Wednesday, April 3, 2013

நன்றி: காட்சிப்பிழை, ஏப்ரல் 2013.இதழ்

                                          எம்.ஜி.ஆர். : புகைப்படம் தீரஜ் சௌடா


மாரிவரும் சினிமா இதழ்கள்...
                தவக்களை மாரிக்கு எங்கள் தெரு கிடையாது.பக்கத்தில் அரசடிப் பாலத் தெரு. அங்கே, தெரு முனையில் அரசமரம், பிள்ளையார், அருகில் அழகான வாய்க்கால், அதன்மேல் ஒரு பாலம். அவன் ஐந்தோ ஆறோ படித்திருந்தான்.மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம்.முதலில் ஒரு கடையில் வேலைக்கு நின்றான். அப்புறமாய் அவனே காய் கறி வாங்கி கூறு கட்டி வைத்து வியாபாரம் செய்வான்.காலையில் நாலு மணிக்கு காய்கறி லாரி வரும் போது மார்க்கெட்டுக்குப் போய் விடுவான். ஐந்து, ஐந்தரை மணிக்கெல்லாம்,மார்க்கெட் சுறு சுறுப்படையும் நேரம், நான்கு சாக்குகளை நனைத்து, நன்றாக விரித்துக் காய்களைக் கூறு போட்டு வைப்பான்.அநேகமாக கத்திரிக்காய்க் கூறுதான் வைப்பான். சில நாளில் வாழைக்காயோ வெண்டைக்காயோ ஏதாவது ஒரு பச்சைக் காயைக் கூறு கட்டி வைத்திருப்பான்.ஒரு கூறு பத்து நயாப்பைசா. ஒரு கூறு என்பதில் தாராளமாய் கால்க் கிலோ காய்கள் இருக்கும்.தேர்வு செய்து எடுக்க முடியாது.அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டியதுதான்.நான் போனால் நல்ல கூறாக அவனே அள்ளித் தருவான்.ஏதாவது சொத்தைக்காய் இருந்தால் மாற்றி விடுவான்    
பத்து மணிக்கு வியாபாரம் முடிந்து விடும்.அப்புறம் நாள் பூராவும் அவன் வசம் தான். எங்கள் தெரு வழியாகத்தான் அவன் வீட்டுக்குத் திரும்புவான். அன்று விடுமுறையாயிருந்தால் தெருவில்  நாங்கள் அந்தப் பருவத்திற்கான விளையாட்டை, செல்லாங்குச்சி என்கிற குச்சிக் கம்பு, பம்பரம்,கோலிக்காய், என்று ஏதாவது விளையாடிக் கொண்டிருப்போம். இந்தப் பருவ காலங்கள் மாறி வருவது போல விளையாட்டும் மாறி மாறி வரும். நேற்று வரை குச்சிக் கம்பால் அமளி துமளிப் பட்டுக் கொண்டிருந்த தெருவில், இன்று அமைதியாய் கோலிக்காய் விளையாட்டு ஆரம்பித்திருக்கும்.அநேகமாய் அது மழைக்காலமாய் இருக்கும். அதுதான் கோலிக்காய் விளையாடுவதற்குக் குழி தோண்டச் சௌகரியமாய் இருக்கும்.இந்த விளையாட்டுக்கள் எப்படி மாறுகிறது என்பது ஒரு புதிர். திடீரென்று அக்காக் குருவி கூவ ஆரம்பிப்பது போல புது விளையாட்டு முளைத்திருக்கும் தெருவில். குச்சிகம்புகள் பரணுக்குப் போய் விட. கோலிக்காய்களை தங்கள் பிரத்தியேக மறைவிடத்தில் இருந்து எடுத்து வருவார்கள் பிள்ளைகள்.அது முடிந்தால் கோலிக்காய் ஒளிந்து கொள்ள பம்பரங்கள் வெளி வரும். பழைய பம்பரமென்றால் அதற்கு ஆணி நிமிர்த்த,புதுப் பம்பரமென்றால்,கம்பெனி ஆணியை எடுத்து விட்டு,புதிய ஆணி மாற்ற என்று மும்முரமாய் இயங்கும். இந்த நடைமுறை எல்லாத் தெருப் பிள்ளைகளுக்கும் பொது.எந்தத் தெருவில் இந்தப் புதிய நடை முறை முதலில் ஆரம்பிக்கிறது, அதை யார் தன் தெருவுக்கு அறிமுகம் செய்கிறார்கள் என்பது ஒரு அகழ்வாராய்ச்சியை விட  சுவாரஸ்யமான விஷயம். தவக்களை மாரி கொஞ்ச நேரம் எங்கள் தெருவில் நின்று விளையாடி விட்டுப் போவான். அவன் நன்றாகவே விளையாடுவான். இருந்தாலும் அவனை எப்படியாவது தோற்கடிக்க எங்கள் தெருப் பையன்கள் கூட்டணி போட்டுக் கொள்வோம்.குச்சிக்கம்பு விளையாட்டென்றால் அவன் தான் கவுண்டி போட நேரிடும்.கோலிக்காய் என்றால் குத்து விடுவது போல் (fist)  விரல்களை மடக்கி வைத்துக் கொண்டு  விரல்களால் அல்லது ‘மொளியால் கோலிக்காயை, குறிப்பிட்ட தூரத்தில் இருந்து தள்ளிக் கொண்டு வந்து குழிக்குள் போட வேண்டும் இதற்கு ‘பியூரிட்டிஎன்று பெயர்.பத்து பியூரிட்டி, இருபது பியூரிட்டி என்று பந்தயம் வைத்து விளையாடுவோம். விரல்களில் தொலி பிய்ந்து ரத்தம் வந்து விடும்.பம்பரமென்றால் பரவாயில்லை. ஆக்கர் குத்து வாங்கி பம்பரம்தான் உடையும். மாரிதான் எப்போதும் பலியாவான்.ஆனால் ‘இதெல்லாம் சகஜம்டா என்று, கை சூம்ப ஆரம்பித்து விடுவான்.
மாரி அந்தப் பதிமூன்று பதினாலு வயசிலும் கை சூம்புவான்.மார்க்கெட்டில் இருக்கையில் மட்டும் மாட்டான்.கை சூம்பும் போது இடது கையால் இடது சட்டைக் காலரைப் பிடித்துக் கொள்வான்.கை சூம்புவதாலேயே அவன் கன்னம் உப்பி தவக்களை போலிருக்கும். மாரியும் நானும் சினிமா ஃபிலிம்களை மாற்றிக் கொள்வோம்.மூன்று பைசாவுக்கு ஐந்து ஃபிலிம்களை தாளில் பொதிந்து அட்டையில் ஒட்டி வைத்திருப்பார்கள்.அதை வாங்கி வந்து சினிமா படம் போட்டு விளையாடுவோம்.அவனுக்கு, குண்டு பல்பின் மேலே இருக்கும் அரக்கு சீலை உடைத்து அதை ஒரு குடுவை போல் ஆக்கியதைக் கொடுத்திருந்தேன். அதனுள் தண்ணீர் நிரப்பினால். அது ஒரு ‘லென்ஸ்ஆக மாறி விடும்.அதை வைத்து சினிமா காட்டினால் நிஜ சினிமாத் திரை அளவுக்குப் பெரிதாக இருக்கும்.ஆனால் கனவு சீன் பார்ப்பது போல அங்கங்கே நீர்க்குமிழிகள் நீந்தும்.
இது தவிர மாரி எப்போதாவது மாட்னி ஷோ பார்க்க என்னை அழைத்துப் போவான்.அவன் அலப்பரைகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.நீதிக்குப் பின் பாசம் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆர் சைக்கிள் சொல்லிக் கொடுக்கும் காட்சி,திடீரென்று சத்தமாக,ஏய், இதுல டைரக்‌ஷன் கோட்டை விட்டுருக்கான் பாத்தியா...என்றான். ஏதோ உளறப் போகிறான் என்பதால் நான் என்ன என்று கேட்கவில்லை.பக்கத்தில் இருந்தவர் என்ன தம்பி என்றார். மாரி, “தர்மம் தலை காக்கும் படத்திலேயே சரோஜா தேவி சைக்கிள் ஓட்டி பாட்டெல்லாம் பாடுவா தெரியுமா...அது வந்த ஆறு மாசமாச்சுல்லாலே “ என்றான்.கேள்வி கேட்டவர் சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தார். மாரி கை சூம்ப ஆரம்பித்திருந்தான்.களத்தூர் கண்ணம்மா அவனுக்கு ரொம்பப் பிடித்த படம். குட்டி கமலஹாசனை அன்று யாருக்குத்தான் பிடிக்காது.அதில், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாட்டில்...” ,”ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே.. என்ற வரியை தீ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே என்று படிப்பான். அது என்னடா தீ எறும்பு.?”, என்றால்: அதுதாண்டா, கடிச்சா தீயா காந்துமில்லா அந்த எறும்பு..என்பான் அது அப்படி இல்லையென்றால்,வேணும்ன்னா பாட்டுப் புஸ்தகம் வாங்கிப் பாப்போமாலே என்று சாதிப்பான். 
சொன்ன மாதிரியே பாலஸ் டி வேல்ஸ் தியேட்டர் முன்னால்,பிளாட்பாரத்தில் எப்போதும் கடை போட்டிருக்கும் பாட்டுப் புஸ்தகக் கடைக்கு அலையாய் அலைந்து புஸ்தகம் வாங்கிவந்து விட்டான். அதைப் பார்த்து விளக்கிய பின்னாலும்.போடா இதுல தப்பா அடிச்சிருக்கன்,கம்பெனி பாட்டுப் புஸ்தகம் வாங்கிக் காட்டுதேன் பாரு... என்று சொல்லி விட்டு கை சூம்ப ஆரம்பித்து விட்டான்.பாட்டுப் புஸ்தகங்கள் நிறைய வைத்திருப்பான். எல்லாம் கம்பெனி பாட்டுப் புஸ்தகம். மல்ட்டி கலரில் முதன் முதலாக அடித்த ‘படகோட்டிபாட்டு புஸ்தகம்.அதை விட அட்டகாசமான எங்க வீட்டுப்பிள்ளை என்று ஒரு அரிய பொக்கிஷம்.
நான் கிழித்து எடுத்துக் கொண்ட படங்கள் போக மீதமுள்ள பழைய பொம்மை சினிமா இதழ்களை என்னிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்வான். குறிப்பாக நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள். பிற்காலத்தில் சரோஜா தேவி பெயரில் வெளிவந்த ‘பலானகதைப் புத்தகங்களை அவனே எனக்குத் தந்தான். உண்மையிலேயே அதை எழுதுவது சரோஜாதேவிதான் என்று சாதிப்பான்.அவன் அண்ணன், படங்களுக்கு  ஃப்ரேம் போடும் ஒரு கடை வைத்திருந்தான். அவன் வார்த்தைக்கு வார்த்தை சார் ( சார்,அதெல்லாம் சார், நடக்காது சார்”) போடுவான் அதனால் அவன் பட்டப்பெயர் “ சார் சார்”. இன்று அந்த “சார் சந்திப்பிள்ளையார் கோயில் அருகே பல கடைகளுக்கு அதிபதி. மாரிதான் என்ன ஆனான் தெரியவில்லை. சார் சார் என்னிடம் எம்.ஜி.ஆர். போட்டோக்கள் வாங்கி அதை போட்டோப் பிரதிகள் எடுத்து நல்ல விலைக்கு விற்று விடுவான்.எனக்கு ஃப்ரேம் சார்ஜ் இலவசம்.
பொம்மை சினிமா இதழ் 1966 அக்டோபர் வாக்கில் முதலில் வெளி வந்தது. நாகிரெட்டி-சக்ரபாணியின் சந்தமாமா பதிப்பகம் வெளியிட்டது. அம்புலிமாமா அவர்கள் வெளியிடுவதுதான்.அம்புலிமாமா பத்திரிக்கையின் கடைசிப் பக்கங்களில் ‘போட்டோ வாக்கியப் போட்டி என்று ஒரு போட்டி வெளிவரும். இரண்டு போட்டோக்கள் போடுவார்கள்.இரண்டிற்கும் பொருந்தும் படி ஒரு  தலைப்பு எழுதி அனுப்ப வேண்டும். பரிசு பத்து ரூபாய். அது ஒரு பெரிய தொகை அப்போது.ஒரு பாம்பு படம் எடுப்பது போல் ஒரு போட்டோ, அதனருகே ஒருசிறுவன் தன் தங்கையை காமிராவால் படம் எடுப்பது போல் ஒரு போட்டோ.இரண்டிற்கும் பொருத்தமான ஒரு தலைப்பு எழுத வேண்டும்.உண்மையிலேயே அடுத்த இதழில் வெளியிடப்படும் வாக்கியங்கள், நாங்கள் அனுப்புவதை விட அற்புதமாகவே இருக்கும்.
ஒரு அம்புலிமாமா இதழில் இந்தப் போட்டி அறிவிப்புக்கு அருகே இன்னொரு அறிவிப்பு. நாங்கள் துவங்க இருக்கும் பிரம்மாண்டமான சினிமா பத்திரிக்கைக்கு அழகான பெயர் சூட்டுங்கள், பரிசாக பெரிய தொகை பெற்றுக் கொள்ளுங்களென்று அறிவிப்பு வந்தது. நான் “ஸ்டார் & ஸ்டைல்பெயரை உல்ட்டா செய்து “நட்சத்திரமும் நாகரிகமும்என்று அனுப்பி இருந்தேன். (எவ்வளவு அபத்தமாயிருந்திருக்குமென்று இப்போது தோன்றுகிறது, அப்போதே தோன்றவும் செய்தது.) ஆனால் அடுத்த இதழ் அம்புலிமாமாவிலேயே பொம்மைஎன்ற பெயரில் புதிய சினிமா இதழ் வரப்போவது பற்றிய அறிவிப்பு வந்து விட்டது. அது யார் சூட்டிய பெயர் தெரியவில்லை.அதற்கு ஏஜண்ட், பி.எஸ் அய்யர் & சன்ஸ் எவர் சில்வெர் பாத்திரக் கடைக்காரர். கல்கிக்கும் அவர்தான் ஏஜண்ட்.அவர் கடையில் ருக்மிணி குக்கர் என்று அப்போது பிரபலமான குக்கர் கிடைக்கும்.பிரஷர் குக்கர் காலத்திற்கு முந்திய காலம் அது. ஆதியில் நெல்லை டவுனின் ஒரே எவர் சிவர் பாத்திரக்கடையும் அதுதான். அதனால் அதன் கடைசி வேலையாள் வரை அலட்டல் தாங்க முடியாது.
பொம்மை முதல் இதழ் 75 காசு என்று நினைவு. அட்டைப்படம் தேவிகா. ஃபில்ம்ஃபேர், ஸ்டார் & ஸ்டைல் போன்ற பாலிவுட் பத்திரிக்கைகளைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு ‘பொம்மைபார்த்ததும், தரமான அச்சும் அட்டகாசமான வண்ணப் பங்களும்,  ஆச்சரியம் தாங்கவில்லை.சிங்கப்பூரில் இருந்து ‘இந்தியன் மூவி நியூஸ், என்று தமிழ்- ஆங்கிலப் பத்திரிகை அழகான வர்ணம் அச்சில் வந்து கொண்டிருந்தது. இங்கே அபூர்வமாகக்கிடைக்கும். அதற்கு முன்னால் பேசும்படம் வந்து கொண்டிருந்தது.அதில் அட்டையில் மட்டுமே கலர்ப் படம் போடுவார்கள்.  பேசும் படம், தன் முன்னோடி சினிமா பத்திரிக்கைகளான குண்டூசி, சினிமாகதிர் பாணியிலேயே வந்தது. இவை போலவே ‘கலைஎன்று ஒரு சினிமா - இலக்கிய இதழ் ஒன்று வந்தது. ஓவியர்கள் பாலு- சீனு சகோதரர்கள் நடத்தியது. பாலு ப்ரதர்ஸ் சினிமா ஆர்ட் டைரக்டர்களாகப் பணியாற்றியவர்கள்.அது பெரிய வரவேற்பைப் பெறாத இதழ்.என் அண்ணன் அதை விரும்பி வாங்குவான்.பெரியார் வாழ்க்கை வரலாறு பற்றி படக்கதை போல அதில் வந்து நான் படித்திருக்கிறேன். ஆதி சங்கரர் பற்றியும் அப்படி வந்த நினைவு.
பொம்மை இரண்டாவது இதழ் சாவித்ரி அட்டைப்படம்.அதில் வைஜயந்தி மாலாவின் பத்து வண்ணப்படங்கள் வந்திருந்தது. நடுப்பக்கத்தில் ஈவினிங் இன் பாரிஸ் படத்தில் ஷர்மிளா தாகூரின் கவர்ச்சி கொப்பளிக்கும் பிகினி படங்கள், அவை எல்லாமும் ஃபிலிம் ஃபேர் ஆஸ்தான போட்டோ கிராஃபர் தீரஜ் சவ்டா எடுத்தவை.அதுவரை அவர் பெயரை ,பிலிம் ஃபேர், வீக்லியில், திராஜ் சவ்டா (Dhiraj chawda) என்றே வாசித்து வந்தோம். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எம்.ஜி.ஆரின் விரிவான பேட்டி ஒன்று, 1965 கடைசியில் வந்தது. அதற்கு படங்களை தீரஜ் சவ்டாதான் எடுத்திருந்தார். பொம்மையின் ஆஸ்தான கலர் போட்டோ கிராஃபர் கே.ஆர்.வி பக்தா. அவர் ‘அமிர்தாஞ்சன் லிமிடெட்டில் பணி புரிந்தவர். இரண்டாவது இதழை அய்யர் தங்கள் கடையிலேயே வைத்து விற்றார். மற்ற கடைகளுக்குத் தரவில்லை. பேப்பர் போடும் ராமையாப்பிள்ளை அண்ணாச்சி சொல்லிச் சொல்லி வருத்தப் படுவார்.
     பொம்மை 1967 ஜனவரி (நான்காவது) இதழில் எம்.ஜி.ஆர் அட்டைப்படம் போட்டு அவரைப் பற்றி
கவர் ஸ்டோரி போட்டிருந்தார்கள். நிறைய பிரதிகள் வந்திருந்ததால் மறுபடி எல்லாக் கடைகளிலும் கிடைத்து,ஏகத்துக்கு தொங்க விட்டிருந்தார்கள்.அது வந்த அன்று (ஜனவரி 12அன்று) எம்.ஜி.ஆர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டார். ஏல இந்த கந்தஷ்டின்னால தாம்ல (கண் திருஷ்டி) வாத்தியார் துப்பாக்கிச்s சூட்ல கஷ்டப்படுதாரு என்று அழுதான் சிதம்பரம். மறு நாள் ‘தாய்க்குத் தலை மகன் வெளி வந்தது, முதல் காட்சிக்கு வழக்கமான கூட்டம் இல்லை.பொம்மை முதல் ஆண்டு மலர் ஒன்று வெளியிட்டது. விலை ஐந்து ரூபாய். முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பிரதி என்று அறிவிப்பு வந்திருந்தது.நான் பதிவு செய்து வைத்து விட்டு அய்யர் கடையைத் தாண்டும் போதெல்லாம் விசாரிப்பேன்.அப்போது நிறைய எவர்சில்வர் பாத்திரக்கடைகள் வந்து விட்டிருந்தன.அவர்களின் ‘ரவுசும்குறைந்திருந்தது. எதிர்பார்க்காத ஒரு மழை நாள் மாலையில் மலர் வந்தது.ஸ்பைரல் பைண்டிங் செய்து அற்புதமான தயாரிப்பாய் இருந்தது. சிவாஜியின் ஓவியத்தை உஷா மங்கேஷ்கரும்,எம்.ஜி.ஆர் ஓவியத்தை தேவி ராய் சௌத்ரியின் மாணவரும் சென்னை ஓவியக் கல்லூரியின் மாணவருமான ரத்தினம் வரைந்திருந்தார். இரண்டும் முழுப்பக்கம்.அதை வைத்திருப்பதே கல்லூரியில்  எனக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
பொம்மை பத்திரிக்கையின் வரவு தமிழ் சினிமாவில் ஒரு மைல்க் கல்.பொம்மை பத்திரிக்கை வந்த சமயத்தில். பிரபல சினிமா புகைப்பட நிபுணர் எம்பியெஸ் (M.P. ஸ்ரீனிவாஸ்: இசையமைப்பாளர் அல்ல) வெண்திரை என்று ஒரு பத்திரிக்கை கொண்டு வந்தார். பல முன்னணி நடிகைகளின் ஆரம்ப காலங்களில் இவர்தான் அவர்களைப் படம் பிடித்திருப்பார்.அதனால் அவர் பத்திரிக்கையில் நடிகைகள் தாராளக் கவர்ச்சி காட்டும் படங்கள் வந்தன. விஜயலலிதா, கே ஆர்.விஜயா, வாணிஸ்ரீ யின் அப்படியான படங்கள் செல்வகணபதி என்ற சினேகிதனின் அந்தரங்க சேமிப்புகளாக இருந்தன. அதில் வித்தியாசமான கட்டுரைகள் வந்தன.எம்பியெஸ்ஸின் அனுபவம் அதில் பேசிற்று.ஆனால் பொம்மையின் உயர்ந்த அச்சு,தாள், தயாரிப்புக்கு முன் அவை நிற்க முடியவில்லை. பஞ்சு அருணாசலம் ஆசிரிராக இருந்து பிலிமாலயா தொடங்கினார். அதன் உள்ளடக்கம் கனமாக இருந்த்து வழக்கமான ‘ எல்லோருக்கும் நல்லவராகஇருக்கும் பாணியை விட்டு கொஞ்சம் கறாரன விமர்சன பாணியில் வந்தது. குறிப்பாக தி.மு.கவை விட்டு எம்.ஜி.ஆர் விலக்கிய காலகட்ட்த்தில் சந்திரபாபு எழுதிய எம்.ஜி.ஆர் எதிர்ப்புக் கட்டுரைகள் அந்த வகையில் சேரும்.தினமணி முழுமத்திலிருந்து சினிமா எக்ஸ்பிரஸ்வந்தது.
தினமணியில் அதற்கு முன்னால், ஞாயிறு தோறும் தினமணி சுடர் என்று  நான்கு பக்க இணைப்பு வரும் அதில்,ஒரு முழு பக்கமும், குறுக்கு வசத்தில் சினிமா செய்திகள்,படங்கள்,விமர்சனம் வரும். அதை ஜனரஞ்சக வாசகர்களுக்கு சிவராமன் செய்த சலுகையாகவே கொள்ள வேண்டும்.தினத்தந்தியின் வெள்ளி மலர் சினிமா செய்திகள் பிரபலம்.குருவியாரின் சினிமாக் கேள்வி-பதில் சுவாரஸ்யமானது. அதில் வாராவாரம் எப்படியாவது ஒரு சினிமா நடிகையின் விலாசம் கேட்டு கேள்வியும் பதிலும் இருக்கும்.இன்னும் நினைவிருக்கும் ஒரு கேள்வி- பதி.குருவியாரே கே.ஆர்.விஜயாவைப் பார்க்கப் போவதாக சென்னை போன என் நண்பனைக் காணவில்லை நான் வந்து தேடலாமென்றிருக்கிறேன்? கூடவே கிணற்றில் தூர் வாருபவரையும் அழைத்துச் செல்லுங்கள்.!
     தினத்தந்தி யின் முழுப்பக்க சினிமா விளம்பரங்கள் பெரிய பலம். கட்டணம் மிகக்குறைவு. ஆங்கிலப் பத்திரிக்கையின் கால் பக்க அளவு கட்டணம் தந்தியின் முழுப்பக்க அளவு போல் இருக்கும் என்பார்கள்.டீக்கடை, டெயிலர் கடை, லாண்டரி எல்லாவற்றிலும், தங்கள் அபிமான நடிகரின்  தினத்தந்தி விளம்பரங்களை,போஸ்டர் போல ஒட்டி வைத்திருப்பார்கள்.ஸ்ரீதர், எக்ஸ்பிரஸ் குழுமம் ஆங்கிலத்தில் நடத்திய “ஸ்க்ரீன்
போலவே தமிழில் சித்ராலயா என்று ஒரு பத்திரிக்கை நடத்தினார்.அவ்வளவு தாக்குப்பிடிக்க முடியவில்லை.பாலிவுட்டில் தயாரிப்பளர்களெல்லாம் இணைந்து ஒரு அமைப்பு வைத்திருந்தார்கள்.அது போலவே ஸ்ரீதர்,கே.எஸ் கோபால கிருஷ்ணன், முக்தா ஸ்ரீனிவாசன்,பாலாஜி போன்றவர்கள் இணைந்து “ மூவிமேக்கர்ஸ் கவுன்ஸில்என்றுஆரம்பித்து, இது ஒரு “மூவி மேக்கர்ஸ்கவுன்ஸில் சித்திரம்என்று தங்கள் படத்தில் போட்டுக் கொள்வார்கள். அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கிட்டத்தட்ட அது ஒரு எம்.ஜி.ஆர் எதிர்ப்பு அணி போலவே செயல்பட்டது.அதனாலெல்லாம் கூட ‘சித்ராலயாதொடர்ந்து வர இயலவில்லை.மற்றப்படி நல்ல உள்ளடக்கம் இருந்தது.
     இவையெல்லாம் தவிர சிவாஜிகணேசனுக்கு
மதி ஒளிஎன்று ஒரு சினிமா டேப்லாய்ட் நீண்ட நாட்களாக வந்தது. அதன் ஆசிரியர் மதி ஒளி சண்முகம் யக்‌க்ஷ கானம் போன்ற படங்களை எடுத்தார். அது போக தமிழ் சினிமா’- என்று ஒரு பத்திரிக்கை.அது சிவாஜி-காங்கிரஸ் சார்புடன் வந்த்து. அதன் ஆசிரியர் கரீம்.அவரது காட்ட சாட்டமான சினிமா நையாண்டி பிரசித்தமானது. சிவாஜியையும் அவர் விமர்சித்திருக்கிறார்.பின்னாளில் எம்.ஜிஆருக்கென்று திரை உலகம்என்றொரு பத்திரிக்கை, இதுவும் டேப்லாயிட் பத்திரிக்கைதான்.ஆசிரியர், ஜி.கே துரை ராஜ் என்று ஒருவர்.இதில் நான் ஆசிரியர் கடிதம் பகுதியில் பல கடிதங்கள் ( கோபால் . சோம சுந்தரம் என்ற பெயரில்) எழுதியிருக்கிறேன்.மூன்றுமே தாளும் அச்சும் நன்றாக இருக்கும். எல்லாம் ஃபாரின் நியூஸ் பிரிண்ட் தாள்கள்.பெரிய தேசீயப் பத்திரிக்கைகள் தங்களுக்கான ‘கோட்டாவிலிருந்து கள்ள மார்க்கெட்டில் இப்படி குட்டிப் பத்திரிக்கைகளுக்கு பேப்பர் விற்பது உண்டு.பேப்பர் அச்சடித்து விற்பதைவிட இது லாபம். அப்போது காங்கிரஸ் கட்சியின் கோட்டா ராஜ்யம். தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய, எம்.ஜி.ஆர்,பதிப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’  (நடிகை குரல்கொடுக்காமல் எங்கே போனாள் தெரியவில்லை) ஐம்பதுகளில் பரபரப்பாக வந்தது.அதிலும் சினிமா செய்திகள் வரும்.அப்புறம், சினிமாக்காரர்களின் அந்தரங்கங்களை வியாபாரமாக்கி இந்து நேசன்பத்திரிக்கையும் வந்து கொண்டிருந்தது. எப்போதாவது வரும்... ரகசியமாக விற்பனையாகும். இந்து நேசன்குறுகுறுப்பிற்கு சற்றும் குறையாத கிசு கிசுக்களை 1971களில் பிரபல வாரப் பத்திரிக்கையான குமுதம் வெளியிட ஆரம்பித்த்து.
இப்போது சினிமாவுக்கென்று தனியாகப் பத்திரிக்கை தேவையில்லை என்ற சூழல். எல்லா பத்திரிக்கைகளிலும் சினிமாச் செய்திகள், உடல் மொழி இருக்கும் போது தமிழ் மொழியை எதற்குக் கற்க  வேண்டும் என்று உடல் காட்டும் தேசீய நடிகைகளின் படங்கள்,அவர்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆடை போல கொஞ்சம் கொஞ்சம் நடுவே சமூக, இலக்கியப் பணி.சினிமாவைப் போலவே சினிமாச் செய்திகளும் எவ்வளவோ நகர்ந்து விட்டது.எல்லாவற்றையும் விழுங்கி தொலைக்காட்சி இப்போதும் மாரி சினிமா பத்திரிக்கைகள் வாங்குவானா..... டி.வி. பார்ப்பானா தெரியவில்லை.

Visitors