Saturday, August 30, 2008

அப்ப தினமணி கதிர் இதழில் சுஜாதா ‘ஒரு சிக்கலில்லாத காதல் கதை”என்று ஒரு குறுநாவல் எழுதியிருந்தார்.எனக்கு ரொம்ப பிடித்த கதை.அப்போ எனக்கு ஒரு சினேகிதி இருந்தாள்.சற்று கறுப்பாய், கண்னாடி அணிந்து,கண்ணால் மட்டும் பேசிகொண்டு சிறு சிறு பரிசுகள் பூ வரைந்து கைகுட்டை, பிறந்தநாள் வாழ்த்து அட்டை. என்று ரகசியமாய்த் தந்து கொண்டு.... அந்தக் கதைக்கு ஜெயராஜ் வரைந்த ஓவியம் அச்சசல் அவளைப் போலவே இருக்கும்.அது வேற கதை.இந்தக் கவிதை அந்த தலைப்பினால் உந்தப்பட்டது.



இத கசடதபறவுக்கு அனுப்பினேன் .அது நிற்கப் போகிற சமயமாயிருக்கும் என்று நினைவு. சுப்ரமணிய ராஜு படித்து விட்டு இது நல்ல கவிதை ஆனால் கவிதையாக்கப் படவில்லை என்ற மாதிரியில் எழுதியிருந்தான். பாலகுமாரனோ காதல் வெங்காயம் என்றெல்லாம் எழுதியிருக்கிறாய் போடா படவா, என்று ”மாறா அன்புடன்” எழுதியிருந்தான்.அவன் எல்லா கடிதங்களிலும் முடிக்கும் போது 'மாறா அன்புடன்'- பாலா என்றுதான் எழுதுவான் . இந்தக் கவிதை இருக்கிற நோட் புக்கில் கல்யாணியண்ணன் ஒரு பல்லி படம் வரைந்திருக்கிறார்.அதை ஸ்கேன் பண்ணிக் கூடப் போடலாம். கவிதை பிரசுரமாக வில்லை. இரண்டு பேரின் அபிப்ராயம் பற்றி நீங்கள்தான் சொல்லணும்.இந்தக் கவிதைக்கு இன்று 36 வருடம் மூன்று நாள் வயது ஆகிறது.

*** *** ***

ஒரு துப்புரவான
காதல் கவிதை

அதன் அலங்கோலமான
நிலை கண்டு- அறையைத்
துப்புரவாக்க நினைத்தேன்.
சுவரில் கம்பியில் சொருகி
அடுக்கிய நிலையிலுறங்கும்
காதல் கடிதங்களில்:
பழைய நினைவாகிப் போக விடும்
படங்களினோரங்களில்-
வழ வழத்த தரையெங்கும்,
பாதங்களைப் படமெடுக்கும்
தூசிகள்-

சோகங்களில் கறுத்துக்
குவிந்த மனமாய்ச்
சாக்குக் குவியல்கள்- உள்ளே
தேள்கள் இருக்கலாம்
‘இல்லை'-
தாய்ப் பல்லி,
தப்பியோட-சில நசுங்கின
முட்டைகளுக்கிடையே-நாலைந்து
வால் முளையாத குஞ்சுகள்.
அவைகளின் தனித்த பயணத்திற்கு
நான் பிரம்மாவானேன்
தாய் பழிக்கலாம்.

தூசியினூடே-காய்ந்த
பூச்சருகுகளிடையே-
அனுபவமற்ற விரைவுடன்
அவை புகுந்தன
(அனுபவமற்ற ஆறேழில்
முற்பகலில்
அவள் எனக்குக் கிடைத்திருந்தது
பயனற்ற பிற்பகலில்
தூசியாய் நினைவில் படிந்தது)

அள்ளுகையில்
கைப்பிடிக்குள் வராத தூசிகள்
விரல்ப் பிடிக்கும் தப்பி-அறையின்
இடுக்குகளில் சர்வ சுதந்திரத்தோடு
ஒட்டிக் கொண்டன

என்ன செய்தும் கொஞ்சத்தை
எடுக்கவே முடியவில்லை.
(27.8.1972)

Visitors