Friday, November 5, 2010


வேற்றூர்ப் புழுதி

வழிப்போக்கனைப்

புரிந்து கொண்ட வெயில்

சற்றே மேகத்துள் மறைந்தது


ஊரொன்றை நெருங்கும்

ஒற்றைத் தடத்தின் ஓரம்

பசியாறிக் கொண்டிருந்த ஈக்கள்

சற்றுப் பொறேன்

புதுச்சீழ் அருந்திக் கொள்கிறோம்

என்று கால் புண்களின்

மேற்படர்ந்திருந்த தூசியை மீறி

விருப்பத்துடன் வந்தமர்ந்தன


தன் காலிப் பாத்திரத்தில்

புதிய ஊரின் கதைகளை

நிரப்பும் ஆவலில்

வேண்டுகோள் மறுத்து

வழி தொடர்ந்தான்


பசுவொன்று

மரத்தடியில் ஈன்ற தன்

புதிய கன்றினை

நக்கிக் கொண்டிருந்தது

“நல்லவேளை

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய்

வீட்டில் குட்டி போடாமலிருந்ததே*

என்று மகிழ்ச்சி பகிரும்

ஒருவனைக் கண்டதும்

பாத்திரம் நிரப்பிக் கொண்டான்

நிழலில் அருகமர்ந்து


வழிப்போக்கனைப் புரிந்து

கொண்ட வெயில்

மேகம் நீங்கியது.

-கலாப்ரியா

* பசு, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கன்று போட்டால், வீட்டுக்கு நல்லதில்லை என்று அதை வெளியே (மேய்ச்சலுக்கு) அனுப்பி விடுவது இங்குள்ள நம்பிக்கை.

5 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வழிப்போக்கனைப்
புரிந்து கொண்ட வெயில் //
எங்க ஊர்ல வழிப்போக்கனைக் கண்டதும் "கிடைச்சாண்டா" னு கொளுத்துதே?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பாத்திரம் நிரப்பிக் கொண்டான்
நிழலில் அருகமர்ந்து//
அவன் வலைப்பதிவின் பெயர் என்னனு கேட்டீங்களா?

ராகவன் said...

அன்பு கலாப்ரியா,

நல்லாயிருக்கிறது இந்த கவிதை... திரிசக்தி, ஓம்சக்தி...ன்னு உங்கள் கவிதைகளை படிக்கும் போது புது சக்தி பிறக்குது மூச்சினிலேங்கிற மாதிரி இருக்கு...

வழிப்போக்கனை புரிந்து கொள்ளும் மேகம்,இரண்டு விதமான புரிதல்களுடன் மூடவும், விலகவும் செய்வது... அழகு...
யாரந்த பாத்திரம் நிரப்பும் வழிப்போக்கன்... சீழில் ஏது புதுசு... இது புதுசா இருக்கு கலாப்ரியா ஸார்!

அன்புடன்
ராகவன்

உயிரோடை said...

//வழிப்போக்கனைப் புரிந்து கொண்ட வெயில் சற்றே மேகத்துள் மறைந்தது //

மிகவும் பிடித்தது. சில சமயம் குடை விரிக்கும் வேளை சட்டென அடங்கிவிடும் வெயிலோ/மழையோ அது போலவே இருக்கு இந்த வரிகள்.

curesure Mohamad said...

உங்களது கவிதைகள் உங்களை போல் அருமை ..

என்னை உங்களுக்கு தெரியும் ..இன்றும் உங்களை நேரில் சந்தித்தேன் ..


வாழ்த்துக்கள்

Visitors