Sunday, September 7, 2008

ஒரு நாளில் காவியம் முடிந்து விடுமா

சில நேரம் சட்டென்று தோன்றும் பொறிகள் மள மள வென்று கவிதையாக மாறிவிடும். சிலவை எத்தனை நாளானாலும் வெறும் குறிப்பாகவே நோட்டை காத்துக் கிடக்கும். “பால் மனம்” என்றொரு தமிழ் சினிமா. ஜெய்சங்கர்-விஜயா நடித்தது. பாட்டுக்கள் மட்டும் அற்புதமானவை. ஜி.பார்த்தசாரதி யின் இசைஅமைப்பு. படமும் அவர் தயாரித்ததுதான். ஏற்கெனெவே கல்யாண மணடபம் என்றொரு படம் தயாரித்தவர்.இரண்டிலுமே பாட்டுக்கள் அற்புதம்.
கன்னியொருத்தியிடம் எத்தனை கனி, கனிகளின் சுவையே தனித்தனி.என்று ரஷ்ய பாலே இசையுடன் ஒரு பாட்டு பிரமாதமாயிருக்கும் .படம் இரண்டுமே சுமாருக்கும் குறைவானவை.அவன் பித்தனா?படத்திற்கும் அவர்தான் இசை என்று நினைவு.
அவர் அமெரிக்கா போய் காசெட் விற்பனையில் நிறைய சாதித்தார் என்று நினைவு.இதெல்லாம் வேறு, சொல்ல வந்தது, அந்தப் படத்தில் ஒரு பாடல் வரி “ ஒரு நாளில் காவியம் முடிகிறதா..' ஆலங்குடி சோமுவாயிருக்கும்.
ஒரு அந்தி கவிந்து இருட்டத் தொடங்கும் நேரம் நண்பனைத் தேடிப் போயிருந்தேன்.புதுக் கல்யாணமனவன். யோசனையே இல்லாமல் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தேன். திடீரென உறைத்தது புத்திக்கு. நைசாக நழுவி வந்தேன். இன்னும் அது ஒரு கவிதைக் கான விஷயமாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.”ஒரு கரடியின் பூஜைக் குறிப்புகள்” என்று சமீபத்தில் எழுதிப் பார்த்தேன். இன்னும் சரியாக வரவில்லை. வரும்.
ஆனால் இது ஒரு வினாடியில் வந்தது.

சசி
________ உன்
பெயருடன் தொடங்கும்
என்
கவிதைகள் அனைத்தும்
முதல்
வரியுடன் நின்று விடுகின்றன
பின்
வருவதெல்லாம் வார்த்தைகள்
உன்
பெயர் இடையில் வரும்
என்
எல்லாக் கவிதைகளிலும்
ஒரே
கவிதையுள் ___________
இரு
“கவிதை” ஜொலிக்கிறது
உன்
பெயருடன் முடியும்
என்
எல்லாக் கவிதைகளும்
ஆண்
மயில்கள்_____________
(21.09.1972)

Visitors