Tuesday, March 24, 2009

கவி வரி மீறி....


`பதிவுகள்’கவிதைப் பட்டறை பற்றிய பிரஸ்தாபம் ஆரம்பித்ததும் அல்லது முன்னேற்பாடுகளைத் தொடங்கியதும் எப்படித்தான் தெரியுமோ, முதல் தொலை பேசி அழைப்பு அப்பாஸிடம் இருந்துதான் வரும். அண்ணாச்சி, கூட்டம் பிளான் பண்ணிருக்கீங்களாம்லா, பிரமாதமா செஞ்சுருவோம் அண்ணாச்சி,இந்தத் தடவை பேப்பர்களையெல்லாம் முதல்லயே வாங்கிருங்க அண்ணாச்சி, என்று குறைந்தது கால் மணி நேராமாவது பேசுவார்.பல யோசனைகளை சொல்லுவார்.ரெண்டு நாள் முன்னாலேயே வந்துருதேன் அண்ணாச்சி என்பார்.ஆனால் அன்று காலையில் தான் வருவார். எனக்கு பதட்டமும், நல்ல படியா நடக்கனுமே, எல்லாரும் வரணுமே என்கிற பயமும் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கிற சமயத்தில் முருகேச பண்டியனும் அப்பாஸும் இணைந்துதான் அந்த பயத்தை திசை திருப்புவார்கள். அதற்குள் நிகழ்வுகள் தன் போக்கில் தொடங்கி விடும்.கடைசிப் பதிவுகளுக்கு (2007) மட்டும்தான் அவர் வரவில்லை.
அவர் பேச்சுகள் எதிராளியை சற்று திணற வைத்துவிடும். வார்த்தைகள் மீது அவருக்கு அதீத பிரமை இருந்தது என்று சொல்ல வேண்டும். பேச்சு, தொடர்பில்லாத மாதிரி இருக்கும்.கவிதையை விட கவிதையியலைக் கொண்டாடுபவர்.அவருடன் நன்கு பேசிப் பழகிவிட்ட எனக்கும் முருகேச பாண்டியன் போன்றவர்களுக்கும், அவரை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்.விவாதத்தின் போக்கையே மாற்றி விடக் கூடிய ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்லுவார்.`எழுத்தை வெறும் நிறமாக மட்டுமே பாருங்கங்கேன், அப்படி ஒரு டயலாக் வரட்டும்ங்கேன்....’ என்று சொல்லுவார்.அவ்வளவுதான் பேசிக் கொண்டிருப்பவன், ஒன்று நீண்ட மௌனத்திற்குள் போவான் அல்லது ஆமா என்று தலையை ஆட்டி விட்டு, தன் போக்கிலேயே பேசுவான்.
சொல் வழியானதுதான் சிந்தனை. ஆனால் அப்பாஸுக்கு அது பற்றி அப்ஸெஷனோ என்று எண்ணக் கூடிய அளவுக்கு அவர் யோசிப்பவர். அவரது கவிதைகள் அதிகமும், ஒரு கலைந்த மொழியாடலின் கட்டமைப்பாகவே இருக்கும்.வெவ்வேறு திசைகளிலிருந்து ஒரிடத்தில் குவிகிற ஒரு சார்பாக( mapping or functin) கவி வரிகளைப் படைப்பார். ஆனால் அது குவிகிற இடம் ஒரு கண்ணாடி போன்ற தளமாக இருக்கும். வந்த வேகத்தில் அவை பிரதிபலித்து பல பரிமாணம் கொண்டு விடும்.
இடையில்
வட்டமிட்டும் பறக்கிறது கழுகு.
கண்களில் தப்பித்திரியும்
வர்ணங்களோடு குஞ்சுகள்
பறத்தலுக்கும், இரை தேடலுக்கும்
இடையில் விழித்துக் கிடக்கிறது
வர்ணம் தெரிந்த அதிசய நான் ஒன்று.
(வயலட் நிற பூமி)

அப்பாஸ் ஐந்து தொகுதிகள் வரை வெளியிட்டிருக்கிறார்.எல்லாமே சற்று ஒல்லியான தொகுப்புகள்தான். ஆனால் விஷய கனம் மிக்கவை.அவர் தன் குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பவர். நாங்கள் இரண்டு பேரும் அநியாயத்திற்கு குழந்தைகள் பற்றி ப்ரியத்தின் காரணமாகப் பயப்படுகிறவர்கள்.இந்த மனோவியாதி குறித்து மனதாரப் பங்கிட்டுக் கொண்டுமிருக்கிறோம்.(அப்படியும் வியாதி குறைந்த பாடில்லை)
தன் கடைசி நேரங்களில் அவரின் வழக்கத்திற்கு விரோதமாக அவர் தன் பேச்சுக்களை சுருக்கிக் கொண்டார் என்றே சொல்லவேண்டும்.கல கலப்பும் மர்மமுமான பல இரவுகளை மகிழ்ச்சியாக, நானும் அவரும் முருகேச பாண்டியனும் பூபதியும் கழித்திருக்கிறோம்.அவரது ஒரு கவிதை வரி எனக்கு நினைவுக்கு வருகிறது.அவர் பாஷையில் சொன்னால் பாட்டு வரி-அவர், கவிதை என்பதை விட பாட்டு என்றே எப்போதும் பேச்சில் குறிப்பிடுவார்

``யாவரையும் ஒரு நொடியில்
கடந்து செல்லும் வெள்ளைப் பறவை.
நான். நீ...’’

Sunday, March 22, 2009

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை........





கட்டளை ஆபீஸ் என்கிற கட்லாபீஸ் முன்னால் சிறிய மைதானம் போல் காலி இடமும் ஒரு சோப்புக்காய் மரமும் உண்டு.ஒரு அழகான, ஆனால் தூர்ந்து போன கிணறு.அதைச் சுற்றி வட்டமான, நன்கு சிமிண்ட் பூசிய கை பிடிச் சுவர். உள்ளே இறங்குவதற்கு வாகாகக் கல்ப்படிகள். கிணற்றின் முக்கால் வட்டத்தில், நின்று கொண்டு துலாவை இழுத்து இறைப்பதற்குத் தோதுவாக, நாண் போல அகலமான கல். கிணறு தூர்ந்து போனதாகச் சொல்ல முடியாது. தண்ணீர் இறைக்காமல் வற்றிக் கிடப்பது போல் இருக்கும்.தெருவில் யாராவது வீட்டை இடித்துக் கட்டினால், அந்த உடைந்தது உடையாததை அதில் போடுவார்கள்.யார் வீட்டிலாவது எலி, பொறியில் சிக்கினால்,அதைப் பொறியோடு தண்ணீருக்குள் முக்கி மூச்சுத் திணற வைத்து சாகடிப்பார்கள். இல்லையென்றால் இந்தக் கிணற்றுக்குள் திறந்து விட்டு விடுவார்கள். அது உள்ளே ஒடி ஒளிந்து கொஞ்ச நேரம் கழித்து, படி வழியே ஏறப் பார்க்கும். நாங்கள் அதைக் கல்லெறிந்து கொல்ல முயலுவோம்.தப்பி ஓடி ஒளிந்து கொள்ளும், அந்த விளையாட்டு சலித்து விட்டால், கிணற்றடியில், சோப்புக்காய் மர நிழலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்.
சோப்புக்காய் மரம் என்பது சித்திரை மாதம் காய் காய்க்கும். பூந்திக் கொட்டை, நெக்கட்டங்காய் என்பது அதன் மறு பெயர்.இலந்தைதைப் பழம் போல இருக்கும். திங்கவெல்லாம் முடியாது.தொலியைப் பிய்த்து, தண்ணீர் விட்டுத் தேய்த்தால் அழகாக நுரை வரும்.நகைக் கடைக் காரர்கள் அதை விரும்பி வாங்குவார்கள்.நகைகளில் அழுக்கு எடுப்பதற்கு பிரயோசனப் படும்.
மரநிழலில் கிணற்றடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.கல்யாணியண்ணன் நேற்றுப் பார்த்து வந்திருந்த சுமைதாங்கி படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.முத்துராமனின் அமைதியான நடிப்பு பற்றியும்
ஸ்ரீதரின் உறுத்தாத டைரெக்‌ஷன் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, கே.எஸ். ஜி யின் சில படங்கள் பிரபலமாகியிருந்தது. அவருக்கு ஒரு கட்சி, தெருவில் உண்டு.சுமை தாங்கி மூலக் கதை ரா.கி.ரஙராஜன்.குமுதத்தில் சுமைதாங்கி என்ற பெயரில் தொடராக வெளி வந்தது.படத்தை சுமை தாங்கி என்ற பெயரில்தான் எடுத்து வந்தார்கள்.பாதியில், ஆயிரம் வாசல் இதயம் என்று மாற்றினார் ஸ்ரீதர், ( நெஞ்சில் ஓர் ஆலயம் பாட்டு பாதிப்பு) மறுபடி சுமைதாங்கி என்றே வந்தது.ஸ்ரீதர் அடிக்கடி பெயரை மாற்றுவார். வயது 16 ஜாக்கிரதை, அதுவே வயது 18 ஜாக்கிரதையாகி கடைசியில் ஊட்டி வரை உறவாயிற்று. முதலில் ஜெயலலிதா கதாநாயகி, கே ஆர் விஜயா இரண்டாவது கதாநாயகியாக நடித்து படம் கொஞ்சம் வளர்ந்து நின்று விட்டது. எம்ஜி.ஆரின் தலையீடு என்று ஒரு வதந்தி.
ஊட்டி வரை உறவில் ஜெயலலிதா பாதியில் நின்று விட்டதை. கவிஞர், `புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்...’ என்று பாட்டில் கிண்டலடிப்பதாகப் பேசிக் கொள்வோம்.சுமை தாங்கி, ஊட்டி வரை உறவு இரண்டுமே கோவை செழியன், கண்ணதாசன் கூட்டுத் தயாரிப்புகள்.சிவாஜியுடன் ஜெயலலிதா ``வந்த இடம் நல்ல இடம், வரவேண்டும் காதல் மஹாராணீ.... என்று வாலி வாழ்த்து எழுத சிவாஜி வாயசைத்து வாசிக்க, கலாட்டா கல்யாணத்தில் முதன் முதலில் அறிமுகமானார்.
கல்யாணி அண்ணன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்ததும் நான் கேட்டேன். இப்ப போனா படத்துக்கு டிக்கெட் கிடைக்குமா, ஞாயித்துக் கிழமை காலை பத்து மணி சுமாருக்கு கேட்டேன். அழகாக் கிடைக்குமே என்றார்.நாலணாவை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம்.பெரிய கோபாலும் வந்தான்.நெல்லையப்பர் கோயில் மேலக் கோபுர வாசல் வழியாகப் போய் கோயில் உள்ளகூடி ஓடினோம்.மரத்தடியில் உட்கார்ந்திருந்ததில் உண்ணி காலில் ஏறியிருந்தன. சுளீரென்று கடித்தது, பாதத்தில், தொடையில், என்று கடித்தது. டிக்கெட் இருந்தது.படம் போட்டு விட்டார்கள்.நல்ல வெயிலில் ஓடியும் நடந்தும் வந்தது, இருட்டுக்குள் நுழைந்ததும் தியேட்டரில் கண்ணே தெரியவில்லை.இடம் இருக்கா தெரியவில்லை.`வானுலகம் தெய்வ சுகம், மண்ணுலகம் மங்கை சுகம், ‘என்று குமாரி கமலா நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.ஜானகி பாட்டு.திரையைப் பார்ப்பதும் சீட்டுகளைத் தடவுவதுமாக நான், பெண்கள் பகுதிக்கு அருகேயே சென்று விட்டேன்.யாரோ ஒருவர் என்னைத் தொட்டு தன்னருகே உட்கார வைத்தார்.உட்கார்ந்து கொஞ்ச நேரத்தில் உண்ணி, கடிக்கக் கூடாத இடத்தில் கடித்தது.டிராயர் பைக்குள் கை விட்டு கடிக்கிற இடத்தைக் கண்டுபிடித்து அப்படியே நசுக்க முயற்சித்தபோது,ஏல ஏம்ல நெளியுத, சீலப்பேன் கடிக்கிறவன் மாதிரி என்று சலித்தார் எனக்கு இடம் தந்து உட்காரவைத்தவர்.பகீரென்றிருந்தது. அதற்குள் இருட்டு பழகிவிட்டிருந்தது.முகத்தைப் பார்த்தேன். வேணுவனேஸ்வரி என்கிற ஈஸ்வரி அக்கா மாப்பிள்ளை.
அருணகிரி வீட்டில் பூசையாகி, விசேஷமா பிரசாதம் கொடுக்காங்க என்றுகேள்விப் பட்டதும், எல் ஒ என் டி ஒ என் லண்டன் என்று லண்டன் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் விளையாட்டை விட்டு விட்டு ஓடினோம்.கைரேகை மங்கும் கருக்கல். நேரம். கிரி வீடு நீளமான ஓட்டு வீடு.இரண்டு கட்டு. ரயில் பெட்டி மாதிரி அடுத்து அடுத்து இருக்கும். முதல் கட்டு சமையல் அறை. அடுத்தது சம்பந்தம் செட்டியாரின் பூசை அறை.இரண்டையும் சேர்த்து ஒரு ஒட்டுத் தார்சால். ஒரு ஊஞ்சல் பலகையை இரண்டு சாதிக்கா(ய்)ப் பெட்டி மேல் கட்டில் மாதிரி வைத்திருக்கும்.கிரி எங்களைப் ப்போல் மிஷன் ஸ்கூலில் படிக்கவில்லை. மந்திரமூர்த்தி ஸ்கூலில் படித்தான். அங்கே அவன் ஒருவன் தான் நன்றாகப் படிப்பான்.எனக்கு நினைவு தெரிந்து அவன் ஒருவன் தான் அங்கே நானூறு மார்க்குக்கு மேல் எஸ்ஸெல்ஸியில் வாங்கினான்.எங்களையெல்லாம் ஒன்று சேர்த்து பொற்கைப் பாண்டியன் நாடகம், மில்லுப்பிள்ளை வீட்டு முற்றத்தில் வைத்துப் போட்டான். விளையாட்டாக ஆரம்பித்து நாடகம் பெரியவர்களின் ஆசியோடு நன்றாக நடந்தது. கிரி, தன் எடுப்பான பல்லுடன் பொற்கைப் பாண்டியனாக நடித்தான்.நான் பாண்டியனை வாழ்த்துகிற ஏழைப் புலவனாக ஒரே ஒரு காட்சியில் நடித்தேன்.நாங்கள் நாடகம் போட்ட கொஞ்ச நாள் கழித்து, `தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ என்ற ஏ.பி நாக ராஜன்.-கே சோமு படத்தில்வந்தது. சிவாஜி, வசனமே பேசாமல் பொற்கைப் பாண்டியனாக நடித்திருப்பார்.``என்னடி அநியாயம் இது,என்றும் இல்லாத விந்தையாக யார் கதவைத் தட்டியது....’ என்று ஒரு பாட்டு, மற்றும் வழக்கம் போல் சீர்காழியின் விருத்தம் கலந்த பாட்டுடன் நாடகம் ஒன்று வரும் , சிவாஜி கௌரவ வேடம்.
பூஜை அறையை ஒட்டி எல்லாரும் வரிசையாக நில்லுங்க என்று கிரியின் பெரிய அக்கா சிவகாமி சொன்னாள்.தார்சால், தரையிலிருந்து இடுப்பளவு உயரத்தில் இருக்கும். வீடே தோட்டத்தில் இருப்பது மாதிரித்தான்.தோட்டத்தின் ஓரத்தில் ஒரு சின்ன குச்சு வீடு.வீட்டு உரிமையாளர்களுக்கும், கிரி வீட்டுக்கும் தனிததனி லெட்ரின்கள்..நாகரீகமாகச் சொன்னால் காய்ந்த கழிப்பபறைகள்(ட்ரை லெட்ரின்). கொச்சையாச் சொன்னா எடுப்பு கக்கூஸ், வீட்டின் சுவரை ஒட்டி வாய்க்கால்.தார்சாலை ஒட்டி அடிபிடி போட்டுக் கொண்டு நின்றோம். வரிசையா சண்டை போடாம நின்னாத்தான் தருவோம்,சிவகாமி சிரித்துக் கொண்டே சொன்னாள். அவளுக்கும் கிரி மாதிரி, அவர்கள் அப்பா மாதிரி பல் எடுப்பாக இருக்கும். ஆளும் நறுங்கிப் போய் இருப்பாள். ஈஸ்வரிக்கு இந்தக் குறை எதுவும் கிடையாது. மூன்று பேருமே எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
சிவகாமியால் சிரிப்பை அடக்க முடியவில்லை, ஏல ஏல தள்ளுங்கலெ காலுக்கு கீழ எறும்புப் புத்துல என்று சொல்லி முடிப்பதற்குள், நல்ல சிவந்த கடி எறும்புகள் காலைப் பதம் பார்க்க ஆரம்பித்திருந்தது. மில்லுப்பிள்ளை வீட்டு மணியின் சிவந்த கால்கள் இன்னும் சிவந்து போயிற்று. சிமினி விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது காலாலும் கையாலும் சொறிந்து ரத்த விளாறாய் ஆகி விட்டது நன்றாய்த் தெரிந்தது.சிவகாமி பயந்து போனாள்.ஈஸ்வரி திருநீற்றை எடுத்து வந்து தேய்த்தாள்.பாத்தியா விளையாட்டு வினையாயிட்டு., என்று கிரியிடமும் சிவகாமியிடமும் சத்தம் போட்டாள்.நீயும் தான் யோசனை சொன்ன என்று மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டாள், அவள்.சரி சரி சினிமாப் பேர் போட்டு விளையாடுமா என்று கேட்டாள் ஈஸ்வரி.அரை மனசோடு வட்டமாக உட்கார்ந்தோம். ஈஸ்வரி பக்கத்தில் உட்காருவேன் என்று அழுதான் மணி. நான் எழுந்து சிவகாமி அருகே போனேன். சிவகாமியின் சேலையிலிருந்து புழுங்கிய நெடி, அதிகமாக அடித்தது.
சிவகாமியைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.ஏற்கெனவே என்னை வரச் சொல்லியிருந்தாள் ஈஸ்வரி. நான் போன போது அவள் கழிப்பறை அருகே நின்று கொண்டிருந்தாள்.இங்க வா என்று சைகையால் அழைத்தாள். இரண்டு கோலிக்காய் கொடுத்தாள்.அது ஒன்றும் நல்ல கோலிக்காய் இல்லை. வெறும் மாக்கல்லால் ஆனது. ஒரு விளையாட்டுக்கெ தாங்காது. அதுவும் டாங்காயால் அடித்தால், எட்டாங்குழி போடறதுக்குள்ளயே உடைந்து விடும்.கோலிக்காயில் கண்ணாடிக்காயை விட டாங்காய் என்கிற மார்பிள் கோலிக்காய்தான் விசேஷம்.இது பற்றிய மீதிக் கதையை கல்யாணி அண்ணனிடம் கேட்டால் நல்லது.
இங்கனெயே விளையாடிக் கொண்டிரு, அவங்க வெளிய வரும்போது சொல்லு நான் உள்ள போய் ஒளிஞ்சிக்கிடுதேன்.சரியா என்றாள்.சரியென்றேன். ஆனால் நேரம் ஆக, ஆக அங்கே வீசிய பீ வாசனை எனக்கெ தாங்க முடியவில்லை.அவள் எப்படி கிட்டத்தட்ட அதனுள்ளேயே நிற்கிறாள் என்று தெரியவில்லை.ஒரு வழியாய் பெண் பார்த்து விட்டுப் போனார்கள்.சிவகாமி அக்கா கல்யாணத்திற்குப் பின் அவர்கள் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். செட்டியாரின் தங்கயை பெரிய, காசுக் கடை வீட்டில் கொடுத்திருந்தது.ஊரிலேயே ஜன்னல்கள் யார் வீட்டில் அதிகம் என்றால் கிரியின் அத்தை வீடு என்று சொல்லிவிடலாம்.ஆற்றுக்குப் போகிற வழியிலிருக்கும் அதை சில சமயம் எண்ணுவோம்.அந்த வீட்டோடு சேர்ந்த ஒரு சின்ன குச்சுக்குப் போய் விட்டார்கள்..

கல்யாணமெல்லாம் நல்ல படியாக முடிந்தது. புது மாப்பிள்ளை நன்றாகவே இருந்தார். சிவகாமியை நன்றாகவும் வைத்துக் கொள்கிறார் என்று கிரி சொல்லுவான்.திருவள்ளுவர் நாடக மன்றம் என்று ஒன்று ஆரம்பித்திருப்பதாகவும் புது வீட்டின் அருகில் உள்ள நண்பர்களோடு ஒரு நாடகம் போடப் போவதாகவும் சொன்னான். நான் வந்தால் எனக்கு அதில் அதிய மான் வேஷம் தருவதாகச் சொன்னான்.நானும் போனேன். ஈஸ்வரி சமையலறையில் இருந்தாள்.சற்று மெலிந்திருந்தாள். பழைய வீட்டை விடச் சின்னதாய் இருந்தது.என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள்.ஒன்றும் பேசாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டு சுவரில் இருந்த படத்தைப் பார்த்த படி இருந்தாள்.சிவகாமியும் அவள் கணவரும் இருக்கும் போட்டோ.திடீரென்று எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை அசிங்கமா இருக்காரு, என்றாள்.இந்த சிவகாமிச் சனியனோட கொழுந்தனாரு, அவ மாப்பிள்ளை சொன்னாருன்னு என்னை கட்டி வைக்காவோ என்றாள். இது புது பாஷையாக இருந்தது. செட்டியார் உட்பட எல்லாருமே நல்ல தமிழ் பேசுவாங்க. அதற்குள் கிரி ஒரு ஊண்டியலோடு வந்தான். அதில் திருவள்ளுவர் நாடகமன்றம் என்று எழுதி ஒட்டி இருந்தது.நாடகத்துக்கு துட்டு சேக்கோம்.நீயும் போட்டேன்னா நடிக்கலாம் என்றான்.
அடுத்த முறை போன போது எட்டணா போட்டேன். அதியமான் பாத்திரம் உனக்குத்தான். நிறைய வசனம் வரும், நீதான் நல்ல படிப்பியே என்றான். அப்போது வீட்டுக்குள்ளிருந்து வந்த ஒரு ஆளைக் காண்பித்து இதான் எங்க சின்ன அத்தான் என்றான். எனக்கு அவரை அசிங்கமாகத் தெரியவில்லை.என்னுடைய ஒரு அண்ணன் ஜாடையில் இருந்தார், அதனால்தானோ என்னவோ.என்னை யாரென்று விசாரித்து, என்ன படிக்கே என்றார்.அது முழுப்பரிட்சை லீவு. ஏழு என்பதா எட்டு என்பதா தெரியவில்லை.பாஸாயிருவேல்லாடே, எட்டுன்னு சொல்லேன் என்று சொன்னான் கிரி.எட்டு போறேன், என்றேன்.சின்ன அத்தான் சிரித்துக் கொண்டார், நீ சொன்ன மாதிரி கெட்டிக்காரன் தாண்டே என்றார். சந்தோஷமாயிருந்தது. கொஞ்சம் திமிராக் கூட இருந்தது. இந்த திமிரு தான் என்னைக் கெடுத்தது என்று சொல்ல வேண்டும்.பேசிக் கொண்டிருக்கையில் ஈஸ்வரி உள்ளிருந்து வந்தாள்.நிறைய நகை, பட்டுச் சேலை எல்லாம் கட்டி நல்ல செழிப்பாகவே இருந்தாள்.வாடே, இந்தா, இவுகதான் எங்க வீட்டு ராசா என்றாள்.அவர் சிரித்தார்.ஆமா சிரியுங்க என்றாள்.
ஒரு நாள் உண்டியலோடு வீட்டுக்கே வந்தான் கிரி.நீ எவ்வளவு போட்டிருக்கே என்றான். நான் ஒன்னரை ரூபாய் என்றேன். இல்லை ஒரு ரூபாய் தான் என்றான். அவனுடன் இரண்டு பேர் வந்திருந்தார்கள். எல்லாம் என் வயசுப் பையன்கள். கிரி என்னை விட ரெண்டு வயசு மூப்பு.சரி உடைச்சுப் பார்த்துருவோமே என்றான். எதுக்கு என்றேன். நாடக மன்றத்தை கலைச்சுட்டோம்., என்று சொல்லிய படியே உண்டியலை உடைத்தான்.காசுகளை எண்ணிய போது, நான் சொன்னது சரிதான்,என்று ஒன்னரை ரூபாய் கொடுத்தான்.

இடை வேளையின் போதுதான் பார்தேன், பெண்கள் டிக்கெட்டில் ஈஸ்வரி உட்கார்ந்திருந்தாள். படத்தில் வருகிற தேவிகா மாதிரி குண்டாக அழகாக இருந்தாள்.சின்னத்தான் கலர் வாங்கி அவளிடம் கொடுத்தார், ரகசியமாகவும் வெடுக்கென்றும் வாங்கினாள்., உனக்கு என்னடே கலர் சாப்பிடுதியா என்றார்.வேண்டாம் என்றேன். ஏனோ பிடிக்கவில்லை. ஈஸ்வரி, சாப்பிடுடே என்று சொல்லுவாள் என்று எதிர் பார்த்தேன்.இல்லை. சொல்லவில்லை.அவர் வா வெளியே போவோம் என்று கூப்பிட்டுப் போனார்.ஒரு பாசிங் ஷோ சிகரெட் வாங்கி பற்ற வைத்தார்.எனக்கு கடலை மிட்டாய் வாங்கித் தந்தார். பெரிய கோபால், ஏய் எங்க உக்காந்துருக்கே எனக்கு இடமே கிடைக்கலை என்றான். அவனுக்கு ஒரு கடலை மிட்டாய் கொடுத்தார். நான் அவர் சிகரெட் பிடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சிகரெட் நுனி எச்சிலாகி விட்டது. வேறென்னடே வேணும் என்று பையிலிருந்து ரூபாய் எடுத்தார். இரண்டும் ஐந்துமாக நிறைய இருந்தது.உங்க அக்காவுக்கு தரை டிக்கெட் தாண்டே பிடிக்கும் என்றார்.அதற்குள் பெல் அடித்து காட்சி தொடங்கியது.
படத்தின் முடிவு அற்புதமாக இருந்தது.அநேகமாக அழுதிருந்தேன். இன்னும் தொண்டையில் கண்ணீர் அடைத்துக் கொண்டிருந்தது. நல்ல வெயில். பெண்கள் வெளியேறும் பகுதியில் அவரும் நானும், கோபாலும், காத்துக் கொண்டிருந்தோம்.அவளைப் பார்த்ததும் போவோமா என்றார்.நீங்க முன்னால போங்க, இந்தா இருக்கற தெக்குப் புதுத் தெருவுக்கு வரத்தெரியாதா... சுள்ளென்று சொன்னாள்.கோபால் உதட்டைப் பிதுக்கியபடி யாத்தா என்றான்.மூன்று பேரும் நடந்தோம். கொஞ்ச தூரம், ஆர்ச் வரை வந்திருப்போம், விறு விறுவென்று எங்களைக் கடந்து சென்றாள்... யாரோ போல்.

Visitors