Wednesday, August 19, 2015

செய்கூலி, சேதாரம், சினிமாக் கம்பெனிகள்




செய்கூலி, சேதாரம், சினிமாக் கம்பெனிகள்
இரண்டாம் வகுப்பு படிக்கிற என்னையும்,மூன்றாம் வகுப்பு படிக்கிற  அக்காவையும் உடன் அழைத்துக் கொண்டு அம்மா, அப்பா தவசுப்பிள்ளை பழனி ஆகியோருடன் ஆசாரிப்பள்ளம் மிஷன் ஆஸ்பத்திரியில் இரண்டு, மூன்று மாதம் தங்கியிருந்தோம், உறவினர் ஒருவரின் சிகிச்சைக்காக. ஆறு வயது எனக்கு.எங்களை ஊரில்,அண்ணன்கள் பொறுப்பில் விட்டுச் செல்ல அப்பாவுக்கு இஷ்டமில்லை. இரண்டு மாதங்கள் பள்ளிக் கூடத்திற்கு லீவு. பள்ளிக் கூடத்தில், ரெண்டு மாசம் லீவு எடுத்தேன்னா பாடம் மண்ணாப் போயிருமெலெ, என்ற ஹெட் மாஸ்டர் அம்மாவின் ஏச்சு அப்பாவைப் பார்த்த உடன் மாறி விட்டது. ஸ்கூல் பெயர் சி.எம்.எஸ் எலிமெண்டரி ஸ்கூல் என்றிருந்தாலும், அது சுவரில் சிமெண்டால் தடித்த எழுத்துகளால் பொறிக்கப் பட்டிருந்தாலும், கூப்பிடுகிறதென்னவோ குட்டை வாத்தியார் பள்ளிக்கூடம்தான். எந்தக் காலத்தில் எந்த வாத்தியார் குட்டையாக இருந்தாரோ தெரியவில்லை. இந்த ஹெட் மாஸ்டர் அம்மா உயரமானவர்தான்.ஹெட் மிஸ்ட்ரெஸ் என்று சொல்கிற பழக்கமெல்லாம் கிடையாது.வாத்தியாராய்யா என்றால் சார், வாத்தியாரம்மா என்றால் ‘அம்மாங்க’ .இது அஞ்சாப்பு அம்மாங்க. அவங்க கண்டிப்பானவங்க. தலை சீவாமல் வந்த ஒரு பெண் குழந்தையின் தலையில், சொல்லிச் சொல்லிக் கேட்காதததால் மண்ணெண்னையையோ வேப்பெண்ணையையோ தேய்த்து விட அது கொஞ்சம் பிரச்னையாகி விட்ட்து அப்பாதான் அஞ்சாப்பு ‘அம்மாங்கவைக் காப்பாத்தி விட்டார்கள்.அதனால் அப்பாவைப் பார்த்ததும்அவன் ஸ்கூலுக்கே வரல்லேன்னாலும் பாஸாயிருவானே ‘ என்று பேச்சையே மாற்றி விட்டார்கள். இப்படீ உசுப்பேத்தி உசுப்பேத்தி எவ்வளவு இழந்து இருக்கிறேன் என்று சமயத்தில் யோசித்தால் கஷ்டமாக இருக்கும்.
     அது ஆகஸ்ட் மாசமாக இருக்கும். சட்டி பெட்டிகளுடன் கிளம்பினோம். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி நாகர் கோயிலில் இருந்து பத்து மைல் தூரமாவது இருக்கும். வேப்பமூடு ஜங்ஷனிலிருந்து போகவும் வரவும்  ஒரே பஸ்தானென்று நினைவு. ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் டச்சுக் காரரோ என்னவோ. அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் ‘சின்ன டாக்டர்’.அது என்ன மிஷனரி என்று மறந்து விட்டது.ஆனால் கறுப்பு அங்கி அணிந்திருப்பார்,ஃபாதர். ஃபாதரை ‘ஐய்யர்என்று அழைப்பதுதான் திருநெல்வேலி வழக்கம். இவருக்கு கறுப்பு ஐயர் என்று பெயர் வைத்தோம் நானும் அக்காவும். அவர் வேகமாக நடப்பார். எதிரில் வரும் யாரையும் பார்க்க மாட்டார்.வணங்கினால் பார்க்காமலே வணக்கம் மட்டும் போடுவார். இதெல்லாம் நமக்கான விஷயமில்லை. மதியம் பனிரண்டரை மணி வாக்கில் நாகர்கோயில் போகிற பஸ் ஒன்று வரும். அது ஆஸ்பத்திரியின் பிரம்மாண்ட  வளாகத்தின் நுழைவு வாயில் அருகே நிற்கும். அங்கிருந்து ஆஸ்பத்திரியும் நாங்கள் தங்கியிருக்கும் Pay ward –க்கும் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். வாரத்தில் இரண்டு நாளாவது அப்பாவுடன் நாகர்கோயில் போய் விடுவேன். மருந்து வாங்க,வீட்டுச் சாமான்கள் வாங்க அப்பாவும் நானும் போவோம். நாகர் கோயில் போகிற போது புதுப்படம் வந்திருந்தால் மாட்னி போய் விடுவோம். அப்பாவுக்கு திருநெல்வேலியின் சினிமா கம்பெனிகளான ‘இந்தியா டாக்கி டிஸ்ட்ரீயூட்டர்ஸ்,பாப்புலர் டாக்கீஸ்,எஸ்.கே எல்லோரும் பழக்கம். பாப்புலர் டாக்கீஸில் கொஞ்சம் பங்கு இருந்ததாகச் சொல்வார்கள். அதே பழக்கத்தில் அங்கும் பயனியர் பிக்சர் பாலஸ்,  லக்ஷ்மி,  ஒழுகினசேரி சரஸ்வதி என்று பல தியேட்டரிலும் முதலாளிகளோ, விநியோகஸ்தரின் ‘ரெப்ரசெண்டேட்டிவோதெரிந்தவர்களாக இருப்பார்கள்.
     நல்ல மதியம் தகரக் கொட்டகை வெக்கையைக் கக்க  உடலெல்லாம் வியர்த்து ஊத்த ‘தாய்க்குப்பின் தாரம்பார்த்தோம்.அன்றுதான் படம் ரிலீஸ்.முதலில் எம்.ஜி.ஆர் ரேக்ளாவில் ‘மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே.. என்று பாடியபடி வருகிற காட்சி நினைவுக்கு வருகிறது. ‘தம்பிப்பயலேஎன்ற வார்த்தை சிரிப்பையும் எம்.ஜி.ஆர் மேல் ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணிய உணர்வு கூடப் பசுமையாய் இருக்கிறது. அதையே பாடிக் கொண்டு திரிந்ததாக பக்கத்து வார்டில் உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள்.  அது போதாதென்று தனியாக, தனக்குத்தானே, தாழ்வான புன்னை மரக்கிளையொன்றைப் பிடித்துக் கொண்டு மாட்டை அடக்குவதாக நடிப்பதையும் கூடக் கேலி செய்வார்கள். குறிப்பாக ‘சின்னடாக்டர். அவரது குடும்பத்துடன் பழகியபின் எல்லோருமாக, மாலை ஆறு மணிக் காட்சிக்கு ‘பயனியர் பிக்சர் பாலஸில் குலதெய்வம் படம் போனோம்.பஸ் கிடைத்து போவதற்குள் படம் போட்டு விட்டார்கள். சீட்டுகளில் கயிறு கட்டி ரிசர்வ் செய்து வைத்திருந்தார்கள். அந்தப்படம் அப்பாவின் நண்பரான எஸ்.கே பிக்சர்ஸ் படம். ஏவிஎம் இணைத் தயாரிப்பு. ஹாலிவுட் கம்பெனிகளான எம்.ஜி.எம், டுவெண்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் போல,ஏ.வி.எம் நிறுவனம் எஸ்.கே பிக்சர்ஸ்,புத்தா பிக்சர்ஸ்,கமால் பிரதர்ஸ் ஆகியோருடன் படம் தயாரிப்பார்கள்.புத்தா பிக்சர்ஸ் பீம்சிங் கம்பெனி. என்றாலும் ஏ.வி.எம் மின்  பின்னணியும் இருக்கும், அவற்றை அங்கே எடிட்டிங்கில் பணியாற்றிய பீம்சிங் இயக்கினார். எஸ்.கே.பிக்சர்ஸ் ‘குலதெய்வம் படத்தை கிருஷ்ணன் பஞ்சுவும், ‘பொன்னு விளையும் பூமிபடத்தை பீம்சிங்கும் இயக்கினர்.    
நாகர்கோயில் காலத்தில் பாசவலை, வான ரதம் இரண்டும் பார்த்த நினைவும் இருக்கிறது.இரண்டும் அப்படியொரு சோகம். படம் பிடிக்கவில்லை. வான ரதம் பார்க்கையில் அமைதியாய் அழுது கொண்டிருந்தேன்.தற்செயலாகக் கவனித்த அப்பா,அடப்பைத்தியாரா படம் புடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானலே, என்று அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். தியேட்டர் மானேஜரோ யாரோ, நான் அழுவதைப் பார்த்து விட்டு கலரெல்லாம் வாங்கிக் கொடுத்தார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், என் நடுவுள்ள அண்ணன், பெயர் சீனி அண்ணன்,சினிமா அண்ணன் என்று சொல்லலாம்,அவரிடம் கற்றதுதான் சினிமா அறிவெல்லாம்,  எங்களைப் பார்க்க வந்திருந்தவர் அங்குள்ள போஸ்ட்மேன் நடராஜன் என்பவருடன் நன்றாகப் பழகி விட்டார்.இருவரும் வான ரதம் பார்க்கக் கிளம்பினார்கள். அவர், நௌஷத் படம்  மியூசிக் பாட்டு எல்லாம் பிரமாதம் என்று சொல்லிப் போஸ்ட் மேனைக் கிளப்பிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தியேட்டர்காரர்கள் எழுதும் தட்டி விளம்பரங்களில், இந்திப் படத்தின் நடிக நடிகையர் பெயரை எழுதுகிறார்களோ இல்லையோ இசை: ஓபி.நய்யார், நௌஷத், சங்கர்-ஜெய்கிஷன், சித்ரகுப்தா, சி.ராமச்சந்திரா என்று தவறாமல் எழுதுவார்கள். அண்ணனுடன் நானும் வருவேன் என்று அழுதேன். அப்பா முதலில் சத்தம் போட்டுப் பார்த்தார், அப்புறம் கண்டிப்பாக ஒரே வார்த்தையில் நாளைக்கு ‘ரங்கோன் ராதாபோகலாண்டா என்று சொல்லி விட்டு மதியத் தூக்கத்திற்குக் கிளம்பி விட்டார். வீட்டில் இருந்தால் அப்பா நிச்சயம் மத்தியானம் ஒரு மணி நேரமாவது தூங்குவார். அப்போது எழுப்பினாலோ இடைஞ்சல் செய்தாலோ ‘சண்டாளமாய்க் கோபம் வந்து விடும். அதனால் நான் முரண்டு அழுகையை நிறுத்தி விட்டு புன்னை மரத்தடியில் போய் மாட்டுச் சண்டையைத் தொடர ஆரம்பித்து விட்டேன். பிற்காலத்தில் கடன்காரர்கள் தேடி வரும்போது கூட அப்பாவின் மதியத் தூக்க நேரத்திற்கு வரமாட்டார்கள். அவ்வளவு பிரசித்தம் ‘பண்ணையாரின் தூக்கம்’.
     ரங்கோன் ராதா, ‘நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி பெருமாள் செட்டியார் தயாரித்தது.ஏ.வி.எம் பின்னணி உண்டா நினைவில்லை. நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி ஏ.வி.எம் பின்னணியுடன் வந்தது. ஏ.வி.எம் கூட்டுத் தயாரிப்பு அல்லது தயாரித்துக் கொடுத்த படங்கள்,கம்பெனிகள் நிறைய உண்டு. கலைஞர்கள், ஸ்டுடியோ, விநியோகம் எல்லாம் ஏ.வி.எம். பார்த்துக் கொள்வார்கள். அப்படி வெளி வந்தவை, நேஷனல் பிக்சர்சுக்காக- பராசக்தி,ரத்தக்கண்ணீர்.கமால்பிரதர்ஸுக்காக - தெய்வப்பிறவி, புதையல், வாழ்க்கை வாழ்வதற்கே. ஜி.கே.புரொடக்‌ஷன்ஸுக்காக-சகோதரி, பார்த்தால் பசி தீரும்.- எஸ்.கே பிக்சர்சுக்காக குலதெய்வம்,பொன்னு விளையும் பூமி, புத்தா பிக்சர்ஸுக்க்காக பதி பக்தி,பாவமன்னிப்பு. பின்னால் ஜேயார் மூவீசுக்காக முத்து வேல்மூவிஸ் பேனரில்- அனாதை ஆனந்தன், கண்மணி ராஜா..போன்றவை. வேறு எந்த நிறுவனமும் இவ்வளவு தயாரித்ததாக நினைவில்லை.ஏவிஎம் சகோதரர்கள் முருகன்,சரவணன், குமரன் ஆகியோர் முருகன் பிரதர்ஸ் என்று புதிய பேனர் உருவாக்கி வீரத்திருமகன்,நானும் ஒரு பெண், காக்கும்கரங்கள் என்று எடுத்தார்கள். அன்பேவா கூட பால சுப்ரமணியம் & கோ வழங்கும் ஏ.வி.எம் மின் அன்பே வா என்றே வெளி வந்தது.எம்.ஜி.ஆருக்கு அதற்காக 28 லட்சம் ஒரே பேமெண்ட்டாக பால சுப்ரமணியம் & கோ கொடுத்த்தாகப் பரவலாகப் பேச்சு அடி பட்டது.
     ஏவி.எம் நிறுவனத்தை விட அதிகம் படம் தயாரித்தது, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். 120 படங்கள் வரை தயாரித்தது.100 வது படமான கொஞ்சும் குமரி தயாரிக்கும் போதே அதிபர் டி.ஆர் சுந்தரம் இறந்து விட்டார். அந்தப் படத்தின் இடைவேளையின் போது ‘அவரது  இறுதி ஊர்வலம்நிகழ்ச்சியும்  அவரைப் பற்றிய சிறு டாகுமெண்டரியும் போடுவார்கள். இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டு சேலம் நகர மக்களுக்கு துயரத்துக்கிடையே மகிழ்ச்சியை வழங்கினார்கள். அந்த இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்காகவே கொஞ்சும்குமரியை-கதாநாயகன் மனோகர், கதாநாயகி மனோரமா- இடைவேளை வரை சகித்துக்கொண்டார்கள். படம் ஓடிய ஒன்றிரண்டு வாரங்களில் ரசிகர்களின் கட்டாயமான வேண்டுகோளுக்கேற்ப படம் ஆரம்பித்து இருபது நிமிடங்கள் கழித்து அந்த இறுதி ஊர்வலம் காட்டப்பட்டது. அதற்காகக் கூட கொஞ்சும் குமரியை ஒரு தரம் 20 நிமிடம் பார்த்து வந்தோம். அந்தக் கால ரசிகர்களின் சினிமாப் பாசம் மகாத்தானது. மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றிய எம்.ஏ.வேணு, எம்.ஏ.வி பிக்சர்ஸென்று ஆரம்பித்து ரத்னா ஸ்டுடியோவும் ஆரம்பித்து நிறையப் படங்கள் எடுத்தார். ஏ.பி.நாகராஜன்,டி.என்.சிவதாணு, கே.சோமு என்று தமிழரசுக்கழக அனுதாபிகளான ஒத்த மனதுடையோர் அங்கே இணைந்து நல்ல படங்களாக டவுன் பஸ், முதலாளி,சம்பூர்ண ராமாயணம் ,பணம்பந்தியிலே, செங்கமலத்தீவு என்றும் சிறுசிறு நடிகர்களான ஆனால் சிறந்த கலைஞர்களான வி.கோபாலகிருஷ்ண, சாரதா,சந்திரகாந்தா போன்றோரை வைத்து மாதவி,பாஞ்சாலி என்றும் பலபடங்கள் எடுத்தார்கள்.
     மிகப்பெரிய நிறுவனங்களான ஏ.வி.எம்,மாடர்ன் தியேட்டர்ஸ் இவையிரண்டைப் போலவே தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமானது ஜெமினி ஸ்டுடியோ. ஜெமினி தன் தயாரிப்புகள் தவிர வாசனின் மருமகனான ஜி.எஸ்.மணி தயாரிப்பில் ஜெம் புரொடக்‌ஷன்ஸ் படங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஜெமினியின் கதாசிரியர்களில் ஒருவரான – வஞ்சிக்கோட்டை வாலிபன்,ஆயிரத்தில் ஒருவன் ஆகியவற்றின் மூலக் கதையாசிரியர்- கே.ஜே.மகாதேவன் தயாரித்து இயக்கிய அவள் யார், ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார் போன்ற படங்களுக்கு ஜெமினி துணை நின்றது. அது போலவே மணிஜே சினி ப்ரொடக்‌ஷன்சுக்ககாக இருமலர்கள்,நீரும் நெருப்பும் ஆகியவற்றிற்கும் துணைநின்றது. ஜெமினி. உதயம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான ஆனந்த விகடன் மணியன் படங்களுக்கும் ஜெமினி உதவியது. கே.பாலசந்தரின் எதிர்நீச்சல் இருகோடுகள், வெள்ளி விழா போன்ற படங்களுக்கும் ஜெமினி விநியோகப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டது. ஏ.வி.எம்,ஜெமினி,மாடர்ன் தியேட்டர்ஸ் விநியோகத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.அவர்களின் பெரும்பாலான நகரின் வினியோக அலுவலகங்களின் மேனேஜர்கள் எல்லோருக்கும் ஒரு ‘புராணிக சாயல் இருக்கும். எல்லோருமே கம்பெனி ஆரம்பித்ததிலிருந்து இருப்பவர்கள்.
     ஏ.வி.எம்,ஜெமினி தவிர நிறைய ஸ்டுடியோ அதிபர்கள் அவர்கள் ஸ்டுடியோ பெயரிலேயே படங்கள் தயாரித்தனர். மெஜஸ்டிக் ஸ்டுடியோ( நாட்டுக்கொரு நல்லவள்)  (பின்னாளில் சாரதா/கற்பகம்) நரசு ஸ்டுடியோ( ஸ்ரீ வள்ளி,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை) என்று பல நிறுவனங்கள் படங்கள் தயாரித்தனர். ஏ.வி.எம்மிலிருந்து பிரிந்த வாசு மேனன் வாசு ஸ்டுடியோ என்று ஆரம்பித்து ஒரேவழி, கைராசி பூவும்பொட்டும் படங்கள் எடுத்தார். கே.சங்கர் இயக்குநராகப் பிரபலமானது கைராசியில்தான். குறிப்பாக ஏ.கே.வேலன் அருணாசலம் ஸ்டுடியோஸ் சார்பில் தை பிறந்தால் வழி பிறக்கும், காவேரியின் கணவன், பொன்னித் திருநாள்,பெரிய கோயில் என்று பலபடங்கள் தயாரித்தார். தமிழ் மீது பற்றுக் கொண்டவர். எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை எழுதி அவரிடம் எடுத்துக் கொண்டு போனாராம்.அவர் இந்தக் கதை சரியில்லை என்று சொல்லிவிட்டாராம். அதை எப்படியோ இந்திக்கு விற்று அங்கே ஜிக்ரி தோஸ்த்என்று சக்கைப்போடு போட்டு,மறுபடி இங்கே மாட்டுக்கார வேலன் ஆக வந்து வெள்ளி விழாக் கொண்டாடியது. எல்லாம் அவரவர் நேரம்.
     விஜயா ஸ்டுடியோவை வீனஸ் பிக்சர்ஸ் மற்றும் பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் குத்தகை எடுத்து தங்கள் படங்களை எடுத்தனர். விஜயா ஸ்டுடியோ நாகிரெட்டியும் சக்ரபாணியும் விஜயா ஃபிலிம்ஸ் என்ற பெயரிலும் விஜயா கம்பைன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பெயரிலும்,( எங்க வீட்டுப் பிள்ளை, எங்க வீட்டுப்பெண், ராம் அவுர் ஷ்யாம்,வாணி ராணி) பின்னர் டி.ராமாநாயுடுவுடன் சேர்ந்து விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் ஆக குழந்தைக்காக நம்ம குழந்தைகள், பிரம்மாண்டமாக வசந்த மாளிகை என்றெல்லாம் வந்தது. ராமாநாயுடு பின்னர் தனியாக சுரேஷ் கம்பைன்ஸ் என்று படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டார். ஸ்டுடியோ இல்லாமல் நிறையப் படங்கள் எடுத்தவர்கள் ஜூபிடர் பிக்சர்ஸ்,ஸ்ரீதர், வீனஸ் பிக்சர்ஸுடன் இணைந்து உத்தமபுத்திரன், கல்யாண பரிசு போன்ற படங்கள் எடுத்து விட்டு சித்ராலயா கம்பெனியை “அலைகடலில் சிறிய தோணி,கலை உலகில் புதிய பாணி” ( WE KNOW ART IS AN OCEAN.WE ROW FOR  NOVEL CREATION”  என்ற ‘முழக்கத்துடன்ஆரம்பித்தார். பல நல்ல படங்களையும் தந்தார். ஸ்ரீதருக்கு இணையாக கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ‘சித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ்என்று ஆரம்பித்து படங்கள் எடுத்தார்.கற்பகம் வெற்றிக்குப் பிறகு ஒரு பழைய ஸ்டுடியோவை (சாரதா ஸ்டுடியோ?) வாங்கி கற்பகம் ஸ்டுடியோ என்று பெயரிட்டார்.ஆனால் அந்தப் பேரில் படம் எடுக்கவில்லை.
1956 தாய்க்குப்பின் தாரம் படத்தின் மாபெரும் வெற்றியின்  மூலம் திரையுலகிற்குள்  வந்த சாண்டோ சின்னப்பா தேவர், தேவர் பிலிம்ஸ் பேனரில் படங்களாகக் குவித்தார். வருடத்திற்கு இரண்டு படம், வீதம் ஒன்று ஜனவரி பிப்ரவரி அறுவடை நாட்களை ஒட்டி,மற்றொன்று ஆகஸ்ட் செப்டம்பர் அறுவடை சீசனை ஒட்டி வெளியிடுவார். முதல்ப் படத்திலேயே எம்.ஜி.ஆரிடமிருந்து விலகி நீலமலைத் திருடன்- ரஞ்சன், செங்கோட்டைசிங்கம்,யானைப்பாகன் – கன்னட நடிகர் உதயகுமார் ( அசப்பில் சிவாஜி போலிருப்பார்) வாழ்வைத்த தெய்வம்-ஜெமினிகணேசன் என்று போனவர் ஐந்து வருடங்களுக்குப்பின் ‘தாய் சொல்லைத் தட்டாதேபடத்தில் மறுபடி எம்ஜி.ஆருடன் இணைந்து நல்லநேரம் வரை 15 படங்கள் அவர்தான் தேவர்பிலிம்ஸ் கதாநாயகன். தேவர் இந்திக்குப் போன பின் ஹாத்திமேரா சாத்தியில், அதுவரை தேவர் ஃபிலிம்ஸ் சின்னமாக இருந்த தா.பி. தாரம் காளை மாடு  யானையாக மாறியது. நல்ல வேளை ஆட்டுக்கார அலமேலுக்குப் பிறகு ஆடு வரவில்லை. வந்திருந்தால் கம்பெனி மூழ்கியிருக்காதோ என்னவோ. பீம்சிங் ஒரு எம்.ஜி.ஆர் படம்கூட இயக்கவில்லை . எம்.ஏ.திருமுகம் ஒரே ஒரு சிவாஜி படம்,தர்மராஜா இயக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர் அநேகமாக  எல்லா பேனரிலும் நடித்திருந்தாலும் சிவாஜி தேவர் ஃபிலிம்ஸ் படங்களில் நடிக்கவில்லை. இது இரண்டு ரசிகளுக்கிடையே நடக்கும் சண்டையில் பிரயோகிக்கப்படும் வார்த்தை ஆயுதங்கள். தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேரிலும் ஏகப்பட்ட படங்கள் எடுத்தார்.
ஏ.பி.என்  வி.கே ராமசாமியுடன் கூட்டணியாக லக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் மக்களைப்பெற்ற மகராசி, வடிவுக்கு வளைகாப்பு தயாரித்தவர், பின்னர் பிரிந்து விஜயலட்சுமிபிக்சர்ஸ் சார்பாக நவராத்திரி தொடங்கி சிவாஜியுடன் பத்து படங்கள் வரை எடுத்தார். அந்த பேனரில் எம்.ஜி.ஆரும் நடிக்கவில்லை. நவரத்னம் படம் கூட சி.என்.வி மூவிஸ் தயாரிப்பு. சித்ராலயா போலவே கே.பாலசந்தர், கவிதாலயா ஆரம்பித்தார்.60 படங்கள் வரை எடுத்தார். இன்னொரு வெற்றிகரமான தயாரிப்பாளர் இயக்குநர் இராம நாராயணன். தனியொருவராக 100 படங்களுக்கு மேல் எடுத்திருப்பார்.

இவர் போல ஓரிருவர்தான் சினிமாவில் செய்கூலி கிடைத்துச் சேதாரமாகமல் தப்பித்தவர்கள் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லோருமே சேதாரமுற்று தங்கள் இருப்பையே நகை பாலீஷ் போட வந்தவர்களிடம் ஏமாந்து தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். நான் கூட சினிமா அண்ணன் என்கிற சீனி அண்ணனைத் தொலைத்து விட்டு நிற்கிறவன்தான்.

No comments:

Visitors