Sunday, April 26, 2009

மூங்கில் மரக் காட்டினிலே கேட்கும் ஒரு நாதம்...



அகதீசன், பத்தாவது வகுப்புக்கு புதிதாய் வந்து சேர்ந்தான்.சென்னையிலிருந்து வந்திருந்தான்.அவனுடைய சென்னைத் தமிழ் வேடிக்கையாய் இருந்ததென்றால்,அவன் பேசுகிற வேகம் அதை விட வேடிக்கையாய் இருந்தது.கால் பரீட்சை வரை அவன் வேடிக்கைப் பொருள்.பிரமாதமாகப் படிப்பான் என்று அவன் அப்பா அவனை வகுப்பில், முதல் நாள் கொண்டு வந்து விடும் போது சொன்னார்.அப்படியொன்றும் பிரமாதமாயுமில்லை.அவன் அப்பா மார்க்கெட்டில் பெரிய அதிகாரி என்று சொல்லியிருந்தான். நான் நேதாஜி போஸ் மார்கெட் என்கிற தினசரி காய்கறிச் சந்தைக்கு காய்கறி வாங்கப் போகிற போதெல்லாம் அங்கே வாசலில் இருக்கிற ஒரு அலுவலகத்தில் எட்டிப் பார்ப்பேன்.தினசரி சந்தைக்கு விற்பதற்கு வருகிற காய் கனிகளுக்கு கட்டணம் வசூலிக்கிற ஆதீனக் கோனார் தான் காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு நிற்பார்.அவர் அகதீசனின் அப்பாவாக இருக்க முடியாது.ஏனென்றால் அவரை பதினொன்றாம் வார்டின் எல்லா சின்னப் பிள்ளைகளும் அறியும்.
துப்புரவுத் தொழிலாளிகளை மேற்பார்க்கிற வேலையும் அவர் செய்வார். தெருவில் வெளிக்கிருந்து கொண்டிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் அவரைக் கண்டால் எழுந்து ஓடி விடும். அவர் கண்ணில் பட்டு விட்டால், அப்படியே தோளைப் பிடித்து ஒரு அழுத்து, இருந்து வைத்ததெல்லாம் பின் புறம் அப்படியே அடை போல ஒட்டிக் கொண்டு விடும்.சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நான் அவரிடம் மாட்டியதில்லை.இருந்தாலும் அவரைக் கண்டால் ஒரு பயம் தான்.
அகதீசனிடம் கேட்டேன். ஏல உங்க அப்பா மார்கெட்டில ஆபீஸர்ன்னே. அங்கெ யாருமே இல்லையேலே. நான் தான் தினமும் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கறேன்.போடா கூமுட்டை,அது காய்கறி மார்க்கெட் இல்லைடா,ரெகுலேடெட் மார்க்கெட், என்று அவன் அப்பா அலுவலகத்துக்குப் பக்கமாக ஒரு நாள் அழைத்துப் போனான்.காசுக்கடை மகமைக்கு சொந்தமான வைர மாளிகையிலிருந்தது. அந்த அலுவலகம்.காசுக்கடை என்றால் தங்க நகை வியாபாரம்.அந்தக் கடைக் காரர்களுக்கு என்று ஒரு சங்கம் அதுதான் மகமைச் சங்கம்.அந்தக் கட்டிடத்தில் மத்யஸ்தக் கடையும் உண்டு.வெளியூரிலிருந்து நகை வியாபாரிகள் வந்தால் அங்கே தங்கிக் கொள்ள அறைகளுமுண்டு.இதே போல் ஜவுளிக் கடைக்காரர்களின் சங்கம் தென்னம்பிள்ளைத்தெரு என்கிற அப்பர் தெருவில் இருந்தது.அங்கே ஒரு அழகான கிணறும் மோட்டாரும் உண்டு.மோட்டாரிலிருந்து மேலே டேங்கிற்குப் போகிற தண்ணீர் இடையில் ஒரு நள்ளியைத் திறந்தால், அருவி மாதிரிக் கொட்டும்.அப்போதெல்லாம் மோட்டார் செட் என்பதே அபூர்வம்.நான் ஒரு தடவை ஜவுளிக்கடை மகமைச் சங்கத்திற்குப் போய் கள்ளக் குளியல் குளித்து விட்டு, டிராயர் காய்வதற்காய் தெருத் தெருவாய்ச் சுற்றிக் கொண்டிருந்தேன்.இன்னொரு தரம் துண்டு சகிதமாய் அங்கே போன போது விரட்டி விட்டார்கள்.அங்கேயும், வெளியூர் வியாபாரிகள் வந்தால் தங்கிக் கொள்ளுவார்கள். பெரும்பாலும் வடக்கத்திக்காரர்கள் தான்,கொடுத்த சரக்குக்காக பணம் வசூல் பண்ண வருவார்கள்.அவர்கள் இங்கே தான் தங்குவார்கள்.உள்ளே ஒரு குட்டி பேங்கே இருந்தது பின்னால் தான் தெரியும்.சேட்டுகள், பணததை அங்கே உள்ள இரும்புப் பெட்டியில் வைத்திருப்பார்களாம்.நாலைந்து கடை வசூல் முடித்துப் போக, இரண்டு மூன்று நாள் ஆகிவிடுமாம்.அது வரை பாதுகாப்பாக பணம் அங்கேதான் இருக்குமாம்.ஆனால் டவுணில், பாண்டியன் பாங்கை கனரா பாங்கும், இண்டோ கமெர்ஷியல் பாங்கை, பஞ்சாப் நேஷனல் வங்கியும் எடுத்துக் கொண்டபோது இதற்கெல்லாம். அவசியமில்லாமல் போயிற்றாம்.வட இந்திய வியாபாரிகள் ட்ராஃப்ட் எடுத்துக் கொண்டு போய் விடுவார்களாம்.
இந்தக் கதையெல்லாம் பெரிய கோபாலின் அண்ணன் கிட்டப்பா சொன்னது.கிட்டப்பாவின் கடை கூலக்கடை பஜாரின் முனையில் இருந்தது.. கடை நாலடிக்கு நாலடி தான். இரண்டு பாய் விரிப்பதற்குக் கூட இடமிருக்காது. அப்போதெல்லாம் பஜாரின் பெரும்பாலான் கடைகளில் தரையில் கோரம் பாய் தான் விரித்திருப்பார்கள்.அதற்கென்றே ஸ்பெஷலாக நெய்த, அளவான பாய்கள். நாளை (தமிழ்)மாசப் பிறப்பென்றால் இன்று இரவு கடை பூட்டும் முன், கடைச் சிப்பந்திகள், பஜாரில், அந்தப் பாய்களைப் போட்டு உதறுவார்கள்.அல்லது இரண்டு பேர் பிடித்துக் கொள்ள மூன்றாவது ஆள் துணி சுற்றி வருகிற உருண்ட கம்பால்(பேனர் கட்ட சௌகரியமான் கம்பு, இதற்கென்று தேர்தல் சமயத்திலோ, எம்ஜி ஆர் படம் ரிலீஸாகிற சமயத்திலோ கடை கடையாய் காவடி எடுப்போம்.) அதை அடியென்று அடித்து தூசியைத் தட்டுவார்கள்.ராத்திரி பத்து மணி சுமாருக்கு பஜார் பூராவும் இந்த பொடீத் தூசி நிறைந்திருக்கும். சிப்பந்திகள் தங்கள், சினந்தீருகிற வரை பாயை அடிப்பார்கள்.`ஏய் பிரமநாயகம் பிள்ளை கடைப் பாயா, தூசியே இல்லையே’ என்று கிட்டப்பா கேலிசெய்வார்.அப்படியென்றால் அந்தக் கடையில் வியாபாரமே இல்லை என்று அர்த்தம்.`பி’-பிள்ளை முனிசிபாலிட்டிக்கு காங்கிரஸ்ஸில் நின்று எங்கள் வார்டில் தோற்றவர்.அப்புறம் அவரே கட்சி மாறி, அடுத்த முறை சுதந்திராக் கட்சியில் நின்று எங்கள் உதவியால் ஜெயித்தார்.(அது கூட்டணி தர்மம் !)சுயம் வரம் குறுங்காவியத்தில் பாய்த் தூசிக்குப் பயந்து/ பகலில் வராத நட்சத்திரங்கள் இரவிலும் வருவதில்லை என்கிற மாதிரி எழுதி இருப்பேன்.
அப்புறம் பாயெல்லாம் போய் லினோலியம் விரிப்புகள் வந்து விட்டன.கூலக் கடை பஜாரில் நகைக் கடையை விட பட்டறைகள் தான் அதிகம்.தெரு ஆரம்பத்த்தில் நாலைந்து நகைக் கடைகள் உண்டு.பட்டறைகளிலிருந்து உமி கருகுகிற வாசனை, வந்து கொண்டிருக்கும்.பாதித் தெரு தாண்டும் போது சுகமாய் சர்க்கரைப் பாகு உருகுகிற வாசனை வரும்.அமிர்த விலாஸ் கடலைமிட்டாய்க் கம்பெனி.ஆனால் அதற்குப் போக வேண்டுமானால், மூத்திர சந்து வழியாக போக வேண்டும்.அந்த மூத்திரச் சந்தில்தான் தங்கம் மூஸ் போடுகிற ஒரு சேட் இருந்தார்.
அப்பா தந்த பழைய ராஜா தலை நாணயத்தை கோபாலிடம் கொண்டு போய்க் கொடுத்து ஏதாவது பெயருமா பார் என்றேன்.ஒருவரும் எடுக்கவில்லை, அது கள்ளத் துட்டு என்றார்கள்.. பொசுக்கென்று போய் விட்டது.கோபால் முயற்சியைக் கை விடவில்லை.வா சேட்டு ஒருத்தர் இருக்கார், அவர்ட்ட கேட்டுப் பார்ப்போம், அட் லீஸ்ட் அவன் மருமகளையாவது பார்ப்போம், குட்டி சோக்கா இருப்பா என்றான்.நாங்கள் போன போது சேட்டு ஒரு கண்ணாடிக் குடுவையில் ஏதோ அமிலங்களை விட்டு தங்கத்திலிருந்து பித்ததளை, செம்பு ஆகியவற்றைப் பிரித்துக் கொண்டிருந்தான். குறுகிய வாசல் வழியாக நான் தான் முதலில் போனேன்.ஜாவ் ஜாவ் என்று விரட்டினான்.குடுவை அருகே இருந்த சாமான்களையெல்லாம் அவசர அவசரமாக தள்ளி வைத்தான்.பெரிய கோபால், தள்ளிக்கோ என்று என்னிடம் சொல்லி விட்டு, முன்னால் வந்தான். அவனைப் பார்த்ததும் சற்று
அடங்கினான் சேட்டு. அவனிடம் ஒரு ரூபாய் நாணயத்தைத் தந்தான், கோபால்.என்னா வேணும் செட்டியாரே என்றான், சேட். இது எவ்வளவு போகும் என்றான். அவன் கையில் வாங்காமலெயே சொல்லிவிட்டான், இதூ கவுண்டர் பீட் துட்டு என்று.அன்றுதான் கள்ள நோட்டுக்கு அதுதான் ஆங்கிலம் என்று தெரிந்தது.இதையா இவ்வளவு காலம் அப்பா போற்றிப் பாது காத்தார் என்று நினைத்துக் கொண்டு திரும்பும் போது, சேட் மருமகள் வீட்டுக்குள்ளிருந்து முற்றத்துப் பமபில் தண்ணீர் எடுக்க வந்தாள்.குஜராத்தி அழகு, அழுக்கு உடுப்புகளை மீறி கண்ணைப் பறித்தது.இடுப்பு மடிப்பு,கோதுமை மாவை உருட்டி வைத்த மாதிரி இருந்தது.அவளை எச்சி ஒழுகாத குறையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.கோபால் ஏய், போறுண்டா(போதும்டா) என்றான் ரகசியமாக, வாசலில் இறங்கும் முன் அரே செட்டியாரே அதைக் குடு பாப்போம், என்று திரும்ப அழைத்தான் சேட்.வாங்கி வெள்ளைச் சுவரில் நாலைந்து இடத்தில் தேய்த்தான், ஒரு இடத்தில் கரிக் கோடாய் இழுத்தது.தலையை தனக்குத்தானே ஆட்டிக் கொண்டு, செட்டியாரே பாதி விலை தரவா என்றான். அப்படின்னா என்றேன் நான், அரே `பனம் படுவல்’ தாரேன் என்றான்.ஏதும் விளங்காமல் கோபாலை ப் பார்த்தேன்.
நாலு ரூபாய் தருவானாம் என்றான்.சேட்டு `மூலம் படுவல்’ தாய்யா சேட்டு என்றான், கோபால்.தாவிங்காதிவிசம் சேத்துத்தாரேன் என்றான் சேட்டு. இன்னும் நாலணா தருவானாம், வாங்கிருவமா என்றான். சேரி என்றேன். நாலேகால் ரூபாய் தந்தான்.என்னப்பா இது, சேட்டு பாஷையா என்றேன்.இல்ல இது எங்க நகைக் கடை பஜார் பாஷை என்றான். `படுவல்’ என்றால் ரூபாய். கேவு என்றால் ஒன்று, ராயம் என்றால் இரண்டு,உத்திரம் என்றால் மூனு, பனம் படுவல் என்றால் நாலு ரூபாய். மூலம் என்றால் ஐந்து என்றான். அதற்கு மேல் எனக்கே தெரியாது என்றான்.தாவிங்காதிவிசம் என்றால் நாலணாவா என்றேன்.ஏல கடைகிட்ட, எங்க அண்ணன் கிட்ட வச்சு சொல்லீராத, கோவப் படுவான். என்றான்.
பஜாரில் பல குழூஉக் குறி. அதில் இது ஒன்று.ஒவ்வொரு கடைக்கும் ஒரு ஒன்பது எழுத்து வார்த்தை உண்டு.ஒவ்வொன்றும் தனி எழுத்து, ஒரே எழுத்து திரும்ப வராது,``குருணை அளந்து போடு’’ “கடவுள் துணை போதும்’’ என்று ஒன்பது எழுத்துகள் இருக்கும்.சைபர் எல்லாத்துக்கும் பொது. ஒரு பொருளின் அடக்க விலை 16 ரூபாய் என்றால் `கு ந்’ என்று எழுதியிருக்கும்.பதினெட்டு ரூபாய் சொல்லுவார்கள்.என்ன அண்ணாச்சி பானாச் சானா கடையில 15 ரூபாய் தானே சொன்னாங்கன்னா, சரி பதினாறு குடுங்க அதுக்கு குறஞ்சா கட்டாது என்பார்கள்.ஒரு மருந்துக்கடையின் குழூஉக் குறி, `rheumatis ’
ஆபிரகாம் ஓட்டல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மிலிடரி ஓட்டல். ரொட்டி சால்னா சூப்பரா இருக்கும் என்றார்கள்.. கூலக்கடை பஜாருக்கு எதிர்த்த கழுவேற்றி முடுக்கில் இருந்தது.நெல்லையப்பர் கோவிலின் மேற்குக் கோபுர வாசல் அது.அங்கே எங்கே கழு இருந்தது, அதில் யார் ஏற்றப் பட்டார்கள், அதெல்லாம் தெரியாது.ரெண்டு ரொட்டியும், மட்டன் சால்னாவும் 90 பைசா. கோபாலும் நானும் ஆபிரகாம் ஓட்டலுக்கு சாயந்தரம் போவது என்று முடிவு செய்து, ராத்திரி போனோம்.சாயந்தரமே அவன் கடைக்குப் போய் விட்டேன்.அவன் கடையில் அடிக்கடி ஒரு திராவிடக் கழகத்தொண்டர் தென் படுவார், அவரிடம் பேசுவது சுவாரஸ்யமாய் இருக்கும்.``திருவாவடு துறை, திருப் பனந்தாள்ன்னு மடம்ல்லாம் எதுக்கு வச்சு இருக்காங்கீய, அவ்வளவு சாமியாரும் நல்ல நெய்யுஞ்சோறும், தின்னு கொழுத்துப் போயிருக்கானே எதுக்கு, எல்லாரும் பொலி காளைங்க, உளா ஆள் போனா வெள்ய வர வழி தெரியாது, அப்படி மதில் மதிலா இருக்குமாம். என்பார். இந்த வல்லப விநாயகர்ங்கானே அவரு மடியில இருக்கிற பொன்னோட சூத்திலயாக்கும் தும்பிக்கைய வச்சு அடைச்சுக்கிட்டிருக்காரு.அவ அரக்கனா பெத்து உருகிப் போட்டுட்டு இருக்கா, முருகரு கொண்ணு மாளலை, அண்ணான்னு புள்ளையாரைக் கூப்பிட்டாரு
அவரு வந்து வல்லபைங்கிற அரக்கியோட `அதை’ ஒரே பொத்தா தும்பிக்கைய வச்சு,அடைச்சுட்டாரு.அதான் கந்த புராணம்.கந்தப் புராணத்தில கூட இந்தப் புழுகு இல்லையேன்னு சும்மாவா சொல்லுதாங்க.நான் பொய் சொல்றேன்னா, தம்பிகளா நாளைக்கே குறுக்குத் துறை ஆத்தில இருக்கற காவேரி மண்டபத்தில போய்ப் பாருங்க புள்ளையாரு எங்க தும்பிக்கைய வச்சுருக்காரு தெரியும்.அவர் அன்றும் பேசிக் கொண்டிருந்தார், கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஆபிரகாம் ஒட்டலுக்குப் போன போது அகதீசன் பார்சல் வாங்க நின்று கொண்டிருந்தான்.அவனுக்கு எப்படி இந்தக் கடை பற்றி தெரிந்தது, என்று யோசித்துக் கொண்டே, ஏல எங்க இங்க எப்படி வந்தே என்றேன். அப்பா ஆபீஸ் இங்க தானடா, என்றான்.இரண்டு நாளைக்கு முந்திதான், கால்ப் பரீட்சை லீவு விட்டார்கள். கடைசிப்பரீட்சை இந்தி. சீக்கிரமாய், கேள்வியையே பேப்பரில் எழுதி வைத்து விட்டு,இரண்டு பேரும் ஒன்றாய் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.பெரிய கோயிலில், நெல்லையப்பர் சாமி கோயில் கிழக்கு நடை திறந்திருந்தது.மணி மூனரை வாக்கில் தான் இருக்கும். கோயில் உள்ளே கூடிப் போயிருவமா என்றேன், அவன் செருப்புப் போட்டிருந்தான். நான் கோயிலைப் பார்த்ததில்லை, போவோம் என்று செருப்பை கழற்றி நைசாக புத்தகப் பைக்குள் வைத்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தோம்.சாமி கோயில் வாசல் வழியாகப் போனோம். கோயில் உள் நடை முழுதாகத் திறக்கவில்லை, உள்ளிருந்து மூங்கில் குருத்தாக வெட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தாகள்.பாராக்காரர், நல்ல உயரமான மூங்கிலாகத் தேர்ந்தெடுத்து வவ்வால் விரட்ட உதவும் என்று எடுத்து வைத்துக் கொண்டார், மற்றவற்றை வெளியே கொண்டு சென்றார்கள். கோயில் நடை ஏன் திறக்க வில்லை என்று விசாரித்த போது, அதுக்கு நேரமிருக்கு என்று சொன்னார்கள்.நெல்லையப்பர் சன்னதிக்குப் பின்னால், தல விருட்சமான் மூங்கில் மரம் புதராய் இருந்தது. அது உயரமாய் வளர்வதற்குத் தோதுவாய் கோயில் விதானத்தில் ஒரு சதுரத் தொண்டு இருக்கும். அதை நெருக்கி மரம் வளர்ந்து விட்டால் அதை சற்று வெட்டுவார்கள். இதெல்லாம் பின்னால் தெரிந்து கொண்டவை.சரி மேலக் கோபுர வாசல் வழியாகப் போவோம் என்று போன போது அது திறக்கவே இல்லை.சரி அம்மன் சன்னதி வழியாக... அதுவும் திறக்கவில்லை.வந்த வழியே போய் விட வேண்டியது தான் என்று கிழக்கே போனால் கதவை அடைத்து விட்டார்கள். கோயிலுக்குள் மாட்டிக் கொண்டோம்.பயமாயிருந்தது.என்னை விட அகதீசன் அதிகமாகப் பயந்தான்.சோம வார மண்டபத்தின் சிலைகள் அழகாயிருக்கும், அதற்குள் அவனைக் கூட்டிப் போனேன். காரு குறிச்சி அருணாசலம் கச்சேரி இங்குதான் நடந்தது.கொஞ்சும் சலங்கை வந்த புதிதில் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் கேட்கிற மன நிலையில் இல்லை.
நேரமாச்சு அம்மாவைப் பார்க்கனும் என்றான்.ஏம்ல அம்மாவைத் தேடுதே என்றேன்.இல்லடா அம்மாவுக்கு உடம்பு சரி கிடையாது, அம்மாவுக்கு கிறுக்குடா, என்றான் சொல்லும் போது அழுகை வந்தது.அப்பாரு மருந்தரைக்கிற குழவி இருக்குல்லாடா அதை வச்சு அம்மாவை அடிச்சுட்டாரு, அதில்ல இருந்து கிறுக்காயிட்டு.அப்பாவைப் போய் பார்த்தா அவரு ஏதாச்சும் வாங்கித் தருவாரு அதைக் கொண்டு போய் அம்மாக்கு கொடுக்கணும்.பைத்தியங்கள்ளாம் சீக்கிரம் சாகாது தெரியுமாடா என்றான்.
பேசிக் கொண்டே யானை கட்டும் இடம், வடக்கு கோபுர வாசல் அருகே, வந்திருந்தோம். யானைக் காரர் எப்படி உள்ள வந்தீங்க என்றார்.சொன்னோம். அவர் கையில் வாட்ச் கட்டி இருந்தார். மணிக்கட்டின் உள்ப்புறமாகக் கட்டி இருந்தார், கையைத் திருப்பி பார்த்தார், இப்ப திறந்திருவாங்க நீங்க முன்னால போங்க என்றார். சொல்லி விட்டு கோயில் மதிலின் ஓரமாகப் போனார், நாங்கள் போகாமலிருப்பதைப் பார்த்து விட்டு, போங்கடேங்கறேன் என்று விரட்டினார். ஏலே என்னமோ செய்யப் போறாருல என்றேன் அகதீசன் சிரித்தான்.சன்னதிக்குள்ளிருந்து அருமையான நாதஸ்வரம் கேட்டது.`தொறந்தாச்சுல’ என்று முன்பக்கம், வந்தோம்.அகதீசன் உள்ள போவமா நான் சாமியப் பாத்ததில்ல என்றான். போனோம். உள்ளே போகப் போக நாதஸ்வரம் அற்புதமாக நெருங்கி வந்தது.கோயிலில் வேறு ஆளே இல்லை.அந்த இசைக்காகவே கோயிலின் அமைப்பு அப்படி இருக்கோ என்று தோன்றியது.
சின்ன சுப்பையா கம்பர் தனியாக நெல்லையப்பர் முன்னால் வாசித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் பிரபலமாகிக் கொண்டிருந்தார்.எங்கள் தெருவில் சங்கர பாண்டியன் தங்கை கல்யாணத்திற்கு வாசித்தார்.தெருவில் காட்டுக் கத்து கத்தி பேசிக் கொண்டிருந்த, நாங்களே கல்யாண வீட்டுக்குப் போய் உட்கார்ந்து கேட்டோம்.`பீஸ் சால் பாத்’ படத்தின் ஃபேமசான லதாவின் பாடலை வாசித்தார் அற்புதமாக இருந்தது. நாங்கள் ஒன்ஸ் மோர் கேட்டோம்.அவர் நெல்லையப்பர் கோயிலின் ஆஸ்தான வித்வானாக ஆகியிருந்தார்.அதனால் தானோ என்னவோ சன்னதி முன்னால் வாசித்துக் கொண்டிருந்தார்.அகதீசன் கண்ணை மூடி அழுது கொண்டிருந்தான், கை கூப்பிய படி.நான் கமபரையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தேன். கம்பர் சிரித்தார், வாசித்துக் கொண்டே. `.மலர்ந்தும் மலராத பாதி மலர் போல... ’சினிமாப்பாட்டின் சாயல் தென்பட்டது.இதே போல் அவரும் நானும் இதே சன்னதி முன்னால் நின்று கொண்டிருந்தோம்., பின்னொரு நாளில். அப்போது அவர் பக்க வாதத்திலிருந்து மீண்டு வந்த சமயம். அப்போதும் வாசித்துக் கொண்டிருந்தார்.அது ரொம்ப காலத்திற்குப் பின்.
நாங்கள் அடுத்த பிரகாரத்துக்கு வந்தோம்.இப்போது மூங்கில் அருகே வந்திருந்தோம்.இங்க இருந்துதான் மூங்கில வெட்டிட்டுப் போறாங்களா என்றான். ஆமா என்றேன். சுற்றி வந்து சஹஸ்ர லிங்கம் பக்கத்தில் வந்தோம் இது என்ன தெரியுமாலே, இதுல லிங்கத்தோட உடம்பு பூரா பொம்பளையோட இது வரைஞ்சிருக்கும் என்றேன் ,அவன் ச்சேய் என்றான்.அப்புறம் நான் நெடு நேரம் பேசவே இல்லை.கோயிலைச் சுற்றி வந்து ஏன் இந்தக் கோயிலில் தெற்குப் பக்கம் வாசலே இல்லை என்றான். இருக்குடா, அதுக்கு ஆயிரங்கால் மண்டபம் வழியாத்தான் போக முடியும்.அதை திருக்கல்யாணத்துக்கு மட்டும்தான் திறப்பாங்க என்றேன்.என்ன நினைத்துக் கொண்டானோ வாடா வெளிய போவோம் அப்பாரு வைவாரு என்றான்.மேல வாசல் வழியாக வந்து கழுவேற்றி முடுக்கு வழியாக மேல ரதவீதிக்குள் நுழைந்தோம்.ரத வீதி களை கட்டி இருந்தது.

Visitors