Monday, August 2, 2010

ஓடும் நதி-43


திருநெல்வேலியான் தேர் பாரான், திருச்செந்தூரான் கடலாடான்.என்றொரு சொலவடை, உண்டு. நமக்கு அருகிலிருப்பதையும், அணுக, பார்க்க எளிதானவற்றையும் நாம் பார்க்க மாட்டோம், அனுபவிக்க மாட்டோம். எங்கே போய்விடப் போகிறது, பார்த்துக் கொள்ளலாம்என்ற ஒத்திவைப்பு மனோபவம்தான், காரணம். இதே போலத்தான் நாம் வாங்கும் புத்தகங்களையும். இரவல் புத்தகம் என்றால் உடனே படித்து விடுவோம். நாமே விலைக்கு வாங்கி விட்டால்,இந்த ஞாயிற்றுக் கிழமை படித்து விடலாம் என்று ஒத்தி வைப்போம், ஆனால் ஞாயிற்றுக் கிழமை,புத்தகத்தை தேடி எடுத்து உட்கார்ந்தால் அத்தனை சோம்பலும் ஒட்டிக் கொள்ளும்.அல்லது வேறு உருப்படியான அரட்டைக் கச்சேரி வாய்த்து விடும். விடுமுறை முடிந்து விடும்.மறுநாள் அலுவலகம் புறப்படும் அவசரம், வேலைகள் ஒவ்வொன்றாய்த் தொற்றிக் கொள்ளும்.அடுத்த ஞாயிறு படிச்சுருவோம் என்று ஒத்திவைப்போம், ஆனால் அப்பொழுதும் இதே கதைதான்.

குற்றாலம் போவதென்றால் அப்போதெல்லாம் ஒரே குஷியாக இருக்கும்.பத்து ரூபாய் இருந்தால் போதும்ஆனால் அதைப் புரட்ட ரொம்பச் சங்கடப் படுவோம். காலையில் முதல் பஸ்ஸில் நான்கரை மணிக்கு திருநெல்வேலியிலிருந்து கிளம்பி விடுவோம்.ஆறு மணிக்கு குற்றாலம் வந்தால், அத்தனை அருவியிலும் ஒருமுறை குளித்து முடிக்க எட்டரை மணியாகி விடும். ஒரு ரூபாய்க்கு நாலைந்து இட்லி, காசு குறைவாய் இருப்பவர்கள்., இரண்டு வாழைப்பழத்தில் பசி முடித்து விடுவார்கள். அப்புறம் மலையேறத் துவங்கி விடுவோம். மலையேற்றமென்றால், “இப்போதைய டாஸ்மாக் பாதையில் அல்ல”, உண்மையிலேயே செண்பகாதேவி அருவி, அதை முடித்து தேனருவி. அங்கே குளிக்க முடிந்தால் குளிப்போம், ரொம்ப வெள்ளமாக இருந்தால், வானின் வழி ஒழுகும் தேனருவியை வியந்து பார்த்துவிட்டுத் திரும்புவோம். தண்ணீரால் நிரம்பிய வயிறு, காலியாகி பசி காதை அடைக்கும்.இரண்டு ரூபாய்க்கு எங்காவது சாப்பாடு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு பீடியைப் பற்றவைப்பார்கள். காலையை சிகரெட்டில் கண தோரணையாய் ஆரம்பித்திருப்பார்கள். மாலை நெருங்க நெருங்க காசு காலியாகி,பீடிக்கு இறங்கியிருப்பர்கள். மாலை ரயிலில் ஏறிப் படுத்தால், முன்னிரவில் டவுணில் இறங்கி தளர் நடையாய் வீடு வந்து இருக்கிறதைத் தின்று விட்டு, தூக்கம். மறுநாள் அருவி பற்றிய பெருமூச்சு நிறைந்த பேச்சு.

சமயத்தில் கார் வைத்திருக்கிற நண்பர்கள், தங்கள் அப்பாக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, கார் கேட்டு வாங்கிக் கூட்டிப் போவார்கள். ஆனால் ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரைச் சேர்த்துக் கொள்வார்கள்.அதில் ஒரு கஷ்டம், அவர்கள் இழுத்த இழுப்பிற்கு உடன்பட வேண்டும்.ஒரு சமயம் ஒரு நண்பர் காரில் அழைத்துப் போனார், அன்று ஒருவரது மோதிரமோ, செயினோ ஐந்தருவியில் காணாமல்ப் போய்விட்டது.அதற்கென்றே இருக்கிற ‘அரிப்புக் காரர்களை விட்டு தேடச் சொன்னோம்.அவர்களும் தடாகம் முழுக்க தேடிப் பார்த்துவிட்டு கையை விரித்து விட்டார்கள். சிலர், அவர்கள் கிடைத்தாலும் தரமாட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் உண்மையில்லை. திரும்புகிற வழியில், அது காணாமற் போனதற்கு அன்று தங்களுடன் புதிதாய் வந்த ஒருவரின் ராசிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.நான் மறுத்து, வாதம் வலுக்கவே, இறங்கிக் கொண்டேன். அவர்கள் அதற்கு வருத்தப்படவில்லை.காரைக் கிளப்பிக்கொண்டு போய் விட்டார்கள். அதற்கப்புறம் நான் அவனுடன் சேர்ந்து கொள்வதில்லை. எனக்கு பத்து ரூபாயில், குற்றாலம் போய் வருகிற சந்தோஷத்தை இது ஒருபோதும் தரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், என்னை அவர்கள் இறக்கிவிட்ட இடத்தினருகேதான் நாங்கள் கவிதைப் பட்டறையை ஆண்டு தோறும் நடத்தினோம்.எங்கிருந்தெல்லாமோ இலக்கிய நண்பர்கள் வந்து அதில் கலந்து கொண்டார்கள்.

அரிப்புக்காரர்களுக்குக் கூட அந்த ‘உரிமத்தைஏலம் விட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். அரிப்புக்காரர்களைப் போலவே, செண்பகாதேவியின் ஆழத்தடாகத்திலோ, பேரருவியின் பொங்கு மாங்கடலிலோ ஆள் தொலைந்து போனாலும் தேட, ’வட்டப் பொட்டு என்று ஒரு தாத்தா உண்டு.அவரை அழைத்துவருவார்கள்.விசாலமான நெற்றிக்கும் வழுக்கைத் தலைக்கும் சேர்த்து பெரிய வட்டமாக குங்குமத்தை அப்பியிருப்பார், அந்தத் தாத்தா. அவர் அநாயசமாக பொங்குமாங்கடலில் குதித்து பாறைகளுக்கு இடையில் சிக்கியிருக்கிற உடலை எடுத்து வந்து விடுவார்.நான் அவரை, என் முப்பது வயதில், முதலில் பார்த்த போதே அவருக்கு அறுபது வயதிருக்கும்.கோவில் சன்னதித் தெருவில், கதராடை அணிந்து,யார் கடையிலாவது அமர்ந்து, வெற்றிலை போட்டபடி பேசிக் கொண்டிருப்பார், திடீரென்று போலீஸோ, யாரோவாவது வந்து அழைத்துப் போவார்கள்.ஒரு மறுப்பும் சொல்ல மாட்டார், கிளம்பி விடுவார்.நல்லவேளை அவரை ஏலம் விடவில்லை.அவர் இல்லவும் இல்லை, இருந்திருந்தால் அதையும் செய்திருப்பார்கள்.

அவரால் முடியவில்லையென்றால், தூத்துக்குடியிலிருந்து முத்துக் குளிக்கிறவர்களை அழைத்து வருவார்கள். இந்த மாதிரி நேரங்களில் காவல்துறையினரின் பாடு ரொம்பக் கஷ்டம். அழகு இருக்கும் இடத்தில்தானே ஆபத்து இருக்கும். விட்டு விடுதலையான பறவைகள் போல் வந்து மகிழ்ச்சியைக் கொண்டாடிச் செல்பவர்கள் மத்தியில் சிலர் தங்கள் உடன் வந்தவர்களையே விட்டுச் செல்வது பெரிய துயரம்தான். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் தன் போக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறது அருவி. பி.பி.ராமேந்திரனின் ஒரு மலையாளக் கவிதை நினைவுக்கு வருகிறது,

அம்மா

உன் பாத்திரத்தை

நிறைக்க

அருவிக்கு

ஒரு புன்னகை போதும்.

ஆனால் கண்ணீர்த் துளிகளும், அம்மாவிலும் அருவியிலும் இனந்தெரியாமல் கலந்திருப்பதும் உண்மையல்லவா.

Visitors