Saturday, July 6, 2013

நன்றி: காட்சிப்பிழை ஜூலை 2013

இந்த மன்றத்தில் ஓடிவரும் ..........
1966 பிப்ரவரி தேதி 18 (என்று நினைவு) நாங்கள் எங்கள் தெருவில் எம்.ஜி.ஆர் மன்றம் ஒன்றை, மக்கள்திலகம் மன்றம் என்ற பெயரில் ஆரம்பித்தோம்.அது 11 வது வட்ட தி.மு.கவின் உட் கிளையாக ஆரம்பிக்கப் பட்டது. நகரச் செயலாளர், மார்க்கெட்டில் வாழை இலை, காய் வியாபாரம் செய்பவரான நம்பி அண்ணாச்சி தலைமையில் பூர்வாங்கக் கூட்டம் நடந்தது.அவர் தலைவர், செயலாளர்,பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் எல்லோரையும் தேர்வு செய்தார்.ஒரு, ஒரு குயர் நீள சைஸ் நோட்டை வாங்கி வரச் சொல்லி, அன்றைய நடவடிக்கைகளைப் பதிவு செய்யச் சொல்லி எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினார்.அதற்குப் பெயர் ‘மினிட் புஸ்தகம்என்று சொன்னார்கள்.அதுவரை அப்படி ஒரு புஸ்தகத்தைகேள்விப்பட்டதில்லை. அவரும் கையெழுத்திட்டார். அதன் நகலை மாவட்டச் செயலாளரிடம் கொடுப்பதாக எடுத்துச் சென்றார்.அப்போது மாவட்டச் செயலாளர், ரத்னவேல் பாண்டியன் அண்ணாச்சி, அவர்கள். 1967 தேர்தலில், சேரன் மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெறவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் தி.மு.க தோற்ற தொகுதி அது ஒன்றுதான். வலது கம்யூனிஸ்ட் தி.முக. கூட்டணியில் இல்லை.அதன் வேட்பாளர் வாக்குகளைப் பிரித்ததனால், காங்கிரஸ் வேட்பாளர் கோமதி சங்கர தீக்ஷிதர் ஜெயித்தார்.அண்ணாச்சி முன்பே ஒரு முறை ஒரு இடைத் தேர்தலிலோ, 1962 தேர்தலிலோ ஏற்கெனவே தோற்றவர். அதனால் அவர் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு உயர் நீதி மன்ற வழக்கறிஞர், அப்புறம் நீதிபதியாகப் போய் விட்டார்.
     நாங்கள் மன்றம் ஆரம்பிக்கப் போவதற்கு முன்தினம், பாளையங்கோட்டையில் இருந்து ஒரு அம்பி வந்தார்.தன்னை “நடிப்புச் செல்வன்
ஜெமினி கணேசன் ரசிகர் மன்றச் செயலாளராக அறிமுகப் படுத்திக் கொண்டு,நாளை வெளியாகும் முகராசி’ ( எம்.ஜி.ஆர், ஜெமினி இணைந்து நடித்த ஒரே படம்) படத்திற்கு,இணைந்து  தோரணங்கள் கட்டவோ நோட்டீஸ் அடிக்கவோ, உதவ முடியுமா என்று கேட்டார்.எனக்குத் தெரிந்து ஜெமினி கணேசனுக்கு மன்றமிருந்ததே அது ஒன்றுதான், என்று நினைவு.நாங்கள் ரசிகர் மன்றமில்லை, தி.மு.க உட்கிளை, நகரச் செயலாளர் அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது”, என்று சொல்லி அனுப்பி வீட்டார்,எங்கள் ‘செயலாளர்’. எங்களில் சிலருக்கு அது வருத்தமே.படம் வெளியாகும் அன்று தான் முகராசி ரிலீஸ், திறப்பு விழா வேலைகள் நிறைய இருப்பதால் படத்திற்கும் அன்று போகக்கூடாது, என்று சொல்லி விட்டார். இரண்டுமே என் போன்ற சிலருக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது இதனாலேயே சிலர் பிரிந்து பின்னாளில் எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்தோம்.அதற்கு நான் செயலாளர்.எம்.ஜி.ஆர் பெயரில் ஏற்கெனவே இருந்த, கீழப் புதுத் தெரு மன்றமும்,ஜங்ஷன் மீனாட்சிபுரம் மன்றமும் உட் கிளைகளாகவே செயல்பட்டன.
     சுவாமி சன்னதித் தெருவில் சிவாஜிகணேசன் ரசிகர் மன்றம் இயங்கி வந்தது. கட்ட பொம்மன் படத்தைத் தொடர்ந்து பாகப்பிரிவினை,பாவமன்னிப்பு, பாலும் பழமும், படிக்காத மேதை,பாச மலர் என்று பீம்சிங் (பாம்சிங் என்று கிண்டலடிப்போம்) படங்கள் சக்கைப் போடு போட்டு சிவாஜி கொடிகட்டிப் பறந்த காலங்களில் அந்த மன்றம் ‘ஜே ஜே என்றிருக்கும்.நாங்கள் எப்போதாவது அதை எட்டிப் பார்த்தால்,சிவாஜி போட்டோக்களும், தியேட்டரில் கட்டுகிற தோரணங்கள் பேனர்களும் பார்க்கப் பார்க்க அவ்வளவு கடுப்பாயிருக்கும்.அது அரசியலுக்கு அப்பாற்பட்டது.எம்.ஜி.ஆர் மன்றங்களின் பெயர்ப்பலகையே தி.மு.க கொடியின் மேல்தான் எழுதப் பட்டிருக்கும். அண்ணா, கலைஞர், நாவலர் படங்கள் தவறாமல் இருக்கும்.பெரியார் படம் அப்போதெல்லாம் இருக்காது, பெரியார் அப்போது தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். திராவிடநாடு, நம்நாடு, முரசொலி, காஞ்சி, சமநீதி, திருவிளக்கு,(க.ராசாராம்),முத்தாரம்,புகழேந்தி நடத்திய கதிர்’( இதில் நிறைய மொழிபெயர்ப்புக் கதைகள் வரும்.வைக்கம் முகம்மது பஷீரின் ‘சப்திக்குன்ன கலப்ப-ஏரின் ஓசை- மொழி பெயர்ப்பு, ஆ.மாதவனென்று நினைவு, இதில்த்தான் படித்தேன்) என்று கட்சிப் பத்திரிக்கைகளும் தந்தி,மாலை முரசு ஆகியனவும் கிடக்கும். ஹோம்லேண்ட், என்று அண்ணா நடத்திய ஆங்கிலப் பத்திரிக்கை, நாங்கள் மட்டும் வாங்கிப் போட்டிருந்தோம்,
     சுவாமி சன்னதித் தெருவில், தெப்பக்குளம் தாண்டி, டி.எஸ்.பாலையா ரசிகர் மன்றம் ஒன்று இருந்தது. எங்கள் தெருவிலேயே கலைவாணர் என்.எஸ்.கே படிப்பகம் ஒன்று இருந்ததற்கான போர்டு ஒன்று தொங்கும்.தெரு முனையில் இருந்த தி.மு.க கொடிக் கம்பத்திற்கு கலைவாணர் என்.எஸ்.கே நினைவுக்கம்பம் என்று பெயர். இதை நாவலர் நெடுஞ்செழியன் ஏற்றி வைத்தார்.எப்படி பாம்சிங் படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு சிவாஜி முகாமில் ரசிகர்கள் உற்சாகமாய் இருந்தார்களோ அதே போல்,திருடாதே தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத்தலைவன், பணத்தோட்டம், பாசம், பெரிய இடத்துப் பெண் படங்களை எம்.ஏ.திருமுகமும், டி ஆர் ராமண்ணாவும் தந்து எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை உண்டாக்கினார்கள். இதில் பணத்தோட்டம் இயக்கிய கே.சங்கர்,வேலுமணி முகாமில் இருந்தவர்.அவர் இயக்கிய முதல் எம்.ஜி.ஆர் படம் பணத்தோட்டம். இதற்கு முதலில் வைத்த பெயர் ‘பூ விலங்குஇது பி.எஸ்.ராமையாவின் பூவிலங்கு நாடகத்தை தழுவி எடுக்கப் பட்டது. இதன் கதைக் களனே சுதந்திரப் போராட்ட காலமாக இருந்தது.முதலில் வந்த விளம்பரங்களில் எம்.ஜி.ஆர். ப்ரிட்டிஷ் காலத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேக் அப்பில்தான் இருப்பார். அப்புறம் மூலக்கதை மட்டும் பி.எஸ்.ராமையா ஆகி விட்டது. பாசுமணி திரைக்கதை வசனத்தில் கதையே மாறிவிட்டது. இதன் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் நடிப்பில் திருப்தி ஏற்படாமல் கே.சங்கர் நிறைய ரீ டேக் வாங்கினாராம்.எம்.ஜி.ஆர் சிரித்துக் கொண்டே அவரைத் தனியே அழைத்துப் போய் , சார், நீங்க பெரிய பெரிய நடிப்பெல்லாம் பார்த்துட்டு என்னிடமும் அதையே எதிர் பார்க்காதீர்கள்,என்னால் இவ்வளவுதான் முடியும்...மிகையாகச் செய்ய முடியாது....“ என்றாராம். எம்.ஜி.ஆர் –சங்கர் உறவு இத்தோடு சரி என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். அவருடைய அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் வரிசையில் சங்கரும் ஒருவராகி விட்டார்.
     1963-ல் அதிகபட்சமாக எம்.ஜி.ஆருக்கு 9 படங்கள் வந்தன. அவற்றில் பல படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியசமான கதை(!) கொண்டவை.இதனால் அவருடைய ரசிகர்கள் அதிகமானார்கள்.62-63ல் அவரை எம்.எல்.சி ஆக்கினார் அண்ணா. கட்சியில் ஏற்பட்ட சலசலப்பில் வெறுப்படைந்து சட்டென்று பதவியை ராஜினாமா செய்து விட்டார்.1962 தேர்தலுக்குப்பின் எஸ்.எஸ்.ஆர்
M.L.A, கருணாநிதி. M.L.A,  என்று சினிமா விளம்பரங்கள் வரும் பார்க்க சந்தோஷமாக இருக்கும். 62 தேர்தலில் தேனியில் எம்.ஜி.ஆர் எஸ்.எஸ்.ஆருக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தார். ஆனால் எப்போதுமே இரண்டு பேருக்கும் சுமுகமான உறவு கிடையாது என்பார்கள்.எம்.ஜி.ராமச்சந்திரன் எம்.எல்.சி என்று காலண்டர் வந்ததே தவிர, சினிமா விளம்பரங்களில் போடவில்லை. இந்த ராஜினாமா நிகழ்வை ஒட்டி வந்த ‘என்கடமைபடம் தோல்வி அடைந்தது. இதை கட்சிக்குள் இருந்த அவரது எதிர்ப்பாளர்கள்  அவருக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பயன் படுத்தினார்கள். அது பெரிய உண்மையில்லை,என்கடமை நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். அவ்வளவுதான் ஓடும். திருநெல்வேலியில் 13 நாள் ஓடியது.( மறு வெளியீட்டில் எட்டு நாட்கள் ஓடியது) ஆனால் அதற்கு முந்தி வந்த வேட்டைக்காரன், வசூலில் பிய்த்துக் கொண்டு போயிற்று.இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்ட  கர்ணன் படத்தை விட வசூல் அதிகம். எல்லா ஊர்களிலும் இதுதான் கதை.அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரிடம் இருந்த ஒரு வேகம் எந்தப் படத்திலும் இருந்ததில்லை.முதல் காட்சியில் தொடங்குகிற வேகம் கடைசி வரை மாறாது. அப்படியொரு கண்டினியூட்டியுடன் அவர் நடித்ததில்லை. இப்போது வேண்டுமானாலும் அதை உணர முடியும். (என்னைப் பொறுத்து, இதில் வேறு ஒன்றுமில்லைடா என்று சொல்லி, வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்...சம்முவத்திடம்..) எம்.ஜி.ஆர் இதனால் கொஞ்சம் தளர்ச்சியானார்.அது அவருக்கு வாடிக்கைதான் என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.ஆனால் அடுத்து வந்த ‘பணக்காரக் குடும்பம்ஒரு டீஸண்ட் ரன்கொடுத்து, நிறைய மையங்களில் 100 நாட்கள் ஒடியது. அடுத்து வந்த, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று முழங்கிய ‘தெய்வத்தாய்படமும்,நன்றாகவே ஓடியது. தொடர்ந்து படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் எல்லாமுமே ரசிகர்கள் கணக்கை ஏகத்துக்கு  விஸ்தரித்தது. 1965லிருந்து அவருக்கு ஏறுமுகம் தான்.
1965ல் வெளிவந்த கலங்கரை விளக்கம் படத்திற்கு வசனம் எழுதிய சொர்ணத்தை ஆசிரியராக வைத்து எம்.ஜி.ஆர் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தார்.ஏற்கெனவே ஈரோடு சின்னச் சாமி நடத்தி வந்த ‘சமநீதிபத்திரிக்கையை அதே பெயரில் நடத்த ஆரம்பித்தார்.முதலில் டேப்லாய்ட் வடிவிலும் பின்னர் புத்தக வடிவிலும் வந்தது. இதில் எம்.ஜி.ஆர் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்து இரண்டு மூன்று அத்தியாயங்களில் முடிந்து போனது.ஏ.எஸ்.பிரகாசம் அவ்வப்போது கதைகள் எழுதுவார். கவிஞர் மீரா கூட மீ.ராஜேந்திரன் என்ற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதை வாங்குவது நான் உள்ளிட்ட சிலர்தான்.ஆனால் நிறையப் பேர் படிப்பார்கள்.மாலையில் தினமும் எம்.ஜி.ஆர் படம் ஓடும் தியேட்டரில் ஒரு கூட்டம் கூடும். கல்லூரி விட்டு வந்ததும்,அன்று வந்திருக்கிற மன்ற தபால்களை எடுத்துப் படித்தபடியே, தண்ணீர் விடாமல் வைத்து இருக்கிற சோற்றையும் கறியையும் கூட்டையும் வயிற்றில் கொட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன்.வரிசையாய் அங்கங்கே ஆட்கள் சேரச் சேர குறைந்தது பத்துப் பேராவது டவுணிலிருந்து கிளம்பி விடுவோம்.இதே மாதிரி ஜங்ஷன், மீனாட்சிபுரம்,உடையார்பட்டி, ஏன் மேலப்பாளையம், கருப்பன் துறைப் பக்கமிருந்தெல்லாம் கூட வருவார்கள். எனக்கு தினமும், மற்ற ஊர் ரசிகர் மன்றங்களிலிருந்து கடிதங்கள், அந்தந்த ஊரில் அடித்த வசூல் நோட்டீஸ், எல்லாம் வரும். நானும் இங்கேயிருந்து நோட்டிஸ்கள், தியேட்டரில் வாங்கிய வசூல் விவரங்கள் எல்லாவற்றையும் அனுப்புவேன்.வேலூரிலிருந்து மாறன், தென்சென்னை எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றத்திலிருந்து எஸ்.கல்யாண சுந்தரம், திருச்சி வரதராஜன்,மதுரையில் இருந்து புதுக்குயவர் பாளையம் சீதாராமன், பந்தடி 5 வது தெரு சரத் சந்திரன்,சுந்தர ராஜன்,தூத்துக்குடி பாலகிருஷ்ணன், நாகர்கோயில் உசேன்...என்று ஒரு பெரிய லிஸ்ட். இதில் மாறன், உசேன் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்த போது நல்ல பதவியைக் கைப்பற்றினார்கள்.என்னைத் தவிர இன்னும் சிலரும் இப்படி வெளியூர் தொடர்புகள் வைத்திருந்தார்கள்.சிலர் அவர்களிடமிருக்கும் விலாசத்தைக்  கூடத் தரமாட்டார்கள். அதில் கே.டி சிதம்பரம் கில்லாடி. கறிக்கடை சம்முவம் அவனுக்கு அசிஸ்டண்ட்.
     சில தியேட்டரில் படம் ரிலீஸாகும் போது,மன்ற விலாசத்தோடு அழகாக ஃப்ரேம் போட்ட பெரிய புகைப்படங்களை மாட்டிக் கொள்ள அனுமதிப்பார்கள்.68-69 வாக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் பெருத்து விட்டன.மக்கள் திலகம் ரசிகர் மன்றம் என்றெல்லாம் இருந்தது போய்,எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜிஆர் ரசிகர் மன்றம்,காவல்காரன் எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம் என்றெல்லாம் அங்கங்கே, ஒவ்வொரு வெற்றிப் படத்தின் பெயரை வைத்தும் நிறைய ஆரம்பித்திருந்தார்கள். 70களில் இதையெல்லாம் எம்.ஜி.ஆர், அனைத்துலக எம்.ஜி.ஆர், ரசிகர் மன்றம் என்ற பெயரில் முசிறிப் புத்தன் தலைமையில் ஒன்றிணைத்தார்.நான் அப்போது அநேகமாக என் தீவிர ஈடுபாட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.தியேட்டரில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போட்டோ கட்டுவார்கள்.நான் கட்டியிருந்த போட்டோ ஒன்று, புதிய பூமிபடப்பிடிப்பு நடக்கும் போது அங்கிருந்து கொண்டு வந்த அழகான படம்.குண்டடி படுவதற்கு முன், எம்.ஜி.ஆர் கொழு கொழுவென இருக்கும் படம். அதன் மேல் சம்முவத்துக்கு ஒரு கண். கேட்டுக் கொண்டே இருந்தான். அவனுக்கு இரண்டு கறிக்கடைகள். ஒன்று குற்றால ரோட்டில்,இன்னொன்று பாப்புலர் டாக்கீஸ் அருகே.அவன் பெரும்பாலும் குற்றால ரோடு கடையில்தான் இருப்பான்.அங்கேயுள்ள கடைகளில் மாலை வரை கறி கிடைக்கும்.ஒன்றுமில்லையென்றாலும் தலைக்கறியாவது இருக்கும். அந்தி சாயும் நேரம் வரை கடைகள் இருக்கும். பெரும்பாலும் விளக்கு வச்சதுக்கப்புறம் யாரும் வாங்குவதில்லை, விற்பதுமில்லை என்பான் சம்முவம். அந்தக் கடைகளில் மின் விளக்குகள் கூட இருப்பதில்லை.
ஒரு நாள் மாலை தியேட்டருக்கு வந்தபோது (கணவன் படம் நடந்த லக்‌ஷ்மி தியேட்டர் என்று நினைவு) என் படத்தின் வளையம் தான் இருந்தது படத்தைக் காணவில்லை. கே.டி சிதம்பரம் நமுட்டுத்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.சரி படம் சம்முவத்திடம்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது.இருந்தாலும் சிதம்பரத்திடம் கேட்டேன்,ஏல மாப்ள படத்தை எவனோ லாத்தீட்டுப் போயிட்டான் போலியே...என்று. லாத்துனான்...மாத்துனாண்ட்டு, எனக்கென்னலெ தெரியும் என்றான். நான் கொஞ்சம் சினிமா தியேட்டர் சகவாசத்தை குறைக்க நினைத்துக் கொண்டிருந்த நேரம். அநேகமா ஏழரைச் சனியின் முதற் சுற்றான மங்கு சனியின் கடைசிக் காலமோ என்னவோ. காதலில் விழுந்த ஆரம்ப நாட்கள். கல்லூரியில் இரண்டாம் வருடம்.அந்த ஆண்டு முடிவில் தமிழ், ஆங்கிலம் மற்றும்  ஒரு துணைப்பாடம், யுனிவெர்சிட்டி எக்ஸாம் எழுத வேண்டும். எல்லோரும் ஆங்கிலத்தில் எப்படியும் அடி வாங்கி விடுவார்கள், என்று லாலாமணி எச்சரித்திருந்தான். அவன் கொசவந்தட்டித் தெருவில் ஒரு மன்றம் நடத்தி ஒரு போலீஸ் பிரச்னை காரண்மாக அதைக் கலைத்து விட்டான். என்னை விட நாலு வருஷம் மூத்தவன். பி.ஏ., டிஸ்கண்டினியூ பண்ணிவிட்டான்.சரி, சிதமபரத்திடம் சண்டை இழுக்க வேண்டாம். நாளைக்கு ஞாயிறுதானே கறிக்கடைக்கே போய் விடுவோம் என்று நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் குற்றால ரோடு கடைக்குப் போனேன்.இப்பத்தான் பாப்புலர் டாக்கீஸ் கடைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.அங்கே போனேன். கறி வெட்டும் மர மூட்டில் படிந்திருக்கும் காய்ந்து போன ரத்தத்தையும், கொழுப்பையும், கறி வெட்டும் கத்தியால் சுரண்டிக் கொண்டிருந்தான். ஒருமரத்தில் ஆடு கட்டிப் போடப் பட்டிருந்தது. அந்தப் பூவரச மரத்தடியைச் சுற்றி, நாலு புறமும் மண் சுவர் கட்டின கடை. மேலே தகரம். அந்த மரத்தில்தான் ஆட்டைக் கட்டிப் போட்டிருந்தான். நல்ல மஞ்சணத்திக் கட்டை மாதிரியிருக்குப்பா வெட்டுக்கு என்னமாத் தாங்குதுங்கே...கத்தி மொட்டையாயிருந்தாக் கூட வெட்டு சொகமா இறங்கும் போல இருக்கே... இது ஏதுப்பா “ என்று எதிரே அமர்ந்தவனிடம் கேட்டுக் கொண்டே, வே கோவாலு, வாரும், காணாமப் போன படத்துக்கு துப்பு வெட்ட வந்தேரா என்றான். இந்தக் கட்டையை உங்க ஐயா கொண்டாந்து போட்டிருக்காரு, மஞ்சணத்தியாத்தான் இருக்கும்...நீ பாக்கவே இல்லையோ...என்றான் எதிரில் இருந்தவன். வே உக்காரும், டீ குடிக்கேறா...என்றான், சம்முவம். வேண்டாம் என்றேன்.போட்டோதான் வேணுமாக்கும் என்றான். எதிரே உட்கார்ந்திருந்தவன் வாய் முழுக்க வெற்றிலையும், காதில் பெரிய கடுக்கணுமாக, ஆளைப் பார்க்கவே எம கிங்கரன் மாதிரி இருந்தான். ஆடே, மரியாதையாக அவன் முன்னால் வந்து நின்று என்னை வெட்டிக்கப்பா என்று சொல்லி விடும் என்பது போலிருந்தான்.படத்தை வேணும்ன்னா நீயே வச்சுக்க ஆனா எடுத்தியான்னு மட்டும் சொல்லிரு...என்று கேட்கத் தோன்றியது.கேட்கவில்லை.
அப்போது சைக்கிளில் ஒருத்தர் வந்தார். பார்த்தாலே தெரிந்தது சம்முவம் அப்பாதான் என்று.வந்தவர்,ஏல, ஏதும் குட்டி நிக்கிதா.. அவசரமா 20 கிலோ கேக்காங்கலே என்றார். இந்தா இது ஒப்பேறுமா பாரும் என்றான் கிங்கரன். “நல்ல கறியால்ல கேப்பாங்க,கொஞ்சம் எலும்பு அதிகமிருந்தாலும் ஆயிரம் குத்தம் சொல்லற, நொரை நாட்டியம் புடிச்ச ஆளுகல்லா, சரி வெட்டிரு, நான் இந்தா வந்திருதேன் என்று கிளம்பினார்.கிங்கரன்  கனமான கட்டை அரிவாள் ஒன்றைத் தீட்ட ஆரம்பித்தான். ஆடு கத்த ஆரம்பித்த்து.வே கோவாலு, என்னவே சின்னப் புள்ளையா இருக்கேரு, செலம்பரம் சொன்னான், படத்தை நானெடுக்கலைவே, ஆடு அறுக்கப் போறோம் போகப்போறேரா இருந்து பாக்கேறா என்றான். “சரி, பார்க்கிறேன் என்றேன். ஆட்டின் முன்னங்காலை சட்டென்று உள் மடக்கி கீழே சாய்த்து படக்கென்று மேலே ஏறி உட்கார்ந்தான் சம்முவம், ஆட்டின் தலை தரையோடு நீண்டு இருந்தது, கிங்கரன் ஒரே வெட்டில் வெட்டினான்.தலை தள்ளிப் போய் விழுந்து துடித்தது.சம்முவம் சட்டென்று ஒரு அகலச் சட்டியை எடுத்து கழுத்திலிருந்து பீச்சும் ரத்தத்தை ஏந்தினான்.லேசாகத் துருப் பிடித்த கத்தியை நக்கினாற் போல ஒரு வாசனை மூக்கில் பரவியது. ரத்த வாசனையோ என்று நினைத்துக் கொண்டேன்.சம்முவம் தோலை உரிக்க ஆரம்பித்தான். பாத்து சம்முவம்,சவ்வு இறைச்சில ஒட்டிக்கிடாம தோலோட வருகிற மாதிரி உறி, அப்புறம் கறியை வெட்டவே முடியாது... என்றான்.சம்முவம் ஜாக்கிரதையாக சவ்வு தோலோடு வர்ற மாதிரி வேகமாகவும் லாவகமாகவும் அறுத்தான்... மாப்ள அசரத் அறுக்கிற மாதிரி அறுக்கியே, பரவாயில்லையே... என்றான் கிங்கரன். அப்பா, ஒரு வாளியும் கொஞ்சம் அடுப்புக் கரியும் கொண்டு வந்தார்.அதற்குள் ரெண்டு பேரும் கறியைக் கூறு போட்டு கொத்தி வைத்திருந்தார்கள். ஒரு தகர வாளியில் அள்ளி வைத்து அதன் மேல் நாலைந்து அடுப்புக்கரித் துண்டங்களைப் போட்டு,இலையால் மூடி எடுத்துக் கொண்டு சைக்கிளில் போனார் அப்பா.பேய் பிசாசு அண்டாது, இல்லேன்னா கறி எடை கொறைஞ்சிரும்”, என்றான், நான்  அடுப்புக்கரி எதுக்கு என்று கேட்பேனென்று நினைத்தோ என்னவோ சம்முவம். வே காத்திருந்ததுக்கு அந்தா தலைக்கறிய வேணும்ன்னா கொண்டு போறேரா கோபால் பிள்ளைவாள் என்று சிரித்தான் சம்முவம். போடா மயிரு என்று சொல்லி விட்டு சைக்கிளில் ஏறி மிதித்தேன்,வேகமாக.
அப்புறம் என்னவெல்லாமோ நடந்து விட்டது.எம்.ஜி.ஆர்,தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டார்.முதலில் எம்.ஜி.ஆர் கொஞ்சம் பயந்துதான் போனார். ஆனால் பல ஊர்களில் பலத்த எதிர்ப்பை எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் தானாகவே காட்டினார்கள். மதுரை திருநெல்வேலியில் எல்லாம், கறுப்பு பின்னணியில் சிகப்பு தாமரை பதித்த தாமரைக் கொடி ஏற்றினார்கள்.தி.மு.க பொதுக் குழு கூடி, நீக்கியதை வழி மொழியும் வரை பதற்றமாகவும்,யாராவது சமரசத்துக்கு வருவார்கள் என்றும் எம்.ஜி.ஆர் நம்பினார்.கலைஞருக்கு எதிர்ப்பு பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கிடைக்காமல் அவருடைய coteries  ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார்கள். அப்புறம் எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க வை அறிவித்தார்.தி.மு.க கொடியின் நடுவே அண்ணா படத்துடன் கொடியை அறிவித்தார்.நாங்களெல்லாம் இதை எப்படி சுவரில் வரைவது என்றெல்லாம் யோசித்தோம்.அதுவரை கரைவேட்டி கட்டாத தீவிர ரசிகர்கள், தி.மு.க கரை வேட்டியையே கட்டிக் கொண்டார்கள். எம்.ஜி.ஆரே உரிமைக் குரல் படத்தில் கறுப்பு சிகப்பு இரண்டு நிற வேட்டியையே கட்டி வந்தார்.பின்னாளில்த்தான் கறுப்பு சிகப்புக்கு இடையில் லேசான வெள்ளை வரும் படியான வேட்டியை எம்.ஜி.ஆர் படங்களில் கட்டினார்.அப்புறம் ரசிகர்கள் அதே போல் அணிய ஆரம்பித்தார்கள்.நிறையப் பேர் பச்சை குத்திக் கொண்டார்கள்.எனக்கு இன்னும் ஒரு வருடம் வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் நான் கூட கரை வேட்டி அணிந்திருப்பேன்.திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை உண்டு பண்ணியது. அதற்கப்புறம் இரட்டை இலை பிரபலமானது.அது வரைவதற்கு எளிதாக இருந்தது.

சட்டமன்றத் தேர்தல் வந்த சமயம், தி.மு.க துணை சபாநாயகர் எட்மண்ட், அ.தி.மு.கவில் இணைந்து திருநெல்வேலியில் நின்றார். திருநெல்வேலி முன்னாள் சேர்மன் மஜீத்தும் டிக்கெட் கேட்டிருந்தார், அவருக்கு கிடைக்கவில்லையென்றதும் அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார்.தி.மு.க அவருக்கு ரகசிய ஊக்கம் தந்தது. அவசர நிலைப் பிரகடனத்தால் பல தி.மு.கவினர், தலை மறைவாகவும், சிறையிலும் இருந்தனர்.பலர் தாங்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று பகிரங்க அறிக்கை கொடுத்து விட்டு ஒதுங்கினார்கள். என் அண்ணன்எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் நடத்தி வந்த மணி போன்றவர்கள் மீது தி.மு.க அரசு பல கேஸ்கள் போட்டு அலைக் கழித்தனர்.இதே நிலைமை பல ஊர்களிலுமிருப்பாதாக கடிதங்கள் வரும். கொஞ்சங் கொஞ்சமாக ரசிகனாயிருந்தவன் அரசியல் வாதியானான்.மணி மஜீத்துக்கு ஆதரவாக இருந்தான். மறு நாள் எட்மண்ட் நடத்தும் ஊழியர் கூட்டம்.அவன் அதற்கு போகப் போவதில்லை என்றார்கள். நான் அவனிடம் போய் நெடு நேரம் பேசினேன். இவ்வளவு காலம் பொய்க் கேஸ்கள் என்று கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகிப் போய் விடும் மணி என்று சொன்னேன். சம்முவமும் பூக்கடை முத்துக்குமாரும் அருகே நின்று கொண்டிருந்தார்கள். சம்முவம் சொன்னான், “ ஆமா கோவால் அண்ணாச்சி நானும் அதைத்தான் சொல்லுதேன்“ என்று. அண்ணாச்சியா..?எனக்கு சிரிப்பும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மணி, கடைசியில் ஊழியர் கூட்டத்திற்குப் போவதாக ஒத்துக் கொண்டான். அங்கே என்னை யாரும் எதுவும் செய்து விடக் கூடாது என்றும் சொன்னான். நான் அந்த முகாமிலும் போய் அவன் வந்தால், முறையாக நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். எட்மண்ட் சொன்னார், “ அவன் என்ன தம்பி, எனக்கு எதிர்ப்பா ரெண்டு தட்டி போர்டு எழுதி வைப்பானா..அவ்வளவுதான் முடியும் என்றார். “அப்புறம் நாங்களும் என்ன செய்யப் போறோம்,உங்களுக்கு ஆதரவா சொவர்ல படம் போடப் போறோம், அவ்வளவுதானே என்றேன். அவர் மசிந்து வந்தார்.நாளைக்கு அவன் வரட்டும். உண்டான மரியாதையைக் கொடுப்போம் என்றார். அன்று அப்படியே நடந்தது. அவரும் ஜெயித்தார். மணி, நகரச் செயலாளர் ஆனான். இதில் சம்முவம்தான் ரொம்ப சந்தோஷமாக இருந்தான். என் கல்யாணத்திற்கு, என் இடுப்பளவு உயர எம்.ஜி.ஆர் படம் ஒன்றைப் பரிசளித்தான்.

Monday, June 3, 2013

நன்றி: காட்சிப்பிழை திரை- ஜூன் 2013



வழிந்தும் வழியாமலும்...
ராமகிருஷ்ணன் என்றால் தெருவில் யாருக்கும் தெரியாது.கிட்டுப் பிள்ளை என்றால் மட்டுமே தெரியும். “பேர் வச்ச எங்க ஐயாவுக்கே மறந்துருக்கும்..என்று அவரே அடிக்கடி சொல்லிக் கொள்ளுவார்.ரொம்ப ஜாலியான ஆள். இவ்வளவுக்கும் குடும்பப் பொறுப்பு பூராவும் அவர் தலையில்தான்.என்னிடம் தனியாக எப்பவாவது பேசினால் தவறாமல்ச் சொல்லுவார், ஏய் சின்னவனே,நாம் ரெண்டு பேருமே வழிச்சு ஊத்துன தோசைடா..(கடைசிப் பிள்ளகள்) நாம ரெண்டெழுத்துப் படிச்சது பெரிய தப்புடா... நானாவது எஸ்செல்சி யோட நிப்பாட்டி விட்டேன்... மூதேவி காலேஜுக்கு வேற போற நீ..என்பார். அவர் எஸ்.எஸ்.எல்.ஸி படிக்கும் போதே அவரது அப்பா இறந்து போனார்.அவர் அப்பா பண்ணாத வியாபாரம் கிடையாது.சின்னதாய் ஜவுளிக்கடை, காபித்தூள் கடை, பேக்கரிக் கடை, என்று பல கடைகள்.இது போக ரயில்வே ப்ரோக்கர் என்று ஒரு சோலி.பார்சல்கள் அனுப்புவதற்கு ஒரு ஃபார்வேடிங் ஏஜன்ஸி மாதிரி. அது போக, அந்தக் காலத்தில், காங்கிரஸ் ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ரயில் கிடையாது. விருதுநகரில் தோற்ற காமராஜர், கன்னியாகுமரி எம்.பி.தேர்தலில் ஜெயித்த பின்னர், எடுத்த கடும் முயற்சியில் ஒரு வழியாய் ரயில் வந்தது.அதற்கு முன்னர் அவர் ஏனோ அந்த முயற்சியை கையெடுக்கவில்லை.
கன்னியாகுமரிக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள், திருநெல்வேலியிலிருந்து எஸ்.ஆர் (சதர்ன் ரயில்வே) அவுட் ஏஜென்சி பஸ்ஸில் கன்னியாகுமரி போவார்கள். அதற்கான கட்டணம் ரயில் டிக்கெட்டோடு சேர்ந்தது.முதலில் ரொம்பக் காலம், கிட்டுப் பிள்ளையின் அப்பா இந்த பஸ் ஏற்பாடுகளையும் செய்வார். அப்புறம் ஒரு பயோனீயர் பஸ், அவுட் ஏஜன்ஸியாக ஓடிக்கொண்டிருந்தது. அதனாலேயே என்னவோ பயோனியர் பஸ் பூராவும் ரயில்ச் சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.இப்படிப் பல சோலிகள்.சம்பந்தமே இல்லாமல், சங்கரpaaNtiநாராயண பிள்ளை, மட்டன் ஸ்டால் கூட  நடத்தினார் என்பார்கள். கடைசியாய் அரிசிக்கடை வைத்திருந்தார்.அதைத்தான் கிட்டுப்பிள்ளை தொடர்ந்து நடத்தினார்.ஏதோ கொஞ்சம் பரவாயில்லாமல்...வாழ்க்கை ஓடியது. அவரது அக்காவுக்கு அவர்தான் திருமணம் செய்துவைத்தார். அவர் ராத்திரி கடையெல்லாம் அடைத்த பின் சாப்பிட்டு விட்டுத் தெருத் திண்ணையில் உட்கார்ந்து ‘காத்தாட பேசிக் கொண்டிருக்க வருவார்.பெரும்பாலும் செகண்ட் ஷோ சினிமாதான் போக முடியும். ஆனால் ஒரு படம் தவற விடமாட்டார். என்னை விட மூத்தவர். நன்றாகப் பேசிக் கொண்டிருப்பார், ஏய் கோவாலு,பனித்திரை படம் பார்த்தியாடே... எப்படி இருக்கு என்றெல்லாம் விசாரிப்பார்.ஆனால் அந்த உரிமையில் கொஞ்சம் அதிகப் படியாகப் பேசி விட்டால்,பட்டென்று நாலு பேர் முன்னால் ஏதாவது சொல்லி விடுவார்.பரிசு படம் பார்த்தியா என்று ஒருநாள் கேட்டார்.ஆமாம் என்று சொன்னவன், சாவித்திரி ஓவரா நடிச்சிருக்கா, ஜெமினிகணேசன்ல்லாம் சாகணும் என்றுசொல்லி விட்டேன்.”””ஏல உனக்கு பன்னிரெண்டு வயசு இருக்குமா..உனக்கு என்னலே தெரியும்..சரியான வெம்பலா இருக்கியே... என்று பிடிபிடியென்று பிடித்துக் கொண்டு விட்டார். இதற்காகவே காத்திருந்தது மாதிரி,என் தோள் மட்ட நண்பர்கள் எல்லோரும் கை கொட்டிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு நிற்கவும் பிடிக்கவில்லை, போனாலும் கஷ்டம்...ஏதோ கனவு கண்ட மாதிரி, மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் நின்று கொண்டிருந்தேன்.அவர்தான், “புள்ளை முழிக்கிற முழி பேளறதுக்குத்தான்கிற மாதிரி முழிக்கான் பாரு, விடுங்கடே..என்று சமாதானப் படுத்தினார்.

பேச்சை மாற்றுகிற விதமாய்,தம்பிகளா, தரை டிக்கெட்டுக்கே போகாதிங்கப்பா.. அதிலயும், பாப்புலர், ராயல் மாதிரி தரையில் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி போகவே போகாதீங்கப்பா...என்றார். கோவாலு, ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்தி ஹை..பார்த்தியாடே..., இங்க மூடிக்கிட்டு நடிக்கிற பத்மினி வடக்கேன்னா என்னமா தெறந்து போடுதியா பார்த்தியா..என்றார். எல்லோரும் நான் என்ன சொல்லுவேனென்று ரெடியாய்க் காத்திருந்தார்கள். ஹ்ஹும் நான் இன்னக்கி வாயத் திறப்பனா இன்னம என்று அமைதியாய் இருந்தேன்.ஆனால் ஆமா அண்ணாச்சி, என்று சொல்ல,மனசுக்குள்ள குறுகுறுப்பாயிருந்தது. வைஜயந்தி மாலா என்ன வாழுதாம் என்று யாரோ சொன்னார்கள். கிட்டுப்பிள்ளை சித்தப்பா, “ வாழ்க்கை படம் ரிலீஸான அன்னக்கி.. அவளைப் பார்த்து நாக்கைத் தொங்க விடாதவன் கிடையாதுப்பா மவனுவளா, என்றார். அது அவர் அடிக்கடி சொல்லுகிற விஷயம். “அந்தப் படத்தில் இருந்துதான் நான் தரை டிக்கெடுக்குப் போகாம இருக்கேன்.. தொடையைத் தடவறதுக்குன்னே ஒரு எச்சிக் கூட்டம் வரும்டே.. “ என்பார். பின்னணிப் பாடகர் பாடகியர் பற்றி அவருக்கு ஒரு அபார ஞானம் உண்டு.தேவதாஸ் படத்தில் “ எனது வாழ்வின் புனித ஜோதி எங்கே சென்றாயோ..என்று பாடும் ‘ராணியின் குரல் அவரது ஃபேவரிட்.இந்த ராணி பின்னாளில் நாகூர் அனிபாவுடன் பாடிக் கொண்டிருந்தார்.அருமறையின் திரு மொழியில் மறைந்திருப்பது என்ன...? என்ற ஹனிஃபாவின் பாடலில் பதில்க் குரலாக ஒலிப்பது ராணியின் குரல்தான். ஏ.பி கோமளா வின் முல்லை மலர்க்காடு...எங்கள் மன்னவர் தன்னாடு.....என்று ராணி சம்யுக்தா படத்தில் வரும் பாடல் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.பால சரஸ்வதி தேவி பாடிய “நீலவண்ணக் கண்ணா வாடா...வும் அவருக்குப் பிடித்தமானது.டி.எஸ்.பகவதி யின் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்..... பாடலும், https://www.youtube.com/watch?v=KCh5FrlBpqs&feature=endscreen&NR=1 எஸ் வரலட்சுமியுடன் பாடும் தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு https://www.youtube.com/watch?v=rGu1LMh1maM (சிவகங்கைச் சீமை)பாட்டும் ரொம்பப்பிடிக்கும்.சிவகங்கைச் சீமை ரிக்கார்டுகள், (ஒலிச்சித்திரம், பாடல்கள்) வாங்கச் சொல்லி தெருவின் பணக்காரப் பையனிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவன் வீட்டில்தான் ரேடியோகிராம் உண்டு. அவன் கட்ட பொம்மன் ஒலிச்சித்திரம் வாங்கினானேயொழிய இதை வாங்கவில்லை.நம்ம கிட்ட வக்கு இல்லாமப் போச்சே என்று சலித்துக் கொள்ளுவார்.
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எஸ்.வரலட்சுமி பாடும் “ ஏமாற்றம் தானா என் வாழ்விலே...பாட்டுக்கும் உருகுவார். https://www.youtube.com/watch?v=UJlSRw3T1W8.  அவர் மட்டுமல்ல, அவர் பின்னாலேயே பழைய படங்களின் பழைய பாடல்களுக்காக செகண்ட் ஷோவுக்குப் போவோம்.சக்கரவர்த்தி திருமகளின் மோசமான ப்ரிண்டுக்காகக் கூட மேலப்பாளையம் “கண்ணகி, அது காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜாத்திக்கு சொந்தமானது  தியேட்டருக்கு சைக்கிளில் போனோம் அவருடன் ஒரு முறை. அதே போல வணங்காமுடி படத்திற்கும் மூன்று நாலு மைல் தூரம் நடந்து காவடி எடுத்திருக்கிறோம்.அப்பொதெல்லாம் அவர் கொஞ்சம் செயலாக இருந்தார். ரேஷன் கடை லைசன்ஸ் கிடைத்திருந்தது. போகிற வழியில் ஆபிரகாம் ஓட்டலில் ரொட்டி சால்னா உபயம் இருந்தாலும் இருக்கும்.
     பி.பி ஸ்ரீனிவாஸ் மீதும் அவருக்கு மோகம் உண்டு.
மணமாலைஎன்ற படத்தில் நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே ...என்று ஒரு பாடல்.அடிக்கடி சிலோன் ரேடியோவில் போடுவான்.அதை என்னிடம் மறக்காமல் எழுதித் தரும்படிக் கேட்பார்.நானும் எழுதித் தந்தேன்,நானும் வைத்திருக்கிறேன்.தனியாகப் பாடிக் கொள்வார், என்று நினைத்தேன். ‘தெய்வபலம் என்றொரு டப்பிங் படம் அதில் வரும் “மலரோடு விளையாடும் தென்றலே வாராய்....பாட்டில் ஜானகியும் பி.பி ஸ்ரீனிவாஸும் செய்யும் ஜாலங்களை அப்படிப் பேசுவார்.
 அப்போதெல்லாம் ஜானகியின் பாடல்களை அபூர்வமாகவே படங்களில் கேட்க முடியும்.ஸ்ரீதருக்கும் பி.சுசிலாவுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கலில் சுசிலாவை முற்றாகத் தவிர்த்து ஸ்ரீதர், சுமைதாங்கி, போலீஸ்காரன் மகள் படங்களில் பி.பி.எஸ் –எஸ் .ஜானகி ஜோடியைக் கொண்டு வந்தார்.பாலும் பழமும் , தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், என்று அப்போதெல்லாம் டி.எம்.எஸ்- சுசிலா மட்டுமே எல்லாப் பாடல்களையும் ஒரு படத்தில் பாடுகிற காலம் ஒன்று இருந்தது.ஜானகி “ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி...போல ஏதாவது ஒரு பாடலை அபூர்வமாகப் பாடுவார். நிச்சயம் அது சிறந்த பாடலாகவே இருக்கும். மிகப் பெரிய எழுத்தாள நண்பரிடம் அப்போது பேசிக் கொண்டிருந்த போது.... ஆஷா போன்ஸ்லே மாதிரி செக்ஸி வாய்ஸில் பாட ஜானகிதான் சரி என்று சொன்னேன்.. ஜானகிக்கு செக்ஸி வாய்ஸா என்று சிரித்தார். அவர், சிங்கார வேலனே தேவாவை விட்டு விலகாதவர். பின்னாளில் ஜானகி பாடாத படமே இல்லையென்ற இளைய ராஜா காலத்தில் “ நேத்து ராத்திரி யம்மா...கேட்டபோது இந்த உரையாடலை அவரே ஞாவகப் படுத்திச் சரியாதான் சொல்லிருக்கீங்க என்று சிரித்தார்.
கிட்டுப்பிள்ளைச் சித்தப்பாவுக்கு “எங்க வீட்டுப் பெண்’’படத்தில் பி.பி.எஸ் பாடும், “சிரிப்புப் பாதி அழுகை பாதி ...பாடல் ரொம்பப் பிடிக்கும். தத்துவப்பாடலை இப்படித்தாண்டா பாடணும் என்பார்.ஆடிப்பெருக்கு படத்தில், சுரதா எழுதி, பி.பி.எஸ் பாடிய புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது..பாடலை உதாரணமாகச் சொல்லுவார். ‘அவள் யார் என்று ஒரு படம்,சிவாஜி பண்டரிபாய் என்று நினைவு,எஸ்.ராஜேஸ்வரராவ் இசை. இயக்கம் கே.ஜேமகாதேவன் (ஜெமினி கதை இலாகாவின் கே.ஜே.மகாதேவன், சிறந்த திரைக்கதை ஆசிரியர், வஞ்சிக் கோட்டை வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் இவர் திரைக்கதைகள்.) அவள் யார் படத்தில் ஒரு வங்காளப் பாடகர் “ ரகுநாத் பாணிக்ரஹி(பெயர் சரியாய் நினைவில்லை, பட்டப்பெயர் பாணிக்ரஹி) பாடிய “கண் காட்டும் ...என்றொரு பாடல், அதெல்லாம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். நீ யாரோ, நான் யாரோ, நிலையற்ற வாழ்விலே யாருக்கு யார் யாரோ... “ என்று ஒரு பாடல் அது பாணிக்ரஹியா டி ஏ மோதியா என்று நினைவில்லை. அதுவும் அவருக்குப் பிடித்த பாடல். ‘அல்லி பெற்ற பிள்ளை என்று ஒரு படம், அதில் குதிரை பாடுவதாக ஒரு பாடல் வரும், “ எஜமான் பெற்ற செல்வமே....என்று ஒரு பாடல். அது திருச்சி லோகனாதனென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.இல்லை அது ஜி.ராமனாதன் பாடியது.,கிட்டப்பா சொல்லுவார்.( இசை: கே வி மகாதேவன்). அவருக்கு அபூர்வக் குரல்கள் மீது ஒரு அலாதிப் பிரியம்.அவரும் இன்னொரு மணி அண்ணனும் சேர்ந்தால் கொண்டாட்டமாகப் பேசிக் கொள்வார்கள்.இரண்டு பேருக்குமே டி எஸ் பகவதி, ஜமுனாராணி பாடல்கள் என்றால் அவ்வளவு பிரியம்.மாடர்ன் தியேட்டர்ஸ் கவிதா என்றொரு படம் எடுத்தார்கள்.குமுதம் படத்தை அடுத்து வந்தது.அவ்வளவு எதிர்பார்ப்புடன் வந்தது. படம் படு ஃப்ளாப். பி.பி.எஸ்- ஜமுனாராணி ஹம்மிங்குடன்  பறக்கும் பறவைகள் நீயே பாடலும்  மற்ற பாடல்களும் நன்றாக இருக்கும்.கிட்டுச் சித்தப்பாவுக்கு கல்யாணமானது, ஆனால் மனைவிக்கு இவரைப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் இரவு அவர் “ஒண்ணுமே புரியலை உலகத்திலே..என்று சந்திரபாபு பாடலைப் பாடிக் கொண்டே வந்தார். வழக்கமாக சிரித்தபடிதான் வந்தார்.இது குமாரராஜா படத்துல, இதுல பாலையா பாடும் “மணமகளாக வரும் மங்கையெவளோ....பாட்டைக் கேட்டிருக்கீங்களாப்பா... யாரும்..என்றார். எல்லோரும் என்னை ஒரு கள்ளச் சிரிப்புடன் பார்த்தார்கள். நான் ஆமா வி.என்.சுந்தரம் பாடியது என்றேன்.அதுக்குத்தான் சின்னவன் வேணுங்கிறது என்றார். மறுநாள்தான் தெரிந்தது, சித்தப்பா,சந்திரபாபு மாதிரியே மனைவியைக் கும்பிடு போட்டு அனுப்பி விட்டார் என்று. அதானாலோ என்னவோ  கடைக்கு எதிராக உள்ள ‘சங்கரோஜித பண்டிதர் தெருவுக்குப் போய் விட்டார்.உண்மையிலேயே ரொம்ப நல்ல பேர் கொண்ட தெரு, கெட்ட பேர் எடுத்துக் கொண்டிருந்த காலம் அது. பலசரக்குக் கிட்டங்கிகளும், இருட்டு நடவடிக்கைகளும் அதிகமாகி விட்டது, அங்கே.
ரொம்ப காலத்திற்குப் பின் திருநெல்வேலி ரத்னாவில் ‘தேவதாஸ்போட்டிருந்தார்கள்.சிறுவயதில் புரியாமல் பார்த்த படம்.காதலில் உழன்று கவிதை எழுத ஆரம்பித்த பிறகு பார்க்கவில்லை.போஸ்டர் பார்த்ததிலிருந்து ஆஃபீஸ் எப்போ முடியும் என்று காத்திருந்தேன்.என் கல்லூரி ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார்.அவர் அருகே அமர வேண்டியதாகி விட்டது.படம் மெதுவாக ‘சரத் சந்திரரின் சோக உலகிற்குள் நழுவிக் கொண்டிருந்தது.இவள் நினைவில் வரத் தொடங்கினாள். இவளும் பார்வதியும் காணாதென்று, சந்திரமுகியும் வேறு தன் நிறைவேறாத காதலுடன் படுத்த ஆரம்பித்தார்கள்.மனசு விட்டு அழலாம் என்றால் பக்கத்தில் பழைய வாத்தியார்.அப்போது மறுபடி மது விலக்கு அமுலில் இருந்தது. தேவ்பாபுவுடன் சேர்ந்து குடிக்க முடியாது. இருட்டில்,கால்களை மிதித்தபடி எங்களைக் கடந்து போனார் ஒருவர். கோபம் வந்தாலும் சற்றுத் தள்ளிப் போனதும் ஜிஞ்சர் பரீஸ் வாசனை மூக்கைத் துளைத்து, மன்னிக்கச் சொன்னது, மன்னித்தேன். என் அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா..என்று சந்திர முகி பாடவும், சற்றுத் தள்ளி உட்கார்ந்தவர் கையைக் காட்டி அழைத்தார்.அடடா கிட்டுப்பிள்ளைல்லா என்று நினைத்தபடியே அருகில்ப் போனேன்.முதலில் வாத்தியாரை விட்டுத் தள்ளிப் போனால்ப் போதும் என்றிருந்தது.
பாருடா புளியங்குடி அய்யர் (சி.ஆர்.சுப்பராமன்) என்னமா பாட்டுப் போட்டிருக்காரு..என்றார்.மடியிலிருந்து ஒரு பாட்டிலை  எடுத்து வாயில் சரித்துக் கொண்டார். நாலைந்து ஆரஞ்சு வில்லைகளை நறநறவென்று கடித்தார்.எனக்கு ஒன்றைத் தந்தார்.எனக்கு அதைக் கொடுங்களேன் என்று கேட்க ஆசை. பட்டென்று ஏதாவது சொல்லிரப் போறார் என்று பயம்.அடுத்த பாட்டு வந்திருந்தது.உறவும் இல்லை பகையும் இல்லை..வாத்தியார் கண்களில் தெளிவாக நீர்க் கோடுகள்... அடடா நல்ல வேளை அவராவது நிம்மதியாய் அழட்டும் என்று நினைத்தேன். எனது வாழ்வின் புனித ஜோதி  ....யார் பாடுதா தெரியுதா ராணிடா...ராணி...உனக்குத் தெரியுமா ராணியை...அவதான் எங்க வீட்டு மச்சில் குடியிருந்தாளே....அவ எப்படிப் பாட்டுப் பாடுவா தெரியுமா...நீ எழுதிக் கொடுத்த பாட்டை என்னமாப் பாடுவா தெரியுமா...பாடல் முடிந்து  காட்சி நகரத் தொடங்கியது ...அடப்பாவி மனுஷா இதுக்குத்தான் பாடலை எழுதிவாங்கிட்டுப் போனாயா..இதுக்குத்தான் பாட்டுப் புஸ்தகமா வாங்கிக் குவிச்சியா...எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன்.

சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகு தூரம் செல்வது போல
காதலின் தன்மை விலகிப்போவதும் உண்மை..
பாடல் வரிகளை நினைவுக்குள் நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஓவ்வ்.... என்று சித்தப்பா வாந்தி எடுத்தார்...என் தோளில் போட்டிருந்த கை இறுகவும் தளரவுமாய் இருந்தது. இந்தச் சவம், கக்கி விட்டால் நாத்தம் குடலைப் பிடுங்கும்...அதற்கப்புறம் படம் பார்க்க முடியவில்லை..அய்யோ என்றிருந்தது. என்ன நினைத்தாரோ எழுந்து கொஞ்சம் தள்ளாடியபடி வெளியே போக முயற்சித்தார்.மடியிலிருந்து பாட்டில் சில்லென்று கீழே விழுந்தது.. அதை எடுத்துக்க, நா வெளியே நிக்கறேன் என்று போய் விட்டார். பெரிய கூட்டமெதுவும் இல்லை.. அதனால் அவ்வளவு சிக்கலில்லாமல் அரங்கை விட்டு வெளியேறி விட்டார். மனுஷன் ஒரு பவுண்டு இஞ்சி பாட்டிலில் பாதியைக் காலி பணியிருந்தார்.கடையாச் சரித்த போது எதுவுமே சேர்க்கவில்லை போல. எவ்வளவு தண்ணீர் வீட்டாலும் உரைப்பு நாக்கைப் புடுங்குமே, என்ன செய்வாரோ தெரியலையே என்று அவசரமாய் வெளியே வந்தேன். அந்த உருண்டையான எழவுப் பாட்டிலை மறைக்கவும் முடியாது. திண்டாட்டமாய் இருந்தது. தரை டிக்கெட் கிழிக்கும் ஒருத்தன் எதிரே வந்தான்.., யாரு அரிசிக்கடையா... பஸ் ஏறிப் போயாச்சு....இதை என்ன செய்யப் போறிய... என்றான். அவனிடம் தந்து விட்டு தியேட்டருக்குள் பார்த்தேன்.படம்முடிந்து விட்டது. வெளியேறும் எல்லார் கண்ணிலும் வழிந்தும் வழியாமலும்... கண்ணீர்.


பல்லவி
நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே
கொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள்
ராதை கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள்
சரணம்
குழந்தைப் பருவம் முதல் ஒன்றாகச் சேர்ந்தே
கோகுல வீதிகளில் ஆடியதை மறந்தே
குழலினோசை தரும் தேன் சுவையைப் பிரிந்தே
விழிகள் வேறு திசை maமாறியே
கொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள்  (நெஞ்சம்..)

இன்ப ஒளீ நீங்கி இருள் சேரும் நேரம்
சந்தடியே இல்லை யமுனா நதி ஓரம்
கண்ணன் வேறானான் ராதை வேறானாள்
இன்னல்ப் புயலால் திண்டாடலானாள்
என் சொல்வேன் இறைவா உன் லீலையை
கொஞ்சும் கண்ணன்மேல் கோபமாய்ப் போகிறாள்....(நெஞ்சம்)

மானமே பிரதானமாய்- மெய்க்
காதல் தனை மறந்தே போகிறாள்
கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்

நவனீத ஜோரன் குழலூதும் நேரம்
நாடி வந்தே நின்றாள் ராதையே
நாத வெள்ளந் தன்னிலே - காதல்
கண்ணன் மனம் லயித்ததனால் காணவில்லை பேதையை
அவன் லட்சியமே செய்யவில்லை ராதையை

பாராமுகம் கண்டு மாறாத்துயர் கொண்டு
ஏமாறி ராதை போகிறாள் –மனமே
ஏமாறி ராதை போகிறாள்
கொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள் (நெஞ்சம்)

தவறு ஏது ராதை மீது சாகசமே நீ செய்தல் தகாது
தாமதம் போதும்,ஜாலம் செய்யாதே கண்ணா
சந்தோஷமாகவே பாராய்
சாந்தி இல்லாமலே ஏதும் சொல்லாமலே
தனியாக ராதை போகிறாள்-உண்மை

உணராமல் ராதை போகிறாள்      (நெஞ்சம்) அவசியம் இந்தப்பாடலைக்கேளுங்கள்
http://www.youtube.com/watch?v=ZPnDLwT9g2c


Visitors