Saturday, September 5, 2009

கேள்விக்கு பதிலேதய்யா....

பொங்கலுக்கு புது ஓலை, வாசலில் வண்டியில் வைத்து விற்பார்கள். ராஜவல்லிபுரமென்றால், பனை ஓலையும் மட்டையும் ஏகத்துக்கு வீட்டிலேயே கிடைக்கும்.பொங்கலுக்கு அடுப்புக் கட்டி பாட்டப்பத்திலிருந்தும், விளாகம் பச்சேரியிலிருந்தும் வண்டியில் கொண்டு வந்து விற்பார்கள். இதெல்லாமுமே காலையில் கொண்டு வருவர்கள்.பாட்டப்பத்து கட்டியென்றால் அச்சுவெல்லக் கட்டி போல இருக்கும். விளாகம் என்றால், உருளையாக இருக்கும்.எங்கள் வீட்டில் பாட்டப் பத்து கட்டியையே வாங்குவார்கள். தெருவில் அதற்கே கிராக்கியும் அதிகமிருக்கும். காலையிலேயே வாங்கினால்த் தான் நல்ல லடசணமான கட்டியாகப் பார்த்து வாங்க முடியும்.இல்லையென்றால், சிலது ஏறுக்கு மாறாக இருக்கும்,பானை வைக்க தோதுவாய் இருக்காது. ஏழு கட்டி வாங்குவார்கள். மூன்று பானை பொங்கலிடலாம்.சிறு வீட்டுப் பொங்கலுக்கு மூன்று சிறிய உருளைக் கட்டிகளை இலவசமாகத் தருவார்கள். அதுவும் காலையில் சீக்கிரம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.
ஒரு வருடம் சிறு வீட்டுப் பொங்கலுக்கு, நாமே கட்டி போட்டாலென்ன என்று போன வருடத்து கட்டியை உடைத்து,தண்ணீர் விட்டு குழைத்து, அச்சுக்கு சிறிய போணியொன்றைத் தேர்ந்தெடுத்து,புறவாசலில் வைத்து நானும் சில நண்பர்களும் மும்முரமாக ஈடு பட்டுக் கொண்டிருந்தோம்.வளவில் உள்ளவர்கள் எல்லாம், என்னடே பொங்கக் கட்டியா எங்க வீட்டுக்கு ஆர்டர் குடுத்தா கிடைக்குமா, என்று கேலியும் உற்சாகப் படுத்துதலுமாகக் கேட்டுப் போனார்கள். போணியில், பிசைந்த மண்ணை அடைத்து, கவிழ்த்தினால் பாதி மண், கட்டியாக விழுந்தது. மீதி போணியிலேயே ஒட்டிக் கொண்டது.
பிள்ளையார் சதுர்த்திக்கு, அரசடிப் பாலம் வாய்க்கால் அருகே, களி மண்ணில் பிள்ளையார் சிலை செய்து விற்பார்கள். காலையிலேயே, ஒரு வண்டி களிமண்ணைக் கொண்டாந்து இறக்கி இருப்பார்கள்.அந்தக் களி மண்ணை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பது, எங்களுக்கு பெரிய அதிசயமாய் இருக்கும். ஒரு கல் கரம்பை இருக்காது. வழக்கமாக செய்து விற்க ஒரு வேளார் தான் வருவார். ஆள் ஒடிசலாய், வயிறு டொக்கு விழுந்து இருக்கும்.தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டி, பூணூல், ஒரு பலகை போட்டு உட்கார்ந்து வேக வேகமாகப் பிள்ளையார் செய்து கொண்டே இருப்பார்.லங்கோடு எதுவும் கட்டியிருக்கமாட்டார். விரை இரண்டும் பலகையை உரசிக் கொண்டே இருப்பது லேசான வேஷ்டி வழியேதெரியும். இதைப் பார்ப்பதும் சிரிப்பதும், ஒரு விளையாட்டு.பரமசிவன் பிள்ளை சார் போடுகிற புதிர்கள் ஞாவகத்துக்கு வரும்.ரசம் மணப்பதேன், ரத்தம் சொட்டுவதேன்? ரெண்டுக்கும் ஒரே விடை, யாராவது சொல்லுங்கலெ என்பார் வகுப்பில். எவனாவது ‘பெருங்காயத்தால்’ என்பான். யேய் சொல்லிட்டீங்களே,என்பார். எனக்கு அவர் போடுகிற இந்த விடுகதைகள் அவரது ‘நீதி போதனை வகுப்பில்‘ வழக்கமாகக் கேட்டவை தான். ஒரு கிளாஸில் அவர் கேட்டார். தச்சன் புடுக்கு தேய்வதேன், தாசி முலை பருப்பதேன்...?அவர் கேட்டதும் கிளாஸ்ஸே ஹேயென்று சிரித்தது.ஏல சிரிக்காதிங்கலே. நீங்கள்ளாம் படுக்காளிப் பயலுகள்ளே, என்றார். சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தார்.
சார் சார் விடை சொல்லுங்க சார் என்று கூச்சல்.. ஏல உங்களுக்கா தெரியாது, போங்கலே என்றார். தெரியாது சார் சொல்லுங்க சார் சொல்லுங்க சார், என்றோம். இன்னா இப்ப பாரு இவஞ் சொல்லீருவான் என்று கிளாஸ் லீடர் சம்முவத்தை எழுப்பி விட்டார். சம்முவம் இரண்டாவது வருடம் அதே வகுப்பில் படிக்கிறான். அவன் நாணிக் கோணி நின்றான். பாத்தியாலெ இவனுக்குத் தெரியும்லெ. ஏலெ, சொன்னாத்தான் உக்காரலாம், இல்லேன்னா நில்லு என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார். கொஞ்ச நேரம் கழிச்சு கண்ணை முழிச்சு கேட்டார், ஏலெ சொன்னானாலே, மொத்த வகுப்புமே இல்ல சார், இல்ல சார் என்றது.சம்முவம் பட்டென்று ‘பல கை’ படுவதால் என்று சொன்னான். புரிந்தவர்கள் எல்லாம் பயங்கரமாக சிரித்தோம்.ஏல, கணபதியா பிள்ளை பையன் தானெ, வா நீ. ஒங்க ஐயாட்ட சொல்லுதேன்,நாளைக்கி போத்திக் கிளப்புக்கு வருவாருல்லா என்றார். சம்முவம் தலையைத் தொங்கப் போட்டபடி நின்றான்.சரி சரி வா அந்த வீசாறியெ எடுத்து வீசு, இங்க வந்து என்றார்.சம்முவம் அவர் நாற்காலிக்கு அருகில் நின்று கொண்டு விசிறியை வைத்து வீச ஆரம்பித்தான், சார் கண்ணை மூடி பொய்த் தூக்கம் ஆரம்பித்தார்
வேளார் ஒரு அகலச் சட்டியில் தண்ணீர் வைத்திருப்பார். வாங்குகிற காசை அதில் தான் போடுவார், மூங்கிலில் ஒரு கத்தி மாதிரி சிறிதாக வைத்திருப்பார். அதை அந்த தண்ணீரில் லேசாக முக்கி பிரபை மற்றும் பிள்ளையாரின் கிரீடங்களில் நுணுக்கமான கோடுகளிட்டு அழகாக்குவார்.காலையில் விலை சற்று அதிகமிருக்கும். நாம் கொண்டு போகிற பலகையில் பிள்ளையாரை வைத்து கொஞ்சம் களிமண்ணை அடியில் அண்டை கொடுத்தது போல் அப்பி வைப்பார். பிள்ளையார் சக்கென்று உட்கார்ந்து கொள்ளுவார்.இதுதான் சக்குப் பிள்ளையாரோ. ஏண்டா சக்குப் பிள்ளையார் மாதிரி உக்காந்திருக்கெ என்று பெருசுகள் கேலி செய்வது இதைத் தானோ என்று தோன்றும். இது தவிர ஒரு பித்தளை அச்சு வைத்திருப்பார்.அதில் எண்ணெய் தடவி, களி மண்ணை நன்றாக அமுக்கிச் செலுத்தி பலகையில் கவிழ்த்தி அச்சை உருகுவார். அந்தப் பிள்ளையார் ரொம்ப அழகாக இருக்கும்.அப்பா ஒரு வருடமாவது அதை வாங்கி வந்து பூஜை செய்ய மாட்டாரா என்றிருக்கும்.அப்பா, சாதாரணப் பிள்ளையாரை மட்டும் ஒரு வருடம் வாங்க சம்மதித்தார்.
நான் போணியில் தடவ, அடுக்களைக்குள் எண்ணெய் எடுக்கப் போனேன். அம்மா எதுக்கு என்று கேட்டு விட்டு,ச்சீ மூதேவி நீங்க அடுப்புக் கட்டி போட்ட லச்சணம் போதும்.போடா என்று விரட்டி விட்டாள். நான் போணியில் தண்ணீரைத் தடவி ஒரு மாதிரியா அச்சுப் போட்டு விட்டேன்.வெற்றிகரமாக வெயிலில் காயவைத்துவிட்டு, கை கால் கழுவி மத்தியானச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தேன். காலையில் ஆரம்பித்தது மத்தியானம் ஆகியிருந்தது.கையெல்லாம் செம்மண் காவி. நக இடுக்குகளில் கொஞ்சம் மண். மண் வாசனையோடு சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக புறவாசல் ஓடினேன். அடுப்புக் கட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைசில், தரையோடு உட்கார்ந்திருந்தது. நிறையத் தண்ணி விட்டுட்டியோ அம்பி கோபாலா என்று பின் வீட்டுக் கார, சரக்கு மாஸ்டர் சுப்பிரமணிய ஐயர் கேட்டார். புள்ளையார் புடிக்க கொரங்காயிடுத்தாடா என்று சிரித்தார். போம்யா என்று கத்தி விட்டு ஓடி வந்தேன்.
அந்த வருடம் பொங்கலுக்கு முன்பே பதினோராம் தேதியே பணத்தோட்டம் வந்து விட்டிருந்தது.அதனால் பொங்கலன்று எங்கும் போகவில்லை. திடீரென்று பாச்சா, தெருவுக்கு வந்தான்.அவனை நான் தான் அழைத்திருந்தேன். ஆனால் மறந்து விட்டேன்.எனக்கு தெரு நண்பர்களுடன் இருக்கையில் ஸ்கூல் நண்பர்கள் வந்தால் பிடிக்காது.இவர்கள் ஏதாவது கேலி செய்தால் என்ன செய்வது, என்று பயமாயிருக்கும்.(பாச்சாவை யாருல இது வெள்ளைப் பாச்சா என்றார்கள்). நாளைக்கு கிளாஸ் போனால் அவர்கள் சண்டைக்கு வருவார்கள். பாச்சா வீடு பேட்டை ரோடில் இருந்தது.ஆறாம் வகுப்பிலிருந்தே பழக்கம். பேட்டை ரோடு அப்போதெல்லாம் அழகாயிருக்கும். ப்ரிட்டிஷ் காலத்து சிமெண்ட் ரோடு, வழு வழுவென்று இருக்கும்.அதிலும் கம்பாநதி மண்டபம் தாண்டி விட்டால், ரெண்டு புறமும் மரமும் வயலும் குளிர்ச்சியாக இருக்கும்.
சின்ன வயசில் புதிதாக பொங்கலுக்கு வருகிற ஓலையில், காற்றாடி செய்து அதைக் கையில் பிடித்தவாறே, பேட்டை ரோட்டில் ஓடுகிற சுகமே தனி.அப்போதெல்லாம் அவ்வளவு பஸ்கள் கிடையாது. ஒரே ஒரு ஏழாம் நம்பர் பஸ் ஓடும்.எட்டாம் நம்பர் குறுக்குத் துறைக்குப் போகும்.அது பெரும் பாலும் ஒரு லொட லொட பஸ். ஏழாம் நமபர் பேட்டை எட்டாம் நம்பர் ஓட்டை என்று ஸ்கூல் வழியாகப் போகும் எட்டாம் நம்பர் பஸ்ஸைக் கேலி செய்வோம்.காற்றாடி என்று இல்லை. வட்டு கிடைத்தாலும், சைக்கிள் ரிம், சைக்கிள் டயர், எல்லாம் வட்டுகள், அதை உருட்டிக் கொண்டே ஓடுவது, ஒரு விளையாட்டு. அதிலும்,ப்ளைமவுத் (ப்ளிமத்) காரே கிடைத்த மாதிரிதான்.அதில் சோடா பாட்டிலை மூடியிருக்கும் சிப்பியை தகடு போல் சப்பி, நடுவில் ஓட்டை போட்டு,(ப்ளைமவுத்) வட்டில் அடித்து விட்டால், வண்டி ஜல் ஜல் என்று ஓடும். அது மட்டுமல்ல அடுத்த தெருவுக்கெல்லாம் வட்டை ஓட்டிக் கொண்டு போனால் இந்த ‘சோடாச் சிப்பி’ லைசென்ஸ் இருக்க வேண்டும். இல்லையென்றால் வட்டை பிடுங்கி வைத்துக் கொள்ளுவார்கள், அந்தத் தெரு பையன்கள்.
அப்படி ஒரு வட்டு எனக்கு அபூர்வமாக கிடைத்தது.ஆனால் அதில் சோடாச் சிப்பி அலங்காரம் செய்ய வழியில்லை. கொஞ்சம் ஒல்லியான வட்டு. ரொம்ப ஆசையாய் பேட்டை ரோட்டில் ஓட்டிக் கொண்டு போனேன். தடி வீரன் கோயில் தெருப் பையன்கள் பிடித்துக் கொண்டார்கள். எங்கலே லைசென்ஸ் என்று.நான் படு வேகமாக ஓடி கம்பாநதி மண்டபத்தருகே நின்று மூச்சிரைக்க திரும்பிப் பார்த்தேன்.இன்னும் அவர்கள் அந்த தெரு முனையிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.சுற்றிக் கொண்டு, பழனித் தெரு வழியாகப் போனால் அது, இதை விட சண்டியர்கள் நிறைந்த தெரு.இன்னக்கி வட்டு அம்பேல் என்று நினைத்த போது, பாச்சா வீடு பேட்டை ரோட்டில் என்று சொன்ன நினைவு வந்தது.
கம்பாநதி மண்டபம் தாண்டி, போய்க் கொண்டிருந்தேன், வீடு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. வயலாக இருந்தது. வயலுக்குள் கொஞ்சம் தள்ளி வீடு மாதிரியும் இல்லாமல், மண்டபம் மாதிரியும் இல்லாமல், ஒரு பெரிய கட்டிடமாய் ஒன்று இருந்தது.அதை விட்டால் தூரத்தில் பேட்டை தர்ஹாப் பள்ளி வாசல் தான்.
அந்த வீடு மாதிரியான, வீட்டின் முன் நின்று எட்டிப் பார்த்தேன்.பாச்சா மாதிரியே வெள்ளைப் பாச்சாவாக ஒரு பெண், என்ன வேணும் என்றாள். நான் பாச்சா என்று இழுத்தேன்....இருக்கான், உள்ள வாப்பா என்றாள்.நான் வட்டோடு உள்ளே வருவதைப் பார்த்துச் சிரித்தாள்.அவன், பின்னால் வயல் வெளிகளில் நின்றிருந்தான், அவன் அப்பாவுடன்.அங்கிருந்து கையைக் காண்பித்தான். அருகே வரும்படி. வயல் மாதிரி இல்லை. திரடாக இருந்தது.நல்ல புல். ஒரு ஈச்சமரம் இருந்தது. ஒரு சமாதி, பார்க்க பயமாக இருந்தது. சமாதி சாய்ந்து இருந்தது.அருகே இருந்த ஒரு மரம், பூவரசா, மஞ்சணத்தியா நினைவில்லை,அதன் வேர் அதைச் சாய்த்திருக்கும். அவன் நின்ற இடத்திற்குப் போனேன், கையில் வட்டு.அவன் அப்பா வாயில் வெற்றிலை அதக்கி இருந்தார்.திரட்டுக்கு கொஞ்சம் தள்ளி வழுக்கு ஓடை ஓடிக் கொண்டிருந்தது.கொஞ்சம் மேடாக இருந்த இடத்தில் பெரிய பனை ஓலையில் சொளவு மாதிரிக் கிடந்தது.பாச்சா கையில், ஒரு கயறு கட்டிய வாளி.அவன் அப்பா ஓலையை எடுத்து பதனமாக தள்ளி வைத்து விட்டு, வாளியை வாங்கி இன்னும் கவனமாக ஓலைக்கடியிலிருந்த குழியொன்றில் இறக்கி தண்ணீர் சேந்தி, ஒரு குடத்தில் விட்டார்.குடிக்க இது தான், என்றார் அப்பா.
ஊத்துத் தண்ணி, என்றான் பாச்சா.நான் அருகே போனேன், மண்ணச் சரிச்சிராம பாருங்க தம்பி என்றார் அவன் அப்பா.நல்ல களிமண் பதமாக இருந்தது, அந்த இடம்.ஒரு அழகான ஊற்று.சுற்றி கரம்பை வெட்டி வைத்து புல் அழகாக, வட்டமாக வளர்ந்திருந்தது.ஒரு சேலைத் துணியை ஊற்றின் சுவரையொட்டி வைத்திருந்தது. ஈரத்தில் அது சுவற்றோடு ஒட்டியிருந்தது.பளிங்கு மாதிரி தண்ணீர் சேலைக்கு மேலாகக் கிடந்தது, இரண்டு வாளி முங்கும் அளவுக்கு. நான் இன்னும் அருகே போய் எட்டிப் பார்க்க முயன்ற போது பாச்சா தடுத்து விட்டான்.அப்பா சத்தம் போடும் என்று.அவனிடம் வட்டு பற்றிய பயத்தைச் சொன்னேன்.சரி இங்க இருக்கட்டும். நான் எங்க அப்பா யாவாரத்துக்குப் போகும் போது கொண்டு வந்து தாரேன் என்றான். அவன் அப்பா ஓம வாட்டர், பேனா மை என்று தயாரித்து விற்கிறார்.வீட்டுக்குள் வந்த போது, சுவர்களிலெல்லாம் கீறலாய் இருந்தது.இதுக்குள்ளதான் ஒரு பாம்பு போச்சு நேத்து, வெளியெவே வரலை என்றான் பாச்சா.அருகே பாட்டில்களை கழுவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மாள். இன்னொரு வயதான பெண், குழிஅம்மி மாதிரி ஒன்றில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தாள். அதே போல் எங்கள் வீட்டில் மருந்து அரைக்கும் குழி அம்மி ஒன்று உண்டு.வட்டைப் பிரிய மனமில்லாமல் வந்தேன். தடி வீரன் கோவில் தெரு முக்கில் எந்தப் பையன்களையும் காணும்.
பாச்சாவுக்கு பாயாசம், எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன். அம்மா பொங்கல்ச் சோறு சப்பிடுவானா என்று கேட்டாள். சரி என்று தலையாட்டினான். விரும்பிச் சாப்பிட்டான்.எங்கள் வீட்டில் பொங்கலுக்கு, படையல் சாப்பாடு. வீட்டின் இறந்து போன கன்னிப் பெண்களை நினைத்து செய்வது. பெரும்பாலான வீடுகளில் அதை ஆடி மாசம் தனியே செய்வார்கள்.புளிக்குழம்பும் அவியலும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான், பாச்சா .மறு நாள் ஸ்கூலுக்கு வந்ததும், வீட்டில் சத்தம் போட்டதாகச் சொன்னான். ஏன் என்றேன், படைத்ததை சாப்பிடக் கூடாது என்றான்.
அடுத்து இரண்டு மூன்று வகுப்புகளுக்கு, அவன் என் பிரிவில் இல்லை.திரும்ப டென்த் படிக்கிற போது என்னுடன் D செக்‌ஷனுக்கு வந்தான்.அவன் கையெழுத்து நன்றாக இருக்கும். கிளாஸில் யாரும் நோட்ஸ் கொடுத்தால் வேகமாக எழுதி விடுவான்.நாங்கள் ஓரிரு வரிகளை விட்டு விட்டு, அப்புறம் அவன் நோட்டைப் பார்த்து எழுதுவோம்.
அந்த வருஷம் திருநாளுக்கு அவன் வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட்டான். கரிக்காத் தோப்பு சக்கரியாவும் கூப்பிட்டான். அவன் வீட்டில் பிரியாணி. இவன் வீட்டில், நெய்ச் சோறாம். இதுதான் முகத்தில் அடிக்காது., எங்க வீட்டுக்கெ வாரும் என்றான்.சக்கரியா வீடு ரொம்பத் தூரம். பாச்சா வீட்டுக்கு வருவதாகச் சொன்னேன்.மத்தியானம் வாரும் என்றிருந்தான்.
நான் போன போது பாச்சா வீட்டில் இல்லை.அவன் பாட்டி மட்டும் இருந்தாள்.வீடு இப்போது சுத்தமாக இருந்தது. இப்போது சில மோட்டார் செட்டுகளும், குழாய்களும் கிடந்தன. அவனது அப்பா இப்போது பம்ப் செட் ரிப்பேர் பார்க்கிறார் என்று சொல்லியிருந்தான். வயல் எல்லாம் அப்போதுதான் அறுவடை முடிந்திருந்தது.பேட்டைக் குளம் வரை சைக்கிளில் போய் வரலாமா என்று நினைத்த போது,கையில் இலையோடு காதர் சைக்கிளில் வந்தான். என் சைக்கிள்.18’’ கட்டை சைக்கிள்.வாசலில் நிறுத்தியிருந்தேன்.வந்ததுமே சிரித்த படியே கேட்டான், சைக்கிளுக்கு லைசென்ஸ் வச்சுருக்கேரா என்று. உண்மையிலேயே சைக்கிளுக்கு முனிசிபாலிட்டியில் இரண்டு ரூபாய் கட்டி லைசென்ஸ் எடுக்க வேண்டும், அப்போது. நானும் சிரித்தேன். ஆமா இப்ப அந்த ஊத்து இருக்கா என்று. இல்லை இல்லை, அதெல்லாம் மூடியாச்சு,இப்ப தண்ணிக்கி ரொம்ப கஷ்டம். பின்புறம் போக முடியாது, சுவரு வச்சுட்டாங்க. பள்ளிவாசல் கிணற்றிலிருந்துதான் எடுக்கோம். அங்கயே ஒரு ஆத்தண்ணி பைப்பு இருக்கு அதிலிருந்து குடிக்க எடுத்துக்கிடுதோம் என்றான்.கொஞ்சம் இருக்கேரா அப்பாவைக் கூட்டீட்டு வ்ந்திருதேன், பக்கத்தில எங்கயோ போனாரு என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.எனக்கு நல்ல பசியாய் இருந்தது.அந்த வீட்டிற்கு ஒரு வெளிச்சுவர்.அடுத்தாற் போல் காலி இடம் அதில் தான் பம்பு, குழாய் இத்யாதிகள் கிடந்தன.அதேபோல் காலி இடம் மூன்று புறமும் கிடந்தது.
பாச்சா போனதும், வீட்டினுள் அந்த அம்மா வந்தாள்.கொஞ்சம் சங்கோஜத்துடன் வந்தாள்.என்னைக் கடந்து போய்,பக்கவாட்டு காலியிடத்தில் நின்று அவன் பாட்டியிடம் ஏதோ கேட்டாள்.அநேகமாய் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்.அவள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.முடியாது போ, கண்ட இடத்தையும் நாற அடிக்காதெ, அந்தக் கரி முடிவான் எங்கயோ போய்ட்டான் போலருக்கு, நீயும் போறதுதானெ என்று சத்தம் போட்டாள். இன்னுமொரு பெண் குரல் கேட்டது.அதுவும் இவளை சத்தம் போட்டது. நான் என்ன வேலைக்காரியா, அப்படியே நில்லு, அவன் வந்து கழுவி விடுவான். என்று.. கொஞ்ச நேரத்தில் வார்த்தைகள் தடித்தது.நான் கிளம்பலாம் என்று நினைத்த சமயத்தில், அந்த அம்மாள், விறு விறுவென்று வந்தது, கூத்தியாளக் கூடவே வச்சுருக்காரு,நம்மளை அறுத்துவிடும்ன்னா கேக்காரா, நாமளும் புள்ளை படிப்பு முடியட்டுமேன்னு பாத்தா, குண்டி கழுவக் கூட விடமாட்டங்காளுக,தண்ணி சுமக்கறது பூரா நானு, பாக்கட்டுமே, 'பூ.. லை' ஊர் பூராவும்,என்று சொன்ன விருத்தியில், என் முன்னால் ஒரு தொட்டியில் கிடந்த அழுக்கு தண்ணீரை ஒரு செம்பில் கோதி, ரோட்டுக்கு வந்து கொஞ்சம் தள்ளி ஒரு மரத்தருகே போய், திரும்பிக் கொண்டு கழுவ ஆரம்பித்தாள். சைக்கிளை எடுக்க வந்தவனுக்கு அவளின் வெள்ளைப் பின்புறம் தெரிந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டேன்.பாச்சாவின் ஏம் வந்துட்டேருவே நேற்று, என்ற மறு நாள்க் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

Sunday, August 30, 2009

பாட்டுக்கேட்டவுடன்.......

‘அன்பே கடவுள்’ வீடு, கிருஷ்ணன் வைத்த வீடு போல், தெருவில் ஒரு முக்கிய அடையாளம். கிருஷ்ணன் வைத்த வீட்டில் கிருஷ்ணன் சிலையை எல்லாம் எடுத்து விட்டார்கள்.பாத்திர வியாபாரம், நாயகம் செட்டியார் அந்த வீட்டை வாங்கிய போது எடுத்திருக்க வேண்டும்.அவர் ஒரு காங்கிரஸ் காரர். பித்தளை வில்லை லைசென்ஸ் கிடைத்ததற்காக அப்போதைய எம் எல்.ஏ ராஜாத்தி குஞ்சிதபாதம் அம்மையாருக்கும்,பிரமுகர்களுக்கும் சிலை இருந்த இடத்தில், அழகான பந்தல் போட்டு, விருந்து கொடுத்தார். நாங்கள் கொஞ்ச பேர் வீட்டு முன் போய், கிண்டலாக கோஷம் போட்டு ஓடினோம்.’’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே....’’மறு நாள் அப்பாவைத் தேடி, அவர் வழக்கமாக அந்நேரத்துக்கு இருக்கும், போத்தி ஓட்டலுக்குப் போன போது,நாயகம் செட்டியாரும்., அவர் கடையில் வேலை பார்க்கும் அன்பே கடவுள் வீட்டு சுப்பையாச் செட்டியாரும் அப்பாவுடன் இருந்தார்கள்.என்னைக் கண்டதும் இந்தா பாருங்க அண்ணாச்சி, ராத்திரி உங்க புள்ளையாண்டனும் வீட்டு முன்னால நின்னு எம்சியார் பாட்டு படிக்கான்.என்றார்.எனக்கு பகீரென்றது.சுப்பையா அண்ணாச்சி, சரி விடுங்க சின்னப் புள்ளைக செய்யறதையெல்லாம் போய் அவாள் கிட்ட சொல்லிக்கிட்டு.நான் வந்த விஷயத்தை சொல்லி விட்டு ஓடி வந்து விட்டேன்.
67- தேர்தலில் நாயகம் செட்டியார் தான் காங்கிரஸ் பூத் ஏஜெண்ட்.ஐந்து மணிக்கு ஓட்டுப் பதிவு முடியப் போற நேரத்துக்கு..நாலைந்து பேர் போய் ஒட்டுப் போட்டு விட்டு வந்தார்கள். அப்போது எங்களுக்கு 21 வயது ஆகவில்லை. மறுநாள் நாயகம் செட்டியார் அப்பாவிடம் சொன்னார், அதே போத்தி ஓட்டலில் வைத்து, அண்ணாச்சி இவன் பொறந்த அண்ணிக்கு, நீங்க லட்டு வாங்கிக் கொடுத்தது இன்னம் நெனவிருக்கு. இவன், சேதுப் பிள்ளை அண்ணாச்சி பையன் எல்லாரும் ஏம் முன்னாலயே ஓட்டுப் போட்டுட்டு போறாங்க, நான் உங்க முகத்தைப் பாக்கறதா, இல்லை கட்சியப் பாக்கறதா...என்று சொன்னார். நான் எங்க போட்டேன், இந்தா கையப் பாருங்க மை இருக்கா, என்றேன் கோபமாக. மையை, கொட்டைப் பாக்குச் சாற்றை வைத்து உடனேயே அழித்து விட்டோம்.எப்படியும் நாங்க தான் ஜெயிக்கப் போறோம், எதுக்கு கள்ள ஓட்டு போடணும் என்று சொன்னதும் அப்பா, கோபமாகப் பார்த்தார்.ஓட்டலில் நான் சொன்னதைக் கேட்டு நிறைய பேர் அதான, என்றார்கள். அப்பாவுக்கு சிரிப்பு வந்து விட்டது. அப்பா சுதந்திராக் கட்சி ஆதரவாளர், பாளை ஜவஹர் மைதானத்தில் நடந்த கூட்டத்திற்கு கூட்டிப் போயிருந்தார் .ராஜாஜி, மினுமசானி எல்லாம் பேசினார்கள்.எனக்கு அவ்வளவு நேரம் நிற்க முடியவில்லை.ஒரு எழவும் புரியவில்லை. மசானி இங்கிலீஷில் பேசினார்.நேருவை ஏசுகிறார் என்பது தெரிந்தது. அது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.அது 62 தேர்தலுக்கு முன் என்று நினைவு.என் புழு புழுப்பு தாங்காமல் அப்பா பாதியிலெயே வந்து விட்டார்.
ஷாப் கடை சங்கரன் பிள்ளை அண்ணாச்சி, மீட்டிங் போய் வந்த மறு நாள் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒங்களுக்கு என்ன அரசியல் தெரியும். மசானியெல்லாம் கம்யூனிஸ்டா இருந்து ராஜாஜி பின்னால வந்துருக்காரு, ஜெயப்ரகாஷ் நாராயணன் வந்தா தெரியும் எல்லார் சேதியும். என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
என்னடா இது ஆளாளுக்கு ஒன்னச் சொல்றாங்க.இந்தச் சங்கரன் பிள்ளை இதைச் சொல்லுதாரு, லாலாக் கடை சங்கரன் பிள்ளை, ஜீவானந்தம், தங்கமணீன்னு சொல்லுதாரு என்று குழப்பமாய் இருக்கும். அப்பா எதிர் வாதம் செய்து நான் பார்த்ததே இல்லை. சமயங்களில் லாலாக் கடைப் பக்கம் ராத்திரி நேரம் அப்பாவுடன் போவேன்.வாரும் பேரப் புள்ள, ஒங்க அப்பா, பேரன் எடுக்கற வயசுல ஒன்னையப் பெத்திருக்காரு, என்பார். அவர் கடையில் ஜனசக்தி, பேப்பர் வரும்.அல்வா தின்று விட்டு அதைக் கை துடைக்க ஒருவர் கிழித்த போது அவர் கடுமையாக கடிந்து கொண்டார்.அதே பேப்பர் டெயிலர் கைலாசம் கடையிலும் வரும்.டெயிலரிங்க் கடையில் ஸ்டாலின் படம் மாட்டியிருக்கும். அவர் தான் இது யாரு தெரியுமாடே, என்று ஒரு தரம் சொன்னார்.அப்பா டெயிலரிங் கடை வைத்திருந்த போது இவர்களெல்லாம் அங்கே வேலை பார்த்ததாகச் சொல்லுவார்கள்.இன்னொருவர் மோஹன் டெயிலரிங் ஹவுஸ் என்று வைத்திருந்தார்.அவர் கேரளாக்காரர், சரியான சிடுமூஞ்சி.அவர் கடையில் தான் அப்பா திருநெல்வேலி டெயிலரிங் ஹவுஸ் என்று வைத்திருந்தார்.
கைலாசம் சாதுவானவர்.சட்டை போட மாட்டார்.மேற்கே வீட்டிலிருந்து வரும் போது மட்டும் ஒரு ஜிப்பா போட்டிருப்பார். கடைக்கு வந்ததும் முதல் வேலை அதைக் கழற்றுவது தான். வீட்டுக்கு வந்திருந்து, பெரிய அக்கா கல்யாணத்திற்கு ஏகப்பட்ட துணி தைத்தார்.அப்போது தான் ஜிப்பா போட்ட படி தைத்தார். அதையும் ராத்திரியில் கழற்றி விடுவார்.வழக்கமாக சட்டைக்குத் துணி எடுத்தால், அதை வீட்டுக்கே கொண்டு வரமாட்டோம். அப்படியே கைலாசம் கடையில் கொடுத்து அளவும் கொடுத்து விட்டு வந்து விடுவோம். ஜனசக்தி வால் போஸ்டரை அப்படியே மடித்து நோட்டுப் போல்தைத்து வைத்திருப்பார். அதில்த் தான் அளவுகள் எழுதுவார்.62 தீபாவளி என்று நினைவு.ஒரு அழகான டிசைனில் சட்டைத் துணி எடுத்திருந்தேன்.அதன் டிசைன் மறந்து விட்டது.தைத்தாயிற்றா என்று தினமும் ஸ்கூல் விட்டு வரும் போது கேட்பேன்.அந்த துணி எப்படியெல்லாமோ நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.காட்டவாவது செய்யுங்கள் என்று கேட்டேன் ஒரு நாள், அப்போது அவர் மார்பில் ஒரு வேனல் கட்டி மாதிரி வந்திருந்தது, அவர் மறுத்ததும், கோபம் கோபமாய் வந்தது.உங்களுக்கு மட்டும் மூனு பால் இருக்கே என்று வேனல் கட்டியைக் காட்டி கிண்டல் செய்தேன்.
போடா சின்னப் பய மாதிரியா பேசுதே, போறையா ஒங்க அப்பாட்ட சொல்லவா, என்று பயங்கரமாகக் கோபம் வந்து விட்டது.காணாததற்கு கடையில் வேலை பார்க்கும் பெரிய(அ)ம்பி டேய் போடா என்றான். அவன் சொன்னது அதிகமாக இருந்தது.இரு இரு ராமையாப்பிள்ளை மாமாட்ட சொல்லுதேன் என்று கறுவி விட்டு வந்தேன்.அவனது அக்காவை மாமா வைப்பாட்டியாக வைத்திருந்தார்.அவர் சொல்லி, அப்பாதான் அம்பியைக் கடையில் சேர்த்து விட்டது. கல கலப் பாக இருந்த கடை அமைதியாகி விட்டது. இப்போது நினைத்தாலும் கூச்சமாய் இருக்கிறது.ராமையா மாமா எப்பவாவது காலையில் வீட்டுக்கு வருவார், அப்பாவிடம் பணம் வாங்கிப் போவார்.அவர் ஒரு பெரிய வீட்டு மருமகன், P.W.D யில் வேலை பார்த்தார்.அவர் வரும் போது பெரிய அம்பியாவது, அவன் தம்பி, சின்னம்பியாவது கூட வந்து வீட்டுக்கு வெளியே தெருவில் நிற்பான்.வீட்டுக்குள் வர மட்டான்.அப்பாவிடம் பணம் வாங்கி அவனிடம் கொடுத்த கையோடு மாமா சிகரெட் ஒன்றைப் பற்ற வைப்பது தவறாது.
அப்பாவே கடன் வாங்கித் தான் செலவழிக்கிறார். அவர் எப்படி மாமாவுக்கு கடன் தருகிறர் என்று தோன்றும்.ஆனால் ஒன்றாம் தேதி மாலையில் தவறாமல் போத்தி ஓட்டலில் வைத்து, மாமா பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவார்.பெரியம்பியாவது, சின்னம்பியாவது அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.இல்லையென்றாலும் ராமையா மாமா கணக்கில் அவ்வப்போது சாப்பிடுவார்கள். ஆனால் ஸ்வீட் எல்லாம் கிடையாது. போத்தி ஒட்டலில் பச்சைக்கற்பூரம், தேன், ஆஜ்மீரிலிருந்து வரும் பன்னீர், குல்கந்து, ஓமவாட்டர்,குங்குமப்பூஎல்லாம் கிடைக்கும். ரொம்ப ஒரிஜினல் சரக்குகள்.இது தவிர வெட்டிவேர் சோப். மைசூர் சந்தன சோப், கேப்டன் சந்தனப் பவுடர், மரிக் கொழுந்து உட்பட பலவித சென்ட், எல்லாம் கிடைக்கும்.
எதாவது புதிய ரக செண்ட் வந்தால், அதை அப்பாவிடம் காண்பித்து லேசாகப் புறங்கையில் தடவி எப்படியிருக்கு சொல்லுஙக என்பார். ஒரு தடவை, நானும் கையை நீட்டிய போது போத்தி, ஏல இதெல்லாம் பொண்டாட்டீட்ட போகும் போது போடணுண்டா என்றார். நான் ஹி ஹி என்று சிரித்தேன்.பொட்டென்று பொடதியில் ஒரு அடி விழுந்தது. அப்பா.
ஒரு பொங்கலன்று காலையில், வேட்டைக்காரன் வந்த வருடம் என்று நினைவு, பச்சைக் கற்பூரம் வாங்கப் போனவன், பசியோ என்னவோ தெரியவில்லை, மயங்கி விழுந்து விட்டேன்.ராமையா மாமா தான் தண்ணீரச் சளப்பென்று தெளித்து, கால்களை மட்டும் உயரத்தூக்கி,மயக்கம் தெளிவித்தார்.ராத்திரி சரியாச் சாப்பிடலியோ கண்ணு என்று, ஒரு குல்கந்து வாங்கி ஊட்டுவது போல் சாப்பிடவைத்தார்.சிகரெட் வாசனையுடன்.
ஒரு கொலு சமயம். மாமாவின் அந்த வீட்டுப் பக்கமாக அப்பாவுடன் போய்க் கொண்டிருந்தேன்.அந்த மாமி, வாசலில் நின்று கவரக்குடித் தெரு பையன்கள் கலாட்டா செய்து கொண்டிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தாள். அவள் வீட்டிலும் கொலு வைத்திருந்தது. சுண்டலுக்காக அந்தத் தெருப் பையன்கள் கலாட்டா செய்வது வழக்கம். எங்கள் தெரு கொலுவுக்குக் கூட வந்து கலாட்டா செய்வார்கள். எங்களைக் கண்டதும், மாமா வாங்கோளேன், இதுக உபத்திரவம் தாங்க முடியறதில்லை.. ரெண்டு பொம்மைய வச்சுருக்கேன். அதுக்கு இந்தா வரத்து வாரதுகள், என்றாள். உள்ளே போனோம்.சொன்னது போல் ஒரு அறைக்குள் இரண்டு அடுக்கு வைத்து நாலைந்து பொம்மைகள் இருந்தன.ஒரு காமாட்சி அம்மன், கரும்போடு இருந்தாள்.அப்பா ஒரு சேரிலும், நான் அருகில் தரையிலும் இருந்தேன்.அம்மா பூஜை அறையில் வச்சுருந்தா இதையெல்லாம். எனக்கு அதனாலதான் காமாட்சின்னு பேர் வச்சா, என்று சொல்லி சிரித்துக் கொண்டாள். மூக்குத்தி மின்னியது.ராமையா மாமா வந்தார்.வாசலில் நின்ற பையன்களை ஏசிய படியே வந்தார்.இதுக்குத்தான் சொல்றது கொலுவும் வேண்டாம் ஒரு மையிரும் வேண்டாண்ணு என்று சொல்லிக் கொண்டே நுழைந்தார்.
என்னைத்தான் முதலில் பார்த்தார்.இவன் எங்க இங்க வந்தான் என்றார். நீங்க அவாளப் பாக்கலியா, என்றாள். வாங்க வாங்க என்றார்.ஒரு பழ வாசனை வந்தது. மாமி, பட்டகசாலையிலேயே இருங்க என்றாள்.ஆமா இது வேற என்று அப்பாவைப் பார்த்து சிரித்தார். சரி ஒரு பாட்டுப் படி, அவனுக்கு என்னமாவது குடுத்தியா,என்றார். அவள் உள்ளே போய் ஒருதட்டில் மாதுளம் பழம் உரித்ததும், சுண்டலும் கொண்டு வந்தாள்.நான் மாதுளம் பழம் தின்றதேயில்லை.சாப்பிட்டேன், கடுக் கடுக் என்றிருந்தது.துப்பவும் முடியாமல் விழித்தேன். மாமா அதை வச்சுட்டு, சுண்டலைத் தின்னு என்றார். மாமி ஒரு தம்புராவை மீட்டிய படி பாட ஆரம்பித்தாள். ‘’சாந்தமும் லேகா சௌகியமும் லேது...‘இது எங்கள் வீட்டு கொலுவில் சிண்டாளு பாடுவது. லேக்கா என்றால் எங்கள் பாஷையில் அப்போது கிறுக்கு என்று அர்த்தம். எனக்கு சிரிப்பு வந்தது.ஆனால் சிண்டாளுவை விட நன்றாகப் பாடியது போலிருந்தது. யேடி, குலதெய்வம் பாட்டு படிடி, என்றார் மாமா.தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த.. என்று பாடினாள்.அதே குரல் போலிருந்தது.. அப்புறம் பரிபூர்ன சதானந்த வாரியே பக்த ரட்சகனே.... என்று முனு முனுத்து விட்டு, ‘அருள் புரிவாய் கருணைக் கடலே ...என்று முதலிலிருந்து பாடினாள். அடி எல்லாம் மறந்துட்டு. பாட விட்டாத்தானே..வந்ததுமே...என்று எதையோ அரம்பித்தவள் நிறுத்திவிட்டாள்.
ஒரு நாள் அப்பா வீட்டு லெக்கைச் சொல்லி, அங்க போய் அவரு இருந்தா ரூவா கேட்டேன்னு வாங்கீட்டு வாறியா என்றார். அண்ணனை அனுப்ப இஷ்டமில்லை என்று நினைக்கிறேன். எனக்கு இலக்கே சொல்லவேண்டாம், வீடு நன்றாகவே தெரியும். போனேன். மாமி, மார்பு வரை ஒரு பாவாடை மட்டும் கட்டி இருந்தாள்.தலையில் நிறைய எண்ணெய் தேய்த்துக் கொண்டை போட்டிருந்தாள். தோளிலும் கழுத்திலும் எண்ணெய் வழிந்து கொண்டிருந்தது. எண்ணெய்க் குளியல் போலிருக்கிறது.சற்றெ பழுப்பான வெள்ளைப் பாவாடை, எண்ணெய் வழிந்து மார்பு தெரிந்து கொண்டிருந்தது, பாவாடை ஊடாக.காதில் மூக்கில் ஏதுமில்லை.அன்றிருந்த கனத்த சங்கிலிகளையும் காணும். பெரிய அம்பி தார்சாலில் உட்கார்ந்திருந்தான்.அவள் பையன், குச்சி ஐஸ் வாங்க துட்டுக் குடுடா என்று அம்பியை அடித்துக் கொண்டிருந்தான்.அவள் அடிபம்ப் அருகே குளிக்கத் தயாராய்.நான் மாமா எங்கே, அப்பா பணம் கேட்டார் என்றேன். இருடா கோந்தே, அவர் வர்ற நேரம் தான் என்றாள். அதற்குள் பெரிய அம்பி, இவனா குழந்தை என்றான். நான் முறைத்துக் கொண்டு வந்து விட்டேன்.அவள் கூப்பிடுறா அவனை என்பது கேட்டது.
அன்பேகடவுள் வீட்டு நடையில் யாரோ உட்கார்ந்திருந்தான். சரியான இருட்டு. சிகரெட் கனிந்து கொண்டிருந்தது.. தென்றல் வீசும் என்று ஒரு படம். கல்யாண் குமார் தேவிகா நடித்தது. செகண்ட் ஷோ பார்த்துவிட்டு, நானும் கனகுவும் வந்து கொண்டிருந்தோம்.படம் சுத்த மோசம் பாட்டு பிரமாதம். விஸ்வநாதன் ராம மூர்த்தி மியூசிக். பி.எஸ்,ரங்கா படம். டப்பிங் படம் போலிருந்தது.பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும், அழகான மலரே, அறிவான பொருளே, தெளிவான தெளிவே, செஞ்சாந்து மணமே.. என்ற பாட்டும், சுசீலாவின் பாட்டுகளும், ஜானகியின் சந்தனத்தில் நிறமெடுத்து..பாட்டும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.சுசிலா பாடும் மீட்டாத வீணையிது வீசி வரும்தென்றல், வாடாத முல்லையிது பாடி வரும் தேனி.. பாட்டு ஒரு அற்புதம். சிலோன் ரேடியோவில் அடிக்கடிப் போடுவான்.இந்த வீட்டு நடையில் யார் இது இந்நேரம் உட்கார்ந்திருப்பது....என்று யோசிக்கும் போதே கனகு சத்தமாகக் கேட்டான், யாரு அது?.சிகரெட் நன்றாகக் கனிந்தது, ஒரு இழுப்பு இழுக்கிறான் போலும்.நான் தான் என்று பெரிய அம்பி பேரைச் சொன்னான்.
என்னவே இந்த நேரத்தில இங்க என்றான் கனகு. இப்போது அம்பி கைலாசம் கடையில் இல்லை.கடையில் நெடு நேரம் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருப்பான்.இல்லையென்றால்,பூட்டிய கடை வாசலில் உட்கார்ந்து யாருடனாவது பேசிக் கொண்டிருப்பான்.நான் அவனைக் கண்டாலே தள்ளிப் போய் விடுவேன், அவனும் பேச மாட்டான்.பின்னாளில் தனியே கடை வைத்து, பேண்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக விளங்கினான். பொன்னாகுடியா மருகமகள் நங்கையாரை அநுபவ பாத்தியதை கொண்டாடிக் கொண்டிருந்தான்.அப்புறம் மறு படி நொடித்து,ஒரு கடையில் வேலை பார்த்தான்.என் திருமண பேண்ட் சட்டையெல்லாம், அப்போது அவன் தான் தைத்தான்.
என்னவே இன்னமும் வீட்டுக்கு போகலியா என்றான் கனகு. ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். கனகுவுக்கும் அவனைப் பிடிக்காது.ஓஹோ ஒங்க அத்தான் வீட்ல இருப்பாரோ என்றான்.எனக்கு இது அதிகமோ என்றிருந்தது.அவன் பேச வாயெடுக்கும் முன், வீட்டில் விளக்கெரிந்தது. யாரோ அடிக்கிற சத்தமும், ஒரு பெண் ஐயய்யோ வச்சனே, வச்சனே. என்று அழுது கொண்டு வீட்டுக்குள்ளெயே ஓடும் சத்தமும் கேட்டது.நானும் கனகுவும் ஆடிப் போய் விட்டோம். அன்பேகடவுள் வீட்டு செட்டியாரா இப்படி என்று. ஆள் அமைதியாய் இருப்பாரே, குழந்தைகள் கிடையாதே தவிர எல்லரிடமும் பிரியமாய் இருப்பாரே, என்று எண்ணிக் கொண்டிருந்தோம். எலிப் பொறி வச்சா எப்படி மூதி ஏம் மேல வந்து விழும், நீ அடுக்களைக்குள்ள பூட்டிக்கிட்டு நிம்மதியா ஒறங்குதியோ, படுக்காளி மூதி என்று ஏச்சு வந்து கொண்டே இருந்தது.விசித்து விசித்து அழும் அழுகையும், சத்தம் மூச் என்று அடக்கும் அவர் குரலும் கேட்டது.அவர் பயில்வான் போஸில் போட்டோவெல்லாம் எடுத்து மாட்டியிருப்பார்.அந்தம்மாவை ஒரே ஒருதரம் பார்த்திருக்கிறேன்.கனகு நான் பார்த்ததே இல்லை என்றான்.அம்பி ஏயப்பா இன்னிக்குத் தான் ரெண்டு பேரும் இதை கேக்கேங்களா, அநேகமா தெனமும் இதான நடக்கு. என்றான்.சொல்லிக் கொண்டே எங்களுடன் நடந்தான்.
மூன்று பேரும் பேசவே இல்லை.கனகின் வீடுதான் முதலில் வரும். அவன் வீட்டுக்குப் போய் விட்டான்.நான் பேசாமல் வந்தேன், அம்பி பிரியும் இடம் வந்தது, வே, வரட்டுமா தம்பி என்று போனான்.
கொஞ்ச நாளில் மாமா திடீரென்று இறந்து போனார்.மாமி அப்பளம் இட்டு விற்கிறாள் போல. ஒரு நாள் வீட்டுக்கு கொண்டு வந்தாள்.அப்பா ஒரு கட்டு வாங்கி என்னிடம் கொடுத்து, உள்ளே கொண்டு அம்மாவிடம் கொடு என்றார். அவள் கழுத்தில் ஒன்றுமே இல்லை.மூக்கும் முழியும் மட்டுமிருந்தது.சேலை முந்தியில் தான் அப்பளக் கட்டுகளை வைத்திருந்தாள். அது சேலையை தளர்த்தி இருந்தது. பளீரென்ற மார்புப் பகுதி.மார்புகள் வெகுவாகத் தொய்ந்திருந்தன.
இன்னும் ஒரு கட்டு வாங்க்கிக்குமே, ஏதாவது குழந்தேள் இருந்தா சொல்லுமே பாட்டு சொல்லித் தரேன்.என் பையன எங்காவது வேலைக்கு செர்த்து விடுமே, என்று பேசிக் கொண்டிருந்தாள். நீராவது ஆத்துப் பக்கம் வாருமே, என்று மெதுவாகச் சொன்னாள்.அப்பா எதற்கும் பதிலெ சொல்லாமல் தன் ஈஸிச்சேரில் இருந்தார். போதும் வோய், இந்த சங்காத்தம்,ஒம்ம பையனண்ட அப்பளக் காசை மட்டும் கொடுத்து விடும். போனாள், ''பாட்டுக் கேட்டவுடன் ஓடி வந்தாயே, பாடி முடிக்கும் முன்னே பறந்து சென்றாயே''......சுசிலா,.... ரேடியோவில்..... தென்றல் வீசும்.

Visitors