Tuesday, August 19, 2008

உதிரி(ப்பூக்)கள்

அமர் ப்ரேம் என்று ஆராதனாவுக்கு அப்புறத்துக்கு அப்புறம் சக்தி சாமந்தா ஒரு படம் எடுத்தார்(இடையில் 'கட்டி பதங்க்”)அமர் ப்ரேம் பார்க்கவில்லை. கே. பாலசந்தர் வெள்ளி விழா என்று எடுத்த படத்தை ஆசை ஆசையாக நானும் கல்யாணி அண்ணனும் பார்க்க்ப் போனோம் படத்தில் ஜெயந்தி செத்தவுடன் படமும் செத்து விட்டது.இதே மாதிரி பாபி (BOBBY)படம் ஸ்டில் களை பிலிம் ஃபேர், ஸ்டார் &ஸ்டைல் ஆகியவற்றில் பார்த்து விட்டு கே ஏ அப்பாஸ் அற்புதமாக தீட்டியிருப்பார் என்று மதுரை மீனாக்ஷி தியேட்டரில் நானும் மு.ராமசாமியும் அடிபிடி போட்டு பார்க்கப்போய் அதிருப்தியுடன் திரும்பினோம்.அப்படி அமரத்வமான காதல் கதையை யார் எப்போதுஎடுக்கப் போகிறார்கள்.தேவதாஸ் நன்றாயிருக்கும்.”அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது என்ற உடுமலை கவிராயரின் பாட்டு இன்னும் உயிரை எடுக்கிறது.ஆயிற்று நாற்பது வருடம். உன்னை மறுபடி குமரியாய்ப் பார்த்து.பூவாடை வீசி வர பூத்த பருவத்தில் நீலச் சேலையில் பார்த்து வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் நீலக்கவிதை எழுதி நானே வைத்துக் கொள்வேன்.அப்படி எழுதிய கவிதைகள் எந்த டயரியில் இருக்கிறதோ.கால்குலஸ் புத்தகத்தில்
“கார்த்திகையின் ஒளியாறு
மார்கழியில் உன்னலோடும்-அது
ஆர்த்திடும் ஒளிப்புனலில் என்
ஆவியின் உயிர்ப்பாடும்”
என்று முதல்ப் பக்கத்தில் (68-ல்) எழுதி வைத்தேன்.அதை படித்து விட்டு இந்தா இந்தப் புத்தகத்தை நீயே வைத்துக் கொள் என்று கால்குலஸ் வாத்தியார் தந்து விட்டார். அவர் புதிதாக வாங்கியிருந்த புத்தகம். நன்றாகப் படிக்கிறேன் என்று எனக்கு தந்திருந்தார்...கொஞ்சம் கோபப் பட்ட மாதிரி இருந்தது...நாலு நாள் கழித்து பாட்டு பிரமாதமா இருக்கு டே என்று நாகர்கோயில்த் தமிழில் சொல்லி விட்டு அதற்காக ஆறு ரூபாய் கொடுக்கலாந்தான் டே என்று சொன்னபோது சந்தோஷமாய் இருந்தது.அந்தக் கார்த்திகையின் நினைவாகத்தானோ என்னவோ வருடந்தோறும் மாலை போட ஆரம்பித்தேனோ என்னவோ.ஆனால் எனக்கு முதன் முதல் மாலை போட்ட குருசாமிக்கு நான் உன் பின்னால் அலைவது நன்றாகத் தெரியும் நீ மலைக்கிப் போயி என்ன கேக்கப் போறேன்னு தெரியும்பா என்றது நினைவிருக்கிறது. அதுதான் அப்போஉண்மையும் கூட,எப்பவும்.

தேடுகிறது
இன்று கைக்
கெட்டாமல்ப்
போன
முயற்சிகளின்
தோல்விகளுக்கும்
அல்லது
முயற்சிகளே
பங்கப் பட்டுப்
போனதற்கும்
முயற்சிகளுக்கும்
காரணமாயிருந்த
உன்னை
நீ
இப்போது என்ன
செய்து கொண்டிருப்பாய்
இன்றைய வேலைகளால்
களைப்பு உன்னை
விழுங்கிக் கொண்டிருக்க
அடுக்களையை
அப்படியே போட்டு
விட்டு
கொஞ்சம்
பட்டாசலுக்கு வந்து
டி.வி.
பார்ப்பாயா
ரெண்டு தோசைக்கு
மட்டுமே மீதமிருக்கிற
மாவை மொத்தமாய்
தோசைக் கல்லில்
ஊற்றி விட்டு
ஏனங்களை
ஒழித்துப் போட்டுக்
கொண்டிருக்கிறாயா

பொறுமையாய்
ஸ்டவ் குமிழையும்
சிலிண்டர் குமிழையும்
மூடி விட்டு

கை கழுவி
நறுவிசாய் உடுமாத்துச்
சேலையில்
துடைத்துக் கொண்டே
படித்துக் கொண்டிருக்கும்
உன்
குழந்தைக்குப்
பரிவு பாராட்ட.....
இதை மறுபடி திருத்தி எழுதுவேனா. பிரசுரம் முக்கியமில்ல உன்னைச் சார்ந்து நிற்கும் இந்தக் கவிதைக்கு...மிக மிக உன்னதமான நின்றுவிடல்...பாதியில் நின்று விடல்,இளமை வழங்கும் இந்தக் கவிதைக்கு. அஸ்வகோஷின் கவிதையில் பிரபாவைப் போல்........

”ஆலய வாசலில்க்
காணேன் கோபுர
அழகின் நிழலிலும்
காணேன்
பொன்னம்பலத்திலும்
பூங்காவனத்திலும்
பொய்கைக் கரையிலும்
உனைக் காணேன்..


அன்புத் தெய்வம்
நீ எங்கே
தேடியலைகின்றேன்” தேவி படத்தில் தக்ஷினாமூர்த்தியின் இசையில் சுசிலாவின் குரல் அமரத்துவமாக ஒலிக்கிறது மனசுக்குள்.

Visitors