நம்பியார் தன்னுடைய வீட்டில் வேலைக்குச் சேரும்படிக் கேட்பார்.பரிசு வழங்கிய போலீஸ் அதிகாரி,திருச்சி சௌந்தர ராஜன், “ மிஸ்டர் மணி, நல்ல வாய்ப்பு பயன் படுத்திக் கொள்ளுங்கள்” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லுவார். உடனே நான் சொன்னேன் , இரணடு சீட் தள்ளி அமர்ந்திருந்த மணியிடம், ”மிஸ்டர் மணி, இதுதான் சஸ்பென்ஸ், வாத்தியார் வழக்கம் போல சி.ஐ டி தான்” என்று. ’போடா வெளங்காதவனே’ என்று இன்னும் தள்ளிப் போய் விட்டான்.
திருச்சி சௌந்தர் ராஜனைப் பார்க்கையில் பாவமாக இருக்கும்.அவர் ‘பணம் தரும் பரிசு’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர். அந்தப் படத்தை தயாரித்தவர் சாண்டோ சின்னப்பாத் தேவரின் சகோதரர், சாண்டோ எம்.எம்.ஏ. சுப்பையாதேவர்.( அவரது முதல்ப் படம் ’தந்தைக்குப் பின் தனயன்’ என்கிற மாதிரியில் ஒரு படம்) பணம் தரும் பரிசு படக் கதாநாயகி, வி.ஆர் திலகம். இவரை விட அழகாயிருப்பார் இரண்டாவது கதாநாயகி, ரமணதிலகம் என்பவர். நாங்களெல்லாம் அவரையே கதாநாயகியாகப் போடிருக்கலாமே என்று நினைத்தோம். அவர் அடுத்த படம் நடிக்கவில்லை. அதற்குள் திருமண வாழ்வில் ஈடுபட்டு விட்டார். அவரது கணவர், பாடலாசிரியர் திரு. வாலி.அந்தப் படத்திற்கு இன்னொரு பெருமை(!) உண்டு. அதில் ஒரே ஒரு பாடல்க் காட்சியில், “ பார் இது பணம் தரும் பரிசு....”என்று வாலி எழுதிய பாடல் என்று நினைவு, அழகான ஒருவர் நடனமாடுவார். அவருக்காகத்தான் அந்தப் படத்திற்கே போனோம்.அது அவருக்கும் முதல்ப் படம்.அவர் சென்னை நகர தி.மு.க மேயர் சிட்டிபாபு.பாவம் அவருக்கு சினிமா முகவெட்டெல்லாம் இருந்தும் நடிக்கும் வாய்ப்பே வரவில்லை.மிசாவிலோ அதற்கு முன்பேயோ அரசியல்க் கைதியாக சிறை புகுந்தவர் சிறையிலேயே இறந்து போனார்.காவல்காரன் 1967செப்டம்பர் 7-ம் தேதி வந்தது.எம்.ஜி.ஆர் குண்டடி பட்டு ‘மறுபிறவி’ எடுத்த பின், மீதமுள்ள சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கிற முதல்ப்படம்.அவர்’செத்துப்பிழைத்த பின்வந்த முதல்ப் படம் அரசகட்டளை.அதில் ஒரே ஒரு சணடைக் காட்சியும், முடி சூட்டுகிற காட்சியும் மட்டும் எடுத்தார்கள். இரண்டிலுமே வசனம் பேசவில்லை.
அதனால் பல வதந்திகள் உலவின. இனி அவருக்கு பின்னணிக் குரல்தான்.டி.எம்.எஸ்தான் பேசப் போகிறார் என்று ஒரு வதந்தி. இல்லையில்லை. டி.எம்.எஸ் ஸையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா....அதனால் எம்.ஜி.சக்ரபாணி பின்னணிக் குரல்கொடுக்கப்போகிறார் என்றார்கள்.ஆனால் எம்.ஜி.ஆரோ யாரையும் நம்பியிருக்க விரும்பவில்லை. தானே பேசினார்.அவர் பேசி நடித்து எடுக்கப்பட்ட காட்சி பற்றி விரிவாக ’தினத்தந்தி சினிமாக் குருவி’யார் எழுதியிருந்தார்.அந்தக் காட்சி வரப்போகிறது என்று படம் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. தியேட்டர் அப்படியொரு அமைதியாய் இருந்தது.” பார்த்தென் சுசிலா, பார்த்தென்... என் கோமேதகச் சிலை குப்பைல விழறதப் பார்த்தென் சுசிலா பார்தென்......” என்று பேசியதும் தியேட்டர் முழுக்க ஒரே அழுகை, விசும்பல், ஒரு குரல், “தலைவா... நீங்க பேசவே வேண்டாம், பேசாமலே நடிங்க.... நாங்க பார்க்கோம்.. என்று ஒரு வலுவான குரல் கேட்டது. “ ஆமா, ஆமா பேச வேண்டாம், பேச வேண்டாம்..”என்று அழுகை முழுதாய் நனைத்த குரல்கள் ஆயிரக்கணக்கில் கேட்டது. மணி என் தோளில் சாய்ந்து கொண்டான். அவன் எப்போது என் அருகில் வந்தான் என்றே உணர்வில்லை.எனக்கு எம்.ஜி.ஆரைவிட அந்த ‘சனங்களை’யும் அவர்கள் சங்கடத்தையும் பார்த்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது.அடுத்தடுத்த காட்சிகளிலும் இதே போல் ஜனக்கூட்டம் தங்கள் உணர்ச்சியைக் கொட்டியதாகச் சொன்னார்கள். நாங்களுமே பார்த்தோம். ஆனால் முதல்க் காட்சியின் போது ஏற்பட்ட பதற்றம் இல்லை.படமும் நல்ல திரைக்கதை,சஸ்பென்ஸ் ஆகியவற்றுக்காக ‘க்ளிக்’ ஆகி விட்டது.படம் சிம்பிள்  ஆகக் கச்சிதமாக இருந்தது.மணிக்கு சந்தோஷம்.படத்தின் வெற்றியைப்  பார்த்து ‘ராக் வாலா’ என்று தர்மேந்திராவைப் போட்டு ஹிந்தியில் கூட எடுத்தார்கள்.”அடுத்த படமும் பெஞ்சுக்கே போவோம், சரியா மிஸ்டர் மணி’’ என்றேன்.  ”திருந்தவே மாட்டே....போடா..”என்று இரவு இரண்டாம் காட்சிக்கு டிக்கெட்  சொல்லப் போய்விட்டான். ”வேற யாருல்லாம் வாரா..”என்று கேட்டவன்,”போடா நீ யெல்லாம் வர வேண்டாம்...” என்று ஒரு பொய்க் கோபத்துடன் போனான். ஆனால் எனக்கும் டிக்கெட் சொல்லியிருந்தான்.செகண்ட் ஷோவில் ”நினைத்தேன் வந்தாய்....” பாட்டையும் அதில் வரும் பிர்க்காக்கள் பற்றியும்...விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தான் என்னிடம்.
திருச்சி சௌந்தர்ராஜனை நேரில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அடுத்த ஏப்ரலில் சென்னை சென்றிருந்தேன். தங்கியது எல்லாம் ‘ஜேயார் மூவிஸ்’அலுவலகத்தில்தான்.அதில் என் ஒன்று விட்ட அண்ணன் ஆவுடையப்பன் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தார்.அவர்கள் ‘புதிய பூமி படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.முக்கால் வாசி படம் முடிந்திருந்தது. அதுவும் பல காட்சிகள் துப்பாக்கிச்சூட்டுக்கு முன் (து.முன்/ து.பின்) எடுக்கப்பட்டவை.ஒரே ஒரு பாடல்க் காட்சி மட்டும் து’பின் எடுத்திருந்தார்கள். ’’விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை”’’..பாடல் காட்சி முடிந்து எடிட் பண்ணி வைத்திருந்தார்கள்.இரண்டு நாள் அங்கே இங்கே என்று சென்னையைச் சுற்றிப்பார்த்தேன்.அதிலும் முக்கியமாகமவுண்ட் ரோடின்சினிமா தியேட்டர்களைத்தான் ஒவ்வொன்றாகப் பார்த்தேன்.எல்லாவற்றையும் பேப்பரில் பார்த்தது. காஸினோ, பிராட்வே, மேகலா- பிளாசா,பாரத், மகாலட்சுமி,-குளோப், கிருஷ்ணா,மேகலா-சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி. மற்றும் தமிழகமெங்கும்...என்று தினத்தந்தியில் வரும் விளம்பரங்கள் பார்த்துப் பார்த்து அவற்றையெல்லாம் தேடித்தேடிப் போய்ப் பார்த்தேன்.பிளாசா தியேட்டரில் வைத்திருந்த பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை போட்டோக்கள் பார்த்ததும், ’தன்னைப்போல’ ஒரு பயம் வந்ததுஇன்றும் நினைவில் இருக்கிறது.அதுவே பழைய்ய போட்டோக்கள். அதில இருக்கும் பலர் இறந்து கூட போயிருக்கலாம்.ஆனாலும் ஏதோ ஒரு பயம்.
மூன்றாம் நாள் அண்ணனுடன் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குப் போனோம்.ஜேயார் மூவீஸ் கார் என்பதால் ராஜமரியாதையோடு போனோம். ஏவி.எம் படங்களின் திருநெல்வேலி விநியோகத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதற்கு வின்செண்ட் என்று ஒரு மேனேஜர். அவரை ’அன்பே வா’ படத்திலிருந்து பழக்கம். ஏற்கெனவே அவரிடம் வாங்கிய கடிதம் ஒன்றும் பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாய் இருந்தது.ஆனால் அதற்கெல்லாம் வேலை இல்லை.புதிய பூமி படத்தில் வரும் “நாந்தாண்டி காத்தி நல்ல முத்து பேத்தி...”பாடல் எடிட்டிங் நடந்து கொண்டிருந்தது.அதையே எவ்வள்வுநேரம் பார்த்துக் கொண்டிருப்பது.,’கண்ணன் என் காதலன்’ படத்தின் ரீரிக்கார்டிங் வேலைகள்,ஏவியெம் ரிக்கார்டிங் தியேட்டரில்நடந்து கொண்டிருந்தது.அங்கே போகலாமா என்று கேட்டேன்.
சவுண்ட் ப்ரூஃப் தியேட்டரென்றாலும் கூட அதற்குக் கணிசமான தூரத்திலொரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.கார்களையோ ஆட்களையோ  அந்தப் பகுதியில் அனுமதிப்பதில்லை.அந்த விளக்கு அணைந்ததும் அண்ணன் அங்கே கூட்டிப் போனார்.இசையமைப்பாளர்விஸ்வநாதன் குழுவினர்தியேட்டருக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.தபலா வாசிக்கும் சற்றே வயதான ஒருவர், பெயர் முருகேசன் என்று நினைவு, அவரைச் சீண்டி அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அவர் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார். விச்சுவின் உதவியாளர் (சங்கர்)கணேஷ் வந்து சமாதானப்படுத்தி எல்லோரையும் உள்ளே கூட்டிப் போனார்.நானும் போனேன். வெற்றிலை போட்டபடி வெள்ளை ஜிப்பாவும், பாகவதர் கிராப்புமாய் திருச்சி சௌந்தர் ராஜன் ஒரு சோஃபா போன்ற நாற்காலியில் அமர்ந்திருந்தார்.”கணேஷ், என்னப்பா சண்டை” என்று விசாரித்தார்.”முதலாளி வர்ற நேரமப்பா, படத்துக்கு டேட் குடுத்தாச்சு,இன்னும் ஒரு வாரம்கூட இல்லை, இன்னக்கி கடைசி சாங் பிக்சரைஸ் ஆகுது....”என்று சொல்லிக் கொண்டிருந்தார்.என்னை அண்ணன் அவரிடம் அறிமுகப்படுத்தினார்.தம்பிதான் கொஞ்ச நேரம் இருந்து பார்த்து விட்டுபோவானென்றார்.”அதற்கென்ன சும்மா காமெடி சீன்தான் ரிக்கார்டிங் நடக்கு...இருக்கட்டும்” என்றார்.தன் அருகிலிருந்த இன்னொரு சோஃபா நாற்காலியில் அமரச் சொன்னார். சோ, சந்திரபாபு காமெடி சீனுக்கு ரீரிக்கார்டிங்க் செய்து கொண்டிருந்தார்கள்.அது முடிந்து பெங்களூருக்கு கதை நகர்வதாக ஒரு காட்சி. திரையில் விதான் சௌதா முன்னாலுள்ள வீதியில் காரொன்று போவது போலவும் காமிரா விதான் சௌதாவை நோக்கிய படியே இருப்பது போலவும் காட்சி, மௌனமாய் ஓடியது.கணேஷ் ஏதோ நோட்ஸ் கொடுத்தார். தபலாதான் முக்கிய பங்கு....கொஞ்சம் வயலின்... தபலா முருகேசன் முகத்தில் வாசிக்கும் போது அப்படியொரு மலர்ச்சியும் சிரிப்புமிருந்தது... இந்த ஆளா கொஞ்ச நேரம் முன்பு சண்டை போட்டவரென்று தோன்றியது. இரண்டு ஒத்திகைக்குப் பின் ரிக்கார்டிங் அழகாய் ஓ.கே ஆனது.பின்னணி இசையுடன் அதே காட்சியைப் பார்க்கும் போது உயிரோட்டம் கூடியிருந்தது.கணேஷ்,மாமா பிரமாதம் என்று தபலாக்காரரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.
ஆர்.எம் வீரப்பன் வந்தார்.அதுவரை கால் மேல் கால் போட்டபடி என்னிடம் பேசிக் கொண்டிருந்த சௌந்தர்ராஜன் திடீரென்று எழுந்து கைகட்டி வாய் பொத்தாத குறையாய் நின்று அவரை வரவேற்றார். ஆர். எம் வீ யின் முதல் கேள்வி “இது யார்? என்பதுதான்.நானாகவேமுன் வந்து ஜேயர் மூவீஸ் என்றேன். ஊரிலிருந்து வந்திருக்கீங்களா என்றார். தென்காசி...? என்றார். ஆமா என்றேன் சௌந்தர் ராஜனுடன் தனித்துப் போனார்.அத்தனை மியூசிக் கலைஞர்களும் கணேஷும் பய பக்தியுடன் நின்றார்கள்.ஐந்து நிமிடம் தான். “சின்னவர்,ஜேயார் மூவீஸ் பாட்டு சீன் பார்க்க வருவாரு...பாத்துக்க சௌந்தர் ” இங்க வந்தாலும் வருவார்..என்று சொல்லிக் கொண்டே என்னைப் பார்த்தார்.எனக்கும் ஒரு முதலாளிங்கிற பயம் வந்திருந்தது.எப்படியோ வணக்கம் போட்டேன்.பதில் வணக்கமெல்லாம் போடவில்லை, போய் விட்டார். சௌந்தர் ராஜன், மறுபடி சோஃபாவில் “ அப்புறம்....?” என்கிற மாதிரி தோரணையாய் உட்கார்ந்தார்.பிஸ்கட்டும் டீயும் வந்தது.” அன்னன் குடுக்கச் சொன்னாரா என்று கேட்டார். ஆமா முதலாளி கொடுக்கச் சொன்னாங்க..” என்றான். கொண்டு வந்தவன். ”அதாம்ப்பா அண்ணன் தானே” என்றார். எனக்கு ஒன்றுமே ஓடவில்லை.  கொஞ்ச நேரம் முன்னால் பெட்டிப்பாம்பாய் நின்றவரா என்று தோன்றியது.பிஸ்கட் தின்று டீ குடித்தேன்.”தம்பி காலேஜ் படிக்கிறதாச் சொன்னீங்கள்ளா... நல்லாப் படியுங்க’ என்றார்.நானவரிடம் பணம் தரும் பரிசு பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ”ஆங்... அப்படியா நல்லா ஞாவகம் வச்சிருக்கீங்களே...”என்றபடி வெற்றிலை போட ஆரம்பித்தார்.எல்லா இசைக் கலைஞர்களும் தங்கள் வாத்தியங்களை உரையில் போட்டுக் கொண்டிருந்தனர்.”அண்னேன் நான் வாரேன்” என்றேன்.இருங்க தம்பி, டைட்டில் கார்டுக்கு டைரக்டர் ஒரு ஐடியா சொல்லி படம் போட்டுப் பார்க்கச் சொல்லியிருக்கார் அண்ணன். கொஞ்சம் சீன் பாருங்க இப்ப டைரக்டர் (ப.நீலகண்டன்) கூட வருவார் என்றார்.இருந்தேன்.அவர் வரவில்லை.அவரை மறுநாள்தான் பார்த்தேன். ஆனால், படம் கொஞ்சம் பார்த்தேன்.
”பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் பாலுடன் தேன் கனி சேர வேண்டும்..”.என்ற பாட்டு லலித கதியில்  மெதுவாக ஒலித்தது,(இதே பாடல் துரித கதியில் இன்னொரு காட்சியில் வரும் போதுதான் ஜெயலலிதா தானாக எழுந்து ஆடுவார்.) ஜெயலலிதா வெள்ளை ஆடையில் எம்.ஜி ஆரோடு சேர்ந்து ஆடிக் கொண்டே, (கற்பகம் படத்தில் வரும் மன்னவனே அழலாமா.....பாடல் போல,) வானில் பறப்பது போல ஒரு காட்சி ஓடியது.மாண்டேஜ் ஷாட் என்று அப்புறம் சொன்னார்கள்.இதன்மேல் டைட்டில் வரும் என்றார் சௌந்தர் ராஜன்.படம் வந்த போது அப்படி வரவில்லை. ஏதோ டைட்டில் கார்ட் இணைக்கும் போது மிஷின் கோளாறில் இந்த வெள்ளுடை அணிந்து வானில் பறக்கும் காட்சி அழிந்து விட்டதாகச் சொன்னார்கள். படத்தின் கடைசியில் ஜெயலலிதா மட்டும் அப்படி வான் மேல் பறந்து, உலகை விட்டு நீங்குவது போல் வரும்.கதைப்படி படத்தில் ஜெயலலிதா இறந்து போவார்.படத்தை ஊருக்கு வந்து ரிலீஸ் அன்று நண்பர்களுடன் பார்த்த போது இதைச் சொன்னேன்..ஏதோ புழுவைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.
சரியாய் எட்டு வருடம் கழித்து, தூத்துக் குடியில் வேலையிலிருந்தேன்.அப்போது எமர்ஜன்ஸி நேரம்.எங்கள் அலுவலகத்தின் மாடியிலொரு லாட்ஜ் இருந்தது.அதில் ஒரு ஹால் உண்டு.அங்கே எம்.ஜி.ஆர் மன்றத்தினர் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.சிவன் கோயில் சன்னதித் தெருவில் ஒரு கல்யாண மண்டபத்தில், ஏதோ பேருக்கு, அ.தி.முக பிரமுகர் வீட்டு விசேஷம்.அதற்கு மதுரைமுத்து வந்திருந்தார். நெருக்கடி நிலையின் கெடுபிடி.   இப்படி சிறிய விழாக்களை முன் வைத்தே அரசியல்க் கூட்டம் போட முடியும். முத்தண்ணன்தான் எம்.ஜி.ஆரை தி.மு.க கட்சியை விட்டு நீக்கவே ஏற்பாடு செய்தவர். பின் அவரே எம்.ஜி.ஆருடன் இணைந்து விட்டார். மத்தியானம், சாப்பாட்டு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் தற் செயலாய் இளமதி என்கிற திருநெல்வேலி ’என் அண்ணன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற’த்துக் காரரைச் சந்தித்தேன்.”வேலை முடிஞ்சுட்டுன்னா மேல வா, கட்சியோட ஊழியர் கூட்டம் நடக்கப் போகுது” என்றான் சற்று ரகசியமாக.என்னடா ரகசியக் கூட்டமா என்று நினைத்த படியே ஒரு நாலு மணி வாக்கில் போனேன். நூறு பேர் தரையிலமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரொம்ப சத்தமில்லாமல் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.மைக்கெல்லாம் இல்லை.நான் போனதும் நிறுத்தினார்.அங்கே இருந்த மன்றத் தோழர்கள் பலருக்கும் என்னைத் தெரியும். சைகையில் உள்ளேவரச் சொல்லி அமரச் சொன்னார்கள்.நான் இளமதி அருகே அமர்ந்ததும் அவர் மறுபடி பேச்சைத் தொடர்ந்தார். பேச்சை முடித்தார் என்றே சொல்ல வேண்டும்.”சொன்னதெல்லாம் கவனம், .நான் இப்போ பேச்சை முடிக்கப் போறேன்....யாரும் கை தட்டீராதிங்க...” என்றபடியே அண்ணாவையும் எம்ஜி ஆரையும் வாழ்த்தி முடித்தார். அவரைப் பார்த்து வணக்கம் போடுவது போல் சிரித்தேன்.இளமதி என்னை அறிமுகப் படுத்தினான், “ எல்லாம், நம்ம ஆதரவாளர்தான் பேங்கில வேலை  பார்க்கிறார்” என்றான். அவர் கவனிக்கும் நிலையில் இல்லை. காரை வரச் சொல்லுங்க, முத்தண்ணன் காத்திருப்பாரு மதுரையில் ஒரு காதணி விழா, அதற்குப் போகணும் என்று கிளம்பினார்,  முன்னாள் கதாநாயகன், பின்னாள் அப்பா நடிகர், அப்புறம் எம்.எல்.ஏ., அப்புறம்.......சத்துணவு அமைச்சர்..திருச்சி சௌந்தர்ரராஜன்.


Monday, May 14, 2012

நன்றி : காட்சிப்பிழை திரை, மே 2012


திரைக்குப் பின்னால்......
யோசித்துப் பார்த்தால் அரை நூற்றாண்டு ஆகி விட்டது.அப்போதெல்லாம் கால் ஆண்டுத்தேர்வோ, அரை, முழு ஆண்டுத் தேர்வுகளோ, எல்லா விடுமுறைக்கும் தென்காசிக்குப் போய் விடுவேன் அங்கே எங்கள் சகோதரி வீடும், அண்ணியாரின் வீடும் இருந்தது. அண்ணியாரின் வீட்டில்தான் நன்றாகப் பொழுது போகும். அக்காவுக்கு திருமணம் ஆன புதிதில் அவர்கள் வீட்டில் மின்சாரமே கிடையாது. அண்ணியாரின் தம்பிகள் இருவர், என்னை விட மூத்தவர்கள் என்றாலும், என்னிடம் அன்பாக இருப்பார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் ஒரு நகைக் கடை அதிபர். அப்போது அவருடைய நகைக்கடை அங்கே பிரபலம். அதனால் அவர் வீடு ஜே ஜே என்று கிடக்கும். மத்தியானவேளை சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்ததும் அந்த வீட்டு அம்மாவும் அவர்கள் மகளும் ரேடியோவை, நல்ல பெரிய மேஜிக் ‘ஐ’ உள்ள மர்பி ரேடியோ,  அலற விட்டுக் கொண்டு ஹாய்யாக பட்டாசலில் படுத்திருப்பார்கள்.பகல் மூன்று மணி ஆனதும் சிலோன் -வர்த்தக ஒலிபரப்பு- ரேடியோவில் அற்புதமான பாடல்கள் போடுவார்கள். நான்கு மணிக்கு, ‘எவெரெடி’ இசைக்களஞ்சியம் (அதுவே பின்னால் பாண்ட்ஸ் இசைக்களஞ்சியமாக மாறியது, ஸ்பான்சர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள்,ஸ்பான்சர்கள் என்பதெல்லாம் இப்போதைய வார்த்தைகள்.)
     அருமையான பிரம்பு நாற்காலிகள் கிடக்கும். அதை ரேடியோ அருகே போட்டுக் கொண்டு நாங்கள் உட்கார்ந்து விடுவோம்.அப்போது தென்காசியில் இரண்டு தியேட்டர்கள்தான் உண்டு. ஒன்று ஊரின் வடக்குப் புறமாக இருக்கும் பாக்கியலக்ஷ்மி தியேட்டர். இன்னொன்று தெற்கே இருக்கும் பரதன் தியேட்டர்.அவர்கள் அதை வடக்கு கொட்டகை, தெற்கு கொட்டகை என்பார்கள்.ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடலுக்கு முன், விளம்பரம் ஒலிபரப்பாகும் போதே அடுத்து என்ன பாட்டு, எந்தப் படத்திலிருந்து போடுவார்கள் என்பதை வைத்து ஒரு விளையாட்டை உண்டு பண்ணியிருந்தார்கள். அந்தப் பாடல் இடம் பெறும் படம் எந்தக் கொட்டகையில் வந்தது, வடக்கு கொட்டகையிலா தெற்கு கொட்டகையிலா என்று யூகித்துச் சொல்ல வேண்டும். பாடலை அறிவித்தவுடன் “ ஹேய் இது வடக்கு கொட்டகையில் வந்தது என்று கூவுவார்கள். அதைச் சரியாகச் சொன்னவருக்கு “ஒரு பாய்ண்ட்”. கொஞ்சம் சிகரட் அட்டைகளை முதலிலேயே ஆளுக்குப் பத்தாக பிரித்துக் கொள்வோம்.தோற்றவர்கள் ஜெயித்தவ்ர்களுக்கு ஒரு அட்டையைக் கொடுத்து விடவேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு அந்த ஊரில் எந்த தியேட்டரில் என்ன படம் வந்தது என்று தெரியாது.அவர்கள் சொன்னதைத்தான் நம்ப வேண்டும்.சமயத்தில் ஏமாற்றினால் அக்கா வந்து விடுவாள் அந்த விளையாட்டுக்கு.”ஏல ஏமாத்துராங்கடா... ’தாய் மகளுக்கு கட்டிய தாலி’ வடக்கு கொட்டகையில்தான் வந்தது...தெற்கு கொட்டகையில் வந்தது என்று சும்மா சொல்லுதாங்க,” என்பாள்.கொஞ்ச நேரம் அக்காவின் மேற்பார்வையில் நியாயமாக நடக்கும். அப்புறம் அம்மா விழித்துக் கொண்டு விட்டால் சத்தம் போட்டு விடுவார். “ஏட்டி, அப்பா முழிக்கிற நேரம் ஆயிட்டு, போ அடுப்பை பத்த வை காபி போடனும்” என்று கிளப்பி விடுவாள்.அப்பாவும் மாடியில் இருந்து இறங்கி வருவார்.சில நாள் அம்மாவும் மாடிக்குப் போய் விடுவாள். அப்போது அக்கா சந்தோஷமாய் விளையாடுவாள். அம்மாவும், பூனை போல் இறங்கி வந்து அடுப்படிக்குப் போய் காபி போட ஆரம்பிப்பாள்.
     திருநெல்வேலிக்கு வந்து இந்த விளையாட்டை அறிமுகப் படுத்த நினைத்தேன். அது எடுபடவில்லை. ஏனென்றால் இங்கே தியேட்டர்கள் அதிகம். 1960-ல், பாலஸ்-டி- வேல்ஸ், (என்ன ஆங்கில விசுவாசம்), ரத்னா, ராயல், பாப்புலர் என்று நான்கு இருந்தன. இவை தவிர பாளை அசோக் டாக்கீஸ் அங்கே பழைய படமும், சனி, ஞாயிறு தவறாமல், குறைந்த கட்டணத்தில் இந்தி,ஆங்கிலப் படமும் போடுவார்கள்.1960 பிப்ரவரியில் பார்வதி டாக்கீஸ் ஆரம்பித்தார்கள்.அப்பொழுதெல்லாம் புது தியேட்டர்கள் என்றால் ஆரம்பப் படமாக சிவாஜி கணேசன் படம்தான் போடுவார்கள். பார்வதி டாக்கீஸ் ஆரம்பிக்கும் போது ”இரும்புத்திரை’ வெளியிட்டார்கள். 1962-ல் லக்ஷ்மி தியேட்டர் ஆரம்பிக்கும் போது “பார்த்தால் பசி தீரும்” படம் போட்டார்கள்.எனக்குத் தெரிந்து எந்த தியேட்டரும் எம்.ஜி.ஆர் படத்துடன் ஆரம்பிக்கவில்லை. ரொம்ப வித்தியாசமாக திருநெல்வேலியின் மிகப்பெரிய தியேட்டரான சென்ட்ரல் தியேட்டர் ஆரம்ப தினத்தன்று, ‘போலீஸ்காரன் மகள்’ படம் திரையிட்டார்கள். என்னடா இது சரியான அழுகுணிப்படத்தைப் போய் போடுகிறார்களே என்று பெண்கள் பேசிக் கொண்டார்கள்.
     திருநெல்வேலியின் முதல் தியேட்டர் பாப்புலர் டாக்கீஸ்தான். அதுவும், முதலில் நாடகக் கொட்டகையாகத்தான் இருந்தது.”நெல்லை கணபதி விலாஸ் தியேட்டர்” என்று பெயர்.ராயல் டாக்கீஸும் பழமையான தியேட்டர்தான். இதில் ’சிந்தாமணி’ படம் பிரம்மாண்டமாய் ஓடியதை அடுத்து அந்தப் பணத்தில் மதுரையில் ராயல் டாக்கீஸாரால் கட்டப் பட்டதுதான் “ சிந்தாமணி” டாக்கீஸென்பார்கள்.இப்போது லக்ஷ்மி, பார்வதி, ராயல், பாலஸ் என அநேகமான தியேட்டர்களை மூடி விட்டார்கள்.
     அப்போதெல்லாம் சினிமா தியேட்டர்கள் நல்ல வருமானம் தரக்கூடியவை. விநியோகஸ்தர்கள் பாடுதான் சற்றுத் திண்டாட்டமானது. தியேட்டர் நடத்தி நாலு காசு பார்த்தவர்கள் தாங்களே,விநியோகம் செய்தால் என்ன என்று இறங்குவதும் உணடு. பழம் தின்று கொட்டை போட்ட பல விநியோகஸ்தர்கள் இடையே அவ்வப்போது இப்படிச் சில சில புதுப் பணக்காரர்களும் நுழைவார்கள்.அவர்களால் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க முடியாது. அவர்களைத்தான் தயாரிப்பாளர்கள் குறி வைப்பார்கள். படம், ப்ரீ வியூ காட்டும் போது பல “சந்தோஷங்களை” ஏற்பாடு செய்து ஆளை அமுக்கி விடுவார்கள்.படத்தில் சென்சாருக்கு முந்திய சில ”கிளுகிளு“ காட்சிகளும் இருக்கும். அப்படி ஒரு புது விநியோகஸ்தர், பக்கத்திலும், படத்திலும் நடிகையின் ஆடைக் குறைப்பில் ஜொள்ளு விட்டு ஏகப்பட்ட விலைக்கு வாங்கி விட்டார், ஒரு படத்தை. அந்தப்படத்தில் அப்படிக் காட்சிகளே இல்லை. தன் முதல்ப் படத்தில், ஒரு வெள்ளி விழாக் காதாநாயகனான ஒரு நடிகர், தனது இரண்டாவது படமான அதில், வில்லனாக நடித்திருந்தார். கதாநாயகி நடிகையோ பிரபலமாகிக் கொண்டிருந்தவர். பிரபல நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் நடிக்க ஆரம்பித்து விட்டார். படத்தில் ஆடைக் குறைப்பைக் கேள்விப்பட்ட மிகப்பெரிய நடிகர்கள் இருவரும்,அறிமுகப்படுத்திய இயக்குநரும் படத்தில் வரும் அக்காட்சிகளை நீக்கி விடும்படி தயாரிப்பாளரை(அவரும் புதியவர்) நடிகை மூலம் வற்புறுத்த, சத்தமில்லாமல் தானே சென்ஸார் செய்து விட்டார் தயாரிப்பாளர். அவர்தான் இசையமைப்பாளரும், பாடல்கள் பிரமாதமாயிருக்கும். இங்கே படம் ரிலீஸாகையில், அந்த விநியோகஸ்தகக் கம்பெனி மேனேஜர், ஒரு ஆற்றங்கரையில் கதாநாயகியைக் காண்பிக்கும் போது, இப்போ அப்படி வரும், இப்படி வரும் என்று எங்கள் அருகில்  அமர்ந்து முதல் நாள், முதல்க் காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றும் வரவில்லை. நாங்கள் சத்தமாகவே கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அவருக்கு சற்று காது மந்தம்.அவரும் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்.
சில விநியோகஸ்தர்கள் சில ஏரியாக்களில் சக்கைப் போடு போடுவார்கள். அவர்கள் தங்கள் எல்லைகளை புதிய ஏரியாக்களுக்கும் விரிவு செய்வார்கள்.உதாரணமாக மதுரை- ராமநாதபுரம் ஏரியாக்களில் சேது பிலிம் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் பிரபலம்.திருநெல்வேலிக்கும் தங்கள் விநியோக எல்லையை விரிவு படுத்தினார்கள்.ஆனால இங்கே அவர்களால் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனக்கு, சேது பிலிம்ஸில் உதவி மேனேஜராக இருந்தவர், பஷீர் என்று கம்பம் ஊர்ப் பக்கத்துக்காரர், நண்பர். அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பேன்.அவர்களைப் போலவே மதுரையில் பிரபலமான ஒரு கம்பெனியினர், சுப்பு ஃபிலிம்ஸ் என்று நினைவு, திருநெல்வேலிக்கு ஒரு படத்தை எடுத்திருந்தனர். (அப்போதெல்லாம் திருநெல்வேலிக்கு எம்.ஜி.ஆர் பட ரேட்டே 100000/-தான். சிவாஜி படம் என்றால் இதற்கு நெருங்கி வரும். இந்த ரேட் கூடிக் கொண்டே போனது. அடிமைப் பெண் நான்கு லட்சத்திற்குப் போனது). நான் சொல்லும் பிரஸ்தாபப் படத்தை, திருநெல்வேலியின் பிரபலமான விநியோகஸ்தர் 50.,000/-ரூபாய்க்கு கேட்டு, பிறகு விட்டு விட்டனர், அவர்களின் முதல் மதிப்பு, திருநெல்வேலி - கன்னியாகுமரி ஏரியாவுக்கு ஐந்து வருடத்திற்கு, 40000/- ரூபாய்தான். படம் நன்றாயிருப்பதாகத் தோன்றவே 10000/ அதிகம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் கம்பெனியில் ‘மெட்ராஸ்’ சென்று படத்தைப் பார்த்து விலை பேசி முடிப்பதெல்லாம் ஒரு மேனேஜர். அவர் ஒரு  அய்யர். அவர் ரொம்பக் கெட்டிக்காரர், எங்கள் குடும்ப நண்பர்.அவர் ஒரு விலை சொல்லி விட்டால் அதைத் தாண்டி யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். அய்யரின் திருநெல்வேலி ரேட் 50000/- என்றால் மதுரைக்கு அதன் ரேட் 80000/ மட்டும்தான்.இதனால் அவர் படம் பார்க்க விரும்புகிறார் என்றால், படத்தயாரிப்பாளர்களே பயப்படுவார்கள். ”மனுஷன் ஏதாவது ஒரு ரேட்டைச் சொல்லிட்டார்ன்னா போச்சே.. அதுக்கு மேல் ஒரு பைசா கூட எவனும் தர மாட்டானே,” என்பார்களாம்.அப்படியும் என் இருபது வயதில் அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கும்.ஆனால் அவரது ரசனை ரொம்பவும் புதிதானது.தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு அவர் சொன்ன விலையைக் கேட்டு ஏ.பி.என் னே அசந்து போனாராம், ”நம்ம படம் அவ்வளவு நல்லா வந்திருக்கா” என்று.( அது எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது ஸ்டுடியோ வட்டாரங்களில் இன்னொரு ‘பாசமலர்’ தயாராகிறது என்ற பேச்சு அடிபட்டது.அது பற்றி பின்னொரு கட்டுரையில் பார்க்கலாம்) அதன் பிறகுதான் சுதாரித்து நல்ல விலைக்கு ஏரியாக்களை விற்று நிறைய லாபம் சம்பாதித்தார் என்பார்கள். ஆனால் அய்யரின் கம்பெனி அதை வாங்கவில்லை.அவர்கள் ரொம்ப முண்ட மாட்டார்கள்.அப்படியே விட்டு விட்டாலும் இரண்டாவது ஐந்தாண்டு உரிமையை சத்தம் காட்டாமல் வாங்கி விடுவார்கள்.
எனக்கு தெரிந்த ஒருவர், கே ஆர். விஜயா, அப்போது விஜயாவுக்கென்று ஒரு மார்க்கெட் இருந்தது, படம் ஒன்றை
(ஆயிரத்தில் ஒருத்தி)  விநியோக உரிமைக்காக,பார்க்க எண்ணினார்.நான் தற்செயலாய் சென்னையில் இருந்தேன். என்னையும் ப்ரீவியூவுக்கு அழைத்திருந்தார்.ஆனால் அன்று ‘அய்யர்’ கேட்டதாலேயே படம் போடுகிறார்கள். வடக்கு உஸ்மான் ரோடில் ஒரு ப்ரிவியூ தியேட்டர். நாங்கள் போனதும் அய்யர் வந்தார். அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.” நீ கிருஷ்ணன், (அது அவரது மகன் எம் .ஐ.டி யில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தான். நான் எம்.எஸ்.சி பெயிலாகிவிட்டு சுற்றிக் கொண்டிருந்தேன்.) ஃப்ரெண்டு இல்லியோ.... படிச்சிண்டுதானே இருந்தே, என்ன, இப்ப பட பிஸினஸ்சில் இருக்கியா” என்றார். ”ஆமாமா படிக்கிறேன், சும்மா நண்பர் கூட வந்தேன்”, என்றேன். அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். முக்கால்வாசிப் படம்தான் பார்த்திருப்பார். படம் நன்றாக இல்லை. அசோகனின் ஓவர் ஆக்ட் சகிக்க முடியவில்லை.”படத்தை நிறுத்தச் சொல்லிரலாமா..” என்று கேட்டார். எனக்கு படமாவது முழுதாகப் பார்ப்போமே என்று ஆசை. அதற்கு முன் ’புதிய பூமி’, ’கண்ணன் என் காதலன்’ (ரீரிக்கார்டிங் சமயம்) என்று சில படங்களை கொஞ்சம் கொஞ்சம் ப்ரீவியூ பார்த்ததுண்டு. அய்யர் எழுந்து விட்டார்.விளக்குகளைப் போட்டு விட்டார்கள். அய்யர்,
”முதலாளி கிட்ட பேசி விட்டுச் சொல்லுகிறேன்”  என்று கிளம்பினார். நான் கார் வரை போனேன். திடீரென்று “எவ்வளவுவே உம்ம ரேட், சொல்லும் பார்ப்போம்” என்று கேட்டுச் சிரித்தார்.
     ”அய்யய்யோ எனக்கு என்ன தெரியும்,” என்று அசடு வழிந்தேன். “சும்மா சொல்லும் வே” என்றார்.நான் 45 என்றேன். ”ஏயப்பா பரவாயில்லையே., நான் ரேட்டைச் சொன்னா வருத்தப் படுவா, அதெல்லாம் தாங்காது... வரட்டா..”  என்று சொல்லாமலேயே கிளம்பி விட்டார். நண்பர், அய்யர் என்ன சொல்லுகிறார் என்று துளைத்தார். ”ஒண்ணுமே சொல்லலை” என்று வடிவேலு பாணியில் சத்தியம் செய்தும் நம்பவில்லை. அதை ஐம்பதுக்கு, ஒரு ஆள் ஏற்கெனவே கேட்டு விட்டதாகவும் அதற்கு மேலிருந்தால் பேசலாம் என்று படத்துக்காரர்கள் சொன்னார்களாம். அய்யர் கணக்கு தப்பவில்லை. ஐந்து வருடம் முடிந்தும் கூட, முதல் கூடத் தேறவில்ல அந்தப் படம்.
     இன்னொரு படம் பற்றிப் பார்த்தோமே, அந்தப் படத்தை அய்யரின் மதிப்பாகிய 50000/ தை விட் அதிகமாக,மதுரை சுப்பு பிலிம்ஸார் 60000/- என்று முடித்து விட்டனர்.படம் வந்து நாலைந்து நாட்கள் ஆனது. படம் பயங்கர ஹிட். ’தரை டிக்கெட் முழுவதும் பெண்களுக்கே’ என்று தினமும் மாலைக் காட்சிக்கு போர்டு வைக்கிற அளவுக்கு கூட்டம் அலை மோதியது. திடீரென்று பஷீர் சொன்னர்,” உமக்கு விஷயம் தெரியுமா..இந்தப் படத்தை மதுரை சுப்புச் செட்டியாரிடம், ஒரு லட்சம் என்று பேசி வினியோக உரிமையை,மறுபடி அய்யர் வாங்கி விட்டார், இங்கே ஒருத்தனுக்கும் தெரியாது” என்று.கம்பெனிகளுக்குள் அவ்வளவு போட்டி உண்டு. அந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்க் காரர்களுக்கும் அய்யர் கம்பெனிக்கும் ஆகவே ஆகாது.. 70 நாட்களுக்கு மேல் ஆகியும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த “குழந்தையும் தெய்வமும் “ படத்தை, விரைவில் வரப்போகும் ”நான் ஆணையிட்டால்” படத்திற்காக, சீக்கிரமே டிக்கெட் கவுண்டரை மூடுவது, சீக்கிரமே படத்தைப் போடுவது என்று பல கலாட்டா செய்து தூக்க முயற்சித்தார்கள், தூக்கியும் விட்டார்கள்.. இதனால் வினியோகஸ்தருக்கும் தியேட்டர்காரர்களுக்கும் மனக்கசப்பு. அதற்குப் பிறகு அவர்கள் படம் எதுவும் இங்கே திரையிடப்படவே இல்லை.
இதெல்லாம் எல்லா தியேட்டரிலும் சகஜம். ரகசியப் போலீஸ்115, படத்துக்காக ஊட்டிவரை உறவு படத்திற்கு இப்படி நெருக்கடி கொடுத்தார்கள்.ஒளி விளக்கு படத்திற்காக தில்லானா மோகனாம்பாளை தூக்கி விட்டார்கள். ஆனால் இது மட்டும் முன்பே சொல்லித்தான் ரிலீஸ் செய்தார்கள். தில்லானா மோகனாம்பாள் கடைசி ( 50 வது நாள் என்று நினைவு) நாளன்று மாலைக் காட்சி ஹௌஸ்ஃபுல். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். நாங்கள் மறுநாள் ஒளிவிளக்கு படத்திற்காக தியேட்டரை அலங்கரிக்க அங்கே நின்று கொண்டிருந்தோம்.
     நான்தான் சுப்பு பிலிம்ஸ் மேனேஜர் சொக்கலிங்கம் என்பவரிடம் சொன்னேன். “ சார், படத்தை, உங்க செட்டியார் வித்துட்டாராமே ” என்று. அவருக்கு ஆச்சரியம். ”என்ன தம்பி, விளையாடுறீங்களா, எனக்குத் தெரியாம செட்டியார் எப்படி விப்பாரு” என்றார். இதை கேட்டுக் கொண்டிருந்த தியேட்டர் உதவி மேனேஜர் போல் ஒருவர், அவர்தான் வணிக வரி அலுவலக வேலைகளெல்லாம் பார்ப்பார். வாரம் ஒரு முறை போய் வரி கட்டிவிட்டு, ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் பின்னால் அங்கேயே இருந்து, C.T.O ஆஃபீஸ் சீல் அடித்து வரவேண்டும். அதற்கும் எங்களில் சிலர் அவருக்கு உதவிக்குப் போவோம். நாங்கள் கேட்கிற போதெல்லாம் தட்டாமல் டிக்கெட் தருவார். அவர், ”தம்பி சொன்னா சரியா இருக்கும்... நீங்க உடனே மதுரைக்கு கால் போடுங்க” என்று பரபரத்தார்.மேனேஜரிடமும் சொல்லி விட்டார். மேனேஜருக்கு  அய்யர் கம்பெனி வாங்கினதில் பயங்கரக் கடுப்பு. ஃஃபோன் போட்டுப் பேசினார்கள். ”ஆமா, லம்ப்பா ஒரு ரூபாய்க்கு கேட்டாங்க, அஞ்சு வருஷம் ஓடினாலும் வராத ரூபாயாச்சேன்னு கொடுத்திட்டோம்.. நீங்களும் ரிப்போர்ட்டே அனுப்பலை ” என்றார்களாம். சரிதான் படத்தை ஓட்ட மாட்டார்களே இங்கே என்று நினைத்தோம். ஆனால் அய்யர் கம்பெனியில் என்ன மாயம் செய்தார்களோ . தியேட்டர்காரர்கள் மசிந்து விட்டார்கள்.படம் அங்கேயே 175 நாட்கள் ஓடியது எம்.ஜி.ஆர், சிவாஜி ரிக்கார்டுகளையெல்லாம் தவிடு பொடியாக்கியது, அந்த கறுப்பு வெள்ளைப் படம். திருநெல்வேலியில் மட்டும் அந்த முதல் ’ரன்’னிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமாக விநியோகஸ்தர் பங்கு வந்தது.தியேட்டர் பங்கும் அதே அளவு வந்ததும் ஒரு சரித்திரம்.அந்தப் படம் ‘ பணமா பாசமா’.தியேட்டர் லக்ஷ்மிதியேட்டர், இப்போது அதை மூடி விட்டார்கள்.175 நாட்களும் பகல் காட்சி- அதாவது தினசரி மூன்று காட்சிகள்- ஓடியது. அதற்கு முந்திய, கறுப்பு வெள்ளைப்படம் மாட்னி ஓடிய சாதனை, 63 நாட்கள் படம் ’தனிப்பிறவி’. அதற்கு முன் நானும் ஒரு பெண் 42 நாட்கள் மூன்று காட்சிகள். அதற்கு முந்திய சாதனை, 30 நாட்கள் ‘பாசமலர்.’இதெல்லாமே பெண்கள் கூட்டத்தினால் உண்டான சாதனைகள்.
     எம்ஜியார் படமென்றால் முதல் வாரம் விநியோகஸ்தர் பங்கு 80% தியேட்டர் பங்கு 20% இரண்டாவது வாரம் 70க்கு 30 என்று கூடிக் கொண்டே போகும். கடைசியில் தலைகீழாகி விடும் ஆனால் 40-60க்கு கீழ் வராது.சில படங்கள் ஓடவே ஓடாது. விநியோகஸ்தர் இல்லாமல் நேரடியாக தயாரிப்பாளரே வெளியிட்டு...ஒரு வாரமோ பத்து நாளோ ஓடி பெட்டியை எடுத்துப் போகக்கூட ஆளில்லாமல் தியேட்டரிலேயே கிடக்கும். இவர்கள் எப்போதாவது, எந்த கேப்பிலாவது இரண்டு நாளைக்கு அந்தப் படத்தை ஓட்டி, ப்ரொஜக்டர் துருவேறாமல் பார்த்துக் கொள்வார்கள்.திருநெல்வேலி லட்சுமியில்” ஆசைஅலைகள்’ என்று ஒரு படம் எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா நடித்தது.. கே.வி.மகாதேவன் இசையில் ஒரு அருமையான பாடல் உண்டு
” அன்பு என்பது இன்பமானது
அன்பு என்பது தெய்வமானது..
தியேட்டரிலேயே படப்பெட்டி கிடந்தது.அதை தயாரித்தவரும் திருநெல்வேலிக்காரர்தான். இதே போல் தியேட்டரைக் காத்துக்கிடக்கும் பெட்டிகள் ஒவ்வொரு தியேட்டருக்கும் சிலவை உண்டு.  பார்வதி டாக்கீஸில் ’குழந்தைகள் கண்ட குடியரசு’, ராயல்டாக்கீஸில், நிறையவே உண்டு. மெரிலேண்ட் சுப்ரமணியத்தின் நீலா ப்ரொடக்‌ஷன்ஸ் படங்கள் அங்கே நிறைய உண்டு. ’ராஜராஜன்’, ’யானை வளர்த்த வானம்பாடி’,மர்மக்கை, என்று நிறைய உண்டு. இது போக ஹரிதாஸ், கடவுளின் குழந்தை, ஆகியவையும் அங்கே உண்டு. இதில் ஹரிதாஸ், கடவுளின் குழந்தை படங்களில் ஒன்றை வருடாவருடம் நவம்பர் 14 ந்தேதி குழந்தைகள் தினத்தன்று காலை 10 மணிக்கு இலவசமாகப் போடுவார்கள். அன்று பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் விடுமுறை. ”அந்தத் தியேட்டரில் இந்தப் படம் போடுகிறார்கள்”, ”இதில் அது” என்று ஒரே புரளியாய்க் கிடக்கும். அங்கும் இங்கும் ஓடுவோம். நிச்சயமாக ராயலில் போடுவார்கள். நான் ஹரிதாஸ் படமும் கடவுளின் குழந்தை படமும் பார்த்திருகிறேன்.பார்வதியில் குழந்தைகள் கண்ட குடியரசு பார்த்திருக்கிறேன். சிவாஜி கௌரவ நடிகராக வருவார்.பத்மினி பிக்சர்ஸ் பந்துலுவின் படம்.
ராயல் டாக்கீஸில் படம் முடிந்து போகையில், பெரிய குத்துப் போணியில் புளியோதரை வைத்துக் கொண்டு தரை டிக்கெட் வாசலில் வைத்து, கை நிறைய அள்ளிக் கொடுப்பார்கள்.அதற்காக ஹரிதாஸ் படத்தை இரண்டாவது தடவை முழுதாகப் பார்க்க உட்கார்ந்திருந்தோம்.ஆனால் அந்த வருடம் புளியோதரை தரவில்லை. எல்லோரும் என்னை ஏசித் தீர்த்தார்கள். இல்லையில்லை போன வருடம் கொடுத்தாங்கப்பா என்று யாரோ சொன்னதால் நண்பர்களிடம் அடி படாமல் தப்பித்தேன்.ராயல் டாக்கீஸையும் இப்போது மூடி விட்டார்கள்.சினிமாக் கொட்டகைகள் மட்டுமா, எத்தனையோ விஷயங்கள் அடைபட்டுத்தான் போயிற்று.