Monday, July 26, 2010

ஓடும் நதி-42



ஆறாம் வகுப்பு படிக்கும் போதே மில்லுப் பிள்ளை வீட்டு மணியிடம் ஒரு பெட்டிக் காமிரா உண்டு. அவனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும் சினேகிதர்கள்தான். அவனது உறவினர் ஒருவர் புஸ்தகமாடல் காமிரா வைத்திருந்தார்.அவர் நன்றாகவே படம் எடுப்பார்.இரட்டை வேட போட்டோஎடுப்பதில் கெட்டிக்காரர்.காமிரா லென்சில் கருப்பு அரைவட்டத்தாளை ஒரு ஓரத்தில் ஒட்டி, ஒரு படமும், அதையே அடுத்த ஓரத்தில் ஒட்டி இன்னொரு படமும் எடுப்பார். (மாஸ்க் ஷாட்!) ப்ரிண்ட் போட்டதும் மணி இரடை வேடத்தில் சிரித்துக் கொண்டிருப்பான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவனை படம் எடுக்கும் முன், என்னை உட்கார வைத்து வெறும் ஒத்திகை பார்ப்பார்.என்னை ஒரு வேடத்திலாவது எடுங்க அண்ணாச்சி என்ற கெஞ்சல்கள் எதுவும் பலித்ததில்லை.நான் பாத்தாம் வகுப்பு படிக்கும் போது, காசிக்குப் போய் வருகையில் எனக்கு ஒரு காமிரா வாங்கி வந்தார் என் அப்பா.

என் காமிரா ஆசை ஒரு வழியாய் நிறைவேறியது.நான் நண்பர்களுடன் நிறைய படம் எடுத்தேன். இரவலும் அதிகம் தருவேன்.என் காமிராவில் 12 படம் வரும். மணி காமிராவில் எட்டு தான் வரும்.நானும் இரட்டை வேடமெல்லாம் எடுத்துப் பார்த்தேன். எடுத்ததெல்லாம் சரிதான், ஆனால் காமிரா பொசிஷனை மாற்றக் கூடாது என்று தெரியவில்லை.கல்யாணி அண்ணன் ஒவர்லேப் ஆகி, மேகத்தில் பாதியும் தரையில் பாதியுமாக நின்றார். சிலோன் பேனா நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் எனது ஹாபி, புகை பிடிப்பது‘ என்று எழுதினேன். புகைப் படத்தில், படம் புகையாகி விட்டது. பதில்க் கடிதத்தில் பயங்கரமாய் கிண்டலடித்திருந்தான், மட்டகளப்பு கோபாலராசா. கடல் தாண்டி ‘காய்விட்டு விட்டேன்.

கடையநல்லூரில் வேலை பார்த்த போது யாஷிகா எலெக்ட்ரோ-35 காமிரா வாங்கும் ஆசை பிடித்து ஆட்டியது.வெளிநாடு போய் வருகிறவர்களிடமெல்லாம் சொல்லி விடுவேன்.ரொம்ப நாள் பலிக்கவில்லை.திடீரென்று ஒரு நாள் வங்கிக்கு வந்த ஒருவர், சார் காமிரா கேட்பீர்களே இது பிடிச்சிருக்கா என்று எதைத் தேடினேனோ அதைக் காட்டினார்.அவரிடம் நான் கேட்டதே இல்லை. தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது, சிந்தும் முத்தத்தால் என்னை அள்ளிக் கொண்டது என்று பி.பி, சீனிவாஸ் மனசுக்குள் பாட, கொடுங்க சாமி, என்று வாங்கிக் கொண்டேன்.ரொம்ப நியாயமான விலையே கேட்டார்.அது அநியாயமாய்க் களவு போகும் வரை ஏகப்பட்ட போட்டோக்கள் எடுத்தேன்.

புகைப்படம் எடுப்பது சிலருக்கே கலை, பலருக்கு அது தொழில்.கல்யாண வீடுகளில் இங்கே பாருங்க என்று காமிராவைப் பார்க்க வைத்தே கொன்று விடுவார்கள்.ஆனால் பலரும் ‘அட்டென்ஷனில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது வேடிக்கையாய் இருக்கும்.மாறாக வடகரா பாஸ்கரதாஸ் போன்றவர்கள்,காமிராவைப் பார்க்காமல் எங்காவது பராக்குப் பர்க்கும் போதுதான் எடுப்பார்கள்.தப்பித்தவறி பார்த்து விட்டல். “போச்சு, இன்னம எல்லாம் ரிஜிட் ஆயிடும் சேட்டாஎன்று திட்டுவார்.கலைஞருடன் ஒரு மேடையில் இருக்கையில் படம் எடுக்கும்படி அவரை சைகையால் கெஞ்சிக் கொண்டிருந்தேன். இரு, எப்ப நீ என்னை பார்க்காமல் இருக்கிறாயோ, அப்ப எடுக்கறேன்என்று சைகையால் அவரும் சொன்னார். கடைசி வரை எடுக்கவில்லை. விழா முடிந்து மேடையை விட்டு இறங்கும் முன், நான் கலைஞரிடமே ஆசையை வெளியிட்டேன், அவர் சம்மதித்தார் வடகரா வந்தார்.எல்லோரும் உம்மென்றிருந்தார்கள், கலைஞர், கலாப்ரியா, காமிரா ப்ரியாவாகி விட்டார், என்றதும் எல்லோரும் தன்னை மறந்து சிரிக்க, வடகரா வல்லிய சந்தோஷத்தோட க்ளிக்கித் தள்ளினார்.

ஒரு உலகப்புகழ் போட்டோ கிராபர், புகைப்படம் எடுக்கச் சென்றால், வீட்டுக் கதவைத் தட்டும் முன்னரே காமிராவை ரெடியாக வைத்திருப்பாராம். கதவைத் திறந்த உடன் பளிச் என்று எடுப்பாராம். அந்தப் படங்கள்தான் பிரமாதமாக இருக்குமாம்.(ஆனால் அவை பெரும்பாலும் வேலைக்காரர்களின் படமாகத்தானே இருக்கும்.!)

சில புகைப்படங்கள் உலகையே உலுக்கி இருக்கின்றன.வியட்நாம் போரின் போது, Phan Thị Kim Phúc என்ற சிறுமி நாபாம் குண்டுகளால் தாக்கப்பட்டு ஆடையெல்லாம் எரிந்து போக உடலில் தீயே ஆடையாக ஓடி வரும் படத்தை, நிக் உட் என்னும் புகைப்படக்காரர் எடுத்தார். அது உலகை எல்லாம் அமெரிக்காவுக்கு எதிராகத் திருப்பியது.அவர் புலிட்சர் பரிசை வென்றவர்.அப்படி அபூர்வங்களை படமெடுக்க வாய்க்க வேண்டும். அதை விடத் துணிச்சல் அதிகம் வேண்டும்.

அலுவலகம் செல்லும் பாதையில், ஒரு பெண்,திண்ணையில் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருப்பாள். அவள், பீடிச் சொளவின் மத்தியில், புகையிலைத்தூள் நடுவே, ஒரு சட்டமிட்ட சிறிய படத்தைக் கவிழ்த்தி வைத்திருப்பாள்.நான் அவளைக் கடக்கும் போது சமயா சமயத்தில் பார்ப்பேன்.சமீபமாய் ஒருநாள் அவளது அம்மா சத்தமிட்ட படி படத்தை தெருவில் எறிந்தாள். அந்தக் கரிமுடிவாந்தான், கண்ணு பத்தலைன்னு கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டானே, எதுக்கு அவன் கூட இருக்கும் படத்தை வச்சுக் கொண்டாடுதே..என்று கத்திக் கொண்டிருந்தாள்.அவள் மாற்றுத்திறனாளி என்று அப்போதுதான் தெரிந்தது. யார், அவள் கணவனா,நானா,காலமா, கடவுளா, யார் குருடன்.

Visitors