Tuesday, August 10, 2010

ஓடும்நதி-44


”வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்-இதில்

வளர்ந்தது சமுதாயம்.-இங்கு

வந்ததன் பின்னே கேள்வியிலேயே

வாழ்வதுதான் நியாயம்......”என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

ஆம், வாழ்க்கை ஒரு புதிர். அது நமக்கு மேலும் மேலும் கேள்விகளைச் சொல்லித் தந்த வண்ணமே நகர்கிறது.தீர்வுகளைப் பதில்களாகச் சொல்லாமல் மேலும் கேள்விகள் மூலமாகவே சொல்கிறது.

ஒவ்வொருவரின் தேடலுக்கும் கேள்விக்கு இடையே அது விடைகளைத் தரத்தான் செய்கிறது. ஆனால், நாம் கவனியாமல் விட்டு விடுகிறோம்.ஒரு நாடோடிக் கதை உண்டு.ஒருத்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.அவள் கடுமையான பல விரதங்கள் இருந்தாள்.’இருக்கன் குடி மாரியம்மனு’க்கு நேர்ந்துகொண்டு 41 நாட்கள் சுத்தமாக விரதம் இருந்து கோயில் சென்று வந்தால், குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்று சொன்னார்கள். அப்படியே நாற்பது நாள் விரதமிருந்து, நாற்பத்தியோராம் நாள் இருக்கன்குடிக்கு ‘மாரியம்மனை’ப் பார்க்க, சுத்தபத்தமாகக் கிளம்பினாள்.அந்தக் காலத்தில் பஸ் வசதியெல்லாம் இல்லை, கால்நடையாகவே சென்றாள்.வழியில் வெயில்க் களைப்பிற்காக ஒரு ஆற்றோரமாய் மர நிழலில் தங்கினாள். கையில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண் மரத்தடியில் ஏற்கெனவே இருந்தாள்.அவள் முகமெல்லாம் ஒரு தவிப்பு.இவளைப் பார்த்ததும், ”அக்கா இந்தக் குழந்தையை ஒரு நிமிடம் வைத்திருங்கள், சற்று இயற்கை உபாதையை தணித்து விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்.இவளும் சரி என்று குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

குழந்தை அழகாக சிரித்துக் கொண்டிருந்தது, இவளும் ஆசை ஆசையாகக் கொஞ்சினாள். தாய்க்கு என்ன அவசரமோ, திரும்பச் சற்று நேரமாயிற்று,குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.இவளுக்கு சமாதானப் படுத்த தெரியவில்லை,பொறுமை இழந்தாள். காணாததற்கு இவள் மடியிலேயே வெளிக்கிருந்தும் விட்டது.”அட சனியனே எம்புட்டுச் சுத்தமா கோயிலுக்கு ஆத்தாளை நெனச்சு வந்துகிட்டு இருக்கேன், சேலையை எல்லாம் நாசமாக்கிட்டயே,” என்று குழந்தையிடம் சத்தம் போட ஆரம்பித்தாள். அது சிரித்தது. ” ஏயம்மா பொம்பளை சீக்கிரம் வா” என்று சத்தம் கொடுத்தாள். தாய் வந்ததும், “ச்சை,என்ன புள்ள இது, என் விரதமெல்லாம் வீணாப் போய்விடும் போலிருக்கே, செய்யறதையும் செஞ்சிட்டு, சிரிக்க வேற செய்யுது, மூதேவி, ச்சீ இந்தா புடி,”என்று அவளையும் கடிந்து கொண்டு ஆற்றை நோக்கி ஓடினாள். மீண்டும் குளித்து சேலையை எல்லாம் சுத்தம் செய்து, ஈர உடையுடன்,கோயிலை நோக்கி நடந்தாள்.

கோயிலில் ஆளே இல்லை, அம்மன் மட்டும் தூங்கா விளக்குகளுக்குப் போட்டியாக, மூக்குத்தி மின்ன அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள்.” யேழா தாயே, என்னமா நான் உன்னைக் கும்பிடுதேன், எப்படியெல்லாம் விரதம் இருந்து கஷ்டப்படுதேன், ஒரு புள்ளையத் தரக்கூடாதா,” என்று வாய் விட்டு அரற்றினாள்.” யாரோ சிரிக்கிற மாதிரி சத்தம் கேட்டது.” இவள் சுற்று முற்றும் பார்த்தாள். சிரிப்பு, கருவறையிலிருந்துதான் வந்தது.” உனக்கு சிரிப்பா இருக்கா, என் கஷ்டத்தைப் பார்த்து ஒரு பச்சை மண்ணைத் தந்தா என்ன”, என்றாள். அசரீரியாகக் குரல் வந்தது, “நாந்தான் கொடுத்தேனே, நீதான் மூதேவி, சனியன் என்று திருப்பிக் கொடுத்து விட்டாய்,” என்று.

இப்படித்தான் நாம் நமக்கு வாழ்க்கை ஏற்படுத்தித் தரும் சந்தர்ப்பங்களை கண்டுகொள்ளாமல், அளிக்கும் விடைகளைப் புரிந்து கொள்ளாமல், பல வாய்ப்புகளை நழுவ விட்டு விடுகிறோம். வாழ்க்கையின் பக்கங்களில், சந்தர்ப்பங்கள் எழுதிச் செல்லும் வரிகளை நாம் முழுதுமாக வாசிப்பதே இல்லை. மாறாக வரிகளுக்கு இடையில் வாசித்து பொழுதையும்,விதியையும் நொந்து கொள்கிறோம்.

ஒரு ’ஆளுமை வளர்ப்புப் பயிற்சி முகாமி’ற்குச் சென்றிருந்தேன்.என்னுடன் இன்னொரு நண்பர், சக ஊழியர், வந்திருந்தார். அவர் நன்றாகப் பணியெல்லாம் செய்வார். ஆனால் அவ்வளவு புத்தி கூர்மையானவர் என்று சொல்ல முடியாது. எதையும் கேட்டுக் கேட்டுச் செய்வார், ஆனால் திருத்தமாகச் செய்வார். காலையில் முதன் முதலாக எல்லோருக்கும் ஒரு வினா நிரல் கொடுத்து விட்டு அமைதியாய் மேடையில் அமர்ந்து கொண்டார் பயிற்சியாளர். அதில் பெயர், வயது,பணி புரியும் கிளை, என்று வழக்கமான கேள்விகள் இருந்தன.வாங்கியதுதான் தாமதம், எல்லோரும் கடகடவென்று நிரப்ப ஆரம்பித்தோம்.ஐந்து நிமிடத்தில், நிரப்பி விட்டு நான் சுற்று முற்றும் பார்த்தேன்.நண்பர் விழித்துக் கொண்டு நிரப்பாமல் இருந்தார்,சற்று தூரத்து இருக்கையில். நிரலை பூர்த்தி செய்யாமலே கொடுத்து விட்டார். எனக்கு, “என்ன, இதற்குக் கூட உதவி தேவையா” என்று தோன்றியது. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த பயிற்சியாளர், நண்பரைப் பெரிதும் பாராட்ட ஆரம்பித்தார்.எனக்குப் புரியவில்லை. அவர் நிரல்களை மறுபடி கொடுத்து,முதலில் நிரலை நன்றாக வாசியுங்கள் என்றார்.தலைப்பில், கொட்டை எழுத்தில். நிரப்பும் முன், வழிகாட்டி நெறிமுறைகளை நன்கு படிக்கவும் என்றிருந்தது.நெறி முறைகளுக்காக பின் புறம் திருப்பினோம்.முதல் நெறிமுறையில் ”முன்பக்கத்தின் எந்தக் கேள்விக்கும், விடையளிக்க வேண்டாம்” என்றிருந்தது. நண்பரைத் தவிர எல்லோர் முகத்திலும் அசடு வழிந்தது.

Monday, August 2, 2010

ஓடும் நதி-43


”திருநெல்வேலியான் தேர் பாரான், திருச்செந்தூரான் கடலாடான்.”என்றொரு சொலவடை, உண்டு. நமக்கு அருகிலிருப்பதையும், அணுக, பார்க்க எளிதானவற்றையும் நாம் பார்க்க மாட்டோம், அனுபவிக்க மாட்டோம். ”எங்கே போய்விடப் போகிறது, பார்த்துக் கொள்ளலாம்” என்ற ஒத்திவைப்பு மனோபவம்தான், காரணம். இதே போலத்தான் நாம் வாங்கும் புத்தகங்களையும். இரவல் புத்தகம் என்றால் உடனே படித்து விடுவோம். நாமே விலைக்கு வாங்கி விட்டால்,இந்த ஞாயிற்றுக் கிழமை படித்து விடலாம் என்று ஒத்தி வைப்போம், ஆனால் ஞாயிற்றுக் கிழமை,புத்தகத்தை தேடி எடுத்து உட்கார்ந்தால் அத்தனை சோம்பலும் ஒட்டிக் கொள்ளும்.அல்லது வேறு ’உருப்படியான’ அரட்டைக் கச்சேரி வாய்த்து விடும். விடுமுறை முடிந்து விடும்.மறுநாள் அலுவலகம் புறப்படும் அவசரம், வேலைகள் ஒவ்வொன்றாய்த் தொற்றிக் கொள்ளும்.அடுத்த ஞாயிறு படிச்சுருவோம் என்று ஒத்திவைப்போம், ஆனால் அப்பொழுதும் இதே கதைதான்.

குற்றாலம் போவதென்றால் அப்போதெல்லாம் ஒரே குஷியாக இருக்கும்.பத்து ரூபாய் இருந்தால் போதும்ஆனால் அதைப் புரட்ட ரொம்பச் சங்கடப் படுவோம். காலையில் முதல் பஸ்ஸில் நான்கரை மணிக்கு திருநெல்வேலியிலிருந்து கிளம்பி விடுவோம்.ஆறு மணிக்கு குற்றாலம் வந்தால், அத்தனை அருவியிலும் ஒருமுறை குளித்து முடிக்க எட்டரை மணியாகி விடும். ஒரு ரூபாய்க்கு நாலைந்து இட்லி, காசு குறைவாய் இருப்பவர்கள்., இரண்டு வாழைப்பழத்தில் பசி முடித்து விடுவார்கள். அப்புறம் மலையேறத் துவங்கி விடுவோம். மலையேற்றமென்றால், “இப்போதைய டாஸ்மாக் பாதையில் அல்ல”, உண்மையிலேயே செண்பகாதேவி அருவி, அதை முடித்து தேனருவி. அங்கே குளிக்க முடிந்தால் குளிப்போம், ரொம்ப வெள்ளமாக இருந்தால், ”வானின் வழி ஒழுகும்” தேனருவியை வியந்து பார்த்துவிட்டுத் திரும்புவோம். தண்ணீரால் நிரம்பிய வயிறு, காலியாகி பசி காதை அடைக்கும்.இரண்டு ரூபாய்க்கு எங்காவது சாப்பாடு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு பீடியைப் பற்றவைப்பார்கள். காலையை சிகரெட்டில் கண தோரணையாய் ஆரம்பித்திருப்பார்கள். மாலை நெருங்க நெருங்க காசு காலியாகி,பீடிக்கு இறங்கியிருப்பர்கள். மாலை ரயிலில் ஏறிப் படுத்தால், முன்னிரவில் டவுணில் இறங்கி தளர் நடையாய் வீடு வந்து இருக்கிறதைத் தின்று விட்டு, தூக்கம். மறுநாள் அருவி பற்றிய பெருமூச்சு நிறைந்த பேச்சு.

சமயத்தில் கார் வைத்திருக்கிற நண்பர்கள், தங்கள் அப்பாக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, கார் கேட்டு வாங்கிக் கூட்டிப் போவார்கள். ஆனால் ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரைச் சேர்த்துக் கொள்வார்கள்.அதில் ஒரு கஷ்டம், அவர்கள் இழுத்த இழுப்பிற்கு உடன்பட வேண்டும்.ஒரு சமயம் ஒரு நண்பர் காரில் அழைத்துப் போனார், அன்று ஒருவரது மோதிரமோ, செயினோ ஐந்தருவியில் காணாமல்ப் போய்விட்டது.அதற்கென்றே இருக்கிற ‘அரிப்புக் காரர்களை’ விட்டு தேடச் சொன்னோம்.அவர்களும் தடாகம் முழுக்க தேடிப் பார்த்துவிட்டு கையை விரித்து விட்டார்கள். சிலர், அவர்கள் கிடைத்தாலும் தரமாட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் உண்மையில்லை. திரும்புகிற வழியில், அது காணாமற் போனதற்கு அன்று தங்களுடன் புதிதாய் வந்த ஒருவரின் ராசிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.நான் மறுத்து, வாதம் வலுக்கவே, இறங்கிக் கொண்டேன். அவர்கள் அதற்கு வருத்தப்படவில்லை.காரைக் கிளப்பிக்கொண்டு போய் விட்டார்கள். அதற்கப்புறம் நான் அவனுடன் சேர்ந்து கொள்வதில்லை. எனக்கு பத்து ரூபாயில், குற்றாலம் போய் வருகிற சந்தோஷத்தை இது ஒருபோதும் தரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், என்னை அவர்கள் இறக்கிவிட்ட இடத்தினருகேதான் நாங்கள் கவிதைப் பட்டறையை ஆண்டு தோறும் நடத்தினோம்.எங்கிருந்தெல்லாமோ இலக்கிய நண்பர்கள் வந்து அதில் கலந்து கொண்டார்கள்.

அரிப்புக்காரர்களுக்குக் கூட அந்த ‘உரிமத்தை’ ஏலம் விட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். அரிப்புக்காரர்களைப் போலவே, செண்பகாதேவியின் ஆழத்தடாகத்திலோ, பேரருவியின் பொங்கு மாங்கடலிலோ ஆள் தொலைந்து போனாலும் தேட, ’வட்டப் பொட்டு’ என்று ஒரு தாத்தா உண்டு.அவரை அழைத்துவருவார்கள்.விசாலமான நெற்றிக்கும் வழுக்கைத் தலைக்கும் சேர்த்து பெரிய வட்டமாக குங்குமத்தை அப்பியிருப்பார், அந்தத் தாத்தா. அவர் அநாயசமாக பொங்குமாங்கடலில் குதித்து பாறைகளுக்கு இடையில் சிக்கியிருக்கிற உடலை எடுத்து வந்து விடுவார்.நான் அவரை, என் முப்பது வயதில், முதலில் பார்த்த போதே அவருக்கு அறுபது வயதிருக்கும்.கோவில் சன்னதித் தெருவில், கதராடை அணிந்து,யார் கடையிலாவது அமர்ந்து, வெற்றிலை போட்டபடி பேசிக் கொண்டிருப்பார், திடீரென்று போலீஸோ, யாரோவாவது வந்து அழைத்துப் போவார்கள்.ஒரு மறுப்பும் சொல்ல மாட்டார், கிளம்பி விடுவார்.நல்லவேளை அவரை ஏலம் விடவில்லை.அவர் இல்லவும் இல்லை, இருந்திருந்தால் அதையும் செய்திருப்பார்கள்.

அவரால் முடியவில்லையென்றால், தூத்துக்குடியிலிருந்து முத்துக் குளிக்கிறவர்களை அழைத்து வருவார்கள். இந்த மாதிரி நேரங்களில் காவல்துறையினரின் பாடு ரொம்பக் கஷ்டம். அழகு இருக்கும் இடத்தில்தானே ஆபத்து இருக்கும். விட்டு விடுதலையான பறவைகள் போல் வந்து மகிழ்ச்சியைக் கொண்டாடிச் செல்பவர்கள் மத்தியில் சிலர் தங்கள் உடன் வந்தவர்களையே விட்டுச் செல்வது பெரிய துயரம்தான். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் தன் போக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறது அருவி. பி.பி.ராமேந்திரனின் ஒரு மலையாளக் கவிதை நினைவுக்கு வருகிறது,

அம்மா

உன் பாத்திரத்தை

நிறைக்க

அருவிக்கு

ஒரு புன்னகை போதும்.

ஆனால் கண்ணீர்த் துளிகளும், அம்மாவிலும் அருவியிலும் இனந்தெரியாமல் கலந்திருப்பதும் உண்மையல்லவா.