Monday, August 16, 2010

ஓடும் நதி-45


அது கொஞ்சம் தணிந்த வீடு. ஜன்னல் இல்லாத பட்டாசல், சற்று இருட்டாகவே இருக்கும்.முன்புறத் தார்சாலில், அதற்கு முன் விரிந்த தோட்டத்திலிருந்து காற்று நன்றாக வரும். தோட்டத்தில் எப்படியும் ஒரு பீர்க்கங்கொடி நிற்கும். சிறுவயதில் மார்கழிப்பனியில், பனிக்குல்லா மாட்டிக் கொண்டு காலையில் போய், கொப்பரைத் தண்ணீரில், குழந்தைகள் கேட்டால் தரவென்றே மிதக்க விட்டிருக்கிற பீர்க்கம் பூக்களை வாங்கி வருவோம்.வீட்டின் எல்லோருக்கும், அநேகமான எல்லா வேலைகளுக்கும், படிக்க, திருவையில் மாவு திரிக்க, கீரை குப்பை பார்க்க,வந்தவர்களுடன் புழக்கம் பேச, என்று எல்லா வேலைகளுக்கும், தார்சால்தான் வசதி. “இங்கே உட்கார், உட்கார் என்று சொல்வது போலிருக்கும் சுவரோரத்துத் திண்ணை.வீட்டின் மூத்தவன் எனக்கும் எல்லோருக்கும் ரொம்ப சினேகம்.அவன் அப்பா திடீரென இறந்த பிறகு, அவன்தான் குடும்பத்தையே கவனித்து வந்தான். படிப்பை பள்ளியிறுதி வகுப்போடு நிறுத்தி விட்டான்.வாழ்க்கை திடீரென்று சுமத்திய சுமைகளைக் கண்டு துவளவில்லை. ஆனாலும் ஒரு விட்டேத்தியான மனம் இருந்தது. சைக்கிளில் போனால், அவ்வளவு வேகமாகப் போவான்.

பஜாரில் அவனைத் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.மின்னல்போல ஏதோ ஒன்று தங்களையோ, தங்கள் கடையையோ கடந்து போனால், அது சைக்கிளில் போகிற அவனாய்த்தான் இருக்கும் என்பார்கள்.உதவி செய்வதென்றால் அவனைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு நிபந்தனையோ, எதிர்பார்ப்போ ஒன்றும் கிடையாது. ஒரு முழுக்கல்யாணத்தையும் அவன் ஒருவனே நடத்தி வைப்பான். உண்மையில் அவன் கால்களை நான் பார்த்ததில்லை, நிச்சயம் அதிலே சக்கரம் இருக்கும்.ஏனென்றால் யாரானாலும் “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..என்று கண்ணனாகவே மனதுக்குள் கொண்டாடுவார்கள்.ஆற்றையும் கோயிலையும் விட்டு விலகி வேற்றூருக்கு வந்ததற்கு வருந்துவதை விட அவனை விட்டு, விலக வைத்த உத்தியோக நிர்ப்பந்தமே அதிகமாக மனதைக் கஷ்டப் படுத்தும்.

அவன் வீடு நிறைந்திருந்தது, அவன் தங்கைக்கு திருமணம் உறுதி செய்கிறார்கள். வழக்கம் போல் திண்ணையில் அமர்ந்திருந்தேன். நாம் ஏதாவது உதவலாம் என்றால் அதையும் செய்ய விட மாட்டான்.நீ பேசாம உக்காரு, ஏய் பெரியவனே, மருமகனுக்கு, அந்த விசிறிய எடுத்துக் கொடு, வேக்குது பாருஎன்று தன் தம்பியிடம் சொல்ல,அவனும் அந்த கூட்ட நெரிசலுக்குள்ளும் போய் ஒரு விசிறியை எடுத்து வந்தான்.பெண்கள், பட்டாசலில், வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் போன சிறிது நேரத்தில் அவனது தூரத்து உறவான அக்கா வந்தார்கள்.ஏற்கெனவே பழக்கமானவர்கள்தான், தன் அசாத்திய அழகையும் மீறி கலகலப்பாக பழகுவார்கள்.அவர்களால் உள்ளே உட்கார முடியவில்லை போலிருக்கிறது. நெற்றிச் செந்தூரம், வியர்வையில் கரைந்து, கன்னம், கழுத்து என்று ஆறாய் வழிந்து. அவர்களின் நிறத்தை இன்னும் சிவப்பாகக் காட்டிற்று.

என்னிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசிக்கொண்டிருந்து விட்டு, “உனக்கெதுக்கு ‘விசிறிகொண்டா அதை என்று வாங்கி இரண்டு பேருக்குமாக வீசினார்கள்.நீங்களே வீசிக்குங்க என்று சொல்லி முடிக்கும் முன் அவர்களை உள்ளிருந்து கூப்பிட்டார்கள்.

கொஞ்ச நேரத்தில், அற்புதமான நலுங்குப்பாட்டு வந்தது, உள்ளிருந்து.......வள்ளி கல்யாண வைபோகமே... என்று வரிகளை மாற்றி பெண்ணுக்கேற்றவாறு பாடியதும், பலத்த சிரிப்புச் சத்தம் வந்தது.எட்டிப் பார்த்தேன், அந்த அக்காதான் பாடிக் கொண்டிருந்தார்கள். கலகலப்பானவர்கள் என்றாலும் முகத்தில் ஒரு கூச்சம் தெரிந்தது.என்னைக் கண்டதும் இன்னும் கொஞ்சம், முகத்தில் செம்பருத்தி பூத்தது.அதற்கப்புறமும் பாடினார்கள்..

தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடியபடியே வெளியே வந்தார்கள்.என்னிடம் உன் மருமக ஒரு பூ வைக்க விடமாட்டாள், வாசலில் விற்கும் பூவைக் கூப்பிட்டால், வாங்ககறதே அவதான்,வாங்கின உடனே போய், சாமி படத்துக்குப் போட்டுருவா,அதுவும் எட்டுகிற உயரத்தில இருக்கா,போட்டுட்டு வெறுங்கையால தீவாரனை(தீபாராதனை) வேற, காமிச்சுருவாஎன்றார்கள். வெட்கத்துடன் குழந்தை அவர்கள் சேலைக்குள் மறைந்து கொண்டாள்.. அப்போ அத்தான் இன்னும் ரகசியமாத்தான் பூ வாங்கீட்டு வாராகளாஎன்றதும், அடி படுக்காளியை.. என்று என்னை நோக்கி கையை ஓங்கினார்கள்.அந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் பணம் சேகரிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டிருந்தோம். அதெல்லாம் விலகி, மனம் லேசாகி விட்டது. பஸ்ஸில்,வழியெல்லாம் வரிகள், கவி வரிகள் மின்னலாய் வந்து கொண்டேயிருந்தது....

நலுங்கு பாடுகிற பெண்ணின்

சௌந்தர்யக் கூச்சம்...

பனிக்குல்லாவுக்குள்

மூக்கு வடிக்கிற

நிலாக்களெனப் பிள்ளைகள்...

ரகசியம் தெரியாமல்

மனைவிக்கு வாங்கின பூவை

சாமிக்குப் போட்டு வெறுங்கையால்

தீவாரனை காட்டுகிற குழந்தைகள்

“நளினமின்றிக் கீழே வைக்கிற போது

வீணை அதிர்ந்துதிர்க்கிற ராகப்பூ

ஒவ்வொன்றய்ச் சேர்த்த பீர்க்கம் பூக்கள்

மார்கழி வாசலில்

மறுபடி பூக்கும்

வாழ்க்கையின் அற்புதமான தருணங்களும், பேரைச் சொல்லக்கூட அனுமதிக்காத அருமையான மனிதர்களும், மனசுக்குள் மறுபடி மலர்விக்கிறவைதானோ தலைப்பற்ற கவிதைகள்.

Tuesday, August 10, 2010

ஓடும்நதி-44


வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்-இதில்

வளர்ந்தது சமுதாயம்.-இங்கு

வந்ததன் பின்னே கேள்வியிலேயே

வாழ்வதுதான் நியாயம்......என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

ஆம், வாழ்க்கை ஒரு புதிர். அது நமக்கு மேலும் மேலும் கேள்விகளைச் சொல்லித் தந்த வண்ணமே நகர்கிறது.தீர்வுகளைப் பதில்களாகச் சொல்லாமல் மேலும் கேள்விகள் மூலமாகவே சொல்கிறது.

ஒவ்வொருவரின் தேடலுக்கும் கேள்விக்கு இடையே அது விடைகளைத் தரத்தான் செய்கிறது. ஆனால், நாம் கவனியாமல் விட்டு விடுகிறோம்.ஒரு நாடோடிக் கதை உண்டு.ஒருத்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.அவள் கடுமையான பல விரதங்கள் இருந்தாள்.இருக்கன் குடி மாரியம்மனுக்கு நேர்ந்துகொண்டு 41 நாட்கள் சுத்தமாக விரதம் இருந்து கோயில் சென்று வந்தால், குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்று சொன்னார்கள். அப்படியே நாற்பது நாள் விரதமிருந்து, நாற்பத்தியோராம் நாள் இருக்கன்குடிக்கு ‘மாரியம்மனைப் பார்க்க, சுத்தபத்தமாகக் கிளம்பினாள்.அந்தக் காலத்தில் பஸ் வசதியெல்லாம் இல்லை, கால்நடையாகவே சென்றாள்.வழியில் வெயில்க் களைப்பிற்காக ஒரு ஆற்றோரமாய் மர நிழலில் தங்கினாள். கையில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண் மரத்தடியில் ஏற்கெனவே இருந்தாள்.அவள் முகமெல்லாம் ஒரு தவிப்பு.இவளைப் பார்த்ததும், அக்கா இந்தக் குழந்தையை ஒரு நிமிடம் வைத்திருங்கள், சற்று இயற்கை உபாதையை தணித்து விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்என்றாள்.இவளும் சரி என்று குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

குழந்தை அழகாக சிரித்துக் கொண்டிருந்தது, இவளும் ஆசை ஆசையாகக் கொஞ்சினாள். தாய்க்கு என்ன அவசரமோ, திரும்பச் சற்று நேரமாயிற்று,குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.இவளுக்கு சமாதானப் படுத்த தெரியவில்லை,பொறுமை இழந்தாள். காணாததற்கு இவள் மடியிலேயே வெளிக்கிருந்தும் விட்டது.அட சனியனே எம்புட்டுச் சுத்தமா கோயிலுக்கு ஆத்தாளை நெனச்சு வந்துகிட்டு இருக்கேன், சேலையை எல்லாம் நாசமாக்கிட்டயே, என்று குழந்தையிடம் சத்தம் போட ஆரம்பித்தாள். அது சிரித்தது. ஏயம்மா பொம்பளை சீக்கிரம் வா என்று சத்தம் கொடுத்தாள். தாய் வந்ததும், “ச்சை,என்ன புள்ள இது, என் விரதமெல்லாம் வீணாப் போய்விடும் போலிருக்கே, செய்யறதையும் செஞ்சிட்டு, சிரிக்க வேற செய்யுது, மூதேவி, ச்சீ இந்தா புடி,என்று அவளையும் கடிந்து கொண்டு ஆற்றை நோக்கி ஓடினாள். மீண்டும் குளித்து சேலையை எல்லாம் சுத்தம் செய்து, ஈர உடையுடன்,கோயிலை நோக்கி நடந்தாள்.

கோயிலில் ஆளே இல்லை, அம்மன் மட்டும் தூங்கா விளக்குகளுக்குப் போட்டியாக, மூக்குத்தி மின்ன அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள். யேழா தாயே, என்னமா நான் உன்னைக் கும்பிடுதேன், எப்படியெல்லாம் விரதம் இருந்து கஷ்டப்படுதேன், ஒரு புள்ளையத் தரக்கூடாதா,என்று வாய் விட்டு அரற்றினாள்.யாரோ சிரிக்கிற மாதிரி சத்தம் கேட்டது. இவள் சுற்று முற்றும் பார்த்தாள். சிரிப்பு, கருவறையிலிருந்துதான் வந்தது.உனக்கு சிரிப்பா இருக்கா, என் கஷ்டத்தைப் பார்த்து ஒரு பச்சை மண்ணைத் தந்தா என்ன”, என்றாள். அசரீரியாகக் குரல் வந்தது, “நாந்தான் கொடுத்தேனே, நீதான் மூதேவி, சனியன் என்று திருப்பிக் கொடுத்து விட்டாய், என்று.

இப்படித்தான் நாம் நமக்கு வாழ்க்கை ஏற்படுத்தித் தரும் சந்தர்ப்பங்களை கண்டுகொள்ளாமல், அளிக்கும் விடைகளைப் புரிந்து கொள்ளாமல், பல வாய்ப்புகளை நழுவ விட்டு விடுகிறோம். வாழ்க்கையின் பக்கங்களில், சந்தர்ப்பங்கள் எழுதிச் செல்லும் வரிகளை நாம் முழுதுமாக வாசிப்பதே இல்லை. மாறாக வரிகளுக்கு இடையில் வாசித்து பொழுதையும்,விதியையும் நொந்து கொள்கிறோம்.

ஒரு ஆளுமை வளர்ப்புப் பயிற்சி முகாமிற்குச் சென்றிருந்தேன்.என்னுடன் இன்னொரு நண்பர், சக ஊழியர், வந்திருந்தார். அவர் நன்றாகப் பணியெல்லாம் செய்வார். ஆனால் அவ்வளவு புத்தி கூர்மையானவர் என்று சொல்ல முடியாது. எதையும் கேட்டுக் கேட்டுச் செய்வார், ஆனால் திருத்தமாகச் செய்வார். காலையில் முதன் முதலாக எல்லோருக்கும் ஒரு வினா நிரல் கொடுத்து விட்டு அமைதியாய் மேடையில் அமர்ந்து கொண்டார் பயிற்சியாளர். அதில் பெயர், வயது,பணி புரியும் கிளை, என்று வழக்கமான கேள்விகள் இருந்தன.வாங்கியதுதான் தாமதம், எல்லோரும் கடகடவென்று நிரப்ப ஆரம்பித்தோம்.ஐந்து நிமிடத்தில், நிரப்பி விட்டு நான் சுற்று முற்றும் பார்த்தேன்.நண்பர் விழித்துக் கொண்டு நிரப்பாமல் இருந்தார்,சற்று தூரத்து இருக்கையில். நிரலை பூர்த்தி செய்யாமலே கொடுத்து விட்டார். எனக்கு, “என்ன, இதற்குக் கூட உதவி தேவையா என்று தோன்றியது. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த பயிற்சியாளர், நண்பரைப் பெரிதும் பாராட்ட ஆரம்பித்தார்.எனக்குப் புரியவில்லை. அவர் நிரல்களை மறுபடி கொடுத்து,முதலில் நிரலை நன்றாக வாசியுங்கள் என்றார்.தலைப்பில், கொட்டை எழுத்தில். நிரப்பும் முன், வழிகாட்டி நெறிமுறைகளை நன்கு படிக்கவும் என்றிருந்தது.நெறி முறைகளுக்காக பின் புறம் திருப்பினோம்.முதல் நெறிமுறையில் முன்பக்கத்தின் எந்தக் கேள்விக்கும், விடையளிக்க வேண்டாம்என்றிருந்தது. நண்பரைத் தவிர எல்லோர் முகத்திலும் அசடு வழிந்தது.