Tuesday, March 23, 2010

ஓடும் நதி-24


குழந்தை சீதை தன் சக வயது குழந்தைகளுடன், மிதிலை அரண்மனையில், ‘கழச்சிக் கல்’லை வைத்து (அம்மானை) விளையாடிக் கொண்டிருக்கிறாள். விளையாடும் போது, ஒரு கழச்சிக் கல் பெரிய, நீளமான பெட்டி ஒன்றிற்கு அடியில் உருண்டு, கைக்கு எட்டாமல் சென்று விடுகிறது.அந்தப் பெட்டியில்தான், யாரும் தூக்கவே முடியாத சிவதனுசை பத்திரமாக வைத்திருக்கிறார் ஜனகன். ஆனால் சீதை அந்தப் பெட்டியை இடது கையால் அநாயசமாக நகர்த்தி வைத்து விட்டு கழச்சிக் கல்லை எடுத்து, சகஜமாக மறுபடி அம்மானை ஆட ஆரம்பித்து விடுகிறாள்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனகமகாராஜா ஆச்சரியத்தில் உறைந்து போய், அப்போதே தீர்மானிக்கிறார், “யார் இந்த சிவதனுசை நாணேற்றி உடைக்கிறானோ, அவனுக்கே சீதையை மணம் முடித்துத் தரவேண்டும்” என்று. இது செவி வழிக்கதை. இந்த மாதிரிக் கதைகளுக்கு முடிவே கிடையாது. தோண்டத் தோண்ட வரும்.

இது போல் உலகம் முழுக்க கதைகள் இருக்கிறது. லண்டனில் நடப்பதாக ஒரு கதை. அன்று விடுமுறை, கணவன் சோம்பலாக வீட்டில், மனைவியின் வேலைகளுக்கு தொந்தரவு தந்தபடி இருக்கிறான். மனைவி, ”லீவு என்றால் என்ன, போய் வேலை செய்தால் ‘ஓவர்டைம்’ கிடைக்குமில்லையா” என்று சத்தம் போடுகிறாள். கணவனுக்கு சுவரில் வர்ணம் பூசும் வேலை.அப்போது லண்டனின் மிகப் பெரிய டவர் ஒன்றில், கம்புகளால் சாரம் கட்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது. மனைவியிடம் கோபித்துக் கொண்டு உபகரணங்களுடன் கிளம்புகிறான்.சாரத்தின் மேல் ஏறி உயரமாகப் போய் வெள்ளையடிக்க ஆரம்பிக்கிறான், தனி ஆளாய்.திடீரென்று கம்புகளைக் கட்டியிருந்த கயிறுகள் அறுந்து, மொத்தச் சாரமுமே விழுந்து விடுகிறது. இவன் மட்டும் டவரின் ஒரு விளிம்பில் தொற்றிக் கொள்கிறான்.ஏதோ ஒண்டிக் கொண்டு நிற்பதற்கு கொஞ்சம் இடம் கிடைக்கிறது.

சாரம் குலைந்து விழுந்த சத்தம் கேட்டு ஊரே திரண்டு விடுகிறது.அவனோ உதவி கேட்டு கூக்குரலிடுகிறான்.அவ்வளவு உயரத்திற்குச் சென்று உதவ யாராலும் முடியவில்லை. செய்தி கேட்டு அவன் மனைவி ஓடி வருகிறாள்.’கூறு கெட்ட மனுஷனை சத்தம் போட்டது தப்பாய்ப் போயிற்றே’ என்று தவிக்கிறாள். சில நொடிதான்.எல்லோரையும் சற்றே விலகச் சொல்லிவிட்டு அவனை சத்தமாக அழைக்கிறாள், ”அன்புக் கணவனே, உன்னுடைய இடது கால் உறை சிறிது கிழிந்திருக்கும், அதில் ஒரு நூலை லேசாகப் பிரித்து அதில் உன் காலணியை நன்றாகக் கட்டு, மெதுவாக ஷூவைக் கீழே விடு, காலுறையை நன்றாகப் பற்றிக் கொள், நான் சொல்லும் வரை, விட்டு விடாதே” என மளமளவென்று சொல்லுகிறாள். ஒரே நூலில் பின்னப்பட்ட காலுறை பிரிந்து பிரிந்து காலணி மெதுவாகக் கீழே வருகிறது. அதை நீக்கி விட்டு நூலில் நீளமான, பருமனான கயிற்றைப் பிணைத்து, “இப்போது நூலை மேலே மெதுவாக இழு” என்கிறாள்.அவனும் சர்வ ஜாக்கிரதையாக இழுக்கிறான். இப்போது அவன் கையில் கீழே இறங்கத் தோதுவான கயிறு கிடைத்துவிட்டது; அதை உபயோகித்து பத்திரமாக கீழே இறங்கி வந்து மனைவியைக் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்.அவளும் முத்தமழை பொழிகிறாள். திரண்டிருக்கும் மக்கள் வெள்ளமே கை தட்டுகிறது.

நம்முடைய நாட்டுப் புறத்துக்கு வருவோம். ஓலைக் குடிசையின் கூரை வேய்ந்து நாளாகி விட்டது. ஒழுகுகிறது.. வெயில் ஒளி வட்டத்தை குடிசையெங்கும் காசு காசாக இறைக்கிறது. தாய்க் கிழவி மகனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டாள். அதற்கென்று ஒரு நாள் வாய்க்க வேண்டாமா....அன்று வேறு வேலை இல்லை. காலையிலேயே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி விட்டான். பழையதை நீக்கி விட்டு, புது ஓலை வேய்ந்து கொண்டிருக்கிறான், வெயில் ஏற ஆரம்பிக்கிறது.வியர்வை உருகி வழிகிறது.தாய்க் கிழவிக்குப் பொறுக்கவில்லை, ”ஏ ராசா, செத்த (கொஞ்ச)நேரம் கீழே இறங்கி இந்த மரத்தடிக்கு வாய்யா, இந்த நீத்துப் பாகத்தை ஒரு மடக்கு குடிச்சுட்டுப் போய், ஓலை வேயற வேலையப் பாருடா” என்று அழைக்கிறாள். பலமுறை அழைத்தும் மகன் கருமமே கண்ணாயிருக்கிறான். ”ஏ கிழவி சும்மா இரேன்’” என்று சத்தம் போடுகிறான்.

கிழவி குடிசைக்குள் போகிறாள்.கையில் பேரக் குழந்தையை எடுத்து வருகிறாள். அதை மகன் பார்க்க, வெயிலில் ஒரு துணியை விரித்துப் போடுகிறாள். குழந்தை சிறிது நேரம் கழித்து அழத் தொடங்குகிறது. மகன் கூரை மேலிருந்து சத்தம் போடுகிறான், ”ஏய், ஏய், கிழவி உனக்கு என்னாச்சு, பச்சைப்புள்ளைய வெயிலில் போட்டிருக்கிறாயே’ என்று கூச்சல் போடுகிறான்.கிழவி அசரவில்லை. பேசாமல், வேறு வேலை பார்ப்பதாகப் போக்குக் காட்டுகிறாள்.குழந்தை கொஞ்சம் வலுவாக அழுகிறது..மகன் கூரை வேயும் வேலையைப் பாதியில் விட்டு விட்டு வேகமாக இறங்கி வருகிறான். கிழவி, சட்டென்று குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு சொல்லுகிறாள்,”ஓம் புள்ளை வெயிலில் காய்ந்தால் மட்டும் உனக்கு வலிக்குதே, ஏம் புள்ள, நீ எம்புட்டு நேரமா வெயிலில் நிற்கிறாய், எனக்கு எப்படி இருக்கும்” என்கிறாள். மகன் தலை தொங்கி விடுகிறது.

காவிய காலமோ, கடல்கடந்த நாடோ, நாட்டுப்புறமோ....சிறுகுழந்தையாய், மனைவியாய், தாயாய்.... பெண்ணால் செய்ய முடியாதது எதுவுமில்லை..பிறகு ஏன் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு தர தடையாய் நிற்கிறார்கள்.. தெரியவில்லை!

Tuesday, March 16, 2010

ஓடும் நதி-23


கல்லூரியில் அந்தத் தமிழாசிரியரை அநியாயத்திற்கு கிண்டல் செய்வோம்.ஆனால் அவர் அசர மாட்டார்.வெள்ளிக்கிழமை மதியம் அவருக்கு இரண்டு வகுப்புக்கள்.ஒரு வகுப்பில் ‘மிருச்ச கடிகம்’ வடமொழி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு,’மண்ணியல் சிறுதேர்’- நடத்துவார். வசந்தசேனையின் கதை. கிட்டத்தட்ட சிலப்பதிகாரம் போலிருக்கும், ஆனால் அவ்வளவு சுவையாய் இருக்காது.இன்னொரு வகுப்பு, கட்டுரை எழுதும் வகுப்பு. ஒரு மணிக்கு அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து, அன்றைய கட்டுரையை நூலகத்தில் உட்கார்ந்து எழுதிக் கொடுத்து விட்டு, அவரிடம் அனுமதி கேட்டால் எங்கள் மூன்று பேருக்கு அனுமதி தந்து விடுவார். (ஒழிந்தால் சரி என்றோ என்னவோ.) அப்புறம், கால் மணிநேரத்தில் எங்களை ஏதாவது புதுப் படம் ரிலீசாகும் தியேட்டரில் பார்க்கலாம்.

கல்லூரி வளாகத்தில் நிறைய வாகை மரங்கள் உண்டு. பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இலையுதிர்ந்து தழைத்து, அருமையான வாசனையுடன் பூக்க ஆரம்பித்து விடும்.அப்போதெல்லாம் இரண்டாம் ஆண்டின் முடிவில்த்தான் பல்கலைக் கழகத் தேர்வு,, அது வரை அவிழ்த்து விட்ட கன்றுகள்தான். எங்கிருந்தோ வரும் அக்காக் குருவிகள், அங்கங்கே கூவிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வருடமும் அக்காக்குருவியின் கூவலை, என்று முதன் முதலாகக் கேட்டேன் என்று குறித்து வைப்பது வழக்கம்.( இந்த வருடம் பிப்ரவரி 18- அன்று முதல்க் கூவலைக் கேட்டேன்).நகரங்களில் இந்தக் கூவல் கேட்கிறதா... தெரியவில்லை. இனி கிராமங்களில் கூட அரிதாகி விடும் என்கிறார்கள்.

அன்றுதான் தமிழாசிரியரின் கடைசி வகுப்பு. அது ஆரம்பிக்கும் முன், சும்மா, வாகை மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நாங்கள், பூவும் இலையுமாகப் பறித்துச் சேர்த்துக் கொண்டிருந்தோம். ஒரு அழகிய பூங்கொத்துப் போல உருவாகி விட்டது. அதற்குள் தமிழ் வகுப்புக்கான மணி அடித்தது.யாரோ என்னிடம், ”ஏய், மடக்கவிஞ்ஞா அவசரமா ஒரு கவிதை எழுதுடா” என்றார்கள்.

”குஞ்சு மிதித்துக் கோழி சாகாதென்னும்

கொஞ்சு தமிழ்க் கொள்கை போல்- கிஞ்சித்தும்

எங்கள் குறும்புகளைப் பெரிதே கொள்ளாது

மங்காத தமிழ் தந்தீர்

மாடத்து விளக்கானீர்...” என்று ஏதோ எழுதிக் கொடுத்தேன். எல்லாரும் ‘உய் உய்’ யென்று விசிலடித்தார்கள். ஆசிரியரிடம் என்னையே கொடுக்கச் சொன்னார்கள். உண்மையில் அவரைக் கிணடலடிக்க வேண்டுமென்று ஆரம்பித்ததுதான் எல்லாமே. கவிதையையும் பூங்கொத்தையும் சந்தோஷமாக வாங்கிக் கையில் வைத்துக்கொண்டே,”வாகை என்றால் வெற்றி என்று அர்த்தம். நீங்கள் தேர்விலும் வாழ்க்கையிலும் பல வெற்றிகளைக் குவிக்க இது ஒரு அச்சாரம்” என்று மனப்பூர்வமாய் வாழ்த்தினார். மொத்த வகுப்புமே, வழக்கத்திற்கு விரோதமாய் அமைதியாய் இருந்தது.அக்காக் குருவி கூவுவது தெளிவாய்க் கேட்டது.

அக்காக் குருவி, சிவராத்திரி முடிந்ததும் ஒன்றிரண்டு நாளில் கூவ ஆரம்பித்து விடும்.அது கூவ ஆரம்பித்தால், வசந்தம் வந்து விடும், வேம்பும் வாகையும் பூத்துக் குலுங்கி மணம் வீச, சித்திரை வந்து விடும். அப்புறம் செங்கொன்றை, மேற்கு மலையிலும் மலை சார்ந்த இடத்திலும் பூக்க ஆரம்பித்தால். குற்றால சீசன், தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விடும். அப்புறம் தேக்கு மரம் தன் மேனியெங்கும் வெண்ணிறப் பூவை சூடத்தொடங்கினால் சீசன் முடிந்து விட்டது என்று அர்த்தம்.

தொடர்ந்து புரட்டாசியில் வடகிழக்கு மழை. கார்த்திகை தீபமேற்றினால், ”விளக்கிட்டோ மழை கிழக்கிட்டோ” என்று கிழக்கு மழை முடிந்து, பனி. பனியை முடித்து வைக்க மீண்டும் சிவராத்திரி.....மீண்டும் அக்காக் குருவி....இந்த அற்புதமான இயற்கை வட்டம் கொஞ்சங்கொஞ்சமாக அழிந்து கொண்டே, இருக்கிறது.

சிவராத்திரி தோறும் இரவில் கண் விழிக்க, ”பரம பத சோபானம்” எனும் பாம்புக்கட்ட விளையாட்டு.அப்பா அதை, ஒரு மூங்கில் குழலில் போட்டு பத்திரமாக வைத்திருப்பதை, தருவார்.அது அலுப்புத் தட்டினால்,உப்புமா தின்று விட்டு, கதை சொல்லல் ஆரம்பித்து விடுவோம்....அப்புறம் கொட்டாவி... கண் விழிப்பாவது புண்ணியமாவது.

தற்செயலாய் ஊரில் மிச்சமிருந்த ஒன்றிரண்டு பொருள்களில், அந்தப் பாம்புக்கட்டத்தைக் கண்டுபிடித்து என் குழந்தைகளிடம் காண்பிக்க எடுத்து வந்தேன். சிவராத்திரியும் சமீபித்தது....தொலைக்காட்சியை ஓடவிட்டுக் கொண்டு, குழந்தைகள் சுவாரஸ்யமாக விளையாடிக் கொண்டிருந்தன.பாதி இரவில் சத்ததையே காணுமே என்று தூங்கி விட்ட நான் விழித்துப் பார்த்தால், அவைகள் திசைக்கொன்றாய் தூங்குகின்றன. காய்களையும் தாயக்கட்டையையும் எடுத்து வைக்கும் போது... தாயக்கடைகள் தவறி விழுந்தன. அப்போது அவை இரண்டு என்ற எண்களுக்கான கோடுகளைக் காண்பித்தன..

“தவறி விழுந்த தாயக் கட்டைகளும்

எண்கள் காண்பிக்கும்...” என்று மனதில் தோன்றியது.தர்மர் ‘இரண்டு’ கேட்டுத்தான் பாஞ்சாலியை, சூதில் தோற்றாராம்...ஆனால் இந்த இரண்டு ஒரு தற்செயல்... இதன் பின்னால் ஆட்ட விதிகள் இல்லை.. அதனால் அர்த்தமும் இல்லை...நம் அர்த்தமற்ற வாழ்வுக்கான பகடைகளை யார், எங்கே எந்த விதிகளுக்குட்பட்டு உருட்டுகிறார்கள்.... நாம் பரமபதம் அடைய முடியாதபடிக்கு பாம்புகள் ஏணியிலேயே ஏறி உறங்குகின்றனவே.