Tuesday, May 18, 2010

ஓடும் நதி-32


நான் படித்த பள்ளியில், L.D.S (Literary Debating Society) வகுப்புகள் என்று, மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை தோறும், கடைசிப் பிரியடில் நடைபெறும். பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கதை சொல்லுதல், மோனோ ஆக்ட், என்று ஒவ்வொரு வகுப்பிலும் நடைபெறும். ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை மொததப் பள்ளிக்கும் சேர்த்து, போட்டிகள் மாதிரி நடைபெறும்.அதில் ஓவிய, கட்டுரைப் போட்டி எல்லாம் உண்டு. தேர்வானவர்களுக்கு பெரிய பள்ளிக் கூடம் என்கிற மெயின் ஸ்கூலில் நடைபெறும் விழாவில் பரிசளிப்பார்கள்.வருடாவருடம் வண்ணதாசன் ஓவியப் போட்டியில் ஒரு பரிசு வாங்குவார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைவு, நானும் கட்டுரைப் போட்டிக்கு பெயர் கொடுத்தேன். நான் தேர்ந்தெடுத்த ஒரு தலைப்பு நூலகமும் அதன் பயன்களும்.அடிக்கடி மார்க்கெட் லைப்ரரி என்கிற நூலக ஆணைக்குழு நூலகத்துக்குப் போவதுண்டு.அங்கே சுவரில் நூலகத்தைப் பற்றிய பொன்மொழிகளை, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒட்டி வைத்திருப்பார்கள், அவைகளை எல்லாம்.ஒரு தாளில் எழுதி எடுத்து வைத்திருந்தேன். கார்லைல் பொன் மொழி ஒன்று, இன்னும் ஒன்றிரண்டு, எல்லாவற்றையும் ஒரு “அண்ணாச்சி’’யிடம் கொடுத்து, மொழிபெயர்ப்பு செய்து வாங்கினேன். அவர் தன் பங்கிற்கு ஒன்றை எழுதித் தந்தார்.நீ தூங்க வேண்டுமென்றால் கலாசாலைக்குச் செல், கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நூலகத்திற்குச் செல்என்கிற மாதிரியில் வரும்.

கட்டுரை எழுதும் போது மற்றதெல்லாம் மறந்து விட்டது.இது மட்டும் மறக்கவில்லை.அப்படியும் கலாசாலை என்று எழுதவில்லை, அந்த வார்த்தையும் மறந்து விட்டது, பள்ளி என்று எழுதினதாக நினைவு.இரண்டு வாரம் கழிந்தது பரிசளிப்பெல்லாம் முடிந்து விட்டது. எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மாணவர் கட்டுரை மலர்”- புத்தகத்தைப் பார்த்து எழுதிய ஒருவனுக்கு கிடைத்தது. தமிழ் சார் வகுப்பு, காலையில் மூன்றாம் பிரியட் வந்தது.பசி நேரம், பொதுவாக அவர் அதில் வகுப்பு எடுக்க மாட்டார், ஏதாவது வாசியுங்கள் என்று சொல்லி விட்டு பேசாமல் ஓய்வெடுப்பார். திடீரென்று அவர், ஏல யாருல அது ’’தீனாக் கானா சோமசுந்தரம்என்றார். நான் எழுந்து நின்றேன்.அடே நீங்க தானா, இங்க வாங்க கொஞ்சம்என்றார்.ஒரு பூனைக் குஞ்சைப் போல அவர் அருகே சென்றேன். “ஓஹ்ஹோ, பள்ளிக் கூடத்துக்கு தூங்கத் தான் வாறியோ, லைப்ரரியிலேயே படிச்சுருவியோஎன்று கேட்டு விட்டு, பிரம்பை எடுத்து விளாசிவிட்டார்.சுருண்டு விட்டேன்.அப்புறமாக, மத்தப் படி நல்லாத்தான் இருந்தது..என்று சமாதானப் படுத்தினார்.ஆனாலும் நான் அதற்கப்புறம், ரொம்ப நாளைக்கு கட்டுரைப் போட்டி பக்கமே போவதுமில்லை. அந்தப் பொன் மொழி எழுதித் தந்த அண்ணாச்சியைக் கண்டாலும் ஒளிந்து கொள்வேன்.

ரொம்ப காலத்திற்குப் பின் “மிரர்’’ அல்லது டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு துணுக்கு படித்தேன். மேலை நாட்டு நகர் ஒன்றில் ஒரு பெரிய நூலகத்தை, இன்னும் விசாலமான கட்டிடத்திற்கு மாற்ற முடிவு செய்து, அதற்கான பிரம்மாண்டமான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.இனி புத்தககங்களை எல்லாம் புதிய நூலகத்திற்குக் கொண்டு சென்று முறையாக அடுக்க வேண்டும்.அது ஒரு சவாலாகவும், அதிகச் செலவு பிடிக்கும் வேலையாகவும் இருந்தது. நூலக நிர்வாகிகளுக்கு ஒரு யோசனை உதித்தது.ஒரு அறிவிப்பு வெளியிட்டார்கள்,நூலகத்தின் உறுப்பினர்களோ அல்லது விருப்பமுள்ள யாராயிருந்தாலும் நூலகரை அணுகி, பத்து புத்தகங்கள் வரை, தங்கள் விலாசத்தை தந்து விட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.இரண்டு வார அவகாசத்தில் அதை திருப்பித் தரவேண்டும். ஆனால் அதை புதிய கட்டிடத்தில் கொண்டு வந்து தரவேண்டும்.மாணவர்கள், சிறுவர்கள், யார் வேண்டுமானாலும் இதில் பங்கு பெறலாம்என்று அறிவித்தார்கள்

அந்த நூலகத்தில் உறுப்பினராவது மிகவும் கடினம்.இந்த அறிவிப்பு எல்லோரையும் கவர்ந்தது.போட்டி போட்டுக் கொண்டு நூல்களை எடுத்துச் சென்று பயன் படுத்திவிட்டு,புதிய நூலகத்தில் கொண்டு வந்து பொறுப்பாகத் திருப்பிக் கொடுத்தார்களாம். செலவும் குறைவானதாம், புத்தங்களை வகைமை மாறாமல் அடுக்குவதும் எளிதாயிருந்ததாம்.நம்ம ஊர் என்றால் இப்படி புத்தகங்களை திரும்பத் தருவோமா, தெரியவில்லை.(இன்றைய கால கட்டத்தில் நூலகம் பக்கம் போவோமா, அதுவும் தெரியவில்லை.) கடையில் கிடைக்காத நல்ல புத்தகத்தை வாங்க சிறந்த வழி நூலகத்தில் வாடகைக்கு எடுத்து விட்டு, தொலைந்து விட்டதாக அபராதம் கட்டுவது. அதை விட எளிதான வழி.... அது எல்லோருக்கும் தெரிந்தது....சமீபத்தில் ஒரு செய்தி. (ஹி..ஹி.. நெட்டில் படித்தது) அமெரிக்காவை உருவாக்கிய சிற்பி ஜார்ஜ் வாஷிங்டன், நியூயார்க் சொசைட்டி லைப்ரரியில், 5.10.1789 அன்று, படிப்பதற்கு எடுத்த, இரண்டு புத்தகங்களைத் திருப்பித் தரவேயில்லையாம். அதற்கான அபராதம், இன்றையக் கணக்கில் மூன்று லட்சம் டாலர்கள். அவர் மட்டும் என்றில்லை, பல அதிகாரிகளும் அமைச்சர்களும் திருப்பித் தரவேண்டிய நூல்கள் நிறைய உள்ளனவாம். புத்தகப் புழுக்கள் எல்லோருமே இப்படித்தான் போலிருக்கிறது.அந்த நூலகத்தின் தலைமை நூலகர் சொல்வதெல்லாம், அபராதம் எப்படியோ போகட்டும், வாஷிங்டனின் வாரிசுகள் யாராவது, அந்த இரண்டு புத்தகங்களையும் திருப்பித் தந்தால் அதுவே மகிழ்ச்சியான காரியம்”, என்கிறாராம்.

Tuesday, May 11, 2010

ஓடும் நதி-31


பூசைக்காரத் தாத்தா என்பது .பூசாரத் தாத்தா. என்று மருவி விட்டது. அவர் அநேகமாகப் பூசையில்தான் இருப்பார். அவர் புழங்குகிற துண்டு, வேட்டியெல்லாம் மஞ்சள்ப் பூத்துப் போய், ஒரு புழுங்கிய வாசனையுடன் இருக்கும். திருநீறின் வாசனையும்,மேலோங்கி நிற்கும். இப்போது போல் வாசனை விபூதிப் பாக்கெட்டெல்லாம் கிடையாது. வீட்டிலேயே, காயவைத்த சாண உருண்டைகளை, உமிக்குவியலுக்குள் போட்டு மூடி தீக்கங்குகளை வைத்து, உமியைக் கனல விட்டு விடுவார்கள்.இரண்டு மூன்று நாட்கள் கனிந்து, புகைந்து, தானே அணைந்த பின், உமிக்கரிக்குள்ளிருக்கும் திருநீற்று முட்டான்களை (சமச்சீரில்லாத உருண்டைகள்). மண் பானைகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அதை அவ்வப்போது நொறுக்கி மெல்லிசான துணியில் சலித்தெடுத்து பட்டுப்போன்ற பால் வெண்ணீறாக்கி வைத்துக் கொள்ளுவார்கள்.

பூசாரத்தாத்தா எப்போதாவது வீட்டுக்கு வரும் போதே, வேட்டி, திருநீறு வாசனையை வைத்தே அம்மா சொல்லி விடுவாள், பூசாரத் தாத்தா வாராக என்று. ஆமா, வேட்டி வீச்சம் தெரியுதே என்றால், போடா, அது ருத்ராட்ச வாசனைடா, அதிகப் பிரசங்கிஎன்று கண்டிப்பாள். கங்கு, கணைச்சூடு, நகச்சூடு முட்டான், பிரசங்கி வெதனம் (உடலில் எங்காவது வீக்கம் கண்டு வருகிற வலி).,.வெதனக் காய்ச்சல் ‘நெறி கட்டுதல் ... என்பதெல்லாம் பெண்களின் பாஷை. ஏம்ழா, முகம் ‘கனத்தாப்ல இருக்கு என்பார்கள்.வளையல் கொஞ்சம் பெருசோஎன்றால் ஆமா, ‘ஒரு சொல்லு பெரிசு, அதனால பரவால்லை, வளர்ற புள்ளைதானே என்பார்கள். விட்ட பாம்பு செத்துப்போற மாதிரி வெயில் அடிக்கி, இதுல போய் விளையாடுதீகளே, என்று குழந்தைகளைச் சத்தம் போடுவார்கள். அநாவசியமாய் அலட்டிக் கொள்பவர்களைப் பார்த்தால் தோளுக்கு மேல தொன்னூறு தொடச்சுப் பாத்தா ஒண்ணுமில்லை. என்பார்கள்.மாதா ஊட்டாத சோத்தை, மாங்காய் ஊட்டும் என்பார்கள். அழகான பாத்திரங்களையோ, விளக்குகளையோ பார்த்து விட்டால், நல்ல லெட்சணமா இருக்கே யார் செஞ்சது என்பார்கள். நமக்கு பொருள் தெரியும் ஆனா அதுக்கான வார்த்தை தெரியாது, “பெண்கள் இதற்காக தனீ வார்த்தையும், வழக்கும் வச்சுருப்பாங்க என்பாராம் டி.கே.சி. எந்த மருந்துக்கும் கட்டுப்பாடாத, உடல் நலிந்து கொண்டே போகிற வியாதியொன்றை கிராணி என்பார்கள். அது ஒரு வேளை எய்ட்ஸின் அந்தக்காலப் பேராகக் கூட இருக்கலாம்.

அம்மா சொல்லும் கதைகளை தாத்தா, சற்று விஸ்தாரமாகச் சொல்லுவார். இடையிடையே கேள்விகள் கேட்டு, நாம், என்ன பதில் சொன்னாலும், கரெக்டாச் சொல்லிட்டியே என்பார்.அது ஒரு சந்தோஷத்தைத் தரும்.தாத்தாவுக்கு வயது எண்பதுக்கும் மேல். அதைப் பற்றிக் கேட்டால், இது என்னவே பேரப்பிள்ளை, அந்தக் காலத்தில் ஒருத்தருக்கும் சாவே கிடையாது. நூறு வயசு, இருநூறு வயசு வரைக்கும் இருப்பாங்களாம். அப்படி நிறைய சனம் பெருத்து விட்டதால், பூ(மிப்)பாரம் தாங்க மாட்டாமல் பூமா தேவி சிவபெருமானிடம் போய் முறையிட்டாளாம். சிவபெருமான், சொர்க்கத்திலிருந்து முரசறைபவனை பூமிக்கு அனுப்பினாரானம்.அவன் “பழம் உதிர, பழம் உதிர என்று கூறியபடி முரசறைந்து சென்றானாம்.அவன் ஒவ்வொரு தெருவாகப் போகப் போக, அந்த தெருவில் உள்ள பழுத்த கிழங்கள் மட்டும் செத்துச் செத்து விழுந்தனராம். பாரம் கொஞ்சம் குறைஞ்சதாம்.

இதே மாதிரி கொஞ்ச காலம் கழிந்ததும், மீண்டும் பாரம் கூடிப் போகவே மறுபடி பூமாதேவி சிவனிடம் முறையிட, அவரும் முரசறபவனை அனுப்பி வைத்தாராம். அவனைக் கண்டதுமே மக்களுக்கு பழைய சாவு நினைவுகள் வந்து, யோசிக்கத் தொடங்கினார்கள், இவன் முரசறைவதால்த் தானே இப்படி நம்ம தாத்தா பாட்டியெல்லாம் செத்துப் போறாங்க, என்று குழந்தைகளையெல்லாம் அழைத்து “ஏல அவன் முரசடிச்சுட்டுப் போனான்னா, உங்க தாத்தா பாட்டியெல்லாம் செத்துருவாங்கலே, அவனை விரட்டுங்கடா என்று தூண்டிவிட்டார்களாம். பிள்ளைகளும் அவன் பின்னாலேயே கூட்டமாகப் போய், கல்லையும், மண்ணையும் எறிந்து அவனை விரட்ட ஆரம்பித்தார்களாம்.இதனால் கோபமடைந்த அவன் “பழம் உதிர, காய் உதிர, பிஞ்சு உதிர, பூ உதிர.....என்று முரசறைந்து போனானாம். அதிலிருந்துதான், எல்லா வயதினருக்கும் சாவு வந்ததாம்.என்று அடிக்கடி ஒரு கதை சொல்லுவார்.தாத்தா தொன்னூறு வயசு வரை இருந்தார். சாகவே மறுத்தவர் போல் கிடையாய்க் கிடந்தார்.கட்டிலில் கிடந்தார், வெறும் பலகையில் கிடந்தார்,தரையில் போட்டார்கள். கடைசி இரண்டு மூன்று நாள் வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை, ஒரே நாத்தம், பால் பொங்கி அடுப்பில் வழிந்து கருகுகிற வாசனை, பிண வாசனை என்று எல்லோரும் சொன்னார்கள்.அவர் பிறந்த ஊர் மண்ணை ஆள் விட்டு எடுத்து வரச் சொல்லி, கரைத்து, வாயில் கொஞ்சமாக விட்டார்கள். எப்படியோ பழம், ஒரு மாதிரி உதிர்ந்தது.

2011-மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிவிட்டது. இந்தியாவில் முதல்க் கணக்கெடுப்பு 1881-ல் தொடங்கியது.2009-ஜூலை கணக்குப்படியே 117 கோடியை நெருங்கிவிட்டது. இது உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு.சைனாவின் மக்கள் தொகையான 132 கோடியை விரைவில் நாம் தாண்டி விடுவோம் என்கிறார்கள். 2009-ல் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 60 மருத்துவர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. ஏகப்பட்ட புள்ளிவிவரங்கள். எண்கள், எண்கள்...நம்மைச் சுற்றிலும் எண்கள்..

எண்கள் கவிக்கும் இருளிலிருந்து

இந்தியாவைக் காப்பாற்றென்று

இளைஞனே உன்னிடம் கூறும்

எண்கள்

1981-கணக்கெடுப்பின் போது எழுதிய சென்ஸஸ் கவிதையின் வரிகள்.