Sunday, December 28, 2008

`ஆண்டவன் கட்டளை.....’’.




``நான்கு வாரங்களுக்கு எந்த வித ப்ரீ பாஸும் செல்லாது.’’முதன் முதலில் இப்படி போர்டு வைத்தது பாசமலர் படத்திற்காகத்தான் ஸ்ரீ ரத்னா தியேட்டரில் என்று நினைக்கிறேன்.பாசமலர் படத்திற்கு பயங்கர வரவேற்பு. தாய்மார்கள் கூட்டம் அலைமோதியது.ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு தரை, பெஞ்சு டிக்கெட்டுகள் முழுவதும் பெண்களுக்கு மட்டும்.கொடுத்தும் கூட்டம் குறையவில்லை. முதன் முதலில் நான்கு வாரங்கள் மாட்னி ஓடி சாதனை படைத்தது அந்தப் படம்தான்.ரொம்ப நாளைக்கு அதுதான் ரெக்கார்ட்.`நானும் ஒரு பெண்’ படம் தான் ஆறு வாரம் வரை மாட்னி ஓடி அதை முறியடித்தது.`மாட்னி ஹோல்டெர்’ என்று ஒரு ஒப்பந்தம். பட விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் காரர்களுக்கும் உண்டு.அந்தக் காலத்தில், அதாவது தரை டிக்கெட். (. சைக்கிள் சீட் அகலத்துக்கு பெஞ்சுகள் போடப்பட்டிருந்தாலும் அது தரைடிக்கெட் என்றே வழங்கி வந்தது.) 31 பைசாவாக இருந்த காலத்தில்,130/-ரூபாய் வசூல் ஆகும் வரை மாட்னி ஓட்டுவார்கள். அதற்கு குறைந்து விட்டால் தினசரி இரண்டு காட்சிகள்,`சனி, ஞாயிறு’ மூன்று காட்சிகள்.1966-ல் தனிப்பிறவி படம்தான் 63 நாட்கள், கடைசி நாள் வரை மாட்னி ஓடியது.125 நாள் மாட்னி ஓடி சாதனை படைத்தது.ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை. ஆனால் அது கலர்ப் படம். எல்லா ரெக்கார்டுகளையும் உடைத்து தூள் தூளாக்கியது.தாய்மார்களின் ஆதரவுடன் ஒரு சாதாரணக் கறுப்பு வெள்ளைப் படம் 175 நாளுக்கு மேலாக மாட்னியுடன் ஓடி சாதனை புரிந்தது. `பணமா பாசமா’. .

ஒவ்வொரு தியேட்டர்காரர்களும் சினிமாப்படப் போஸ்டர் ஒட்ட அவர்களுக்கென்று இடங்களைப் பிடித்து வைத்திருப்பார்கள்.எழுதப்படாத சட்டம் போல் ஒருவர் வழக்கமாக ஒட்டுகிற இடத்தில் இன்னொருவர் ஒட்ட மாட்டார்கள்.அப்படி யாராவது ஒட்டி விட்டால் `போஸ்டர் வார்’ ஆரம்பித்து விடும். அந்தப் பட போஸ்டர்களின் மீது கைவசமிருக்கும் பழைய போஸ்டர்களை நீள வாக்கில் வெட்டி புதுப் போஸ்டர் மேல் ஒட்டி விடுவார்கள்.அப்புறம் சமாதானமாகி விடும். விநியோகஸ்தர்கள் தருகிற எல்லாப் போஸ்டர்களையும் தியேட்டர்காரர்கள் ஒட்டுவதில்லை.அப்போதே, இருப்பதில் சிறிய சைஸான 20க்கு 30 போஸ்டர் ஆறு ரூபாய் வரை வரும்.60 க்கு 40 என்றால் பதினோரு ரூபாய் வரை வரும்.60க்கு 40, நாலு துண்டு சேர்ந்தால் பெரிய `பேனர்போஸ்டர்’. ஜெமினி ஸ்டுடியோஸ் படத்திற்கென்றால் ஆறு துண்டு பேனர் போஸ்டர் தவறாமல் போடுவார்கள். பெரிய தேரைச் சுற்றி மூடியிருக்கும் தகரத்தில் அநேகமாக எல்லாத் தியேட்டர் போஸ்டர்களும் ஒட்டியிருக்கும்.

ஒளி விளக்கு படத்திற்கு`ஈஸ்வர். டிசைன் செய்த ஆறு துண்டு போஸ்டர் ரொம்ப பிரபலம்.அதை விட `தீபாவளி வார’த்திற்கு அவர் வரைந்த நாலு எம்ஜியார் இருக்கிற(தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா’ பாடல் காட்சியில், ரவி காந்த் நிகாய்ச் தந்திரக் காட்சியில் எம் ஜி ஆர் நாலுவித தோற்றத்தில் வருவார்)போஸ்டருக்கு பெரிய கிராக்கி.ஒட்டாமல் ஒதுக்கி வைத்த போஸ்டர்களை, அதை ஒட்டுபவர்களோ அல்லது தியேட்டர் மேனேஜரோ டூரிங்க் டாக்கிஸ்காரர்களிடம், பாதி விலைக்கு கொடுப்பார்கள். அவரகள், விநியோகஸ்தர்களிடம் பேருக்கு ஒன்று இரண்டு போஸ்டர்களை மட்டும் வாங்கிக் கொண்டு மீதித் தேவைக்கு இப்படிப் பெரிய நகரங்களிலுள்ள தியேட்டர்காரர்களிடம் சல்லிசாக வாங்கிக் கொள்ளுவார்கள். .தியேட்டர்களில் விளம்பர வண்டி தள்ளும் துரை என்று ஒருத்தன் எனக்கு அறிமுகம். போஸ்டர் ஒட்டுபவர்கள், முன்னிரவில், அதாவது செகண்ட் ஷோ ஆரம்பித்ததும் தியேட்டரை விட்டுக் கிளம்புவார்கள். போஸ்டர்கள், பசை வாளி சகிதமாக. நகரம் பூராவும் அவர்களுக்கு `நிர்ணயிக்க’ப் பட்ட இடங்களில் ராமுழுக்க ஒட்டி விட்டு, விடியப் போகிற போது ஆற்றுப் பக்கம் வந்து விடுவார்கள். மேல் காலெல்லாம் பசையாக இருக்கும்.

அப்படி ஒரு நாள் ஊருக்குள் எல்லாம் போஸ்டர் ஒட்டி விட்டு, ஆற்று மண்டபத்தின் வெளிச் சுவரில் கடைசிப் போஸ்டரை ஒட்டிவிட்டு, இரண்டு கையிலும் பசையோடும், ஒரு தவிப்போடும் நின்று கொண்டிருந்தான் துரை. ஏதோ செசில் பி டெமிலியின் டென் கமான்மெண்ட்ஸ், வில்லியம் வைலரின் பென்ஹர் போன்ற பிரம்மாண்டப் படங்களின் ஸ்டைலில் `அரச கட்டளை’ப் படப் போஸ்டரின் எழுத்து,அதன் மேல் வாளைப் பிடித்தபடி எம் ஜி ஆர்.அது பக்தா வரைந்தது. எம் ஜி ஆர் குண்டடி பட்டு, பிழைத்து வந்ததும் வந்த, முதல்ப் படம்.படம் முன்பே எடுக்கபபட்டதுதான். சொல்லப்போனால் முதலில் பவானி என்ற பெயரில் எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், பானுமதியெல்லாம் நடிக்க தயாராகி, பாதியிலேயே நின்று போன படம்.எம்ஜியார் பதிப்பாசிரியராக இருந்த `நடிகன்குரல்’.பத்திரிக்கையில் விளம்பரங்கள் எல்லாம் வந்தது.அதில் தான் எம்ஜியார் தனது சுய சரிதையை எழுதி வந்தார்.அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. அப்புறம், விகடனில் நான் ஏன் பிறந்தேன் என்று வெளிவந்தது.செத்துப் பிழைத்த தலைவர் மேல் அப்போது அப்படியொரு வெறி.போஸ்டரும் நன்றாக இருந்தது.
பொதுவாக பக்தா டிசைனெல்லாம் அப்போது காலாவதியாகிவிட்டது. அந்தக் காலத்தில், N44 என்றுசுருக்கமாகப் போடும் கே. நாகேஸ்வர ராவ், ஜி ஹெச் ராவ், பக்தா இவர்கள்தான் போஸ்டர் டிசைனில் பிரபலம். பக்ஷிராஜா படங்களுக்கும் ராமண்ணாவின் பழைய படங்களுக்கும் `வேந்தன் பப்ளிசிட்டீஸ்’.ஏ வி எம்முக்கு ஜி ஹெச் ராவ்.டப்பிங் படங்கள் என்றால் ஸ்டுடியோ எஸ் .வி. சர்மா, மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு எஸ்.ஏ. நாயர், .இவருடைய வண்ணங்கள் உறுத்தாமல் இருக்கும். பக்தா, ஜி ஹெச் ராவ், வர்ணங்கள் சற்று அடர்த்தியாக இருக்கும்.
தவிரவும் இரண்டு பேரும் மார்பளவு படங்களை வைத்தே டிசைன் செய்வார்கள். லெட்டரிங்கை பார்த்தாலே சொல்லி விடலாம். யார் போஸ்டர் என்று. ஸ்ரீதர் பட்ங்களுக்கு சீநி.சோமு டிசைன் செய்வார்.அவர் ஸ்ரீதரைப் போலவே, சில புதுமைகளைச் செய்தார்.வெறும் போட்டோக்களை ஒட்டி வைத்தது போல் டிசைன் செய்யாமால் அதையே சற்று ஓவியம் போல் செய்தவர். தெய்வத்தாய்,. தட்டுங்கள் திறக்கப் படும், நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களுக்கெல்லாம்.அவர் வரைந்த போஸ்டர்கள் பெரிய மாறுதலாய் இருந்தது. வீரத்திருமகன் படத்திற்கு சோமு வரைந்த போஸ்டர்கள் வித்தியாசமானவை. பாடலகள் கண்ணதாசன். இதில் பாடல்கள் என்று எழுதாமல் ஏடும் எழுத்தாணியும் வெள்ளை வர்ணத்தில்-சிறியதாக, அதன் மேல் கண்ணாதசன் என்று அடர்ந்த வண்ணத்தில்., அதே மாதிரி வீணை,தபலா, இசைக் கருவிகள் மேல் விஸ்வநாதன்-ராம மூர்த்தி என்று டிசைன் செய்திருப்பார். இந்த நேரத்தில்தான். பேசும்படம் பத்திரிக்கையில் அழகாக லே அவுட்
செய்து கொண்டிருந்த பரணி குமார். முதன் முதலாக் `இருவர் உள்ளம்.’ படத்திற்கு டிசைன் செய்திருந்தார். அந்தப் போஸ்டர் வண்டிப் பேட்டை-ரொட்டி சால்னா கடை அருகே வழக்கமாக ராயல் தியேட்டர் போஸ்டர் ஒட்டுகிற இடத்தில் ஒட்டியிருந்தது. அப்படித்தான் மார்க்கெட் லைப்ரரிக்குச் செல்லவேண்டும்.காலையில் அது ஒரு பழக்கம். நான் அதையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது., எதிரே வந்த வண்ணதாசன் என்னுடன் சேர்ந்து கொண்டார்.இரண்டு பேரும் அர்த்த புஷ்டியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.அப்புறம் போஸ்டரைப் பார்த்தோம். அழகு.
வண்ணதாசன் அற்புதமாகப் படம் வரைவார். பாசமல்ர் படத்திற்குப் போஸ்டர் டிசைன், அதன் தயாரிப்பாளரான மோஹன் ஆர்ட்ஸ், மோஹன் ராம் தான். அதற்கு வைக்கப் பட்டிருந்த கட் அவுட்கள், பானெர்கள் எல்லாம் அற்புதமாய் இருக்கும். கல்யாணி அண்ணன் அதை அப்படியே வரைந்து வைத்திருப்பார்.சிவாஜி துப்பாக்கியால் கண்ணீரைத் துடைக்கிற மாதிரி ஒரு படம்,பென்சில் டிராயிங், இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
பரணியின் படங்களைத் தேடிதேடி ரசிப்போம். கல்யாணியின் கணவன் படத்திற்கு (பக்ஷி ராஜா ஸ்டுடியோஸ் படம்) பரணி வரைந்த டிசைனுக்காகவே படம் போனோம். படம் கூவி விட்டது. எம் ஜிஆர் படத்திற்கு பரணி டிசைன் பண்ண மாட்டாரா என்றிருந்தது.அடிமைப் பெண் படத்திற்கு ஒரு பேனர் போஸ்டர் வரைந்திருப்பார், ஆனால் அது அவ்வளவு நன்றாயிருக்காது. அவர் மனம் போல் வரைய விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.ஸ்ரீதர் படங்களில் வெண்ணிற ஆடை படத்துக்கு பரணியின் கைவண்ணம் அழகாக் இருக்கும்.பரணியின் பாதிப்பில் நிறைய பேர் வந்தார்கள்.உபால்டு அதில் ஒருவர்.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பரணி, ஒரு வாய் பேச முடியாத ஓவியராக நடித்திருப்பார்.அதில் அவர் இறந்து போவது போல் காண்பித்திருப்பார்கள். தேவையில்லாத செண்டிமெண்ட் அது. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே, பரணி காலமான போது, கே.பாலசந்தர் மேல் இனம் புரியாத கோபம் வந்தது.
குழந்தைக்காக படத்திலிருந்து `ஈஸ்வர்.’போஸ்டர்கள் பிரபலமானது.அதற்கு அவர் வரைந்திருந்த ஒரு மசூதியின் பாதிக் கோள வடிவம், அதற்குள் ராமர், சிலுவை எல்லாம் எல்லாப் போஸ்டர்களிலும் சிறிதாக அழகாக, உறுத்தாத குறியீடாக இருக்கும். . இதே ஐடியா பாவ மன்னிப்பு விளம்பரங்களில் சற்று வெளிப்படையாய் பேத்தலாய் இருக்கும்.ஈஸ்வர் டிசைன் செய்யாத படங்களே இல்லை என்ற காலம் இருந்தது..
ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரைக்கும் படத்திற்கு பாண்டு பென்சில் ஸ்கெட்சில் பிரமாதப் படுத்தியிருப்பார் எல்லா விளம்பரங்களிலும்..அற்புதமான கலைஞன். நகைச் சுவையில் அவரை ‘’மொக்கை போட வைத்து’’ புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

துரைக்கு யாராவது டிராயர் பையிலிருந்து பீடியை எடுத்துக் கொடுத்தால் நல்லது., கடைசிப் போஸ்டரை மண்டபத்தில் ஒட்டிய இரண்டு கைகளிலும் ஏகப்பட்ட பசை.என்னிடம் கேட்டான்.அவனது முரட்டு டிரவுசர்ப் பையிலிருந்து பீடியை எடுத்துக் கொடுத்தேன்.பீடியைத் தவிரவும் வெறெதுவோ அசாதாரண வடிவத்தில் ககையில் பட்டது.அதுவும் சின்னபீடிக் கட்டுப்போல இருந்தது. அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.அவனிடம் ஒரு போஸ்டர் –அரச கட்டளை- கேட்டேன். வீட்டில் வைத்திருப்பதாகச் சொன்னான்.வீட்டுக்கு வாரும். அவனைச் சமீப காலமாகப் பழக்கம்.சில டீக்கடைகளில் தட்டி போர்டு வைத்து குறிப்பிட்ட தியேட்டரின் விளம்பரங்களை வைத்திருப்பார்கள்.அதற்காக போர்டு பாஸ் என்று தருவார்கள்.இரண்டு பேர் போகலாம் பெஞ்சு டிக்கெட்டிற்கு. இந்தப் பாஸை நல்ல படமென்றால் நாலு வாரத்திற்குத் தர மாட்டார்கள்.அதை போஸ்ட் ஒட்டும் துரை போன்றவர்கள் வாங்கி வந்து கடைக்காரரிடம் தருவார்கள்.சிலரிடம் அவன் அதைக் கொடுக்க மாட்டான். தரை டிக்கெட் விலைக்கு விற்று விடுவான். சில நல்ல ஆங்கிலப் படங்களுக்கு அவன் சும்மாவே தந்திருக்கிறான்.பீச் ரெட் என்று ஒரு அற்புதமான படம். போர் முனையிலிருக்கும் வீரர்கள்,வீட்டையும் மனைவி, சொந்தங்களை நினைத்தும், அந்நியோன்யமான நேரங்களை நினைத்தும் மணலில் பெண்ணைப் போல் செய்து, உணர்ச்சிகளைத் தீர்த்துக் கொள்வதாகவும் எல்லாம் வரும்.
ஏற்கெனெவே கேட்டு வைத்திருந்த அடையாளத்தை வைத்து துரையின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.முடுக்கு முடுக்காகப் போய்க் கொண்டிருந்தது.ஒரு வீட்டில் இன்னொரு துரை இருந்தான். சினிமாத் தியேட்டரில் போஸ்ட் ஒட்டுகிறவன் என்று சொல்ல தயக்கமாய் இருந்தது. சைக்கிளைத் தெருவில் வைத்து விட்டு வைத்திருந்தேன். பூட்டு சரியாக இல்லை.அவ்வப்போது சாவி கீழே தானாகவே விழுந்து விடும்.பின்னால இருக்கு போங்க என்று சொல்லி விட்டு ஒரு மாதிரியாகப் பார்த்தான் இன்னொரு துரை. கிட்டத்தட்ட வாய்க்கால் ஒன்று வந்து விட்டது. இதற்கு மேல் வீடு இருக்காது என்று திரும்பின போது ஒரு சின்ன்க் குச்சு வீட்டின் தார்சாலில் பசை வாளி தென் பட்டது. இரண்டு மூன்று சத்தம் கூப்பிட்டேன். பதிலே இல்லை.வீடு திறந்திருந்தது .வாய்க்காலிலிருந்து ஒரு கிழவி துவைத்த துணிகளோடு வந்து கொண்டிருந்தாள்.அவளிடம் கேட்டேன் துரை வீடு இதானா என்று.
ஆமா இதான் உள்ளே போ என்று சொல்லி,அவளும் ஒரு மாதிரியாகச் சிரித்தாள்.உள்ளே போனேன்.யாரோ ஒரு ஆள் இடித்துத் தள்ளினாற் போல் வெளியே போனான்.தரையிலிருந்து ஒரு பெண், புடவை எதுவும் இல்லாமல் எழுந்தாள். நான், ``துரை......’’ என்று இழுத்தேன். சற்றுத் தள்ளிக் கிடந்த சேலையைக் காலால் எடுத்தபடியே கத்தினாள். ``ஆமா தொரை, என்னத்த தொறக்க, சீத்துவமில்லாத நாயைத் தேடி வந்துட்டான்..திறந்து வீட்டுல நாய் நுழஞ்ச மாதிரி...’’இதற்குள் சேலையைச் சுற்றியிருந்தாள். அவள் பேச்சுக்கேத்த உருவமில்லை, மூக்குத்தியுடன் மிக அழகாய் இருந்தாள்.வேகமாக வெளியேறினேன். பின்னாலாயே வருவது தெரிந்தது.தார்சாலில் இருந்த பசை வாளியை காலால் எத்துவதும் அது உருளுவதும் கேட்டது.சைக்கிளை நினைத்த படி, வீடுகளாய்க் கடந்து தெருவுக்கு வந்தேன், எல்லா வீட்டிலிருந்தும் சிரிப்பது மாதிரிப் பட்டது.

Sunday, December 21, 2008

புற்றில் உறையும் பாம்புகள்......





தூத்துக்குடியில், வேலையில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகி விட்டது. சிறு வயதில் மூன்றோ நாலோ படிக்கிற போது பள்ளிக் கூடத்தில் உல்லாசப் பயணத்தின் போது வந்தது. அப்பாவிற்கு தனியே அனுப்ப பயம்.அப்பாவும் அம்மாவும் என்னுடனும் எனக்கு ஒரு வகுப்பு கூடப் படிக்கும் அக்காவுடனும் வந்திருந்தார்கள்.வீடு திரும்புகிறதிற்கு முந்தின சாயந்தரம் பீச்சில் விளையாடின நினைவு. முத்துச் சிப்பி வியாபாரம் படு சுறு சுறுப்பாக நடந்து கொண்டிருந்தது மீன் மாதிரி, முத்துச் சிப்பியை குவித்துப் போட்டு விற்றுக் கொண்டிருந்தர்கள். அப்பா நாலைந்து சிப்பிகள் வாங்கினார்.வாங்கின பின்பு, அறுத்துக் காண்பித்தார்கள். ஏதோ ஒன்றில் ஓமியோபதி மாத்திரை சைஸுக்கு ஒரு முத்து இருந்த நினைவு. அது கூட நல்ல முத்து இல்லை என்றார்கள். பீச்ச்சில் மாணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். ஊளைக்காது சுந்தரம், மண்ணில் பெரிய குழியாகத் தோண்டி,காலைத் தொடை வரை புதைத்துக் கொள்வான். நன்றாக எல்லாரும், காலைச் சுற்றியுள்ள மணலைத் தட்டி கெட்டியாக்கிய பிறகு `ஜெய் சீத்தா’..என்று சத்தமிட்டபடியே காலை உருகி விடுவான். அப்போது `ஸ்ரீ ராம பக்த ஹனுமான்’ படம் வந்திருந்த நேரம்.இந்திப் படம். தமிழில் டப் செய்யபட்டு வந்தது. பஸ்ந்த் பிக்சர்ஸ், ஹோமி வாடியா தயாரிப்பு. பாபுபாய் மிஸ்திரி ஒளிப்பதிவு. தந்திரக் காட்சிகளுக்கு அப்போது அவர்தான் பிரபலம். அப்புறம் ரவிகாந்த் நிகாய்ச்.அதில் ஹனுமான் நெஞ்சைக் கிழித்து சீதாராமரைக் காண்பிக்கிற காட்சி பிரபலம்.அந்தப் பகுதி கலரில்.
அப்பாவும் அம்மாவும் இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு பள்ளிக்கூடத்தில் போன போது எங்களுடன் வந்தார்கள். அம்மா வெளியூரெல்லாம் போனதேயில்லை.பள்ளிக்கூட ஆசிரியர்களும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அவர்களுக்கு இது ஒரு வகையில் பிடித்தமானதாகக் கூட இருந்தது.அப்பா தாராளமாகச் செலவு செய்யக் கூடியவர் என்பது ஒரு காரணம்.அணைக் கட்டில் வேலை பார்க்கும் இஞ்சினியர் அப்பாவுக்குப் பழக்கம். அதனால் எல்லாப் பிள்ளைகளையும், கசிவு நீர் விழுந்து ஓடும் ஒரு குகை வழியாக அழைத்துச் சென்றது, இன்னும் கூட`அம்மாடியோவ்’ என்று சொல்ல வைக்கிற குளிராய் உணர்ந்த அனுபவம்.. ஊளைக்காது சுந்தரம் குகை நெடுகவும் அண்டாக் கா கசம்...என்று சொல்லிக் கொண்டே வந்தான்.குகையின் கடைசியில் அணையிலிருந்து கசியும் தண்ணீர் ஒரு சுவரை ஒட்டி அருவி மாதிரி.அகலமாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்தான் வாயடைத்து நின்றான்.
அவன் பயப்படவே மாட்டான். ஸ்கூலுக்குப் பின்னால் ஓடும் வாய்க்காலில் ஒரு பாம்பைக் காண விட மாட்டான். கையாலேயே பிடித்து தலைக்கு மேலே கரகர வென்று சுற்றி தரையில் துவைப்பது போல் நாலு அடி அடித்து தூக்கி வீசுவான்.ஸ்கூலுக்குப் பின்னாலிருந்த ஒரு மாமரப் பொந்தில் பாம்பு ஒளிந்திருந்தது.வால் மட்டும் தெரிந்தது மாமரம் வாத்தியார்கள் உபயோகப் படுத்துகிற கக்கூஸ் பக்கத்தில் இருந்தது.அங்கே பையன்கள் போக மாட்டார்கள்.நாலாம் வகுப்பு கோயில் பிள்ளை சார் தான் அதைப் பார்த்தது.உடனேயே ஊளைக் காது சுந்தரத்தைக் கூப்பிடுலே என்று அங்கிருந்தே சத்தம் கொடுத்தார். அவன் காதிலிருந்து எப்போதும் ஊளை வடிந்துகொண்டே இருக்கும்.பஞ்சு வைத்துக் கொண்டு வரவிட்டால், அவன் கடைசியில் தனியாக உட்கார்ந்திருப்பான்.இல்லையென்றால் முட்டங்கால் போட்டு நிற்பான்.அன்றும் பஞ்சு வைத்துக் கொண்டு வராததால் முழங்காலில் நின்று கொண்டிருந்தான்.அவனை பாமப்டிக்க கூப்பிடுவதாகச் சொன்னதும் இதாண்டா சான்ஸுன்னு, கிளாஸ் சார் அனுமதிக்கு கூட காத்திராமல் ஓடினான். கொஞ்ச நேரத்தில் அநேமாக பள்ளிக் கூடமே, ரீசஸ் விட்டு அங்கே திரண்டு விட்டது மாமரத்தடியில். சுந்தரம் வாலைப் பிடித்து ரொம்ப நேரமாகப் போராடினாலும் அது வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இழுத்த்க் கொண்டிருந்தது. நல்ல முரடு.முதலி பிடித்த பிடியை அவன் விடவே இல்லை. ஊளை வழிந்து தோளுக்கே வந்து விட்டது. பெரும்பாலோர் அதைக் கவனிக்கவே இல்லை. ஒரு வழியாக பாம்பை இழுத்து விட்டான்.அது ரொம்பப் பெருசு...அவனை விட உயரம். தன் உயரத்துக்குப் பெரிசை தொட்ரக் கூடாதுல என்பான்.
``ஞாயித்துக்கிழமை பாம்பு” சாகாமப் போகாதும்பான்.அதாவது ஞாயித்துக் கிழமை ஒரு பாம்பு மனுஷங்க கண்ணில பட்டுட்டா அது தப்ப முடியாது. அடி பட்டுத் தப்பிபோன பாம்பு பழி வாங்காமப் போகாது என்று பாம்புக் கதைகள் நிறைய சொல்லுவான். மகாதேவி படத்துல வர்ற காமுகர் நெஞ்சில் நீதியில்லை(அவன் பாடறது பாம்புகர் நெஞ்சில் நீதியில்லை) பாட்டையும், கணவனே கண் கண்ட தெய்வம் படத்தையும் பத்தி கண் விரியப் பேசுவான் .மத்தப்படி அவன் கண் சற்று சிறிசாத்தான் இருக்கும்.
பாம்பு பெரிசா இருந்தது. அவன் தலைக்கு மேல் தூக்கி சுத்த முடியாம கஷ்டப் பட்டான்.அவன் சுத்த ஆரம்பிச்சதுமே எல்லாரும் தள்ளிப் போங்கலே என்று நாலாப்பு கோயில் பிள்ளை சார் கத்த ஆரர்ம்பிச்சுட்டார்.சுந்தரம் பிடியை விட முடியாமலலும் கிறு கிறுவென சுத்த முடியாமலும் தெவங்குவது தெரிந்தது ஏல. விட்டுருல, விட்டுருல என்று சார்வாமார்களெல்லாம் கத்தினாங்க.எங்க விட? அது ஒரு நிமிஷத்துல அவன் கையைச் சுத்திக்கிட்டு.பள்ளிக் கூடத்தை பேட்டை ரோட்டில் இருந்து நன்றாகப் பார்க்கலாம். ரோடு சற்று உயரம். ஸ்கூல் சற்றுப் பள்ளத்திலிருக்கும். ரோட்டில் சனங்க வேற கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. சுந்தரம் `யய்யா யம்மா’ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.ஆனா கைய்ய மட்டும் நீட்டமா வச்சுருக்கான். பாமபு நெருக்கமா வயர் சுத்தின மாதிரி கையைச் சுத்தி தோள், அக்குள் வரைக்கும் சுத்தி நிக்கி.தண்ணிப் பாம்பு மாதிரி இல்லை.யாரோ எட்டடி விரிசுல்லா என்று சொல்வது கேட்டது.
எப்பவும் பெரிய கோயில் யானை பேட்டை ரோடு வழியாப் போச்சுன்னா ஸ்கூலில் நிற்கிற முள் முருங்கை(கல்யாண முருங்கை) மரத்தில இருந்து இலை பறிச்சு திங்காமப் போகாது. யானைக்கு அது ரொம்ப பிரியமாம். ரோட்டில இருந்தே எட்டிப் பறிச்சுரும். அநேகமா அது காலையில் ரீசஸ் விடற நேரத்துக்குத் தான் வரும். ஒண்ணுக்கு இருக்கப் போற நாங்க அதை ஒரு வேடிக்கையா அப்பப்ப பார்ப்போம்.அன்றும் யானை, குழை திங்க வந்தது. யானைக்காரர் மலையாளத்து ஆள். ஒல்லியோ ஒல்லியா இருப்பார் பெரிய வெள்ளை மீசை.சத்தம் நல்லாருக்கும். ``ச்சல், ஆனை, ஆனை, சலாம் அவ்டுதோ’’என்று சொன்ன பேச்சுக்கெல்லம் யானை ஒழுங்கா கேக்கும். பொதுவா அவர் யானை மேல் உக்காந்து வர மாட்டாரு.காதை லேசாகப் பிடித்தபடிபக்கத்திலேயே நடந்து வருவார். கையில் இரும்புப் பூண் போட்ட கனத்த பிரம்பு. இன்னொரு பாகன் தான் யானை மேல் உக்காந்திருப்பான்அவன் கால் ``சத்தியக் கயிற்றி’’னுள் நுழைந்த வண்ணம் இருக்கும். யானையின் கழுத்தைச் சுற்றி நாலைந்து வரியாகக் கட்டியிருப்பதுதான் சத்தியக் கயிறாம். அதுக்கு கட்டுப்பட்டுத்தான் யானை மனுஷங்க சொல்றதைக்கேக்குமாம். .யானை கோயில்ல நிக்கும் போது.. வடக்குப் பிரகாரத்துலதான் கட்ட்பட்டிருக்கும். அதான் அதுக்கு கொட்டாரம்.அந்த சமயங்களில் அவர் அருகில் சிக்குப் பலகையில் பெரிய புத்தகம் ஒன்னு இருக்கும், கிட்டத்தட்ட நியூஸ் பேப்பர் அளவு பெரிசு. அதில மலையாள மகாபாரதம் எழுதியிருக்கும்.(இதெல்லாம் பின்னால தெரிஞ்ச தகவல்)அதை சத்தம் போட்டு வாசிச்சிகிட்டு இருப்பார்.யாராவது கிழடு கட்டைகள் கேட்டுக் கொண்டிருக்கும்அவருக்கென்று ஒரு பெரிய பெட்டாப் பெட்டி இருக்கும்.அதில் யானைக்கு உரிய துணி முக படாம், நாமக்கட்டி, தொரட்டி எல்லாம் இருக்கும்.அதில் `யானை வாகடம்’ வச்சுருப்பார்.1970 வாக்கில் ஒரு தரம் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நேரம்,தின்சரி கோயிலைச் சுத்தறதும் உண்டு.அதுவும் கூட்டம் எதுவில்லாமல் இருக்கிற அகாலமான நேரம் தான் பிடுக்கும். அப்ப சில சன்னதிகள் கிட்டப் போகவே பயமாயிருக்கும். கைலாசநாதர் சன்னதி நல்ல உயரத்தில் இருக்கும்.படியேறித்தான் போகவேண்டும். கீழே ராவணன் மலையை அசைக்கிற மாதிரி ஒரு சுதைச் சிற்பம்.அதில் கை நரம்பையே வீணை நரம்பாக்கி இசைக்கிற மாதிரி இருக்கும் ரொம்ப அழகான சிலை. அதற்கு மேல்த்தான் கைலாசநாதர். யாரும் அதிகம் போகாத சன்னதி. நான் சில சமயம் போவேன், சற்று பயத்தோடு.அப்போது யானைக்காரரும் அவர் பெட்டாப்பெட்டி சமாசாரங்களூம் அறிமுகம்.
யானைக்காரர் தான், தேரோட்டத்தின் போது தேரின் பின்னால் அமர்ந்து பெரிய முரசை அறைந்து கொண்டு வருவார்.அந்த ஒல்லியான தேகத்தில் அப்படி என்ன வலுவிருக்கும் என்று ஆச்ச்சரியமாக இருக்கும். அந்த முரசொலி கேட்டுத்தான் முன்னால் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.
சுந்தரம் பம்போடு போராடிக் கொண்டிருந்த போது யானைக் காரர் பள்ளிக் கூடத்துக்குள் வேகமாக வந்து சுந்தரம் அருகே போனார். அவர ரோட்டிலிருந்து அவ்வளவையும் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.வந்த வேகத்தில் மடியிலிருந்து நீளமான கத்தியை தோல் உறைக்குளிருந்து எடுத்து சுந்தரத்தின் கையைப் பிடித்து தோளிலிருந்து ஒரே கீறாகக் கீறினார். பாம்பு துண்டு துண்டாக கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தது.சுந்தரத்தின் கை, வெள்ளைச் சட்டையெல்லாம் ரத்தம். அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.அவர் மேலும், அவரது மல்ச் சட்டையிலும் ரத்தம்.எனக்கு பயத்தில் அநேகமாக் மூத்திரம் கசிந்து விட்டது.அவர் வாய்க்காலில் இறங்கி கத்தி, மேல் காலெல்லாம் கழுவிக் கொண்டு வந்த வேகத்திலேயே யானையை நோக்கிப் போய் விட்டார்.கோயில் பிள்ளை சாருக்கு போன உயிர் திரும்பி வந்தது.சுந்தரத்தை டாக்டரிடம் தூக்கிப் போனார்கள்.கத்தி ஒன்றும் ஆழமாகப் படவில்லை.அதனால் ஏதோ ஒரு களிம்பைத் தடவிக்கொண்டு மறு நாளே ஸ்கூலுக்கு வந்து விட்டான். பனியன் மட்டும் போட்டிருந்தான், சீனிமிட்டாய்க் (ரோஸ்)கலர் பனியன்.அன்று அவன் பக்கத்தில் உட்கார எல்லாருக்கும் போட்டி.எங்க கிளாஸ் பால்த்துரை சார் மட்டும் ஏம்ல அவரு கூப்பிட்டாருன்னு போன, `ஏ’ கிளாஸ் சார்வான்னா கொம்பால முளைச்சிருக்கு. எங்க கிளாஸ் நாலாப்பு `பி’(நான்காம் வகுப்பு `பி’).

அதே பகல் பதினோரு மணி ரீசஸ் விடற நேரம். யாரோ ஒரு பொம்பளைஆள் கிளாஸுக்கு வெளியே நிண்ணுக்கிட்டிருந்தது.பால்த்துரை சார் என்னம்மா வேணும்ன்னு கேட்டதுக்கு கூட பதில் சொல்லலை. என் பக்கத்திலிருந்த சங்கர நாராயணன் சொன்னான், அவனுக்கு சுந்தரம் தெருதான்.நாறாயணன்(இப்படித்தான் அவன் எழுதுவான்) பலே ஆசாமி. ஆள் தான் நரம்பு மாதிரி இருப்பான்.இது சுந்தரத்தோட அம்மா என்று மெதுவாகச் சொன்னான். அதற்குள் பெல் அடித்துவிட எல்லாரும் வெளியே வந்தோம். அந்த அம்மா சுந்தரத்தைக் கட்டிப் பிடிச்சு கண்ணீர் விட்டாள். ஒன்றுமே பேசிய மாதிரி தெரியவில்லை. சுந்தரம் முதலில் போ, போ என்று அவள் பிடியிலிருந்து நழுவி வந்தான்.யாரும் ஒண்ணுக்குப் போகாமல் அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தோம்.அப்புறம் அவள் தந்த காசை வாங்கிக் கொண்டான்.ஒரு சின்னப் பொட்டலமும் கொடுத்தாள். அப்பாட்ட சொல்லீராத என்று அவள் கெஞ்சினாள்.ரீஸஸ் முடிந்து பெல் அடித்தது.அவள் அழுத படியே நகர்ந்தாள். சத்தம் முழுமையாக ஓயாமல் கிளாஸ் ஆரம்பிச்சது.
சங்கரநாறாயணன் சொன்னான்.அவங்க அப்பா, அவனோட அம்மாவைத் தள்ளி வச்சிருக்காரு.ஏம்ல என்றேன்.அவளை ஒரு பெட்டிக் கடைக்காரன் கெடுத்துட்டாம்லாலே என்றான். எனக்கு புரிந்த மாதிரியும் இருந்தது புரியவும் இல்லை.சுந்தரத்தோட அப்பாவும் சின்னக் கடை வச்சிருக்காரு. அதில் இருந்துதான் சுந்தரம், எனக்கு மதுரைவீரன்-எம்ஜியார் பானுமதி- படமும் (நேரு படம் கேட்டு அது காலியாகி விட்டதென்று) நேருவும் புல்கானினும் கை குலுக்குகிற ஒரு படமும் அரையணாவுக்கு வாங்கித் தந்திருந்தான். முழுவதும் கேட்கும் முன் சத்தம் அடங்கி கிளாஸ் ஆரம்பித்து விட்டது.சுந்தரம் அருகில்தான் இருந்தான்.
பொட்டலத்தைப் பிரித்து தரையில் எதையோ தேய்த்துக் கொண்டிருந்தான்.அப்புறம் அதையே நெற்றியில் பூசிக் கொண்டான்.என்னிடமும் நாறாயணிடமும் ஏல பூசிக்கிடுங்கலே பாம்பு அண்டாது என்றான்.நான் லேசாகத் தொட்டு பூசிக் கொண்டேன். நான் கேட்கும் முன்னேயே சொன்னான். சங்கரன் கோயில் புத்து மருந்துல இது.

Sunday, December 14, 2008

காட்டுக்கேது தோட்டக்காரன்....



வேலைக்குத் தேர்வான செய்தி ஒரு வழியாகத் தெரிந்தது. ஆனால் ஒரு மாதமாகியும் ஆர்டர் கைக்கு வரவில்லை.அறுபது பேரை தேர்ந்தெடுத்ததில், முப்பது பேருக்கு முதலில் போட்டுவிட்டார்கள்.அதில் என் பெயர் வரவில்லை.மனம் வெறுத்துப் போயிற்று.இதில் வேடிக்கை என்னவென்றால் என்னைப் பார்த்து தேர்வெழுதியவர்களும்,நான் சொல்லித் தந்து தேர்வுக்குப் படித்தவர்களும், முதல் முப்பது பேரில், ஆணை கிடைத்தவர்களில், அடங்கி இருந்தார்கள். அதில் இப்போது ஒருவர் ஏ. ஜி. எம் ஆக இருக்கிறார்.அம்மா சொல்வது போல் ஆறு முழுக்கத் தண்ணி(தண்ணீர்) போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணிதான்.அம்மாவுக்கு நாய்ப் பழமொழிகளில் அப்படியொரு பிடித்தம். அதனால்த் தானோ என்னவோ என் கவிதைகளிலும் நாய் அடிக்கடி வருவதாகப் படுகிறது.சிவசு கூடச் சொல்லுவார்,. ஆர்.பி.பாஸ்கரனுக்குப் பூனை, உங்களுக்கு நாய். அவர் வரைந்து தள்ளுவார், நீங்கள் எழுதித் தள்ளுகிறீர்கள் என்று.
அப்போது ராஜ மார்த்தாண்டன் திருவனந்தபுரத்தில் ஆய்வு மாணவராக இருந்தார்.அவருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு, கையில் இருந்த இருபது ரூபாய் சொச்சக் காசை வைத்து துணிந்து திருவனந்தபுரத்துக்கு பஸ் ஏறிவிட்டேன்.அது கூட இரண்டு நாள் முந்தி சீட்டாட்டத்தில் ஜெயித்தது.சிவராத்திரி ஸ்பெஷல் ஆட்டம்.நாலணா நாக் அவுட்.மூன்று ஆட்டத்திலும் கார்டு அப்படிப் பிடித்தது.இதெ போல் சுவாமி மலையில் சுப்ரமணிய ராஜு கல்யாணத்திற்குப் போயிருந்த போதும் அப்படி கார்டுகள், அள்ள அள்ள அற்புதமாய் வந்தது, ஒரு வேளை அதே நேரம் வீட்டில் செத்துப் போயிருந்த அப்பா வானில் இருந்து அருள் மழை பொழிந்தாரோ என்னவோ. கடைசி ஆட்டத்திற்கு, பசஙளெல்லாம் போடா நான் வரலைப்பா சின்னத் தாயோளிக்கி கார்டு என்னமா அப்புது இன்னிக்கி,”ஆட்டககாரனுக்கு ரம்மியும், ஜோக்கரும் அண்ணாச்சி, அண்ணாச்சின்னுல்லா கதவைத் தட்டுது.’’நான் வரலைப்பா என்று ஒதுங்கி தூங்கப் போய்விட்டார்கள்.ஷண்முகநாதன் மட்டும்,. எண்ட்ரி டபுள், கம்பல்ஸரி கேம், ஸ்கூட்டெல்லாம் கிடையாது, ஐந்து ரூபாய், வாறியா என்றான்.அவன் ரொம்ப துணிச்சலானவன். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவன். அருமையாக கேரம் விளையாடுவான்.மேலப்பாளையம் க்ளப், பெருமாள் புரம் பி.ஆர் சி க்ளப், ஸ்பிக் டீம் எல்லாவற்றுடனும் மோதி ஜெயித்திருக்கிறான்.பேட்மிண்டனும் நன்றாக விளையாடுவான்.நன்றாக ஸுவாலஜி ரெகார்டுகளுக்குப் படம் போடுவான்.என்னைப் போலவே எல்லாக் கெட்ட பழக்கங்கங்களுக்கும் குட்டிக் குட்டியாய் அறிமுகமானவன்.`வசந்த மாளிகை’ சினிமாவில் வருகிற வசனமொன்றை அடிக்கடி சொல்லிக் கொள்வோம்.``சின்ன எஜமானர் கெட்டுப் போயிட்டாரே தவிர கெட்டவரில்லை’’ என்று எங்கள் சின்னச் சின்ன தவறுகளுக்குச் சமாதானமாய்.
எங்களுடன் ராஜாமணியும் சேர்ந்து கொண்டான்.,சீட்டு விளையாட. கார்டும், மூன்றவது ஆட்டத்திற்கும் நன்றாகவே பிடித்தது.ராஜாமணி இரண்டு ஆட்டத்திலேயே செமத்தியாக பாய்ண்ட் கொடுத்துவிட்டு, முழித்துக் கொண்டிருந்தான்.மூன்றாவது ஆட்டத்தில் அவன் உருகிப் போட்ட முதல் கார்டு ஆட்டின் ஏழு, ஜப்பான் ஆகச் சேர்ந்து டிக் ஆகி விட்டது. எனக்கு ஏழு ஆட்டின் எப்பவுமே ராசி, சீக்கிரம் அதைக் கழித்து விட மட்டேன்..அவன் சீட்டுகளைத் தூர எறிந்து விட்டு, புகைத்து எறிந்திருந்த சிகரெட் துண்டுகளில் இருப்பதிலேயே நீளமான ஒன்றைத் தேடி எடுத்து, பத்த வைத்து எங்களை வேடிக்கை பார்க்க வந்தான்.சண்முகம் நன்றாக விளையாடுபவன்.எனக்கும் சுமாரான கார்டாகவே தோன்றியது.ஆட்டம் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தால் அவனுக்கும் கார்டு நல்லதாக இல்லை என்று தோன்றியது.. இரண்டு பேருமே கைக்கார்டையெல்லாம் கலைத்து முழுதாக செட்டுகளை மாற்றி மாற்றிப் பார்த்தாயிற்று....ஆட்டம் முடிகிற பாடாயில்லை.இரண்டு பேரும் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க தூங்கிக் கொண்டிருந்த சிலர் விழித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.இரண்டு பேருக்கும் கையில் இருக்கும் சீட்டுகளைப் பார்த்தால்,இரண்டு இரண்டு பாய்ண்ட், எண்ட்ரி டபுள் என்பதால் நான்கு பாய்ண்ட், தான் இருந்தது. தூக்கக் கலக்கம் வேறு.கண்ணெல்லாம் எரிச்சல். சிகரெட், பீடி என்று குடித்து, தாகமும் பசியும்.பதினைந்து ரூபாய்க் காசுக்கு இவ்வளவு போராட்டமா என்று தோன்றியது.இரண்டு பேரும் எங்கேயோ தவறு செய்திருக்கிறோம் என்று பட்டது. ஆட்டம் எப்பவொ முடிந்திருக்கும். இருவரும் சரியாகக் கவனிக்கவில்லை என்று எல்லோருமே அபிப்ராயப் பட்டனர்.நான் தைரியமாக இரண்டு, ரெண்டு இஸ்பேடில் ஒன்றைக் கழித்தேன்.சண்முகம் அதை எடுத்துக் கொண்டு என்ன நினைத்தானோ திடீரென்று டைமண்ட் ரெண்டைக் கழித்தான். நான் சுதாரிப்பதற்குள் பார்த்துக் கொண்டிருந்த பல கைகள் படக்கென்று அதை எடுத்து என் கார்டுகளிடையே சொருகி `டிக்’ என்று கோரஸாக ஒலித்தனர்.சரியான ஃபிஸ்ஷிங், என்று பாராட்டு மழை வேறு.விளையாட்டைத் தொடர எனக்கு விருப்பமில்லை,முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ளுவோம் என்றேன்.சண்முகம் இன்னும் ஒரு ஆட்டம், நீ கலைத்துப் போடு, நான் கலைத்தால் எனக்கு ராசியே கிடையாது. என்றான்.கலைத்துப் போட்டேன். அவன் சீட்டை ஒவொன்றாக எடுக்க மாட்டான், மொத்தமாக பதிமூனு சீட்டுகளையும் எடுத்தே விரித்துப் பார்ப்பான்.அப்படி எடுப்பதும் ஒரு வகையில் அவனுக்கு ராசி.அன்று ஆர்வக் கோளாறோ என்னவோ, சீட்டை ஒவ்வொன்றாக போடப் போட எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான்.நான் கலைத்துப் போட்டுவிட்டு, என் சீட்டுகளை கையில் எடுத்தேன்.ஒரே படமாக, கிங்க், குயின், ஜாக்கி, என்று ஒரே படமாக இருந்தது.சரி பாய்ண்ட் அள்ளீட்டுப் போப்போகுது,என்று அவன் முகத்தைப் பார்த்தேன். எப்பவுமே அவன் முகத்தில் இருந்து ஒன்றையுமே கண்டு பிடிக்க முடியாது. சிலருக்கு நல்ல கார்டாக, ரம்மியும், ஏகப்பட்ட ஜோக்கருமாக வந்து எதை எங்கே சேர்ப்பது என்று திண்டாடுவார்கள். நமக்குத் தெரிந்து விடும்,``புள்ள முழிக்கிற முழி பேளறதுக்குத்தாண்டோய்’’
என்று.சத்தம் போடாமல் ஸ்கூட் விட்டு கார்டைக் கவிழ்த்தி வைத்து விடுவார்கள் பலரும். ஆனால் சண்முகம் முகத்தில் அதெல்லாம் வழக்கமாக கண்டு பிடிக்க முடியாது.இந்த முறை அவன் சற்று வேறு மாதிரியான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.சரி நாம் காலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் கார்டுகளை ஷோ என்று விரித்துக் கீழே வைத்தான்.நானும் கார்டைக் கீழே போடப் போனவன் ஏதோ உள்ளுணர்வு உந்த அவன் கார்டை, டிக் சரியா என்று பார்த்தேன.இரண்டு ஆட்டின் ஏழுகளும் ஒரு கிளாவர் ஏழும் பல்லிளித்தது வ்ராங் டிக் என்றேன்.அவன் கவிழ்த்தி வைத்த ஒற்றைக் கார்டை திருப்பிப் பார்த்தான். டைமண்ட் ஏழு. ராங் டிக் என்று ஒத்துக் கொண்டான்.எல்லாருக்கும் ஆச்சரியம் அவனா அப்படிச் செய்தது என்று. சரி விடிஞ்சுடுச்சு வா எல்லாருக்கும் பேட்டை ரோடு ஐயர் கடையில் காபி வங்கித்தா என்று சிலர் கிளம்ப, அவன் தான், சேச்சே ஜெயிச்சவன் உடனே செலவழிச்சாலோ கடன் கொடுத்தாலோ அடுத்தாப்ல கார்டு பிடிக்காது என்று தடுத்து விட்டான்.அப்போதுதான் எனக்கு திருவனந்தபுரம் போகலாம் என்ற யோசனை வலுப்பட்டது.
அதற்கு முன்னால் (கசடதபற)மஹாகணபதியுடன் ஒரு தரம் திருவனந்தபுரம் போயிருந்தேன்.அப்போதும் கையில் கல்யாணி அண்ணன் தந்து விட்டிருந்த ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. திருவனந்தபுரம் போய் இறங்கியதும் மஹாகணபதியிடம் விடாப்பிடியாகக் கேட்டு இன்னொரு ஐந்து ருபாய் வாங்கி வைத்துக் கொண்டேன்.அப்படி கேட்டு வாங்கியதன் வெட்கம் வெகு நாட்கள் வரை பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.இன்றும் கூட்.அப்போது மாதவன் அண்ணாச்சி கடை, செல்வி ஸ்டோர்ஸில் போய் அண்ணாச்சியிடம் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.அவருக்கு பூர்விகம் திருநெல்வேலிதான்.சுந்தரத் தோழர் தெருவில் அவருக்கு வேண்டியவர்கள் இன்னும் இருந்தார்கள்.அவர் தான் கடை ஆளை துணைக்கு அனுப்பி நகுலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.அன்றைக்கு ஏதோ பந்த். மத்தியானத்திற்கு மேல்த் தான் பஸ்கள் ஓட ஆரம்பித்தன.அப்போது நகுலனின் அப்பா, அம்மா எல்லோரும் இருந்தார்கள், அம்மா உடல் நலமின்றி படுக்கையில் இருந்தார். முன் வீட்டில் அவரது தம்பி குடும்பம் இருந்தது. அவருடனான முதல் சந்திப்பு அது.நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.சாயந்தரம் வாக்கில் அவரது அம்மாவை பரிசோதிக்க வந்த ஒரு டாக்டருடன் அவரது காரில் என்னை மாதவன் அண்ணாச்சி கடைக்கு அனுப்பி வைத்தார்.அண்ணாச்சி வீட்டிலிருந்து கொண்டு வந்த வேட்டியை உடுத்திக் கொண்டு பத்மனாப சாமி கோயிலுக்குப் போனேன்.கோயிலில் மின் விளக்கே இல்லாமல் பெரிய பெரிய தீபங்கள், திரி விள்ககுகளுடன் கோயில் அழகாக இருந்தது. அப்படியொருவெளிச்சத்தில் ஒரு கோயிலை நான் தமிழ் நாட்டில் பார்த்ததே இல்லை.கோயிலில் கூட்டமே இல்லை,கிட்டத்தட்ட நானும் அனந்தபத்மனாபனும் மட்டும் தான் என்று சொல்லி விடுகிற தனிமை.ரொம்ப நேரம் மூன்று வாசல் வழியாகவும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். காலடியைப் பார்த்து விட்டு மறுபடி முதல் வாயிலுக்கு வந்த போது அவன் என்னவோ புரண்டு படுப்பது போன்றிருந்தது.சற்று பயத்துடன் வெளியே வந்து விட்டேன். விஷ்ணுபுரம் படிக்கும் போது, இந்த பயம் மறுபடி வந்தது. (ஜெய மோகனுடன் திருவட்டார் கோயிலுக்கு இதே மாதிரி ஒரு சந்தியா காலத்தில் போன போதும் சற்று பயமாயும் எல்லாமே ஏற்கெனெவே ஒரு முறை நடந்து இம்மி பிசகாமல் மறுமுறை நடப்பது போலவும் இருந்தது).
இரண்டாம் முறை போகிறபோது அப்பா இல்லை. இறந்து போயிருந்தார்.நான் ஸ்ரீ பத்மனாபம் கவிதையை எழுதியிருந்தேன்.
அந்தக் கவிதையையும் கோயிலையும் நினைத்தவாறேதான் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன்.ஆனால் இந்த முறை மனதை வேறு ஆசைகள் ஆக்கிரமித்திருந்தன.அப்பா போன பிறகு வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தது. அப்பாவை நான்தான் கொன்று விட்டது போல் குற்ற உணர்ச்சி ஒரு நாளைக்கு ஒரு தரமாவது தோன்றாமலிருக்காது.படிக்கிற காலத்தில்,அதுவும் இவளின் மறு பிரவேசத்திற்குப் பின் நான் ரொம்ப சுத்தமானவனாகவே இருந்தேன்.அப்பாவின் விருப்பங்களுக்கு எதிராக நான் எம்.எஸ். ஸி படித்து அதில் தேர்ச்சியுறாமல் போனது எனக்கு நேர்ந்த பெரிய விபத்து. இதிலிருந்து என் சரிவுகள் தொட்ங்கியது.மதுரையில் என் தனிமை பலவித பழக்கங்களுக்கு காரணமாய் ஆகி விட்டது.அதற்கு ஊரைக் குறை சொல்லமுடியாது.

இரண்டாம் முறையும் .மாதவன் அண்ணாச்சி கடைக்குப் போய் மார்த்தாண்டனுக்காகக் காத்திருந்தேன்.அவர் வருவதற்கு மாலை ஆகி விட்டது,அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினோம்.அவர் என் கடிதத்தைக் கையிலேயே வைத்திருந்தார்.அதில் எழுதியிருந்த வரிகளைக் காட்டி சிரித்தபடியே வாங்க மலையாள பூமியின் அழகை, முதலில்``பருகி’’விடலாம் என்று அழைத்துப் போனார்.விரக்தியின் விளிம்பில் இருந்த நான் தாகம் தீர அருந்தத் தொடங்கினேன்.அவருக்கு இன்னும் அந்த மாத ஸ்டைஃபண்ட் வரவில்லை. யாரிடமோ கடன் வாங்கி வந்திருந்தார்.இரண்டு நாள் பொறுத்திருங்கள்...பணம் வரட்டும் என்றார்.
நீண்ட நாளைக்குப் பிறகு, துலாபாரம் படத்திற்குப் பிறகு சாரதாவும் ஷீலாவும் இணைந்து நடிக்கிற பால்க்கடல் படம் மறுநாள் ரிலீஸாகிறது.பெரிய பெரிய சாரதா போஸ்டர்களை சாலையெங்கும் பார்த்ததே போதும் என்ற மாதிரி இருந்தது..இந்த முறை கோயிலுக்கு மட்டும் போகக் கூடாது என்று தோன்றியது.மறுநாள் என்னை அறையில் இருக்க வைத்துவிட்டு அவர் யுனிவர்ஸிட்டிக்குப் போய் விட்டார்.நான் அறையிலிருந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தேன் எஸ்.வி.ஆரின் எக்ஸிஸ்டென்ஷியலிசம்-ஒரு அறிமுகம் அப்போதுதான் வந்திருந்தது. அதைப் படித்துக் கொண்டிருந்தேன்.புதுமைப் பித்தன் கதைத் தொகுப்பு ஒன்று கிடந்தது. அதையும் படித்தேன்.
மாலையில் அவர் வந்து வெளியே போனோம். நான் வாய் திறந்து கேட்கவுமில்லை. அவர் எங்கே கூட்டிப் போகிறார் என்று சொல்லவும் இல்லை.கால் போன போக்கில் நடப்பதாகவே எனக்குப் பட்டது.உள்ளூர அதற்காகவும் இருக்குமோ என்றும் தோன்றியது.தஞ்சை ப்ரகாஷ் உனக்கு எப்போதாவது பெண்ணுடன் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா என்று ஒரு முறை கேட்ட போது, அது வரை இல்லை என்றேன்.அதன் பின் உனக்கு காதல் பற்றிய கண்ணோட்டம் மாறி விடக்கூடும் என்று சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது.இதை வெளிப்படையாக கடிதத்தில் எழுதி விட்டோமோ என்று சற்று மனது உழம்பியது.அந்தத் தெருவுக்கு ஏற்கெனெவே வந்திருக்கிறோமோ என்று நினக்கத்தொடங்கும் போது அவர் ஒரு வீட்டிற்குள் விறுவிறுவென்று போனார்.குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்று ரெக்கார்ட் பிளேயர் பாடிக் கொண்டிருந்தது.நானும் அதே விரைவுடன் பின் தொடர்ந்தேன்.
சாந்தாவின் இடுப்பில் ஒரு நீளமான தழும்பு. முண்டும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள்.நல்ல சந்தன சோப்பின் மணம், சாயங்காலந்தான் குளித்திருக்க வேண்டும்.ஒரு கட்டில். .ஒரு ஸ்டூலில் ஃபேன். நிற்பதற்கே இடம் இல்லாத சிறிய அறை.கட்டிலில் சாவகாசமாகச் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கூடிப்போனால் இருபது வயதிருக்கும்.என் துயரங்களுக்கும் 26 வயது முடிஞ்சு போச்சு என்று கோகயம் பத்திரிக்கையில் அப்போதுதான் கவிதை எழுதியிருந்தேன்.
சைக்கிள் பழகும் போது கீழே விழுந்து அந்தத் தழும்பு ஏற்பட்டதாகச் சொன்னாள்.நெய்யாற்றிங்கரை ஊர்.அண்ணன் மனைவி சொல்லி, அண்ணன்தான் இந்த வீட்டில் கொண்டு வந்து விட்டான்.மாதா மாதம் இங்கே வந்து சேச்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு போவான். அந்த வாழ்க்கை குறித்து அவளுக்கு பெரிய ஆவலாதிகள் ஏதுமில்லை.அந்நேரத்திலும் அவள் பரபரப்பு ஏதுமில்லாமல் இருந்தாள்.என் பரபரப்பை அடங்க வைத்துக் கொண்டிருந்தாள், சாவகாசமான பேச்சின் மூலம். இரவு முழுக்க ஒரு ஆளுடன் மட்டும் என்பதால் வந்த நிம்மதியோ என்று தோன்றியது.
.பால்க் கடல் பற்றிப் பேச்சு வந்தது. `பார்த்தோ’ என்று ஆசையாய்க் கேட்டாள். இல்லை என்றேன்.அவளுக்கு சாரதாவெல்லாம் பிடிக்காது. அவள் அடுத்த தலை முறை. ஷீலாம்மை பிடிக்கும் ஸ்ரீவித்யா பிடிக்கும் என்றாள். செம்மீன் பாட்டை முனுமுனுத்தாள். நான், நதி படம் பர்த்திருக்கிறாயா என்று கேட்டேன். தனக்கு ரொம்ப பிடித்த படம் என்றாள். ``பஞ்சதந்ரம் கதையிலே , பஞ்சவர்ணக் குழலிலே மாணிக்யப் பைங்கிளி மானம் பறக்குந்ந வானம்பாடியெ ஸ்நேகிச்சு-ஒரு வானம்பாடியெ ஸ்நேகிச்சு’’.என்று அழகான குரலில் படினாள். பகீரென்றது குரலைக் கேட்டதும். ``நித்ய விசுத்தமாம் கன்ய மரியமெ, நின்னாமம் வாழ்த்தப் பெறெட்டே....’’ என்று ஜேசுதாஸைப் பாடினாள்.அதைவிட அந்த நஸீர் பாடுகிற முதல்ப்பாடல் நல்லாயியிருக்குமே என்றதும் உற்சாகம் கொப்பளிக்க, ``காயாம் பூ கண்ணில் விடரும், கமலதளம் கவிளில் விடரும்... என்று என் கன்னத்தைக் கிள்ளினாள். கவிளில் என்றால் கன்னமோ என்று கேட்டதும், ஓம், நிங்கள் மலையாளம் அறியுமோ என்றாள்.நான் படுத்திருந்த அவள் வயிற்றில், தினமும் எழுதிப் பார்க்கிற இரண்டெழுத்தை மலையாளத்தில், விரலால் எழுதினேன். அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் எழுதியபின் `ச’- வை மட்டும் கண்டு பிடித்தாள். சரி விடு சாரே, என்று மறுபடி ஜேசு தாஸை பாடத்தொடங்கினாள்...ஓரிடத்து ஜனனம், ஓரிடத்து மரணம்,,,,, என்று. நான் ஓமனத்திஙகளினு ஓணம் பிறக்கும் போழ் தாமரக் கும்பிளில் பனி நீரு..பாட்டை எடுத்துக் கொடுத்தேன். அவள் கட கடவென்று சிரித்தாள்...தமிழ்ல்ல மொழி மாற்றஞ் செஞ்சதையாக்கும் சார் பாடறது...என்று.அப்படியெங்கில் இதுதானாக்கும் நல்ல பாட்டு என்று ’’ தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..’’ என்று மலையாளத்தில் பாடினாள்.`அவள் ஒரு தொடர் கதை’ அப்பத்தான் மலையாளத்தில் டப் செய்து வந்திருந்தது.. அது நல்ல படமென்றாள்.அவள் அந்த வீட்டிலுள்ள தோழி மாரோட அந்தப் படத்தை இரண்டு நாள் முன்புதான் பார்த்ததாகச் சொல்லிக் கொண்டிருந்த போது கதவை பட பட வென்று யாரோ தட்டினார்கள். .போலீஸ் ரைடு வருவதாக அவளிடம் சொன்னார்கள்.என்னை உடனே கிளம்பும் படி, நாங்கள் உள்ளே வரும் போது முன் கூடத்தில் உட்கார்ந்திருந்த(பெங்களூர்
ரமணி அம்மாள்),சேச்சி சொன்னாள்.நான் இது ஏமாற்று என்று கத்தினேன்..திரிச்சு நாளை வரூ என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.வேணெங்கில் எங்கெயும் லாட்ஜுக்கு போகலாமா என்று கேட்டாள்.
வேண்டாம் பணத்தை திரும்பக் கொடுங்கள். என்றேன்.அவளிடம் தந்திருந்த ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினாள். நான் மறுத்து விட்டுக் கிளம்பினேன்.ஒருவன் பின்னாலேயே வந்து இந்தா பாதிப் பணம் என்று கொடுத்தான்.நூறு ரூபாய். வழி கேட்டு, வழி கேட்டு அறைக்கு வந்தபோது மார்த்தாண்டன் என்ன ஆச்சு என்று விசாரித்தார்.பணத்தை அவரிடம் கொடுத்தேன்.
சரி வாருங்கள் என்று அருகேயே இருந்த நல்ல பார் ஒன்றுக்குள் கூட்டிப் போனார்.நீண்ட நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தோம்.நினைவு தப்பி மிதப்பு ஆரம்பித்தது. மார்த்தாண்டன் எனக்கு வேற இடம் தெரியாதே என்றே சொல்லிக் கொண்டிருந்தார் சாந்தாவின் சந்தன சோப் மணமும், இடுப்புத் தழும்பும், மதுக் கூடத்தின் ஆல்கஹால் சூழலை மீறி நினைவில் வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக படுக்கையில் `சயனித்த கோலத்தில்’ பாடிக் கொண்டிருந்த அவளின் குரல்த் தொடர்ச்சி...
``காட்டுக்கேது தோட்டக்காரன், இதுதான் என் கட்சி....’என்று என்னை,என் சுதந்திரத்தை கிண்டல் செய்வது போலிருந்தது.பிரகாஷின் வார்த்தைகள் பொய்த்துக் கொண்டிருந்தது.குடித்தால், வழக்கமாக வருகிற முகம் மூளை முழுக்க விரியத்தொடங்கியது.

Sunday, December 7, 2008

ஆயிரம் வாசல் இதயம்.....


அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்..அப்பா இறந்து போய், பெரிய வீட்டை விற்று விட்டு எதிரே இருந்த மங்களா வீட்டிற்கு குடி பெயந்திருந்தோம்.மங்களா வீடு என்பது பொதுவாக பெரிய, பண்னையார் வீடுகளில் ப்ண்ணையாரின் அலுவலகம் மாதிரி.பண்ணையின் கணக்கு வழக்குகளைப் பார்ர்க்கிறவர்கள் பகலில் அங்கே இருப்பார்கள்.பண்ணையாரைப் பார்க்க வருகிறவர்கள் அங்கேதான் பார்க்க வேண்டும்.பொதுவாக அந்த வீடு.. ஒரு வித குளுமையுடன் இருக்கும். சேரகுளம் பெரிய பண்ணையார் சண்முகவேலாயுதம் பிள்ளை வீட்டில், மங்களா, தெருவை ஒட்டி இருக்கும்.அதன் வழு வழு வென்ற சிமெண்ட் தரையும் நாயக்கர் மஹால் மாதிரி பெரிய தூண்களுடனான தார்சாலும் (தாழ்வாரம் !) எந்த வேனல்க் காலத்திலும் வெயிலே தோணாத மாதிரி குளுமையாய் இருக்கும்.அப்பாவும் சேரகுளம் சின்னப் பண்ணையார் தான்.ஆனால் பேர்தான் பண்ணையார்.மற்றபடி நான் பார்க்க எல்லாமே வெறும் பெருங்காய டப்பா வாழ்க்கைதான்.சேரகுளம் ஊரின் அருள் தரும் நித்யகல்யாணி உடனுறை அருள்மிகு சோமசுந்தரர் திருக் கோயிலில் ஏதோ ஒரு நித்திய கட்டளைக்கு பணம் வாங்க ஒரு ஒல்லியான ஐயர் வந்து ஐந்தோ பத்தோ வாங்கிப் போவார்.மற்றபடிபண்ணைக்கும் அவருக்கும் எனக்குத் தெரிந்து எந்த சம்பந்தமும் கிடையாது, யாரும் வருவதுமில்லை.எங்கள் மங்களா வீடு அப்படி யொன்றும் குளிர்ச்சியாகவோ பிரம்மாண்டமாகவோ இருக்காது.அதில் சிறிய குடும்பமாக யாராவது வாடகைக்கு இருப்பார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய், குளத்து ஐயர் இருந்தார்.அவர் பையன் சங்கரன் என் கிளாஸ் மேட்.அவர் வங்கியொன்றில் வேலை பார்த்தார்.ஐயர் அவனை என்னுடன் அதிகம் சேர விடமாட்டார்.அவர்களுமே, நாங்கள் இரண்டு மாதம் வெளியூர் போயிருந்த போது வீட்டைக் காலி செய்து பெரிய பண்ணையாருக்குச் சொந்தமான, யாருக்குமே வாடகைக்குத் தராத ஒரு வீட்டிற்கு மாற்றிக் குடி போய்விட்டார்கள்.அதற்கு ஏதோ ரகசியமான காரணமொன்றிருப்பது போல் அப்பாவிடம் அவரது சினேகிதர் ஒருவர் நாங்கள் ஊர் போய்த் திரும்பி வந்ததும் குசு குசுத்துக் கொண்டிருந்தார் நாந்தான் பெரியவர்கள் பேசும் போது அருகில் போவதேயில்லையே.(!)நான் சங்கரனைத் தேடி அவன் புதிய வீட்டிற்கு, அது வடக்கு வாசல் காம்பவுண்டில் இருந்தது,போன போது மாமி, வாடா அம்பி என்று கதவைத் திறக்க வந்தவளை, ஐயர் சத்தம் போட்டு தடுத்து விட்டார். அவன் படிச்சுட்டு இருக்கான், போ, சாயந்தரமா விளையாட வருவான் என்றார்.சற்று அம்மந்தழும்பு விழுந்த (அம்மை வார்த்த) முகமென்றாலும் மாமி களையான முகத்துடனும் அப்படி ஒரு நிறத்துடனும் இருப்பாள்.கொஞ்ச காலத்தில் அவர் மதுரைக்கு மாறுதலாகிப் போய்விட்டார் நாங்கள் மதுரையில் சித்திரைத் திருவிழா பார்க்கப் போன போது, மிட்லண்ட் ஹோட்டலுக்கு எதிரேயுள்ள, அப்போது அது மிக பிரபலமான பெரிய ஹோட்டல்,பூக்காரச் சந்தில் குடிய்ருந்தார்கள்.

சந்திரா டாக்கீஸ் அருகே அப்பாவின் நண்பரும் உறவினருமான ராஜு அண்ணாச்சி வீட்டில் நாங்கள் தங்கி இருந்தோம். அவர் ஆள், மைனர் மாதிரி இருப்பார்.அவரது மனைவி இறந்து இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தார்.அவரது மூத்த மனைவியின் பிள்ளைகளை அந்த அம்மா கொடுமைப் படுத்துவதைப் பார்க்க சகிக்காமல் நானெல்லாம் பயத்தில் இருந்தேன்.திருவிழா முடிந்து ஊர் திரும்புகிறதுக்கு முந்தினநாள். அதில் ஒரு பையனை அப்பா, ஊருக்கு எங்களுடன் வந்து விடுகிறாயா என்று கேட்டார்..அவன் அழுததைப் பார்த்து எனக்கு அழுகை வந்து விட்டது.அப்பாவிடம் சங்கரன் வீட்டிற்குப் போய் விடலாமா என்று கேட்ட நினைவு.
கொஞ்ச நேரத்தில் சங்கரன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம்.இரண்டு மூன்று பூக்காரச் சந்துகள் இருந்தது.நாங்கள் வந்ததை ஐயர் விரும்பவில்லை மாதிரி தெரிந்தது.எங்கள் கூட ராசு அண்ணாச்சியும் வந்திருந்தார்... அது வேறு சுத்தமாக ஐயருக்குப் பிடிக்கவில்லை.மாமி ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற பிரியத்துடன் உபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாள்.அப்போதெல்லாம் நான் தான் வகுப்பில் முதலாவது வருவேன். சங்கரன் சுமாராகப் படிப்பான். அதனால் மாமி என்னிடம் சற்று அன்பாகவே இருந்த மாதிரி நினைவு.மாமி சற்று தளர்ந்திருந்த மாதிரி இருந்தாள்.எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த போது சங்கரன் தவிர இன்னொரு பெண் குழந்தை இருந்தது.இப்போது மூன்றாவதாக காந்திமதி என்றொரு குழந்தை பிறந்திருந்தது.அது அச்சசல் ஐயரைப் போலவே இடுங்கிய கணகளுடன் இருந்தது.ஐயரை நாங்கள் `காக்கா கண்’ என்று கேலி செய்வோம்.எப்போதும் ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டேதான் பேசுவார்.
ஆள் நல்லா குண்டாக கொஞ்சம் குள்ளமாக இருப்பார்.சாயந்தரம் வேலை விட்டு வந்தால் பேண்ட். சட்டையெல்லாம் மாற்றி விட்டு வேஷ்டி, சட்டை காஸ்ட்யூமிற்கு மாறி விடுவார்.ஒரு பாத ரஸம் பூசிய பள பள கண்ணாடி அணிந்து கொண்டு வெளியே கிளம்பி விடுவார்.அப்பா, அப்பாவின் நண்பர்கள் உட்கார்ந்து பேசுகிற தெருக் கச்சேரியிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டார்.பொதுவாக அவர்களுடன் வெளியேயும் போக மாட்டார்.அவர் எப்போதாவது அப்படி அவர்களுடன் போனார் என்றால் பொருட்காட்சி அல்லது ஏதாவது குஸ்தி மாதிரி தான் இருக்கும்.ஒரு முறை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடை பெற்றுக் கொண்டிருந்த குஸ்திக்கு அப்பாவுடன் வந்தார்.
இந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அப்பாவுக்குத்தான் டிக்கெட் கிடைக்கும்..பொருட் காட்சியில் நடை பெறும் நாடகங்களுக்கு அப்பா சீஸன் டிக்கெட் வாங்கி இருப்பார்.தலையில் கட்டி விடுவார் சேர்மன் பா.ரா.(இவர் தான் மணிக்கொடி பத்திரிக்கையின் கடைசிக்க்கால ஆசிரியர்).எல்லா நாடகங்களுக்கும் அப்பா போக மாட்டார். எம் ஆர். ராதா . எம் ஜி ஆர் நாடகங்களுக்குப் போக மாட்டார்.ஒருசமயம் மட்டும் எனது நடுவுள்ள அண்ணன் மீனாட்சி சுந்தரத்துடன் எம் ஜி ஆரின் அட்வகேட் அமரன் நாடகம் போனேன். இன்பக்கனவு நாடக டிக்கெட்டைக் கேட்கும் படி அண்ணன் என்னை தூண்டி விட்டான். அந்த டிக்கெட்டை தரவில்லை. அதற்கு முந்தின நாள் நாடகமான அட்வகேட் அமரன் டிக்கெட்டை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தார்.நாடகத்தை சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை. முன்னால் இருக்கிறவர்கள் மறைத்தார்கள்.எழுந்து நின்றால் பின்னால் இருப்பவர்கள் உடகாரு என்று சத்தம் போட்டார்கள்.இன்பக் கனவு நாடகம் தான் பிரமாதமாக இருக்கும் என்று வாசமுத்து சொல்லுவான்.எனக்கு நாடகம் பார்ப்பது கூட முக்கியமில்லை. எம் ஜி ஆரை பார்க்க வேண்டும்.எல்லாவற்றிலும் முக்கியம் நாடக டிக்கெட், பாதி கிழித்தது வேண்டும்.அதை மறுநாள் வாசமுத்துவிடம் காண்பித்து பீற்றிக் கொள்ள வேண்டும். நாடகத்தில் எம் ஜி ஆர் இறந்து போவார் என்று நினைவு..இரண்டு மூன்று வருடம் கழித்து அண்ணா (கதை) வசனம் எழுதி வெளிவந்த `நல்லவன் வாழ்வான்’ படம் இந்தக் கதைதான்.ஆனால் அதில் எம் ஜி ஆர் சாக மாட்டார்.படப் பெயரிலேயே அது வந்து விடுகிறதே.நாங்கள் போன அன்று தாராசிங்கும் ரந்தாவா பயில்வானும் குஸ்திபோட்டர்கள்.தாராசிங் தான் ஜெயித்தார்.மறு நாள் கிங்காக் கிற்கும் தாரா வுக்கும் `காட்டா குஸ்தி, போட்டா போட்டி’ என்று அறிவித்தார்கள்.அன்று குஸ்தி முடிந்து திரும்பிவரும்போது ஐயர் அப்பாவிடம் பண்ணையாரே நாளைக்கு டிக்கெட் கிடைச்சா பாரும் வே, என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்ப, நானும் வருவேன் என்ற போது, .போடா நீங்கள்ளாம் பார்த்தாக்க பயப்படுவேள் என்று என்னிடம் சொன்னார்.
. ஐயரின் இரண்டாவது குழந்தை யார் ஜாடையிலோ இருந்தது பிடிபடவேயில்லை.எங்கள் வீட்டின் மற்ற பெண்களும் இது பற்றி ரகஸ்யமாகப் பேசிக் கொள்வார்கள்.தீர்க்கமான கண், மூக்கு, ஒல்லியான உடல் வாகு.இப்போது அந்தப் பெண் நன்றாக வளர்ந்திருந்தாள்.இங்கே இருக்கும் போது கைக்குழந்தையை விடச் சற்றுப் பெரியவள்.அவளும் இன்னும் மெலிவாக அவ்வப்போது இருமியபடி இருந்தாள்.நாங்கள் போனதுமே மாமி அவசர அவசரமாக ஃபில்ட்டரில் டிக்காக்‌ஷன் தயாரிக்கிற வாசனை பிரமாதமாக வந்தது.
ஊரில் நான் பள்ளிக் கூடம் போகாத நாட்களில் பார்த்திருக்கிறேன். காலை பதினோரு மணி வாக்கில் அப்பா எதிர் வீட்டு (மங்களா வீட்டு)த் திண்ணையில் அமர்ந்து மாமி போட்டுத் தருகிற ஃபில்ட்டர் காஃபியை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.அல்லது மாமி வார்த்துத் தருகிற தோசையை அடுப்படியில் அமர்ந்து சாப்பிடுவார்.அப்போது நான் அப்பாவுடன் இருந்தால் அக்காவோ அம்மாவோ என்னை எதற்கோ வேலையாய்க் கூப்பிடுகிறமாதிரி கூப்பிட்டு விடுவார்கள்.மாமி வீட்டில் சமையல் எல்லாமே குமுட்டி அடுப்பில்தான்.இரண்டு மூன்று சைசில் அடுப்பு இருக்கும்.மாமி குமுட்டி அடுப்பை அவ்வளவு சீக்கிரம், சுலபமாய்ப் பற்ற வைப்பதே எங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பொறாமையாய் இருக்கும். அதெப்படி மாமி நாங்க கரியைப் போட்டு வீசு வீசுன்னு வீசினாலும் சரி, குழலை வச்சு ஊதினாலும் சரி, பத்த வைக்கவே நேரம் சரியாயிருக்கு.. நீங்க அதுக்குள்ள சமையலையே முடிச்சுருதீங்க.. என்று கேட்டால் அதெல்லாம் இல்லடீ கொழந்தே நாங்க இதிலேயே பழகிட்டோம் என்பாள். மாமி சதுர்த்திக்கு
மோதகம் செய்தால்., மாவு தகடு போல, அவ்வளவு மெல்லிசாக இருக்கும்.பூரணமும் ஏலக்காய் மணத்தோடு ருசியாய் இருக்கும். பாகு சரியான பதத்தில் இருக்கும்.முருகியும் போயிருக்காது, பச்சைச் சர்க்கரை (வெல்லம்) வாசனையும் இருக்காது.ஆனால் மாமிக்கு கூட்டாஞ்சோறு மட்டும் வரவே வராது.கொடுத்தாலும் கொடுத்தவர் நிற்கிற போது ருசி பார்த்துப் புகழ்வதோடு சரி. முழுதும் சாப்பிட மாட்டாள்.அதை அப்படியே வேலைக்காரியிடம் ரகசியமாகக் கொடுத்து விட்டு விடுவாள்.இது தெரிய வந்த போது அம்மா அப்பாவிடம், நீங்க அங்க போய் வெக்கமில்லாம் வட்டச் சம்மணம் போட்டு தின்னுட்டு வாங்க,என்று சத்தம் போட்டாள்.அதற்குச் சில மாதங்கள் கழித்துத் தான் வீடு மாற்றிப் போனதும் நிகழ்ந்தது.அம்மா அப்பாவிடம் அதிர்ந்து கூடப் பேச மாட்டாள்.இதைக் கூட சற்று மெதுவாய்த்தான் சொன்னாள்.அவளுக்கு எப்பவுமே``நாசியால போற சீவனை ஏன் கோடாலியால வெட்டணும்’’ ங்கிற சொலவடை. தான் வாழ்க்கையே.அவள் எவ்வளவோ சொத்துக்களை அப்பாவிடம் கொடுத்து, எல்லாவற்றையும் எல்லாரும் தின்றே தீர்த்த நிலையிலும் சத்தமின்றி சகித்துக் கொண்டவள்.பிற்காலத்தில் என் ஏச்சு பேச்சுகளையும்.
இன்றும் மாமி தோசை வார்க்கட்டா பண்ணையாரே என்று கேட்டாள்...எனக்கும் மெல்லிசு தோசை, கரி அடுப்பில் வார்த்த தோசை, சாப்பிட ஆசையாய் இருந்தது. சரி மாமி என்றேன் நான். என்னுடன் வந்திருந்த என் சின்ன அக்கா, என்னை விட ரெண்டு வயசு தான் மூத்தவள், அவளுக்கு .என்ன தெரிந்திருந்ததோ, சும்மா இருலே என்று சத்தமில்லாமல் அடக்கினாள்.ஐயரின் நிலை கொள்ளாமையும்,அக்காவின் கண்டிப்பும் ஏதேது திரும்பவும் ராசு அண்ணாச்சி வீட்டுக்கே போகனுன்னு ஆயிருமோ என்று தோன்றியது.அப்படித்தான் ஆனது. காபியைக் குடித்துவிட்டு, சங்கரன் வாங்கி வந்திருந்த காரா பூந்தியை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். வழியில் அப்பாவும் ராசு அண்ணாச்சியும் ஏதோ பேசிக் கொண்டு வந்தார்கள்.அநேகமாய் மாமியின் உடல் நிலை பற்றித்தான் என்று நினைக்கிறேன்.அப்பா அதிகம் பேசவில்லை.ராசு அண்ணாச்சி தான் பேசிய படி வந்தார்.ஐயரின் தவிப்பை கிண்டல் செய்கிற மாதிரி சிரித்துப் பேசிக் கொண்டு வந்தார்.
எப்படியோ அந்த இரவை அவர் வீட்டிலேயே கழித்து விட்டு.அதி காலையில் கிளம்பி ஒரு ரிக்‌ஷாவில் ஏறி ரயிலுக்கு வந்தோம்.கூடவே ராசு அண்ணாச்சியின் மூத்த பையன் வந்தான்.அவன் கையில் அப்பா ஐந்து ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்தார்.அவன் அவசர அவசரமாக மறுத்தான். வழியில் திறந்திருந்த ஒரு ஓட்டலுக்கு முன் நிறுத்தி, ரிக்‌ஷாக் காரரை ஒரு காபி சாப்பிடச் சொல்லிவிட்டு நாங்கள் உள்ளே போனோம்.ரயிலில் சாப்பிட அப்பா பார்சல் வாங்கினார்.கல்லா அருகில் நின்றவாறே ஆர்டர் கொடுத்தார். அதிகமாய் இரண்டு பார்சல் வாங்கி இரண்டையும்,கைலாசத்திடம்,(ராசு அண்ணாச்சி பையன்) கொடுத்தார்.அவன் அதை அவசரமாக வாங்கி அங்கேயே தரையில் உட்கார்ந்து பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.ஓட்டல் காரர், தம்பி அந்த டேபிள்ல்ல உக்காந்து சாப்பிடப்பா என்று பதட்டமாகச் சொன்னார்.அவன் கொஞ்சம் சாப்பிட்டதை, சுருட்டி எடுத்து பக்கத்தில் கிடந்த டேபிளில் வைத்து மறுபடி சாப்பிட ஆரம்பித்தான். ஓட்டல்காரர் பெல் அடித்து சப்ளையரை கூப்ப்பிட்டு சாம்பார் விடச் சொன்னார். கையும் வாயும் பொறுக்காத சூடான சாம்பாரைச் சேர்த்து இட்லியை அவன் சாப்பிட்ட விதம் என்னவோ போலிருந்தது. இப்போது அக்காவின் முறை, அவள் அழுது கொண்டிருந்தாள்.சாப்பிட்டுவிட்டு, கை கழுவ முயற்சிக்காமல் கைலாசம் இன்னொரு பார்சலையும் அப்பாவையும் பார்த்தான்.அப்பா சாப்பிடப்பா, என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து நீயும் அவன் கூட சாப்பிடுதியா என்று கேட்டார்.எனக்கு சாம்பார் ஆசையில் சரியென்றேன். அக்கா சும்மாருல, எதையாவது தின்னுட்டு எருவிக்கிட்டுக் கிடக்காத என்றாள். ரிக்‌ஷாக் காரனும் ரயிலுக்கு நேரமாயிரும் என்றான்.ஏத்தத்துல மிதிக்க கஷ்டம் சாமின்னான்,. அப்பா இன்னொரு செட் இட்லிக்கு காசு கொடுத்துவிட்டு., கைலாசத்திடம் நல்லாப் படி என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ரயிலடியில் பழனியும் அவன் அப்பாவும் நின்று கொண்டிருந்தர்கள்..அவர்களும் சித்திரைத் திருவிழாவுக்கு வந்தவர்கள்தான். உண்மையில், பழனி மதுரை போகிறான் என்று தெரிந்து, அப்பாவிடம் அடம் பிடித்தே நானும் வந்திருந்தேன்.அவன் அவனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தான்..அப்பா தலையைப் பார்த்ததும், அவன் அப்பா யோவ் நேத்து குளத்து ஐயர் வீட்டுக்கு வந்தேராம, அடுத்த வீடுதான எம் மருமக வீடு. என்று சொல்லி விட்டு அப்பாவைத் தனியே அழைத்துப் போனார் நாங்கள் ரயிலில் ஏறி உட்கார்ந்து திருவிழா பற்றி, பெரும்பாலும் தாங்க முடியாத கூட்டம் பற்றிப் பேசத்தொடங்கினோம். ரயில் புறப்படும் சமயம் அப்பாவும் அப்பாவும் ஏறிக்கொண்டார்கள். அப்பா முகம் கல்லுப் போல் இருந்தது.அமீனாப் பிள்ளை முகத்தில் ஒரு கேலி இருந்தது.
அப்பா இறக்கும் முன்னேயே பெரிய வீட்டை விலை பேசி விற்று விட்டார். பாதித் தொகையை கடனுக்கு செல்லடித்துக் கொடுத்தது போக மிஞ்சியது மங்களா வீடும் அதற்குப் பின்னால் சில குச்சு வீடுகளும் தான்..ஆனால் மங்களா வீட்டில் குடியேறும் முன்பே, அப்பா பெரிய வீட்டிலேயே இறந்து போனார்.நாங்கள் சிறிய வீட்டிற்குக் குடியேறினோம். மாமி குடியிருந்த வீடு. அந்த அடுப்படியில் அம்மா ஈர விறகுடன் தினமும் போராடத் தொடங்கியிருந்தாள்.பெரிய வீட்டின் மாடியில் மாட்டியிருந்த பெரிய, பெரிய ஃப்ரேம் போட்ட படங்கள் எல்லாம் வீட்டை அடைத்துக் கொண்டிருந்தன. ரவி வர்மா படங்கள்., கண்ணன் ராச லீலா படங்கள்.இதில் கண்ணன் பல உருவங்கள் எடுத்து. பல் கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.ஜெர்மனியில் பிரிண்ட் போட்ட படம். யாரோ வட இந்திய ஒவியனின் கை வண்ணம். ரொம்ப நாளாகப் பெயர் நினைவிருந்தது. அப்பாத் தாத்தா, அப்பாச்சியின் லைஃப் சைஸ் படங்கள் எஸ். எம். பண்டிட் வரைந்த சரஸ்வதி படம்(பண்டிட்டே வரைந்த ஒரிஜினல் டிராயிங் கோயில்பட்டியில் தம்பி மாரீஸிடம் இருக்கிறது.) என்று ஏகப்பட்ட படங்கள்.எல்லாம் இந்தச் சிறிய வீட்டில் மாட்ட இடமில்லாமல் பட்டாசலில் அடைத்துக் கிடந்தது.ஒரெயொரு சின்ன,-சசிகலா ஜாடையில் இருக்கிற- சாரதா (நடிகை சாரதா) படத்தை மாடியில் என் மேஜை அருகே மாட்டி வைத்திருந்ததை இந்த வீட்டிலும் மாட்டி வைத்திருந்தேன்.அதுவும் கூட அட்டையில் ஒட்டி கண்ணாடித்தாள் சுற்றியது.
கொஞ்ச நாள் ஆக ஆக படங்களின் எண்ணீக்கை குறையத்தொடங்கியது.படங்கள் கூட ஒன்றிரண்டு இருந்தது. .ஃப்ரேம், கண்ணாடிகள்.எல்லாம் காணாமல் போகத்தொடங்கியது.. இது பெரிய அண்ணனின் வேலையாய்த்தான் இருக்கும் என்று அவனை சத்தம் போடத் துவங்கிய போது அழுகையுடன் அம்மா வந்து நான் தான் கடையில் போடச் சொன்னேன். அரிசி வாங்கக் கூட காசில்லை.. என்றாள்.நான் தினமும் 3.ரூபாய்30பைசா ஈ.டி(டெலிபோன் டிபார்ட்மெண்டில்-எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் கூலி வேலை) வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நேரம். அது என் சிகரெட்டுக்கே காணாது. பல நல்ல படங்கள் போய் விட்டன.
அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்.வேலைக்கு போய் வந்த ஒரு சாயந்தரம்,காலையில் நீ போனப்பறம் குளத்து ஐயர் மகன் வந்திருந்தான்.அவன் அம்மா கேன்சர் வந்து செத்துப் போய் விட்டாளாம்.தங்கை காந்திமதிக்கு கல்யாணம் வைத்திருக்கிறதாம்.அவன் அய்யரின் வங்கியிலேயே வேலை கிடைத்து, மதுரைக்கு பக்கத்தில் வேலை பார்க்கிறானாம்.அதைச் சொல்லுகையில் அம்மா அழுதாள்.சரி எதுக்கு வந்தானாம் என்று கேட்டேன். அவனுடைய அம்மா படம் ஒன்று கூட இல்லையாம்.இங்கே இருக்கிறதா, அக்காவுடன், அம்மாவுடன் பொருட் காட்சியில் எடுத்த போட்டோ ஏதாவது இருக்கா என்று கேட்டானாம்.அப்படி ஒரு பொருட்காட்சியில் எடுத்த போட்டோககள் பல இருந்தன. லைட் ஹவுஸ் ஸ்டுடியோ காதர் பாய் அப்பாவுக்கு சினேகம். அவர் பொருட்காட்சியில் எப்படியும் ஸ்டால் போடுவார்.சும்மா எட்டிப்பார்க்கிற சாக்கில் நிறய படம் எடுத்து விடுவோம். அப்படி யொரு பொருட்காட்சியில் மாமி, அக்கா, எல்லாம் எடுத்த படம் உண்டுதான்.அப்பா கூட ஐயரின் சாதாரணக் கண்ணாடியை மாட்டி ஒரு போட்டோ எடுத்தார் அன்று. நான் தூக்கக் கலக்கத்தில் இருந்தேன் அதுதான் அப்பாவின் ஒரே படமாக வீட்டில் இருக்கிறது.கண்ணாடி யெல்லாம் கழற்றி விற்ற பிறகு ராம பாணப் பூச்சி அரித்ததால் அங்கங்கே சற்று வெள்ளை விழுந்த அப்பாத்தாத்தா படம் ஒன்றிருந்தது.படம் இருந்தா கொடுத்திர வேண்டியதுதானே என்றேன்.செல்லம்மா,அப்பாவுடனும் ஐயர் கூடவும் எடுத்த படம் ஒன்னு தான் அப்பா பெட்டியில இருக்கு என்றாள். அப்பா தன் காலத்திலேயே தன் அழகான பீரோ, இரும்பு பெட்டி எல்லாம் விற்ற பிறகு. தன் `ஆஸ்திகளை’ ஒரு சின்ன டிரங்குப் பெட்டியில் வைத்திருந்தார்.அதில் தான் அந்த போட்டோவும் இருந்தது.அப்பா ஐயர், நடுவில் மாமி.அது வரை நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை.அம்மா அழுகைக்கிடையே சொன்னாள்.இதக் கொடுக்க வேண்டாம்ப்பா. உனக்கு வேணுமா என்றேன். வேண்டாம் என்றாள். கிழிச்சுரட்டா என்றேன். சரிஎன்றாள்.படம், அது ஒட்டியிருந்த மவுண்ட் எல்லாவற்றையும் கிழித்து அம்மாவிடம் கொடுத்தேன்.அம்மா அடுப்படிக்கு நகர்ந்தாள். .கிழித்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.வாசலில் நிழலாடியது.கல்யாணியண்ணன், நம்பி, லயனலுடன், வந்து கொண்டிருந்தார். வர வேண்டாமே என்றிருந்தது.

Sunday, November 30, 2008

அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது....

பத்துப் பதினைந்து வீடுகள் சேர்ந்தாற் போல் இருக்கும். காம்பவுண்ட், வளவு, வளசல் என்று சொல்லுவார்கள்.வளைவு என்பது வளவாக ஆகியிருக்கும்.. ஏழு வீட்டு வளவு, வடக்கு வாசல்க் காம்பவுண்ட், என்று தெருவில் நிறைய உண்டு.தெற்குப் புதுத்தெரு, அரசடிப்பாலத் தெருக்களில் பத்துக்குடி, எட்டுக்குடி என்று உண்டு.நகரத்தின் இதயம் இதுதான். சினிமாக் கொட்டகையிலும், தேரோட்டத்துக்கும், ரேஷன் கடைக்கும், ஓட்டுச் சாவடியிலும் சேரும் கூட்டம் இங்கிருந்துதான் புறப்படுகிறது.நாள் பூராவும் தென்காசிப் பிள்ளை பலசரக்குக் கடையிலோ துணிக்கடையிலோ கால் கடுக்க நின்றபடி கேட்போருக்கெல்லாம்
பொட்டலம் மடித்துக் கொடுத்தோ, துணி அளந்து கிழித்துக் கொடுத்தோ,அத்து அசந்து ராத்திரி பத்து மணி வாக்கில் வளவு சேர்ந்து, தங்கள் குச்சு வீட்டின் கதவை தட்டோ தட்டு என்று தட்டியோ அல்லது, காசு பண்டம்,.பொருள்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் குழந்தை, மனைவியிடம் வெறுங்கையுடன் வந்து கையாலாகாத் தனத்தின் எரிச்சலைக் காட்டுகிற குமாஸ்தாக்கள் அப்போதெல்லாம் டாஸ்மாக் போய் வருவதில்லை.அதிகம் போனால் கல்லூர்ப் பிள்ளை கிளப்புக் கடை மாதிரி ஏதாவதொன்றில் நாலைந்து இட்லி, ஒரு காராவடை(அதுவும் நேரமானால் கிடைக்காது, மூக்க பிள்ளை கடையென்றால் ஒரு சுக்கு வெண்ணி அடிஷனல்.)அவசரமாகப் பிய்த்து வாயில்போட்டுவிட்டு செகண்ட் ஷோ சினிமா போறது மட்டும்தான்.


மாடியில் தெருவை ஒட்டிய அறை. அதுதான் நான் படிக்கும் அறை. அங்கிருந்து தெருவை நன்றாகப் பார்க்கலாம்.நடுப் பகலில்
நங்கையார் தெருவின் அடி பைப்பில் குளித்துக்கொண்டிருப்பாள்.தெருப் பம்பை ஒட்டி நீளமான திண்ணை உண்டு.ராத்திரி ஒன்பது மணி வரை அப்பா,மற்றும் அப்பாவின் நண்பர்கள், தங்கள் ஈஸிச் சேர் சகிதமாய் வந்து, ஏற்கெனெவே, சாயந்தரமே தண்ணீர் தெளித்து வைத்த மண் தரையில் ஈஸிச் சேரில், அல்லது வழு வ்ழுப்பான சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்த படி பேசிக் கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் பழனியின் அப்பாதான் அதிகம் பேசிக் கொண்டிருப்பார்கள்.அவர் கோர்ட் அமீனாவாக இருப்பவர்.கோர்ட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் எதையாவது, அல்லது ஜப்திக்குப் போன இடத்தில் நடந்த சம்பவம் எதையாவது பேசிக் கொண்டிருப்பார்.அவர்கள் கிளம்பும் வரை நாங்கள் யாரும் அருகே கூடப் போவதில்லை.அது பாடம் படிக்கிற நேரம் என்பதால் மட்டுமல்ல.அமீனாப் பிள்ளை டேய் படிக்கிற பிள்ளைங்களுக்கு இங்க என்ன வேலை என்று விரட்டி விடுவார். எனக்கு வேறு அனுபவங்களும் உண்டு.

சில கோடை விடுமுறைக்கு ராஜவல்லிபுரம் போய் தங்கி இருப்பது உண்டு.அம்மா ஊர் அதுதான்.வீடும் நல்ல பெரிய வீடு. அம்மாத் தாத்தாவுக்கு நில புலன்கள் எல்லாம் அந்த ஊரில்தான்.அங்கே எல்லார் வீட்டுக்கு வெளியேயும் திண்ணை உண்டு.இந்த திண்ணைகளுக்கு அப்படி ஒரு வழு வழுப்பு எங்கிருந்துதான் வருமோ,.உட்கார்ந்து உட்கார்ந்து தேய்த்ததனால் ஏற்பட்டதோ, இல்லை கொத்தனார் கைவண்ணமோ என்று அதிசயித்தது உண்டு.அப்பாவும் ஆவுடையப்ப மாமாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வேறு யாரும் இல்லை. காலையில் என்றால் கீழ் வரிசை வீடுகளின் திண்ணையில் பேசிக் கொண்டிருப்பார்கள். காலையில் தினமணி கிடக்கும்.தினமணி ஞாயிறு அன்று, தினமணி சுடர் என்று வரும் .அதில் சினிமா, ராசி பலன்,ஒரு சிறுகதை,. சிறுவர்களுக்கான ஒரு தொடர் கதை எல்லாம் வரும்.அதன் அமைப்பே குறுக்கு வசத்தில் இருக்கும்.நாலு பக்கத்தில் சினிமா இரண்டு பக்கங்களில் அகல வசத்தில் வரும். அதைப் பார்க்கப் போவேன்.அன்று அப்படிப் போனதுதான். வெயில் சற்று ஏறி ஒன்பது மணி வாக்கில் எல்லாரும் கலைந்திருப்பார்கள். உழவுக்காரர்களும் பண்ணையாட்களும் வந்து நில புலன்கள் பற்றிய சமாச்சாரங்களைத் தெரிவித்து ``தெக்க வந்த குண்டுல(குண்டு நிலத்துல) கொஞ்சம் சீனி ஒரம் போட்டா தேவலை, மாட்டு கழுத்துப் புண்ணுக்கு கொஞ்சம் தென்ன மரக் குடி எண்ணெய் போடனும்.’’.என்று எதையாவது அவரவர் பயிர் வைக்கும் நிலங்களின் சுவான்தார்களிடம் சொல்லி, ஆக வேண்டியதைப் பார்த்துப் போவார்கள்.அதெல்லாம் முடிந்திருக்கும் போல.அப்பா பொதுவாக என்னை அதிகம் சத்தம் போடுவதோ அடிப்பதோ கிடையாது.சாயந்தரம் நண்பர்களுடன் சும்மா தெரு வீதி வலம் போகிற போது கூட, நானும் உடன் வருகிறேன் என்றால் சரி என்று சொல்லி விடுவார்கள்.அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று நினைவில்லை,திடீரென்று மாமா, ஏதோ விடுகதை போடுகிற தொனியில், ``ஏல பழைய குருடி கதவைத் திறடி, பண்டைய குருடி.......’’என்று சொல்லி நிறுத்தினார். நானும் `பண்டைய குருடி..’.என்று சொல்லி பதிலை எதிர்பார்த்து நிறுத்தினேன்.உனக்குத் தெரியாதா, உங்க அப்பாட்ட கேளு என்றார்.நான் சிரித்த மானிக்கே அப்பாவின் முகத்தைப் பர்த்தேன்
அது சட்டென்று இருண்டது.ஏனென்று சுதாரிப்பதற்குள் முதுகில் பலமான அடி, ``போல அந்தப்பக்கம், இன்னம பெரியவங்க பேசற பக்கம் வந்தே இருக்கு’’, என்றார்.அழுத படியே ஓடி வந்தவன் தான்.அதிலிருந்து பெரிசுகள் பேசற பக்கம் போறதே இல்லை.மாமா சொன்ன விடுகதைக்கும் விடை தெரியவில்லை.

அப்போதெல்லாம் தெருவுக்கு ஆத்தண்ணி (ஆற்றுத் தண்ணீர்) பைப்பு வரவில்லை. ஒரு ரெட்டை மாட்டு வண்டியில் மூன்று பெரிய கிடாரத்தை கார் டயர் மேல் வைத்து ஆற்றிலிருந்து தண்ணீர் பிடித்து வீடுகளுக்கு சப்ளை செய்வார் ஒரு அய்யர்.ஒரு குடம், ஒரு அணா.(ஆறு நயா பைசா) வசதியுள்ள வீடுகளில் தினமும் குடிப்பதற்கு ஒரு குடமோ இரண்டு குடமோ வாங்கிக் கொள்ளுவார்கள். `கல்யாணம் கார்த்திகை’ என்றால் ஒரு வண்டி ஸ்பெஷலாகச் சொல்லி வாங்குவார்கள்.வீடுகளிலேயே கிடாரங்கள் இருக்கும். கிடாரம் என்றால், மிகப் பெரிய குடம் மாதிரி. ஒரு எட்டு வயதுப் பையன் நின்ற மானிக்கே ஒளிந்து கொள்ளலாம். அய்யருக்கு ஒரு கை சூம்பிப் போயிருக்கும்.அதை வைத்துக் கொண்டு இந்த மனுஷன் எப்படி ஆற்றில் இறங்கி குடம் குடமாய் தண்ணீரெடுத்து நிரப்பி அம்புட்டுத் தூரம் வண்டியை ஓட்டி வந்து தெருத் தெருவாக சப்ளை செய்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். எப்போதும் வெற்றிலை போட்ட வண்ணமாய் இருப்பார்.வெற்றிலை எச்சியுடன் கெட்ட வார்த்தை சரளமாக ஒழுகிக் கொண்டேயிருக்கும்.
கல்யாண வீட்டுக்கு சப்ளை என்றால் கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னமேயே ஆரம்பித்து விடுவார்.எல்லா தவசுப் பிள்ளைகளும் அவருக்குத் தெரியும். `` யார்ல அவன் சமையல்.எந்தப் பழுவம்ல சமையல், பேராச்சியா, பழனியா..’’ என்று கேட்டுக்கொண்டே ஆக்குப்பிறை(ஆக்கும் பிறை ?) வரை வருவார்,ஏல பழனி, பழுவா, மைனர் பிள்ளை வீட்ல செஞ்ச மாதிரி ரசத்தில உப்பு அள்ளிப் போட்றாதல. ரசமாக்கொண்டு செரியாப் போச்சு.சாதத்தை உருட்டிப் போட்டு. பச்சை அப்பளத்தப் போட்டு செரி பண்ணிட்டெ, அது யார்ல குலாமா,(கூப்பிடறதுதான் குலாம்,பேர் எதோ இந்துப் பெயர்தான்.) காய் நறுக்கறது, கூட யாரு, இந்தக் குறத்தியா,இவளை விட மாட்டானெ பழனி , நல்ல தூப்புக்காரியே கிடையாது பாரு என்று சளம்பித் தள்ளி விடுவார்.’
இதற்குள் நூறு கெட்ட வார்த்தை வேறு வந்திருக்கும்.``வேய் அய்யரே என்ன துவையல் ஒரு சட்டி தள்ளிட்டேரா,உமக்குன்னு கொடுக்காம் பாரு மிக்கேல் ஆசான் வைத்தியர், அரிஷ்டமும்,அபினும்..
உக்காந்து சாப்பிட்டுட்டுப் போம் வே சளம்பாம” என்று சமையல் பண்ணுகிற தவசுப் பிள்ளை சொல்லுவார்.அதற்குள் அய்யர் இலையைப் போட்டு உக்காந்திருப்பார்.``ஏவ்ட்டி இவளே சாதத்தைப் போடுறீ,என்ன வச்சிருக்கப் போறான் மூர்த்தம் நாளக் கழிச்சில்லியோ சாம்பாரும் வாழக்காயும்தான் இருக்கும், அதான,ரைட்டுத்தான,பழைய குருடி கதவைத் திறடீ, பண்டையக் குருடி........திறடீன்ன கதை தான்’’ என்று ரகசியம் அவிழ்ப்பார். அவிழ்த்தார், ரெண்டு மூனு வருஷம் கழிச்சு.பாவம், அவர் சாப்பிடும் போது பார்க்கிறவனுக்கு அழுகை வந்து விடும். இடது கைதான் விளங்கும். சாப்பாடெல்லாம் சிந்தாது சிதறாது. ஆனால் தண்ணீர் குடிக்கத்தான் திண்டாடுவார்.எச்சிக் கையால் செம்போ, தம்ளரோ எடுத்துக் குடிக்க வேண்டாமென்று சூம்பிப் போன வலது கையிலெடுத்து இடது முழங்கையால் தாங்கிக் குடிக்க முயல்வார் மேலெல்லாம் வழிந்து இலையெல்லாம் ஓடும்.சோறு கறியெல்லாம் தண்ணீராகி விடும். ஏம் வே தின்னப்பறம் தண்ணிய குடிச்சா என்ன என்று தவசுப் பிள்ளை கரிசனமாகச் சத்தம் போடுவார். இலை எடுக்கும் பெண்ணோ,`சாமீ நான் வேண்ணா தண்ணி தரட்டா’ என்றால் நீ வேற தாடி பொண்ணே’ என்று சிரிப்பு வேதாளம் மறுபடி முருங்க மரமேறும்.ரெண்டு மூனு கல்யாணத்தில நான் பார்த்திருக்கிறேன்.
ஆத்தண்ணி வந்த பின்னும் தெருவின் அடி பைப்பிற்கு மவுசு குறையவில்லை.பகல் நேரத்தில் நங்கையாருக்கு மட்டும் என்றில்லை, வேறு பலருக்கும் பல விதத்தில் பிரயோஜனமாய் இருக்கும்.ஆறுமுகம் பிள்ளை சமையல் பாத்திரக் கடையில் வேல பார்க்கும் தங்கைய்யா கல்யாணம் விசேஷம் முடிந்து பண்ட பாத்திரங்களையெல்லாம் பொறுக்கி எடுத்து வந்து. மிச்ச சாப்பட்டையெல்லாம் வழித்து எடுத்து தனியே வைத்து விட்டு, அண்டா, டவராசெட். கஞ்சிக்கூடை, தூக்கு வாளி, நாலு குழிசட்டி
கரண்டி, கண் அகப்பை, அன்ன வெட்டி, குத்துப் போணி என்று சகலத்தையும் கழுவுவான். பருப்பு வாசனையும் கொத்தமல்லி வாசனையும் சீரகவாசனையும் தெருப் பூரா அடிக்கும்.அதை வைத்தே சொல்லி விடலாம் சமையல் யாரென்று.
அன்று பிற்பகல், படித்துக் கொண்டிருந்தேன்.மத்யானம் விவித பாரதியில் புது இந்திப் பாட்டாகப் போடுவான்.கிஷோர் குமார் உச்சத்தில் இருந்த நேரம்.`கைடு’ படப் பாடல் முழங்கிக் கொண்டிருந்தது..ஏற்கெனெவே ஜப் ஜப் பூல் கிலேவிலிருந்து -`பர் தேசியோன் சினா அங்கியான் மிலானா’(பாட்டின் சரியான வரிகள் எல்லாம் தெரியாது) என்று கல்யாண்ஜி ஆனந்த்ஜி.. மெல்லிசைத்து முடிந்திருந்தது.தெருப் பம்பில் சண்டை போடுகிற சத்தம் கேட்டது.அடி பைப்பில் சண்டையே வராது. அதுவும் தங்கைய்யா சண்டையே போட மாட்டான்.பெண்குரலும் சற்று புதிதாய் இருந்தது.ரேடியோவைக் குறைத்து விட்டு எட்டிப் பார்த்தேன்.ஏழு வளவுக்கு புதிதாக வந்திருந்த கிருஷ்ணமக்கா தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.அவள் மாப்பிள்ளை துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.அவர் தம்பி என் கிளாஸ்மேட்.அவன் கூட சொல்லியிருந்தான்,எங்க அண்ணான் உங்க தெருவுக்கு வீடு மாத்தி வந்திருக்கான் என்று.கீழே இறங்கிப் போய் தங்கைய்யாவிடம் என்ன என்று கேட்டேன்.. அதற்குள் அவன் அமந்து(அமைதியாகிப்) போயிருந்தான்.அந்த அக்காவிடம் நான் குமாருக்கு ஃப்ரெண்ட், நீங்க தான் அவனோட் மதினியா என்று கேட்டதும், தங்கைய்யா, அய்யா உங்களுக்கு வேண்டியவங்களா, கழுவிக் கொட்டிகிட்டு இருக்கும் போது தெரியாம மேல பட்டுட்டு. கவனிக்கலை,என்றான்.அந்த அக்காவும் தணிந்து போயிருந்தார்கள்.ஒரு குடம் தண்ணியை தங்கைய்யாவே அடித்துத் தர அதை இடுப்பில் வைத்த படியே தம்பி, வீட்டுக்கு வாங்களேன் என்று கூப்பிட்டார்கள்.தவிர்க்க முடியாதபடி இருந்தது,.அக்காவின் மூக்கும் முழியும் முன்கை மென் மயிரும்..சரி என்று கூடப் போனேன். அண்ணாச்சி இருக்காங்களா வீட்ல என்று வீடு வந்ததும் கேட்டேன்.. அந்தா தூங்குதாகள்ளா, ராத்திரி செகண்ட் ஷோ பார்த்துட்டு வந்து.இப்படி மத்தியானம் வரை தூங்கற ஆள் உண்டா நீங்களே சொல்லுங்க தம்பி என்று சொல்லி முடிக்கும் முன்னேயே அவர் எழுந்து கொண்டார். தம்பி வாங்க என்றபடியே. கடையில் பார்த்திருக்கிறேன் அவரை.தம்பி வீடு மேக்க தான இருக்கு, என்று பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் காபி வந்தது.சுமாரான காபித் தூள் என்பது நீட்டும் போதே தெரிந்தது.காபி போடவே சற்று அடுப்புடன் போராடியிருப்பாள் போலிருந்தது. நன்றாகவே வேர்த்திருந்தது உடலெங்கும்.அடுப்படி, பெட் ரூம் எல்லாமே ஒரு கட்டுக்குள்தான் பன்னிரெண்டுக்குப் பன்னிரெண்டு சதுரம் தான் வீடு.. சேலை முந்தானையால் முகம், உடல், முன்கை எல்லாம் துடைக்கும் போது அடி வயிற்றில் இறங்கும் மயிரொழுங்கு, பொருநராற்றுப் படையின் விறலியை, யாழ் வருணனையை நினைவுறுத்தியது.கொஞ்சம் கிளர்ச்சியுடன் வெளியே வந்தேன்.

வரவேற்க, தெருவில் நண்பர்கள் கேலியான முகத்துடன் தயாராய் இருந்தார்கள்.போங்கடா இது வேற. அவங்க கொழுந்தன் எனக்கு நல்ல ஃப்ரெண்டுடா என்றேன்.அதையெல்லாம் கேட்க யாரும் தயாராயில்லை.அப்புறமாக வெவ்வேறு சமயங்களில், .நண்பர்கள் கூட ரொம்ப நடிக்காதல, என்றோ நல்ல சான்ஸ்டா என்றோ சொல்லுவார்கள். அவள் தெருவில் இருக்கும் வரை நான் மரியாதையாகவே நடந்து கொண்டேன்.தெருவை விட்டு வீடு மாற்றி இன்னொரு தெருவின் பத்துக் குடிக்கு, குடி போய் விட்டதாக கோயிலில் ஒரு தரம் பார்க்கும் போது சொன்னாள்.அப்போது ஆள் ரொம்ப மினு மினுப்பாக இருந்தாள் சேலையெல்லாம் பணக்காரத் தனமாக இருந்தது.நானும் இடைப் பட்ட காலத்தில் கொஞ்ச நாட்கள் வெளியூரிலிருந்தேன்..கோயில் போய் விட்டு தெருவிற்கு வந்து, நீளத்திண்ணையில் அமர்ந்து பெரிசுகளெல்லாம் போன பின் பேசிக்கொண்டிருந்த போது விஷயம் ஒவொன்றாகத் தெரியவந்தது. ஏல நம்ம தெரு மாதிரி மத்த தெருல்லாம் இருக்குமா.அங்க போய் அண்ணாச்சி துணிக்கடை மேனேஜராயிட்டாரு, உங்க மதினி முதலாளியாயிட்டா. அப்போ முதலாளி?என்றேன். மதினியோட ஐக்கியமாயிட்டாரு.என்று சொல்லிச் சிரித்தார்கள்.’அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைதது இப்போது புரியுதம்மா...”என்று யாரோ பாடுவது மாதிரி இருந்தது.


.

Monday, November 24, 2008

நால் வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும்........



சந்திப் பிள்ளையார் கோயில் ரொம்ப பிரசித்தமானது.சந்தி வினாயகர்ரொம்ப வலதியானவர். நானே கண்கூடாக அனுபவித்த உண்மை. அரையணாவுக்கு ஒரு சூடன் பொருத்தி வைப்பதாக முதல் நாள் வேண்டிக் கொண்டால், மறுநாள் தலைவர் படத்திற்கு, முதல் காட்சிக்கு பெண்கள் தரை டிக்கெட்டில் படம் பார்க்க விட்டு விடுவார்கள்,சின்னப்பையன் தானே என்று.. ரத்னா, பார்வதி டக்கீஸில் இது ரொம்பக் கஷ்டம்.போங்கலே என்று துரத்திவிடுவார்கள். ஆனால் ரத்னாடாக்கீஸில் மெயின் கேட்டில் நின்றுகொண்டிருந்தால் பெரும்பாலான சமயங்களில் சின்னப் பையன்களை தனியே அனுமதித்து, தரை டிக்கெட் கேட் திறக்கும் முன்,உள்ப் புறமாகஅந்த கியூவில் முதலில் நிற்கும் படி போக விடுவார்கள். சற்று பெரிய பையன்களை, அவன் அரை டிராயர் போட்டிருந்தாலும்,.ஏல ஏழு கழுத வயசாகுது,கல்யாணம் பண்ணி வச்சா இதுக்குள்ள ரெண்டு பெத்துருப்பே, போடா மெயின் கியூவில் வா என்று அனுப்பி விடுவார்கள்.
குடும்பத்தலைவன் 1962 ஆகஸ்ட் 15=ல் வந்தது. அன்றைக்கு நாலு காட்சிகள் .காலை பத்து மணிக்கு பெண்கள் டிக்கெட்டில் ஐம்பது டிக்கெட்டுகளே ஒதுக்கி இருந்தார்கள். ஆம்பிளைப் பயலுகள்ளாம் ஆம்பளை டிக்கெட்டுக்கு ஓடுங்கலே என்று துரத்திவிட்டார்கள். பெஞ்சு டிக்கெட் பெண்களுக்கு கொடுக்கவே இல்லை.என்னை விட சற்றுப் பெரிய பையன்களாய் இருப்பவர்கள் எல்லாம் முதலிலேயே ஆண்கள் கியூவில் அடித்துப் பிடித்து போய் விட்டார்கள்.பிள்ளையார் கை விட்டு விட்டாரே என்று மேட்னி ஷோவுக்கு கூடுதல் பிரார்த்தனைகளுடனும், பெஞ்சு டிக்கெட்டிற்கான கூடுதல் காசுகளுடனும் போனேன்.சுடலை மாடன் கோயிலையும் ஒரு சுற்று சுற்றி வந்திருந்தேன். (இரா. முருகன் நாவல்-அரசூர் வம்சம்- படித்த பாதிப்பு சாமியைக் கூட கிண்டலடிக்கிற மாதிரி தோன்றுகிறது.) காலைக் காட்சியை விடக் கூட்டம் அதிகமாயிருந்தது.பையன்களை பெண்கள் டிக்கெட் பக்கம் அனுமதிப்பார்களா என்று சந்தேகமாயிருந்தது.நல்ல வேளை பாக்கியத்தக்கா கியூவில் நின்று கொண்டிருந்தாள். ஈ.வி சரோஜா மாதிரி இருப்பாள்.தேன் நிலவு படத்திற்கு இந்த மாதிரி ஞாயிறு காலைக் காட்சிக்கு பார்வதி தியேட்டரில் அல்லாடிக் கொண்டிருந்த போது அந்த அக்கா தான் இது ஏந்தம்பிதான் என்று கூட்டிப் போனாள். ஆள் நல்ல சிகப்பு. இப்ப யோசிக்கையில் கொஞ்சம் ஓவர் மேக் அப் என்று தோன்றுகிறது.முதல் தரம் கூட்டிப் போகும் போதே துட்டை முதலிலேயே வாங்கிக் கொண்டுவிட்டாள், அடுத்த கண்டிஷன் உள்ளே வந்த பிறகு மரியாதையா ஆம்பிளை டிக்கெட் பக்கம் போய் உட்கர்ந்துக்கிடனும்.அதற்கு அப்புறம் முத்துமண்டபமோ ஏதோ ஒரு படத்திற்கு அவளுடன் போவது போலவே போய் நானே டிக்கெட் எடுத்துப் போனேன்.வேறு சில படங்களுக்கும் அவளை நான் காலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் கூட்டமில்லாத படங்கள்.ஆண்கள் டிக்கெட்டிலேயே போனவை.
பாளை அசோக் தியேட்டரில் மதுமதி படம் வந்த போது நானும் பெரிய கோபாலும் போயிருந்தோம்.முதலில் ரத்னாவில் வந்த போது பார்க்கவில்லை. ஆனால் அதன் கதையை கிட்டத்தட்ட முழுதாகப் போட்டிருந்த பெரியசைஸ் நோட்டீஸ் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது.டைரக்‌ஷன் பிமல்ராய், இசை சலில் சவுத்ரி என்றெல்லாம் பல தடவை படித்து மனப்பாடம் ஆகியிருந்தது.அஷோக்கில் ரெண்டாம்தடவை வந்தபோது. கோபால், கூட வருவதற்கு தாராளமாய் சம்மதித்தான்.அவ்வளவு தூரம் நடந்து போவதற்கு அவந்தான் எப்போதும் சம்மதிப்பான்.ஊசிக்கோபுரம் வரைக்கும் ஜங்ஷன் டிக்கெட்தான். சமயத்தில் ஊசிக்கோபுரம் வரை பஸ்ஸில்போவோம் அப்புறம் குறுக்கு வழியாய் தியேட்டருக்குப் போய் விடுவோம். அதற்கு அவள் வந்திருந்தாள்.அவளது மாப்பிள்ளையுடன் பால்கனி டிக்கெட்டிலிருந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அந்த ஆள் சற்று வயதான முரட்டு ஆளாய் இருந்தார்.பேசுவதற்கோ தெரிந்த ஆள் என்கிற மாதிரி சிரிக்கவோ வாய்ப்பில்லை.பெரிய கோபால் மட்டும் ஏல அந்த ஆள் நம்மளை முறைச்சுப் பாக்காருல என்றான்.
இன்றும் அந்த அக்காவிடம் கெஞ்சுகிற மாதிரி ஒரு டிக்கெட் எடுத்துத் தரக் கேட்டேன்.காலையில் படம் பார்த்து விட்டு வந்த எல்லாரும் படம் வேறு நல்லாயிருப்பதாய்ச் சொல்லியது ஆவலை அதிகரித்து விட்டது. டேய் கூட்டமாயிருக்குடா அங்க யார் டிக்கெட் கிழிக்கறாங்க. பூதததானா அப்படீன்னா பரவால்ல இப்படி ஏம் பக்கத்தில நைசா நுழஞ்சிரு என்றாள் நான் நுழைந்து அவளை ஒட்டியவாறு நின்று கொண்டேன்.. லைட் ப்ளூகலர் சேலை கட்டி இருந்தாள்.உடுத்திப் பழகிய வாயல் சேலையின் வள வளப்பு உடலில் உரச நின்று கொண்டிருந்தேன். மற்ற பொம்பளைகளெல்லாம் யார்ல அது என்று திட்டிக் கொண்டிருந்தார்கள்.அவளோ எதையும் கண்டுக்காத என்கிற மாதிரி கண்ணால் ஜாடை செய்தாள். ஒரு வழியாய் பெண்களிடையே நசுங்கிப் பிசுங்கி டிக்கெட் கவுன்tடர் அருகே வந்ததும் பூதத்தான் கையயைப் பிடித்து வெளியே இழுத்து விட்டான். பாக்கியத்தக்காவின் முகத்தைப் பார்த்தேன் அவள் கவுண்டருக்கு இரண்டு மூன்று பேர் தள்ளி நின்றாள்.பூதத்தானிடம், என்னை அவள் தம்பி என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.சொல்லவில்லை. அவனோ டிக்கெட்டைக் கிழித்தவாறே ஓடீருல என்று சொல்லிக் கொண்டிருந்தான்.அவமானம் பிடுங்கி தின்றது.ராஜ மரியாதையுடன் படம் பார்க்க பாப்புலர் டாக்கீஸெல்லாம் இருக்க, இங்கே இப்படி ஆகிவிட்டதே என்று வெட்கமாயிருந்தது.ஆனால் எப்படியோ அவள் இரண்டு டிக்கெட்டுடன் கவுண்டரிலிருந்து வெற்றிகரமாக வந்து விட்டாள். வாடே என்று கூப்பிட்டாள். ஏதொ சொல்ல வாயெடுத்த பூதத்தான் ஒன்றும் சொல்லாமல் ஏல அந்தப் பக்கம் போயிரனும் என்றான், டிக்கெட்டைக் கிழித்தபடியே.
அவளிடம் கூட ஒன்றும் சொல்லவில்லை நான், அவள் பூதத்தானிடம் ஏதோ சிரித்துப் பேசிய படியே நின்று கொண்டிருந்தாள். அன்றோடு பொம்பளை டிக்கெட்டில் படம் பார்ப்பதை நிறுத்துவது என்று முடிவு செய்தேன்.அப்புறம் அவளையும் பார்க்கவேயில்லை.
ஐஸ் மணி பயங்கர சிவாஜி ரசிகன்.எங்கள் தெருவிலும் கொஞ்ச நாள் குடியிருந்தான்.அவன் அம்மா ஆப்பம் அதிரசம் சுட்டு தெரிந்த வீடுகளில் விற்று வருவாள்.கூவிக் கூவியெல்லாம் விற்கமாட்டாள். மணி, ஐஸ் விற்பான்.அவனும் அதிகம் சத்தம் போட்டெல்லாம் விற்க மாட்டான்.அவன் பெரும்பாலும் தியேட்டர் வாசலில் மத்தியான நேரம் தரை, பெஞ்ச்சு டிக்கெட் பக்கம் நின்று விற்பான்.அதிலும் சிவாஜி படம் ஓடுகிற தியேட்டரில்தான் பெரும்பாலும் நிற்பான்.(பின்னாளில் திருவருட் செல்வர் படத்திற்கு நானும் லாலா மணியும் முதல் நாள் போயிருந்த போது. எங்களுக்கு முந்தின இருக்கையில்தான் ஐஸ் மணி இருந்தான்.ரசிகர் சண்டைக்கெல்லாம் லாலா மணி வர மாட்டான்.
அவனிடமும் யாரும் வருவதில்லை.படம் சுமார் ஆகப் போய்க் கொண்டிருந்ததை உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தோம்,சிவாஜி அப்பராக வரும் காட்சி. சம்பந்தரின் பல்லக்கு சுமப்பவராக வந்து, சம்பந்தர் விசாரிக்கிற போது குடு குடுவென்று ஓடி வருகிறதை நாங்களே சந்தோஷமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த போது.”கணேசா ” என்று சத்தமிட்ட படியே ஐஸ் மணி எழுந்து கைகளிரண்டையும் வா என்றபடிக்கு நீட்டியமானிக்கி (நீட்டியதுபோல்) விக்கித்து நின்று விட்டான்..தியேட்டரே அவனைப் பார்த்து திரும்ப, வாசல் திரைகளையெல்லாம் திறந்து படத்தையே கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டார்கள்.)

பச்சை விளக்கு படம் நன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்டு. படம் வெளியாகி நாலைந்து நாள் கழித்து ஒரு மேட்னி காட்சிக்குப் போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. மணி ஐஸ் விற்றுக் கொண்டிருந்தான்.படம் போடும் வரை அவன் அங்கேயே நிற்பான். எல்லா ரசிகர்களும் அப்படித்தான்.படம் ஓட ஆரம்பித்ததும் அவன் மிச்சம் இருப்பதை தெருக்களில் விற்கக் கிளம்பி விடுவான். அவனுடன் நானும் நடக்க ஆர்ம்பித்தேன்.வேய் ஏங்கூட வாரும் ரெண்டு மூணூ முக்கியமான இடங்களுக்குத்தான் போவேன் என்றான். சரி என்று பேசிய படியே நடந்தோம்.கதாநாயகன் செத்துப் போற மாதிரி எடுத்தா எம்ஜியார் படம் ஓடவே ஓடாது எனவே. மதுரை வீரன் மட்டும்தான் ஓடியிருக்கு. ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா எல்லாம் ஓடவே இல்லை, என்று கணக்கு சொல்லியபடியே வந்தான்.பச்சை விளக்கில் சிவாஜி இறந்து போய்விடுவதாக கதை. ஏதேது இன்னும் கொஞ்ச நேரம் போனா நம்மளையே மாத்திருவான் போலிருக்கு என்று நினைக்கும் போது மாடத்தெரு வந்திருந்தோம்.அறம் வளர்த்த புது மாடத்தெரு என்று பெயர்.தேவ தாசிகள் இருந்த தெரு. தெருவின் கண்டமத்தியில் ஒரு பெரிய செட்டியார் மாளிகை. நகரத்தார் ஸ்டைலில்.இருக்கும்.அதைப் பற்றி ஏகப்பட்ட கதை இருக்கு.
அதற்கு எதிர்த்தாற் போல ஒரு சந்து பிரியும். அது குளப் பிறைத்தெருவிற்குள் கொண்டு போய் விடும்.அந்தத் தெருவையே நான் அன்றுதான் பார்க்கிறேன்.சிறிதாகப் பிரிந்த சந்து, சற்றுத் தள்ளிப் போனால் அகலமாகி விட்டது.அவ்வளவு அகலத்துக்கும் நிழல் தருகிற மாதிரி ஒரு காம்பவுண்டின் உள்ளே பெரிய வேப்ப மரம். அந்த மத்தியான வெயிலுக்கு அந்த நிழல் பிரமாதமாயிருந்தது.. அதனடியில் ஐஸ் வண்டியை நிப்பாட்டி, ஒரு முறை குரல் கொடுத்தான்.தெருவே அமைதியாக இருந்தது.அவ்வளவு தூரம் வரைக்கும் அவன் குரல் எழுப்பவே இல்லை. இந்தத் தெருவில் யாருப்பா வங்குவாங்க என்று நான் கேட்டு முடிக்கும் முன் வேப்பமர வீட்டின் கதவு திறந்தது..ஒரு கனத்த முரட்டு ஆளும் அவர் பின்னால் வெளிர் நீலக் கலர் சேலை உடுத்தி சற்றே தலையும் ஆடையும் கலைந்த நிலையில் ஒரு பெண்ணும். பெண் பாதி திறந்த கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள்.முகம் சற்றே பரிச்சயமான மாதிரி இருந்தது.அவர் நாலைந்து ஐஸ்கப்புகள் வங்கினார். கப் ஐஸ் வந்த புதிது அது.முகம் பிடி பட்டு விட்டது. பாக்கியத்தக்கா.பார்த்து நெடு நாட்களாயிற்று.இப்போதெல்லாம் முதல் நாள் தரை டிக்கெட் போவதில்லை. நீண்டநாள் ப்ளான் போட்டு உண்டியலில் காசு சேர்த்து 1.66 பைசா டிக்கெட்டில் போய்விடும் வழக்கம் வந்தாச்சு, பணத்தோட்டம் படத்திலிருந்து. அக்கா எப்படியிருக்கீங்க, இப்பல்லாம் படம் பார்க்கவே வர்றதில்லையா என்று பட பட வென்று பேசினேன். ஆள் முன்னைக்கு இப்ப உடம்பு பூசினாற்போல் அழகு கூடியிருந்தாள். பதிலெதுவும் சொல்லும் முன் பட்டென்று கதவு சாத்தப் பட்டது.மணி, என்னவே இவளைத் தெரியுமா உமக்கு, நானே நல்ல பார்த்ததில்லையே என்றான்.நான் சொல்லிக் கொண்டிருந்தேன் பழைய கதையை. டெய்லி எங்கிட்ட ஐஸ் வாங்குவாங்க அதுவும் நாலைந்து. ரெண்டு பேர்தான் இருக்காங்க, அவ பேரு பாக்கியம்,(அப்பத்தான் எனக்கு பேர் தெரிய வந்தது.)அவரு நயினார் குளம் ரோட்டில் லாரி பார்வேடிங் ஏஜெண்டா இருக்காரு.அவரு வீடும் கடைப் பக்கத்திலேயே இருக்கு.இது தொடுப்பு கேஸ்.வீட்டை விட்டு வெளியே வந்தே நான் பார்த்ததில்லையே. அவரும் வெளியவே விட மாட்டாரே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு லேசாகத் திறந்து அவள் வெளியே அவசரமாக வந்தாள். பாதி வாசல் திறக்கும் முன் அவர் முரட்டுத் தனமாக உள்ளே இழுத்து கதவைச் சாத்தினார்.உள்ளே அடி விழும் சத்தமும், இன்னமே போகலை, போகலை என்று அழும் சத்தமும் இரண்டு முறை கேட்டது. அப்புறம் அமைதியாகி விட்டது. நாங்களும் நகர்ந்தோம்.. வே வியாபாரத்தைக் கெடுத்து வச்சு வசூலைக் குறைச்சிட்டேரேவே என்று சொல்லி முடிக்கும் முன் இரண்டு கப் ஐஸ் எங்கள் பின்னால் விழுந்தது.நல்ல வேளை மேலே விழவில்லை.ஆனால் வியாபாரம் பாதித்து விட்டதற்கு மணி வருத்தப் பட்ட மாதிரியில்லை. நால் வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் என்று பாடிக் கொண்டு வந்தான். அந்தப் பாட்டு பச்சை விளக்கு படத்தில் என்று அப்புறம்தான் தெரிந்தது.

Saturday, November 15, 2008

சித்திரத்தில் பெண்ணெழுதி..........

அன்று ஏதோ பந்த் கடைகளெல்லாம் அடைத்திருந்தது.அநேகமாய் எம்ஜியார் கட்சி அழைப்பு விடுத்த பந்த் என்று நினைவு.முந்தின நாளே ஊருக்கு கிளம்பிவிட நினைத்திருந்தேன்.இரண்டு நாள்தான் ஆகியிருந்தது ஊருக்கும் போய் வந்து. பஸ் வசதியும் மதுரையிலிருந்து இப்போது போலெல்லாம் அப்போது கிடையாது. ராத்திரி சில எக்ஸ்பிரஸ் பஸ்(திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக பஸ் வரும்..அதற்கும் அடி பிடியாக இருக்கும்.ஒரு பாஸஞ்சர் ரயில் பத்து மணிக்கு கிளம்பி விடிகாலை ஐந்து மணிக்கு திருநெல்வேலி வரும்.ஏழு எட்டு மணி நேரம் ஆகி விடும். ஐந்து ரூபாய் கட்டணம்..லக்கேஜ் கேரியரில் இடம் கிடைத்தால் நல்லது. அதிலும் மூட்டைப் பூச்சி தொல்லை தாங்க முடியாது.ஒரு பீடியைக் கொளுத்தி இண்டு இடுக்கெல்லாம் புகை போட்டு நசுக்கினால் அரை மணி நேரம் தூங்க முயற்சிக்கலாம்.
சிகரெட் சரிப்பட்டு வராது. வளைந்து நொடிந்து விடும். ஒரு இழுப்பு வேறு இழுக்கச் சொல்லும். அது வேறு சவ வாடை வீசும்
மூட்டைப் பூச்சியை கொளுத்தினதால்.யாராவது புண்ணியவான் பீடி தானம் தருகிற பொற்காலம்தான் அது.பீடி பல விஷயங்களில் சவுகரியம். அவசரமாக, மையிலோ சாயத்திலோ முக்கி தட்டி போர்டு எழுத ப்ரஷ்ஷை விட தோதுவாயிருக்கும்.67 தேர்தலுக்கு இரண்டு நாள் முந்தி தோழர், கரிக்காத்தோப்பு ஜமால் மைதீன் சொள்ள மாடன் கோயிலில் இயங்கிக் கொண்டிருந்த எங்கள் 11 வது வட்டதி.மு.க தேர்தல் காரியாலயத்திற்கு அடி பட்டு ஓடி வந்தார்.தலையிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நாங்கள் நாலைந்து பேர் அவர் வந்த திசையில்,ரதவீதியில் ஓடி, யார்ல அது அடிச்சது என்று சத்தம் கொடுத்தோம்.திமு திமு வென்று இருட்டில் நின்று கொண்டிருந்த ஊதா நிற போலீஸ் வேனிலிருந்து சட்டிப் போலீஸ் விரட்ட ஆரம்பித்தது. தெருவுக்குள் ஓடினோம். இந்த ரிசர்வ் போலீஸ்காரர்கள் பெரும்பாலும் வெளியூர்க் காரர்கள்., விரட்டுபவர்கள் தெருவுக்குள் ரொம்ப தூரம் வர மாட்டர்கள். இது எங்களுக்கு 65 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலேயே பழகி விட்டது.தெருவில் ஏதாவது முடுக்குக்குள் ஓடிவிடுவோம்.போலீஸ் தயங்கியோ, போதும் என்று நினைத்து திரும்பி விடுவார்கள்.உடனேயே, தாள் ஒட்டி ரெடியாக இருந்த தட்டி போர்டில் பீடியால் எழுத ஆரம்பித்தோம். பத்த வைக்காத பீடி வசதிப் படாது. நானே பற்ற வைத்து ரெண்டு இழுப்பு இழுத்து(ஏல ஜோரா இழுக்கியே என்று பெரிய கோபால் சொன்னான்) தரையில் மட்டமாக அழுத்தி அணைத்து உலை மூடியில் தயாராக இருந்த வஜ்ஜிரம் கொதிக்க வச்ச தண்ணீரில் கரைத்த நீலக் கலரில் முக்கி எழுத ஆரம்பித்தேன். ”ஆளுங்கட்சியின் அராஜகம் பாரீர்.”...என்று.இந்த மாதிரி வாசகங்கள் எல்லாம் அத்துப் படியாகி இருந்தது.
மதுரையிலேருந்து திருநெல்வேலிக்கி வந்துட்டேன், அதுவும் ஆறு, ஏழு வருஷம் முந்தி.இதுதான் வாயு வேகம், மனோ வேகம் என்பதா, இல்லை ஜூல்ஸ் வெர்னின் டைம் மெஷின் சமாசாரமா.சரி ரயிலுக்குப் போவோம் என்று யோசிக்கும் போது நல்லதம்பி வந்து சேர்ந்தார்,செயப்பிரகாசம் மூலம் அறிமுகமானவர், மதுரையில் அலுவலாய் இருந்தார்.சரி வா சிம்மக்கல்லுக்கு என்று கூப்பிட, ஊர் போகிற ஐடியாவை கைவிட்டு அவருடன் போனேன்.கல்பனாத் தியேட்டர் முக்கில் குவார்ட்டர் மாக் டெவல் வாங்கி ஃபாண்டா கலந்து ஆளுக்கு ஒரு மடக்கு சாப்பிட்டு விட்டு கோனார் கடையில் போய் திருப்தியா முட்டைத் தோசை. கறிக் குழம்பு சாப்பிட்டு விட்டு நின்றவாறே பேசிக் கொண்டிருந்தோம்.அவர் தல்லாகுளம் வந்திருதியா ஆபிஸில் படுத்துக் கொள்ளலாம், பக்கத்திலேயே மெஸ் இருக்கு,என்றார்.முதலில் காசு இல்லையென்றவர் இன்னும் கொஞ்சம் வேண்ணா சரக்கு சாப்பிடுவோம் என்றார். யாத்தாடி நம்ம லிமிட்டு இதுதாம்ப்பா என்று ரூமிற்கு திரும்பி விட்டேன், அங்கன இல்லாத மெஸ்ஸா,என்று நினைத்தபடி.காலையில் டிஃபன், கோபால கொத்தன் தெருவில், எனக்கு அவ்வளவு பிடிக்காத ஸ்ரீ ராம் மெஸ்ஸில் கழிந்து விட்டது.அந்தக் கடை ஐயர் சொல்லவும் சொன்னார். மத்தியானத்துக்கு லெமன் சாதம், தயிர் சாதம் இருக்கு பார்ஸல் வாங்கி வச்சுக்கோங்க, கதவை அடைக்கப் போறோம். இன்னமே ராத்திரிதான் என்று. நாந்தான் போய்யா சூடாச் சாப்பிடவே நல்லாருக்காது உம்ம கடையில், என்று நினைத்துக் கொண்டேன்.பக்கத்திலேயே ராஜஸ்தானி மெஸ். அங்கே சாப்பிட்டதே இல்லை, மத்தியானம் ஒரு பிடி பிடிச்சுருவோம் என்று நினைத்துக் கொண்டேன். அங்கே சப்பாத்தியா போட்டுக் கிட்டே இருப்பானாம்ல என்று கேள்விப் பட்ட ஆசை வேறு.. நல்ல வேளை அரைப் பாக்கெட் பில்டர் வில்ஸ் வாங்கிக் கொண்டேன் அப்படி நான் வாங்கியதே இல்லை. அப்பப்ப ஒன்றோ இரண்டோ தான் அதுவும் ஒருநாளக்கி ஆறு ஏழுக்கு மேல் கிடையாது, முடியாதுங்கிறதும் ஒரு நெசம்.
மத்தியானம் நெருங்கும் போது தான் தெரிந்தது, ஒரு கடை கூட திறக்கவில்லை.அதைச் சொல்லிக் கொண்டே அறையை என்னுடன் ஆக்கிரமித்திருந்தவர், காலையிலேயே வாங்கி வைத்திருந்த பச்சைப் பழத்தை தின்று கொண்டிருந்தார்.ஒரு பேச்சுக்கு கூட இந்தாருங்க சார் ஒரு பழம் தின்னுங்க என்று சொல்லலை.தட்டாரச் சந்தில் இருந்தது, அந்த மாத வாடகை லாட்ஜ். மேன்ஷன்னு சொன்னா இப்ப உள்ள காலங்கள்ள ஈசியா உடனே புரிஞ்சுரும்.நான் தனியாத்தான் முழு வாடகை கொடுத்து தங்கியிருந்தேன். லாட்ஜை மேல்ப் பார்க்கிற தாத்தா திருநெல்வேலிகாரராம். நான் காங்கிரஸ் தியாகி சாவடி கூத்த நயினார் பிள்ளையின் சொந்தக்காரன் என்று பேச்சு வாக்கில் ஒரு நாள் சொன்னதும், ஆஹா எப்பேர்ப்பட்ட மனுஷன், காந்தியை அவர் வீட்டில்தான் பார்த்தோம்.அந்தப் பெரிய வீட்டின் அமைப்பை நான் கட்டு, கட்டாக விவரித்ததும் அவர் முகம் மலர்ந்து போச்சு.ஆமா ஆமா அங்கதான், அங்கதான் இருந்தாரென்று சந்தோஷம் தங்காமல் `ஆமா’ போட்டுக் கொண்டிருந்தார்.இது எனது இரண்டாவது குடித்தனம் இந்த லாட்ஜில். முதலில் ஒரு மூன்று மாசம் இருந்து விட்டு, மு.ராமசாமி கூட யுனிவர்ஸிட்டியில் தங்கி இருந்தேன்.இந்த லாட்ஜில் ரூமே கிடைக்காது.நல்ல வெளிச்சமான சுத்தமான லாட்ஜ்.அதனால் இரண்டாவது முறை வந்து கேட்டதும் ஒரு ரூம் இருக்கு முழு வாடகை தர முடியும்ன்னா வாங்க, அடுத்த மாசமா இன்னொரு ஆள் சேர்த்துகிடுவோம் என்று சொல்லி சாவியைத் தந்து விட்டார் அந்த தாத்தா. எல்லாருக்கும் ஆச்சரியம். அப்புறம், நான் வேண்டாமென்று சொல்லியும் இந்த ஆளை என்னுடன் தங்க வைத்தார். இந்த மாமா, மாமி கூட சண்டை போட்டு அவளை அப்பா வீட்டுக்கு அனுப்பியிருந்தார். மில்லில் வேலை.பெரும் பாலும் நைட் ஷிப்ட்தான் விரும்பிப் போவார். காலையில் அஞ்சு மணிக்கு வந்து கதவைத் தட்டி எழுப்பி விட்டு விடுவார். வந்ததும் பேண்ட் சட்டை எல்லாம் களைந்துவிட்டு , ஒரு காடாத்துணியில் தைத்த அன்டெர் வேரும் பூணூலும் தான் டிரெஸ்,.நேவி புளூ சிகரெட் வாங்கி வந்திருப்பார், பற்ற வைத்துக் கொண்டே சளசளக்க ஆரம்பித்து விடுவார்.ஜுக்னூ படம் பாத்தீங்களா சார்,
தேயோளீ ஐயங்காரிச்சி என்னமா இருக்கா என்று ஹேம மாலினியைப் பற்றிச் சொல்லி, சிகரெட்டை வேகமா இழுப்பார் அது பளீர்ன்னு கனிகிற உக்கிரத்தை வச்சே அவருக்குள்ளிருக்கும் `நீறு பூத்த நெருப்பை’, வெறியை உணர முடியும்.பொறகு ஏம் வே பொண்டாட்டிய தள்ளி வச்சுருக்கேருன்னு கேக்கத் தோனும். பர்ஸில் மனைவியின் படம் வச்சுருப்பார். அந்த அம்மா படத்தில் அவ்வளவு அழகா இருக்கு,அவரே காண்பித்து சொல்லவும் செய்வார்,பிறாமனத்தி கோச்சுண்டு போய்ட்டாளே சார்ன்னு. சொல்லும்போது ரகஸ்மாய் நம்ம முகத்தை படிக்கிறமாதிரி தோனும்.எப்படியோ தூங்கிப் போவார்.நான் ஒன்பது மணிக்கு கிளம்பிப் போகும் போது கூட முழிக்க மாட்டார். நான் கதவை வெளியே பூட்டி விட்டுப் போவேன் அவர் முழிக்கிற போது அவர் சாவியை, வெளியே நடமாடுகிற யாரிடமாவது கொடுத்து திறக்க சொல்லுவார்.
ஒரு நாள் சாயந்திரம் வாக்கில், இவரோட அம்மாவோ என்னவோ, ஒரு கிழம், ஒரு குழந்தையை அழைத்துக்கொண்டு இவரைத் தேடி வந்து ரூமில் இருந்தது. சுட்டிப் பெண் அழகாக இருந்தது.நான் உள்ளே தயங்கியபடி நுழைந்ததும் நன்றாகச் சிரித்தது. பேச முயன்ற குழந்தையை கிழவி கண்ணாலேயே அதட்டி தடுத்து விட்டார். அதற்குள் மனுஷன் வந்துட்டார். கையில் கொஞ்சம் பொட்டலங்கள், பேண்ட் பாக்கெட்டில் என்னவோ கனமாக இருந்தது.கிழவி கையில், பொட்டலங்களை வீசாத குறையாய் கொடுத்து விட்டு, கொஞ்சம் பணம் எதுவோ கொடுத்து போய்க்கோடி என்றார்.பணம் காணாதுடா என்றவளிடம் காணாட்டா வச்சுட்டுப் போ என்று கத்தினர். நான் வெளியே கிளம்பி விடுவது நல்லது என்று நினக்கும் போது அந்த அம்மா நீங்க இருங்கோ சார். என்றது. நான் கிளம்பிவிட்டேன். `கிழம்’ங்கிறதெல்லாம் அவரோட வார்த்தைகள்.மேல மாசி வீதியில் ராஜேந்திரன் கடையில் ஒப்புக்கு ஒரு காபி குடித்துவிட்டு திரும்ப ரூமுக்கே வரும் போது எதிரே அந்த அம்மா வந்தார்கள்.பக்கத்தில் வந்ததும் அவர்களே பேசத் தொடங்கி விட்டார்கள்.பாருங்க சார்,பொண்டாட்டிய சந்தேகப் பட்டே விரட்டி விட்டுட்டான்.இந்தக் குழந்தைய நான் எப்படி காப்பாத்துவேன்,என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.குழந்தை, ஏழு எட்டு வயசிருக்கும்.அதைப் பற்றிப் பேசுகிறோம் என்று தெரிந்தோ என்னவோ அற்புதமாக ஒரு சிரிப்பு சிரித்தது.எனக்கு ஒன்றுமே பேசத் தோனவில்லை. என்ன எதிர் விளைவு காட்ட வேண்டுமென்று கூட தெரியவில்லை.அந்த அம்மாள் பதிலுக்கு காத்திராமல் போய் விட்டது.கருக்கல் நேரம் சீக்கிரம் போகனும் என்று சொல்லிக்கொண்டே போய் விட்டது. குழந்தை, மேல மாசி வீதி ஆரவாரங்களை வேடிக்கை பார்த்த படியே போனது. இன்னும் ஒருதரம் அது சிரித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இல்லை. அவர் சந்தேகப் பட்டது மனைவியோட அத்திம் பேரைப் பத்தியாம்.அவ இவள விட ரொம்ப நன்னாருப்பா சார்.ஆனாலும் அவனுக்கு இவ மேல ஆசை சார்,இவளுக்கும்தான் சார், இப்ப அவன் கூடத் தான் இருக்கா,உங்க கிட்ட சொல்றதுக்கென்ன, என்று அறைக்குள் நுழைந்து உட்காரப் போகும் முன்பே சொல்லத் தொடங்கினார்.அறையில் ஒரு மடக்கு மேஜை. அது முழுக்க என் உபயோகத்தில் இருந்தது.என்னுடைய நோட்டு, சில புத்தகங்கள், எண்ணெய், பவுடர் என்று என் பொருட்களே இருக்கும், இன்று அவர் அதில் ஒரு ரம் பாட்டில, சாயம் போன ரோஸ் நிற அலுமினியத் தம்ளர், தண்ணீர் கூஜா, கொஞ்சம் கார வகையறா என்று கடை பரப்பி இருந்தார்.ஸ்டூலை அருகே போட்டு சம்பிரமமாக உட்கர்ந்து ஜல பானம் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு அரை மணி நேரம் அவளைப் பற்றி ஏசித் தீர்த்துவிட்டார். அந்த மன்னி, ஆமாவோய் என் ஆத்துக்காரர் கூட நானே அனுப்புவேன் என்று கூட்டிப் போய் விட்டதாக முடிக்கும் போது நன்றாக குளறத் தொடங்கி சத்தமும் லாட்ஜ் முழுக்க கேட்கத் தொடங்கி விட்டது.எனக்கு நீல பத்மனாபனின் பள்ளி கொண்ட புரம் கதை நினைவில் ஓடியது.ஏற்கெனெவே அவர் வருகை எனக்கு பிடிக்கவில்லை.இந்தப் பேச்சு மூலம் அவர் என்னை நெருங்கி வந்துரக் கூடாதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மனுஷன் சார் நீங்க ஒரு ரவுண்டு சாப்பிடுங்கோ வேற வாங்கிட்டு வரச் சொல்றேன் என்று லாட்ஜ் பையனை அழைத்தார்,`மகேந்திரா”என்று.அவன் எங்கிருந்தோ வாரேன் சார் என்று குரல் கொடுத்தான். இது வாடிக்கைதான்.குரல் தான் வரும் ஆள் வர மாட்டான். அவனுக்கு தெரியும் யார் கூப்பிட்டா வரனும் என்று.சார் பய தளதளன்னு இருக்கான் பாத்தீங்களா சார்.பொம்பளை மாதிரி தொடை எப்படி இருக்கு, என்னா சார் என்று சொல்லி விட்டு, சார் நான் கூப்பிட்டா வர மாட்டான் நீங்க கூப்பிட்டா வருவான், நீங்க சட்டையெல்லாம் கொடுத்திருக்கீங்க போல இருக்கு என்று சொன்னதும் , சரி இது லாயக்குப் படாது என்று நினைத்து, வேண்டாம் சார், நான் சாப்பிடப் போறேன் என்று கிளம்பி விட்டேன். மகேந்திரன் ரூமிற்கு வெளியேதான் நின்றிருந்தான்.என்னிடம் பிரியமாய் இருப்பான்.சார் நீங்க கூப்பிடலேல்லா என்றான்.இல்லை நான் கூப்பிடலை என்று சாப்பிடப் போய் விட்டேன். காரணமில்லாமல் மகேந்திரனும் கூட வந்தான்.நாலணா கொடுத்தேன் வேண்டாம் சார் சும்மதான் வந்தேன். வீட்டுக்கு சாப்பிடப் போறேன்,என்று நகர்ந்தவன் சார் வீட்டுக்கு சாப்பிட வாரீங்களா சார் அம்மா, வீட்டு வாசலில் இட்லிக் கடை போட்டிருக்கு, என்றான் நான் போகவில்லை.அவன் வீடு செண்ட்ரல தியேட்டருக்கு அடுத்த சந்து. அது வழியாக திண்டுக்கல் ரோடுக்கு போய் விடலாம்.ஜி.நாகராஜன் கதையில் வருகிற தெரு.பகலில் வீடுகள் அடைத்தே இருக்கும்.இரவில் திறந்து கொள்ளும்.தெரு முழுக்க, பெரிய பாளங்களாக கல் பாவி இருக்கும் ஆனால் மாடுகள் தெருவில்தான் கட்டப் பட்டு ஒரே சாணியாய் இருக்கும்.அந்தக் கல்லுக்காகவே ஒன்றிரண்டு தரம் அந்தத் தெரு வழியாகப் போயிருக்கிறேன் .அந்த மாதிரிப் பெண்கள் நான் போகிற பகலில் தட்டுப் படவில்லை.இன்னும் ஒன்றிரண்டு முறை போனால் நாக ராஜனையே பார்த்து விடலாம் என்று தோன்றும்.ஒரு சமயம் மேலக் கோபுர வாசல் தெருவில் மீனாட்சி புத்தக நிலையத்தில் அண்ணன் மீராவைப் பார்த்த போது இப்பதான் நாகராஜன் போறார் என்றார்.
மகேந்திரனின் அம்மாவும் அழகாக இருக்கும் என்று லாட்ஜில் சொல்லுவார்கள்.லாட்ஜில் துணை மேனேஜராக இருக்கும் பாண்டியனுக்கு மகேந்திரனைச் சத்தம் போடுவதே வேலை.அவன் அம்மா அவர் மூலமாகத்தான் மகேந்திரனை லாட்ஜில் சேர்த்த்தாளாம்.அதற்குப் பிரதியாக ஒன்றிரண்டு தரம் வந்தவள், பின்னர் மறுத்து வருவதால்த் தான் என்று அவனுடன் வேலை பார்க்கும் இன்னொரு பையன் சந்திரன் சொல்லுவான்.(இரண்டு பேரும், சார் நீங்க அவனைக் கூப்பீட்டீங்கன்னு நினைச்சேன் என்று ஏமாத்துவார்கள், பேர் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால்)
பந்த். பசி வயிற்றை ,கிள்ளத் தொடங்கியது.மகேந்திரனைக் கூப்பிட்டு சாப்பிட பழமாவது கிடைக்குமா பார் என்றேன். கடை எதுவும் இல்லாததால் அவர்களை யாரும் எதற்கும் கூப்பிடவில்லை.ரூம் மேட் பாத்தீங்களா உடனே வந்துட்டான் என்று கடுப்படித்தார்.சார் இங்க கொஞ்சம் வாங்க என்று மகேந்திரன் வெளியே அழைத்துப் போனான். சார் எங்க வீட்ல சாப்பிடுவீங்களா.. என்றான். ஆஹா அதுக்கென்ன, போவோம் என்றேன். சார், அப்ப நீங்க தெரு முனையில் நில்லுங்க, நான் இதோ வந்துருதேன்.என்றான்.நான் நின்று கொண்டிருந்தேன். சீக்கிரமே வந்து அழைத்துப் போனான்..சார் யாராவது என்னமாவது சொல்லுவாங்கன்னு தான் உங்களை இங்க நிக்க சொன்னேன். ஐயரு ரொம்ப மோசம் சார் என்றான்.வீடு வந்து விட்டது. தெரு சுத்தமாக சாணியில்லாமல் இருந்தது.ஆனாலும் வாசனை இல்லாமல் இல்லை.அவன் வீட்டு வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தது. வீடென்றால் இரண்டு கட்டு. முதல் ரூம்தான் சாப்பாட்டுக்கடை போலிருந்தது.நான் பார்க்க விரும்பிய பெண் போல்தான் இருந்தாள் வாசலில் நின்றவள்.ஆனால் சிரிப்பு மரியாதையாக இருந்தது.அவள் தானாகவே வழி விட்டாள் இரண்டாம் கட்டு நடையில் அவன் அம்மா யாரோ குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். . நான் உள்ளே நுழையத் தய்ங்கினேன்.ஜாடை அவனைப் போலவே இருந்தது.அவனை விட நிறம்.வாங்க சார் என்று சொன்ன படியே குழந்தையை மாரிலிருந்து எடுத்து வாசல்ப் பெண்ணிடம் நீட்டினாள். சரியாக மூடாத மாரிலிருந்து பால் ஒரு சொட்டு திரண்டு நீர் போல் நின்றது. மூடுவதைப் பற்றிய சிரத்தை இல்லை. அதில் தவறாக எதுவும் தோன்றவில்லை.சார் சாப்பிட வந்திருக்காங்க என்றான். அதில் ஒரு பெரிய மனுஷ தோரணை இருந்தது.உக்காருங்க சார் என்றான். தரை சற்று நீர் வற்றாக இருந்தது.தயங்கியபடி உடகார்ந்தேன். அவன் அம்மா சர்வ சகஜமாக இருந்தாள். உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை.தலைமுடியில் சற்று சடை விழுந்திருந்து, முப்பது, முப்பத்திஐந்து வயதுக்குள் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தது. சார் டிஃபன் பண்ணித் தரட்டா, என்றாள்.அவன் சோறு பொங்கலையா என்று கேட்டான்..உனக்கு மட்டும் கொஞ்சம் பழையது இருக்கு, சார் சாப்பிடுவாங்கன்னா சாப்பிடட்டும்.என்றாள். என் முகத்தில் தயக்க ரேகையைப் பார்த்தாளோ என்னவோ சார் ஒரு நிமிசம் என்று தன் பக்கத்திலிருந்த ஸ்டவ்வைப் பற்ற வைத்து தோசைக்கல்லைப் போட்டாள். சார் பொடி வச்சு சாப்பிடுவீங்கள்ளா என்று கேட்டு முடிக்கும் முன்னேயே தலையை ஆட்டி விட்டேன்.அவன் தட்டு சோறு எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான்.இருடா சாருக்கு எடுத்து வச்சுட்டு சாப்பிடேன் என்றாள் நான் பரவாயில்லை என்ற சொன்ன மாதிரி இருந்தது.எனக்குப் பேச்சே வரவில்லை.ஒரு தட்டை எடுத்து தன் சேலையில் துடைத்து என் முன் வைத்தாள்.கனத்த நூல்ச் சேலை.சேலை கனமா, அழுக்கு கனமா தெரியவில்லை.தடிமனான தோசை தட்டில் விழுந்தது.மாவு நன்றாகப் புளித்த மாதிரி வாசனை மூக்கில் அடித்தது.மிளகாய்ப் பொடிக்கு எண்ணெயில்லை. பசியில் அதெல்லாம் தெரியவில்லை. என்றாலும்.,தின்னு கெட்ட நாக்கு ஆச்சே.அதையும் முகம் காட்டிக் கொடுத்ததோ என்னவோ.மோர்ச் சட்டியை என்னருகே நகர்த்தினாள். நல்ல பசும் மோர். புளிக்கவேயில்லை.அவன் அம்மா இடத்தை விட்டு அகலவே இல்லை. மூன்று தோசையே போதுமானதாயிருந்தது.நாலாவது தோசையை ஊத்தப் போன போது வேண்டாம் என்று தடுத்தேன்.நல்லால்லை போலிருக்கு, என்றாள் அய்யய்யோ நல்லா இருக்கும்மா என்றதும் என் அம்மாவென்ற விளிப்பு சிரிப்பை வரவழைத்ததோ என்னவோ,சிரித்த படியே சார் என்னா ஆளுகளோ என்றாள்.எனக்குப் புரிவதற்குள் மகேந்திரன், சார் நம்ம லாட்ஜ் தாத்தாவுக்கு பங்காளிங்க என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.சரி எதையோ அவன கற்பிதம் பண்ணியிருக்கான் என்று தொடர்ந்து அமைதி காத்தேன்.அவள் அடுப்பை அணைக்க ஒரு கை தண்ணீர் எடுத்து அதன் மேல் தெளித்தாள். குப்பென்று மண்ணெண்ணை அடுப்பு அணைகிற வாசனை பரவியதும், சரியாக இன்னொரு பெண் ஒரு குழந்தையுடன் வந்தாள். அடுப்பை நகர்த்தி விட்டு அதை வாங்கி முலையூட்ட ஆரம்பித்தாள். இந்தத் தெருவில் அநேகமா எங்க வீட்ல மட்டுந்தான் ஆம்பிளப் பையனா மகேந்திரன் மட்டும் நிக்கான், மத்ததெல்லாம் எங்க போச்சுகளோ என்றாள். இந்த குஞ்சுகளும் எங்கன உள்ளதோ. அந்தா தொட்டில்ல கிடக்கிறது இவன் தங்கச்சி.அது புண்ணியத்தில இதுகளுக்கும் சுரக்கு. காசு வேண்டான்னாலும் இதுக கேட்காது. என்று நீளமாகப் பேசிக் கொண்டே போனாள்.என்னை யோசிக்கவே விடவில்லை, என் மௌனத்தை மிகச் சரியாகப் படிப்பது போலிருந்தது.எனக்கு யோசனையும் இல்லை. ஏங் கதை மாதிரித்தான் இப்ப ஒரு சினிமால்ல பிரமிளா பால் கொடுக்கா.நடக்கறதத்தானே சினிமால காட்டுறான்.,சரி நீங்க வாங்கய்யா ஏய் இவனே, சார்ட்ட துட்டு கிட்டு வாங்கிறாத, சாப்பாடு என்னமா இருந்ததோ என்னமோ.... என்ற அவளின் குரல் பின்னால் ஒலிக்க நாங்கள் இருவரும் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம்..மிக சகஜமாக முலையூட்டிக் கொண்டிருந்த அவளிடம் நான் வருகிறேன் என்று சொல்லவில்லை.தைரியம் இல்லை. மகேந்திரன் பெரிதாக எதையோ சாதித்த மாதிரி பேசிக் கொண்டே வந்தான்.ஒரு வீட்டில் ஜமுனா ராணியின் பூப் போட்ட கிளாஸிலே போடய்யா ஒண்ணரை....என்ற பாட்டு கேட்டது.கண்ணதாசன் சொல்லுவார் தமிழை ஜமுனா ராணி பாடிக் கேட்க வேண்டும் என்று.அதற்காகவே அவர் சொந்தப் படங்களில்/ வசனமும் பாட்டும் எழுதுகிற படங்களில், ஜமுனா ராணியின் பாட்டு தவறாமல் இருக்கும்.இந்த யோசனையின் தொடர்ச்சியாய் மனசுக்குள் பாடினார், பூப்போட்ட கிளாஸை விட்டு வெகு தூரம் வந்த பிறகு.
”சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விடமாட்டாயோ..........”

Sunday, November 9, 2008

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கின ஒளியினைப்போலே.........
_________________________________________________________________________
தினமும் ஆற்றில் குளித்தால் தான் குளித்த மாதிரி இருக்கும்.ஏதாவது காரணத்தால் திடீரென்று இது நாலைந்து நாள் தடைப்பட நேர்ந்தால் அவ்வளவுதான்.அப்புறம் போகவே தோணாது.திடீரென்று ராத்திரி சபை கூடி சடவாரிக் கொண்டிருக்கையில் `ஏ நாளையிலிருந்து ஆத்துக்குப் போவோமாடெ’ என்று யாருக்காவது யோசனை உதிச்சுரும் மறுநாள் காலையில் திருப்பாவை பாடி எழுப்புகிற மாதிரி பெரிய கோபால் அல்லது கணபதி காலையில் எழுப்புவான்.தெருவின் மேல்க் கோடியில் இருக்கிற என் வீட்டில் தெருவில் நின்றவாறே சத்தம் கொடுத்துவிட்டு வேறு சேக்காளிகளை கூப்பிடப் போய்விடுவான். கால் மணி நேரத்தில் எல்லோரும் தெரு முனையில் இருக்கும் சொள்ள மாடன் கோவில் முன்பாக, அதற்கு சற்று தெற்கு வடக்காக நின்று கொண்டிருப்போம்.சுடலை மாடன் சன்னதிக்கு இரண்டு புறமும் நீளமான மேல ரதவீதி.காலை நேரமாதலால் கடைகள் எல்லாம் அடைத்திருக்கும். கீழ்ப் புறத்தின் உயரமான, நீளமான கடைப் படிகளில் வெவ்வெறு விதமான மனுஷர்கள்.தவசுப் பிள்ளைகள், பாடை தூக்குகிற உழக்குஅண்ணன், (ஆள் குள்ளமாக உழக்குப் போல் இருப்பான் அதனால் உழக்கண்ணன்) போன்றவர்கள்.வெள்ளை அடிக்கிறவர்கள், எங்களுக்கு மூத்த அண்ணாச்சிமார் அரசியலில் தீவிர ஈடுபாடு உடையவர்கள் உக்கிரமாக செய்திகளை வைத்து விவதங்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள்...நாங்கள் கூடுகிற ஆறரை மணி சுமாருக்கு சரியாக சாவடி வீட்டு காடினாவில் (வண்டிகள் நிறுத்திய இடம்) குடியிருக்கிற பட்டு நூல்க் காரி(சௌராஷ்ட்ர வகுப்புக்காரப் பெண் நெல் அவித்துக் கொடுப்பது, அரப்பு வெந்து காயப் போட்டு திரித்து விற்பது போன்ற காரியங்களில் ஜீவனம் நடத்துகிற வாவரசி(வாழ்வரசி). அரசன் போன இடம் தான் முப்பது வருஷமாகத் தெரியாது.) சொள்ள மாடன் கோயில் உண்டியலை அதற்கு முன்னால் உள்ள லேம்ப் போஸ்டில் கட்ட வருவாள்.முந்தின நாள் இரவில் முதல் ஆட்டம் சினிமா முடிந்து வீடு திரும்புகிறவர்களில் யாராவது ஒன்றிரண்டு பேர் காசு போடலாம் என்ற எதிர்பர்ப்பில் கோயில் நடையிலேயே ராவு பத்து பத்தரை வரை உட்கார்ந்திருந்து. உண்டியலை அவிழ்த்துக் கொண்டு போய் வீட்டுல் பத்திரமாக வைத்திருப்பாள்.அவள் வரவும் ஐம்பது அறுபது வயசு பெரிய்ய அண்னாச்சிமார், அப்பாமார்., பலசரக்குக் கடை. காசுக் கடையில் வேலை பார்க்கிறவர்கள் தங்கள் வழக்கமான பார்லிமெண்டைக் கலைத்து விட்டு `சவம் எங்க நாடு உருப்படபோது’ பாணியில் ஏதாவது திருவாய் மலர்ந்தபடியே நகரத் தொடங்குவார்கள். அதில் யாராவது ஒருத்தர் பெரும்பாலும் பச்சைக்கிளி(இவன் தான் எனக்கு சைக்கிள் சொல்லித் தந்தவன்) மணியோட அப்பா சேதுச் செட்டியாராத்தான் இருக்கும் ஐந்து பைசாவோ பத்து பைசாவோ உண்டியலில் போணி பண்ணிவிட்டுப் போவார்.அவர் நகண்டதும் பசங்க கேலி ஆரம்பிச்சுரும். ஏல என்ன, நேத்து யார்ல கனவுல வந்தா இந்தியா இலங்கை அமெரிக்கான்னு உலக மேப்பே இருக்கு லுங்கியில. என்னல இவ்வளவு கரை.ஆத்தை நாற அடிக்கதுக்குன்னே வாங்கல..என்று யாராவது யாரையாவது வம்புக்கு இழுக்கறது நிதசரி (தினசரி) வாடிக்கை.
கோயிலுக்கு கொஞ்சம் வடக்க தள்ளி ஒம்பதாம் நம்பர் பஸ் நிக்கிற இடம்.அது என்னவோ எழுதப் படாத சட்டம் மாதிரி அந்த பஸ் மட்டும் அங்கேயே நிற்கும்.அந்த பஸ் ராஜவல்லிபுரம் போற பஸ். (வல்லிக்கண்ணன் அண்ணாச்சியின் ஊர்).அது மேற்கு ஓரம் என்பதால் காலை வெயில் அந்தப் பக்கம் லேசாக விழும்.ஒரு நாள் வெயில் பாதி, நிழல் பாதி தன் சிவந்த மேனியில் விழ மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கிய ஒளியினைப் போல ..ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் .நல்ல அளவான உயரம். நறுவிசாய்க் கட்டிய சேலை.உயரத்திற்கேற்ற மாதிரி நீளமான கைகளில் ஒன்றிரண்டு புத்தகம், டிஃபன் பாக்ஸ் ஆகியவற்றை மார்போடு அணைத்தபடி கோயில்ச் சிலை மாதிரி சற்றே கழுத்தைச் சாய்த்து நின்றாள். முதல்த் தரம் பார்த்த போதே எல்லாருக்கும் மூச்சு நின்று போனது. அந்த இளங்காலை நேரத்திற்கே ஒரு அர்த்தம் வந்தது போலிருந்தது மறு நாளும் அவளைப் பார்த்த போது.ஒரு நாலைந்து விடலை வயசுப் பசங்க தன்னையே பார்க்கிற குறு குறுப்போ கடு கடுப்போ இல்லாத,. சிரிப்பை அப்போதுதான் விழுங்கின மாதிரியான முகம்.ஆற்று வழி நெடுக அவளைப் பற்றிய பேச்சுத்தான். ஒருத்தன் வைஜயந்தி மாலா என்றான். ஒருத்தன் ப்ரவின் சுல்தானா என்றான். போங்கடா மும்தாஜ் தாண்டா. உதட்டைப் பாத்தியாடா (அந்தக் கால இந்தி நடிகை, ராம் அவுர் ஷ்யாம், கிலோனா, பூந்த் ஜோ பன் கயே மோத்தி,சச்சா ஜூத்தா. ஜிக்ரி தோஸ்த் என்று இந்திசினிமாவை மும்மு கலக்கிக் கொண்டிருந்த நேரம் அது.)என்றான் கணபதி.வீடு வந்ததும் முதல் வேலையாக ஆம்ரபாலி வைஜயந்தி படம் போட்ட ஈகிள் ஃப்ளாஸ்கை நான் எடுத்து வந்து காட்டியதும் ஆமடெ அப்படித்தான் தோனுது ஆனா பொட்டு இல்லையே என்ற அதிருப்தியும் இருந்தது.எல்லாருமே போங்கடா இவங்க இவங்க தான்,.என்று தீர்மானம் போட்டோம் நாங்கள் அவளை எங்களைப் பார்க்கிலும் சற்று வயது கூடிய பெண்ணாகவே முடிவு கட்டியிருந்தோம். அது சரியென்று காந்திராஜன் செய்தி திரட்டிக் கொண்டு, அவசர அவசரமாக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த பொறுப்போடு ஒரு நாள் இரவு அரட்டைக் கச்சேரியின் நடுவில் வந்து சொன்னான்.எவம்ல அது வைஜயந்தின்னவன், அவங்க பேர் கதிஜா, சங்கர் நகர் ஸ்கூலில் டீச்சரா இருக்காங்க, வீடு பாப்புலர் டாக்கீஸ் பக்கம், ஆனா ரோட்டிலேருந்து பார்த்தா வீடு தெரியலை, ஒரு முடுக்குக்குள்ள இருக்கு என்றான்.
இதிலெல்லாம் அவன் கில்லாடி.அவன் அப்பா கிறித்தவப் பாதிரியார். செல்லமா பொந்துக் கண்ணன் என்று கூப்பிடுவோம்.கண்கள் சற்று குழி விழுந்திருக்கும்.ரொம்ப ரொம்ப நல்லபையன் சூது வாதே தெரியாதவன்.என்ன கேலி பண்ணினாலும் கோவமே வராது..ரொம்ப அதிகமும் பேச மாட்டன். பேசினாலும் உளறல் திலகம்தான்.எங்க வீட்டுப் பிள்ளை நாகேஷ்தான் .ஒரே ஸ்பூனரிசம்.. ஒருசமயம், .அதேகண்கள் படம் போய்விட்டு வந்தான், அவன் போகும் போது படம் ஆரம்பித்துவிட்டது, எந்தக் கட்டத்துக்க்கில (ஸீன்) போனே என்று கேட்டதும் `அவ தோக்குல தூங்குவால்ல’ அந்தக் கட்டத்துக்கு போனேன். என்றான்.ஏல தோக்குலயா, தோப்புலயா என்னல சொல்லுத என்று கேட்டால் அதாம்ல ஜி.சகுந்தலா பார்ப்பால்லா, அப்பத்தான். ஏ மூதேவி உணர்ச்சி வசப்படாம சொல்லுலெ என்றதும் சற்று நேரம் ஊமையாகி விட்டான்.கொஞ்ச நேரம் கழித்து மெதுவா ஆரம்பிச்சான், அதாம்ல அவன் கயத்தில தொங்குவாம்ல அப்ப என்றான். எடு வாரியல, மூதேவி, தூக்கில தொங்குறதை தோக்குல தூங்க வச்சிட்டயேல என்றதும் சிரிப்பு வெடி ஒன்று பரவியது.இப்படித்தான் எதையாவது உளறுவான் கொடிய மடிச்சு வேட்டில போடு என்பான்.சலாவே சளாமி ,என்பான்(சவாலே சமாளி) . ஆனால் பொம்பளப் பிள்ளைங்க பேருன்னா உளறல் இருக்காது. ஏல அந்தா போறால்லா அவ பேரு என்னன்னா , மாலா என்பான், ஜீவா என்பான். ஏல, எப்ப கேட்டாலும் கரெக்டா ரெண்டெழுத்துப் பேராவே சொல்லுதியே, அவ அப்பன் வச்ச பேரா இல்ல நீ வச்ச பேரால என்றால் சிரிப்பான்.அநேகமாக சரியாய்த்தான் சொல்லுவான்.கிறிஸ்துமஸ் தோறும் அவன் வீட்டில் பிரியாணி சாப்பாடு. மெர்ரி கிறிஸ்மஸா கறி கிறிஸ்மசா என்று தோன்றுகிற அளவுக்கு செழிக்க செழிக்க திம்போம். அவங்க அம்மாவே இதுகள்ளாம் என்ன வெள்ளாளப் புள்ளைகளா என்னது. ஒரு ஆடு அறுத்தாலும் காணாது போல இருக்கெ, நான் வேலைக்காரங்களுக்கெல்லாம் என்னத்த கொடுக்க, சட்டி தான் இருக்கு என்று விளையாட்டாய்ச் சலித்துக் கொள்ளுவார்கள். ஆறு ஏழு வருஷ பழக்கத்தில் அவங்க பேசியதே இந்த வார்த்தைகளாத்தான் இருக்கும்.அவளவு அமைதியான சுபாவம் .ஒரு சமயம் எங்க ராஜனுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடேன் அவன் அதால தான் பாஸே பண்ணமாட்டேங்கான். என்று சொன்னர்கள். அவன் கடைசி வரை பாஸ் பண்ணவே இல்லை.இப்போ எங்க என்ன `உறளி’ க்கொண்டிருக்கிறானோ இல்லை உருப்படியாய் இருக்கிறானோ. நிச்சயம் நல்லாத்தான் இருப்பான். ரொம்ப நல்ல பையன்.

பாப்புலர் டாக்கிஸ் பக்கம்தான, நாளைக்கே ரூட்டைப் பிடிச்சுருவோம். என்று முடிவாகியது. காலையில், ஆறாவது ஒண்ணாவது., முத வேலையா பாப்புலர் டாக்கீஸ் போகிற வழியிலிருக்கும் சிவா தெருவில் துப்பு வெட்டப் புறப்பட்டேன். தெரு முக்கில் சங்கரின் எண்ணைக் கடை.அவன் எண்ணைச் செட்டியார்.ஆள் நன்றாயிருப்பான்.சுருண்ட முடி கூரான நாசி .என்னைப் போல் நெற்றியில் குங்குமம் தீற்றியிருப்பான்.எனக்கு அந்தப் பழக்கம் 70 களில் தான் வந்தது.கடைக்கு வருகிற பெண்களிடம் அவனுக்கு ஏக மரியாதை. அற்புதமான கிண்டலுக்குச் சொந்தக்காரன்.அதற்காகவே, அவனுக்காகவே மற்ற பலசரக்கு சாமான்களை மற்ற கடையில் வாங்கினாலும் ஐம்பதோ நூறு மில்லியோ, எண்ணை வாங்க மட்டுமே(!) அவன் கடைக்கு வரும் பெண்கள் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும்.எங்கள் தெருப் பெண்ணே குழந்தையை பக்கத்துப் பள்ளியில் விட்டு விட்டு அவனிடம் சடவாரிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தது ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நினத்துக் கொண்டிருக்கும் போதே லாலா மணி வந்தவன், . அவனுக்கு அந்தத் தெருதான், சொன்னான் சரி சரி விடு. தர்ம காரியம் நடக்கட்டும், தள்ளி வா என்று.எனக்கு ஆச்சரியம் தாங்க வில்லை, அந்தப் பெரிய இடத்துப் பெண்ணோ அதற்கப்புறம் என்னைப் பார்க்கும் போது கொஞ்சங்கூட கலைந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.பெரிய செட்டியார், பையனை விட இந்த விஷயத்தில் கில்லாடி என்று கேள்வி. அது கிடக்கட்டும், சங்கர் கடை முன்னால் பொதுவாய்ப் பசங்களைக் கூடி நிற்க விடமாட்டான்.லாலா மணி நிற்பான்.ஆனால் அவன் ஆள் வந்தால் நகர்ந்து விடுவான். நானும் நிற்பேன், என்னை சற்று அனுமதிப்பான். காரணம், செட்டியார் தலை முழுக்க தும்பைப் பூ. அவ்வளவுக்கும் சாயம் அடிக்கும் போது நான் பார்த்து விட்டேன்.
அவன் அப்பத்தான் கடை திறந்திருந்தான். வே, என்னவே காலையிலேயே இந்தப் பக்கம் என்றான். அன்றைய தினத் தந்தியில், அப்போதெல்லாம் மதுரைப் பதிப்புதான் திருநெல் வேலிக்கும், படகோட்டி நவராத்திரி, முரடன் முத்து, படங்களின் நூறாவது நாள் விளம்பரம் வந்திருந்தது.மதுரை சென்ட்ரலில் எங்க வீட்டுப் பிள்ளை போடு போடென்று போட்டுக் கொண்டிருந்தது. நான்கு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வசூலைத்தாண்டி ஒடிக் கொண்டிருந்தது .நாடோடி மன்னனுக்குப் பிறகு இதுதான் இந்த சாதனையை செய்திருக்கிறது.அது மிகப் பெரிய தங்கம் தியேட்டரில் வந்தது. இது சென்ட்ரல். இரவும் பகலும் படமும் அப்பொழுதுதான் வந்து நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது.கடைசிப் பக்கம் பூராவும் அநேகமாக இரண்டு பத்தி ஆறு செ.மீ சினிமா விளம்பரங்களாகவே இருக்கும் அதில் படத்தில் வருகிற வசனம் , பாடல்வரிகள்., கை தட்டல் வாங்கும் காட்சிகள்(’”காதல் என்றால் தேன் கூடு/அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு”-ராஜ சேகர், என்று இரவும் பகலும் படத்திற்கு தினமும் பாடலின் இரண்டு வரிகளை எடுத்துப் போடுவார்கள்.)யார் அந்த திகில் அழகி விளம்பரத்தில் “கூட விலையானாலும் கொடுத்து வாங்குவோர் –திருச்சி சோலை பிலிம்ஸ்-வெளியீடு”)அதிகப் பக்கங்களுடன் வரும் மதுரைப் பதிப்பின் இந்த மாதிரி சுவாரஸ்யங்களுக்காகவே தந்திபடிக்க சங்கரன் கடைப் பக்கம் காலையில் தவறாமல் வருவான் லாலா மணி.எல்லாருக்குமே இந்த மாதிரி விளம்பரங்கள் பிடிக்கத்தான் செய்யும். கொஞ்ச நாளில் திருநெல்வேலிப் பதிப்பு வரத்தொடங்கிய போது மணிதான் ரொம்ப வருத்தப்பட்டான்.
கொஞ்ச நேரம் இந்த சினிமா சமாச்சாரங்களைப் பேசி விட்டு நைசாக கதிஜா பற்றி விசாரித்த போது ஒரு அம்மா வந்தாங்க அம்மான்னும் சொல்ல முடியாது. முப்பது முப்பத்தி ஐந்து வயது அத்தை.அந்தச் சிரிப்பும் சாயலும் யாரையோ நினைவு படுத்தியது.
ஏதோ சில்லரை கேட்டார்கள் சின்னச் செட்டியார், சில்லரை சேரவில்லைஎன்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ காசாய் தந்து அப்புறம் கொடுங்க மாமி என்றான்.சரி என்று சிரிப்பிலேயே சொல்லி அவங்க நகர்ந்தது.ம் புதிரை விடுவித்தான்.இவங்க பொண்ணுதான் நீ ரூட் போடறதும் என்று.ரூட்டெல்லாம் போடலை, .ஒரு மரியாதை நிறைந்த பார்வைதான் அவங்க மேல என்கிற மாதிரி அசடு வழியப் பேசின நினைவு..சங்கரனுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை வரவில்லை, விளக்கினாலும் புரியாது. ஏன்னா அவன் ரூட் அப்படி.அதற்கு காரணம் இருந்தது.சரிவே அவங்க அம்மா யாரு தெரியுமா, சாமிசன்னதியில நம்ம மேடை வீட்டு முதலியார் வச்சுருக்காரே ஒரு டீச்சரை அவதான் என்றதும் யாரு ரங்கமணியா என்று சொன்னதும், அவளேதான் .அவ அக்காதான் இது.. அக்காவா என்று வாய் பிளந்து நிற்கையிலேயே சொன்னான். உம்ம மாதிரித்தான் நானும் ஆச்சரியப் பட்ட காலம் உண்டு.சரிப்பா ஆனா அந்தப் பெண் பேரு கதிஜான்னுல்லா சொன்னாங்க என்றதும், ஆமாவே அப்பா முஸ்லிம்தான். இதுவும் செட் அப் கேஸ்தான்.கேட்கக் கேட்க ஆச்சரியமாவும் இருந்தது. ச்சேய், இதுக்குப் போயா இவ்வளவு `பிரியாலம்’ காட்டினோம் என்றுமிருந்தது.தகவலகளை ராத்திரி, சபையில் பகிர்ந்து கொண்டோம்.அதுனால என்னல இப்ப என்பதுதான் எல்லாரின் முடிவாயிருந்தது. நல்லதுதானே எனபது சிலரின் அபிப்ராயமாயிருந்ததுஆனாலும் எனக்கும் பெரிய கோபாலுக்கும் மனசு கேட்கலை. இவ்வளவு அழகான, அம்சமான பொண்ணோட பிண்ணனியில் இப்படி ஒரு சோகமா என்று நாங்களாகவே அதற்கு ஒரு சோக பாவம் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினோம்
கொஞ்ச நாள், காலையில் அந்தப் பக்கம் லேசாகத் திரும்பி இன்னும் மரியாதை கலந்த பார்வை பார்ப்பதோட சரி. அந்தப் பெண்ணின் முகத்திலோ, ஆனால், அதே புஞ்சிரிப்பு, கனிவான முதிர்ச்சி.. வழக்கம் போல் முழுப் பரீட்சை(அன்யுவல் எக்ஸாம்) வந்து., ஆத்துக்கு போற பழக்கம் தற்காலிகமா நின்னுட்டு.அவங்களையும் பாக்கலை.பரீட்சையெல்லாம் முடிஞ்சு லீவு ஆரம்பித்ததும். மறுபடி ஆத்துக்குப் போற வழக்கம் ஆரம்பிச்சுது..ரத வீதிக்கு வந்த மறு நிமிடமே பார்வை அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் திரும்பியது..இல்லை அவளைக் காணவில்லை எல்லார் முகத்திலும் அதே கேள்வி”எங்கலெ காணும்?” பதில் யாருக்கும் தெரியவில்லை.அவள் நிற்கும் இடத்தில் கோடை வெயில் உக்கிரமாய் அடித்த மாதிரி இருந்தது.
குமார் அண்ணாச்சி,சங்கர் பாலிடெக்னிக்கில் வேலை பார்ப்பவர்., எப்போதும் டிரெயினில் தான் போவார். எப்போதாவது ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் போவார்.அவருக்கு செல்லப் பெயர் இஞ்சிக் குமார். தினமும் ஜிஞ்சர் பரீஸ் சாப்பிடுகிற ஒரு சிலரில் அவரும் ஒருத்தர். மது விலக்கு அமலில் இருந்த நேரம். அது.ரொம்ப ஜாலியாகப் பேசுவார்.அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, அவரும் எங்கள் தெருவில் இருந்து இன்னொரு தெருவிற்குப் போன ரோஜா விற்கும் (பேருக்கு ஏத்த மாதிரி ரோஜாதான்) இணை பிரியாத அன்பு என்று. அது நிறைவேறாமல்த்தான் அவர் தேவதாஸ் ஆனார் என்று. குமார் அண்ணாச்சி பஸ்ஸிலிருந்தவாறே கேட்டார், ஏலே கள்ளப் பயலுகளா டீச்சரைக் காணுமேன்னு தேடுதீங்களா, என்று. எங்கள் முகத்தில், அகப்பட்டுக் கொண்ட சிரிப்பு.. யாரோ சொன்னோம், ஆமா ஆண்ணாச்சி. டீச்சரா அவங்க ? என்று தெரியாத மாதிரி நான் கேட்டேன். பொடியனைப் பாருலே, நீ எங்கேல்லாம் விசாரிச்சேங்கறது எனக்குத் தெரியும்டே..என்று கேலியாய்ச் சிரித்தார்.சரி, செட்டியார் சொல்லிருப்பாரு என்று நினைத்துக் கொண்டேன்.. கள்ளி, ஆள் இல்லை தெரியுமாப்பா என்று பொதுவாகச் சொன்னார்.அவர் எல்லாப் பெண்களையும் அநேகமா, கள்ளி என்று அடை மொழி சேர்த்துதான் சொல்லுவார். `கள்ளி ராஜம்மா’ எங்கடே போய்ட்டு வாரா, ஏ அது யாருடே `கள்ளி சரோஜினி’ கூட என்று தான் பேசுவார். .அவரே தொடர்ந்து சொன்னார். கள்ளி, டீச்சர் தீ வச்சுக்கிட்டு செத்துப் போச்சு.அம்மாவோட தகராறு..அதற்குள் பஸ் நகர்ந்து விட்டது.
அந்த ஒரு பஸ்தான் அங்கே நிற்கும். அதுவும் போன பின்பு அந்த இடம் சுத்தமாய் வெறுமையாய் இருந்தது.நாங்கள் ஆற்றுக்குப் போகாமலேயே தெருவுக்குள் வந்தோம்.ரொம்ப நேரம் பேசாமலேயே நின்று கொண்டிருந்தோம்.அப்படியே கலைந்து வீட்டுக்குப் போய்விட்டோம்.
அப்பாவிடம் நீ இந்த வீட்டுக்கு இனிமேல் வர வேண்டாம் என்று சண்டை போட்டிருக்கிறாள்.வேலை கிடைத்த திமிரா என்று
அவர் கழுத்தைப் பிடித்து தள்ளினாராம். அம்மியில் மோதி ஆள் காலி. ஆனா தானாவே தீ வச்சுக்கிட்டு செத்துப் போனது மாதிரி கதை பண்ணிட்டாங்க.இது எண்ணெய்க் கடை சங்கரன் சொன்ன சங்கதி.எது உண்மையோயோ தெரியாது. தீயில் கருக வேண்டிய அழகா அது என்று அங்கலாய்த்து மாளவில்லை எங்களுக்கு. காலைச் சூரிய ஒளியினை எதிர்ச் சாரி கட்டிடம் பாதி மறைக்க
நிழல் பாதி வெளிச்சம் பாதி விழுங்கும் அழகைப் பார்த்த அன்றே எனக்குள் பி.பி ஸ்ரீனிவாஸ் பாடினார்.,பாசம் படத்தின் நாங்கள் ரசிக்கிற பாடலை.இப்போதும் ஜானகியின் அற்புதமான குரலுடன் இழைந்து வரும் அந்தப் பாடலைக் கேட்கிற போது தவறாமல் நினைவில் வந்து போகிறாள்.

”திங்கள் முகத்தில் ஒளியேந்தி
செவ்வாய் இதழில் நகையேந்தி
இளமை என்னும் படை கொண்டு
என்னை வென்றாய் நீ இன்று.”
(மகா கவி கண்ணதாசன்)

Visitors