Sunday, October 18, 2009

ஓடும் நதி.....


பாளையங்கோட்டை இலந்தைக் குளத்தை இப்போது மூடப் போகிறார்களாம்.அதில் மாநகராட்சியில் இருந்து, ஏதோ கட்டப் போகிறார்களாம். ஏற்கெனவே வேய்ந்தான் குளத்தை மூடி புதுப் பஸ்ஸ்டாண்ட் கட்டியாயிற்று..ஜன நெரிசல் நம்மை பல வழிகளில் சிந்திக்க வைக்கிறது.ஊர் என்ற ஒரு வட்டத்தை விட்டு, கூட்டுக்குடும்பம் என்ற ஒருவகையான பாதுகாப்பை விட்டு, சிதற வைக்கிறது. ஆற்றோரச் சுடுகாடு என்பதெல்லாம் போய், இப்போது அந்தந்த ’குடியிருப்புகள்’ அருகேயே, பம்ப் செட், குளியல் தொட்டி இத்யாதிகளுடன் அங்கங்கே சுடுகாடுகள் வந்து விட்டன.இப்போ என்ன வேலை பார்க்கிறாய் என்றால்,’ரியல் எஸ்டேட்’ என்று சொல்லி ஒரு விசிடிங் கார்டை நீட்டுகிறார்கள் பலர்.
எனக்கு தோன்றுவதுண்டு. இந்த புதுப் பஸ் ஸ்டாண்டுகளை சாலையின் இரு புறமும் இரட்டை பஸ் ஸ்டாண்டாகக் (twin bus stand) கட்டலாமே என்று.போவதற்கு ஒன்று, வருவதற்கு ஒன்று. நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கிராமங்களில் இப்படித்தானே பஸ்ஸ்டாப்புகள், தானாகவே அமைந்துள்ளன. மக்கள் அதைத் தெளிவாகத்தானே புரிந்து வைத்திருக்கிறார்கள்.ஆனால் நாம் ஏறுகிற வழியையும் இறங்குகிற வழியையும் அததற்கெனறே உபயோகிக்கிறோமா என்ன. அதனால் நம்மை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நகுலன் ஒரு கவிதையில் சொன்னது மாதிரி
.’’......இந்த மனதை வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது. ‘’
அப்போது நான் தூத்துக்குடியில் வேலைக்கு சேர்ந்த புதிது. வார விடுமுறையில் ஊர் வந்திருந்தேன். வண்ணதாசனை அந்த ஞாயிற்றுக் கிழமைக் காலை வீட்டிற்குப் போய் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் காண்பிதார். ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்கள், இருந்தன. கிட்டத் தட்ட இரண்டு வருட காத்திருப்பிற்குப் பின், வண்ண தாசனின் முதல் கதைத் தொகுதி,’’கலைக்க முடியாத ஒப்பனைகள்’’, அஃக் பரந்தாமனால் பிரமாதமாக அச்சாக்கம் செய்யப்பட்டு வந்திருந்தது. அந்த அசாத்தியத் தாமதம் அந்த மகிழ்ச்சியை சற்று மழுங்க வைத்திருந்தது. இரண்டு வருடம் முன்பு, நான் தான் அந்த ஸ்க்ரிப்டையும், ஆயிரத்திச் சொச்சம் பணத்தையும் சேலத்தில் நேரில் கொண்டு போய் பரந்தாமனிடம் கொடுத்து வந்திருந்தேன். அதை எப்படி விற்பனை செய்வது,எதில் விளம்பரம் செய்வது, என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்போது இலக்கியப் பத்திரிக்கை என்று கணையாழியும் தீபமும்தான் வந்து கொண்டிருந்தன. நான் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தில் கொண்டு போய் கொஞ்சம் கொடுத்து வருகிறேன் என்று சொன்னேன்.விஜயா பதிப்பகம் கூட அப்போது இல்லை.
ஒரு பிரதியை வாங்கிக் கொண்டு வந்தேன். அன்று காலையில் மழை பெய்து வெயிலின் உருக்கம் தெரியாமல் சற்று ரம்மியமாய் இருந்தது.புத்தகம் கையில் இருப்பது, ஏதோ கடன் கேட்ட பணம் கிடைத்தது போல் சந்தோஷமாயிருந்தது. எங்காவது வெளியே போகலாம் என்று தோன்றியது.கையில் புத்தகத்துடன் சந்திப் பிள்ளையார் முக்குக்கு வந்து, நின்று கொண்டிருந்த ஒரு டவுண் பஸ்ஸில் ஏறினேன்.அது பாளை பஸ் ஸ்டாண்டில் நின்றது. இறங்கினேன், எங்கே போவது எனறு தெரியவில்லை. ஒரு சிகரெட் பற்ற வைத்தேன்.என்னுடன் மதுரைப் பல்கலையில் வேலை பார்த்த ஒரு சிநேகிதி, தன் டாக்டர் கணவருடன் பெருமாள் புரத்தில் இருப்பதாக கடிதம் எழுதியிருந்தாள்.இலந்தைக் குளம் கரை வழியாக பெருமாள் புரத்திற்கு நடந்து போய் விடலாம். அங்கே ஒரு தந்தி அலுவலகத்தில் தினக் கூலியாக 3.ரூபாய்30பைசாவுக்கு வேலை பார்த்த போது அப்படி நடந்து போவது வழக்கம். உமாவின் நினைவோடு நடக்கத் தொடங்கினேன். பாதிக்கு மேல் நடக்க முடியவில்லை.பசியோடு புகைத்த சிகரெட் காரணாமாய் இருக்கலாம். ஒரு பனை மரத்தின் அடியில் நின்றேன்.குளத்தில் குறைவான தண்ணீரே கிடந்தது. ஒரு வட்டாக்கை (ஓட்டாஞ்சல்லி) எடுத்து தண்ணீரில் தவளைபோல் சாய்த்து எறிந்தேன். அது குபுக்கென்று முங்கி விட்டது.
கொஞ்சம் தள்ளி நாலைந்து சிறுவர்கள் செம்புலப் பெயல் நீரில் ஒரு பழைய துணியை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் பை, பனை மூட்டில் கிடந்தது.இன்று ஏது வகுப்புகள் என்று நினைக்கும் போது, பொட் பொட்டென்று தூரல் விழுந்தது. குளத்தில் ஆங்காங்கே துளி விழுந்து சிறு சிறு நீர் வட்டங்கள் உண்டாயிற்று. மழை வலுத்தது. புத்தகத்தை இடுப்பில், வேஷ்டிக்குள் சொருகிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடிக்கு ஒடினேன். பெரிய மழையாயில்லை, நனையாமலிருக்க மரமே போதுமானதாய் இருந்தது. புத்தகத்தை எடுத்துத் திறந்தேன், தற்செயலாக ‘தனுமை’ கதை விரிந்தது. உமாவிடம் பகிர்ந்து கொண்ட கதை. மூடி விட்டு எதிரே பார்த்தேன். இலந்தைக் குளம் மகாப் பெரிய அர்த்தங்களோடு விரிந்து கிடப்பதாகப் பட்டது.
அதை மூடப் போகிறார்களாம்.



(குங்குமம்-19.12.2009 தமிழ் வார இதழ்.)

Sunday, October 11, 2009

நினைவின் தாழ்வாரங்கள்-50


``பாட நினைத்தது பைரவி ராகம்
பாடி முடித்தது யாவையும் சோகம்’’
கண்ணதாசனின் இந்த வரிகள் படத்தில் வரும். இசைத் தட்டில் இருக்காது. `மயங்குகிறாள் ஒரு மாது’ படம் என்று நினைவு.

அந்திமழை.காமிற்காக திரு இளங்கோவன் எழுதுங்கள், எழுதுங்கள் என்று வருடக் கணக்காக கேட்டுக் கொண்டிருந்தார்.சந்தியா பதிப்பகம் நடராஜனும் உரை நடை எழுதுங்கள் என்று பல காலமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
முயற்சிப்போமே என்று ஆரம்பித்து ஒரு வருடம் ஓடி விட்டது.முசல் புடிக்கிற மூஞ்சியத் தெரியாதா என்ன, அண்ணாச்சி வேட்டைக்காரன் பற்றி எழுதுவாரு என்றார் ஒரு நண்பர்.. நாற்பதோடு முடித்து விட நினைத்திருந்தேன்.அதை நெருங்கும் போது இன்னொருவர்,இப்போது தான் புதிய பூமியே வருகிறது. இனிமேல் ரிக்‌ஷாக் காரன், இதயக் கனி எல்லாம் வர வேண்டுமே..... என்று மெயில் அனுப்பியிருந்தார், கடல் கடந்து. ஒரு தரை டிக்கெட் ஆசாமி எழுதும், வெறும் எம். ஜி. ஆர் புராணம் என்று நினத்து இருக்கலாம், அந்த ட்ரெஸ் சர்க்கிள், கிங்ஸ் சர்க்கிள்ஸில் அமர்ந்து படம் பார்க்கும் எலைட் ஆடியன்ஸ்.
அது உண்மையாயும் இருக்கலாம், போதுமடா சாமி என்று வணக்கம் போட நினைத்த சமயத்தில் சிலர் ரொம்ப நல்லாருக்கு.சினிமாவை வைத்து காலகட்டத்தை நன்றாகக் கொண்டு வருகிறீர்கள் என்றனர். வண்ணதாசன் ஒரு விடியற்காலம், தூக்கத்திலிருந்து எழுப்பி வாழ்த்தை மட்டும் சொல்லுகிறேன் வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னார்.நெகிழ்ச்சியில் தொண்டை அடைத்தது.
என் கவிதையில் சொல்லமுடியாததை, அதன் பின் புலம் என்று நான் நினைத்த, நான் என்ன வாக என் ஆதிகாலத்தில் இருந்தேன் என்று பாசாங்கில்லாமல் சிலவற்றைச் சொல்வது தான் என் நோக்கமாயிருந்தது. ஆனால் நினவின் ஆழத்திலிருந்து ஏதேதோ, எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது.பெரும் பாலும் (99 சதவிகிதம்?) உண்மை சார்ந்த நிகழ்வுகளையே எழுதினேன்.சில நெருங்கிய நண்பர்களின் அவலங்களை, குறிப்பாக அவர்கள் வீட்டுப் பெண்களின், என் பட்டினி நேரங்களில் சோறு போட்டவர்களின், துயரங்களைச் சொல்லும் போது மட்டும் பெயர் இடம் என்று சற்று புனைவு கலக்க வேண்டியிருந்தது. தவிரவும் புனைவு இல்லாமல் எழுத்து சாத்தியமே இல்லை. ஜி.நாகராஜன் சொல்லாததை நான் சொல்லி விடவில்லை. கல்யாணியண்ணன் எப்பொழுதும் எனக்குச் சொல்வது போல், வண்ண நிலவன் எழுதாததை நான் எழுதி விடவில்லை.
சிலவற்றை எழுதி விட்டு இரண்டு மூன்று நாட்கள், பழைய வலியை, பட்டினியைப் புதுப்பித்துக் கொண்டு அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.எனக்குப் பிடித்தமான பழைய நண்பர்களை இதன் மூலம் திடீரென்று கண்டடைந்தேன்.சுகுமாரன் போன்ற நண்பர்கள் இதன் ஆரம்பத்தில் சில திருத்தங்கள் சொன்னார்கள். எல்லோருக்கும் என் நன்றி. கொஞ்ச நாள் கழித்து இது வேறு ரூபத்தில் தொடரக் கூடும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.