Tuesday, February 9, 2010

ஓடும் நதி-18

நன்றி: அபிலாஷ்/thiruttusavi.blogspot.com



”நினைவின் விருந்தாளியாக கவிதை பிரவேசிக்கும் போது நம் உலகமே மாறி விடுகிறது.”


எங்கேயோ படித்தவை இந்தச் சில வார்த்தைகள்.புது விருந்தாளியாக வந்து நிரந்தரமாக உறவாகி, என்னுடனேயே தங்கி விட்டது இந்தச் சொல் அடுக்கு. அனுபவங்கள் மொழி வழிப்பட்டவை அல்ல, ஏனெனில் பூமியின் பல இடங்களிலும் பல மொழி பேசுவோரிடையேயும் நிகழ்பவை அவை. ஆனால் மொழியின் மூலமாகவே இது போன்ற அனுபவங்கள் ஏட்டிலும்,புத்தகங்களிலும், இன்று கணிணியிலும் பதிவாகி காலா காலத்திற்கும் நிலைத்து விடுகிறது.
முந்தின நாளின் நிகழ்ச்சிகளை. முந்தின இரவின் கனவுகளை அசை போட்ட படி, சற்றுச் சோர்வுடன், குளிப்பதற்காக குறுக்குத் துறை ஆறு நோக்கி, நடை போடும் அற்புதமான காலைப் பொழுதுகள் அவை. இரு புறமும் வயல் வெளி, நடுவில் சாலை, சாலையின் இரு மருங்கும் மருத மரங்கள். நிழலும் வெயிலும் மாறி மாறி உடலில்ப் பட நடக்கும் போது, வயலில் நாற்று நட்டுக் கொண்டிருப்பார்கள், பெண்கள்.
”நாற்று நடும் பெண்கள்
பாடும் பாட்டில் மட்டும் தான்
சேறு பட்டிருக்கவில்லை”
- என்கிற கொனிஷ் ரெய்ஸானின் ஜப்பானிய ஹைகு நினைவுக்கு வரும். சோர்வு எங்கோ பறந்து விடும், இறந்தகாலமும் கனவும் மறைந்து போகும்.(இப்போது அந்த அருமையான வயல்களெல்லாம் குடியிருப்பு மனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன, நெல்லுக்குப் பதிலாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனை அளவைக் குறிக்கும் கல்கள், கல் வேலிகள்.)
வேலைக் களைப்பில் மனைவியும், தேவதைக் கனவுகளுடன் குழந்தைகளும், சுகமாய்த் தூங்கிக் கொண்டிருக்க ‘நானொருவன் மட்டிலும்’ தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பேன்.தலையணையை மாற்றி, இலேசான இரண்டு தலையணைகள் வைத்து, முகத்தை அழுத்தி தூங்க முயற்சித்தாலும்.... ம்ஹூம் தூக்கம் வராது. திடீரென்று மாயகாவ்ஸ்கியின் கவிதை வரிகள் நினைவுக்கு வரும்,
”...... ...... ......... ...........
எனக்கு எதுவுமே முழுதாக வேண்டும்
இந்த பிரபஞ்சத்தையே தந்தாலும்
முழுதாகத் தாருங்கள்
சாய்ந்து ஒருக்களித்துறங்கும்
என் காதல்ப் பெண்ணின்
ஒரு கன்னத்தை தாங்கி
முத்தமிட்டுக் கொண்டிருக்கும் தலையணையின்
அந்த ஒரு புறத்தை மட்டும்
தந்தால் போதும்....”-
இந்த வரிகளின் வாலைப் பிடித்துக் கொண்டே மனம், கவிதை கவிதையாய் தாவும். ஏதோ ஒரு கணத்தில் தாவுதல் மறந்து தூக்கம் தானாய் அப்பிக் கொள்ளும். இது, எழுபதுகளில் புவியரசு சொன்ன கவிதை.
”....... ......... ....... ......
காகிதத்தில் ஒரு வார்த்தை எழுதக் கூட
இனி இடம் இல்லை-அதனால்
என் முத்தங்களை இதோ
இந்த தபால் வில்லையின்
பின்னால் இட்டிருக்கிறேன்.....”.
என்று இன்னொரு ரஷ்யக் கவிதை, ஒவ்வொரு முறை ஒரு ஸ்டாம்ப்பை, எச்சில் தடவி ஒட்டும் போதும் நினைவுக்கு வரும். அது தபால் ஆஃபீஸோ, வீடோ,தன்னை மறந்து ஒரு சிரிப்பு வரும்.
சென்னையின் பரபரப்பில், உற்சாகமாய் நண்பர்களுடன் இரண்டு நாட்களைக் கழித்து விட்டு ஊர் திரும்பி, தனிமைக்குள் தவித்துக் கொண்டிருந்தேன். எல்லோரும்,
”நான் போய் வருகிறேன்
சமர்த்தாக ஒற்றுமையாய் விளையாடுங்கள்
என் அடுப்பங்கரைக் கரப்பான் பூச்சிகளே ” -என்னும் இஸ்ஸாவின் ஜப்பானிய ஹைகு மாதிரி, கரப்பான்களுக்குத் துணையாக என்னை விட்டு விட்டு அவரவர் அலுவல்களுக்குச் சென்று விட்ட திங்கட்கிழமை காலைப் பொழுது.ஓஹோ நாம் பணிக்குச் சென்றிருந்த போதும் இப்படித்தான் கரப்பான் பூசிகளும், சுவர்க் கோழிகளும் தனியாய்க் கொட்டமடிக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கைப்பேசியில் ஒரு அழைப்பு. `ஓடும் நதி’ தொடரைப் படிக்கிற ஒரு வாசகர் பேசினார். கவிதைகள் பற்றி, வட்டார வழக்குச் சொற்கள் பற்றி, நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னார், மலையாள இயக்குநர் ஒருவர் சொன்னதாக, மலையாளப் பழமொழி (சொலவடை) ஒன்றை.
“பசுவின் மடுவில் கொசு கடித்தாலும், அது குடிப்பது பாலை அல்ல; ரத்தத்தையே குடிக்கும்”-என்று. பகீரென்றது எனக்கு. என்ன விதமான மொழிச் சேர்க்கை. மொழிச் சேர்க்கையை விட என்ன அற்புதமான அவதானிப்பு இது. மலையாளமா, தமிழா, ஓரொருவர் மொழியையும், காலத்தையும், இடத்தையும் தாண்டிய விஷயமல்லவா. அந்த மூன்றையும் அழித்து, பூமிப் பந்தில் மனிதர்களை ஒன்றிணைக்கிற காரியமல்லவா? என்று தோன்றியது. அதற்குப் பின் தனிமை போன இடம் தெரியவில்லை. பேசிக் கொண்டே இருந்தோம். மதிய உணவிற்கு மனைவி வீடு திரும்பியதைச் சொன்னதும், நீண்ட உரையாடலைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தார் அந்த நட்சத்திர வாசகர். அது பாடலாசிரியர், தம்பி, கபிலன்.

Visitors