Wednesday, May 5, 2010

ஓடும்நதி-30


மிக்க ரௌத்ரியில் வேளாண்மை யற்பமாம்

மக்கணோயான் மடிவர் வான்பொருள் போம்-தொக்க

மனக்கவலை யுற்றுழல்வர் மாதர் வடக்கிற்

கனக்க வறுமை வருங்காண்.

-இடைக்காடர்.

இடைக்காடர் பதிணென் சித்தர்களில் ஒருவர்.அவர் ஒவ்வொரு கொல்லம் ஆண்டுக்கும் ஒரு பாடல் வீதம் அந்த வருடம் என்னென்ன நிகழும் என்று எழுதி வைத்திருக்கிறார். ஜோதிடத்திலும் வல்லவர். சித்தர்கள், ஞானவான்கள். (சத்தியமாய் அவர்கள் சாமியார்களில்லை.) இடைக்காடர், பதினாறு ஆண்டுகள் மழையே பெய்யாது, ஒரு பெரிய பஞ்சம் வரப் போகிறது, என்று முன்பே அறிந்தார்.அதனால் அவர் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உண்ணக் கொடுத்துப் பழக்கி, ஆடுகள் அழிந்து போகாமல் காப்பாற்றினாராம். அதையறிந்த நவக் கிரகங்களும் அவரை வந்து பார்த்து, எப்படி இதை நீ அறிந்து கொண்டாய் என்று கேட்டார்களாம். அப்போது அவர், கிரகங்களுக்கு சாமர்த்தியமாக இடமும்,ஆசனமும் தந்து உட்காரவைத்தாராம். அவை அமர்ந்த கணக்குப் பிரகாரம் மழை பெய்ய வேண்டிய கிரகச்சேர்க்கை உண்டாகி, மழை கொட்டியதாம்.

இது ராமனாதபுரம் மாவட்டத்தில் உலவும் கதை.தெற்கே சற்று வேறு மாதிரிக் கதை சொல்லுவார்கள்.(உபயம்: கி.ரா).பஞ்சத்தை உணர்ந்து கொண்ட இடைக்காடர்,ஆடுகளை தனியே ஒரு மண்கோட்டைக்குள் அடைத்து வைத்தார். மணகோட்டையின் சுவர்கள், வரகரிசியைச் சேற்றோடு சேர்த்துப் பிசைந்த மண்ணால் உருவானது. அவர், ஆடுகளை நன்றாகப் பட்டினி போட்டு மெல்ல மெல்ல, துவர்ப்புக்குப் பேர் போன ஆவாரங்குழைகளைத் தின்னப் பழக்கினார்.காணாததற்கு கடல்த் தண்ணீரையும் குடிக்கப் பழக்கினாராம். மக்கள் அவரை ஏளனத்தோடு பார்த்தனர்.பஞ்சம் வந்து, பயிர் பச்சையெல்லாம் வாடிக்கருகி, ஊரில் மற்ற ஆடுகள் எல்லாம் அழிந்து போயின. சித்தரின் ஆடுகளோ நன்றாகக் கொழுத்து இருந்தன. அவை முதுகினால் மண் சுவரை உரசும் போது வரகரிசி சிதறுமாம். பஞ்சம் நீங்கிய போது, மீந்திருந்த மக்களுக்கு தன்னிடம் உள்ள வரகரிசியையும் ஆடுகளையும் தந்து, மீண்டும் பயிரும் கால்நடைகளும் தழைக்க வழி கோலினாராம்.

விவிலியத்தில் ‘நோவாவின் கப்பலைப் பற்றியும், பல ஜனங்கள் வெள்ளத்தால் அழிக்கப் பட்டு, நோவாவின் கப்பலில் ஏறிக் கொண்டவர்கள் மட்டுமே தப்பித்து மறுபடி உலகம் சிருஷ்டியானதாகவும் செய்திகள் உள்ளன. உலகில் இயற்கைச் சீற்றத்தால், போரினால், பேரிடர் ஏற்பட்டு, பயிர்கள் அழிந்து மனிதகுலம் அவதிப்படும் என்கிற முன்னேற்பாடுகளின் ஒரு அங்கமாகப் பலரும் பல காலம் சிந்தித்து, பூமியின் விதை வங்கி ஒன்றை(Global Seed Vault) வட துருவத்தில், நார்வே நாட்டின் முழு முயற்சியோடு ஸ்வால்பர்ட் தீவுக் கூட்டங்களில் அமைத்துள்ளனர். அங்கே மைனஸ் மூன்று டிகிரி குளிர் நிலவுகிறது. பூகம்பங்களால் பாதிக்கப்படாத, எப்போதும் வெப்பம் பூஜ்ய டிகிரிக்கு கீழாகவே இருக்கும் மண் படலம் கொண்ட நில அமைப்பு, ஆகியவை விதை வங்கியை அங்கே நிறுவத் தோதுவாக உள்ளன.விதைகளைப் பாதுக்காக்கும் குகைக் கட்டிடத்தினுள் எப்பொழுதும் மைனஸ் 18 டிகிரி குளிர் இருக்கும்படி, அங்கேயேயுள்ள நிலக்கரியால் மின்உற்பத்தியும் நடைபெறுகிறது..ஒன்பது மில்லியன் டாலர் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இதை நார்வே, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் அமைத்தன. ப்ரேசில், இந்தியா போன்ற நாடுகளும் நிதியளிக்கின்றன. பத்திரிக்கைகள் இதை ‘தீர்ப்புநாள் வங்கி (doomsday vault) என்றே அழைக்கின்றன.

உலகில் பதினைந்து லட்சம் விதமான விதை மாதிரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2008 பிப்ரவரியில் ஆரம்பிக்கப் பட்ட இதன் செயல்பாடுகள், இப்போது இரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. முதலாண்டு நிறைவின் போது சுமார் நான்கு லட்சம் விதை மாதிரிகள் பாதுகாப்பிற்காக, பலநாடுகளாலும் தரப் பட்டுள்ளன. கடந்த மார்ச் பத்தாம் தேதியோடு, உலகின் பல பாகங்களிலுமிருந்தும் பாதுகாப்பாக வைப்பதற்காகப் பெறப்பட்டுள்ள வித விதமான விதைகள், ஒன்பது லட்சம். இவை இலவசமாகவே பாதுகாக்கப் படுகின்றன. இதற்காகும் நிர்வாகச் செலவுகளை நார்வே நாடே ஏற்றுக் கொள்கிறது.

இந்தியாவுக்கென்றே தனியான ‘விதை வங்கி, இமயத்தின் மடியில் இப்போது உருவாக்கப் பட்டு விட்டது.கடந்த ஆண்டு நவம்பரில் உதயமான இந்த வங்கி, ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில்,சாங்க்லேவில் உள்ளது. ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொறுப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விதை வங்கி, இப்போதைக்கு இந்தியாவுக்கான பிரத்யேகமான வங்கியென்றாலும், பிற்காலத்தில் .மற்ற பல வளரும் நாடுகளின் விதை மாதிரிகளையும் பாதுகாக்கும். இதன் விதை பாதுகாப்புச் செயல் பாடுகள் கடந்த மாதம் தொடங்கியது.

பயம், பேரிடர் தரும் அழிவு பயம், வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகம்’’ ஏற்படுத்துகிற தீவிரவாதப் பயம், மனிதனை எப்படியெல்லாமோ சிந்திக்க வைக்கிறது. ஆனாலும் என் ஒரு கவிதையில் குறிப்பிட்ட மாதிரி

குருவி தின்று எச்சமிட்ட

அரசவிதைகளிலிருந்து

மதிலையே பிளக்கும்

மரம் போல் பயம் வளர்கிறது

அணில் தன் பற்களை

கொறித்துக் கொறித்து தேய்த்தாலும்

மீண்டும் வளர்வது போல்-பயம்

வளர்கிறது பயந்து பயந்து.....

அணில்கள் அழிந்து விடுகிற அபாயம் பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்து, இன்று சற்று நீங்கியிருக்கிறது. இப்போது, குடிக்க நீரின்றி, விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக் குருவிகள் செத்து வருகின்றனவாம். அவற்றைப் பாதுகாக்க நாம் முற்றத்தில், ஒரு குவளைத் தண்ணீரை வைத்து விட்டுச் செல்வோம்.விதைகள் தானாகப் பரவும்.

4 comments:

DR.KVM said...

என்ன சொன்னாலும் மனுசபயலுக்கு புரியாது

ராம்ஜி_யாஹூ said...

பயனுள்ள பதிவு.

உயிரோடை said...

மிக‌ ந‌ல்ல‌ ப‌கிர்வு சார்.

இனியாள் said...

சிந்தித்து செயல் பட வேண்டிய கருத்துக்கள், இயற்கையை பாதுகாக்க நாமும் நம்மால் இயன்றதை செய்ய தான் வேண்டும்.

Visitors