Sunday, June 14, 2009

நீராடும் கண்கள் ஆகாய கங்கை, போராடும் உள்ளம் பாதாள கங்கை.....




பெரிய அண்ணன் சமயா சமயத்தில் தெருவில் என் தோள் மட்ட சேக்காளிகளுடன் பேசிக் கொண்டிருப்பான்.சிரிப்பும் கும்மாளமுமாய் இருக்கும்.நான் போனால் நைசாக நகர்ந்து விடுவான்.பசங்க ஏல உன்னய யார்ல இப்ப கூப்பிட்டா, நல்ல கட்டத்துல வந்து கெடுத்துட்டியே என்பார்கள்.அண்ணன் தன்`அடல்ட்ஸ் ஒன்லி’ பிரதாபங்களைச் சொல்லிக் கொண்டிருப்பான், அப்படி நேரங்களில் என்று கொஞ்ச நாள் கழித்தே பிடிபட்டது. பொன்னாகுடியாளின் புது மருமகளை, (அவளுக்கு நாங்கள் கும் கும் என்று பேர் வைத்திருந்தோம். அப்போது பம்பாய் கா பில்லி என்ற படம் வந்திருந்தது.மனோஜ் குமார் கதாநாயகன் என்று நினைவு. அதில் பெரிய மார்புடன் வருகிற நகைச் சுவை நடிகைக்கு அதுதான் பெயர்) வளைத்துப் போட்டதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் நான் போய்ச் சேர்ந்தேன்.தலையைக் குனிந்தவாறே நகர்ந்து விட்டான்.
அப்போது பார்த்து, தெருப் பம்பில் கும் கும் தண்ணீர் எடுக்க வந்தாள்.நான் மெதுவாக ஏய், கும் கும், என்றேன்.சேக்க்காளிகளிடம் மௌனமான சிரிப்பு பரவியது.ராமு, `யாரு உங்க மதினியா’, என்றதும் எல்லாரும் குபீரென்று சிரித்து விட்டார்கள்.எனக்கு அப்போதுதான் எல்லாமும் விளங்கியது.கோபமும் அவமானமுமாய்,நானும் வீட்டுக்கு கிளம்பினேன், யாரோ ஏல ஏல, வீட்ல போய் உளறீதாலெ, என்றார்கள். எதைக் கேட்கவும் நான் தயாராய் இல்லை.
ரத்னா டாக்கீஸில், ஆயி மிலன் கி பேலா, வந்திருந்தது.,ஸ்க்ரீன் பத்திரிக்கையில் அதன் விளம்பரங்கள் ரொம்ப நாளாக வந்து கொண்டிருந்தது, அதனால் அது நல்ல படமாயிருக்கும் என்று ஒரு மேட்னி ஷோவுக்குப் போயிருந்தோம்.தவிரவும் அதை தமிழில் எம்.ஜி..ஆர், ஜெய்சங்கர், சரோஜாதேவி நடிக்க,கே.சங்கர் இயக்க, ஒரு தாய் மக்கள் ஆக வருவதாக செய்தி வேறு வந்திருந்தது,`வந்தது வசந்தம்’ என்றோ என்னவோ முதலில் பெயர்சூட்டியிருந்தார்கள்..`பாம்சிங்’, மன்னிக்கனும் பீம்சிங்கிற்கு `ப’ வரிசை செண்டிமெண்ட் மாதிரி ஓம்பிரகாஷுக்கு `ஆ’ செண்டிமெண்ட். `ஆம்பிரகாஷ்’.படம் அது. பெண்கள் தரை டிக்கெட் பகுதியில், பேருக்கு ஒரு ரெண்டு பெஞ்சை ஒதுக்கி இருந்தார்கள்.அதில் இரண்டே இரண்டு பேர் மட்டும் இருந்தார்கள்.அதில் ஒருவள் அழகாய் இருந்தாள்.சிரித்த முகம்.அழுந்தச் சீவி வட்டக் கொண்டை போட்டு, கனகாம்பரம் வைத்திருந்த நினைவு.இரண்டே பேர் மட்டுமே இருக்கிறோம் நம்மையே எல்லாரும் பார்க்கிறார்கள் என்கிற மாதிரியான ஒரு சௌந்தர்யக் கூச்சம் அது, என்று இப்போதைய பாஷையில் சொல்லலாம்.படம் புரியவே இல்லை.ப்ரிண்டும் சரியாயில்லை,சாயிரா பானுவை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பது.ராஜ்குமார் என்றால் நடிப்பையாவது ரசிக்கலாம், ராஜேந்திர குமாரை எப்படி சகிக்க..இடைவேளை முடிந்து கொஞ்ச நேரத்தில் ஒரு கூச்சல் போட்டு விட்டு, கிளம்பி விட்டோம்.யார் கிளம்புவார்கள் என்று காத்திருந்தார்களோ என்னவோ அந்த இரண்டு பெண்களும் கிளம்பி விட்டார்கள்.
தியேட்டர் கசகசப்பை விட்டு வெளியே வந்ததே பெரிய விடுதலையாய் இருந்தது.காணாததற்கு அந்த இரண்டு பெண்களும் எங்களுக்கு முன்னால்தான் போய்க் கொண்டிருந்தார்கள்.வழியில் மார்க்கெட்டுக்குள் நுழையும் போது இரண்டு பேரும் எங்களைப் பார்த்து திரும்பி ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போனார்கள். எங்களுக்கு நிலை கொள்ளவில்லை.ஆனால் ஏனோ மார்க்கெட்டிற்குள் போகவில்லை. தெருவிற்கு வந்து, வழக்கமாய் உட்காருகிற காடினாவின் நீள நடையில் உட்கார்ந்து, அவளில் அழகானவளுக்கு சாய்ரா பானு என்று பேர் வைத்தோம்.அதைப் பற்றியே பேசிக்கொண்டுமிருந்தோம்.கொஞ்ச நேரத்தில் இரண்டு பேரும் எங்கள் தெரு வழியாகவே,எங்கள் முன்பாகப் போனார்கள், அதே சிரிப்புடன்.சரி என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று பெரிய கோபால், கனகு மூன்று பேரும் பின்னாலேயே போனோம்.பேட்டை ரோட்டில் போய்க் கொண்டே இருந்தார்கள்.
வேணுவன குமாரர் கோயில் தெரு என்கிற மாதா கோயில்தெருவில் நுழைந்தார்கள்.அங்கே ஒரு அழகான முருகன் கோயில் உண்டு.வேணுவன குமாரர் என்று பெயர்.நெல்லையப்பர் கோயிலைச் சேர்ந்தது.அதன் பக்க வாட்டில் நல்ல மைதானம் ஒன்று இருக்கும்.அதில்த் தான் பாண்டியன் உடற்பயிற்சிக் கழகம் என்று முன்பு இயங்கி வந்தது.அங்கே ஒரு கபடி டீம் உண்டு.எங்கள் தெரு `பெரிய டீம்; அங்கே போய் விளையாடி தோற்று விட்டு வந்தது. நாங்கள் `சின்ன டீம்’. நான் டீமிலேயே கிடையாது.அந்தத்தெருவைத் தொடர்ந்து மாதா புங்கடித் தெரு. இரண்டு பெண்களும் அந்தத் தெருவின் முடிவில் திரும்பியவர்கள்,எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.புங்கடித் தெருவிற்குள் போனார்களா, அல்லது மொட்டையாய் முடியும், வேணுவன குமாரர் கோயில் தெருவில் எந்த வீட்டிற்குள்ளாகவும் போய் விட்டார்களா தெரியவில்லை.எங்கள் `முயற்சியும்’ மொட்டையாய் முடியவே நாங்களும் திரும்பிவிட்டோம்.
எப்பொழுதாவது தெரு வழியே அந்தப் பெண், அதான் சாய்ரா பானு, போவாள்.எப்போதும் உறுத்தாத அலங்காரமும் புன்னகையுமாய் எங்களைக் கடக்கையில் லேசாகத் திரும்புவாள்.அவள் யார், எங்கே போகிறாள், என்று புரியாமலே இருந்தது.
மதினி இறந்து ஒரு வருடம் போல் இருக்கும்.பெற்றால்தான் பிள்ளையா ஓடுகிற தியேட்டரில் நானும் சபாபதியும் நின்று கொண்டிருந்தோம்.அதுதான் தினசரி வழக்கம்.காலேஜ் விட்டு வந்ததும் வாத்தியார் படம் ஓடுகிற தியேட்டரில் போய் நிற்பது.அங்கே ஒரு கூட்டமே வரும்.உடையார் பட்டி மணி, பொன்னையா,மேலப்பாளையம் சோமு,பழனித் தெரு பிச்சு மணி, காவல்பிறைத்தெரு மொக்கசாமி, வில்லை கம்பெனியில் வேலை பார்க்கும் உசிலம்பட்டி மூக்கையா,என்று ஒரு கோஷ்டி சேரும்.எப்பாவாவது ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் நாராயணன் கணேசன் வருவார். அவர் தள்ளியே நிற்பார்.பின்னாளில் இவர்தான் ப்ரோக்ராம் எக்ஸிக்யூடிவ்வாக இருக்கும் போது, என்னுடைய முதல் ரேடியோ பேச்சை முன்நின்று ஒலிப்பதிவு செய்தார்.நான் தான் கலாப்ரியா என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோஷப் பட்டார்.ஆச்சரியப்படவில்லை.அது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.சினிமா படத் தயாரிப்பாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களின் படப் பாடல்களைத்தான், ஏ அய் ஆரில் ஒலிபரப்புவார்கள். எம்ஜியார் பிக்சர்ஸ் அதில் உறுப்பினர் இல்லை. அதனால் நாடோடி மன்னன் பாட்டை எந்த ஸ்டேஷனிலும் ஒலி பரப்ப மாட்டார்கள்.ஆனால் ஸ்டேஷன் லைப்ரரியில் இசைத்தட்டு இருக்கிறது என்று அவர் சொல்லுவார்.அடிமைப் பெண் வந்த 69-ல் தான் எம்ஜியார் அதில் உறுப்பினரானார்.சரியாக நாடோடி மன்னன் படம் வந்து பதினோரு வருடம் கழித்து, அடிமைப் பெண் படம் வந்த அன்று திருநெல்வேலி வானொலி நிலையத்திலிருந்து கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே பாட்டையும் அதைத் தொடர்ந்து ஆயிரம் நிலவே வா பாடலையும் ஒலி பரப்பினார்கள்.நாங்கள் நினைத்துக் கொண்டோம்,இது கணேசன் சார் ஐடியாதான் என்று. அவரது கல்யாணத்திற்கு லாலா மணி தலைமையில் ஒரு ரசிகர் கூட்டமே போனோம். அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த வண்ண மயமான பெரிய ப்ளாஸ்டிக் பக்கெட் பரிசாக வாங்கிப் போனோம்.அதை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.கணேசன் சார் சீக்கிரமே காலமாகி விட்டார்.
நான் தியேட்டரில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த சாய்ரா பானுவைப் பார்த்தேன்.பார்த்து ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருக்கும்.யாரையோ எதிர்பார்த்து நின்ற மாதிரி இருந்தது.அதே போல, இரண்டு சோஃபா டிக்கெட் பாஸுடன் அண்ணன் வந்தான் அவளை நோக்கி. ஸ்வாமி பிக்சர்ஸ் முதலாளி அவரது ஆரம்ப காலங்களில் எங்கள் வீட்டின் ஒரு குச்சில்தான் தங்கி இருந்தார். அப்போது அவர் ஸ்ரீவள்ளி படத்திற்காக சேலத்திலிருந்து வந்த ரெப்ரெசெண்டேடிவ். அவருக்கு வீட்டில் பெயரே `வள்ளி படத்துக்காரர்’தான்.அதனால் அண்ணன் எளிதாக பாஸ் வாங்கி வந்து விடுவான்.அதுவும் ஹைகிளாஸ் பாஸ்.அந்தப் பெண்தான் அந்தா அங்கே பார் என்பது போல் என்னை நோக்கி தலையை அசைத்துக் காண்பித்தது.நான் தியேட்டரை விட்டு வெளியே வந்து நின்று கொண்டேன்.இடது கை மணிக்கட்டை வலது கையால் பிடித்து காரணமில்லாமல் தேய்த்துக் கொண்டிருந்தேன்,. கோபமும் அவமானமுமாய் உணர்கையில் அது என் மேனரிஸம்.சபாபதி வந்து சொன்னான், நீ வேணூம்ன்னா படம் போவியாம்,வீட்ல சொல்லீராதன்னு அண்ணன் கெஞ்சுவதாக.நான் வேண்டாம் யார்ட்டயும் சொல்லலை என்றேன்.அதற்குள் தோசை ஆறுமுகம் வந்தான்,அவன் துணி வியாபாரம் பார்க்கிறவன்.ஆனித்திருவிழா, பொருட்காட்சி சமயத்தில் கார் டியூபில் சரக்கு கடத்துவான்.அவன் வந்தாலே எல்லாரும் கலைந்து விடுவோம்.
வேட்டைக்காரன் பட ஸ்டைலில் ஏய், க்கோவாலு, லதாக்குட்டிய யாருடே தள்ளீட்டு வந்திருக்கா,போய் கலைச்சு விட்ரலாமா, கூ...மவ ரொம்ப நாளா டோக்கர் விட்டுட்டு இருக்காளே, என்றான். சபாபதி அவனிடம் ஏதொ சொன்னான். இதற்குள் இரண்டு பேரும் மாடி ஏறி தியேட்டருக்குள் போயிருந்தனர்.அப்படியா சங்கதி. வேட்ரக் குடிப் புள்ளல்லா,உம்ம அண்ணாச்சிக்கு எப்படி பழக்கம், என்றான்.நான் அமைதியாய் இருக்கிறதைப் பாத்துட்டு, அவனும், சரி தர்ம காரியம்.... நடக்கட்டும் என்று தள்ளிப் போனான்.படம் போட மணிஅடித்ததும் நாங்கள் நயினார் குளம் கரைக்குப் போனோம் அங்கே காற்று நன்றாக வீசும்.அங்கே அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்.பிச்சுமணி, மூக்கையா போன்றவர்கள், அங்கே கொஞ்சம் தள்ளி இருக்கும் முனிசிபாலிடி கக்கூஸுக்குப் போய் விட்டு வருவார்கள்.அங்கே சகலமும் நடக்கும்.தோசை, ஸ்ஸ்...அப்பா.. தாயோளி உறிஞ்சு எடுத்துட்டான், கரிப்பய,என்றவாறே வந்தான். தாய்க்குத் தலை மகனுக்கு பத்து டிக்கெட் தாரேன்னிருக்கான், பொங்கலும் அதுவுமா என்னத்தையும் அம்பது ரூவா கிடைக்கும்ன்னு பாத்தா, க்கூ,,,,யான்...என்று சொல்லிக் கொண்டிருந்தான்.க்கோவாலு தொண்டையில முடி முளைச்சுருக்கும்ங்காங்களே... அப்படி உண்டுமாடே..என்றான். .நான் பதில் சொல்லுகிற மாதிரி இல்லை... க்கோவால் மேல நிறைய பேருக்கு ஒரே கண்ணாயிருக்குடே,அறுக்கதுக்கு சும்மா கேயார் விஜயா கணக்கா இருப்பான்னு......என்றான்.எனக்கு இன்னிக்கி நேரம் சரியில்லை, இந்த சங்காத்தமே வேண்டாம் என்று பட்டது. சரி போவமா என்று சபாபதியிடம் கேட்டேன், அவனும் கிளம்பினான்.
இரண்டு, மூன்று வருடங்களில் எல்லாமே திசை மாறிப் போயிருந்தது.நான் வகுப்பில் முதல் மாணவனாகி இருந்தேன்.எம்ஜி ஆர் படங்களும் குறைந்து போயிருந்தது.69-ல் இரண்டே படம்.70-ல் நாலைந்து படங்கள் வந்தன.தியேட்டரில் கூடுவதெல்லாம் குறைந்து விட்டது.
ஒரு வருட இடைவெளிக்குப் பின் நான் ஆசைஆசையாய் எம் எஸ் சி சேர்ந்தேன்.பாலகுமாரனெல்லம் கூட கடிதம் எழுதியிருந்தான், ஏதோ ஸ்டேட் பேங்கில் தற்காலிக வேலை பார்க்கிறேன் என்றாயே, அதை தக்க வைக்க முடியுமாமே எம் எஸ் சியெல்லாம் அவசியமா என்று.அப்பாவுக்கும் அதுதான் ஆசை. எனக்கு, கல்லுரி ஆசிரியராக வேண்டும், கணிதத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும், பி எச் டி,அப்புறம் அவளைக் கைப் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கனவு. ஒன்றும் கை கூடவில்லை.உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்று ஆனதுதான் மிச்சம். எம்எஸ்சி யில் என்னுடன் சாரங்கன் சேர்ந்திருந்தான்.அவனுக்கு அப்பா கிடையாது. பெரியப்பா வீட்டில் இருந்து படித்தான். நாகர் கோயில் பக்கம், தோவாளை. பூ கட்டும் வகுப்பினர்.திருநெல்வேலியில் குடியேறி நெடுங்காலமாயிற்று. வீடு வேணுவன குமாரர் கோயில் தெருவில் இருந்தது. பி எஸ் சியில் நல்ல மார்க், அவனது கல்லூரி ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டுக்கே வந்து அவனை கட்டாயம் மேற்படிப்பு படிக்க வையுங்கள் என்று சொல்லவே அரை மனதாக அவன் பெரியப்பா சம்மதித்தார்
.நாம ரயில்ல ஏறினா, நம்ம விதி இஞ்ஜின்ல ஏறி நமக்கு முன்னேயே ப்ளாட் பாரத்தில இறங்கி நிக்கிது என்று சொல்லுவது போல அவன் பெரியப்பா பக்கவாதத்தில் விழுந்தார்.அவர் திருச் செந்தூர் மார்க்கத்தில் உள்ள செய்துங்க ந்ல்லூர், கருங்குளம், பெருங்குளம், ஆழ்வார், தெந்திருப்பேரை, குரும்பூர், அம்மன்விளை, சோணகன்விளை மாதிரி ஊரில் உள்ள சிறிய பலசரக்கு கடையிலெல்லாம் போய், ஆர்டர் எடுத்து வந்து,இங்குள்ள ஹோல்சேல் கடையிலிருந்து சரக்குகளை ரெகுலர் லாரி சர்வீஸில் போட்டு விடுவார்.ஆர்டர் எடுக்கையில் பழைய பாக்கியை வசூலித்து வருவார்.ஏதோ பணம் ஓட்டமிருக்கும். இது போக வீட்டில் பெண்கள் பூக்கட்டிக் கொடுப்பார்கள்.முத்துக்குமாருப் பிள்ளை, பூக்கடையில் பெரிய ஆர்டரெல்லாம் எடுத்து வருவார்கள்.அவர்களுக்கு இவர்கள் பூ கட்டிக் கொடுத்து கூலி வாங்கிக் கொள்ளுவார்கள்.
இது போக குமாரர் கோயிலுக்கு அடுத்தாற் போல ஒரு அம்மன் கோயில்.அதுவும் நெல்லையப்பர் கோயில் ஆளுகைக்கு உட்பட்டது.அதற்கு பூசை வைக்க வேண்டிய நித்திய முறையும் சாரங்கனுக்கு உண்டு.அதற்கு வருடத்திற்கு ஆறு ஏழு மூட்டை நெல் பெரிய கோயிலில் தருவார்கள்.அந்தக் கோயிலை ஒட்டி வாய்க்கால் ஒடும். சுற்றி ஒரு நந்த வனம், தங்கஅரளி, நந்தியாவட்டை, ஒரு மஞ்சள் பூங்கொன்றை என்று குளிச்சியாக இருக்கும்.கோயில் முன் மண்டபத்தில் வாழை நார் வைத்திருப்பார்கள்.சோறு நீக்காத வாழை மட்டைகள் நிறைய காய்ந்த படியி கிடக்கும்.அதுவும் ஒரு வாசனையைத் தந்த வண்ணமிருக்கும்.வியாபாரப் பொறுப்பு சாரங்கன் தலையில் விழுந்தது.வாரத்தில் இரண்டு நாள் வகுப்புக்கு வர முடியாது.அன்றைய தினங்களில் நடந்ததை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வான்.இதற்கு உகந்த இடமாக அம்மன் கோயில் இருந்தது.நானும் சக்தி பைத்தியம் பிடித்து அலைந்த நேரம் அது.அம்மனின் பெயர் ஆயுள் பிராட்டி.உட்கார்ந்த நிலையில் சற்றே உக்கிரமான முகத்துடன் இருக்கும் சிலை.யாரையும் வதம் செய்கிற மாதிரி இருக்காது.காலையில் குளிப்பாட்டி, ஒரு சேலையைச் சுற்றி, வீட்டில் கட்டிய மாலையைப் போட்டு, அது பெரிதும் முதல் நாள் இரவு போட்டு களைந்த மாலையாய் இருக்கும்.மத்தியானம் தான் பூ, மார்க்கெட்டிற்கு வரும். ஒரு கால்ப் படி அரிசி வெந்து, அது தான் பிரசாதம்.வீட்டிலும் அதுதான் சாப்பாடு.
அன்று என் வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை. மனம் ரொம்பப் பிறழ்ந்து கிடந்தது.இனம் புரியாத பயம் ஒன்று சூழ்ந்திருந்தது.புஸதகங்களை எடுத்துக் கொண்டு சாரங்கன் வீட்டிற்குப் போனேன். அவன் ஊருக்கு, வசூலுக்குப் போனவன் இன்னும் வரவில்லை.
அவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு தாத்தா, கலகலவென்று பேசுவார்.இடுப்பில் பெண்களைப் போல் ஒரு குழந்தையை வைத்திருப்பார்.சோகை விழுந்து, உதட்டின் ஓரங்களில் எல்லாம் வெள்ளைப் புண்ணாயிருக்கும்.கழுத்திலும் கையிலும் சோகைக்கு, வேர் கட்டி இருக்கும்.தாத்தா சற்று விவரமானவர். விவரமும் இல்லாதவர்.அவர், சாரங்கன் பெரியப்பா, எதிர் வீட்டு சுப்பிரமணியன், தனியார் பேங்கில் வேலை பார்க்கிறவர், அவர் மனைவி அப்படி அழகாயிருப்பாள், எல்லாரும்,லீவு நாட்களில் தாசாலில் நாங்கள் படித்துக் கொண்டிருக்கையில் எதிரே அமர்ந்து சீட்டு விளையாடுவார்கள். பெரியப்பாவால் சீட்டை சரியாகப் பிடிக்க முடியாது. பெரும்பாலும் `மக்கு’ விளையாட்டே நடக்கும்.அதில் சீட்டை கையில் பிடிக்க வேண்டாம்.உச்சி வெயில் வருகிற போது ஒரு வைத்தியர் வருவார்.பெரியப்பாவுக்கு, கோவணம் மட்டும் கட்டி ஏதோ எண்ணெயைத் தேய்த்து ஒரு மரப் பலகையில் முற்றத்து வெயிலில், படுக்க வைத்து விடுவார்.அவர் அப்பா அப்பா என்று துடிப்பது பாவமாக இருக்கும்.பெரியம்மா அழுத படியே வீட்டுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருப்பாள்.வைத்தியரே போறாதா பக்குவம், குளிக்கட்டுமே, ரொம்ப சங்கடப் படுதாகளே... என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.வைத்தியர் விட மாட்டார். எங்களுக்கே சங்கடம் வந்து நாங்கள் அதற்குப் பின்தான் கோயிலில் போய் உட்கார்ந்து படிப்பது என்று முடிவெடுத்தோம்.
அன்றும் வைத்தியர் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்.உணர்வில்லாத கையை எப்படியோ இழுத்துக் கொண்டிருந்தார்..பெரியப்பா என்னவோ ரொம்ப துடித்துக் கொண்டிருந்தார்.பெரியம்மா போறும் விடுங்கய்யா இங்கிலீஷ் வைத்தியம் பாத்துக் கிடுதோம் என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.வைத்தியர் சரி உங்க பிரியம், இன்னா வலிக்குன்னு அழுதாரு, அப்படீன்னா மருந்து வேலை செய்துன்னு தான அர்த்தம் என்றார்.அதில்லவே, வலி வேற எங்கியோல்லவே இருக்கு நீங்க போங்க ரெண்டு நாள் கழிச்சு சொல்லிவிடுதேன், என்றார் பெரியப்பா. அதற்குள் சாரங்கன் வந்து விட்டான்.இன்னாலெ சாரங்கா அவரு கையில ரூவாயக் கொடுலெ என்றார்.எவ்வளவு என்றான்.அவ்ர் முன்னூறு ரூபாய் கேட்டார்.அவ்வளவு இல்லை,இன்னாங்க நூத்தி அறுபது ரூபா இருக்கு என்று கொடுத்தான்.அவன் திரட்டிக் கொண்டு வந்ததில் அவ்வளவுதான் மிச்சம்.
நான் கோயிலில் போய் இருந்தேன்.சாரங்கன் குளித்துவிட்டு கையில் பொங்கலுடன் வந்தான்.கண்ணீர் முட்டி நின்றது கண்ணில்.கோயில் வளைவயொட்டி, ஒரு சின்ன படித்துறை உண்டு.அதில் யாரோ துவைத்துக் கொண்டிருந்தார்கள்.இந்த உச்சி வெயிலில் யார் துவைக்கிறார்கள்,.பொதுவாக இந்நேரம் தீட்டுத் துணிதான் துவைப்பார்கள் என்றான் சாரங்கன்.சொல்லும் போது முகத்தில் ஒரு அச்சானியம் படர்ந்தது. பொங்கலை ஓரமாக வைத்து விட்டு ஆடை களைந்து , இன்னக்கி பூசை வேண்டாம்ன்னா கேக்காளா அம்மா,என்று சொல்லியபடியே ஆயுள் பிராட்டி சிலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். நான் அருகே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அம்மன் சிலையை அவ்வளவு அருகில் நின்று பார்ப்பது அது தான் முதல் தடவை.என்னையும் அனுமதித்தால் நானும் அதற்கு இரண்டு குடம் தண்ணீர் விடலாம் போலிருந்தது. கோயில் வாசலில் நிழலாடியது. இரண்டு பேரும் திரும்பினோம் யாருமில்லை.
நாலைந்து குடம் தண்ணீர் அருகேயே ஒரு கொப்பரையில் இருந்தது.சாரங்கன் அதிலிருந்து மொண்டு குளிப்பாட்டத் தொடங்கினான்.மீண்டும் வாசலில் நிழலாடியது,திரும்பினோம். பெரியப்பா.இடுப்பில் ஒன்றுமே இல்லை.கம்பை ஊணியபடி தட்டுத் தடுமாறி சுற்றி வந்து கொண்டிருந்தார்.வேஷ்டியை எங்கே போட்டார் என்று தெரியவில்லை.ஏதோ வெறி வந்தவர் போலிருந்தது.நான் பின்னாலேயே போனேன்.போப்பா, நொண்டியாக்கிட்டாளே, நொண்டியாக்கிட்டாளே, என்று அரற்றியபடி சுற்றி வந்தார்.சுற்றிலும் எங்கேயும் வேஷ்டியயைக் காணவில்லை.சாரங்கனும் துண்டு மட்டுமே கட்டி இருந்தான்.அதுவும் குளித்து ஈரம் முழுதும் காயாத துண்டு..அவன் சாமி காரியத்திலிருந்து எப்படி பாதியில் வருவது என்று தயங்கினான்.அப்போது கோயில் வளைவுக்குள் அந்தப் பெண் வந்தாள்.சாய்ரா பானு என்கிற லதாக்குட்டி, சற்று வயதாகி இருந்தது..அவள் கையில் ஈர வேஷ்டி இருந்தது.பெரியப்பா வேஷ்டியை உறிந்து வாய்க்காலில் எறிந்திருக்க வேண்டும்.அவள் நுழையவும் பெரியப்பா தடுமாறி விழவும் சரியாக இருந்தது.நான் அருகே ஓடினேன். அவளும் வேகமாக வந்தாள்.ஏ மாரி பாத்தியா, எனக்கு இது வேணுமா, என்று அவளிடம் புலம்பினார். உடம்பில் ஒட்டுத்துணியில்லை. என்னால் தூக்க முடியவில்லை. வசமில்லாமல் விழுந்து கிடந்தார்.அவள் ஈரச்சேலையை மார்பு வரை சுற்றி இருந்தாள்.தலையை முடிந்த படி வேகமாய் வந்தவள், அவரது ஒரு கையில் கம்பை எடுத்துக் கொடுத்து,, இன்னொரு கையை தூக்கி அவளது தோளில் போட முயன்றாள்.அது விளங்காத கை, அதற்குள் சாரங்கன் வந்து விட்டான், பூசையை எப்படி முடித்தானோ.நானும் அவனும் தூக்கி நிறுத்தினோம்.தொடை இடுக்குகளிலெல்லாம் தூசியும் நெருஞ்சி முள்ளுமாய் இருந்தது.அவள் அதையெல்லாம் வேகமாகத் தட்டி விட்டு வேஷ்டியைக் கட்டி விட்டாள். நான், அவள் துடைக்கும் போதும் வேஷ்டியைச் சுற்றிக் கட்டும் போதும், அவ்வப்போது பிதுங்கித் தெரியும் மாரியின் மார்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Visitors