Sunday, January 4, 2009

காகித ஓடம் நினைவலை மேலே....




அப்போது பஸ்களில், எத்தனை ஸீட்டுகளோ அதற்கு மேல் ஏற்ற மாட்டார்கள்.கடைசி ஸீட். சங்கப் பலகை என்று பெயர், அதில் ஆறு பேர் அமரலாம்.போனால்ப் போகிறது என்று அதிகமாக ஒருவரை கண்டக்டர் அனுமதித்தால் உண்டு.அதிலும் சுந்தரம் ஐயங்கார் பஸ்ஸில் அதுவும் கிடையாது.
எம்.ஜி.ஆர் நிச்சயம் வருகிறார் என்று தெரிந்ததும் கிளம்பி விட்டோம்.வழக்கம் போல் காசு புரட்டுவது கஷ்டமாகத்தான் இருந்தது.சரி,சிவசங்கரன் அங்கே தான் கல்லூரியில் படிக்கிறான்.அவன், அரை வருடப் பரீட்சை லீவுக்கு வரும் போது சொல்லி இருந்தான்.அங்கே வந்து விடுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று. அவன் எதிர் பார்த்தது, இரண்டு மூன்று பேரை.இங்கே நாலைந்து பேர் கிளம்பி விட்டோம் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நல்ல கூட்டமாயிருந்தது. எங்கள் தூரத்து உறவினர் தான் பஸ் டிரைவர்.எப்போதோ அப்பாவுடன் அவர் பேசிக் கொண்டிருந்த போது பார்த்திருக்கிறேன். அவரிடம் தயங்கித் தயங்கிப் போய் டிக்கெட் கேட்டேன். எல்லா பஸ்களுக்கும் அப்போது கவுண்டரில்தான் டிக்கெட் கொடுப்பார்கள்.வரிசையில் கனகு நின்று கொண்டான். இதிலெல்லாம் அவன் தான் சமர்த்தன்.வரிசையில் நிற்பது போலவும் இருக்கும்.தள்ளி நிற்பது போலவும் இருக்கும்.டிக்கெட் கொடுக்க ஆரம்பித்ததும் நைசாக முன்னால் போய்விடுவான்.இதே போல் நாம் போனால் பெரிய சண்டையே வந்து விடும்.அவன் ராசி அப்படி.அன்றைக்கு எல்லாமே தோழர்கள் கூட்டம்தான். அதனால் அவன் சற்று ஒழுங்காக கியூவிலேயே நின்றான்.
டிரைவரிடம் போய், மாமா உங்களுக்கு சிங்கி குளம்தானே, நான் இன்னார் மகன் என்றதும் ஏற இறங்கப் பார்த்தார்.வாய் நிறைய வெற்றிலை. அப்போதுதான் போட்டு அதக்கி விட்டு கையை, கர்ச்சிஃப் எடுத்துத் துடைத்து விட்டு கார் டயரைத் தட்டித்தட்டி காற்று சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார், என்னைக் கவனித்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. நானும் அவருடன் பஸ்ஸைச் சுற்றி வந்தேன். ஒன்றுமே பேசாமல் கையை நீட்டினார். என் கையில் ஐந்து ரூபாய் இருந்தது. அதற்கு மூன்று டிக்கெட் தான் வரும்.அதைக் கொடுத்து மூன்று என்றேன்.வாங்கிக் கொண்டு போனார். அவசரமாக ஒடிப் போய் கனகுவிடம் மூனு டிக்கட் கிடச்சுட்டு இன்னும் ரெண்டு வாங்கு என்றேன். சரி நீ போய் இடம் போடு என்றான்.அதற்குள் டிரைவர் `மாமா’அவர் ஸீட்டூக்குப் பின்னால் இருக்கும் ஸீட்டில் எங்களுக்கு இடமும் போட்டு வைத்து விட்டார்.அப்புறம் தான் தெரிந்தது. வெற்றிலை போட்டு துப்ப, அவருக்குப் பின்னால் தெரிந்த ஆளாக இருந்தால் நல்லது என்று எங்களுக்கு அங்கே இடம் போட்டிருக்கிறார் என்று.கனகு இரண்டு டிக்கெட் எடுத்து விட்டான்.கனகு, நான், சபாபதி மூன்று பேரும் அதில் உட்கார்ந்து கொண்டோம்.பொந்தன் கந்தசாமி என் பக்கத்தில் உட்கார ஆசைப் பட்டான். நானும் தவிர்த்து விட்டேன்,மற்ற இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை.பஸ் புறப்படது. சற்று நிம்மதியாய் இருந்தது.
``சந்திப்போம், சந்திப்போம் அறுபத்தியேழில் சந்திப்போம்’’, சததம் வண்டியை நிறைத்தது.என் பையிலிருந்த இரு வண்ணக் கொடியை எடுத்து பஸ்ஸின் சன்னலில் கட்டினேன். பஸ்ஸை சட்டென்று நிப்பாட்டி(நிறுத்தி)னார் `மாமா`. அதை அவுருலே என்றார்.நான் சற்றுப் பயந்து போனேன்.அவிழ்த்து விடலாமா, டிக்கெட் எடுத்துக் கொடுத்திருக்காரே என்று நினைத்தபடி எழுந்திருக்க முயன்றேன்.ஓரத்தில் உட்கார்ந்திருந்த கனகு, பேசாம உக்காருல என்று அதட்டினான்.அவன் எப்பொழுதும் ஜன்னல் அருகே தான் உட்காருவான்.அதை அவன் எடுத்துக் கொள்ளுவான் என்றுதான் சொல்லவேண்டும். சினிமா போனாலும், படம் ஆரம்பிக்கிறவரை வெளியே வெராண்டவில் தான் நிற்பான், நாம் தான் அவன் இடத்தைப் பர்த்துக் கொள்ள வேண்டும், வருகிற ஆளிடமெல்லாம் `ஆள் இருக்கு, ஆள் இருக்கு ‘ என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
பஸ் நிற்கும் காரணம் தெரிந்ததும், எல்லாரும் சேர்ந்து கொண்டார்கள். பஸ், காங்கிரஸ் காரருக்குச் சொந்தமானது.டிரைவர் மாமாவும் அப்படித்தான் போலிருக்கிறது என்று நினைத்தேன். `அவுக்காத, அவுக்காத ‘, என்று ஒரே கூக்குரல்.புளிச்சென்று வெற்றிலையை வெளியே துப்பி விட்டு வண்டியை வேகமாக எடுத்தார்.திரும்பவும் கூக்குரல்.இதில் வெற்றிக் களிப்பு தெரிந்தது ``நெல்லை மாவட்ட தி மு க மாநாடு வாழ்க, அண்ணா வாழ்க,கலைஞர் வாழ்க, எம்ஜியார் வாழ்க’’,என்று ஏக உற்சாகமாய் இருந்தது.இதற்குள் யாரோ நாகூர் அனிபா குரலில் பாட முயன்றார்கள், `அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா, அருமை மிகும் திராவிடத்தின் துயர் துடைக்க என்றே..’பாட்டுக் கேட்டு, பஸ்ஸினுள் சத்தம் சற்று குறைந்தது.அது யாரு மேலப்பாளையம் யூசுப் அண்ணனா பாடறது, என்று யாரோ கேட்க, ஒரு சிரிப்பலை பரவி பஸ் சுத்தமாக அமைதியானது.இது தாம்ல மணியோட புது மில்லு, என்று கனகு சுட்டிக் காட்டினான்.சரியாக எட்டிப் பார்க்கும் முன் மில் கடந்து விட்டிருந்தது.தலைய உள்ள இழுல,தலைவரைப் பாக்க தலை இருக்காது.,என்று டிரைவர் மாமா கடிந்து கொண்டார்.இன்னும் கடுப்பு தணியவில்லையே என்று தோன்றியது.தவிரவும், திரும்பும் போது டிக்கெட் எடுக்க அவர் தேவைப் பட்டா என்ன செய்யறது.என்று வேறு தோன்றத் தொடங்கி விட்டது.இந்தக் கவலையெல்லாம் மற்றவர்களுக்கு இருக்கா, இருக்குமா என்று தெரியவில்லை.என் சுபாவமே அப்படி.கூனியூர் வர்றதுக்கு முன்னாலேயே குனிஞ்சு கிட்டே போறது.இதனால் பலரிடம் கெட்ட பேர் வாங்கியிருக்கிறேன்.

தூத்துக்குடி போறது அது இரண்டாவது தடவை. சின்னப் பிள்ளையில் நாலோ ஐந்தோ படிக்கும் போது போனது.தூத்துக் குடியில் திருநெல்வேலி மாவட்ட திமு.க தேர்தல் மாநாடு.கே வி கே சாமி நினைவு அரங்கம், வ உ சி கல்லூரி அருகேதான் இருந்தது.அப்போது எம்.எஸ்.சிவசாமி மாவட்டச் செயலாளர் என்று நினைவு.அதனால்த் தான் திருநெல்வேலி மாவட்ட மாநாட்டை, தூத்துக்குடியில் நடத்தினார்கள்.அப்போது தூத்துக்குடி தனி மாவட்டமில்லை.கல்லூரிக்குப் போய் சிவசங்கரனைக் கூப்பிட்டு வந்தோம்.. மத்தியான சாப்பாட்டு நேரம். மாநாட்டுப் பந்தலுக்குள் ஏதோ ஒரு கடையில் பொட்டலம் கிடைத்தது.எலுமிச்சை சாதம் வாய்க்கும் காணவில்லை, கைக்கும் காணவில்லை., ருசியாயும் இல்லை.யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யாரும் உண்மையைச் சொல்லவில்லை.என்னிடம் ஊருக்குப் போவதற்காக ஒளித்து வைத்த காசைத் தவிர பத்து ரூபாய் வரை தேறும்.ஹாஸ்டலில் தங்க முடியாது என்று தெரிந்தது.மாநாட்டுப் பந்தலிலேயே தங்குவது என்று முடிவு செய்தோம். ஏ.வி. பி.ஆசைத்தம்பி- தப்பி வந்த தம்பி-பேசிக் கொண்டிருந்தார் .ஈ வி கே சம்பத், கண்ணதாசனுடன் காங்கிரஸில் சேர வேண்டியவர்,நல்ல வேளையாக தப்பி விட்டார்.அது பற்றி அவரே அற்புதமாகப் பேசிக் கொண்டிருந்தார்.பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது.சாப்பிட வெளியே சென்றால் படுப்பது சிரமம், உள்ளே மறுபடி வர முடியாது.உள்ளே சாப்பாடு கிடைக்கவில்லை.பேச்சுக்களெல்லாம் முடிந்து தலைவர்களில் சிலர் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க
தேவராஜன் –கவுரி கச்சேரி ஆரம்பித்து ``காகித ஓடம் கடலலை மீது போவது போலே ....’’ பாடி பலத்த கைதட்டலும் ``ஒன்ஸ் மோரும்’’ கேட்டு மாநாட்டுப் பந்தல் கலகலப்பாய் இருந்த சமயத்தில் வெளியே போவது என்று முடிவாயிற்று.
ஊருக்குள் செல்லும் சாலை வழியோரங்களில் பந்தல் போட்டு ஓட்டல்கள் முளைத்திருந்தது.வாங்க வாங்க மல்லியப் பூ இட்லி என்று சத்தம் போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.அதில் ஒரு பெண்ணும் அழைத்துக் கொண்டிருந்த கடைக்குள் நுழைந்தோம். நிறையப் பேர் மண் தரையில் வரிசையாய் நீளமான பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.இட்லி அவ்வளவு கனமாய் இருந்தது.இரண்டு இட்லியை சாப்பிடுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.அதை ஊற வைத்து தின்பதற்கும், அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கும் என்று சாம்பார் கேட்டு அலுத்துப் போயிற்று. சற்றே சேலையைத் தூக்கிச் சொருகியபடி வேகமாகச் சுழன்று கொண்டிருந்த அந்தப் பெண்ணையும் அதன் கறுத்த காலில் அணிந்திருந்த கொலுசையும் பற்றிப் பேசிக் கிண்டலடித்தபடியே ஊருக்குள் வந்தோம்.வழியில் என்.ஜி.ஓ சங்க கட்டிடம் ஒன்று. அந்த வெராண்டாவில் . ஏற்கெனெவே சிலர் படுத்திருந்தார்கள்.நாங்கள் வருவதைப் பர்த்ததும் அதுவரை திறந்திருந்த கட்டிடத்தின் ஹால்க் கதவை உள்ளிருந்தவர்கள் சாத்தி விட்டார்கள்.சரி வெராண்டாவிலேயே படுத்துக் கொள்ளலாம் என்று கையில் வைத்திருந்த பையைத் தலைக்கு வைத்துப் படுத்தோம் தூக்கம் கண்ணைச் சுற்றுகையில் பொந்தன் கந்த சாமி பக்கத்தில் வந்து படுத்தான்.யாத்தா இது ஆபத்துல்லா என்று எழுந்ததுதான் தாமதம்,வேறு யாரோ நின்று கொண்டிருந்தவர்கள், அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.இருட்டில் யார் யார் எங்கே என்றே தெரியவில்லை. கட்டிடத்தின் முன்னால் நிறைய இடமும் மணலுமாய் இருந்தது. அங்கே போய்ப் பார்க்கலாம் என்று போனால், அங்கே கனகும் பெரிய கோபாலும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.அநேகமாகச்சொறிந்து கொண்டிருந்தார்கள். மணலில் புழு உண்ணி. ``ஏலே பொந்தன் எழுப்பி விட்டுட்டானா கே ஆர் விஜயா மாதிரி இருக்கான்னுட்டு புலம்பிக்கிட்டே இருந்தானே’’ தப்பிச்சு வந்திட்டியா என்று கிண்டலாக வரவேற்றார்கள்.அப்போது சிவசங்கரன் வந்தான்.இன்னும் கொஞ்சம் தூரம் போனா கோயில் இருக்காம், அங்கன போவோம் என்று கூப்பிட்டான்.கோயிலும் தெரியவில்லை ஒன்றும் தெரியவில்லை ஒரு தெப்பக் குளமும் சுற்றி வீடுகளூம் இருந்தது.ஒரு வீட்டின் படிக்கட்டுகள், திண்ணை போல் கொஞ்சம் அகலமாய் இருந்தது.
கொஞ்ச நேரம் தான் படுத்திருப்போம், யாரோ, ஏல தூப்புக்காரி கொலுசை ரசிச்சவன் யாருல, தாயோளி மல்லியப்பூ இட்டிலியாம். மயிரைப் புடுங்கினது. என்று சிரிப்பும் ஏச்சுமாகச் சொல்ல கக் கக்கென்று சத்தமாய்ச் சிரிப்பு வெடித்தது.இதைக் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து டேய் அம்பிகளா ஏந்திருந்து போறேளா இல்லே தண்ணியக் கோதி விடவா என்று சத்தம் போட்டார்கள்.இதற்குள் மணி ஐந்து போல் ஆகி விட்டது.சரி வாங்க விடியதுக்கு முன்னால ஹாஸ்டல் போயி குளிச்சு முடிச்சிருவோம். என்று சிவசங்கரன் சொல்லவே ஹாஸ்டலுக்கு கிளம்பினோம்.ஏதோ ஏதோ ஒரு சுற்று வழியில், சற்று திருட்டுத் தனமாகத்தான் ஹாஸ்டலுக்குள் போன நினைவு.ஆனால் குளிக்க, கொள்ள, வசதியாய் இருந்தது.காலைக் கடன் கழிஞ்சதே ஒரு தெளிச்சியத் தந்தது. தூங்காதது பெரிய சங்கடமாகத் தெரியவில்லை.
கனகுதான், கல்யாணி அண்ணன் ரூமுக்குப் போவோம் என்று கூட்டிப் போனான். அண்ணன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.நான் தான் தொட்டு எழுப்பினேன்.அன்றையக் காலைச் சாப்பாட்டை அவர்கள்தான் வாங்கித் தந்தார்கள்.,பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்த்த ஒரு நல்ல ஹோட்டலில் திருப்தியான சாப்பாடு. காலையில் திரும்பவும் மாநாடு. மத்தியான வாக்கில் கலைஞர், மாலையில் அண்ணாவின் அருமையான பேச்சு.எல்லாம் அன்றையப் பசியை உணரவிடாமல்ச் செய்தது.
அண்ணா பேசி முடிக்கும் வரை எம் ஜி ஆர் வருவார் என்று நம்பிக் கொண்டிருந்தோம்.வரவில்லை.அதே திருட்டு வழியில் ஹாஸ்டலுக்குப் போய் அன்றைய இரவைச் சவுகரியமாகக் கழித்தோம். யாரோ நாகர் கோயில் பக்கத்துப் பிள்ளைவாள் தான் வார்டன்,பாக்கியம் பிள்ளையோ என்னவோ பேர். ரொம்பக் கண்டிப்பான ஆள்.காலேஜே அவரைக் கண்டு நடுங்குமாம்.ஆனால் சிவசங்கரன் அசாத்தியத் துணிச்சல் காரன். அவன் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அன்றைய எம்.பி, முத்தையா பிள்ளை வீட்டில் கறுப்புக் கொடி கட்டினான்.போலீஸும் பெரிய மாணவர் ஊர்வலமும் பர்த்துக் கொண்டிருக்கும் போதே விறு விறுவென்று குழாய் வழியாக ஏறி தெரு முகப்பு மாடியில் கறுப்புக் கொடியைக் கட்டினான்.கூட்டம் ஆர்ப்பரித்தது.
மறுநாள்க் காலையில் காபி குடித்ததோடு சரி பஸ் ஏறி விட்டோம்.நினைத்தபடியே அதே பஸ்.அதே கண்டக்டர். ஆனால் அவர் சிவசங்கரனுக்கு ரொம்ப நெருக்கமான் உறவு. அவரிடம் எப்படியோ சொல்லி டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்துவிட்டான்.
நாங்கள் மூன்று பேர்தான் இருந்தோம். மற்றவர்கள் எங்கே எப்படிப் போனார்கள் என்று தெரியவில்லை.யாரைப் பற்றிக் கவலைப் படவும் நேரமில்லை.கனகுதான் சொன்னான், எப்பா குசுவிக் குசுவி முடியலை ஊருக்குப் போய் நிம்மதியா கொல்லக்கிப் போனாத்தான் நிம்மதி, என்று.அவன் அவ்வளவு தூரம் அரசியல் ஈடுபாடு இல்லாதவன்.எம்.ஜி ஆர் வராதது அவனுக்குப் பெரிய வருத்தம்.கொஞ்ச நேர அமைதிக்குப்பின், கேட்டேன்``ஏய் எங்கப்பா மத்த ரெண்டு பேரையும், வரும் போதும் நம்ம மூனு பேர்தான், போகும் போதும் நம்ம மூனு பேர்தான்....’’ கனகு பாடினான்.,காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்....’’பாட்டை நிறுத்தி விட்டுச் சொன்னான், ஏன் உங்க டிரைவர் மாம்மாவை விட்டுட்டே...

Sunday, December 28, 2008

`ஆண்டவன் கட்டளை.....’’.




``நான்கு வாரங்களுக்கு எந்த வித ப்ரீ பாஸும் செல்லாது.’’முதன் முதலில் இப்படி போர்டு வைத்தது பாசமலர் படத்திற்காகத்தான் ஸ்ரீ ரத்னா தியேட்டரில் என்று நினைக்கிறேன்.பாசமலர் படத்திற்கு பயங்கர வரவேற்பு. தாய்மார்கள் கூட்டம் அலைமோதியது.ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு தரை, பெஞ்சு டிக்கெட்டுகள் முழுவதும் பெண்களுக்கு மட்டும்.கொடுத்தும் கூட்டம் குறையவில்லை. முதன் முதலில் நான்கு வாரங்கள் மாட்னி ஓடி சாதனை படைத்தது அந்தப் படம்தான்.ரொம்ப நாளைக்கு அதுதான் ரெக்கார்ட்.`நானும் ஒரு பெண்’ படம் தான் ஆறு வாரம் வரை மாட்னி ஓடி அதை முறியடித்தது.`மாட்னி ஹோல்டெர்’ என்று ஒரு ஒப்பந்தம். பட விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் காரர்களுக்கும் உண்டு.அந்தக் காலத்தில், அதாவது தரை டிக்கெட். (. சைக்கிள் சீட் அகலத்துக்கு பெஞ்சுகள் போடப்பட்டிருந்தாலும் அது தரைடிக்கெட் என்றே வழங்கி வந்தது.) 31 பைசாவாக இருந்த காலத்தில்,130/-ரூபாய் வசூல் ஆகும் வரை மாட்னி ஓட்டுவார்கள். அதற்கு குறைந்து விட்டால் தினசரி இரண்டு காட்சிகள்,`சனி, ஞாயிறு’ மூன்று காட்சிகள்.1966-ல் தனிப்பிறவி படம்தான் 63 நாட்கள், கடைசி நாள் வரை மாட்னி ஓடியது.125 நாள் மாட்னி ஓடி சாதனை படைத்தது.ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை. ஆனால் அது கலர்ப் படம். எல்லா ரெக்கார்டுகளையும் உடைத்து தூள் தூளாக்கியது.தாய்மார்களின் ஆதரவுடன் ஒரு சாதாரணக் கறுப்பு வெள்ளைப் படம் 175 நாளுக்கு மேலாக மாட்னியுடன் ஓடி சாதனை புரிந்தது. `பணமா பாசமா’. .

ஒவ்வொரு தியேட்டர்காரர்களும் சினிமாப்படப் போஸ்டர் ஒட்ட அவர்களுக்கென்று இடங்களைப் பிடித்து வைத்திருப்பார்கள்.எழுதப்படாத சட்டம் போல் ஒருவர் வழக்கமாக ஒட்டுகிற இடத்தில் இன்னொருவர் ஒட்ட மாட்டார்கள்.அப்படி யாராவது ஒட்டி விட்டால் `போஸ்டர் வார்’ ஆரம்பித்து விடும். அந்தப் பட போஸ்டர்களின் மீது கைவசமிருக்கும் பழைய போஸ்டர்களை நீள வாக்கில் வெட்டி புதுப் போஸ்டர் மேல் ஒட்டி விடுவார்கள்.அப்புறம் சமாதானமாகி விடும். விநியோகஸ்தர்கள் தருகிற எல்லாப் போஸ்டர்களையும் தியேட்டர்காரர்கள் ஒட்டுவதில்லை.அப்போதே, இருப்பதில் சிறிய சைஸான 20க்கு 30 போஸ்டர் ஆறு ரூபாய் வரை வரும்.60 க்கு 40 என்றால் பதினோரு ரூபாய் வரை வரும்.60க்கு 40, நாலு துண்டு சேர்ந்தால் பெரிய `பேனர்போஸ்டர்’. ஜெமினி ஸ்டுடியோஸ் படத்திற்கென்றால் ஆறு துண்டு பேனர் போஸ்டர் தவறாமல் போடுவார்கள். பெரிய தேரைச் சுற்றி மூடியிருக்கும் தகரத்தில் அநேகமாக எல்லாத் தியேட்டர் போஸ்டர்களும் ஒட்டியிருக்கும்.

ஒளி விளக்கு படத்திற்கு`ஈஸ்வர். டிசைன் செய்த ஆறு துண்டு போஸ்டர் ரொம்ப பிரபலம்.அதை விட `தீபாவளி வார’த்திற்கு அவர் வரைந்த நாலு எம்ஜியார் இருக்கிற(தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா’ பாடல் காட்சியில், ரவி காந்த் நிகாய்ச் தந்திரக் காட்சியில் எம் ஜி ஆர் நாலுவித தோற்றத்தில் வருவார்)போஸ்டருக்கு பெரிய கிராக்கி.ஒட்டாமல் ஒதுக்கி வைத்த போஸ்டர்களை, அதை ஒட்டுபவர்களோ அல்லது தியேட்டர் மேனேஜரோ டூரிங்க் டாக்கிஸ்காரர்களிடம், பாதி விலைக்கு கொடுப்பார்கள். அவரகள், விநியோகஸ்தர்களிடம் பேருக்கு ஒன்று இரண்டு போஸ்டர்களை மட்டும் வாங்கிக் கொண்டு மீதித் தேவைக்கு இப்படிப் பெரிய நகரங்களிலுள்ள தியேட்டர்காரர்களிடம் சல்லிசாக வாங்கிக் கொள்ளுவார்கள். .தியேட்டர்களில் விளம்பர வண்டி தள்ளும் துரை என்று ஒருத்தன் எனக்கு அறிமுகம். போஸ்டர் ஒட்டுபவர்கள், முன்னிரவில், அதாவது செகண்ட் ஷோ ஆரம்பித்ததும் தியேட்டரை விட்டுக் கிளம்புவார்கள். போஸ்டர்கள், பசை வாளி சகிதமாக. நகரம் பூராவும் அவர்களுக்கு `நிர்ணயிக்க’ப் பட்ட இடங்களில் ராமுழுக்க ஒட்டி விட்டு, விடியப் போகிற போது ஆற்றுப் பக்கம் வந்து விடுவார்கள். மேல் காலெல்லாம் பசையாக இருக்கும்.

அப்படி ஒரு நாள் ஊருக்குள் எல்லாம் போஸ்டர் ஒட்டி விட்டு, ஆற்று மண்டபத்தின் வெளிச் சுவரில் கடைசிப் போஸ்டரை ஒட்டிவிட்டு, இரண்டு கையிலும் பசையோடும், ஒரு தவிப்போடும் நின்று கொண்டிருந்தான் துரை. ஏதோ செசில் பி டெமிலியின் டென் கமான்மெண்ட்ஸ், வில்லியம் வைலரின் பென்ஹர் போன்ற பிரம்மாண்டப் படங்களின் ஸ்டைலில் `அரச கட்டளை’ப் படப் போஸ்டரின் எழுத்து,அதன் மேல் வாளைப் பிடித்தபடி எம் ஜி ஆர்.அது பக்தா வரைந்தது. எம் ஜி ஆர் குண்டடி பட்டு, பிழைத்து வந்ததும் வந்த, முதல்ப் படம்.படம் முன்பே எடுக்கபபட்டதுதான். சொல்லப்போனால் முதலில் பவானி என்ற பெயரில் எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், பானுமதியெல்லாம் நடிக்க தயாராகி, பாதியிலேயே நின்று போன படம்.எம்ஜியார் பதிப்பாசிரியராக இருந்த `நடிகன்குரல்’.பத்திரிக்கையில் விளம்பரங்கள் எல்லாம் வந்தது.அதில் தான் எம்ஜியார் தனது சுய சரிதையை எழுதி வந்தார்.அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. அப்புறம், விகடனில் நான் ஏன் பிறந்தேன் என்று வெளிவந்தது.செத்துப் பிழைத்த தலைவர் மேல் அப்போது அப்படியொரு வெறி.போஸ்டரும் நன்றாக இருந்தது.
பொதுவாக பக்தா டிசைனெல்லாம் அப்போது காலாவதியாகிவிட்டது. அந்தக் காலத்தில், N44 என்றுசுருக்கமாகப் போடும் கே. நாகேஸ்வர ராவ், ஜி ஹெச் ராவ், பக்தா இவர்கள்தான் போஸ்டர் டிசைனில் பிரபலம். பக்ஷிராஜா படங்களுக்கும் ராமண்ணாவின் பழைய படங்களுக்கும் `வேந்தன் பப்ளிசிட்டீஸ்’.ஏ வி எம்முக்கு ஜி ஹெச் ராவ்.டப்பிங் படங்கள் என்றால் ஸ்டுடியோ எஸ் .வி. சர்மா, மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு எஸ்.ஏ. நாயர், .இவருடைய வண்ணங்கள் உறுத்தாமல் இருக்கும். பக்தா, ஜி ஹெச் ராவ், வர்ணங்கள் சற்று அடர்த்தியாக இருக்கும்.
தவிரவும் இரண்டு பேரும் மார்பளவு படங்களை வைத்தே டிசைன் செய்வார்கள். லெட்டரிங்கை பார்த்தாலே சொல்லி விடலாம். யார் போஸ்டர் என்று. ஸ்ரீதர் பட்ங்களுக்கு சீநி.சோமு டிசைன் செய்வார்.அவர் ஸ்ரீதரைப் போலவே, சில புதுமைகளைச் செய்தார்.வெறும் போட்டோக்களை ஒட்டி வைத்தது போல் டிசைன் செய்யாமால் அதையே சற்று ஓவியம் போல் செய்தவர். தெய்வத்தாய்,. தட்டுங்கள் திறக்கப் படும், நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களுக்கெல்லாம்.அவர் வரைந்த போஸ்டர்கள் பெரிய மாறுதலாய் இருந்தது. வீரத்திருமகன் படத்திற்கு சோமு வரைந்த போஸ்டர்கள் வித்தியாசமானவை. பாடலகள் கண்ணதாசன். இதில் பாடல்கள் என்று எழுதாமல் ஏடும் எழுத்தாணியும் வெள்ளை வர்ணத்தில்-சிறியதாக, அதன் மேல் கண்ணாதசன் என்று அடர்ந்த வண்ணத்தில்., அதே மாதிரி வீணை,தபலா, இசைக் கருவிகள் மேல் விஸ்வநாதன்-ராம மூர்த்தி என்று டிசைன் செய்திருப்பார். இந்த நேரத்தில்தான். பேசும்படம் பத்திரிக்கையில் அழகாக லே அவுட்
செய்து கொண்டிருந்த பரணி குமார். முதன் முதலாக் `இருவர் உள்ளம்.’ படத்திற்கு டிசைன் செய்திருந்தார். அந்தப் போஸ்டர் வண்டிப் பேட்டை-ரொட்டி சால்னா கடை அருகே வழக்கமாக ராயல் தியேட்டர் போஸ்டர் ஒட்டுகிற இடத்தில் ஒட்டியிருந்தது. அப்படித்தான் மார்க்கெட் லைப்ரரிக்குச் செல்லவேண்டும்.காலையில் அது ஒரு பழக்கம். நான் அதையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது., எதிரே வந்த வண்ணதாசன் என்னுடன் சேர்ந்து கொண்டார்.இரண்டு பேரும் அர்த்த புஷ்டியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.அப்புறம் போஸ்டரைப் பார்த்தோம். அழகு.
வண்ணதாசன் அற்புதமாகப் படம் வரைவார். பாசமல்ர் படத்திற்குப் போஸ்டர் டிசைன், அதன் தயாரிப்பாளரான மோஹன் ஆர்ட்ஸ், மோஹன் ராம் தான். அதற்கு வைக்கப் பட்டிருந்த கட் அவுட்கள், பானெர்கள் எல்லாம் அற்புதமாய் இருக்கும். கல்யாணி அண்ணன் அதை அப்படியே வரைந்து வைத்திருப்பார்.சிவாஜி துப்பாக்கியால் கண்ணீரைத் துடைக்கிற மாதிரி ஒரு படம்,பென்சில் டிராயிங், இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
பரணியின் படங்களைத் தேடிதேடி ரசிப்போம். கல்யாணியின் கணவன் படத்திற்கு (பக்ஷி ராஜா ஸ்டுடியோஸ் படம்) பரணி வரைந்த டிசைனுக்காகவே படம் போனோம். படம் கூவி விட்டது. எம் ஜிஆர் படத்திற்கு பரணி டிசைன் பண்ண மாட்டாரா என்றிருந்தது.அடிமைப் பெண் படத்திற்கு ஒரு பேனர் போஸ்டர் வரைந்திருப்பார், ஆனால் அது அவ்வளவு நன்றாயிருக்காது. அவர் மனம் போல் வரைய விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.ஸ்ரீதர் படங்களில் வெண்ணிற ஆடை படத்துக்கு பரணியின் கைவண்ணம் அழகாக் இருக்கும்.பரணியின் பாதிப்பில் நிறைய பேர் வந்தார்கள்.உபால்டு அதில் ஒருவர்.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பரணி, ஒரு வாய் பேச முடியாத ஓவியராக நடித்திருப்பார்.அதில் அவர் இறந்து போவது போல் காண்பித்திருப்பார்கள். தேவையில்லாத செண்டிமெண்ட் அது. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே, பரணி காலமான போது, கே.பாலசந்தர் மேல் இனம் புரியாத கோபம் வந்தது.
குழந்தைக்காக படத்திலிருந்து `ஈஸ்வர்.’போஸ்டர்கள் பிரபலமானது.அதற்கு அவர் வரைந்திருந்த ஒரு மசூதியின் பாதிக் கோள வடிவம், அதற்குள் ராமர், சிலுவை எல்லாம் எல்லாப் போஸ்டர்களிலும் சிறிதாக அழகாக, உறுத்தாத குறியீடாக இருக்கும். . இதே ஐடியா பாவ மன்னிப்பு விளம்பரங்களில் சற்று வெளிப்படையாய் பேத்தலாய் இருக்கும்.ஈஸ்வர் டிசைன் செய்யாத படங்களே இல்லை என்ற காலம் இருந்தது..
ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரைக்கும் படத்திற்கு பாண்டு பென்சில் ஸ்கெட்சில் பிரமாதப் படுத்தியிருப்பார் எல்லா விளம்பரங்களிலும்..அற்புதமான கலைஞன். நகைச் சுவையில் அவரை ‘’மொக்கை போட வைத்து’’ புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

துரைக்கு யாராவது டிராயர் பையிலிருந்து பீடியை எடுத்துக் கொடுத்தால் நல்லது., கடைசிப் போஸ்டரை மண்டபத்தில் ஒட்டிய இரண்டு கைகளிலும் ஏகப்பட்ட பசை.என்னிடம் கேட்டான்.அவனது முரட்டு டிரவுசர்ப் பையிலிருந்து பீடியை எடுத்துக் கொடுத்தேன்.பீடியைத் தவிரவும் வெறெதுவோ அசாதாரண வடிவத்தில் ககையில் பட்டது.அதுவும் சின்னபீடிக் கட்டுப்போல இருந்தது. அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.அவனிடம் ஒரு போஸ்டர் –அரச கட்டளை- கேட்டேன். வீட்டில் வைத்திருப்பதாகச் சொன்னான்.வீட்டுக்கு வாரும். அவனைச் சமீப காலமாகப் பழக்கம்.சில டீக்கடைகளில் தட்டி போர்டு வைத்து குறிப்பிட்ட தியேட்டரின் விளம்பரங்களை வைத்திருப்பார்கள்.அதற்காக போர்டு பாஸ் என்று தருவார்கள்.இரண்டு பேர் போகலாம் பெஞ்சு டிக்கெட்டிற்கு. இந்தப் பாஸை நல்ல படமென்றால் நாலு வாரத்திற்குத் தர மாட்டார்கள்.அதை போஸ்ட் ஒட்டும் துரை போன்றவர்கள் வாங்கி வந்து கடைக்காரரிடம் தருவார்கள்.சிலரிடம் அவன் அதைக் கொடுக்க மாட்டான். தரை டிக்கெட் விலைக்கு விற்று விடுவான். சில நல்ல ஆங்கிலப் படங்களுக்கு அவன் சும்மாவே தந்திருக்கிறான்.பீச் ரெட் என்று ஒரு அற்புதமான படம். போர் முனையிலிருக்கும் வீரர்கள்,வீட்டையும் மனைவி, சொந்தங்களை நினைத்தும், அந்நியோன்யமான நேரங்களை நினைத்தும் மணலில் பெண்ணைப் போல் செய்து, உணர்ச்சிகளைத் தீர்த்துக் கொள்வதாகவும் எல்லாம் வரும்.
ஏற்கெனெவே கேட்டு வைத்திருந்த அடையாளத்தை வைத்து துரையின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.முடுக்கு முடுக்காகப் போய்க் கொண்டிருந்தது.ஒரு வீட்டில் இன்னொரு துரை இருந்தான். சினிமாத் தியேட்டரில் போஸ்ட் ஒட்டுகிறவன் என்று சொல்ல தயக்கமாய் இருந்தது. சைக்கிளைத் தெருவில் வைத்து விட்டு வைத்திருந்தேன். பூட்டு சரியாக இல்லை.அவ்வப்போது சாவி கீழே தானாகவே விழுந்து விடும்.பின்னால இருக்கு போங்க என்று சொல்லி விட்டு ஒரு மாதிரியாகப் பார்த்தான் இன்னொரு துரை. கிட்டத்தட்ட வாய்க்கால் ஒன்று வந்து விட்டது. இதற்கு மேல் வீடு இருக்காது என்று திரும்பின போது ஒரு சின்ன்க் குச்சு வீட்டின் தார்சாலில் பசை வாளி தென் பட்டது. இரண்டு மூன்று சத்தம் கூப்பிட்டேன். பதிலே இல்லை.வீடு திறந்திருந்தது .வாய்க்காலிலிருந்து ஒரு கிழவி துவைத்த துணிகளோடு வந்து கொண்டிருந்தாள்.அவளிடம் கேட்டேன் துரை வீடு இதானா என்று.
ஆமா இதான் உள்ளே போ என்று சொல்லி,அவளும் ஒரு மாதிரியாகச் சிரித்தாள்.உள்ளே போனேன்.யாரோ ஒரு ஆள் இடித்துத் தள்ளினாற் போல் வெளியே போனான்.தரையிலிருந்து ஒரு பெண், புடவை எதுவும் இல்லாமல் எழுந்தாள். நான், ``துரை......’’ என்று இழுத்தேன். சற்றுத் தள்ளிக் கிடந்த சேலையைக் காலால் எடுத்தபடியே கத்தினாள். ``ஆமா தொரை, என்னத்த தொறக்க, சீத்துவமில்லாத நாயைத் தேடி வந்துட்டான்..திறந்து வீட்டுல நாய் நுழஞ்ச மாதிரி...’’இதற்குள் சேலையைச் சுற்றியிருந்தாள். அவள் பேச்சுக்கேத்த உருவமில்லை, மூக்குத்தியுடன் மிக அழகாய் இருந்தாள்.வேகமாக வெளியேறினேன். பின்னாலாயே வருவது தெரிந்தது.தார்சாலில் இருந்த பசை வாளியை காலால் எத்துவதும் அது உருளுவதும் கேட்டது.சைக்கிளை நினைத்த படி, வீடுகளாய்க் கடந்து தெருவுக்கு வந்தேன், எல்லா வீட்டிலிருந்தும் சிரிப்பது மாதிரிப் பட்டது.