Sunday, January 11, 2009

ஒரு வழியை மறு வழியாய்........

வீட்டின் புற வாசலில் இருந்த பூச மடத்தை ஒரு சிறிய குச்சு வீடாக மாற்றுவதில் அம்மாவுக்கு சம்மதமே இல்லை.எப்பொழுதும் போல் அம்மாவின் பேச்சு எடுபடவில்லை(யாம்)..மாமரத்தின் வேர்கள் பூசை மடத்தின் முன் கட்டுச் சுவரில் கீறல் விழ வைத்திருந்தது. மாமரம் தாத்தா வைத்தது
ஒரு சிறிய நந்தவனம் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.நாங்கள் தோட்டம் அல்லது புற வாசல் என்போம்.வீட்டை அடுத்து ஒரு முடுக்கு. அதன் முடிவில் ஒரு ஒரு கிணறு.அப்புறம் வாய்க்கால், வாய்க்காலுக்கான படித்துறை. கிணற்றிலிருந்து துலா மூலம் நீரிறைத்து, சுவரில் பதித்திருக்கும் அகலப் பாத்திரம் போன்ற குழிவான கல்லில் விட்டால் சுவரின் இந்தப் புறம் இருக்கும் ஒரு பெரிய தொட்டியில் வந்து விழும்.அதிலிருந்து செடிகளுக்கும் மா, தென்னைக்கும், வில்வ மரத்துக்கும் பாயும்.அந்த முடுக்கு வழியே துப்புரவுத் தொழிலாளர்கள் வந்து போக வசதியாயிருக்கும்.கிணற்று நீர் ருசியாய் இருக்கும்.கோடையில் வாய்க்கால் வற்றி விடும்.மணிமுத்தாறு அணையிலிருந்து வரும் கோடகன் கால்ப் பாசன வாசலை அடைத்து விட்டால் வாய்க் கால் வற்றி நயினார் குளமும் கொஞ்சம் கொஞ்சமாய் வற்றி விடும்.அப்புறம் ஜூன் மாதம் அணை திறந்து தண்ணீர் வரத் தொடங்கி விடும்.தண்ணீர் கல்லணை வாய்க்காலைத் தாண்டி விட்டது, பிராமணக்குடிக்கு வந்து விட்டது, அரசரடிப் பால வாய்க்காலைத் தாண்டி விட்டது என்று ரன்னிங் கமெண்ட்ரி சொல்லுவார்கள்.நாங்கள் வாய்க்கால் மேடையிலிருந்து பார்ப்போம்.கண்டது கழியதையும் இழுத்துக் கொண்டு தண்ணீர் மெதுவாக வரும்.பெரும் பாலும் முருங்கைக் கொப்புகள் பழைய துணி மணிகள், கிழிந்த பாய் , தலையணை, யாராவது இறந்து போனவனின் மெத்தை, எல்லாம் மெதுவாகக் கட்ந்து போகும். நேரம் ஆக ஆக தண்ணீரின் வேகம் கூடத் தொடங்கிவிடும்.மத்தியான வாக்கில் இந்த ஊர்கோலக் காட்சிகளைப் பார்த்தோமென்றால்,காலையில் வாய்க்கால் சுத்தமாகி விடும் நயினார் குளமும், கா(ல்)க்குளம் நிரம்பி இருக்கும்.
கொஞ்சம் பெரிய பையனாகி,ஒன்பது பத்து படிக்கும் போது, சைக்கிளை எடுத்துக் கொண்டு நயினார் குளம் பக்கம் போய் விடுவோம். வெறுமையான குளம் நிரம்பு வதைப் பார்க்க.
(``நாளை இந்தக் குளத்தில் நீர் வந்துவிடும்’’ என்று பிரபலமான கவிதை இதன் பாதிப்பில் எழுதியதுதானோ என்னவோ). வாய்க்காலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வாய்க்காலுக்கு எங்கள் வீட்டில் தனி படித்துறை உண்டு. அகலமான படிகள்.சுமார் பத்தடி நீளத்தில். வடிவாகக் கொத்தி அமைக்கப் பட்ட கல்ப் படிகள்.மற்ற வீடுகளில் இப்படிப் படித்துறை இருக்காது.சுவரில் ஒரு தொண்டு இருக்கும் தேவைப் பட்டால் அதன் வழியாக வாளியால் நீரிறைத்துக் கொள்ளுவார்கள்.தெருவின் கிழக்கிலிருந்து கூட நிறையப் பேர் இங்கே, துணி துவைக்க, பாத்திரம் கழுவ வருவார்கள்.வருகிறவர்கள், அம்மாவிடம் ஏதாவது பாடு பேசிவிட்டு வருவார்கள்.`கோமக்கா, என்ன வேலை நடக்கு,’’ என்றபடி வருவார்கள, கையில் கனத்த, கல்கத்தா வாளி அல்லது .பித்தளைச் சருவச் சட்டியுடன் வருவார்கள். வாளி நிறைய அழுக்குத் துணி இருக்கும். தவறாமல் ஒன்று அல்லது இரண்டு மூத்திரப் போர்வையோ. ஜமுக்காளமோ இருக்கும். அதை சிலாவத்தாக (நன்றாக விரித்து) அலச, வாய்க்கால் போல, ஓடுகிற தண்ணீர்தான் வசதியாயிருக்கும். ``சமையப் போற வயசாச்சு இன்னும் படுக்கையிலதான் மூதேவி ஒண்ணுக்கிருக்கா,’’என்று அலுப்பாய் சொல்லுவாள்.``இதுக வயசுல நாம வாக்கப் பட்டு வந்தாச்சு.’’ என்று பதிலுக்கு சடைத்துக் கொண்டு,``நான் ஒரு பக்குவம் சொல்லுதேன், நாளக்கி ஞாயித்துக் கிழமதான, சாலாச்சிய (விசாலாட்சி) நெல்லையப்பர் கோயிலுக்கு காலையில ஏழு மணிக்கி கூட்டீட்டுப் போனா, விளா பூசை முடிஞ்சு சாமிக்கும் பரிவாரங்களுக்கும் எண்ணெய்யில் உருட்டுன பலிச் சோத்தை(சோற்றை), ஆமா பலி பீடத்தில வைச்சுருப்பாங்கள்ளா அதை.,எடுத்து ரெண்டு வாய் ஊட்டி விடு, படுக்கையில மோளறதப் புள்ளைகள் நிப்பாட்டிரும்பா எங்க அம்மா.’’என்று அம்மா சொல்லுவாள்.
வாய்க்காலை ஒட்டித்தான் இரண்டு குச்சுகளும் இருக்கும்.அதற்கு மேல் ஒரு மச்சு. அதைத் தான் வாய்க்கால் மேடை என்று சொல்லுவோம். குச்சுகளில் ஒன்று பூசமடம். என்கிற பூசை மடம்.வாய்க்காலின் தண்ணீரோட்டமும், பூசை மடத்தில் காலையிலும் இரவிலும் தாத்தா செய்கிற பூஜை புனஸ்காரங்களால் சிந்துகிற தண்ணீரும், நந்தவனமும் இரண்டு குச்சுகளையும் குளுமையாக வைத்திருக்கும்.பூச மடத்தின் நடுவில் ஒரு பீடம் போல் சதுரக்கல்.அதில் பிள்ளையார் சிவலிங்கம் சிலைகள்.நான் தாத்தவையோ, சிவ லிங்கங்களையோ பார்த்த நினைவில்லை.மாமரம் ஐந்துவிதமான ருசியுள்ள காய்களாய்க் காய்க்கும் என்று அம்மா சொல்லுவாள்.அதை வெட்டி எடுத்த குழியை நிரப்ப வண்டி வண்டியாய் மண் அடித்தது நினைவில் இருக்கிறது. அவ்வளவு பெரிய குழியை அம்மாவின் சேலையைப் பிடித்த படி எட்டிப் பார்த்த இரண்டு மூன்று வயசு ஞாபகம் இருக்கிறது.மத்தியான நேரம் படித்துறையில் ஆள் இருக்காது.அங்கேயும் சாமி சிலைகளை அபிஷேகம் பண்ணத் தோதுவாய் ஒரு சிறிய சிமிண்டுப் பீடம் உண்டு. அதில் உட்கார்ந்து எப்போதாவது படிப்பது உண்டு. அந்த நேரங்களில் யாராவது வளவின் பெண்கள் `அதற்கான’ துணிகளை அலச வந்து நான் இருப்பதைப் பார்த்தால் இங்க வச்சுப் படிச்சாத்தான் மண்டையில் ஏறுவேங்கோ, போடா அங்கே என்று விரட்டி விடுவார்கள்.இது தான் சங்கரநாறாயணன் சொன்ன `விஷயம்’ போலிருக்கு என்று நினைத்துக் கொள்ளுவேன். வாய்க்காலையும் படித்துறையையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வாய்க்காலுக்கு அக்கரையில் தான் சசியின் வீடு.
பூச மடத்தின் நடுவிலிருந்த, பீடத்தை எடுத்து விட்டு நல்ல தளமாகப் போட்டு, அதன் வெளிச் சுவற்றிலேயே ஒரு சின்னக் கோயில் போலக் கட்டி அதில் பிள்ளையார் சிலைகளை வைத்து விட்டார் அப்பா. மூன்று பிள்ளையார்கள்.அதை பெரிய அண்ணன் தினமும் குளிப்பாட்டி ஒரு அட்டையில், எழுதி ஒட்டி வைத்திருக்கும் மந்திரங்களை முனுமுனுத்து, பாட்டிலில் சளித்துப் போய், இருக்கும் அச்சு வெல்லத்தைக் கிள்ளி ஒரு செம்பருத்தி இலையில் வைத்துப் பூஜை செய்வான்.அவன் பூஜை செய்ய காலை பதினோரு மணி ஆகி விடும்.அதற்குள் இரண்டு தடவை டிஃபன் பண்ணியிருப்பான். பூசை முடிந்ததும் அதைச் சாக்கிட்டு இரண்டு இட்லி தின்றுவிடுவான்.அந்தப் பூசைக்கே பிள்ளையார் அவனைக் கை விடவில்லை. கடைசிக் காலம் வரை அவன் திங்கிற சோறுக்குப் பழுதில்லாமல் காலம் கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். பிள்ளையாருக்கு எதிர்த்தாற் போல் இரண்டு பூடம். சுடலை மாட சாமி மாதிரி. அது, மனை காவல் பெருமாள். அதுக்கு எப்பவாவது பொங்கலிட்டு, சுருட்டு, இத்தியாதி எல்லாம் படைப்பார்கள்.பூச மடத்தை அடுத்த குச்சு வீட்டில் முதன் முதலாக ஸ்ரீ வள்ளி படத்தை சேலத்திலிருந்து கொண்டுவந்த ரெப்ரஸெண்ட்டேட்டிவ் ராமசாமி நாயுடு, அப்பாவின் சிநேகிதராகத் தங்கினார்.அப்புறம் அவர் பெரிய படாதிபதியாகி ஸ்வாமி பிக்சர்ஸ் என்று கம்பெனி ஆரம்பித்து.பாலும் பழமும், பாசமலர் என்று பெரிய பெரிய படங்களை எல்லாம் விநியோகித்தார். ஆனால் எங்களுக்கு அவர் எப்பொழுதும் `வள்ளி படத்துக் காரர்’ தான். வீட்டில் விசேஷம் ஏதாவது என்றால் முகவரி லிஸ்ட் தயாரிக்கையில் ஜங்சனிலிருந்து ஆரம்பித்தால் முதலில், வள்ளிப் படத்துக்காரருக்கு எழுதியாச்சா என்பாள் அம்மா.அப்பா பெயரான கந்தசாமியில் வரும் ’சாமி`க்காக ராம`சாமி’ என்று சொல்ல மாட்டாள்.
அநேகமாக அவர் தங்கிப் போன பின் தான் அப்பாவுக்கு அவைகளை வாடகைக்கு விடும் எண்ணம் வந்திருக்கும்.இரண்டு குச்சுகளிலும் ஒன்றில் ஒரு கன்னடத்துப் போத்தி வீட்டாரும், இன்னொன்றில் நாகர் கோயில், பாறசாலை மாமி குடும்பமும் இருந்தது.மாமியின் பெண் என் வகுப்புத்தோழி.சுத்த மக்கு. ஆனால் நான் அவளிடம் அந்தப் பிஞ்சு வயசிலேயே படித்துப் பழுத்து வெம்பிப் போனது ஏராளம்.அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி கதைதான்.அப்பா, படித்துறையை மூடி `பத்துக்குப் பன்னெண்டு’ கணக்கில் ஒரு சின்ன வீடு கட்டி வாடகைக்கு விட்டுவிட்டார்.வாய்க்கால் மேடையில் பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும். திருமண வீட்டிற்கு வேண்டிய மர உரல், முக்காலி, த்ண்ணீர் ஃபில்ட்டர் பண்ணுகிற மூன்று தட்டு ஸ்டாண்ட்.அதில் மூன்று பானைகள் வைக்கலாம். அதற்கான தனிப் பானைகளும் உண்டு,அடிப்பாகத்தில் பொடீத் துவாரங்களுடன். மேல்ப் பானையில் மணல், அதற்குக் கீழ்ப் பானையில் மலங்கறி. கடைசியில் வெறும் பானை. மேலாக இருக்கும் பானையில் தண்ணீர் ஊற்றினால், அது மணலில் வடிகட்டி, இரண்டாவதில் விழும்., அதில் வடிகட்டப் பட்டு. சுத்தமான தண்ணீராக மூன்றாவதில் விழும்.அப்புறம் பழைய பிரம்பு சோஃபா,ஏணி, என்று பழையதாகக் கிடக்கும்.அது போக இடமும் இருக்கும்.அதில்த்தான் எல்லா சேட்டைகளும் அரங்கேறும்.
அப்பாவின் காலத்திலேயே அதையும் வாடகைக்கு விட்டு விட்டார்.அப்பா இறந்த நேரத்தில் அந்த வாடகைகள்தான் ஒரு வேளைச் சாப்பாட்டிற்காவது வழி காட்டியது.அப்பா காலத்து ஆட்கள் எல்லாம் வெவ்வேறு காரணங்களுக்காக காலி செய்து போய் விட்டனர்.பூசை மடம் வீட்டில் என் சிநேகிதன் குடியிருந்தான். அவன் மட்டும் தான்.ஒரு பெரிய ஜவுளிக் கடையில் வேலை பார்த்தான். படித்துறை வீட்டில் எலக்ட்ரி சிட்டி போர்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கும் சங்கரன் இருந்தார். அவர் தினத் தந்தி வங்குவார். காலையில், புற வாசலின் குளுமையில் தென்னை மர நிழலில் தந்தி படித்து நாட்டு நடப்புகளை பேச நல்ல துணை. கல்யாணமாகி, குழந்தை இல்லை. அவருக்கே சொந்தமான வீடு இருந்தும் ஏதோ ஜாதகக் கோளாறு, வேறு எங்காவது இருந்தால். குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொன்னதால் இங்கே வாடகைக்கு இருக்கிறார்.கொஞ்சம் வசதியான ஆள்.ஆள் என்னவோ பார்க்க நாகேஷ் மாதிரித்தான் இருப்பார்.வந்த புதிதில் தெரு நண்பர்கள் அவரை ஐசரி வேலன் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அதற்காக கோபப் படமாட்டார். பாரும் வேய் ஐசரி பெரிய ஆளா வரப்போறான், உமக்குத் தெரியாது.என்று சொல்லுவார்.(அது பின்னால் உண்மையாயும் ஆயிற்று. ஐசரி பாரளுமன்ற செயலாளர் –துணை மந்திரி- ஆக ஆனார்.)
இன்னொரு குச்சுக்கு ஜெசிந்தா வந்து சேர்ந்தாள்.அவள் ஏழு வளவில்த்தான் குடியிருந்தாள்.அரசு அலுவலகம் ஒன்றில் டைப்பிஸ்ட்.தூத்துக்குடிக் கடல்ப் புறம் பக்கம். நிறமென்றால் அப்படியொரு மஞ்சள் நிறம்.ஒரு பெரிய குடும்பத்தைத் தாங்குகிற
தொடர்கதைச் சோகம் முகத்தில் தெரியும்.இருந்தாலும் பார்க்கும் போது தவறாமல் சிரிப்பாள்.சம்பளம் வாங்கி வருகிற போதே என் அம்மாவிடம் வாடகைப் பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் தன் வீட்டிற்கே போவாள்.வீட்டில் வைத்து கறி, மீன் எதுவும் சமைக்க மாட்டாள்.அந்த நிபந்தனையின் பேரில்த் தான் அம்மா வீடு கொடுக்க சம்மதித்தாள். வாடகையும் அதிகமாகப் பத்து ரூபாய் தந்தாள்.தரையில் அமர்ந்து தந்திப் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவள் குளிக்கிற நேரமுமாய் இருக்கும்.பிரேஸியர் அணியமாட்டாள். சாதரண உள்ப் பாடி தான் போடுவாள்.மார்பும் அவ்வளவுதான்.தலை முடியும் அடர்த்தியாக இருக்காது. குளித்துவிட்டு குளியலறைக் கதவில் போட்டிருக்கும் உள்ளாடையை மார்பு வரை கட்டிக் கொண்டு, மேலே சேலையைப் போர்த்தியவாறு எங்களைக் கடந்துதான் அவள் வீட்டிற்குப் போக வேண்டும்.முழங்கால் சற்றே மறைகிற மாதிரி கட்டிய உள்ப் பாவாடை , கால்களின் அசத்துகிற மஞ்சள் நிறம். கூச்சப்படவும் மாட்டாள்.முகஞ்சுளிக்கவும் மாட்டாள்.முகத்தைப் பார்த்தாலும் பேப்பரில் என்ன போட்டிருக்கு என்கிற மாதிரியில் ஒரு வெறும் சிரிப்பு.கடந்து போய் விடுவாள்.இரண்டு கட்டு வீடு. முன்புறச் சாய்ப்பில் சமையல். ஸ்டவ் வைத்து என்பது நிபந்தனை.வீட்டிற்கு முன்புறம் பாத்திரங்களைப் போட்டுக் கழுவுவது நறுவிசாக இருக்கும்.கழுவி முடித்த பின், தரை சுத்தமாக இருக்கும்.கடல் புரத்துப் பெண்ணிடம் இவ்வளவு சுத்தமா என்று பெரிய அக்காவே ஆச்சரியப் பட்டாள்.முதலில் தோன்றாத ஈர்ப்பு நாளாக நாளாக அவள் பால் தோன்றியது.முன்னிரவில் முழங்காலிட்டு ஜெபித்துக் கொண்டிருப்பாள். முதல்க் கட்டின் கம்பிக் கதவு மட்டுமே சாத்தியிருக்கும்.சத்தம் தெளிவாகவே கேட்கும். பெரும்பாலும் குடும்பத்தைக் குறித்த பிரார்த்தனைகளே இருக்கும். அம்மாவுக்கு சமாதானம் கொடும் ஆண்டவரே என்று கேட்டுக் கொண்டிருப்பாள்.இரண்டொரு நாள் பக்கத்துக் குச்சில் ஆட்கள் யாரும் இல்லாத நேரங்களில் நான் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.ஒரு கவிதையில் மேற்கோளுக்காக பைபிள் பழைய ஏற்பாடு புத்தகம் அவள்தான் தந்திருந்தாள்.எனக்கேயும் தந்து விட்டாள்.
அந்த நேரத்தில்தான் ஆர். பாலு சொன்னான். அவன் வேலை பார்க்கும் வங்கியில் ஆள் எடுக்கப் போவதாகவும் அதற்கு ஒரு விண்ணப்பம் தருமாறும்.திடீரென்று தோன்றியது.ஜெசிந்தாவிடம் விண்ணப்பம் டைப் செய்து தரும் படிக் கேட்கலாமே என்று.இரண்டு வெள்ளைப் பேப்பரும், ஒரு விண்ணப்பம் எழுதிய பேப்பரும் எடுத்துக் கொண்டு போனேன். அலுவலகத்துக்குப் புறப்பட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.வாசலில் நின்று கூப்பிட்டேன். முதன் முதலாகப் பெயர் சொல்லி அழைத்தேன். எனக்கே என்னவோ போலிருந்தது.வாங்க என்றாள். சேலையை நீவி விட்டபடியே. பேப்பர்களைக் கொடுத்தேன்.விஷயத்தைச் சொன்னதும்`சேசுவே’ என்றாள்.அப்புறம் வழக்கமான மெல்லிய சிரிப்பு உதட்டில் விரியப் பெற்றுக் கொண்டாள். அவள் அலுவலகம் அடுத்த தெருவில்த்தான்.அங்கே வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.அவசரமென்றால் நானே ஒரு மணிநேரத்தில் கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி விட்டு. வீட்டைப் பூட்டத் த்யாரானாள்.நானும் சரி என்று கிளம்பினேன். சொன்னபடிக்கே ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்தாள். நான் கொடுத்த பேப்பர்கள் அப்படியே இருந்தது. வேறு அழகான, கனமான காங்குயர் பேப்பரில் அடித்திருந்தாள். புது டைப் ரைட்டர் என்றாள், சிரித்த படியே. சுருண்டிருந்த தாளை விரித்துத் தரும்போது கைகள் நன்றாகவே என் கைகள் மீது பட்டன. நன்றி சொல்லக் கூடத் தோன்றவில்லை.சரியா இருக்கா பாருங்க என்றாள்.சரியாய் இருந்தது.இப்போது நன்றி சொன்னேன்.சேசுவே என்றாள்.உங்களுக்கும் எனக்கும் ஒரே வயது என்றாள் சிரிப்புடன்.பயோ டேட்டாவைப் படித்திருக்கிறாள்.
இரவு எட்டு மணி இருக்கும். ஒரு குறளி பிடித்து ஆட்டிற்று.
வயதைப் பற்றி ஏன் சொன்னாள்.கால்கள் தோட்டத்தை நோக்கிப் போயிற்று., ஜெசிந்தா வீட்டில் மட்டும் ஒரு நாற்பது வாட் வெளிச்சம்.மற்ற வீடுகளில் யாரும் இல்லை.முன் புற அழிக் கதவு(கம்பி போட்ட கதவு) மட்டும் சாத்தியிருந்தது.நான் அருகே போனேன்.``ஆண்டவரே அவருடைய விண்ணப்பம் அன்போடே கவனிக்கப் பட அருள் தாரும் ஸ்வாமி,அந்தக் குடும்பத்தில் சாந்தியும், சந்தோஷமும் சமாதானமும் நிலவ நீரே தயை புரியும். பனி மய மாதாவின் பதந்தொட்டு வணங்கிக் கேட்கிறேன். மறுத்து விடாதேயும் ஸ்வாமி.....’’.குரல் தெளிவாகக் கேட்டது.சுரீரென்றிருந்தது.கன்னா பின்னாவென்ற கற்பனைகள் போன இடம் தெரியவில்லை.திரும்பி விட முயற்சிக்கையில் அவள் ஜெபம் சொல்லி முடித்து விட்டாள்.வாங்க என்று கதவைத் திறந்தாள்.ஒரு கட்டில் மட்டும் இருந்தது. அது எங்கள் வீட்டுக் கட்டில்தான். பழைய பெரிய வீட்டின் மாடியில் கிடந்தது.அந்த வீட்டை விற்ற பின் இது தார்சாலில் கிடந்தது. இப்போது இங்கே. கட்டிலில் சேலைகள் துவைத்துக் காய்ந்தவை சுருண்டு மடங்கிக் கிடந்தன.உட்காருங்கள், என்றாள், சேலைகளைப் பார்த்து தயங்கினேன்.சும்மா உக்காருங்க என்றாள்.முகத்தில் பிரார்த்தனையின் போது வழிந்த கண்ணீரின் சுவடு தெரிந்தது.நானே ராசி இல்லாத பெண் என்னிடம் போய் டைப் செய்து தரக் கேட்கிறீர்களே என்று கஷ்டமாயிருந்தது.அதனால் உங்களுக்காகத்தான் பிரார்த்தனை செய்தேன். இந்த வேலையாவது உங்களுக்கு கிடைக்கணும். இன்னமே கவர்ன்மெண்ட் சர்வீஸ் போக முடியாது. போலிருக்கே என்றாள்.
சேலைகளின் மீது அமர்ந்திருப்பது முதலில் கஷ்டமாய் இருந்தது. அப்புறம் அது தோன்றவில்லை. தன் குடும்பம் பற்றிச் சொன்னாள். கல்லூரிக்குச் செல்ல ஆசைப் படுகிற தங்கை., ஐ.ட்டி படித்து மெக்கானிக் வேலைக்கு அலைகிற தம்பி., அப்பாவை இழந்த அம்மா. தங்கையின் கல்யாணத்திற்குத் தான் கஷ்டப்பட்டுப் பணம் சேமித்துவருவதாகச் சொன்னாள். அது முடிந்து விட்டால் தான் கன்யாஸ்த்ரீயாகப் போய்விட தீர்மானித்திருப்பதாக, நிறுத்தாமல் மூச்சு விடாமல் சிரிப்பு மாறாமல் ஆனால் சோகமாகச் சொன்னாள்.கவலைப் படாதீங்க என்று சொன்னதும் வாய் விட்டுச் சிரித்தாள்.என் கதையைக் கேட்டதும் மரியாதை தானா வருதே பாத்தீங்களா என்றாள் .
ஒரு மாதம் போயிருக்கும். அவள் தம்பியும், தங்கையும் உடன் வர, ஒரு திங்கள்க் கிழமைக் காலையில் வந்தாள், ஊரிலிருந்து. நான் என் வீட்டு வாசலில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன்.இதுதான் என் தம்பி ஜோ, இது தங்கை என்றாள்.தங்கை சிரித்தாள். கடைந்தெடுத்தது போலிருந்தாள். நிறம் மட்டும் சற்று கருப்பு. பேச்சே எழவில்லை. தூக்கத்தை கெடுக்க இன்னொரு பிசாசு என்று தோன்றியது.கொஞ்ச நேரத்தில் அலுவலகம் போகிற வழியில் என்னைப் பார்த்து ஜெசிந்தா, கேட்டாள், கொஞ்ச நாளைக்கு இரண்டு பேரும் இங்கிருந்தால் ஒன்றுமில்லையே என்று. தாராளமாக என்று சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.தலையை மட்டும் மையமாக ஆட்டி விட்டு நகர்ந்தேன்.அம்மா அதிகமாக பதினைந்து ரூபாய் தந்ததும் திருப்தியாகி விட்டாள்.முதல் பதினைந்து ரூபாயில் நங்கையாரிடம் எனக்கு தெரியாமல் அடகு வைத்திருந்த இரண்டு எவர் சில்வர் தம்ளர்களை மீட்டாள்.
மெர்வின் வளவு பூராவும் சுதந்திரமாக நடமாடினாள். டைப் கிளாஸுக்கு தெருவில், நிமிர்ந்த படி, டக் டக் கென்று போய் வந்தாள்.தெருவில் நிறைய ரசிகர்கள் சேர்ந்தார்கள், அவளுக்கும் எனக்கும்.நான் அடி பம்பில் குளித்துக் கொண்டிருந்தாலும், சார் கொஞ்சம் தள்ளிக்கிடுங்க ஒரு குடம் தண்ணி எடுத்துக் கிடுதேன். என்று தயக்கமில்லாமல் புழங்கினாள்.சார் படிக்க ஏதாச்சும் புஸ்தகம் கொடுங்க என்று கேட்டாள் ஒரு நாள். என்னிடம் அப்போதெல்லம் புத்தகங்கள் அவ்வளவாக இல்லை. இருந்தது எல்லாமும் கவிதைகள்.. ஈ.பி. சங்கரன் தினத்தந்தியுடன் பொம்மை, பிலிமாலயா குமுதமெல்லாம் வாங்கத் தொடங்கினார்.
எனக்கு வேலை கிடைத்தது ஜெசிந்தாவுக்கு ரொம்ப சந்தோஷம்.செய்தி கிடைத்த அந்த வாரம் தூத்துக்குடி போய்த் திரும்பி வரும் போது மக்ருன்ஸ் வாங்கி வந்தாள்.நான் முதல் முறையாக அப்போதுதான் மக்ரூன்ஸ் தின்றேன்.
சங்கரன் மனைவி குழந்தை பெற அவள் அம்மா வீட்டுக்குச் சென்று விட்டாள்.சினிமா பார்த்துவிட்டு பத்து மணி வாக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன், தெரு முனையில் ஏதோ சத்தமாகக் கிடந்தது.ஜோ சங்கரனை அடிக்க முயன்று கொண்டிருந்தான்.சிலர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று விசாரித்த போது தெரிந்தது. மெர்வினை சங்கரன் மடக்கி விட்டார் என்று.மெர்வின் இப்போது சங்கரனின் சொந்த வீட்டில் இருக்கிறாளாம்., சிந்து பூந்துறையில்.தம்பியை இழுத்துக் கொண்டு ஜெசிந்தா வீட்டிற்குள் போனாள். சங்கரன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார், அவளைல்லா அடிக்கணும்.அவ வந்தா நான் என்னல செய்யறது. என்று. ஆஹா ஐசரிக்கில்லா யோகம் அடிச்சிருக்கு.சுமிதாவும், ஜெய மாலினியும் சேர்ந்த பிகருல்லா என்று தெருவே வாப்பாறியது..எனக்கும் பொறாமை பிடுங்கித் தின்றது.சங்கரனை வீட்டைக் காலி செய்யுங்கள் என்று சொன்னேன்.சரி சரி என்று போய் விட்டார்.ஆனால் விடியும் முன்பே ஜெசிந்தாவும் ஜோவும் போய் விட்டிருந்தார்கள்.வீட்டில் இல்லை.ஆனால் வீட்டை அப்புறமாகத்தான் காலி செய்தாள்.ஊருக்கே மாறுதல் கிடைத்து விட்டதாகச் சொன்னாள்.

எத்தனையோ வருஷம் கழித்து, களக்காடு அருகே ஒரு மிஷன் ஸ்கூலில் வைத்து அகில இந்திய அளவிலான டேலன்ட் எக்ஸாம் ஒன்றுக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.மகள் தேர்வெழுதிக் கொண்டிருந்தாள்.நான் அழகான, பழமையான அந்தப் பள்ளியின் மர நிழலிருந்து காத்துக் கொண்டிருந்தேன்.என்னை நோக்கி ஒரு சிஸ்டர் வந்தார்கள் சிமென்ட் கலர் பாதிரி உடை. நீங்க கோபாலண்ணன் தானே என்று விசாரித்தார்கள்.அந்த அழகான பெரிய உதடுகள் மட்டும் எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது.முகம் வறண்டிருந்தது. தெரியவில்லையே என்றேன். ``நான் மெர்வின், உங்கள் வீட்டில் குடியிருந்த ஜெசிந்தாவின் தங்கை.’’...அப்படியானால் ஜெசிந்தா என்று நான் கேட்கும் முன்பே அவள் சொன்னாள்... ``அக்காவுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. வல்லநாட்டில் இருக்கிறாள்.ஜோ, வொர்க் ஷாப் வைத்திருக்கிறான்.நான் இங்கே இருக்கிறேன். நீங்கள் மாலை போட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது,உங்களுடன் நான் பேசலாமா தெரியவில்லை , ரொம்ப நேரமாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏதாவது இங்கே சாப்பிடலாம் என்றால் டீ அனுப்புகிறேன்., ஸ்தோத்திரம்’’ என்று சொல்லித் திரும்பி நடந்தாள்.விசுமபுவது நன்றாகத் தெரிந்தது.நானும் மறுபடி கூப்பிட நினைத்தவன் கூப்பிடவில்லை.


``ஒரு வழியை மறு வழியாய் மறைப்பது விதியாகும்-இதை
உணர்த்துவதே நான் இருக்கும் சிலுவையின் அடையாளம்.....’’

வசந்தாவின் குரலில்........... கண்ணதாசன்.

Visitors